கட்டுரை, அரசியல், சட்டம், சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 10 நிமிட வாசிப்பு
ஒரு தாயின் போராட்டம்
வெயில் சுள்ளென்று தெறித்துக்கொண்டிருந்த நேரத்தில், அற்புதம் அம்மாள் வந்திருந்தார். முதுமையின் படபடப்பு. பயணமும் அலைச்சலும் தந்த களைப்பு. முகச்சுருக்கங்களில் ஓடி வழியும் வியர்வை. மூச்சிரைப்பு இன்னும் அடங்கவில்லை. 69 வயதாகிறது. ஏறாத படிகள் இல்லை. சிறைச்சாலை, வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், அரசியலர்கள் - மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் வீடுகள், ஊடக அலுவலகங்கள், நீதிமன்றங்கள், சட்டப்பேரவை... மகனை மீட்பதற்காக 25 ஆண்டுகளாக அலைகிறார். பார்த்த மாத்திரத்தில் அவருடைய கனத்த பைக்குள் கைகள் செல்கின்றன. காகிதங்களை உருவுகிறார். “யப்பா, கடைசியில அறிவு வாழ்க்கைய சிறைக்குள்ளேயே முடிச்சுடுவாங்கபோல இருக்குப்பா. எல்லார் கவனத்துலேர்ந்தும் அதை வேற பக்கம் கொண்டுபோயிட்டாங்கப்பா!”
கத்தை கத்தையாகக் காகிதங்களை மேஜை மீது போடுகிறார்.
வெள்ளம் அடித்துச்சென்ற தீர்ப்பு
தமிழகத் தலைநகரம் வரலாறு காணாத வெள்ளத்தில் தத்தளித்த 2015, டிச.2இல், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வெளியானது. ராஜீவ் கொலை வழக்கில், மரண தண்டனை வளையத்திலிருந்து வெளியே வந்து, இப்போது ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் இவர்களை விடுவிக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிக்குப் பேரிடியாக விழுந்தது அன்றைய தினம் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு.
உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட மூன்று விஷயங்கள் இத்தீர்ப்பில் முக்கியமானவை.
- ஆயுள் தண்டனை என்பதற்கு, ‘எஞ்சிய ஆயுள் முழுவதற்குமான தண்டனை’ என்பதே அர்த்தம்.
- மத்தியப் புலனாய்வு அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் தண்டனைக் குறைப்பு வழங்க முற்பட்டால், அந்த முடிவை மாநில அரசு மட்டுமே எடுத்துவிட முடியாது; மத்திய அரசின் ஒப்புதல் வேண்டும்.
- தேசப் பாதுகாப்பை மனதில் கொள்ளாமல் மன்னிப்பின்பேரில் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க முடியாது. தேசத் தலைவர்கள் கொல்லப்படுவதை உள்நாட்டு அல்லது வெளிநாட்டுத் தாக்குதல் நடவடிக்கையாகவே கருத வேண்டும்.
சாதாரண நாட்களில் வெளியாகியிருந்தால், தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை இந்தச் செய்தி உருவாக்கியிருக்கக் கூடும்.
மனித - மாநில உரிமைகளின் பின்னடைவு
தலைமை நீதிபதி எச்.எல்.தத்து ஓய்வுபெற்ற நாளில், அவர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் அமர்வுதான் இத்தீர்ப்பை அளித்தது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களைத் தாண்டி, மனித உரிமைகள் - மாநிலங்களின் உரிமைகள் இரண்டின் மீதும் விழுந்திருக்கும் பலத்த அடி இத்தீர்ப்பு. மேலும், இந்தியச் சிறைகளில் வதைபட்டுக்கிடக்கும் பல நூற்றுக்கணக்கான சிறைவாசிகள், அவர்கள் குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கைகள் மீது விழுந்திருக்கும் கரும்பூச்சு. கூடவே, கூட்டாட்சி முறையின் அடிப்படைத் தத்துவத்தையும் இது கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது.
