பேட்டி, அரசியல், கலாச்சாரம், வரலாறு 4 நிமிட வாசிப்பு

பிராமணர் – பிராமணரல்லாதோர் விரிசலைக் கூர்மைப்படுத்துகிறார் ஆளுநர்: சமஸ் பேட்டி

நமது செய்தியாளர்
26 Oct 2023, 5:00 am
2

மிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆரியம் - திராவிடம் என்பதே கிடையாது; அது ஆங்கிலேயர் உருவாக்கிய கட்டுக்கதை” என்று பேசியதை மையமாக வைத்து ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸிடம் பேட்டி கண்டது. தொலைக்காட்சி நெறியாளுநர் தமிழினியன் கண்ட அந்தப் பேட்டியின் எழுத்து வடிவத்தை ‘அருஞ்சொல்’ வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.  

அடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இப்படிப் பேசுவதற்குக் காரணம், இங்கே உருவாக்கப்பட்டுள்ள திராவிட அரசியல் கொள்கையின் அடித்தளத்தைத் தகர்ப்பதற்காக என்று சொல்லலாமா?  

ஆமாம், வெளிப்படையாக அதுதான். 

ஆனால், தொடர்ந்து ஓர் ஆளுநர் இப்படிப் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அவருக்கு நம்முடைய அரசமைப்பு மீதே ஒரு வெறுப்பு இருக்கிறதோ; ஆளுநர் எனும் பதவிக்குரிய மாண்பையே அவர் நிர்மூலமாக்க நினைக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால், ஆளுநர் பதவி என்பது அரசமைப்பு சார்ந்த ஒரு பதவி; ஒரு மாநிலத்தையும் அதன் அரசையும் மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இடத்தில் அவர் இருக்கிறார். அப்படிப்பட்ட ஒருவர் எந்த வகையில், இப்படி உண்மைக்குப் புறம்பான விஷயங்களைப் பேச முடிகிறது என்று அறிவார்ந்த தளத்தில் அமர்ந்து யோசிக்கவே முடியவில்லை.   

என்னைப் பொறுத்த அளவில், மனிதர்களை சாதி, மதம், இனம் என்று எந்த அடிப்படையில் பாகுபடுத்திப் பார்ப்பதையும் அருவருக்கத்தக்கதாகக் கருதுகிறேன். மனிதர்களிடையே பிளவையும் வெறுப்பையும் உண்டாக்கும் எந்தப் பிரிவினையும் எதிர்க்கப்பட வேண்டியது.

ஆனால், மனிதர்கள் இடையே வகைமைகள் இருக்கின்றனவா என்றால், அறிவியல்ரீதியாக இருக்கிறது; வரலாற்றுரீதியாக இருக்கிறது; மொழிரீதியாக இருக்கிறது! அறிவுத் துறையினர் யாராக இருந்தாலும் நேர்மையாக ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம் இது!

ஆளுநர் பேசியதிலுள்ள அபத்தத்துக்கு ஒரே ஓர் உதாரணத்தை மட்டும் இங்கே சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். இன்று இந்தியாவிலேயே அதிகமாக பிராமணர்கள் வசிக்கக்கூடிய மாநிலமான உத்தர பிரதேசத்துக்கு 1950இல் அந்தப் பெயர் சூட்டப்பட்டது யாவருக்கும் தெரியும். அதற்கு முன்பு அது அழைப்பட்ட பெயர் ஐக்கிய மாகாணம் – யுனைட்டெட் பிராவின்ஸ். 

சுதந்திர இந்தியாவில் புதிய பெயர் ஒன்றை அம்மாநிலத்துக்குச் சூட்ட தீர்மானித்தபோது, அந்த மாநிலத்தில் ஏகப்பட்ட விவாதங்கள், உரையாடல்களை நடத்தி 20 பெயர்களைப் பரிந்துரைத்தார்கள். அதில் அதிகமானோரால் பரிந்துரைக்கப்பட்ட இரு பெயர்கள், ‘ஹிந்துஸ்தான்’, ‘ஆரியவர்த்தம்’.

