கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ரீவைண்ட், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

கொல்வது மழை அல்ல!

சமஸ் | Samas
17 Nov 2015, 5:00 am
0

திகாலை 3 மணி. சாலைகளை ஆறுகளாக மாற்றியிருக்கிறது மழை. எங்கும் கும்மிருட்டு. செல்பேசி அழைக்கிறது. மறுமுனையில் அழைப்பவன் நண்பன். பதற்றமும் அழுகையும் கூடிய குரல்.

“குழந்தைக்கு உடம்பு கொதிக்குது, தலை வேற கடுமையா வலிக்குதுங்குறான். விடாம அழறான். நாசமாப்போன இந்த மழையில ஆட்டோ, டாக்ஸி யாரும் வர மாட்டேங்குறாங்க. எங்கெ போறது, என்ன பண்றது. ஒண்ணுமே தெரியலைடா…”

“பாரசிட்டமால் மாத்திரை இருக்கா?”

ஒரு ரூபாய் மாத்திரை. அரை மாத்திரை கொடுத்தால், காலை வரைக்கும் பிரச்சினையை எதிர்கொண்டுவிடலாம். நண்பன் வீட்டில் பாரசிட்டமால் இல்லை. அந்த இரவு எத்தனை கொடுமையான இரவாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியது இல்லை. காரணம், குழந்தையா, மழையா, நண்பனின் முன்னெச்சரிக்கையின்மையும் அலட்சியமுமா?

இயற்கையைக் குற்றஞ்சாட்ட முடியாது. ஓரளவுக்கு மேல் மக்களையும் குற்றவாளிகளாக்க முடியாது. ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள், அதிகார வர்க்கம் என்ன செய்கிறது?

சென்னையில் வழக்கமாக நாங்கள் அலுவலகம் வரும் பாதையிலுள்ள அரங்கநாதன் கீழ்ப்பாலத்தை இன்று காலை கடக்க முடியவில்லை. கண்களால் நம்ப முடியவில்லை. ஒரு பஸ் அப்படியே முழுமையாகப் பாலத்துக்குள் மூழ்கிக் கிடந்தது. இத்தனைக்கும் அது ஆற்றுப் பாலம் இல்லை; சாலையைக் குறுக்கிடும் ரயில் பாதையைக் கடக்க உதவுவதற்காகக் கட்டப்பட்ட கீழ்ப்பாலம். வேளச்சேரியிலிருந்து அலுவலகம் வந்த நண்பர்கள் காலையில் வீட்டிலிருந்து பிரதான சாலைக்கு வர படகு சவாரி செய்திருக்கிறார்கள். தலைநகரத்திலேயே நிலைமை இப்படியிருக்கும்போது, கடலூர் துயரங்களை விவரிக்க வேண்டியதில்லை. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இந்திய உதாரணம்

இந்தியாவைக் காட்டிலும் பல மடங்கு அபாயமான புவிச்சூழலைக் கொண்டது ஜப்பான். பேரிடர்களை எதிர்கொள்ளும் கல்விக்கு மிகச் சிறந்த வழி. அவ்வளவு தூரம் போக வேண்டியதில்லை என்றால், ஒடிஷாவிடமிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம்.

தமிழகத்தைவிடப் பின்தங்கிய மாநிலம். கோடையில் கடும் வறட்சியாலும் மழைக்காலத்தில் கடும் வெள்ளத்தாலும் பாதிக்கப்படும் மாநிலம். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பாய்லின் புயலை அது எதிர்கொண்ட விதம் ஐ.நா.சபை உட்பட ஏராளமானோரின் பாராட்டுகளை ஒடிஷாவுக்குப் பெற்றுத் தந்தது.

