கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ரீவைண்ட் 4 நிமிட வாசிப்பு
சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கிறதா?
சென்னை அண்ணா சாலை புகாரியில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். சாலை முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் பறந்தன. மாநிலச் சுயாட்சி மாநாடு நடந்த ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடல் கூப்பிடு தூரத்தில்தான் இருந்தது. சாயங்காலத்துக்கான வானிலை கனிந்திருந்தது. வெளியே சாலையில் போன கூட்டத்தின் இடையே ஒரு குதிரை ஊர்வலம் கவர்ந்திழுத்தது. இரண்டு குதிரைகளில் பதின்ம வயது சிறுவர்கள் இருவர் உற்சாகமாக உட்கார்ந்திருந்தார்கள். பேண்டு செட்காரர்கள்போல அவர்கள் உடை அணிந்திருந்தார்கள். ஒரு கையில் குதிரையின் லகான். ஒரு கையில் தட்டி. ‘தமிழ் வெல்லும்!’ என்றது அது. குதிரைக்கு முன்னே நான்கு பையன்கள் பறையடித்தபடி செல்ல, குதிரைக்குப் பின்னே ஒரு கூட்டம் உற்சாகமாக ஆடியபடியும் முழக்கமிட்டபடியும் அணிவகுத்துச் சென்றது. பெரும்பாலும் பதின்ம வயது ஏழைப் பையன்கள். எதிர்வரும் காலம் ஒன்றின் கனவைக் கூறுவதுபோல இருந்த அந்த ஊர்வலம் மன எழுச்சியைத் தந்ததோடு கூடவே ஒரு குற்றவுணர்வையும் உண்டாக்கியது. இந்தப் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு எந்த அளவுக்கு நேர்மையாக நம்முடைய இன்றைய தமிழ் அடையாள அரசியல் இருக்கிறது?
யோசித்துப்பார்க்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது விசிக மாதிரி ஒரு தலித் அரசியல் கட்சி மாநில உரிமைகள் சார்ந்து மாநாடு நடத்துமா? இந்தியாவில் இன்றைக்கு எந்த மாநிலத்தின் ஆட்சி ஒரு தலித் கட்சி அல்லது ஒரு தலித் தலைவர் கையில் இருக்கிறது? தம் கையில் இல்லாத, யார் கையிலோ இருக்கும் அதிகாரத்தைக் காக்க ஏன் இவர்கள் ஒரு மாநாடு நடத்த வேண்டும்? ஒரு தமிழராகப் பிறந்திருக்காவிட்டால் அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் பிறந்திருந்தால் தேசிய அளவில் பெரிய ஆளுமையாகக் கவனிக்கப்பட்டிருக்கக் கூடியவர் திருமாவளவன் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
தன்னுடைய ஆரம்ப நாட்களிலிருந்தே தலித் அடையாள அரசியலுடன் தமிழ் அடையாள அரசியலையும் சேர்த்துப் பொருத்தியே சமத்துவத்துக்கான சாதி ஒழிப்புப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் திருமாவளவன். தேசிய அடையாளத்தைத் தாங்கிய ‘தலித் பேந்தர்ஸ்’ அமைப்பிலிருந்து விலகி தமிழ் அடையாளத்துடன் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பை அவர் தொடங்கியதே இந்திய தலித் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பம். ஏனென்றால், மாநிலங்களில் பிறந்தாலும் தேசிய அடையாளத்துடன் தன்னைக் கட்டமைத்துக்கொள்வதாகவே தலித் அரசியல் இயக்கங்களின் வரலாறு இருந்திருக்கிறது.
