கட்டுரை, அரசியல், சர்வதேசம் 25 நிமிட வாசிப்பு

கோர்பசெவ் கட்டுரையும் சில தோழர்களின் எதிர்வினையும்

எஸ்.வி.ராஜதுரை
05 Sep 2022, 5:00 am
0

ன்னுடைய கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர் கட்டுரை பரவலான வாசகக் கவனத்தைப் பெற்றிருப்பதை அறிந்துகொண்டேன். பல தோழர்கள் அதை வரவேற்று எனக்கு எழுதியிருந்தனர். சில குறிப்பிடத்தக்க விமர்சனங்களும் வந்தன. இரு விமர்சனங்களுக்குப் பதில் அளிப்பது முக்கியம் எனக் கருதினேன். 

அருஞ்சொல் மீதான விமர்சனம்

காலையிலேயே என் அன்புக்குரிய தோழரொருவர் எனக்கு அனுப்பியிருந்த வாட்சப் செய்தியில்,  சமஸ் நடத்தும் ஏட்டில் இந்தக் கட்டுரையை நான் எழுதியிருப்பது தனக்கு வருத்தமளிப்பதாகக் கூறியிருந்தார். சமஸ் ஒரு முற்போக்கு முகமூடி அணிந்த ஆர்எஸ்எஸ்காரர் என்பது அவரது குற்றச்சாட்டு. நான் 'அருஞ்சொல்' தளத்தில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது அவரது முறைப்பாடு.

நான் அவருக்கு எழுதிய பதிலில், சமஸின் அரசியல் பற்றி எனக்குத் தெரியாது என்றும், ஆனால், இந்தக் கட்டுரையை ‘தீக்கதிர்’ இதழில் வெளியிட்டிருக்க முடியுமா என்றும், 'அருஞ்சொல்'போல அதிக வாசகர்களைச் சென்றடையும் வேறொரு ஊடகத்தைப் பரிந்துரைக்குமாறும் குறிப்பிட்டிருந்தேன்.  

உடல்நலக் குறைவாலும் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாலும் என்னால் முன்புபோல செயல்படவில்லை. அன்றாடம் எல்லாத் தளங்களையும் நான் வாசிக்கிறேன் என்று சொல்வதற்கு இல்லை. 'அருஞ்சொல்' தளமும் அப்படித்தான். அதேசமயம், அதில் வெளியாகும் முக்கியமான கட்டுரைகளைப் பல்வேறு நண்பர்கள் பல சமயங்களில் பகிர்கிறார்கள்.

என்னிடம் கட்டுரை கேட்கும், என் கட்டுரையைத் திரிக்காமல் வெளியிடும் பத்திரிகைகளில் மட்டும் எழுதுகிறேன். இணையத்தில் 'மின்னம்பலம்' தளத்தில் சில ஆண்டுகளாக  எழுதுகிறேன். 'அருஞ்சொல்' தளத்தில் நான் எழுதிய முதல் கட்டுரை இதுதான். அதன் ஆசிரியர் சமஸ் கேட்டார், எழுதினேன். 'ஆனந்த விகடன்' காலம் முதற்கொண்டு அவர் பணியாற்றும் இதழ்களில் அவர் கேட்டு நான் எழுதிவந்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் இடையே அன்பார்ந்த உறவு உண்டு. அதேசமயம், முரண்பாடுகள் மிக்க மோதல்களும் உண்டு. 

சமீபத்தில்கூட சமஸ் அக்னிபாத் திட்டத்தை ஆதரித்து எழுதிய தலையங்கத்தால் கடும் கோபம் அடைந்தேன். அந்தச் சமயத்தில் எங்கள் இருவருக்கும் பொது நண்பரான ஜி.குப்புசாமி என்னுடைய ஸரமாகோ நூலுக்கு எழுதிய மதிப்புரை 'அருஞ்சொல்' இதழில் வெளியீட்டுக்காக வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. கோபத்தின் காரணமாக அது 'அருஞ்சொல்' இதழில் வெளியிடப்பட வேண்டாம் என்று குப்புசாமி மூலம் திரும்பப் பெற்றேன். பின்னர் அது வேறு ஓர் இதழில் வெளியானது. இந்த அளவுக்கு சில சமயங்களில் முரண்பாடு போகும் என்றாலும், பத்தாண்டுகளுக்கு மேலாக எழுத்தாளர் - பத்திரிகையாளர் எனும் உறவு எங்கள் இடையே தொடர்கிறது. ஜனநாயகரீதியாக இப்படித்தான் செயல்பட முடியும் என்றும் எண்ணுகிறேன். 

அறிவாழம் மிக்க தோழரின் கூற்று

இன்னொரு தோழரிடமிருந்து வந்த விமர்சனமும் குறிப்பிடத்தக்கது. அதற்கு விரிவாகவே பதில் அளிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். ஏனென்றால், அவர் என்னால் மிகவும் மதிக்கப்படும் தோழர். அறிவாழம் மிக்கவர். அக்கட்டுரை பலகீனமான வாதத்தைக் கொண்டிருக்கிறது என்றும், தனக்கு அது ஏமாற்றமளிப்பதாகவும் கூறியிருந்தார்.

என் கட்டுரையில் எங்கு, என்ன தவறு இருக்கிறது என்று விளக்கிச் சொல்லுமாறு அவரிடம் கேட்டிருந்தேன். ஆனால், ‘அருஞ்சொல்’ கட்டுரையில் நான் எழுப்பியிருந்த ஒரு கேள்விக்குக்கூட பதில் சொல்லாமல் ரஷியக் கூட்டாட்சி கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக இருந்த கென்னடி ஜுயுகானோவ் எழுதிய கட்டுரையின் 'தோராயமான'  தமிழாக்கத்தை அனுப்பிவைத்திருந்தார். அத்தமிழாக்கம் தமிழ்நாட்டிலுள்ள இடதுசாரி இயக்கதவரிடையே –குறிப்பாக சிபிஎம் அணியினரிடையே - பரவலாகப் போய்ச் சேர்ந்துள்ளதால் அக்கட்டுரைக்கும், அதை அனுப்பிய தோழருக்கும் பதில் சொல்லும் முகமாக இன்னொரு பதிலை அத்தோழருக்கு நேற்று அனுப்பிவைத்தேன்.

