பேட்டி, அரசியல் 10 நிமிட வாசிப்பு

இது புதிய ஆஃப்கன்… தலிபான்கள் முன்புபோல் இருக்க முடியாது! - சாத் மொஹ்சேனி பேட்டி

எஸ்.அப்துல் ஹமீது
06 Oct 2021, 5:00 am
1

தலிபான் விவகாரத்தைத் தொடர்ந்து கவனிப்பவர்களுக்குப் பரிச்சயமான ஒரு பெயர் சாத் மொஹ்சேனி. 1966-ல் லண்டனில் பிறந்தவர் இவர். ஆஃப்கன் தூதுவராக இருந்த இவருடைய தந்தை, ஆஃப்கனில் சோவியத் ஒன்றியத்தின் நுழைவுக்குப் பிறகு தனது பணியிலிருந்து விலகி, குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சம் அடைந்தார். தந்தை தூதுவராக இருந்ததால் பாகிஸ்தான், ஆஃப்கன், ஜப்பான், பிரிட்டன் எனப் பல்வேறு நாடுகளில் வசிக்கும் சூழல் மொஹ்சேனிக்கு ஏற்பட்டது. இறுதியாக, அவர்களது குடும்பம் ஆஸ்திரேலியாவில் குடியேறிய பிறகு, ஆஸ்திரேலிய முதலீட்டு வங்கியொன்றில் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கினார் மொஹ்சேனி. கவனிக்கத்தக்க தொழில்முனைவோராக உருவெடுத்தார்.

ஆஃப்கனுக்குள் அமெரிக்கா நுழைந்த மறு ஆண்டில் (2002) சாத் மொஹ்சேனியும் அவரது சகோதரர்களும் ‘மொபி குழுமம்’ (MOBY Group) என்றொரு ஊடக நிறுவனத்தை ஆஃப்கனில் தொடங்கினர். அதன் கீழ் ‘அர்மன் எஃப்எம்’ (Arman FM) வானொலி நிலையத்தை ஆரம்பித்தனர். அதுதான் ஆஃப்கனில் முதல் தனியார் வானொலி நிலையம். அதில் மேற்கத்திய பாப் இசைகள் ஒலிபரப்பட்டன. 1996 முதல் 2001 வரையில் தலிபான்கள் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள், பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தடைசெய்யப்பட்டிருந்தன. இப்படியான சூழலில், மொஹ்சேனி சகோதரர்கள் தங்கள் வானொலியில் பாப் இசையை ஒலிபரப்பியது பெரும் அதிர்வலையை உண்டாக்கியது. 2004-ல் ‘டோலோ டிவி’ (TOLO TV) சேனலைத் தொடங்கி அமெரிக்க சோப் ஓப்ராக்கள், ஆஃப்கன் நடிகர்கள் நடித்த நாடகங்கள் ஆகியவற்றை ஒளிபரப்பினர். அதைத் தொடர்ந்து 2010-ல் ‘டோலோ நியூஸ்’ (TOLO NEWS) சேனலைத் தொடங்கினர். ஆஃப்கனின் அரசியல், சமூக நிலவரத்தை உலகுக்கு அறியச் செய்யும் முன்னணி ஊடகமாக ‘டோலோ நியூஸ்’ மாறியது. இப்படியாக ஆஃப்கனின் பெரும் ஊடக நிறுவனமாக ‘மொபி குழுமம்’ உருவெடுத்தது.

இந்தப் பத்து ஆண்டுகளில் ‘டோலோ நியூஸ்’ ஊழியர்கள் பலரும் தலிபான்களால் தாக்கப்பட்டுள்ளனர்; சிலர் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். நெருக்கடிச் சூழலிலும் தனது செய்தி நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார் சாத் மொஹ்சேனி. அவர் மேற்கொண்ட பல புரட்சி நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்கது, பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தியது. தற்போது தலிபான் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில் அவர்களின் மூத்த அதிகாரியை ‘டோலோ நியூ’ஸின் பெண் நிருபர் ஒருவர் பேட்டி கண்டார். தலிபானைப் பெண் ஒருவர் பேட்டி காண்பது வரலாற்றில் அதுதான் முதன்முறை.

தலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள இந்தத் தருணத்தில் ஆஃப்கானிஸ்தானின் சமூக, அரசியல் நிலவரம், அங்கு ஊடகங்களின் எதிர்காலம் போன்றவை குறித்து சாத் மொஹ்சேனி பல்வேறு ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளிலிருந்து சில பகுதிகளைத் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறோம்.

ஆஃப்கன் ஊடகங்களில் உங்கள் நிறுவனத்தின் பங்கு மிகப் பெரியது. ஆஃப்கன் ஊடகங்களில் அதிக முதலீடு செய்த ஒரு தொழில்முனைவோராக, இப்போது உங்கள் கவலைகள் என்னென்ன?