திருமாவளவனின் முடிவு ஒரு விதத்தில் தமிழ்நாட்டிற்கே உரிய தனித்துவம் அல்லது தேசிய அரசியலுக்குத் தமிழ்நாடு கொடுத்துவரும் கொடையின் நீட்சி என்று சொல்லலாம். எப்படி சமூக நீதி அரசியலையும், மாநில சுயாட்சி முழக்கத்தையும் திராவிட இயக்கங்கள் வழி தமிழ்நாடு கொடுத்ததோ அப்படி. தமிழ்நாட்டின் தலித் அரசியலில் இதற்கு ஒரு வரலாற்று முன்னோடியும் உண்டு. சாதி ஒழிப்பை உரக்கப் பேசிய முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசர், முதலில் திராவிட அடையாளத்தையும் தொடர்ந்து தமிழர் அடையாளத்தையும் சாதி ஒழிப்புப் புள்ளியில் பொருத்தியவர்.
உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் வழியே சங்கப் பரிவாரங்கள் ஒரு செய்தியை இந்தியாவுக்குச் சொல்லியிருக்கின்றன. “ஓட்டுக்காகச் சாதிகளை எப்படி இந்து என்ற கூட்டு அடையாளத்துக்குள் இஸ்லாமிய வெறுப்பரசியலின் வழி திரட்ட முடியுமோ அதேபோல, சாதிய உள்முரண்களைப் பேசி தலித் என்ற கூட்டு அடையாளத்தைச் சாதிகளாக உடைக்கவும் முடியும்.” உள்ளபடி, 2017 உத்தர பிரதேச தேர்தல் விவாதங்களில் முதன்மை பெற்றிருக்க வேண்டியது இதுதான்: இந்தியாவில் இனி தலித் அரசியலின் எதிர்காலம் என்ன?
நாடு முழுக்கவுமுள்ள தலித் அரசியல்வாதிகளுக்கு உந்துசக்தியாக இருக்கக் கூடிய மாயாவதி போன்ற ஒரு தலைவரையே, வெறும் ஜாதவ்களின் தலைவராக சங்கப் பரிவாரங்களால் சுருக்க முடியும் என்றால், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான சாதிகளாகப் பிரிந்து கிடக்கும் ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி தேசிய அளவில் ஒன்றிணைக்க முடியும்? ஐந்தில் ஒரு பங்கைத் தொடும் தலித்துகளின் எண்ணிக்கையை அப்படியே ஒருங்கிணைத்துப் பராமரித்தாலும், அந்த வியூகம் எப்படித் தொடர்ந்து ஜெயிக்க முடியும்? மாயாவதி சமூகங்களின் கூட்டணி மூலம் இதைச் சாதிக்க முயன்றார். பாஜக அதை உடைத்துவிட்டது. திருமாவளவன் வேறு ஒரு வழியைக் காட்டுகிறார். ஒருவகையில் அவர் நடத்திருக்கும் மாநிலச் சுயாட்சி மாநாடு இந்தியா முழுமைக்குமான செய்தி.
இந்தியாவில் மாநிலங்களின் உரிமையை அமெரிக்கா, சீனா, இன்னும் வேறு பல நாடுகளுடன் ஒப்பிடவே முடியாது. ஏனென்றால், இங்குள்ள மொழிவாரி மாநிலங்கள் வெறுமனே அந்தந்தப் பிராந்திய நலன்களைச் சார்ந்து மட்டும் பேசவில்லை. மாறாக அந்தந்த மாநிலங்களின் மொழி, இனம், அவரவருடைய தேசிய அடையாளம் சார்ந்தும் பேசுகின்றன. ஆக, மாநில சுயாட்சி என்பது உண்மையான பன்மைத்துவத்துக்கான, உண்மையான கூட்டாட்சியை வலுப்படுத்தும் வாய்ப்பை இந்திய தேசியத்திற்கு வழங்குகிறது. இன்னொரு வகையில், ‘இந்தி, இந்து, இந்துஸ்தான்’ ஒற்றைக் கலாச்சார அரசியலுக்குச் சரியான பதிலீடாகவும் இது அமைகிறது.