இச்சூழ்நிலையில்  ஜுயுகனோவின் கட்டுரை, அதனை அனுப்பிய தோழரிடம் நான் எழுப்பிய கேள்விகள் ஆகியவற்றை இங்கு பதிவுசெய்வது அவசியம் என்று கருதுகிறேன்.

ஜுயுகனோவின் கட்டுரை

முதலில் ஜுயுகனோவ் எழுதிய அந்தக் கட்டுரையை வாசகர்கள் வாசித்துவிட வேண்டும் என்பதால் அதைத் தருகிறேன்.

"ரஷ்யாவின் ஆயிரம் ஆண்டு கால வரலாறு கண்ட ஆட்சியாளர்களில்  ஒருவராகவே நான் கோர்பசெவை நான்  பார்க்கிறேன். அவர் நம் நாட்டின் மக்களுக்கு மட்டும் அல்ல; நமது கூட்டாளிகள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் துக்கத்தையும் துரதிஷ்டத்தையும் கொண்டுவந்தவராக இருக்கிறார் என்றே கருதுகிறேன்.

நான் சிபிஎஸ்யூவின் (சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி- எஸ்.வி.ஆர்.) மத்தியக் குழுவில் பணிபுரிந்துள்ளேன். வடக்கு காகஸ் பகுதியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி உள்ளேன். அப்போது எனது சான்றிதழில் ஆண்ட்ரபோவ் கையெழுத்திட்டு கொடுத்தார்.

கோர்பசெவின் சொந்த ஊரான ஸ்டாரோபோவிற்குப் பல முறை சென்றிருக்கிறேன். அங்கு உள்ளூர் தலைவர்களை நான் சந்தித்து பேசியபோது கோர்பசெவ் பற்றிய அவர்களின் முகஸ்துதி அற்ற மதிப்பீடுகளைத் தெரிந்துகொண்டிருக்கிறேன். 

ஒருகாலத்தில் கோர்பசெவ் அங்கு கட்சி அமைப்பின் தலைவராக இருந்தார் என்பதை நினைவூட்டுகிறேன்.  கோர்பசெவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் அவரை அறிந்தவர்கள். கோர்பசெவால் ஒன்று செய்ய முடியாது என்றும் ஒருவேளை அவர் மறுசீரமைப்பைத் தொடங்கி மக்களைத் தட்டி எழுப்பலாம் என்றும் கூறினார்கள். அரசியல் அதிகாரத்திற்கு அவர் வந்ததை நாங்கள் ஒரு பெரிய சோகமாகக் கருதுகிறோம் என்று அவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்கள். 

சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மதிப்பீடுகள் அனைத்தும் முழுமையான துல்லியத்துடன் உறுதிப்படுத்தப்பட்டன.

கோர்பசெவின் முக்கியமான குற்றம் சோவியத் ஒன்றியத்தைச் சீர்குலைத்த குற்றமாகும். எல்லாவற்றுக்கும் மேலான அவர் ஒரு சக்தி வாய்ந்த சக்தியை பெற்றிருந்தார். இந்த உலகில் இருந்த அனைவருக்கும் அது தெரியும்.

சோவியத் ஒன்றியம் உலகின் உற்பத்தியில் 20% உற்பத்தியைச் செய்தது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு விமானங்களை உற்பத்தி செய்தது. மின்னணுவியலில் முன்னணியில் இருந்தது. அப்போது நாங்கள் பல துறைகளிலும் பல திசைகளிலும் தலைவர்களாக இருந்தோம். உதாரணமாக விமானம், ராக்கெட், விண்வெளிதொழில்நுட்பம், மின்னணுவியல், லேசர் தொழில்நுட்பம், வான் பாதுகாப்பு போன்ற பல துறைகளில் வலுவாக இருந்தோம். 

துரதிஷ்டவசமாக கோர்பசெவ் வருகை இவை அனைத்துக்கும் முடிவு கட்டிவிட்டது. இவை அனைத்தும் காட்டிக்கொடுக்கப்பட்டன.

சோவியத் ஒன்றியம் அனைத்துப் பாதுகாப்பு மண்டலங்களையும் கொண்டிருந்தது. ஜெர்மனியில் சோவியத்  துருப்புக்களின்  குழுவில் நான் பணியாற்றியபோது ஜெர்மனியர்கள் எங்களை மதித்து சாலையில் எங்களை வரவேற்றனர். காரணம், அந்த ஆண்டுகளில் நாங்கள் ஒரு பெரிய சக்தியாக இருந்தோம் என்பதுதான். சிபிஎஸ்யு என்பது ஒரு கட்சி மட்டுமல்ல; அவசரக் காலச் சூழ்நிலைகளில் நெருக்கடிகளைக் கையாளக்கூடிய அரசியல் நிர்வாக அமைப்பு என்பதை கோர்பசெவ் கொஞ்சம்கூட புரிந்துகொள்ளவில்லை.

லெனினிஸம்-ஸ்டாலினிஸத்தின் நவீனமயமாக்கல், சிதைந்து கிடந்த பேரரசை ஒன்றுபட்ட சோவியத் அமைப்பாக கொண்டுவந்து சேர்த்தது. சோவியத் மக்கள் சிபிஎஸ்யூவின் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் சிறந்த தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள். பாசிஸத்தைத் தோற்கடித்தார்கள். விண்வெளியில் ஊடுருவி சாதனை படைத்தார்கள். அணுசக்தியில் சமநிலையை உருவாக்கினார்கள். 

இந்த வெற்றிகள் நம்பிக்கையான கண்ணியமான எதிர்காலத்தை எங்களுக்கு வழங்கியது. ஆனால், கட்சியைச் சீர்திருத்துவதற்குப் பதிலாக கோர்பசெவ் அதை அழிக்க முடிவுசெய்தார். அவர் உச்ச அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து சுமார் 100 முன்னணித் தலைவர்களை,  அமைச்சர்களை சிபிஎஸ்யுவின் மத்தியக் குழுவிலிருந்து வெளியேற்றினார்.

கோர்பசெவ் அவரைச் சுற்றி அப்பட்டமான துரோகிகளை - யாகோவ்லெவ்ஸ், ஷெவர்ட்நாட்ஸஸ், யெல்ட்சின்ஸ் மற்றும் பகாடின்ஸ் போன்றவர்களை - வைத்துக்கொண்டார்.

