கட்டுரை, சமஸ் கட்டுரை, சமஸ், பண்பாடு 3 நிமிட வாசிப்பு

பேசப்பட வேண்டியதுதான் அசோக் - கீர்த்தி திருமணம்

சமஸ் | Samas
17 Sep 2023, 5:00 am
3

ருவாகிவரும் தமிழ் நடிகர்களில் கவனம் ஈர்ப்பவர்களில் ஒருவராக அசோக் செல்வன் இருப்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணங்கள் இருக்கலாம். எனக்கு அவருடைய கூறுள்ள பேச்சு பிடிக்கும். சில பேட்டிகளில் யூட்யூபர்கள் சம்பிரதாயமாகக் கேட்கும் கேள்விகளுக்குக்கூட கூறோடு அவர் பதில் அளிப்பதைக் கவனித்திருக்கிறேன். 

அசோக் செல்வன் ஒரு பேட்டியில் காதல் தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் இது: “காதலுக்கான அர்த்தப்பாடு ஒவ்வொரு வயதிலும் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த வயதில் இயல்பான ஏற்புதான் காதல் என்று தோன்றுகிறது. ஒருவர் எப்படி இருக்கிறாரோ அவருடைய இயல்பை மாற்றிவிடாமல் அப்படியே ஏற்றுக்கொள்வது!” இப்போது அசோக் செல்வனுக்கு 33 வயதாகிறது; இதே கேள்வியை 25 வயதில், 20 வயதில் கேட்டிருந்தால் வேறு பதிலைத்தான் கூறியிருப்பேன் என்று அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டார்.

இன்னொரு பேட்டியில் அசோக் செல்வன் வெள்ளையாக இருப்பதையே குறிப்பிட்டு, ‘வெள்ளையாக இருப்பவர்களே அழகு’ எனும் பொருள்பட ஒரு கேள்வியை எழுப்பினார் அந்தப் பேட்டியை எடுத்த பெண். அசோக் செல்வன் இந்தக் கருத்தோடு உறுதிபட மறுத்தார்; அழகு எந்த நிறத்துடனும் பிணைந்தது இல்லை; கருப்பும் அழகுதான் என்றார். மிக விரிவாகவே அதற்குப் பதில் அளித்தார்.   

இளம்பெண்களை வசீகரிப்பதற்கான எல்லா லட்சணங்களும் கொண்ட அசோக் செல்வன் சில நாட்களுக்கு முன் திருமணத்தை அறிவித்தார். மணமகள் கீர்த்தி பாண்டியன் நடிகரும் இயக்குநருமான அருண் பாண்டியனுடைய மகள். அவரும் திரைத்துறையில் தனக்கென்று ஓர் இடத்தை உருவாக்கிக்கொள்ள முற்பட்டுவருகிறார். கீர்த்தி வசீகரமானவர். ஆயினும் அசோக் செல்வனுடைய நிறத்துடன் ஒப்பிட்டு கீர்த்தி நிறம் கம்மியானவர்; அழகில் குறைந்தவர்; பொருத்தமற்றவர் எனும் உருவக்கேலிகள் சமூக வலைதளங்களில் நடந்தன. பெண்களே இதில் அதிகம் ஈடுபட்டனர். இதற்குப் பதில் தருவது போன்று அழகு – நிறம் தொடர்பாக முன்பு பேசிய பழைய பேட்டியை அசோக் செல்வன் ட்விட்டரில் பகிர்ந்தார். இரண்டு நாட்கள் இந்தப் பேச்சு வலைதளங்களில் ஓடி இப்போது அடங்கிவிட்டிருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

உள்ளபடி அசோக் – கீர்த்தி திருமணம் வேறு ஒரு விஷயத்துக்காகப் பேசப்பட்டிருக்க வேண்டும். இன்று தமிழ்ச் சமூகத்தில் மிக இயல்பாகிக்கொண்டிருக்கும் பிராமணிய சடங்குகளைப் புறந்தள்ளி, தமிழ் முறைப்படி நடைபெற்றிருக்கும் திருமணம் இது. 

சாதி ஏற்றத்தாழ்வு ஒழிப்பு அல்லது தீண்டாமை ஒழிப்பு தொடர்பாகப் பேசும்போதெல்லாம், சாதிய முறையானது ஏதோ வெளியிலிருந்து சமூகம் நம் மீது திணிப்பதான பாவனையை நாம் செய்துகொண்டிருந்தாலும், சாதியின் ஊற்றுக்கண் அவரவர் வீட்டில் அவரவர் குடும்பத்திலேயே இருக்கிறது. சாதியை உடைப்பது வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். அது போன்றே வைதீக நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவருவதையும் அவரவர் வீட்டிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும்.