ஆயுள் முழுவதுக்குமான தண்டனைதான் நீதியா?
ஆயுள் தண்டனை என்றால், ஒரு குற்றவாளியின் எஞ்சிய ஆயுள் காலம் முழுமைக்குமான தண்டனை என்று அணுகும் முறையே கொடுமையானது. வதை முகாம்களாக அல்ல; சீர்திருத்தக்கூடங்களாக இருக்க வேண்டும் என்பதே நவீன உலகில் சிறைகளுக்கான இலக்கணம். உலகின் முன்னேறிய நாகரிகச் சமூகங்கள் அப்படித்தான் அணுகுகின்றன. இதை அடிப்படையாகக் கொண்டே இங்கு பிரிட்டிஷார் காலத்தில் அரசுக்குத் தண்டனைக் குறைப்பு அதிகாரத்தை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னாளில், இந்திய அரசமைப்புச் சட்டமும் அரசுக்கு ‘மன்னிக்கும்/ தண்டனையைக் குறைக்கும் அதிகார’த்தைக் கொடுத்தது. பின் 1973இல் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டப்படியும் தண்டனைக் காலத்தை மாற்றும் ‘விருப்ப அதிகாரம்’ அரசுக்கு அளிக்கப்பட்டது.
சட்ட நிபுணரும் மனித உரிமைச் செயல்பாட்டாளருமான நிஷாந்த் கோகலேவின் வார்த்தைகள் இந்த விஷயத்தை மேலும் எளிமையாக விளக்கக் கூடியவை. “1961 கோபால் கோட்சே வழக்கில், ‘ஆயுள் தண்டனை என்பது ஒருவரின் எஞ்சிய ஆயுள் காலம் முழுவதும்’ என்று குறிப்பிட்டது உச்ச நீதிமன்றம். ஆனால், 1978 சட்டத்திருத்தத்துக்குப் பின் ஆயுள் சிறைத் தண்டனை என்றால், ‘அந்தந்த மாநிலச் சிறை விதிகளின்படி குறைந்தபட்சம் 14-19 ஆண்டுகள்’ என்று நிர்ணயிக்கப்பட்டது. இதை நீக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தண்டனை அளிப்பதில் அரசு (நிர்வாகம்) தனது அதிகாரத்தை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அச்சட்டப் பிரிவை அங்கீகரிப்பதாகவும், இத்தண்டனையை மாற்றுவதற்கான அதிகாரம் மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் பதவிகளுக்கு உண்டு என்றும் தெளிவுபடுத்தியது” என்று குறிப்பிடுகிறார் நிஷாந்த் கோகலே.
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய இரு விஷயங்கள்: அ. தண்டனைக் குறைப்பு என்பது குற்றங்களின் அடிப்படையிலானது அல்ல; நன்னடத்தையின் அடிப்படையிலானது; நல்லெண்ணத்தின் அடிப்படையிலானது. ஆ. அரசமைப்புச் சட்டம் உறுதிப்படுத்தும் அரசின் இந்த மன்னிப்பு அதிகாரத்தை நீதித் துறை பறிக்க முடியாது.
தகர்கிறதா கூட்டாட்சித் தத்துவம்?
மத்தியப் புலனாய்வு அமைப்பு விசாரிக்கும் வழக்கில் மாநில அரசு ஒரு முடிவை எடுக்கும்போது மத்திய அரசைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று கூறுவது சரியானது. ஆனால், சட்டப் பிரிவு 435 (1) குறிப்பிடும் இந்தக் ‘கலந்தாலோசித்தல்’ எனும் வார்த்தைக்கு ‘ஒப்புதல் பெற வேண்டும்’ என்று புதிய அர்த்தம் கற்பிக்கிறது இப்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. இது, மாநில அரசின் உரிமைக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் குந்தகம் விளைவிக்கக் கூடியது.