எங்கள் ஊழியர்களின் நல்வாழ்வு எங்களுக்கு மிகவும் முக்கியம். எங்கள் ஊழியர்கள் பலர் வேலையை விட்டு வெளியேறுகிறார்கள். நாங்கள் இதுவரை செய்ததைப் போல, உண்மை நிலவரங்களை மக்களுக்குக் கொண்டுசேர்ப்பதையே எங்கள் முக்கியப் பணியாகக் கருதுகிறோம். பெண்களின் உரிமைகள், கருத்துச் சுதந்திரம், சிறுபான்மையினர்களின் உரிமைகள் போன்ற விஷயங்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தர விரும்புகிறோம். கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி இருந்தோமோ அதேபோல தொடர்வதே எங்கள் எண்ணமாக இருக்கிறது.

டோலோவின் பெண் செய்தித் தொகுப்பாளர் ஒருவர், தலிபான் அதிகாரியைப் பேட்டி கண்டார். இது எப்படி நடந்தது?

நாங்கள் தலிபான்களிடம் ஒரு பேட்டி கேட்டோம். ஒரு தலிபான் அதிகாரி சம்மதம் தெரிவித்தார். அவர் எங்கள் அலுவலகத்துக்கு வந்தார். இந்த நிருபர் உங்களைப் பேட்டி காண்பார் என்று சொன்னோம். அவர் சரி என்றார். அது இவ்வளவு எளிமையாகவே நடந்தது.

அந்தப் பேட்டியில் ஒரு பெண் இருக்க வேண்டும் என்பது திட்டமிடப்பட்ட செயலா?

ஆம்.

நீங்கள் இன்னும் பெண் நிருபர்களைக் களத்துக்கு அனுப்புகிறீர்களா?

எங்கள் பெண் நிருபர்கள் நிறைய பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். எனினும், நாங்கள் ஊடகத்தை நடத்தும் விதத்தில் எந்த மாற்றத்தையும் விரும்பவில்லை. இசை, சினிமா துணுக்குகள், சோப் ஓபராக்கள் போன்ற சில பிரச்சினைக்குரிய நிகழ்ச்சிகளை நாங்கள் குறைத்துள்ளோம். மற்ற அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். கடந்த காலங்களில் செய்ததைப் போல பெண் நிருபர்களைப் பேட்டிகளுக்குப் பயன்படுத்துவதும் தொடரும்.

தலிபான்களிடமிருந்து , பெண்கள் வேலை செய்ய முடியும், ஆஃப்கனில் பணியாற்றியவர்களுக்கு எதிராக எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இருக்காது’ போன்ற உறுதிமொழிகள் ஆச்சரியம் அளிக்கிறது. தலிபான் மற்றும் அவர்களது வெளிநாட்டுக் கூட்டாளிகள் சொல்வதை நீங்கள் நம்புகிறீர்களா?

எனக்குத் தெரியாது. அவர்களுக்கென்று ஒரு அரசமைப்பு இருக்கிறது. அதனால், சில விஷயங்களை அவர்கள் நிறைவேற்றியாக வேண்டும். அதில் அவர்கள் தங்கள் மக்களுக்கு என்ன தேவை என்பதையும், அவர்களால் என்ன வழங்க முடியும் என்பதையும் சொல்ல வேண்டும். உங்கள் போராளிகளை நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? அவர்களுக்கு ராணுவத்திலும் காவல் துறையிலும் வேலை கிடைக்குமா? அல்லது பணத்தை மட்டும் கொடுத்து அவர்களை அனுப்பப் போகிறீர்களா? கிராமப்புற ஆஃப்கனைச் சேர்ந்த 20 வயதுடைய இந்த இளம், வேலையில்லாத ஆஃப்கனியர்களுக்கு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்களுக்கு சில கோரிக்கைகளும் தேவைகளும் இருக்கும். அதை நீங்கள் நிறைவேற்றியாக வேண்டும். அவர்கள் ஒரு நவீன, செழிப்பான நிலை வேண்டும் என்ற அபிலாஷைகளைக் கொண்டிருக்கிறார்கள்.

தலிபான்களிடமிருந்து, ‘ஊடகங்களை நடத்தும் வழியில் நாங்கள் தலையிட மாட்டோம்’ என்று ஏதேனும் தெளிவான உறுதி உங்களுக்குக் கிடைத்ததா?

ஆம். அவர்கள் சில நாட்களுக்கு முன்பு எங்கள் அலுவலகத்துக்கு வந்து எங்களுக்கு உறுதி அளித்தனர். அவர்களின் கலாச்சாரத் துணை ஆணையர் எங்கள் காலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தலிபான்களுக்கும் இது புதிய அனுபவம்தான். அவர்கள் மக்களின் இதயங்களையும் மனதையும் வெல்ல வேண்டிய நிலையிலும், உலக நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய நிலையிலும் உள்ளனர். எனவே, இனி அவர்கள் தங்களை ஒரு மிதமான அமைப்பாக முன்னிறுத்துவார்கள் என்று நினைக்கிறேன்.