ஊரெல்லாம் வைதீக எதிர்ப்பு பேசிவிட்டு, புது வீடு கட்டி ஹோமம் வளர்ப்பதும், வேத மந்திரங்கள் சொல்லி திருமணங்களை நடத்துவதும், தான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் சூட்டுவதற்குக்கூட ஜோதிடம் பார்த்துத் திரிவதும் போலித்தனம் அன்றி வேறு இல்லை. பிராமணர்களைக் கடுமையாகச் சாடுவது, பிராமணியத்தை மூர்க்கமாகக் கடைப்பிடிப்பது எனும் இரட்டைத்தனம் இன்றைக்குத் தமிழ்நாட்டில் மிகவும் பரவலாகிறது. இரண்டுமே தேவை இல்லை. உங்கள் திருமணத்தைப் பற்றி, உங்கள் குழந்தையைப் பற்றி, உங்களுடைய வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு என்று ஒரு கற்பனை இல்லாத நிலையில் உங்களைத்தான் நீங்கள் நொந்துகொள்ள வேண்டும்.

வைதீக திருமண மரபுக்கு எதிராகத் தொடர்ந்து எதிர்வினை ஆற்றிவந்திருப்பதோடு, தன்னுடைய பழைய மரபைக் கொண்டுவரவும் தொடர்ந்து தமிழ்நாட்டில் பண்பாட்டுப் போராட்டம் நடக்கிறது. 

அரசியல் தளத்தில் மிகச் சிறந்த எதிர்வினை பெரியாரால் கொண்டுவரப்பட்டு, அண்ணாவால் சட்ட அங்கீகாரப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணம். மேடையில் தலைவர்கள் பேசிய பின், மணமக்கள் இணையேற்பு உறுதிமொழி வாசித்து, தலைவர்கள் கையால் எடுத்துக் கொடுக்கப்படும் மாலைகளை மணமக்கள் பரஸ்பரம் சூட்டும் முறை – சில இடங்களில் தாலியும் கட்டப்படுகிறது. 

அரசியலுக்கு அப்பாற்பட்டு, இறை நம்பிக்கையை இழக்காவண்ணம் தமிழ் முறைப்படி திருமணங்களை நடத்த விரும்புவோருக்கு வள்ளுவர் துணை நிற்கிறார். மேடையில் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வை ஆரம்பிப்பார்கள். பொதுவான இறை வாழ்த்து, அடுத்து மொழி வாழ்த்து, தொடர்ந்து திருக்குறள் மற்றும் காதலைப் போற்றும் சங்கப் பாடல்கள் ஓதல், அடுத்து பெற்றோர் வழிபாடு, இணையேற்பு உறுதிமொழி, குடும்பப் பெரியவர் கையால் மாலை / தாலி பெற்று சூடுதல். இதற்குப் பின் திருமணத்துக்கு வந்தவர்கள் அமர்ந்திருக்கும் இடம் சென்று அவர்கள் ஆசி வாழ்த்துகளைப் பெறுதல். இதோடு அந்தந்தக் குடும்பங்களின் விருப்பங்களுக்கு ஏற்ப - குல தெய்வத்தை வணங்குதல், தானியங்களை வணங்குதல் போன்ற – சில நிகழ்வுகள் மேலும் சேரும். முக்கியமான அம்சம் என்னவென்றால், தங்களுடைய திருமணம் தொடர்பான ஒவ்வொருவரின் கற்பனைக்கும் திட்டத்துக்கும் இடம் அளிப்பதோடு, அவரவர் வாழ்வில் முக்கியமான பெரியவர்கள் – குடும்பத்தினருக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்வாக இந்த முறை பரிமளிக்கிறது. 

என்னுடைய திருமணமும் கிட்டத்தட்ட இப்படித்தான் நடந்தது. நானும் என் மனைவி  ரேகாவும் எடுத்த முடிவு இது. அது ஒரு சின்ன அம்மன் கோயில். ரேகாவின் தாய் – தந்தையர் கடவுளை வணங்கி மாலைகளை  எடுத்துக்கொடுத்தார்கள். தாலியை என் அம்மா எடுத்துத் தந்தார்;  இளவயதிலேயே கணவரை இழந்தவர் என்பதால் இதில் அவருக்கு மிகுந்த தயக்கம் இருந்தது; நான் உறுதியாக இருந்தேன்; என் தந்தையை இரண்டு வயதில் இழந்தவன் நான். எவ்வளவோ சிரமங்கள் மத்தியிலும் தந்தையின் இழப்பே தெரியாதபடி வளர்த்தவர் என் தாய்; அவரைவிட இந்த உலகில் என் நலனில் அக்கறை கொண்டவர் எவர் இருக்க முடியும்; அவர் கைகளைவிட நான் ஆசி பெறக்கூடிய கைகள் எங்கே இருக்க முடியும்?

