கட்டுரை, சமஸ் கட்டுரை, இதழியல் 3 நிமிட வாசிப்பு
அருஞ்சொல் வாசகர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்!
என் வாழ்வில் எடுத்த பல முக்கியமான முடிவுகள் உள்ளுணர்வால் வழிநடத்தப்பட்டவை. இந்த முடிவையும் அப்படித்தான் எடுக்கிறேன்.
சென்ற இருபது ஆண்டுகளில் நான் பணியாற்றிய ‘தினமணி’, ‘விகடன்’, ‘தி இந்து’ எந்த நிறுவனத்திலும், கொண்டாடப்படும் நிலையிலேயே இருந்திருக்கிறேன். புதிய களங்கள்தான் அடுத்தகட்டம் நோக்கித் தள்ளும் காரணிகளில் முதன்மையாக எப்போதும் இருந்திருக்கின்றன. ஏற்கெனவே செய்த / நன்கு கைவரப்பெற்ற / ஒருகட்டத்தில் அன்றாடம் ஆகிவிடும் பணிகளில் என்னால் தொடர்ந்து ஈடுபட முடியாது என்பதே காரணம்.
தினசரி இதழியல் சலித்தபோது பல்சுவை இதழியல்; அது சலித்தபோது கருத்து இதழியல். இப்படித்தான் மூன்றாண்டுகளுக்கு முன் வெகுஜன இதழியலிலிருந்து ஒதுங்கும் முடிவை எடுத்தேன். கொஞ்சம் தீவிர இதழியல் – ஆய்வு சார்ந்த பணிகளில் ஈடுபடலானேன். ‘அருஞ்சொல்’ தொடங்கினேன்.
¶
மூன்றாண்டுகளில், தமிழ் இதழியலில் ‘அருஞ்சொல்’ அடைந்த வெற்றி முன்னுதாரணம் அற்றது. அன்றாடம் ஒரு கட்டுரையை மட்டுமே பிரசுரிக்கும், சந்தா செலுத்தாமலே வாசிக்கும் வாய்ப்புள்ள ஒரு இணைய தளத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சந்தா கட்டும் வாசகர்கள் யாருக்குக் கிடைப்பார்கள்? ஒரு புத்தக அறிவிப்பு வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் முன்பதிவு செய்யும் வாசகர்கள் யாருக்குக் கிடைப்பார்கள்? எனக்குக் கிடைத்தார்கள். ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு ஒரு புத்தகத்தைத் திட்டமிடும் அசாத்திய துணிச்சலையும், அதற்கான சந்தை மதிப்பையும் வாய்ப்பையும் எனக்கு என்னுடைய வாசகர்களே உருவாக்கினார்கள்.
சமஸ் எனும் தனிமனிதன் மீதான அன்பாக இதையெல்லாம் நான் பார்க்கவில்லை. நல்ல இதழியல் மீது தமிழ் வாசகர்கள் கொண்டிருக்கும் மதிப்புக்கான அடையாளம் அது. அதனால்தான் ‘அருஞ்சொல்’ வெளியிட்ட பல கட்டுரைகள் ஆட்சியாளர்கள் வரை வாசித்தவர்கள் எவரையும் அசைத்தன. அரசின் கொள்கை முடிவுகளில் பிரதிபலித்தன.
நண்பர்கள் பலருக்கும் தெரியும், மூன்று ஆண்டுகளில் பல முன்னணி ஊடக நிறுவனங்களிலிருந்தும் தலைமைப் பொறுப்பு வந்தது; நிராகரித்தேன். “இனி ‘அருஞ்சொல்’ மட்டுமே என் வாழ்க்கை” என்று சொன்னேன். அப்படியிருக்க ஏன் மீண்டும் வெகுஜன இதழியல் நோக்கி நகர்ந்தேன்? ஏன் ‘புதிய தலைமுறை’ வாய்ப்பை ஏற்றேன்? சென்ற ஆண்டில் நான் மேற்கொண்ட தொடர் இந்தியப் பயணங்களுக்கு இந்த முடிவில் முக்கியமான பங்கு உண்டு.