தலித் அரசியல் இப்படி மொழி, இனம், மாநிலம்சார் அடையாளங்களுடன் இணைந்து வரும்போது அரசியல்ரீதியான வெற்றிகரமான வியூகம் என்பதற்கு அப்பால், சமூகரீதியிலும் பிணைப்புக்கான ஒரு புதிய கதவு திறக்கிறது. அம்பேத்கரையும், பெரியாரையும் திருமாவளவன் சரியாக இணைக்கும் புள்ளி என்றுகூட இதைச் சொல்லலாம். தமிழர் என்ற அடையாளத்தோடு அரவணைப்பதற்கு இரு கைகளையும் விரிப்பதன் மூலம், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் திருமாவளவன் ஒரு அறைகூவல் விடுக்கிறார். ‘சாதி ஒழிக, தமிழ் வாழ்க!’ எனும் அறைகூவலே அது. இந்த அறைகூவலுக்குத் தமிழ் அரசியல் பேசுவோர் - குறிப்பாக தலித் அல்லாதோர் கூறக் கூடிய பதில் என்ன?
திருமாவளவனுடனான ஒரு தனிப்பட்ட உரையாடலில் ஒருநாள் சொன்னார், “தோழர், நான் ஒரு நாளும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆக முடியாது. எனக்கு அது நன்றாகத் தெரியும். ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகளிலாவது சாதி - மதம் சார்ந்த பாகுபாடு காரணமாக நாமெல்லாம் இந்த இடத்துக்குப் போகவே முடியாது என்று ஒரு குழந்தை நினைக்கும் அவலத்தைக் குறைந்தபட்சம் நம்முடைய தமிழ் மண்ணிலாவது நாம் மாற்ற வேண்டாமா?”
இன்னும் அரசியலுக்கு வருவதா, வேண்டாமா என்று முடிவெடுக்கவே முடியாத ஒரு ரஜினியும், கட்சி ஆரம்பிப்பதா, வேண்டாமா என்று குழப்பத்தில் இருக்கும் ஒரு கமல்ஹாசனும்கூட, நினைத்தால் தாங்கள் முதல்வர் ஆகிவிட முடியும் என்று உறுதியாக நம்பும் சூழல் நிலவும் தமிழ்நாட்டில், சமகாலத்தின் தகுதி வாய்ந்த தலைவர்களில் ஒருவரான, பொது வாழ்க்கைக்குத் தன்னையே முழுமையாக அர்ப்பணித்துவிட்ட திருமாவளவனுக்கு அப்படிச் சொல்லும் சூழல் ஏன் இல்லை? ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழர்’ முழக்கமிடும் தமிழ்ச் சமூகம் மிக ஆழமாகத் தன்னைக் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது என்று நினைக்கிறேன்.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
மனுஸ்மிருதி எதிர்ப்பு: வரலாறும் இன்றைய தேவையும்
20 Sep 2023
ஒரு நூற்றாண்டுக்கு முன் தமிழ்ச் சமூகத்தில் பிராமணரல்லாத அனைத்துச் சாதியினரையும் குறிக்க ‘தமிழர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார் அயோத்திதாசர். பெரியார் ‘தமிழர்’ என்ற சொல்லாடலை ஒரு அரசியலாக இங்கே நிலைநிறுத்தினார். உணர்வால் இந்த அரசியலுக்குள் வரும் பிராமணர்களையும் ‘தமிழர்’ அடையாளத்துக்குள் உள்ளிழுத்தார் அண்ணா. சாதி, மதம் கடந்த சமத்துவத்துக்கான, சம உரிமைக்கான இவ்வகையான துணை தேசிய அரசியல் (subnational politics) இந்நாட்டில் எந்த மாநிலத்திலும் எந்தத் தலைவர்களாலும் இப்படி விரிவான தளத்தில் முன்னெடுக்கப்படவில்லை. அதன் விளைவாகவே சாதியப் படிநிலைகளின் கீழ் அடுக்குகளில் உள்ள, மிகச் சிறுபான்மையான எண்ணிக்கையைக் கொண்ட ஒரு சமூகத்திலிருந்து வந்த கருணாநிதி தமிழ்நாட்டின் நீண்ட கால முதல்வராக இருக்க முடிந்தது.