இன்றைக்கும் ஆச்சரியமூட்டும் பணி அது. மிகக் கடுமையான புயலை ஒடிஷா எதிர்கொள்ளலாம் என்றது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். இந்த முன்னெச்சரிக்கை வந்தவுடனேயே முதல்வர் நவீன் பட்நாயக் களத்தில் இறங்கிவிட்டார். வெள்ள அபாயப் பகுதிகளில் நீர்நிலைகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, வடிகால்களைச் சீரமைத்து, மேம்படுத்தும் பணி ஒருபுறம் முடுக்கிவிடப்பட்டது. மறுபுறம் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்கு இதை எடுத்துச் சென்றார். முப்படைகளின் உதவியும் உறுதிசெய்யப்பட்டது. தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் கலந்து பேசி நெருக்கடிச் சூழலில் தகவல் தொடர்பைக் கையாளும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளூர் தண்டோரா வரை புயலின் பாதிப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை மக்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. தொண்டு நிறுவனங்கள், சேவை அமைப்புகளையும் அரசு துணை சேர்த்துக்கொண்டது.

எந்தெந்த மாவட்டங்களில் புயல் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று கணிக்கப்பட்டதோ, அந்தப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணி புயலுக்கு மூன்று நாட்களுக்கு முன் தொடங்கியது. கிட்டத்தட்ட 11.5 லட்சம் பேர் வீடுகளைக் காலிசெய்து, பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூடவே அவர்கள் வீடுகளில் வளர்த்த கால்நடைகளும்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப் பெரிய மக்கள் வெளியேற்றங்களில் ஒன்று இது. லட்சக்கணக்கில் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டன. மக்கள் பாதுகாப்பு மையங்களில் எல்லா மருந்துகளும் முன்கூட்டி இருப்பில் கொண்டுவந்து வைக்கப்பட்டன.

புயலுக்கு முந்தைய கடும் மழையிலேயே மோசமான பாதிப்புகள் தொடங்கிவிட்டன. மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் வீசிய பாய்லின் புயல் இன்னும் கொடூரமான பாதிப்புகளை உருவாக்கியது. கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 2.4 லட்சம் வீடுகள் நாசமாயின; ரூ. 3,000 கோடி பொருட்சேதம் ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் 5 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நாசம் ஆயின.

முன்னதாக, இதே போன்ற பெரும்புயலை 1999-ல் ஒடிஷா எதிர்கொண்டபோது 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 2 கோடிப் பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஆனால், பாய்லின் புயலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 23 (அடுத்தடுத்த நாட்களில் இறந்தவர்களையும் சேர்த்தாலும் 50க்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது).

ஒடிஷாவின் இந்தச் சாதனைக்கு எது அடிப்படை? பூஜ்ய உயிரிழப்பு இலக்கோடு இந்தப் பணியை மேற்கொண்டார் முதல்வர் நவீன் பட்நாயக். 1999 புயல் பாதிப்புகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடம். அதற்குப் பின் தொடர்ந்தும் பெருமழை, வறட்சி, வெள்ளம், புயல் என எல்லாப் பேரிடர்களையும் தொடர்ந்து எதிர்கொள்கிறது ஒடிஷா. ஆனால், மக்கள் துயரம் குறைந்திருக்கிறது. தேசிய அளவில் இன்றைக்குப் பேரிடர் மேலாண்மைக்கான முன்னுதாரணம் ஆகியிருக்கிறது ஒடிஷா பேரிடர் மேலாண்மை மையம்.

தமிழக நிலை

தமிழகம் இம்முறை இன்னும் புயல் தாக்குதலுக்கு ஆளாகவில்லை. அதற்குள் கடலூரில் மட்டும் 43 பிணங்கள் விழுந்திருக்கின்றன. 2004 சுனாமியின்போது தமிழகம் 7,996 பேரைப் பறிகொடுத்தபோதும், கடுமையாக விலை கொடுத்தது கடலூர். 2011 தானே புயலின்போதும் பெரும் விலை கொடுத்தது. இப்போதும் சீரழிகிறது. மழை வந்தால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் போன்றே அவருடைய அரசையும் வெளியே பார்க்க முடிவதில்லை. மக்கள் எல்லாவற்றையும் பறிகொடுத்த பின்  நிவாரணம் தர அரசு செயல்பட்டால் போதும் என்று நினைக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.