மேனாள் நீதிபதி கே.சந்துரு, உச்ச நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை துரதிர்ஷ்டவசமானது என்கிறார். “உச்ச நீதிமன்றத்தின் நீதிப்பேராணை வழங்கும் அதிகாரம் 32-வது பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ளது. அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டால் ஒழிய, உச்ச நீதிமன்றத்தை மத்திய-மாநில அரசுகள் அணுக முடியாது. அதேபோல், அரசு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் முன் அதன் அதிகாரத்தை ஆராய்வதற்கும் நீதிமன்றங்களுக்கு அனுமதி இல்லை (ஒரே விதிவிலக்கு, குடியரசுத் தலைவரே உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை வழங்கும் அதிகாரத்தின்படி கருத்துக் கேட்டால் சொல்வது). இது தவிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசுக்கெதிராக நேரடியாக மனு தாக்கல் செய்வதற்கோ (அ) அடிப்படை உரிமை பாதிக்கப்படாமலே நீதிமன்றத்தை அணுகுவதற்கோ (அ) ஒரு அரசு உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கும் முன்னரே நீதிமன்றத்தை அணுகுவதற்கோ சட்டத்தில் இடமில்லை. இந்த வழக்கில் துருதிர்ஷ்டவசமாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் மனுவை ஏற்றுத் தீர்ப்பு கூறியிருக்கிறது” என்கிறார் சந்துரு.
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய இரு விஷயங்கள்: அ. மத்திய அரசுடன் மாநில அரசு ‘கலந்தாலோசிப்பது’ இனி ‘அனுமதி பெறுவது’ என்பதாக மாற்றப்பட்டிருப்பது. ஆ. மத்திய - மாநில அரசுகள் தமக்குள் கலந்தாலோசிக்காமல் உச்ச நீதிமன்றத்தை அணுகினால், அவர்களைக் கலந்தாலோசிக்க அறிவுறுத்தாமல் நீதிமன்றம் பஞ்சாயத்தில் இறங்கியிருப்பது.
எல்லோரும் சமம் இல்லையா?
தீர்ப்பினூடே, “ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளுக்குத் தண்டனைக் குறைப்பு வழங்குவதற்கு முகாந்திரம் இல்லை; அவர்கள் அரசின் கருணையை எதிர்பார்க்க முடியாது” என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருப்பது இந்நாட்டில் எல்லோரும் சமம் எனும் ஜனநாயகச் சமத்துவத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
மூத்த வழக்குரைஞர்களில் ஒருவரான ஆர்.சண்முக சுந்தரம் அரசமைப்புச் சட்டம் தரும் சமத்துவத்துக்கே இது விரோதமானது என்கிறார். “ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை மட்டும் அல்ல; எவரையுமே இப்படி அணுகக் கூடாது. சட்டம் அனைவருக்குமானது; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது நம்முடைய அரசமைப்புச் சட்டம்” என்று சொல்கிறார் சண்முகசுந்தரம்.
இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய இரு விஷயங்கள்: அ. குற்றத்தின் தீவிரம் நபர்களுக்கேற்றவாறு மாறுபடுகிறதா? ஆ. அரசமைப்புச்சட்டம் தரும் சமத்துவ உறுதி மாற்றப்படுகிறதா?
ராஜீவ் கொலை வழக்கு ஆரம்பம் முதலே முரண்பாடுகளினூடேதான் கடந்துவந்திருக்கிறது. மனித உரிமைகள் இந்த வழக்கில் எப்படியெல்லாம் சிக்கி மூச்சுத் திணறின / திணறிக்கொண்டிருக்கின்றன என்பதற்குப் பேரறிவாளன் ஒரு உதாரணம் போதும்.
