கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி, இந்தியாவின் குரல்கள் 4 நிமிட வாசிப்பு
அமேத்தி, ராய்பரேலி: காங்கிரஸின் மோசமான சமிக்ஞை
நாட்டிலேயே தனித்துவ முயற்சியாக 2014 தேர்தல் சமயத்தில் நாடு தழுவிய பயணம் மேற்கொண்ட ஆசிரியர் சமஸ், 2024 தேர்தலை ஒட்டி மீண்டும் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாடு முதல் காஷ்மீர் வரை குறுக்கும் நெடுக்குமாக மக்கள் இடையே பயணித்து அவர்களுடைய உணர்வுகளை எழுதுகிறார். ‘இந்தியாவின் குரல்’ தொடரானது அச்சில் ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழிலும் இணையத்தில் ‘அருஞ்சொல்’ இதழிலும் வெளியாகிறது. மட்டுமல்லாமல் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களுக்கும் தொடர்ச்சியாகப் பேட்டிகளும் அளித்துவருகிறார். இந்திய அரசியல் களத்தைப் பற்றி விரிந்த பார்வையைத் தரும் இந்தத் தொடரின் எந்தப் பதிவையும் தனித்தும் வாசிக்கலாம்; தொடர்ந்தும் வாசிக்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.
அமேத்தியிலும் ராய்பரேலியிலும் கடைசி நாள் அன்று வேட்புமனு தாக்கல் செய்யும் வகையில் காங்கிரஸ் தன்னுடைய வேட்பாளர்களை அறிவித்ததும், ராய்பரேலியில் இருந்து ராகுல் போட்டியிடுவதும் மோசமான ஒரு சமிக்ஞை என்றே சொல்ல வேண்டும். காங்கிரஸ் ராஜதந்திரரீதியாக எவ்வளவு பலவீனமாக சில விஷயங்களைக் கையாளுகிறது என்பதைக் காட்டுவதாகவே இது அமையும்.
காங்கிரஸ் எதிர்கொள்ளும் சவால்
மக்களவைக்கான 543 தொகுதிகளில் பாஜக இம்முறை 413இல் போட்டியிடுகிறது; காங்கிரஸ் 326இல் போட்டியிடுகிறது. போட்டியிடும் ஒவ்வொரு இரண்டு தொகுதிகளிலும் ஒன்றை வென்றால்தான் காங்கிரஸ் 150 இடங்களைத் தொட முடியும். இதில் ஆகப் பெரும்பாலான தொகுதிகளில் அது பாஜகவை நேரடியாக எதிர்கொள்கிறது.
சென்ற 2019 தேர்தலில் இரு கட்சிகளும் முதல் இரு இடங்களில் வந்த 190 தொகுதிகளை ‘நேருக்கு நேர் தொகுதிகள்’ என்று நாம் கருதலாம். இதில் 175 இடங்களை பாஜக வெல்ல, காங்கிரஸால் 15 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. களத்தில் காங்கிரஸைப் பிரதான போட்டியாளராக எதிர்கொள்ளும் இடங்களில் பாஜகவின் வெற்றி விகிதம் 92% எனும் அளவுக்கு இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையிலான வாக்கு வேறுபாடும் அதிகம் - 20%.
இந்த முறை பாஜகவை வீழ்த்தவும் ‘இந்தியா கூட்டணி’யை ஆட்சியில் அமர்த்தவும் வேண்டும் என்றால், குறைந்தது 125 இடங்களையேனும் காங்கிரஸ் வெல்ல வேண்டும். காங்கிரஸ் போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியும் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த எண்கள் நமக்குச் சொல்கின்றன.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
செல்வாக்கான தொகுதிகள்
நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசம் இதில் முக்கியமான களம். மொத்தம் 80 தொகுதிகளைக் கொண்ட இங்கு சமாஜ்வாதி 63; காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது. இவற்றில் அமேத்தியும், ராய்பரேலியும்தான் காங்கிரஸுக்கு முதன்மை வெற்றி வாய்ப்புள்ள இரு இடங்கள் - 2014இல் இந்த இரு இடங்களிலும், 2019இல் ராய்பரேலியில் மட்டுமே உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் வென்றது. இரண்டுமே காங்கிரஸ் முதல் குடும்பத்துக்கு நெருக்கமான தொகுதிகள்.