கோர்பசெவ்வின் மற்றொரு குற்றம் சோவியத் அதிகாரத்தை காட்டிக்கொடுத்தது. எனது தந்தை ஒரு கட்சி உறுப்பினர் அல்ல. அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். சோவியத் அரசுக்காகப் போராடினார். செபஸ்டோபோவில்  யுத்தத்தின்போது அவர் தனது கால்களை இழந்தார். நான் பணிக்கு வந்தபோது என் தந்தை என்னிடம் இவ்வாறு கூறினார். "நினைவில் வைத்துக்கொள் மகனே, இந்த வாழ்க்கையில் சோவியத் சக்தியைவிட சிறந்தது எதுவுமில்லை. ஆம், சிரமங்கள், பிரச்னைகள் இருக்கும். ஆனால், சோவியத் அரசாங்கம் எப்போதும் சாதாரண மனிதனைப் பற்றி நினைத்தது. பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு முதல் 21 சலுகைகளை வழங்கியது. ஒவ்வொரு சோவியத் குடிமகனுக்கும் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இலவசமாகக் கிடைக்கச் செய்தது. சோவியத் ஒன்றியத்தின் தாய் எங்களை வெற்றியின் உச்சத்திற்கு உயர்த்தினாள். 

இந்த சோவியத் சக்தியை, மக்கள் சக்தியை கோர்பசெவ் மிகவும் இழிந்த முறையில் காட்டிக்கொடுத்தார். சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அமைப்பின்படி சோவியத் குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். 

சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களில் கிட்டத்தட்ட 77% ஒன்றுபட்ட சோசலிஸ தந்தை நாட்டில் வாழ விருப்பம் தெரிவித்தனர். ஆனால் கோர்பசெவ், எல்ஸ்டின் தலைமையிலான குழுக்கள் சோவியத் மக்களின் இந்த வரலாற்று சாதனையை காட்டிக்கொடுத்தனர். இது எந்த விதமான வரையறைகளும் இல்லாத குற்றமாகும்.

கோர்ப்பச்சேவின் மற்றொரு குற்றம் என்னவென்றால், சோவியத் மக்கள் கடந்த 100 ஆண்டுகளில் வென்ற அனைத்தையும் இழக்க வைத்தார். அனைவரும் ஒரு கண்ணியமான வேலைக்கான உத்தரவாதம், நல்ல சுகாதார பாதுகாப்பு, இலவச கல்வி, ஒழுக்கமான ஓய்வூதியம் உட்பட பல சமூக உத்தரவாதங்களை மக்களை இழக்கச் செய்தார். குடிமக்களின் சேமிப்பு மதிப்பு குறைக்கப்பட்டது. மூதாட்டிகள் ஒரு மழை நாளுக்காக வைத்திருந்த பணம்கூட காலி காகிதமாக மாறியது.  கோர்பசெவுடைய மற்றொரு குற்றத்தை நான் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவருக்கும் துரோகம் செய்தார். உதாரணமாக கிழக்கு ஜெர்மனியின் முன்னாள் தலைவர் ஹரிக் ஒனெக்கர்  ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்படும் அளவுக்கு கோர்பசெவால் காட்டிக்கொடுக்கப்பட்டார். ஜெர்மனியில் ஹரிக் ஒனேக்கர் ஹிட்லரின் கீழ் எந்தச் சிறையில் இருந்தாரோ அதே சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

1989 டிசம்பர் மாதம் மால்டாவில் கோர்பசெவ் அமெரிக்க ஜனாதிபதி சீனியர் புஷ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இயற்கைகூட இந்தச் சந்திப்புக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தது. கடலில் புயல் எழுந்தது. அமெரிக்கக் கப்பல்கள் ஒரு பக்கமாகத் தூக்கி எறியப்பட்டன. எங்கள் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட பெரிய லைனர் மார்சிம் கார்த்தி கப்பல் சீராக நின்றது. அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அவர்கள் பேச்சுவார்த்தையில் மேஜையில் அமர்ந்தபோது எந்தக் காரணமும் இல்லாமல் கோர்பசெவ் புஷ்ஷிடம் கூறினார். கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வெளியேற வார்சா ஒப்பந்தத்தைக் கலைக்க முடிவு செய்திருக்கிறோம் என்றார் கோர்பசெவ். அமெரிக்கப் பிரதிநிதிகள் இந்தச் செய்தியைக் கேட்டவுடன் அவர்களுக்கு வியர்த்துவிட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் பிரேக்கர் நினைவுகூர்ந்தார். நேட்டோவைக் கலைக்க வேண்டும் என்று கோர்பசெவ் கோருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இல்லை இப்போது நமக்குத் தூய சிந்தனை இருக்கிறது. எனவே நாங்கள் வார்சா ஒப்பந்தத்தைக் கலைக்கிறோம். நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டார். இவ்வாறு முழுப் பாதுகாப்பு அமைப்பும் காட்டிக் கொடுக்கப்பட்டது. 

இந்தப் பாதுகாப்புக் கட்டமைப்பிற்காக எங்கள் தாய்நாட்டின் 27 மில்லியன் மகன்கள் மற்றும் மகள்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். பெரும் தேச பக்த போரின்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு சோவியத் குடும்பமும் உயிரிழப்புகளைச் சந்தித்தது. எனவேதான் கோர்பசெவ் மற்றும் அவரது குழு என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். நாங்கள்  ஆர்எஸ்எஃப்எஸ்ஆர் என்ற கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கினோம். நாங்கள் பலவீனமாக இருந்தோம். அவர்கள் எங்களுக்கு ஒரு சின்ன வாய்ப்பைக்கூட தரவில்லை. ஆனால், கிரம்ப்ளின் மற்றும் ஸ்டாரையா சதுக்கத்திலிருந்து இந்த ஆட்சியாளர்களை வெளியேற்றுவதற்காக அனைத்து ஆரோக்கியமான தேச பக்தி சக்திகளையும் ஒன்றிணைக்க எங்களுக்கு ஒரு வருடம் மட்டும் போதாது என்பதைப் புரிந்துகொண்டோம்.