ஆனால், 1990-களில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தபோது, அவர்களின் அடக்குமுறை கடுமையாக இருந்தது. அதற்கு முன் ஆஃப்கானிஸ்தானில் பெண்கள் ஒப்பீட்டளவில் சுதந்திரமாக இருந்தனர். திடீரென அவர்களால் ஆண் உறவினர்களின் துணையின்றி வெளியே செல்ல முடியவில்லை, பள்ளிக்குச் செல்ல முடியவில்லை…

பெரும்பாலான அரசு அதிகாரிகளும் நன்கு படித்தவர்களும் 1990-களின் முற்பகுதியில் ஆஃப்கனை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்றனர். குறிப்பாக, பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று நாட்டை விட்டு வெளியேற முடியாமல் நிறைய மக்கள் சிக்கியுள்ளனர். 2021-ல் ஆஃப்கனை விட்டுப் பத்து லட்சம் முதல் இருபது லட்சம் மக்கள் வெளியேறுவார்கள் என்று ஐநா கூறுகிறது. தலிபான்களின் கட்டுப்பாட்டுக் கொள்கைகளெல்லாம் நல்ல படித்த மக்களை வெளியில் சுதந்திர நிலங்களைத் தேடும்படிக் கட்டாயப்படுத்தவே செய்யும்.

சில நாட்களுக்கு முன்பு நீங்கள் மிகவும் வெளிப்படையாகச் சொன்னீர்கள், இம்முறை கடந்த முறைபோல் ஆஃப்கனில் தலிபான்களின் ஆட்சி இருக்காது என்று. நீங்கள் இன்னும் அதில் நம்பிக்கையுடன் இருக்கிறீர்களா?

நான் அதை ஆஃப்கன் மக்களைக் குறித்துச் சொன்னேன். நீங்கள் புதிய ஒன்றுக்குப் பழகிவிட்டால் அதிலிருந்து விடுபட்டுப் பழைய ஒன்றுக்குச் செல்வது எளிதல்ல. நீங்கள் கற்றதை மறக்க முடியாது. பூமி தட்டையாக இல்லை என்பதை நீங்கள் உணரும்போது, தட்டையானது என்று உங்களை நம்ப வைத்து மூளையில் மறுபதிவு செய்ய முடியாது. தற்போது ஆஃப்கனில் உள்ள இளைய தலைமுறையினர் பல விஷயங்களைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் திறந்த மனம் கொண்டவர்களாகவும் அறிவார்ந்தவர்களாகவும் உள்ளனர். இனி அவர்களை 12-ம் நூற்றாண்டு மனநிலை கொண்ட தீவிரவாதச் சித்தாந்தவியர்களாக மாற்ற முடியாது. அது சாத்தியமற்றது. நீங்கள் மக்களை அடக்கலாம்; ஆனால், மக்கள் புரிந்துகொள்ளும் விஷயங்கள், அவர்களிடம் உள்ள அறிவு ஆகியவற்றிலிருந்து அவர்களை நீங்கள் நீக்கிவிட முடியாது.

இது புதிய ஆஃப்கன். மக்கள்தொகையில் 65% பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். இங்கு சராசரி வயது 18. தற்போதைய இளைய தலைமுறை ஆஃப்கானியர்கள், தலிபான்களின் முந்தைய ஆட்சியின் கீழ் வாழ்ந்ததில்லை; தற்போதைய தலைமுறையினர் ஊடகங்களுக்குப் பழகியிருக்கிறார்கள் என்பதுதான் நான் அடிக்கடி வலியுறுத்த முயலும் விஷயம். அவர்கள் சமூக ஊடகங்களுக்குப் பழகிவிட்டனர். அவர்கள் தங்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தப் பழகிவிட்டனர். இது தலிபான் போராளிகளுக்கும் பொருந்தும். அவர்களும் வளர்ந்திருக்கிறார்கள். அவர்களிடம் வாட்ஸ்அப், பேஸ்புக், மெஸெஞ்சர் இருக்கிறது. அவர்கள் பாகிஸ்தானிலோ ஆஃப்கனிலோ பெண்களை டிவியில் பார்த்திருக்கிறார்கள். எனவே, அது அவர்களுக்கும் அந்நியமானதல்ல.

அந்நியமாக இல்லாததால் காட்டுப்பாடுகள் இருக்காது என்று கூறிவிட முடியுமா? தலிபான் தலைவர்கள் மாறிவிட்டார்களா என்பது நமக்குத் தெரியாதே?