தமிழ் முறைத் திருமணங்களை ஒரு பண்பாடாக வளர்த்தெடுக்கும் பணியில் தன்னைத் தொடர்ந்து ஈடுபடுத்திக்கொள்ளும் தமிழ் அறிஞர்கள், மொழிச் செயல்பாட்டாளர்கள் என்று ஒரு பெரும் பட்டியல் தமிழ்நாட்டில் பிராந்தியம்தோறும் உண்டு. திருச்சியை மையமாகக் கொண்டு இயங்கிய  மறைந்த தமிழறிஞர் இளங்குமரன் இப்படி நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்களை நடத்திவைத்தவர். பேராசிரியர் ஞானசம்பந்தமும் அப்படிப்பட்டவர்களில் முக்கியமானவர். அவர்தான் அசோக் – கீர்த்தி திருமணத்தை நடத்தி வைத்திருக்கிறார்.

வெளியே ஆயிரம் புரட்சி முழக்கங்களைப் பேசினாலும் பெருமளவில் வைதீகச் சடங்குகளிலும், மூடநம்பிக்கைகளிலும் மூழ்கியது தமிழ்த் திரையுலகம். சகாக்களுடைய போக்கிலிருந்து விடுபட்டு, தனக்கென்று ஒரு பாதையை வகுத்துக்கொள்ள துணிச்சல் வேண்டும். ஏற்கெனவே முன்னுதாரணங்கள் உண்டு என்றாலும், அசோக் – கீர்த்தி திருமணமானது, வைதீகம் அரசியல் பலத்துடன் வெறி பிடித்தாடிடும் இன்றைய காலச் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. மாலைகள் சூடி சிரிக்கும் புகைப்படங்களோடு, ட்விட்டரில் தங்களுடைய திருமணச் செய்தியை பகிர அசோக் – கீர்த்தி மிகப் பொருத்தமான ‘குறுந்தொகை’யின் வரிகளைப் பயன்படுத்தியிருந்தனர்: ‘செம்புலப் பெயல் நீர் போல / அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே!’

தமிழ்போல் தழைக்கட்டும் வாழ்க்கை; இருவருக்கும் வாழ்த்துகள்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

10





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Raja   10 months ago

""என்னுடைய திருமணமும் கிட்டத்தட்ட இப்படித்தான் நடந்தது. நானும் என் மனைவி ரேகாவும் எடுத்த முடிவு இது. அது ஒரு சின்ன அம்மன் கோயில். ரேகாவின் தாய் – தந்தையர் கடவுளை வணங்கி மாலைகளை எடுத்துக்கொடுத்தார்கள். தாலியை என் அம்மா எடுத்துத் தந்தார்; இளவயதிலேயே கணவரை இழந்தவர் என்பதால் இதில் அவருக்கு மிகுந்த தயக்கம் இருந்தது; நான் உறுதியாக இருந்தேன்; என் தந்தையை இரண்டு வயதில் இழந்தவன் நான். எவ்வளவோ சிரமங்கள் மத்தியிலும் தந்தையின் இழப்பே தெரியாதபடி வளர்த்தவர் என் தாய்; அவரைவிட இந்த உலகில் என் நலனில் அக்கறை கொண்டவர் எவர் இருக்க முடியும்; அவர் கைகளைவிட நான் ஆசி பெறக்கூடிய கைகள் எங்கே இருக்க முடியும்?"" அற்புதமான வார்த்தைகள். நிச்சயமாக மகிழ்ச்சியான தம்பதிகளாத்தான் நீங்கள் இருக்க வேண்டும். கல்யாணம் என்றால் இப்படித்தான் பண்ண வேண்டும். கல்யாணம் என்ற பெயரில் பணத்தையும் பந்தாவையும் இணைத்து போட்டு நடத்தப்படும் படப்பிடிப்புகள் சில மாதங்களில் கலைந்து செல்வதை பார்த்து கொண்டே இருக்கிறேன்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Raja   10 months ago