நான் பொலிட்பீரோ உட்பட கட்சி அமைப்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு 10 ஆண்டுகளாக கிரிமினல் வழக்குகளை அவர்கள் ஜோடித்தனர். எழுத்தாளர் யூரி பொண்டரேவ், இயக்குநர் ஸ்டானிஸ்லாவ் கோவோருகின், பாடகர் ஐயோசிஃப் கோப்சன், நடிகர் மிகைல் நோஷ்கின், பத்திரிகையாளர்கள் அலெக்சாண்டர் புரோகானோவ் மற்றும் வாலண்டைன் சிக்கின் ஆகியோர் எனக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினர். உண்மையான தேச பக்தர்கள் இது ஒரு நியாயம் அற்ற படுகொலை என்பதை நன்கு அறிந்திருந்து கிளர்ச்சி செய்தனர். கோர்பசெவ் குழுவிலிருந்து வெளியேறுவதற்கு நிறைய மகிமை இருக்கிறது. வெளியேறுவது அவர்களின் தொழில். ஆனால் துரோகத்தனமான 90ஆம் ஆண்டுகளிலிருந்து நாம் நேர்மையாக நம்மைப் பிரித்துக்கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நாசிஸம் மற்றும் பாசிஸத்தின் மீது  வெற்றி கிடைக்காது. இது எங்களின் கொள்கைரீதியான நிலைப்பாடு.

மக்கள் நீண்ட காலமாக கோர்பசெவிஸம்  குறித்த மதிப்பீட்டைக் கடுமையான தண்டனையின் மூலம் வெளிப்படுத்தினர். அதாவது 1996இல் கோர்பசெவ் மற்றும் அவரது குழுவினர் ஒரு தேர்தல் குழுவை உருவாக்கி அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்க முடிவு செய்தனர். ஆனால், கோர்பசெவ் தாயகமான ஸ்டோவ்ரோபோவில்கூட அவருக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று மக்கள் கூறினார்கள். ஏனென்றால், அவர் எல்லாவற்றையும் விற்று ஏமாற்றிவிட்டார். திருடர்களின் தனியார்மயமாக்கலைத் தொடங்கிவைத்தார். இதன் விளைவாக 1996 ஜனாதிபதி தேர்தலில் 0.5% வாக்காளர் மட்டுமே கோர்பசெவுக்கு வாக்களித்தனர்.

கோர்பசெவுடைய கிரிமினல் துரோகக் கொள்கைக்கு மக்கள் அளித்த தீர்ப்பு இது. நாங்கள் பின்னர் ஒரு பகிரங்கமான தடயவியல் விசாரணையை நடத்தினோம். எல்ஸ்டினின் குற்ற நடவடிக்கை குறித்து உட்பட இந்த விசாரணை நடைபெற்றது. 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் டூமாவில் உள்ளது. அனைத்துக் குற்றங்களும் நிரூபிக்கப்பட்டன. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ராணுவத்துக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் உட்பட இதில் உள்ளது. ஜெர்மனியில் மட்டுமே எங்கள் துருப்புக்கள்  கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்கள் இருந்தனர். அது வலிமையான ராணுவமாக இருந்தது. ஜெர்மனியில் இருந்து நாங்கள் எங்கள் படைகளைத் திரும்பப் பெறுவதால் ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் ஒரு ஷரத்தைச் சேர்க்க வேண்டும் என்று  எதிர்பார்த்தோம். அதாவது ஜெர்மனி இனிவரும் நூற்றாண்டுகளில் எந்த நேட்டோவிலும்  சேராது என்ற சரத்து இருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

இந்தக் கொள்கை கிழக்கு ஐரோப்பாவிற்கும் பொருந்தும். காரணம் அந்த நேரத்தில் போலந்து, செக்கஸ்லவாக்கியா, மற்றும் அங்கேரியில் எங்கள் ராணுவம் இருந்தது. இந்த ஷரத்து சேர்க்காததின்  விளைவு இன்று நாஜிக்கல் அங்கு அணிவகுத்து சோவியத் நினைவுச் சின்னங்களை இடித்துத் தள்ளுகிறார்கள். ஒவ்வொருவரும் ரஷ்ய மக்களைக் கேலி செய்கிறார்கள். இன்றைய  நமது பிரச்னைகள் அனைத்தும் அங்கிருந்து வளர்ந்து விரிவடைகின்றன.

திருடியவர்கள், தங்கள் சட்டைபைகளில் அடைத்துக்கொண்டவர்கள், இந்தக் குற்றம், அவமானம் தேசத்தின் அழிவு என்று தங்களை தாங்களே வளப்படுத்திக்கொண்டவர்கள் எல்லாம் இப்போது கோர்பசெவ் மரணத்தைப் பற்றிப் பேசுகிறார்கள் அல்லது திணறுகிறார்கள். அவர்கள் அமைதியாக இருந்தால் நல்லது.

உலகிலும், ஐரோப்பாவிலும், ரஷ்ய கூட்டமைப்பிலும் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு  ஏற்படுவதற்கு கோர்பசெவ் நடவடிக்கைகள்தான்  காரணமாகும். நமது எல்லையை சுற்றிப் பாருங்கள், இந்தத் துரோகத்தின் விளைவுகளை நீங்கள் காண்பீர்கள். கிழக்கு ஐரோப்பா இப்போது உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. பால்டிக் நாடுகளில் பாசிஸ்ட்டுகள் மற்றும் நாஜிக்கல் எல்லாவற்றிலும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு தொழிற்சாலைகளை கட்டியவர்களை வாயை அடைத்து புதிய துறைமுகங்களைத் திறக்கிறார்கள்.

உக்ரைனில் 82 சதவீத மக்கள் ரஷ்ய மொழியை தங்கள் சொந்த மொழியாகக் கருதுகின்றனர். ஆனால் இன்று அவர்களால் தாய்மொழி பேச முடியவில்லை. இப்போது உக்ரைன் மற்றும் டான்பாஸில் உள்ள  பாசிஸத்தை அழிக்க எங்கள் மகன்களின் வாழ்க்கையை மீண்டும் இழக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தற்போது கோர்பசெவ், இரண்டாம் நிக்கோலஸ் சார் மன்னன் இருவரையும் இணைத்துப் பேச வேண்டியுள்ளது. நிக்கோலஸ் லண்டன், பாரிஸ், நியூயார்க் வங்கியாளர்களின் பணத்திற்காக தேவையற்ற முறையில் முதல் உலகப் போரில் இறங்கினார். அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நடத்த முடியாதவராக இருந்தார். கோர்பசெவ் ஒரு பெரிய ராணுவத்துடன், சக்தி வாய்ந்த, உற்பத்தி சிறந்த, அறிவியல் சிறந்த, சமூக அமைப்பு ஆகியவற்றுடன் அதிகாரத்தில் இருந்தார். தாட்சர் அவரைப் பார்த்துப் புன்னகைத்ததற்காகவும், புஷ் தோள்பட்டைகளில் கைகளைப் போட்டதற்காகவும் எல்லாவற்றையும் வீழ்த்தினார். ஒரு தலைவருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் மிகவும் அவமானகரமான நடத்தை இது.