நாட்டின் பெருவாரி மக்களுடைய எண்ணங்களுக்கும், வெகுஜன ஊடகங்களுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இடைவெளி உருவாகியிருப்பதை மிக ஆழமாக இந்தப் பயணங்களில் உணர்ந்தேன். இத்தகு சூழலில் மக்களோடு புழங்கும் என்னைப் போன்ற ஒருவன் வெகுஜன இதழியலோடு கொஞ்சமேனும் இணைந்திருக்க வேண்டிய சமூகக் கடப்பாட்டையும் இந்தப் பயணங்கள் உணர்த்தின. அதனாலேயே ‘அருஞ்சொல்’லுக்கு வெளியிலும் பல பத்திரிகைகளில் கட்டுரைகள், பத்திகள் எழுதினேன். தொலைக்காட்சிகளில் பேசினேன்.
வாழ்வில் சில சந்திப்புகள் மறக்க முடியாத மாற்றங்களை உண்டாக்க வல்லவை. ‘புதிய தலைமுறை’ நிறுவனர் திரு.சத்தியநாராயாணாவுடனான சந்திப்பு அப்படித்தான் அமைந்தது. நல்ல இதழியல் மீதான தீராத தேட்டம் மிக்கவர் அவர். தமிழ்த் தொலைக்காட்சிகளில் மிக கண்ணியமான ஓர் இதழியல் சூழலைத் தன்னுடைய நிறுவனத்தில் உருவாக்கியவர். இருவரும் இணைந்து பயணிக்கும் முடிவுக்கு முதல் சந்திப்பிலேயே வந்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கலாம். 1. நல்ல இதழியல் மீதான தேட்டம்; 2. பணிகள் சார்ந்து இருவரும் பரஸ்பரம் மற்றொருவர் மீது கொண்டிருந்த மரியாதை; 3. அபாரமான நன்னம்பிக்கை.
இருவருக்குமே இது ஒரு முக்கியமான முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். நான் உருவாக்கிய, வாசகர்களிடமும் சந்தையிலும் மிகக் குறுகிய காலகத்தில் பெரும் மதிப்பை உருவாக்கிக்கொண்ட ‘அருஞ்சொல்’ நிறுவனத்திலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்வது என்பது, என் வாழ்வில் எத்தகைய பெரும் முடிவோ அப்படித்தான் அவர் எடுத்த முடிவும். என்னதான் அச்சு ஊடகத் துறையில் இருபதாண்டுகள் அனுபவம் இருந்தாலும்கூட, செய்தித் தொலைக்காட்சியில் ஒரு நாள்கூட வேலை அனுபவம் இல்லாத ஒருவரிடம் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பை ஒப்படைக்க ஒருவருக்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். தெரியவில்லை; அவரும் உள்ளுணர்வால் சில முடிவுகளை எடுக்கக் கூடியவராக இருக்கலாம்.
என் வாழ்வை, எல்லா காலங்களிலும் எனக்கென சில நெறிமுறைகளுடனேயே வாழ்ந்துவந்திருக்கிறேன். பணி வாழ்வும் அப்படித்தான். இதில் தார்மிக நெறிகளுக்கு முக்கியமான இடம் உண்டு. ‘புதிய தலைமுறை’ பணியில் இணைவது என்ற முடிவை எடுத்தபோதே ‘அருஞ்சொல்’ ஆசிரியர் பணியிலிருந்து விலகிவிட்டேன். மூத்த சகாவான திரு.ரங்காசாரி அவர்களே அப்பணியை ஏற்று நடத்தினார். நிர்வாகப் பணிகளையும் நண்பர்களிடம் ஒப்படைத்தேன். மூன்று மாதங்களுக்கு முன் தொலைக்காட்சி சார்ந்த பணியை மட்டுமே நான் ஏற்றிருந்த நிலையில், அந்த முடிவு போதுமானதாக இருந்தது.
