கட்டுரை, ஆளுமைகள், ஆசிரியரிடமிருந்து... 2 நிமிட வாசிப்பு

விழுமியங்களில் வாழ்வோருக்கு அழிவேது?

ஆசிரியர்
15 Jan 2024, 5:00 am
1

திருச்சியில் இருந்தேன். ஞாநி அவருடைய எழுத்து வழியாக மட்டும்தான் பரிச்சயம். மனதுக்கு நெருக்கமாக அவரை உணர்த்தியது, சரியோ தவறோ தான் நினைத்ததை வெளிப்படையாகப் பேசுபவர் என்ற எண்ணத்தை தந்த அவருடைய எழுத்து. தினமணியில் இருந்து வெளியேற முடிவெடுத்த சமயம். அடுத்த வாய்ப்புகளுக்கு அழைத்த ‘இந்தியா டுடே’, ‘ஆனந்த விகடன்’ இரு நிறுவனங்களும் சென்னைக்குத்தான் அழைத்தன. 

சென்னை அப்போது அச்சமூட்டும் அந்நியமாக இருந்தது. தினசரியில் இருந்து வருபவர்கள் வார இதழ்களில் ஜொலிக்க முடியாது என்று வேறு பலர் ஆருடம் கூறினார்கள். முடிவு சரிதானா எனும் தயக்கம் இருந்தது. வலுவில்லா குடும்பம்.

முன்னறிமுகம் இல்லாத ஞாநியை செல்பேசியில் அழைத்தேன். "சமஸ், உங்களை நான் தொடர்ந்து படிக்கிறேனே, 'எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்' நீங்க எழுதினதுதானே! சொல்லுங்க" என்றார். 

முடிவு சரியாக இருக்குமா என்று கேட்டேன். "உங்கள மாதிரி ஆள எந்த நிறுவனமும் திருச்சியில் விட்டுவைக்காது. இப்போ வரலனாலும் சீக்கிரமே உங்கள சென்னைக்கு இழுத்துருவாங்க. யோசிக்காம வந்துருங்க. ஆனா ஒரு எச்சரிக்கை; ரொம்ப உயரத்துக்கு போவீங்க. எப்ப வேணாலும் கீழ சரிப்பாங்க!" என்றார்.

திடுக் என்றானது. "உங்க குடும்பப் பின்னணியைச் சொல்லுங்க!" என்றார். சொன்னேன். "ஓகே, சமஸ் உடைச்சுப் பேசிடுறேன். பயமுறுத்த சொல்லல. நேர்ல உங்களை சந்திச்சது இல்லைன்னாலும் உங்க எழுத்துல உள்ள சத்தியம் உங்களோட இண்டிபென்டட் திங்கிங்கை உணர்த்துது. அது நம்ம ஊர்ல சிரமம். அரசியல் எழுதுறீங்கங்கறதால, உள்ள நிறுவனங்கள்லேயும் சவால்கள் இருக்கும்; வெளியில கட்சிக்காரங்கள்டேயும் சங்கடங்கள் இருக்கும்! எப்பவும் எதுக்கும் தயாரா இருங்க. குறிப்பா பொருளாதாரத்துல!"

தொடர்ந்தார். "என் வாழ்க்கைல இதனாலே ரொம்ப கஷ்டப்பட்டேன். எக்ஸ்பிரஸ்லேர்ந்து வெளியே வந்தப்போ பல மாதங்கள் வருமானம் இல்லை. எங்க அம்மாவும் பெரியம்மாவும் ஏதோ தாங்கிப் பிடிச்சாங்க. விகடன் பாலு மாதிரி சில நண்பர்கள் நல்லபடி அமைஞ்சாங்க. தப்பிச்சேன். உங்களுக்கு அந்தப் பின்னணியும் இல்ல. சீக்கிரம் பெரிய சம்பளத்துக்குப் போவீங்க. ஆனா இப்ப என்ன செலவு பண்றீங்களோ, அதைத் தாறுமாறா ஏத்திக்காதீங்க. முடிஞ்சா மாச சம்பளத்துல பாதிய சேமிப்பா எடுத்து வைங்க. நிறுவனம் ஒத்துவரலைன்னா எப்போ வேணா வேலைய தூக்கி போட்டுட்டு வரலாம். கடைசி வரைக்கும் மனசுல பட்டதை எழுதலாம்!"

நான் சொன்னேன். "அடிப்படையில் நான் காந்தியன் சார். இப்போவே அப்படித்தான் இருக்கேன்."

தடதடவென்று நடந்தது. சென்னை வந்தேன். தமிழ் இதழியலில் என் வயதில் அதிகம் சம்பாதிப்பவன் என்ற இடத்துக்கு வேகமாக நகர்ந்தேன். இரண்டு ஆண்டுகளில் என்னுடைய சம்பளம் 15 மடங்கு உயர்ந்தது. ஆனாலும், சிங்கிள் பெட்ரூம் ஃப்ளாட்டிலேயே தொடர்ந்தேன். சைக்கிளிலும், ஸ்கூட்டரிலுமே அலுவலகம் சென்றேன். வீட்டில் பொருட்கள் குறைவு. இன்னமும் ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் கிடையாது. ஏற்கெனவே இருந்த வாழ்முறையை ஞாநியின் சொற்கள் மேலும் இறுக்கமாக்கியிருந்தன. என் மனைவி இயல்பிலேயே எளிமையானவர் என்பதும், குழந்தைகளும் விழுமியங்களோடு வளர்கின்றனர் என்பதும் கூடுதல் வரம்.