டான்டே அல்கியேரினி தெய்வீக நகைச்சுவையைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். பல வட்டங்களில் மரணங்களைப் பற்றிய அவர் ஓவியங்களை வரைந்தார். ஒன்பதாவது வட்டத்தில் தங்கள் தாயகம். குழந்தைகள். நாடு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு துரோகம் செய்த அயோக்கியர்களுக்கானது என்பதை வரைந்தார். நம் ஆயிரம் வருட வரலாற்றில் கோர்பசெவைவிடப் பெரிய துரோகியை அவளுக்குத் தெரியாது என்று நான் நம்புகிறேன்."

(ஆங்கிலத்திலிருந்து தமிழ்ச் சுருக்கம்: அ.பாக்கியம்

என்னுடைய பதில்

இக்கட்டுரையை எனக்கு அனுப்பிய தோழருக்கு நான் அனுப்பிய பதில்:

நன்றி. சோவியத் யூனியனிலும் பிற கிழக்கு ஐரோப்பிய சோசலிஸ நாடுகளிலும் இழைக்கப்பட்ட குற்றங்கள், தவறுகள் ஆகியவற்றை ஒரு தனிமனிதர் மீதே சுமத்துவதை (எடுத்துக்காட்டாக ஸ்டாலின் பற்றிய குருஷ்செவ் அறிக்கை) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (அப்போது ஒன்றுபட்டிருந்த கட்சி) (பின்னர் சிபிஎம்) உள்ளிட்ட பல  கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்தன. அதேபோலத்தான் நீங்கள் அனுப்பிய ஜியுகனோவின் கட்டுரையும்.

நான் கேட்க விரும்பும் கேள்விகள் பின்வருமாறு: 

1. பெரும் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு (சோவியத் யூனியனின் தகர்வுக்கு இட்டுச் சென்ற நிகழ்ச்சிகள்) ஒரு தனிமனிதர் (கோர்பசெவ்) மட்டுமே பொறுப்பு என்பது எவ்வகையான மார்க்ஸியம்? 

2. கோர்பசெவ் ஆட்சிக்காலத்தில் கட்சிக்குள்ளும் வெளியிலுமிருந்த சக்திகள் யாவை?

3. அவற்றின் பலாபலம் என்ன? 

4. கோர்பசெவ் செய்ததாக ஜியுகனோவின் கட்டுரை கூறும் குற்றங்களுக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாகவோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ’உண்மையான கம்யூனிஸ்ட்டு'களால் அணிதிரட்டப்பட்டோ  ஏன் போராடவில்லை? 

5. சோவியத் யூனியனைப் பழைய வடிவத்தில் அப்படியே தக்கவைத்துக்கொள்ள விரும்பியவர்களின் ராணுவக் கிளர்ச்சிக்கு ஏன் மக்கள் ஆதரவளிக்கவில்லை? அந்தக் கிளர்ச்சி முழுக்கவும் ரஷிய பின்புலம் கொண்ட தளகர்த்தர்களால் முன்னெடுக்கப்பட்டது; ஏனைய தேசிய இனங்களைச் சார்ந்தோர் அதில் இல்லை என்பது நாம் கவனப்படுத்தாமல் விடக் கூடியதா? மேலும் ஏன் இரண்டே நாட்களில் அந்தக் கிளர்ச்சி தோற்றது? 

6. யெல்ட்சினுக்குப் பெரும் ஆதரவு ஏற்பட்டது ஏன்? 

6. ரஷிய சோசலிஸ சோவியத் குடியரசின் தலைவராக (சோவியத் யூனியன் இருந்தபோதே) ஏறத்தாழ 90 விழுக்காடு வாக்காளர்களால் யெல்ல்ட்ஸின் தேர்ந்தெடுக்கப்பட்டது எவ்வாறு? 

7. சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய சோசலிஸ நாடுகளின் வீழ்ச்சிக்கு ஏகாதிபத்திய நாடுகள் உடந்தையாக இருந்தன என்பதை மறுக்கவியலாது என்றாலும், அந்த நாடுகளில் இருந்த பெரும்பான்மையான மக்கள் அங்கிருந்த கம்யூனிஸ்ட் ஆட்சிகளைத் தூக்கியெறிய இலட்சக்கணக்கில் திரண்டது ஏன்? 

8. ஏகாதிபத்தியப் பிரசாரத்துக்கும் சதிக்கும் அவர்கள் பலியாகிவிட்டார்கள் என்றால் பல பத்தாண்டுக்கால கம்யூனிஸ ஆட்சிக்குப் பிறகும் அவர்கள் மனங்கள் ஏகாதிபத்தியப் பிரசாரங்களுக்கு இரையாகிவிட்டதை எப்படிப் புரிந்துகொள்வது? 

8. ஜுயுகானோவின் கட்டுரையில்  சோவியத் யூனியனின் தகர்வில் ’இராணுவப் புரட்சியாளர்கள்’, யெல்ட்சின்  ஆகியோர் வகித்த முக்கியப் பாத்திரம் பற்றிய ஒரு சொல்கூட இல்லாதது ஏன்?

9. சோவியத் யூனியனில் சாதிக்கப்பட்டவற்றை யாரும் (நான் உட்பட) மறுக்கவில்லை. எனினும் அந்தச் சாதனைகளுக்குப் பின்னால் பல குலக்குகள் எனும் கட்டாய பணி நிர்ப்பந்த வதைமுகாம்கள்  இருந்தன என்பதை மறுக்க முடியுமா? அந்தச் சாதனைகளுக்குத் தரப்பட்ட மனித விலைகளைப் பற்றிப் பேசத் தயாரா? மேலும்,  குருஷ்செவ் காலம் தொட்டு ப்ரெஸ்னெவ் காலம் வரை தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்ததற்குக் காரணம் என்ன? 