ராய்பரேலி 1951இல் உருவாக்கப்பட்ட தொகுதி. மூன்று முறை நீங்கலாக காங்கிரஸுக்கு எப்போதும் வெற்றியைக் கொடுத்துள்ளது. மக்களிடம் நெருக்கடிநிலை உண்டாக்கிய அதிருப்தியின் விளைவாக 1977இல் இந்திரா காந்தி இங்கு தோல்வியைத் தழுவினார். உத்தர பிரதேசத்தில் வாஜ்பாய் அலை உருவெடுத்த 1996, 1998 தேர்தல்களில் விக்ரம் கௌல், தீபா கௌல் தோல்வியைத் தழுவினர்.
இவை நீங்கலாக காங்கிரஸே வென்றது. குறிப்பாக, ஃபெரோஸ் காந்தி (1952, 1957), இந்திரா காந்தி (1967, 1971), அருண் நேரு (1980, 1984), சோனியா காந்தி (2004, 2006, 2009, 2014, 2019) என்று நேரு குடும்பத்தினர் போட்டியிட்டபோதெல்லாம் வெற்றியைத் தந்த தொகுதி இது.
அமேத்தியும் அப்படித்தான். 1967இல் தொகுதியாக இது உருவாக்கப்பட்டது. இங்கும் மூன்று முறை நீங்கலாக காங்கிரஸே வென்றுள்ளது. 1977இல் சஞ்சய் காந்தி; 1998இல் சதீஷ் சர்மா இருவரும் தோல்வியைத் தழுவினர். 2019இல் அமேத்தியோடு, வயநாட்டிலும் ராகுல் போட்டியிட்டபோது இங்கு தோல்வியைத் தழுவினார். சஞ்சய் காந்தி (1980), ராஜீவ் காந்தி (1981,1984, 1989, 1991), சோனியா காந்தி (1998), ராகுல் காந்தி (2004, 2009, 2014) என்று நேரு குடும்பத்தினருக்கு வெற்றியோடு அறிமுகமும் தந்த தொகுதி இது.
காந்திகளுக்கான நெருக்கடி
வயோதிகத்தின் காரணமாக சோனியா இம்முறை போட்டியிடாத சூழலில், அவருடைய இரு பிள்ளைகளும் இங்கிருந்து போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்திவந்தனர். மாநிலத்தின் 80 தொகுதிகளோடு, இந்தி பிராந்தியத்தின் 200+ தொகுதிகளில் தாக்கத்தை உண்டாக்கவும் இது அவசியம் என்பது அவர்களுடைய எண்ணம்.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி இருவரும் இங்கு பெரும் கூட்ட ஈர்ப்பாளர்கள் என்பது பாஜகவின் பெரும் பலம். அடுத்த நிலையிலும், அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் என்று ஒரு நீண்ட பேச்சாளர்கள் வரிசையை பாஜக வைத்துள்ளது. காங்கிரஸோ பிரச்சாரத்துக்கு பிரதானமாக ராகுல், பிரியங்கா இருவரையே நம்பியுள்ளது.
அமேத்தி, ராய்பரேலி இரு தொகுதிகளிலும் மே 20 அன்று வாக்குப்பதிவு; இதற்குள் மே 7, மே 13 என்று அடுத்த 15 நாட்களில் மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் இருக்கின்றன. இரண்டும் பக்கத்துப் பக்கத்துத் தொகுதிகள் என்பதால், அமேத்தியிலும் ராய்பரேலியிலும் ராகுலும் பிரியங்காவும் வேட்பாளர்களாக நின்றால், இங்கிருந்தபடி உத்தர பிரதேச பிரச்சாரத்தை ஒருவர் கவனிக்கலாம்; மற்றொருவர் வெளி மாநிலங்களுக்குச் செல்லலாம்.