உங்களின் திருமணம் நடந்த விதம் மனதை மிக மிக கவர்ந்து விட்டது. எனக்கும் இது போல் ஆசை (எல்லோராலும் ஒதுக்கப்பட்ட என் சித்தியின் கைகளால்!). சமூகத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் அவதானித்து எழுதுகிறீர்கள். "கூறுள்ள பேச்சு" இந்த வார்த்தையை மிகவும் ரசித்தேன். எனக்கு தெரிந்து அல்லது நான் படித்த வரையில் இந்த வார்த்தையை சமீபத்தில் நான் பார்க்கவில்லை. உங்களின் வழியாக என் ஆச்சியின் நியாபகம். "கூறு கெட்ட கழுத" என்று என்னை திட்டுவார்கள்! வழக்கம் போல் வெகு சிறப்பான பதிவு. 

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

RAJA RAJAMANI   10 months ago

மதிப்புக்குரிய சமஸ் அய்யாவிற்கு வணக்கம். உங்களுடைய இந்த பதிவை இரண்டு காரணங்களுக்கு முரண் படுகிறேன். 1. அசோக் செல்வனின் அழகைப்பற்றியும் கீர்த்தியின் நிறத்தைப்பற்றியும் சமூக வலைதங்களிலுள்ள கிசுகிசு தடங்களில் விவரிக்க தக்க ஒரு சுவையான சப்ஜெக்ட் அல்லவா? இதை போய் அறிவுசார்வு உடைய இந்த அருஞ்சொல்லில், அதுவும் அதன் ஆசிரியராக இருக்கும் சமஸ் அதை பற்றி எழுதுவது, இந்த பத்திரிகையின் தரத்தை எப்படி பாதுகாக்கும் என்று எனக்கு புரியவில்லை. 2. மேலும் அசோக் செல்வன், கீர்த்தி அவர்களின் திருமண சடங்கு. அது இருவரருக்கும் இடையே ஆலோசித்து முடிவெடுத்த ஒரு அந்தரங்கமான விவகாரம் அல்லவா? அதை பற்றி மூன்றாமவர் கமெண்ட் அடிப்பது பத்திரிகை நாகரீகமாக தோன்றவில்லை. உங்களுக்கு வைதீக சடங்குகளை தவிர்த்து வேறு முறையில் திருமண சடங்குகளை போற்றி எழுத வேண்டுமென்றால், அதற்கென்றே ஒரு பதிவை போடுவது அல்லவா சரி! இதை ஒப்பிடும்போது, இதே அருஞ்சொலில், சில மாதங்களுக்கு முன் பெருமாள் முருகனின், தன் மகனின் திருமணத்தை பற்றிய பதிவு தான் நினைவுக்கு வருகிறது. ஒரு திருமணமும், அதில் வரும் சடங்குகளின் மூலம் எவ்வளவு சிக்கல்கள் வரலாம் என்றும், அதை எப்படி மனம் புண்படாமல் எதிர்கொள்ளுவதை பற்றியும் விவரித்து எழுதியிருந்தார். அதை பல முறை படித்து, நண்பர்களிடம் பகிர்ந்து மகிழ்ந்திருக்கிறேன். ஆனால் உங்களுடைய இந்த பதிவை வாசித்ததும் ஒரு விதமான ஏமாற்றமும், சோர்வும் தான் மிச்சம். இந்த மறுமொழி எழுதுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இப்படிக்கு ... ராஜாமணி https://www.arunchol.com/perumal-murugan-on-inter-caste-marriage

Reply 3 2

Login / Create an account to add a comment / reply.

ஓய்வுபெற்ற அதிகாரிகள்தமிழ் நாட்டிய மரபுஅழகு நீலா பொன்னீலன் கட்டுரைஏர் இந்தியா கதைமுதல் பெண் முதல்வர்கணினி அறிவியல் என் பள்ளி எனக்குக் கொடுத்த கொடைடாக்டர் கணேசன்அலுவல்மொழிஆசாதிமின் உற்பத்திபுளியந்தோப்புநீட் எனும் தடைக்கல்பழஞ்சொற்கள்ரஷ்ய-உக்ரைன் போர்பிரதமர் நாற்காலிபாதுகாப்புதலைநாயகன்மெட்றாஸ்உணவு மானியம்தேர்தல் பத்திரங்கள்எலும்பு முறிவுபசுமை விருதுஏ.கே.பட்டாசார்யா கட்டுரைக்ளூட்டென்தசைநார் வலிக்குத் தீர்வு என்ன?நுகர்வு கலாச்சாரம்நூலகங்களில் சீர்திருத்தம்பணம்ஹிண்டென்பர்க் அறிக்கை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!