இப்போது நான் பேசக் கூடிய விஷயங்கள் எல்லாமே ஆவணங்களாக இருக்கின்றன. ஆரியவர்த்தம் என்ற பெயர் எவ்வளவு பொருத்தமான ஒன்று என்று வாதிட்ட சட்டமன்ற உறுப்பினர் பந்திரி தத் பாண்டே என்ன பேசினார் தெரியுமா?  “ஆரியர்கள் முதன்முதலில் இந்தியாவில் காலூன்றிய நிலம் இதுதான்.  அதனால், இதற்கு ஆரியவர்தம் என்பதே பொருத்தமான பெயர்” என்றார். ஒருகட்டத்தில் எல்லோருமே அந்தப் பெயரை முன்மொழிந்து காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிவிடுகிறார்கள். 1949இல் வாராணசியில் நடந்த பிராந்திய காங்கிரஸ் மாநாடும் இதையே பிரதிபலித்தது. உள்ளபடி அந்தப் பெயர் நிராகரிக்கப்பட்டு, ‘உத்தர பிரதேசம்’ எனப் பெயர் சூட்டப்பட்டதன் பின்னணியில் இருந்தது அன்றைய காங்கிரஸின் தேசியத் தலைமை; இன்னும் சொல்லப்போனால் ஜவஹர்லால் நேரு. 

சமீபத்திய காலகட்டத்துக்கு வருவோம். இன்றைக்கு உத்தர பிரதேசத்தை ஆள்வோர் யார்? பாஜக. அதன் முதல்வர் யோகி ஆதித்யநாத் இதுவரை ஏராளமான இடங்களின் பெயர்களை மாற்றியிருக்கிறார் இல்லையா? அப்படி அவர் சூட்டிய ஒரு பெயர் ஆர்யா நகர். அலி நகர் எனும் இடத்தின் பெயரை இப்படி மாற்றினார்.

அப்படியென்றால், ஆரியம் – திராவிடம் தொடர்பான விவாதம் என்ன தமிழ்நாட்டிலா உருவாக்கப்பட்டிருக்கிறது? இவையெல்லாம் வரலாறு அல்லாமல் வேறு என்ன?

நாடு முழுக்க இன்றைக்கு ஆரிய பவன்கள், ஆர்யாஸ் ஹோட்டல்கள் இருக்கின்றனவே அவையெல்லாம் எதைப் பிரதிபலிக்கின்றன? எங்கேனும் ஒருவர் திராவிட பவன் என்று ஓர் உணவகத்தைத் திறந்தால், உடனே இது பிளவு அரசியல் என்று கூப்பாடு போடுவதில் பயன் இல்லை. பிளவு முன்பே இருக்கிறது; யாரோ அந்தப் பிளவுக்கு எதிர்வினை ஆற்றுகிறார் என்ற புரிதல் வேண்டும்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

திராவிடம், திராவிட இனம் என்ற கருத்துகளை எல்லாம் கொடுத்தது ராபர்ட் கால்டுவெல் என்கிற ஒரு வெள்ளையர் என்று ஆர்.என்.ரவி பேசியிருக்கிறார்! இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இன்றைக்கு நாம் பேசக்கூடிய பல அறிவியல், சமூக அறிவியல் கோட்பாடுகள் மேற்கத்திய அறிஞர்களால் கொடுக்கப்பட்டவை. அதனால் என்ன?

இன்றைக்கு நாம் உருவாக்கியிருக்கக் கூடிய அரசமைப்புச் சட்டத்தை மனுநீதியின் தொடர்ச்சியாகவா அதை உருவாக்கியிருக்கிறோம்? பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையிலிருந்தும், அமெரிக்க – பிரெஞ்சு அரசமைப்புச் சட்டங்களிலிருந்தும் உள்வாங்கித்தான் உருவாக்கியிருக்கிறோம். இன்றைக்கு நாம் பேசுகிற ஜனநாயகம், கூட்டாட்சி, குடியரசுக்கான சிந்தனைகள் எங்கிருந்து வந்தன?

மெக்காலே ஒரு இந்திய தண்டனைச் சட்டம் எனும் சட்டகத்தை உருவாக்கும் வரை சாதிக்கு ஒரு நீதி நடைமுறையில் இருந்த நாடுதானே இது?

ஆளுநர் போட்டுக்கொண்டிருக்கும் கோட் சூட் யாருடைய உடை? 

அதனால், இத்தகு பேச்சுகள் எல்லாம் அபத்தங்கள்.   