முரண்களின் வழக்கு
ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்டோர் 1991-ல் கைதுசெய்யப்பட்டபோது பேரறிவாளனின் வயது 19. மனித உரிமை அத்துமீறல்களுக்குப் பேர்போன கொடுங்கோன்மைச் சட்டமான தடா சட்டத்தின் கீழ் மூடிய அறைக்குள் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு இது. பின்னாளில், தடா சட்டமே ரத்துசெய்யப்பட்டது; தடா சட்டத்தின் கீழ் விசாரிக்கப் பொருத்தமற்ற வழக்கு அல்ல இது எனும் முடிவை உச்ச நீதிமன்றம் எடுத்தது. ஆனாலும், தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த வழக்கை அணுகியது. எந்த வாக்குமூலம் பேரறிவாளனுக்கு எதிரான, வலுவான ஆயுதமாக விசாரணை அமைப்புகளால் முன்வைக்கப்பட்டதோ, அந்த வாக்குமூலத்தைப் பதிவுசெய்த விசாரணை அதிகாரியான தியாகராஜன் வாக்குமூலப் பதிவின்போது நடந்த தவறைப் பின்னாளில் தானாக முன்வந்து தெரிவித்தார். இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே அதுவரை இல்லாத வகையில், இது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் வகையில் பிரமாணப் பத்திரம் அளித்தார்.
எல்லாவற்றையும் தாண்டித்தான் பேரறிவாளன் ஒரு குற்றவாளியாக, 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். இளமையை இழந்து, உடல்நலம் குலைந்து இப்போது 44 வயதில் ரத்த அழுத்தம், முதுகு வலி, சிறுநீரகத் தொந்தரவு என்று ஏகப்பட்ட உடல் பிரச்சினைகளையும் மனநெருக்கடிகளையும் சுமந்து நிற்கிறார். மரணத்துக்கு எதிராகப் பெரும் போராட்டம் நடத்திக்கொண்டே இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பட்டப் படிப்புகளையும் பட்டயப் படிப்புகளையும் சிறைக்குள்ளேயே படித்து முடித்து, படிப்பில் முதலிடம் வந்ததற்காகத் தங்கப் பதக்கமும் வென்றிருக்கிறார்.
ராஜீவ் கொலை காட்டுமிராண்டித்தனமானது; ராஜீவ் போன்ற ஒரு தலைவர் கொல்லப்படுவது தேசத்தின் தலைவிதியோடு பிணைக்கப்பட்டது என்பதில் எனக்குத் துளியும் மாற்றுக்கருத்து இல்லை. நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று முடிவுகட்டப்பட்டவர்கள் உண்மையில் எந்த அளவுக்குக் குற்றத்தோடு தொடர்புடையவர்கள் எனும் விவாதத்துக்குள் நுழையவும் நான் விரும்பவில்லை. நீதிமன்றம் குற்றவாளிகள் என்று வரையறுத்தவர்களைக் குற்றவாளிகளாகவே கொள்வோம்; ஆனால், அதற்கான தண்டனை என்ன? காலம் முழுவதும் நான்கு சுவர்களுக்குள் புழுங்கிப் புழுங்கி வாழ்நாள் முழுவதும் வதைபட்டுச் சாவதா?