9. விண்வெளி ஆராய்ச்சி, செயற்கைக் கோள் ஆகியன குருஷ்செவ் காலத்தில் நிகழ்ந்தவை. ஆனால் அவரை திருத்தல்வாதி எனக் கருதுபவர்கள் ஏன் அதை அங்கீகரிப்பதில்லை?

10. கோர்பசெவ் தனக்கு வேண்டாதவர்களைக் கட்சியிலிருந்து நீக்கினார் என்று ஜுயுகனோவ் கூறுகிறார். இதை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த வேறு தலைவர்கள் செய்யவில்லையா? புகாரின், ஸீனோவிவ், ராடெக் முதலிய நூற்றுக்கணக்கான போல்ஷ்விக் தலைவர்கள் - 1917 புரட்சியின் முன்னணிப் பாத்திரம் வகித்தவர்கள் - மீது ஜோடிக்கப்பட்டட வழக்குகள் போடப்பட்டு அவர்கள் கொல்லப்படவில்லையா? சோவியத் யூனியனில் பிரெஸ்னெவ் ஆட்சியின்போது அவர்களில் பலருக்கு மறுஅங்கீகாரம் தரப்படவில்லையா?  அதேவேளை வேறு சில கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்படவில்லையா? 

10. சோவியத் யூனியனில் எல்லாக் குடிமக்களுக்கும் வாக்குரிமை தரப்பட்டது என்று ஜுயுகனோவ் கூறுவது உண்மைதான். ஆனால்  அவர் சொல்லாமல்விட்ட இன்னொரு உண்மை, ஒரே ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக நிறுத்தப்ட்டார்கள் - கோர்பசெவ் காலம் வரை -  என்பதல்லவா? அவர்கள் எல்லோரும் பரிசுத்தமானவர்களா? ‘நாமன்கிளேசுரா’ முறையில்தானே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர், கட்சியில் பதவி தரப்பட்டனர் என்பதெல்லாம் பொய்யா? 

11. சோவியத் யூனியன் குடிமக்களில் கிட்டத்தட்ட 77 சதவீதம் ஒன்றுபட்ட சோசலிஸ தந்தை நாட்டில் வாழ விருப்பம் தெரிவித்தனர். ஆனால், கோர்ப்பசெவ், யெல்ஸ்டின் தலைமையிலான குழுக்கள் சோவியத் மக்களின் இந்த வரலாற்றுச் சாதனையை காட்டிக் கொடுத்தனர் என்று உண்மையைத் திரித்துக் கூறுகிறார் ஜுயுகனோவ்.  ஆனால், அந்தப் பொது வாக்கெடுப்பு என் முந்தைய கட்டுரையில் கூறப்பட்டதுபோல கோர்பசெவ் ஆட்சிக்காலத்தில்தான் நடத்தப்பட்டது (விக்கிபீடியாவில்கூட இதைத் தெரிந்துகொள்ள முடியும்). அது சோவியத் யூனியனிலிருந்து பிரிந்துபோன பால்டிக், ஜார்ஜிய, ஆர்மினிய, மோல்டோவியக் குடியரசுகள் நீங்கலாக மீதி எட்டுக் குடியரசுகளில் இருந்த மக்களிடம் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்புதான்; மேலும், அது 'சோவியத் இறையாண்மைக் குடியரசுகளின் ஒன்றியம்' என்ற (Union of Soviet Soverign Nations) புதிய ஒன்றியமொன்றை உருவாக்குவதற்கான வாக்கெடுப்புதானேயன்றி பழைய சோசலிஸ சோவியத் யூனியனைத் தக்கவைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு அல்ல. அப்போது  யெல்ட்சினின் ஆட்சியின் கீழ் இருந்த ரஷிய சோசலிஸ சோவியத் குடியரசில் இருந்த மக்களிலும்கூட ஏறத்தாழ 72 விழுக்காட்டினர் அந்தப் புதிய ஒன்றியத்தில் இருக்க விருப்பம் தெரிவித்து வாக்களித்தனர்.

என் முந்தைய கட்டுரையில் கூறியதுபோல, அந்த எட்டுக் குடியரசுளின் தலைவர்கள் 1991 ஆகஸ்ட்டில் கூடி அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைத் தடுக்கவும் பழைய சோவியத் யூனியனை (அதிலிருந்து பிரிந்துபோன நாடுகளையும் வலுக்கட்டாயமாகச் சேர்த்து) தக்கவைத்துக்கொள்ளவும் சோவியத் நாமன்கிளேசுராவைச் சேர்ந்தவர்கள், மக்களை அணிதிரட்டாமலும், கோர்பசெவை வீட்டுக்காவலில் வைத்தும்,  அவரசரநிலையைப் பிரகடனப்படுத்தியும்  ராணுவப் புரட்சியை நடத்தினர். அந்த ராணுவப் புரட்சியை ஒடுக்குவதில் முதன்மைப் பாத்திரம் வகித்தவர்  யெல்ட்சின் என்பதைக்கூட ஜூயுகனோவ் மூடிமறைக்கிறார். அதேபோல, அந்த ராணுவப் புரட்சி தோல்வியடைந்த பின், உக்ரைய்ன்,  பைலோ ரஷியக் குடியரசுத் தலைவர்களுடன் சேர்ந்து சதி செய்து 'சுதந்திர  அரசுகளின் காமன்வெல்த்' என்பதை யெல்ட்ஸின் உருவாக்கியதையும் சோவியத் யூனியன் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்ட பிறகு சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமாக இருந்த உடைமைகள், ஆவணங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தவர் அவர்தான் என்ற வரலாற்று உண்மைகளையும் மறைக்கிறார் ஜுயுகனோவ்.