ராகுலுக்கு எதிராக அமேத்தியில் ஸ்மிருதி இராணியை இறக்கியுள்ள பாஜக, பிரியங்காவுக்கு எதிராக ராய்பரேலியில் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரான அதிதி சிங்கைத் தயார் நிலையில் வைத்திருந்ததது; சென்ற ஐந்தாண்டுகளில் இரு தொகுதிகளிலும் தன்னுடைய கட்சிக் கட்டமைப்பைத் திட்டமிட்டு பாஜக வலுப்படுத்தியுள்ளது. காந்திகள் நீங்கலாக வேறு எவரும் நின்றால் மாநிலத்தின் ஏனைய எல்லாத் தொகுதிகளும் போன்றே இவையும் சராசரி போட்டிக் களமாகவே காங்கிரஸுக்கு அமையும்.
இதையெல்லாம் சொல்லித்தான் ராகுல், பிரியங்கா வேட்பைக் கட்சியினர் வலியுறுத்தினர்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
28 Mar 2024
வியூகமா, குழப்பமா?
தெற்கில் இம்முறை 50 தொகுதிகள் வெல்வதை காங்கிரஸ் இலக்காகக் கொண்டுள்ளது. இதற்கு கேரளத்தில் சென்ற முறை போன்றே 15 தொகுதிகளை வெல்ல வயநாட்டில் ராகுல் நிற்பது அவசியம் என்று கேரளத் தலைவர்கள் வலியுறுத்தினர். இதேபோல, உத்தர பிரதேசத்தில் ராகுல் தொடர்ந்து போட்டியிடுவது அவசியம் என்று வடக்கைச் சேர்ந்த தலைவர் வலியுறுத்தினர்.
கேரளம், உத்தர பிரதேசம் இரு மாநிலங்களிலிருநதும் ராகுல் போட்டியிடுவது எனும் முடிவை காங்கிரஸ் எடுத்தது. அதேசமயம்,
கேரளத்தில் வாக்குப்பதிவு முடிவதற்குள் அமேத்தி, ராய்பரேலி வேட்பு அறிவிப்பு வந்தால், அது அங்கு பாதிப்பை உண்டாக்கலாம்; இதனால் கேரள வாக்குப்பதிவு முடியும் ஏப்ரல் 26க்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று முன்னதாக காங்கிரஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுவெளியில் இது ஏதோ ரகசியம் போன்று பாதுகாக்கப்பட்டாலும், பாஜக உள்பட யாவரும் அறிந்ததாகவே இருந்தது. பிரதமர் மோடி இதைப் பல முறை குறிப்பிட்டுப் பேசியதும், ராய்பரேலி தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிப்பை கடைசி நாள் வரை பாஜகவும் நிறுத்தி வைத்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கவை.
அமேத்தி, ராய்பரேலியில் வேட்புமனு தாக்கல் செய்ய மே 3 கடைசி நாள். ஆனால், கேரளத்தில் வாக்குப்பதிவு முடிந்தும் ஒரு வாரத்துக்கு மேலும், வேட்பாளர் அறிவிப்பை காங்கிரஸ் இழுத்தடித்தது. இதனூடாக, “இருவருக்குமே போட்டியிடும் விருப்பம் இல்லை”, “அமேத்தியில் ராகுல் மட்டும் போட்டியிடுகிறார்; பிரியங்கா வெளியே பிரச்சாரங்களை மட்டும் கவனிப்பார்”, “பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா களம் இறக்கப்படுகிறார்”, “வருண் காந்தி அறிவிக்கப்படுவார்” என்றெல்லாம் தேசிய ஊடகங்களில் செய்திகள் வெளியாயின. தான் தேர்தலில் போட்டியிடுவதை நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக ராபர்ட் வதேரா வேறு பேட்டி அளித்தார்.