இப்போது ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி மட்டும் அல்லாது, ‘புதிய தலைமுறை’ டிஜிட்டல், ‘புதிய தலைமுறை’ இணையதளம் என்று பல தளங்களின் தலைமைப் பொறுப்பும் என்னை வந்தடைந்திருக்கும் சூழலில், என்னோடு பிரிக்க முடியாத பந்தமாக நான் உருவாக்கிய இணைய இதழ் இயங்குவது தார்மிகரீதியாக சரியல்ல என்று எண்ணுகிறேன். ஆகையால், ‘அருஞ்சொல்’ இயக்கத்தை நிறுத்திவிடும் முடிவை எடுத்திருக்கிறேன். இனி ‘அருஞ்சொல்’ வெளிவராது. இந்த முடிவுக்காக ‘அருஞ்சொல்’ வாசகர்களிடம் மனதார மன்னிப்பு கோருகிறேன். கூடவே ‘அருஞ்சொல்’ ஆசிரிய இலாகாவை எனக்குப் பிறகு, என்னைக் காட்டிலும் சிறப்பாக நடத்திவந்த அதன் ஆசிரியர் திரு.ரங்காசாரி, திரு.சிவசங்கர், திரு.கார்த்திகேயன் உள்ளிட்ட நண்பர்கள், தொடர்ந்து எழுதிவந்த கட்டுரையாளர்களிடமும்.
¶
இந்த சமயத்தில், ‘புதிய தலைமுறை’ நிறுவனமானது, ‘அருஞ்சொல்’ இயக்கத்தை ஒருபோதும் கேள்விக்குள்ளாக்காததையும், சொல்லப்போனால் என்னுடைய தொடர்பில்லாமல் ‘அருஞ்சொல்’ தொடர்ந்து இயங்குவதை அனுமதித்திருப்பதையும் குறிப்பிட வேண்டும் என்று எண்ணுகிறேன். எந்த வகையிலும் புதிய பணி சார்ந்த வெளி நிர்ப்பந்தம் இந்த முடிவுக்கு காரணம் இல்லை. ஆக, இந்த அணுகுமுறை அவர்களுடைய பெருந்தன்மையின் வெளிப்பாடு என்றால், இந்த முடிவு என்னுடைய தார்மிகத்தின் வெளிப்பாடு.
நண்பர்களிடம் இதுகுறித்து பேசியபோது, “இன்றைக்கு ‘அருஞ்சொல்’ ஒரு பிராண்ட். அதை இப்படி அணுகுவது புத்திசாலித்தனமா?” என்றார்கள். தெரியவில்லை. ஆனால், நேர்மையான முடிவு என்று உறுதிபட நம்புகிறேன்.
நான் தொழில்முனைவர் இல்லை. பத்திரிகையாளன். ‘அருஞ்சொல்’ என்பது மக்களுடைய ஊடகம். நூற்றுக்கணக்கான கட்டுரைகள், அபாரமான பதிவுகள் அதில் உள்ளன. அது மக்களின் ஆவணமாக இணையதளத்தில் என்றும் நிலைத்திருக்கும். சென்ற மூன்றாண்டுகளில் வெளியான சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து ‘அருஞ்சொல்’ தொகுப்பு ஒன்றை நண்பர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். ஆக, இந்த ஆவணம் அச்சிலும் நிலைத்திருக்கும். இதற்கு மேல் பற்று கொள்ளக் கூடாது என்று எண்ணுகிறேன்.
மக்கள் குரலைப் பேசுவது பத்திரிகையாளர்களின் கடமை. மக்கள் குரலை நேற்று முன்தினம் ‘தி இந்து’ வழியாகப் பேசினால், நேற்று ‘அருஞ்சொல்’ வழியாகப் பேசினேன், இனி ‘புதிய தலைமுறை’ வழியே பேசுவேன்.
சென்ற மூன்றாண்டுகளில் ‘அருஞ்சொல்’லுக்குக் கொடுத்திருக்கும் உழைப்பு, அதில் இணைந்திருந்த ஆயிரம் கைகள், அதன் மையத்தில் இருந்த கனவு...
மிகுந்த வலி மிக்க முடிவு இது. ஆனால், இந்தத் தார்மிக உணர்வுதான் அறத்திலிருந்து விலகிடாமல் என்னைச் செலுத்தும் ஆற்றலாக அமைந்திருக்கிறது. அதை இழந்து நான் பெற ஏதும் இல்லை.
நான் எங்கிருப்பினும் மக்கள் குரல் அங்கிருந்து ஒலிக்கும். என்றும் என்னை தாங்கி நிற்கும் நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றி.
தொடர்புடைய கட்டுரை
வாழ்க அருஞ்சொல்… விடைபெறுகிறேன்!







