கட்டுரை, கலாச்சாரம், சமஸ் கட்டுரை, சமஸ், ரீவைண்ட் 5 நிமிட வாசிப்பு

சென்னை ஏன் புழுங்குகிறது?

சமஸ் | Samas
19 Aug 2015, 5:00 am
2

ன்னார்குடியில் ‘மதராஸ் ஓட்டல்’ என்று ஓர் உணவகம் உண்டு. அந்நாட்களில் அரசு இயக்கிய ‘திருவள்ளுவர்’ விரைவுப் பேருந்துகள் ‘சென்னை’ பெயரைச் சுமந்திருக்கும். மதராஸ், சென்னை எனும் வார்த்தைகள் அறிமுகமானது இப்படித்தான். ஒருநாள் அம்மாவிடம் கேட்டபோது, “தமிழ்ல சென்னை; அதைத்தான் இங்கிலீஷ்ல மெட்ராஸ்னு சொல்வாங்க” என்றார் சுருக்கமாக. பின்னாளில், சென்னை வரலாற்றைத் தமிழில் எழுதிய ஆய்வாளரான நரசய்யாவைச் சந்தித்தபோது அவர் சொன்னார், “சென்னப்பட்டினம் வேறு; மதராசப்பட்டினம் வேறு. இரண்டுமே ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே இங்கே இருந்த கிராமங்கள். இந்தச் சோழ மண்டலக் கடற்கரையின் பல கிராமங்கள் குறைந்தது சில ஆயிரம் வருஷங்கள் பழமையானவை. ஆனால், ஆங்கிலேயர்கள் வந்த பிறகுதான் இந்த ஊரே உருவானதுபோல ஒரு தோற்றத்தை வந்தேறிகள் உருவாக்கிவிட்டார்கள்.”

சென்னை ரொம்ப நாட்கள் பீதிக்குரிய ஒரு ஊராகவே மனதில் நிலைத்திருந்தது. ஊரில் சென்னைக்கு பஸ் ஏற நிற்கும்போது மட்டும் பார்ப்பவர்கள் எல்லோரும், “பார்த்துடா, பத்திரம்டா” என்று உருகி உருகி எச்சரித்ததெல்லாம்கூடக் காரணமாக இருக்கலாம்.

எந்த அளவுக்கு சென்னை பீதி தந்தது என்றால், சின்ன வயதில் பேருந்தில் துணிப்பையைக்கூடக் கீழே வைக்கப் பயந்து மடியிலேயே வைத்துக்கொண்டு வரக்கூடிய பீதியைத் தந்தது. வீட்டில் ஐந்நூறு ரூபாய் கொடுத்துவிட்டால், அதை பத்து, ஐம்பது ரூபாய் நோட்டுகளாக மாற்றி சட்டைப் பையில் இரண்டு நோட்டுகள், பேன்ட்டின் இரு பக்கப் பைகளிலும் இரண்டிரண்டு நோட்டுகள், பின் பையில் இரண்டு நோட்டுகள், இடுப்புப் பையில் ஒரு நோட்டு, துணி மூட்டையில் ஒரு நோட்டு என்று பதுக்கி, தடவித் தடவிப் பார்த்துக்கொண்டே வரும் அளவுக்குப் பீதியைத் தந்தது. சென்னை வந்து இறங்கிவிட்டால், யாராவது கொஞ்சம் உற்றுப்பார்த்தால், முகத்தில் பிளேடு துப்பிவிடுவார்களோ என்று தோன்றும். யாராவது கொஞ்ச தூரம் நம் பின்னாலேயே வருவதுபோல இருந்தால், ‘ஜேப்படித் திருடர்களாக இருப்பார்களோ? ’ என்று பயமாக இருக்கும். இரவு நேரங்களில் விடுதிகளில் தங்க நேர்ந்தால் தூக்கம் பிடிக்காது. இவ்வளவைத் தாண்டியும் அந்நாட்களிலேயே சென்னைக்காரர்களிடம் ஒரு விஷயம் பிடித்தது, நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் அளவுக்கு: “யார்கிட்ட விலாசம் கேட்டாலும் நின்னு நிதானமா சொல்றாய்ங்க மாப்புள.”

படிப்பு முடிந்து வேலை தேடும்போது பெரும்பாலான பத்திரிகைகள் சென்னையில் இருந்தாலும், மறந்தும்கூட சென்னைக்கு வரக் கூடாது என்பது ஒரு வைராக்கியமாகவே இருந்தது, பல ஆண்டுக் காலத்துக்கு. இப்போது சென்னைவாசிகள் மீது பயம் இல்லை. ஆனாலும், இந்த ஊர் பிடிக்கவில்லையே!

வெயில் நாள் என்றால் கொளுத்தும், மழை நாள் என்றால் மிதக்கும்; ஐயோ! எங்கு பார்த்தாலும் எறும்புகள்போல ஊர்ந்துகொண்டிருக்கும் ஜனம், சாக்கடை, புழுக்கம், புழுதி, புகை… என்ன ஊர் இது என்ற நினைப்பு. சென்னைதான் வாழ்க்கை என்றாகி, இந்த ஊரைத் தெருத் தெருவாகச் சுற்ற ஆரம்பித்தபோதுதான் புரிய ஆரம்பித்தது, என்ன மாதிரியான ஒரு ஊரை எப்படி நாசமாக்கிவிட்டோம் நாம்!