நான் இன்றைய நாளைப் பற்றிப் பேசுகிறேன். அடிப்படையில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல் கட்டம்: ஆஃப்கனில் ஆட்சியை தலிபான்கள் ஒருங்கிணைக்கிறார்கள். இது கூட்டணிகளை உருவாக்குவது பற்றியது. இது எதிர்ப்பிலிருந்து விடுபடுவது பற்றியது. அவர்களுக்குப் பாதுகாப்பு இருப்பதை உறுதிசெய்ய முக்கியப் பதவிகளில் மக்களை நிறுவுவது பற்றியது. இது சர்வதேச உறவுகளில் வேலை செய்ய — ஐநா போன்ற பல்வேறு தரப்புடன் உறவில் இருந்தாலும் சரி, அல்லது பல அரசாங்கங்களுடன் உறவில் இருந்தாலும் சரி — அவர்கள் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து உதவி பெறுவது முக்கியம். அந்த முதல் கட்டத்தில் ஊடகங்களுக்கு ஒப்பீட்டளவில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்; நீங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய விஷயங்களைப் பேசாவிட்டால்.

இரண்டாவது கட்டம், ஒரு இடைக்கால அரசாங்கமாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் ஒருவித அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு அமைச்சரவை இருக்க வேண்டும். அமைச்சர்கள், காவல் துறைத் தலைவர்கள், ஆளுநர்கள், அரசு அதிகாரிகள் இருக்க வேண்டும். இந்த இரண்டாம் கட்டத்தில், நாங்கள் சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்வோம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அடிப்படையில் தலிபான் ஒரு மத இயக்கம். ஊடகங்கள் அல்லது சமூக நடத்தை போன்றவற்றில் மாற்றங்களைக் கோரும் அரசமைப்புகள் அவர்களிடம் உள்ளன. எனவே, நாம் ஒருவேளை கொஞ்சம் கட்டுப்பாடுகளை அல்லது நிறையவே கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளலாம்.

மூன்றாவது கட்டம், ஆஃப்கன் எமிரேட். மூன்றாம் கட்டத்தில் நாங்கள் இன்னும் அதிகக் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள நேரலாம்.

தலிபான்கள் ஏனைய அரசுகளுடன் தீவிர உரையாடல்கள் நடத்துகிறார்களா?

அவர்கள் அனைவருடனும் பேசுகிறார்கள். அவர்கள் வெளிநாட்டவர்களுடன் பேசுகிறார்கள், உள்ளூர் ஆஃப்கானியர்களுடன் பேசுகிறார்கள், முன்னாள் மற்றும் தற்போதைய தலைவர்களிடையே அதிக ஈடுபாடுடன் உரையாடுகிறார்கள். அவர்கள் யார் பேச்சையாவது கேட்பார்களா என்பது வேறு விஷயம்.

உங்களுடைய ‘மொபி’, ‘டோலோ டிவி’ இரண்டும் அமெரிக்காவிடம் நிதி பெற்றிருக்கின்றன. அமெரிக்க அரசின் சார்பாகப் பிரச்சாரங்களை நடத்தியுள்ளீர்கள். இந்த அமெரிக்க உறவுகளுக்காக உங்கள் நிறுவனத்துக்கு எதிரான பழிவாங்கல்கள் மேற்கொள்ளப்படும் என்று நீங்கள் கவலைப்படுகிறீர்களா?

நிச்சயமாக நாங்கள் கவலைப்படுகிறோம். மேற்கத்திய சக்திகளுடன் மிக நெருக்கமான தொடர்புகொண்டவர்களாக நிச்சயமாக எங்களை அவர்கள் பார்க்கக்கூடும்.  ஆனால், அந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் பொய் சொல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம்.

நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

SARAVANAN M   3 years ago

சிறப்பான பேட்டி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

இந்திய இடதுசாரிகள்கூடுதல் சலுகைஆய்வுக் கட்டுரைநெஞ்செரிச்சல்ஏ.ஏ.தாம்சன்தமிழர் வரலாறுமலக்குழி மரணங்கள்கூட்டுப்பண்ணைஆன்லைன் வரன்மின் உற்பத்திசம்ரிதி திவாரி கட்டுரைநரம்புக்குறை சிறுநீர்ப்பைஅரசே வழக்காடிவத்திராயிருப்புமனப் பதற்றம்ஆலென் ஆஸ்பெலீபொது பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ)ஐயங்கள்வாஜ்பாய்தியாகராஜன்இஸ்ரேல் எப்படிப் போரிடுகிறது?உதவாதக் கதைகள்பண்டைய இந்திய வரலாறுஆரென்டெட் மைக்கேல் கட்டுரைதெற்கிலிருந்து ஒரு சூரியன்உணவு விற்பனைசிங்கப்பூர் அரசுரயில் ஓட்டும் பெண்களின் வேதனைகள்குஜராத்: பின்பற்றக் கூடாத முன்மாதிரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!