காங்கிரஸே இதற்கான காரணம். நாடு முழுக்கவுள்ள கட்சியினரிடம் மட்டும் இன்றி, நாட்டு மக்களிடம் காங்கிரஸ் தலைமை தொடர்பாக எத்தகைய எண்ணங்களை இதெல்லாம் உருவாக்கும் என்பதை அக்கட்சித் தலைமை சிந்தித்ததாகத் தெரியவில்லை. இதனூடாக, ஒவ்வொரு நாளும் வெளியாகும் இத்தகு செய்திகளால் காங்கிரஸ் தொண்டர்கள் பொறுமையின் எல்லைக்கே போயினர்; அமேத்தியில் கட்சி அலுவலகம் முன் வீதியில் அமர்ந்து, “அமேத்தியில் ராகுல், ராய்பரேலியில் பிரியங்கா வேட்பை அறிவிக்க வேண்டும்” என்று போராட்டம் நடத்தினர்.
இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
20 Apr 2024
அமேத்தி, ராய்பரேலி இரு ஊர்களுக்கும் இந்தச் சுற்றுப்பயணத்தின்போது நான் சென்றிருந்தேன். அங்கு நான் கண்ட சூழல் பின்னர் விரிவாகத் திட்டமிடப்பட்டுள்ள ஒரு நூலில் நான் எழுத வேண்டியது.
படத்தில் அமேத்தி பஸ் நிலையம். ராய்பரேலி காங்கிரஸ் செயல்பாட்டாளர்களுடன் ஆசிரியர் சமஸ்.
கட்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் செயல்பாட்டாளர்கள் இந்தப் போராட்டம் நடந்தபோது அங்குள்ள சூழலைத் தெரிவித்தார்கள். “தலைவர்கள் நம்முடைய எதிர்த்தரப்பைக் குழப்பலாம்; சொந்த தரப்பையே குழப்பக் கூடாது. பிரச்சாரத்தை முடிக்க மே 18 கடைசி நாள் என்பதால், 15 நாட்கள்தான் மொத்த அவகாசமே உள்ளது. இரு தொகுதிகளிலும் காந்திகள்தான் அறிவிக்கப்படப்போகிறார்கள் என்ற முடிவை எடுத்திருந்தாலும், ஏப்ரல் 26க்குப் பிறகு அறிவிப்பைத் தள்ளிப்போட நியாயம் இல்லை; அதேபோல குடும்பத்தைச் சேராதவர்களை அறிவிக்கத் திட்டமிட்டிருந்தார்கள் என்றாலும், இந்தத் தாமதத்துக்கு நியாயமே இல்லை. வெறும் 15 நாட்களில் தொகுதி முழுவதும் மக்களைச் சந்திப்பது எப்படிச் சாத்தியம் என்று எண்ணினார்கள்? கிட்டத்தட்ட 50 லட்சம் மக்களை உள்ளடக்கிய தொகுதிகள் இவை. பாஜகவினர் மூன்று மாதங்களாக இங்கே பிரச்சாரத்தில் இருக்கிறார்கள்! நமக்கு வசதியான இரு தொகுதிகளை நாமாக சிரமமாக மாற்றிக்கொள்ளக் கூடாது” என்றார்கள்.
முன்னிருந்த மூன்று வாய்ப்புகள்
இரு தொகுதிகளிலுமே காங்கிரஸுக்கு முன்னகர்வு இருந்ததோடு, உத்தர பிரதேச சூழல் முந்தைய இரு தேர்தலைக் காட்டிலும் காங்கிரஸுக்கு வாய்ப்பாக அமைந்துள்ள நிலையில், பின்வரும் மூன்று முடிவுகளில் எதை காங்கிரஸ் எடுத்திருந்தாலும் அது பலன் தருவதாக அமைந்திருக்கும்.