அந்தக் குழப்பான சூழ்நிலையில் தனது கட்சி ஆவணங்களைக்கூட சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த 'உண்மையான கம்யூனிஸ்ட்'டுகளால் ஏன் பாதுகாக்க முடியவில்லை? இப்போது அவை யாவும் புதினின் ரஷிய அரசாங்கக் காப்பகத்தில் உள்ளன. அவற்றில் கணிசமானவை  ஆராய்ச்சியாளர்களுக்குக்கூடத் தரப்படுவதில்லை. கோர்பசெவை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக ஆக்குவதில் முக்கியப் பாத்திரம் வகித்தவர் ஆண்ட்ரெபோவ் என்பதைக் கூறும் ஜுயுகனோவ், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, அரசாங்கம், ராணுவம் ஆகியவற்றிலிருந்த ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவித்தவர் ஆண்ட்ரோபோவ் என்பதை குறிப்பிடுவதே இல்லை. 

கோர்பசெவின் ‘பெரெஸ்த்ரொய்கா’, ’கிளாஸ்நோஸ்ட்’ ஆகியன  சோவியத் யூனியனை அதிகாரி வர்க்க சோசலிஸத்திலிருந்து மீட்டு, கருத்துரிமையும்  ஜனநாயக உரிமைகளும் உத்தரவாதம் செய்யப்படும் உண்மையான சோசலிஸத்தை உருவாக்கும் என்று உளமார நம்பிய பல லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். ஆனால், அது எவ்வாறு திசைமாறிப் போயிற்று, கோர்பசெவ் மேற்கு ஐரோப்பிய சோசலிஸ ஜனநாயகப் பொருளாதார முறையை (சாராம்சத்தில் அது முதலாளியம்தான்) நடைமுறைப்படுத்தத் தொடங்கினார் என்பதையெல்லாம் 'ரஷியப் புரட்சி ; இலக்கிய சாட்சியம்' நூலின் இரண்டாவது பதிப்பில் பதிவுசெய்துள்ளேன்.

கோர்பசெவ் காலத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல், பண்பாட்டுச் சக்திகள் யாவை, புதிய தலைமுறையைச் சேர்ந்த இளம் மக்களுக்கு ஏன் மேற்கு நாட்டுக் கலாச்சாரம் கவர்ச்சிகரமாகத் தெரிந்தது, மேற்கு நாட்டு முதலாளிய ஜனநாயகம் வந்துவிட்டால் தங்கள் வாழ்வு  மேம்படும் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் இருந்தது ஏன் என்பது போன்றவற்றை விளக்கியுள்ளேன். அதேவேளை கோர்பசெவின் பெரெஸ்ட்ரொய்காவின் முதல் கட்டம் சோசலிஸத்தைக் குலைக்காத வண்ணம் இருந்தது என்பதைப் பின்னாளில் கோர்பசெவிடமிருந்து விலகிய லிகசெவ் என்ற முக்கிய கம்யூனிஸ்ட் தலைவர் கூறியதையும் பதிவுசெய்துள்ளேன். அதேபோல, கோர்பசெவ் சந்தைப் பொருளாதாரத்தையும் அமெரிக்கா, சர்வதேச நிதியம் ஆகியவற்றையும் அணுக முடிவு செய்ததையும் விமர்சித்துள்ளேன். ஆனால், சோவியத் யூனியனிலோ  பிற நாடுகளிலோ எக்காரணமும் கொண்டும் ரத்தக்களரி ஏற்படுத்துவதை, அந்தந்த நாட்டு அரசுகள் தங்கள் சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவிப்பதைத் தடுக்க முயற்சி செய்தவர் கோர்பசெவ் என்பதை நான் மறுக்க மாட்டேன்.

சோவியத் யூனியன் கலைக்கப்பட்ட பிறகு ரஷிய குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்லில் 1996ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்ட கோர்பசெவுக்கு 0.5 விழுக்காடு வாக்குகளே கிடைத்தற்குக் காரணம் ரஷிய மக்களால் அவர் நிராகரிக்கப்பட்டதுதான் என்று கூறும் ஜுகனோவ், அந்தத் தேர்தலில் வென்றவர்  யெல்ட்சின் என்பதைக் கூறுவதில்லை.

யெல்ட்சின் ஆட்சிக் காலத்தில் ஜனநாயக உரிமைகள் ஒழிக்கப்பட்டதையும் பொருளாதாரத் துறையில் கொள்ளையடிப்புகள் நடந்ததையும் விமர்சித்துவந்த கோர்பசெவ், மக்கள்  ஒரேயடியாக வறுமையில் தள்ளப்பட்டதைக் கண்டனம் செய்துவந்தார். தான் மக்களிடம் அந்நியப்பட்டுபோனதை உணர்ந்த யெல்ட்சின் தனது ஆதரவாளரான புதினைக் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வைத்தார். யெல்ட்சினுக்குப் பதிலாக புதின்  ஆட்சிப் பொறுப்பை ஏற்றது ரஷியாவுக்கு நன்மை பயக்கும் என்று முதலில் கருதிய கோர்பசெவ் பிற்பாடு புதினின் பொருளாதார, அரசியல் கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வந்தார். உக்ரெயினிலிருந்து கிரிமியா பிரிந்து வந்து ரஷியாவுடன் சேர்ந்ததை ரஷிய பெருந்தேசியவாதக் கண்ணோட்டத்திலிருந்து அல்லாமல் ஜனநாயக உணர்வோடு வரவேற்ற கோர்பசெவ், சோவியத் யூனியன்  இருந்தபோது கிரிமிய மக்களின் விருப்பத்தை அறியாமல் அது உக்ரெய்னுக்குக் கொடுக்கப்பட்டதற்கு மாறாக, தற்போது பொது வாக்கெடுப்பின் வழியாக அந்த மக்கள் முழு விருப்பத்தோடு ரஷியாவுடன் சேர்ந்துள்ளனர் என்று கூறினார்.

உக்ரெய்னில் 2014ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் தலையிட்டுவந்தது விரைவில் பேரழிவை உண்டாக்கும் என்று கோர்பசெவ் கூறியது இன்று நிதர்சனமாகிவிட்டது. தொடர்ந்து அவர் அமெரிக்காவின் செயல்பாடுகளைக் கண்டனம் செய்துவந்தார். ஜுயுகனோவ்,  கோர்பசெவையும் யெல்ட்சினையும் ஏகாதிபத்தியத்தையும்  பின்னர்  புதினையும் எதிர்த்தவர். ஆனால், ஸ்டாலினிஸ கம்யூனிஸமும் ரஷிய தேசியவாதமும் இணைந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்து மீண்டும் ஸ்டாலினிஸ ஆட்சி முறையைக் கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறவர். அவரது தேசியவாதம் இன்று புதினின் ஆட்சி உக்ரெய்னில் நடத்தும் போருக்கு முழு ஆதரவு தரும் நிலைக்குச் சென்றுள்ளது. ரஷியப் பாட்டாளி வர்க்கத்தின் அல்லது  உக்ரெய்ன் பாட்டாளி வர்க்கத்தின் சார்பில் அந்தப் போர் நடக்கிறதா? 