இந்திய அரசமைப்புச் சட்டம் வந்தபோது அதை நேரடியாகவே எதிர்த்தவர்கள் சங்கப் பரிவாரத்தினர். ஆனால், மீண்டும் மீண்டும் பிரிட்டிஷாரையோ அல்லது காலனிய காலகட்டதையோ ஓர் எதிர்மறை சக்தியாக ஒரு சாத்தானுக்கு இணையாகக் காட்ட விரும்பும் ஒரு கதையாடலை இவர்கள் முன்னெடுத்தாலும்கூட அதை யாரும் இங்கே  ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதற்காக பிரிட்டிஷார் மீது விமர்சனம் இல்லையா என்றால், எவ்வளவோ விமர்சனங்கள் இருக்கின்றன. அதுவும் என்னைப் ஒரு காந்தியனுக்கு பிரிட்டிஷார் மீது இவர்களுக்கு இல்லாத விமர்சனங்கள் எல்லாம் இருக்கின்றன. பிரிட்டிஷார் இல்லையென்றால் இன்றைய இந்தியா இல்லை என்று நான் சொல்ல மாட்டேன்; ஆனால், இன்றைய இந்தியா பிரிட்டிஷாருலும் உருவாக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. 

பெரியார் ஓரிடத்தில், ‘யார் திராவிடர்?’ என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறார், ‘சமத்துவத்தை ஏற்றுக்கொள்பவர் ஒரு ஜப்பானியராக இருந்தாலும் அவரும் திராவிடரே!’ அண்ணா ’ஆரியம் இருக்கும் இடம் எது?’ என்று கேள்வி எழுப்பி பதில் எழுதுகிறார், ‘பாகுபாட்டைப் பேசுபவர் செட்டியாராக இருந்தாலும், தேவராக இருந்தாலும், பறையராக இருந்தாலும் அவரும் ஆரியரே!’

தமிழ்நாட்டைப் பொருத்தமட்டில் ‘திராவிடம்’ எனும் சொல் அரசியல் தளத்தில் எதை அர்த்தப்படுத்துகிறது என்ற தெளிவு இங்குள்ள சாமானிய மக்களுக்கும் இருக்கிறது. ஆளுநர் அதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்!

அதாவது, வரலாறைத் தாண்டி ஆரியம் – திராவிடம் என்பது சாதியம் - சாதியத்துக்கான எதிர்ப்பு என்றே தமிழ்நாட்டின் திராவிட அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால், இந்தக் கதையாடலுக்கு எதிரான ஒன்றை பாஜக சார்பில் உருவாக்க ஆளுநர் இப்படிப் பேசுகிறார் என்று சொல்லலாமா?

ஆளுநர் அப்படி நினைக்கலாம். ஆனால், அவருடைய இந்தக் கணக்கும்கூட பாஜகவின் இன்றைய தேசிய தலைமையினுடைய போக்கோடு முரண்பட்ட ஒன்றாகவே நான் பார்க்கிறேன். ஏனென்றால், பத்தாண்டு காலத்தில் மோடி – ஷா ஜோடி பாஜகவுக்குள் நிகழ்த்தியிருக்கக்கூடிய முக்கியமான ஒரு மாற்றம் என்னவென்றால், பிராமணரல்லாதோருக்கான அதிகாரப் பகிர்வை அதிகரித்தல்; பாஜகவுக்குள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான, தலித்துகளுக்கான பிரதிநிதித்துவம் இன்று அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவே அது பெருவெற்றிகளைக் குவித்திருக்கிறது. இன்றைக்கு தமிழ்நாட்டில் முருகன், அண்ணாமலை ஆகியோரெல்லாம் பாஜக தலைவர் ஆக்கப்பட்டு, கடந்த காலத்தில் இல்லாத அதிகாரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதே அதன் தொடர்ச்சிதான். ஆனால், ஆளுநர் இதைக்கூட உள்வாங்கிக்கொண்டு இதையெல்லாம் பேசுகிறாரா என்று எனக்குத் தெரியவில்லை.

சாதி கடந்த மத அடையாளத்தின் கீழ் தமிழ்நாட்டு மக்களை ஒருங்கிணைக்க, ‘தமிழர்’ என்ற அடையாளத்தைத் தாண்டி நீங்கள் அனைவரும் இந்துக்கள் என்ற அடையாளத்துக்குள் தள்ளுவதற்காக ஒருவேளை இப்படிப் பேசுகிறாரா? 

அது பாஜகவின் இயல்பான செயல்திட்டம்தானே?