1. உள்ளூர் செயல்பாட்டாளர்கள் வியூகப்படி, காந்திகள் இருவரும் நிற்கும் முடிவை எடுத்திருந்தால், இருவருமே வென்றிருப்பர்; கூடவே உத்தர பிரதேசம் உள்ளடக்கி இந்தி பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை காங்கிரஸால் உருவாக்க முடிந்திருக்கும்.
2. வயநாட்டில் ராகுல், ராய்பரேலியில் பிரியங்கா எனும் முடிவை எடுத்திருக்கலாம். இது தெற்கு - வடக்கு இரு தரப்புத் தொண்டர்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதாக அமைந்திருக்கும்.
3. பிரியங்கா தேர்தலில் போட்டியிடாமல் பிரசாரத்தைக் கவனித்துக்கொள்வார்; ராகுல் மட்டும் வயநாட்டிலும் அமேத்தியிலும் போட்டியிடுவார் என்ற முடிவை எடுத்திருக்கலாம். பிற்பாடு இரு தொகுதிகளிலும் வெல்லும்போது, வயநாட்டை ராகுல் கைவிட நேர்ந்தாலும், அமேத்தியைவிட்டு அவரை வெளியேற்ற பிரதமர் மோடியும், ஸ்மிருத்தி இராணியும் விடுக்கும் கொக்கரிப்புகளை முடக்க இது அவசியம் என்பதைக் கேரளியர்கள் புரிந்துகொள்வார்கள். அமேத்தி தன்னுடைய களம் என்பதை மீண்டும் ராகுல் உறுதிப்படுத்தியிருக்கலாம். பாஜகவுக்கு மூக்குடைப்பைத் தரும் வகையில் அதுவும் நல்ல முடிவாகவே அமைந்திருக்கும்.
ஏன் இது மோசமான முடிவு?
இந்த மூன்றையும் புறந்தள்ளி, வயநாடு தவிர ராய்பரேலியில் ராகுல் போட்டியிடுவது; அமேத்தியில் காந்திகள் அல்லாமல், கட்சி செயல்பாட்டாளர் கிஷோரி லால் சர்மா போட்டியிடுவது என்ற காங்கிரஸின் முடிவானது பாஜக நடத்திவரும் ராகுல் பிம்பச் சிதைவுக்கே வலு சேர்ப்பதாக அமையும்.
1. அமேத்தியில் தோல்விக்கு அஞ்சியே வயநாடு செல்கிறார் என்று சொல்லிச் சொல்லியே 2019 தேர்தலில் அங்கு அவரைத் தோற்கடித்தது பாஜக. "அமேத்தி அச்சத்திலிருந்து ராகுல் விடுபடவில்லை; இனி இங்கு அவர் வர மாட்டார்" என்று இந்தத் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதலாக மோடியும், ஸ்மிருதி இராணியும் பேசிவந்தனர். எப்படியும் உத்தர பிரதேசத்தில் போட்டியிடுவது என்று முடிவெடுத்த ராகுல், அமேத்தியைக் கைவிட்டதன் மூலம் அந்தப் பிரச்சாரத்துக்கு வலு சேர்த்திருக்கிறார். அச்சத்தின் விளைவாகவே ராய் பரேலியை ராகுல் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதே இன்று பரவலாக நாடு முழுமையும் உருவாகியுள்ள எண்ணம்.
2. காங்கிரஸ் முதல் குடும்பத்தை இவ்வளவு காலமாக ஆதரித்துவந்த அமேத்தி வாக்காளர்களுக்கு இது கட்சி தரும் அடியாக அமையும். ராகுலின் தந்தை ராஜீவுக்கு 84% வாக்குகளுடன் அறிமுகம் தந்த தொகுதி அது. சென்ற முறைகூட அலையில்தான் ஸ்மிருத்தி இராணி வென்றார்; அப்படியும் வெறும் 50,000 சொச்ச ஓட்டுகளில்தான் ராகுல் வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த முறை நிச்சயமாக ராகுல் வெல்லும் சூழல் அங்கு இருந்தது. ஆனால், காங்கிரஸ் தலைமைக்கு உங்கள் மீது நம்பிக்கை இல்லை எனும் செய்தியை அமேத்தி வாக்காளர்களுக்கு பாஜக கடத்த இது வழிவகுக்கும்.