சரியாக, ஒரு மாதத்துக்கு முன் அக்.16 அன்றே இப்போதைய மழை தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டது வானிலை ஆராய்ச்சி மையம். நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன?

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கை முன்பே இதைச் சுட்டிக்காட்டியது: “இன்னொரு பேரிடர் நேர்ந்தால், அதை எதிர்கொள்ளும் தயார் நிலையில் தமிழகம் இல்லை.” பேரிடர்களை எதிர்கொள்வதற்கான அவசரக்கால நடவடிக்கை மையங்களில் 2012இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இதை அம்பலப்படுத்தியது. “சுனாமியின்போது கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாகையில் ஒரு மையம்கூட இந்த ஆய்வின்போது செயல்படும் நிலையில் இல்லை; கடலூரில் 14 மையங்கள் செயல்படும் நிலையில் இல்லை” என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது நிலைமையின் விபரீதத்தை விவரிக்கக் கூடியது.

கத்ரினாவின் விளைவுகள்

கடலூரில் மழையில் மடியில் பிணத்தைப் போட்டுக்கொண்டு கதறுபவர்களைக் காணச் சகிக்கவில்லை. பாரிஸில் 129 பேர் உயிரிழந்தால், சர்வதேசத்தின் வெளியுறவுக் கொள்கையே மாறுகிறது; ஆனால், இந்திய மரணங்கள் ஏன் யாரையும் உலுக்குவதில்லை? பலரும் கேட்கிறார்கள்.

காரணம் எளிமையானது. அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் மாகாணம் 2005இல் கத்ரினா புயல் பாதிப்புக்குள்ளானது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள் புஷ்ஷுக்கு எதிராகக் கொடி பிடித்தார்கள். அதன் பின், நியு ஆர்லியன்ஸ் மாகாண காவல் கண்காணிப்பாளர் எட்டி காம்பஸ் பதவி நீக்கப்பட்டார், மேயர் ரே நாகீன் ஊழல் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு 10 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். அமெரிக்கப் பேரிடர் மேலாண்மை முகமை பல மடங்கு மேம்படுத்தப்பட்டது.

மக்கள் அங்கு உயிரிழப்புகளை அரசியலாகப் பார்க்கிறார்கள். அரசியல்வாதிகள் இங்கு உயிரிழப்புகளை இழப்பீடுகளாகப் பார்க்கிறார்கள்!

- ‘தி இந்து’, நவம்பர், 2015 

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








கிழக்கு வெஸ்மின்ஸ்டர் ஆபிவேத மரபுமத்தியஸ்தர்ராஜ குடும்பம்கொடூர அச்சுறுத்தல்நடுவில் இரண்டு வர்ணத்தைக் காணோம்இந்துவாக இறக்க மாட்டேன்ஆணவம்: மோடி விளையாட்டரங்கில் மோடிஅதிகாரம்இந்தியக் கடற்படைகல்விஇந்திய அமைதிப்படைஅலகாபாத்ஆங்கிலேயர்அடுத்த தொகுப்புநாகப்பட்டினம்விடுதலைப் போராட்டம்பெண் குழந்தைகள் ஆண்டுsamas letterகாக்காய் வலிப்புபங்குச் சந்தைஇமையம் இப்போது உயிரோடிருக்கிறேன்டீம்வியூவர் க்யுக் சப்போர்ட்தமிழக அரசு ஊழியர்கள்சமாஜ்வாதி கட்சிவாஜ்பாய்முத்துத் தாண்டவர்புலம்பெயர்ந்தோர்ஊழல் எதிர்ப்புதெய்ஷிட்சு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!