பெரியாரும், அண்ணாவும் கட்டியமைத்த தமிழ் அரசியல் களத்தின் வாயிலாகவே கருணாநிதி எனும் ஒரு மாபெரும் ஆளுமையை நாம் பெற்றோம். சாதியின் பெயரால் ஒருவேளை கருணாநிதி முதல்வராக முடியாமல் போயிருந்தால் யாருக்கு இழப்பு? நேற்றைய நம் தலைமுறை கருணாநிதியை இழக்கவில்லை; ஆனால், இன்று நாம் திருமாவளவனை இழக்கிறோம் என்றால், தமிழ் அடையாள அரசியல் மேம்பட்டிருக்கிறது என்று எப்படிச் சொல்ல முடியும்?
ஒரு தலித் குழந்தை மட்டும் அல்ல; ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்தவக் குழந்தை தன்னை முதல்வராகக் கனவு காணும் சாத்தியம் இன்றைக்குத் தமிழ்நாட்டுச் சூழலில் இருக்கிறதா? அப்படியென்றால், நாம் பேசும் தமிழ் அடையாள அரசியல் எந்த மதத்தின், எந்தப் பெரும்பான்மைச் சாதிகளைப் பிரபலிக்கிறது? “இந்திய ஒன்றியத்தில் ஒரு தமிழன், ஒரு காஷ்மீரி, ஒரு மணிப்பூரி பிரதமராகும் சூழல் யதார்த்தத்தில் இல்லை; அப்படியென்றால், இந்தியர் என்ற சொல்லுக்கான உண்மையான பெறுமதி என்ன; சமத்துவம் வேண்டாமா?” என்று கேட்பதில் உள்ள நியாயம் இதற்கும் பொருந்தும்தானே? ஒரு தலித், ஒரு முஸ்லிம், ஒரு கிறிஸ்தவர் இங்கு முதல்வராகும் சூழல் யதார்த்தத்தில் இல்லை என்றால், தமிழன் என்ற சொல்லுக்கான பெறுமதி என்ன? சமத்துவம் வேண்டாமா?
தமிழ்ச் சமூகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் நேர்மையாகப் பதில் தேடியே இன்றைக்கு சமூக நீதியில் நாட்டிலேயே ஒரு உயரிய இடம் நோக்கி நகர்ந்து வந்திருக்கிறது. அருந்ததியர், பள்ளர், பறையர் என்ற சாதி வரையறைகளை முழுக்க கடக்க முடியாவிட்டாலும், ஒரு தலித் அடையாளம் எப்படி எல்லா உட்பூசல்களையும் கடக்க ஆத்மார்த்தமாக முற்படுகிறதோ அப்படி எல்லா சாதி, மதப் பூசல்களையும் உளபூர்வமாகக் கடக்கும் லட்சியம் நம்முடைய தமிழ் அடையாளத்துக்கு இருக்கிறதா? அப்படிக் கடக்கும் வல்லமை அதற்கு இருக்கிறதா? நம் காலத்தில் தமிழ்ச் சமூகம் முன் நிற்கும் முக்கியமான கேள்விகளில் ஒன்று இது. நேர்மையாக இதற்குப் பதில் தேட நாம் முனைய வேண்டும்.
குதிரை ஏறிய அந்தப் பிள்ளைகளின் கனவு, கோட்டைக்குள் நுழைய வேண்டும். ‘தமிழ் வெல்லும்!’ என்ற அவர்கள் நம்பிக்கை பொய்த்துவிடக் கூடாது!
தொடர்புடைய கட்டுரைகள்
மனுஸ்மிருதி எதிர்ப்பு: வரலாறும் இன்றைய தேவையும்
மாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்
திருமணமா, இயக்கமா? திருமாவளவன் பேட்டி
அரசியலதிகாரமே வலிய ஆயுதம்: திருமா பேட்டி
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.