3. அமேத்தியில் புதியவரான கிஷோரி லால் சர்மா கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டிருப்பது, அவருக்கான நெருக்கடி. 10 ஆண்டுகளாகத் தொகுதியில் முகாமிட்டுள்ளதோடு, அமேத்தியிலேயே வீடு கட்டிவிட்ட ஸ்மிருதி இராணியை 15 நாட்களில் அவர் எதிர்கொள்வது பெரும் நெருக்கடி. வாய்ப்புள்ள ஒரு தொகுதியைச் சிக்கலானதாக மாற்றிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். கிஷோரி லால் சர்மா வெற்றி கட்சியின் கௌரவத்தோடு இணைத்துப் பார்க்கப்படும் என்பதால், அமேத்தியில் ராகுல் போட்டியிடாவிட்டாலும் அமேத்தியின் அழுத்தத்தை அவர் சுமந்துதான் ஆக வேண்டும்.
வெளிப்படும் சமிக்ஞை
தனக்குத் தோதான இரு தொகுதிகள் தொடர்பாக முடிவெடுப்பதிலேயே இவ்வளவு சிக்கலையும் தாமதத்தையும் வெளிப்படுத்துவது, இந்தி பிராந்தியத்தில் ராகுலுடைய தலைமைத்துவம் தொடர்பாக பாஜக உருவாக்கியுள்ள பிம்பத்தை மாற்றியமைக்க எந்த வகையிலும் உதவாது. ராயரேலியில் ராகுல் போட்டியிடுவதை முன்வைத்து காங்கிரஸ் என்ன இப்போது புதிய கதையாடலை உருவாக்கிவிட முடியும்? ஆனால், "கேரளத்தில் தோற்பார் என்ற அச்சத்தில்தான் இங்கு வருகிறார் இளவரசர்" என்ற மோடியின் கட்டுக்கதைக்கு இது வலு தரும்.
உத்தர பிரதேசத்தில் ராகுல் இப்போது போட்டியிடுவது வழக்கம்போல, மக்களவைக்குச் செல்வதற்காக அல்லாமல் கதையாடலை உருவாக்கவே போட்டியிடுகிறார் என்பதை இங்கே மீண்டும் நினைவூட்டிக்கொள்ளுங்கள். காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு அதன் வியூகமாக அல்ல; நாடு முழுமைக்கும் அதன் தலைமை அனுப்பும் மோசமான சமிக்ஞையாகவே வெளிப்படுவது புரியவரும்!
- மே, 2024
தொடர்புடைய கட்டுரைகள்
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது
மோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்
பாஜகவுக்கு முன்னிலை தரும் சாலைகள்
4
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Ramasubbu 6 months ago
ராய்பரேலியில் ராகுல் தோற்றுவிடுவார். உ. பி யில் இந்த முறை காங்கிரஸ் க்கு 0 -1 சீட்டு தான் கிடைக்கும். இதை காழ்புணர்ச்சியில் சொல்லவில்லை. முதல் தலைமுறை வாக்காளர்கள் முதல் சுமார் 52 வயது வரையிலானவர்களளிடம் காங்கிரஸ் கட்சி மீதான மதிப்பு உயர வில்லை.
Reply 1 9
Raja 6 months ago
நீங்கள் காழ்ப்புணர்ச்சியில் சொன்னாலும் சரி, இல்லை உள்மன ஆசையை சொன்னாலும் சரி. மற்ற இடங்களை பற்றி தெரியாது. உறுதியாக ராய்பரேலியில் ராகுல் வெல்வார்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.