பல நிறுவனங்களுக்கு மாறினேன். ஆனால், எனக்கென்று ஓர் இடம் உறுதியாக இருக்கிறது. சரியவில்லை என்பதைவிட யாராலும் சரிக்க முடியவில்லை என்று சொல்லலாம். பொருளாதார சுதந்திரம் முக்கியமான காரணம். 

எளிமை யாராலும் எளிதில் அசைக்க முடியாத வலிமையை உங்களுக்குத் தருகிறது. நல்ல பத்திரிகையாளனுக்கு அதுவே ஆதாரம். என்னைச் சந்திக்கும் இளம் பத்திரிகையாளர்களிடம் அன்று ஞாநி எனக்குச் சொன்னதையே சொல்கிறேன். இது ஒரு மரபுத் தொடர்ச்சி.

நிறைய சண்டை போட்டிருக்கிறோம், நானும் ஞாநியும். ஆனால், இருவருக்குமே எதுவும் அந்தக் கணத்தோடு கடந்து போய்விடும். அவர் மறைந்த  அதிகாலையில் தகவலைப் பார்த்த மாத்திரத்தில் அடக்க முடியாமல் ஓவென்று வெடித்துக் கதறியழுதபடி அவர் வீடு நோக்கி ஓடினேன். 

நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆயிரம் இருந்தால்தான் என்ன? அவர் அறத்தின் குரல். அழிவேது? விழுமியங்களில் வாழ்பவர்கள் விழுமியங்களாக நிலைப்பார்கள். அஞ்சலி!

-சமஸ் ‘முகநூல்’ பதிவு...

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

5

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Sundar Gopalakrishnan   6 months ago

பத்திரிகையாளர்களில் மிகவும் வித்தியாசமானவர், தனித்துவம் உடையவர் ஞாநி. நான் அவரை ஒரே ஒரு முறை சந்தித்திருக்கிறேன். அப்போது அவர் தினகரன் குழுமத்திலிருந்து வெளியாகவிருந்த டி.வி. உலகம் என்ற வார இதழின் ஆசிரியப் பொறுப்பேற்றிருந்தார். நான் ஒரு சாதாரண வாசகன் தான் என்றாலும் என்னுடன் அவர் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஏழு மணி நேரம் உரையாடினார். அதுவும் அலுவலகத்தில் வைத்து. "எனக்கு வேலை இருக்கிறது. நாம் இன்னொரு நாள் சந்திப்போமா?" என்று சொல்லவில்லை. பற்பல விஷயங்கள் பற்றிப் பேசினோம். முதல் சந்திப்பில், சந்தித்து ஒரு மணி நேரம்கூட ஆகியிருக்கவில்லை. "சுந்தர்! டி.வி. உலகத்தில் வேலைபார்க்க விருப்பமா?" என்று கேட்டார். இப்படி எனக்கு அவர் வேலைவாய்ப்பு வழங்குவார் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. "மன்னிக்க வேண்டும். தங்கள் ஆஃபருக்கு நன்றி. நான் பிஎச்.டி. செய்வதாக இருக்கிறேன்" என்று கூறினேன். அதற்குப் பிறகு அவரைச் சந்திக்கவில்லை என்றாலும், அவருக்குச் சில கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நல்ல மனிதர். அபூர்வமான மனிதர் என்றும் சொல்ல வேண்டும்!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சிம் கார்டுபிரியங்காவின் இலக்குசர்தார் வல்லபபாய் படேல்நேரு படேல் விவகாரம் இந்துத்துவமா?அண்ணாவின் இருமொழிக் கொள்கைஅல்சர் துளைமாநிலங்கள்சித்தர்கள்அருஞ்சொல் அசாஞ்சேபுத்தகங்கள்முரசொலி செல்வம் பேட்டிமாதாந்திர அறிக்கைபயங்கரவியம்செக்ஸை எப்படி அணுகுவது சாரு பேட்டிashok selvan marriageஉபநிடதம்ஹிண்டன்பெர்க்பிளவுபட்ட இரண்டு ஜனநாயகங்கள்வெறுப்புப் பிரச்சாரம்புலிகள்என்னால் என்னுடைய சாதியை மாற்றிக்கொள்ள முடியாதுகாங்கிரஸ் - திரிண்மூல் காங்கிரஸ் மோதல்மொத்த உற்பத்தி மதிப்புநாய்கள்சோஷலிஸ்டுகள்தி பிரேக்த்ரூ இன்ஸ்டிடியூட்denugaவேலை மாற்றம்சாதிக் கான்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!