பின்னூட்டம் (5)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 5 months ago
அருஞ்சொல்லிருந்து நீங்கள் விலகுவதும், அந்த இதழையே முடக்குவதும் சற்றும் எதிர்பார்க்காத்து மட்டுமல்ல, அதிர்ச்சிகரமானதும்கூ!. உங்கள் எழுத்துக்கள் மீதும், நீங்கள் கொண்டிருந்த கொள்கைகள் மீதும் பற்றுக்கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு உங்களின் முடிவுகள் பற்றி என்ன சொல்வது என்ற புரியாத சூழ்நிலையே உள்ளது எனலாம். ஒரு வகையில் மகிழ்ச்சியே. உங்கள் எழுத்துப்பணி தொடர்கிறது மட்டுமல்ல உங்களுடைய பொறுப்பும் பணியும் கூடுகிறது என அறிய முடிகிறது; இவை அனைத்தும் நல்லதொரு காரியத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும் வேண்டுகோளும். அன்புடன், ப.சரவணன், கரூர்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Raja 5 months ago
"என்னோடு பிரிக்க முடியாத பந்தமாக நான் உருவாக்கிய இணைய இதழ் இயங்குவது தார்மிகரீதியாக சரியல்ல என்று எண்ணுகிறேன்" - நீங்கள் தெளிவாக விடைபெறும் போதே அருஞ்சொல்லோடு உங்களின் பங்கு முடிந்து விட்டது. அதன் பின் தார்மீக ரீதியாக எப்படி சரியல்ல என்று சொல்கிறீர்கள்? நிறுத்த வேண்டிய சூழ்நிலை என்று வெளிப்படையாக சொல்லி இருக்கலாமே. இவ்வாறு தர்க்கமில்லாத காரணம் எதற்கு? அருஞ்சொல்லை அனைவரும் படிக்கச் செய்து விட வேண்டும் என்று முயற்சி செய்த என்னை போன்றவர்களுக்கு இந்த பதிவு சரியான விடைபெறலாக தோன்றவில்லை. ஏனெனில், எளிமையான, வெளிப்படையான பதிலே போதுமானது. அது இல்லாததால் அருஞ்சொல் ஒரு திடீர் விலகல் ஆகவே கருதப்படும். உங்களின் "புதிய தலைமுறை" பணி சிறக்க வாழ்த்துக்கள். அருஞ்சொல்லை சிறப்பாக நடத்திய ஆசிரிய குழுவுக்கும் நன்றிகள்.
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
V R BALAKRISHNAN 5 months ago
தங்களது முடிவு முன்னுக்கு பின் முரணாக உள்ளது! நீங்கள் விலகும் போது நிறுவனத்தை நடத்தும் நண்பர்களுக்கே கைமாற்றப்போவதாக எழுதினீர்கள். இப்போதும் அவர்கள் நன்றாக நடத்துவத்தாகத்தான் தோன்றுகிறது! உண்மையில் அவர்கள் நடத்துவதற்கு தயாராக இருந்தால் அருஞ்சொல்லுக்கு பதிலாக அறஞ்சொல் என பெயர் மாற்றி நடத்தட்டுமே? நீங்கள் உண்மை நிலையினை தெளிவாக கூறவும்! வி ஆர் பாலகிருஷ்ணன் திருச்சி 9842445678
Reply 8 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 5 months ago
புரிகிறது. இரு கோரிக்கைகள். 1. இந்த வலைத்தளம் பாதுகாக்கப்பட வேண்டும். 2. அருஞ்சொல் தொடர்ந்து நூல்களை வெளியிட வேண்டும்.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 5 months ago
மிகவும் தவறான முடிவு. நீங்கள் arunchol ல் இருந்து வெளியேறி விட்டதாக கூறி உள்ளீர்கள். உங்களுக்கு பிறகு வந்த ஆசிரியர் குழு நன்கு தான் ் உள்ளது. பிறகு ஏன்? ஒன்று நீங்கள் விரும்பும் ஆதிக்கம் (influence) arunchol லில் இல்லை. அல்லது மறைமுக அழுத்தம். அதை நீங்கள் அறம் என்று கூட கூறலாம். உங்கள் கேரியர் இல் arunchol தான் மேன்மையான ஒன்றாக இருக்கும். You will regret for this decision. Sorry
Reply 12 0
Login / Create an account to add a comment / reply.