நான் சொல்ல வருவது என்னவென்றால், தமிழ்நாட்டையோ தமிழ் மக்களையோ கொஞ்சமும் இவர் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான்.  இன்றைக்கு இந்தியாவிலேயே பிராமணர்கள் அதிகமாக வாழக் கூடிய மாநிலம் உத்தர பிரதேசம்; ஆனால், அங்கு 1989க்குப் பின் ஒரு பிராமண முதல்வர் இல்லை. ஆனால், ‘திராவிட நிலம்’ என்று சொல்லக்கூடிய தமிழ்நாட்டில் 2016இல் மறையும் வரை ஜெயலலிதா மிகுந்த செல்வாக்கான தலைவராகவும், முதல்வராகவும் இருந்தார். அப்படி என்றால், என்ன அர்த்தம்? பிராமணியத்தையும் பிராமணர்களையும் பிரித்துப் பார்க்கும் மரபு இங்கே இருக்கிறது என்பதுதானே? 

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஆளுநர் ரவியின் பேச்சு சரியா?

கே.சந்துரு 30 Aug 2022

எனக்கு என்ன பயமாக இருக்கிறது என்றால், பாஜகவினர் இப்படிப் பேசி பேசி சமூகத்தில் இன்று பிராமணர் – பிராமணரல்லாதோர் பிரிவினையைப் பெரிய விவாதம் ஆக்கிக்கொண்டிருக்கின்றனர். சென்ற நூற்றாண்டின் மையத்தில் தீவிரமாகப் பேசப்பட்டுவந்த இந்த விஷயம் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரிய அளவில் மட்டுப்பட்டிருந்தது. இப்போது அது சமூகப் பிளவாகக் கூர்மை அடைகிறது. 

தன்னுடைய ஆளுநர் பதவிக் காலம் முடிந்ததும் ரவி டெல்லிக்கோ மும்பைக்கோ சென்றுவிடுவார். ஆனால், இங்கே அவரைப் போன்றோர் வளர்த்தெடுக்கும் வெறுப்பு மயிலாப்பூரிலும் மாம்பலத்திலும் ஒரு பிராமணர் மீது வன்மமாக வெளிப்படும். அதற்குத்தான் இவர்கள் வழிவகுக்கிறார்களே தவிர, இவர்களால் நல்லது எதுவும் சமூகத்தில் நடக்கப்போவது இல்லை!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

திராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும்
ஆளுநர் ரவியின் பேச்சு சரியா?
ஆரிய வர்த்தம்: உத்தர பிரதேசத்தின் பெயர் வரலாறு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   1 year ago

பிராமணரல்லாதோருக்கும் பிராமணரல்லாதோருக்கும் தான் பிரச்சனையே சார்! ஐம்பத்துஐந்து ஆண்டு கால திராவிட ஆட்சியில் " பெரியார் மண்ணில்" முன் எப்போதும் இல்லாத வகையில் ஆயிரக்கணக்கான காவலர்களும், நூற்றுக்கணக்கான உயர் அதிகாரிகளும், தடை உத்தரவும், ஒரு நினைவு விழாவுக்கும், ஒரு பூஜைக்கும் என்றால் பிரச்சனையின் வீரியம்?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abi   1 year ago

மன பிரச்சினை கொண்டவர்கள் கூட இந்தியாவில் ips pass செய்ய முடியும் என்ற நற்செய்தி இவர்கள் மூலம் வெளிபடுத்த பட்டுள்ளது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

உற்பத்தி செய்யப்படும் கருத்துகள்பற்களின் பராமரிப்புக்ரெடிட் கார்டுவேஷதாரியா?துளசிதாசன்வழக்கொழிந்து போன வர்ண தர்மமும்அடங்காமைஎன்.கோபாலசுவாமி பேட்டி அவரவர் முன்னுரிமைஅமி்த் ஷாமுதுகுவலிஷகிஜெய்பீம் திரைக்கதை நூல்கடற்கரைபொழுதுபோக்குகோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்ட்விட்டர்அபராதம்கடவுச்சொல்நாடாளுமன்ற உறுப்பினர்பிரிட்டிஷ் ஆட்சிசமஸ் அருஞ்சொல் தலையங்கம்குத்தகைத் தொழிலாளர்கள்ஸ்ரேயஸ் சர்தேசாய் கட்டுரைஇந்தியத் தேர்தல்கள்படுகொலைகள்அரசுப் பள்ளிக்கூடம்தாமஸ் ஜெபர்சன்ஒட்டுண்ணி முதலாளித்துவம்dawn

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!