12. உக்ரெய்னிலுள்ள முற்போக்குச் சக்திகள்  நேட்டோ சார்பில் உக்ரெய்ன்  நடத்தும் போரை எதிர்க்கின்றனர். அவர்களைக் கைதுசெய்து சித்திரவதை செய்கிறது ஸெலென்ஸ்கியின் அரசு. அதேபோல ரஷியாவிலுள்ள போர் எதிர்ப்பாளர்களை (அவர்களில் பலர் ஜுயுகனவோவின் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாத கம்யூனிஸ்ட்டுகளும் ஆவர்) புதின் அரசு கொடுமைப்படுத்துகிறது. இதை நியாயப்படுத்துகிறவர் ஜுயுகானோவ்.

வார்ஸா ஒப்பந்த்த்தை ரத்து செய்ததன்  மூலம் கோர்பசெவ் கிழக்கு ஐரோப்பிய நாட்டு மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலையைக் கொண்டுவந்துவிட்டதாக ஜுயுகானோவ் கூறுவதன் மூலம், 1958இல் ஹங்கேரி  மீதும் 1971இல் செக்கோஸ்லோவாகியா மீதும் சோவியத் (ரஷிய) ராணுவம் படையெடுத்ததை நியாயப்படுத்துகிறார். ஆனால், அந்த நாட்டு மக்கள் அந்தப் படையெடுப்புக்கு எதிராகப் போராடியதையும்  ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதையும் அவர் சோசலிஸ்ட்டாக அல்ல, ரஷிய தேசியவாதத்தின் பெயராலே நியாயப்படுத்துகிறார்.

சோவியத் யூனியனில் கடந்த காலத்தில் நடந்த தவறுகளையும் குற்றங்களையும் விமர்சித்து, பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் நியாயப்படுத்தும் போக்கும் சேர்ந்துதான் சோவியத் யூனியன் தகர்ந்து விழுவதற்கான காரணங்களிலொன்றாக இருந்தது.  இன்றும்கூட வேறு சில கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் ஸ்டாலின்களும் ஸ்டாலினிஸமும் தேவைப்படுகின்றன - மனித உரிமை என்று பேசிக்கொண்டே தங்கள் அரசியலையும் ஆட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு  எதிராக ‘உபா’ போன்ற கொடிய சட்டங்களைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்துவதற்காக! இதுதான் சரியான வழியா?

பின்குறிப்பு

ஜுயுகனோவின் கட்டுரையிலுள்ள மேலும் சில வரலாற்றுத் திரிபுகளுக்கு நான் பதில் கூறவில்லை. அவற்றைப் பிறகு பார்ப்போம். அக்கட்டுரையை  எனக்கு  அனுப்பிய தோழர் இன்னொரு எதிர்வினையையும் ஆற்றியுள்ளார். அதில் எல்லாத் தவறுகளுக்கும் ஒரு தனிமனிதர் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல என்றும், ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை  கோர்பசெவின் அணுகுமுறை வரலாற்றுத்தன்மையற்றதும், மார்க்ஸியமல்லாத்துமாகும் என்றும், ஏகாதிபத்தியம் இருக்கும் வரை ‘சமாதானம்’ ஏற்படாது என்றும், தான் பயணத்தில் இருப்பதால் சிறிது நாட்கள் கழித்து விரிவான பதில் எழுதுவதாகவும் கூறியுள்ளார்.  

இக்கட்டான தருணங்களில் ஏகாதிபத்தியத்துடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்வது சோவியத் யூனியனின் வரலாற்றில் புதியதொன்றல்ல. எடுத்துக்காட்டாக , போல்ஷ்விக்  அரசாங்கம் ஏற்பட்ட பிறகு சோவியத் அரசாங்கம் ஜெர்மனியுடன் 1918இல்  செய்துகொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம்;  1939இல் நாஜி ஜெர்மனியுடன் சோவியத் யூனியன் செய்துகொண்ட சமாதான மற்றும் கலாசார ஒப்பந்தம்; கொரியப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவும் சோவியத் யூனியனும் செய்துகொண்ட ஒப்பந்தம்; கியூபாவில் சோவியத் ஏவுகணை வைக்கப்பட்ட்தன் காரணமாக ஏற்பட்ட பதற்றமான சூழலில் கென்னடியும் குருஷ்செவும் செய்துகொண்ட ஒப்பந்தம் மற்றும் புதின் ஆட்சிக்கு வந்த பிறகும் அமெரிக்கா, நேட்டோ நாடுகளுடன் சில ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டன.

எனினும், அத்தோழரின் விரிவான பதில் வந்த பிறகு இந்த விவாதத்தைத் தொடரலாம்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரை, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். மார்க்ஸிய - பெரியாரிய அறிஞர். தொடர்புக்கு: sagumano@gmail.com


1






பாவப்பட்ட ஆண்நோங்தோம்பம் பிரேன் சிங்பால் ககாமேஉலகத் தலைவர்அறுவை சிகிச்சைதொல்லியல் துறைகணக்கெடுப்புபெயர்கள்மார்க்கண்டன்பரவசம்வான் நடுக்கோடுதேசிய கீதம்வ.ரங்காச்சாரிமாமன்னன்சகிப்பின்மைஅருஞ்சொல் பஜாஜ்சத்ரபதி சிவாஜிமதுதிருமண வலைதளங்கள்தனிச் சுடுகாடுகுதிகால் வலியைக் குறைக்க என்ன செய்யலாம்?மாரா நதிவேலைக்குத் தடைஇந்தியப் பெருங்கடல்பாரத் ஜாடோ யாத்திரைதமிழக அரசியல்சண்முகநாதன் கலைஞர் பேட்டிவங்க தேசப் பொன் விழாதமிழ்நாடு நிதிநிலை அறிக்கை - 2024இடைநீக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!