இன்றைக்கு ராஜீவ் போன்ற ஒரு தலைவரின் கொலையைத் தேசத்தின் மீதான தாக்குதலாகப் பார்க்க வேண்டும் என்கிறது உச்ச நீதிமன்றம். 350க்கும் மேற்பட்டோர் உயிரைப் பறித்த 1993 மும்பை தொடர் குண்டுவெடிப்பு தேசத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல். ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் செய்த தவறு, எதற்காக என்று தெரியாமல் பேட்டரிகள் வாங்கிக்கொடுத்தது என்றால், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளில் சஞ்சய் தத் செய்த தவறு தாவுத் இப்ராஹிம் ஆட்கள் கொடுத்த துப்பாக்கிகள், எறிகுண்டுகளை வைத்திருந்தது. அடுத்த மாதம் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுவிக்கப்போவதை இப்போதே மகாராஷ்டிரத்திலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்டது 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை. பின்னர், அது மேல்முறையீட்டில் 5 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. அந்தத் தண்டனையையும் அவர் தொடர்ச்சியாக அனுபவிக்கவில்லை. பலமுறை பரோலில் விடுவிக்கப்பட்டார். வீட்டில் இருந்தார். படங்களில் நடித்தார். சுற்றிப் பறந்தார். 2013-ல் தண்டனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, 150 நாட்கள் மட்டுமே முழுவதுமாகச் சிறையில் இருந்திருக்கிறார். எஞ்சிய தண்டனைக் காலம் முடியும் முன்னரே இப்போது வெளியே வரப்போகிறார். வரட்டும், தவறல்ல. திருத்தி சமூகத்துக்குத் திருப்பி அனுப்பத்தானே சிறைச்சாலைகள்? ஆனால், நீதி எல்லோருக்கும் ஒன்றானதாக இருக்க வேண்டும்!
சட்ட மேதைகள் வாதாடலாம். “மகாராஷ்டிர அரசு மும்பை குண்டுவெடிப்பு வழக்கை மத்தியப் புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கவில்லை. ஆகையால், அது தன்னிச்சையாக முடிவெடுக்கிறது; தமிழக அரசு தானாக முன்வந்து ராஜீவ் கொலை வழக்கை ஒப்படைத்தது. அதனால்தான் இப்போது சிக்கி நிற்கிறது. சஞ்சய் தத் வழக்குக்கும் பேரறிவாளன் வழக்குக்கும் இடையே இப்படிப் பல வேறுபாடுகள் இருக்கின்றன...” என்று வரிசையாக வாதங்களை அடுக்கலாம். சாமானிய மக்களுக்குச் சட்ட விதிகளின் நுணுக்கங்கள் தெரியாது. ஆனால், தர்மம் தெரியும். அவர்கள் பேரறிவாளனையும் சஞ்சய் தத்தையும் ஒப்பிடவே செய்வார்கள்! அங்கிருந்து நம் நீதி பரிபாலன முறையை மதிப்பிடவே செய்வார்கள்!
பேரறிவாளனை விடுவிக்க இன்றைக்கு அற்புதம் அம்மாள் நடத்திக்கொண்டிருக்கும் அயராத போராட்டம் ஒரு தாயின் தாய்மைப் போராட்டம் மட்டுமே அல்ல. அது இந்நாட்டின் நீதி எல்லோருக்கும் சமமானது; இந்நாட்டில் ஜனநாயக மாண்புகளுக்கு இன்றைக்கும் மதிப்பு இருக்கிறது; உண்மை ஒரு நாள் வென்றே தீரும் என்று நம்பிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான சாமானியர்களின் பிரதிநிதித்துவப் போராட்டம். ஒரு வழக்குரைஞரைக்கூடத் தனக்கென நியமித்துக்கொள்ளும் வசதியில்லாமல், சட்டப் போராட்டங்களுக்கான வாய்ப்பே தெரியாமல் சிறைக்குள்ளேயே மருகிக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான சாமானிய சிறைவாசிகளை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்குக் கொண்டுவர பாரம் சுமக்கும் போராட்டம். இந்தியாவின் மனித உரிமைகளில் ஆரம்பித்து மாநில உரிமைகள் வரை அதில் பிணைக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியா மனிதநேயத்தோடு மரண தண்டனைக்கான புதிய வரையறையை எழுத தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தேவைப்பட்டன. இந்தியா மனிதநேயத்தோடு ஆயுள் தண்டனைக்கான புதிய வரையறையை எழுதவும் தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் தேவையா?
- ஜனவரி, 2016, ‘தி இந்து’
(இந்தத் தாய்க்கு என்ன பதில் எனும் தலைப்பில் அப்போது வெளியாகியிருந்தது)
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.