கடற்கரையை ஒட்டி ஒரு நகரம், அதனூடே இரு நதிகள், ஒரு கால்வாய், ஊர் விரிய விரிய ஏரிகள், இடை யிடையே சிறு மலைகள், சிறு வனங்கள்… ஒருகாலத்தில் கூவத்தில் அன்றாடம் படகில் சென்று மீன் பிடித்திருக்கிறார்கள். கரையில் நின்று காத்திருந்து மீன் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். படகுச் சவாரி நடந்திருக்கிறது. படகுப் போட்டி நடந்திருக்கிறது. இன்றைக்கும்கூட, கல்லாற்றின் கிளை நதியாகப் பிரியும் கேசாவரத்தில் கூவம் சாக்கடையாக இல்லை. ஒரு நதியை எவ்வளவு கழிவுகளைக் கொட்ட முடியுமோ கொட்டி நாம்தான் மாபெரும் சாக்கடையாக்கி இருக்கிறோம். கூழைக் கடாக்கள், நீலத்தாழைக் கோழிகள், நாமக் கோழிகள், முக்குளிப்பான்கள், நீலவாலிலைக் கோழிகள், பூநாரைகள் என்று பறவைகள் குவியும் பள்ளிக்கரணை போன்ற ஒரு சதுப்புநிலப் பகுதிக்கு அருகில் ஊர் குப்பையையெல்லாம் கொட்டி, கொளுத்திவிடும் மடத்தனத்தை நம்மைப் போல வேறு யாரேனும் செய்வார்களா!

தமிழகத்தில் எத்தனையோ கிராமங்களில் இன்றைக்கு நிலத்தடிநீர் மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழே சென்றுவிட்டது. சென்னைக்கு வந்த புதிதில் குடியேறிய சைதாப்பேட்டை வீட்டில், கிணறு உண்டு. பத்தடி ஆழத்தில் தண்ணீர் உண்டு. வீட்டின் எந்த மூலையில் மழைத்துளி விழுந்தாலும் கிணற்றில் வந்து விழும் வகையில் சேகர அமைப்பைக் கட்டியிருந்தார் வீட்டுக்காரர். கிணற்றடியில் வாராவாரம் மஞ்சள், குங்குமம் பூசி பூஜிப்பார். “நாம அதுக்கு மரியாதை செஞ்சா, அது நமக்கு மரியாதை செய்யும்” என்பார். இன்றைக்கும் பூஜை நடக்கிறது; கிணற்றில் தண்ணீர் இருக்கிறது.

சென்னைக்கு என்று ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பெருமைகொள்ளும் பன்மைக் கலாச்சாரம் இருக்கிறது. மனதைக் கொள்ளை கொள்ளும் பல இடங்கள் இங்கே இருக்கின்றன. அற்புதமான ஒரு வாழ்க்கை இங்கேயும் இருக்கிறது. கேட்காமலே உதவிக்கு வரக் கூடிய, உதவிவிட்டு அவர்கள் போக்கில் போகக்கூடிய அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் தாண்டி சென்னையையும் அதுபற்றிய நினைவுகளையும் நாசமாக்குவது எது?

நம்முடைய மனதின் அடியாழத்தில் கசந்து புகையும் வெறுப்புதான் என்று தோன்றுகிறது. நமக்குச் சொந்த ஊரின் மீது ஒரு காதல் இருக்கிறது. இளவயதுக் காதல்போல. அந்தக் காதல் நீடித்து, கல்யாணமும் கூடியிருந்தால் சந்தோஷம்தான். ஆனால், பலருக்கு அது வாய்ப்பதில்லை. ஏன் வாய்ப்பதில்லை என்று கேட்டால், அரசாங்கக் கொள்கைகள் - அதிகாரக்குவிப்பு - நகர்மயமாக்கல் - சிற்றூர்கள் புறக்கணிப்பு - நம்முடைய குடும்பச் சூழல் என்று காரணங்களை அடுக்கலாம். எப்படியோ, நமக்குச் சோறு போடும் திராணிகூட இல்லாதவையாக நம்முடைய சொந்த ஊர்களை மாற்றிவிட்டோம். ஆனால், நிறைவேறாத அந்தக் காதல் தந்த சோகத்தையும் வலியையும் வெறுப்பாக்கி, நமக்குச் சோறு போடும் இந்த நகரின் மீது வெறுப்பைக் கக்குகிறோம். இந்த நகரில் ஒரு செடியை நடும் பிரியம் கூட நம்மிடம் இல்லையே ஏன்? இந்த ஊர் நமது இல்லை. இந்த ஊருக்கான கடமைகள் நமது இல்லை. இது பணம் சம்பாதிப்பதற்கான ஊர், சூறையாடுவதற்கான ஊர், கொள்ளையடிப்பதற்கான ஊர்.

எழுத்தாளர் ஜோ டி குரூஸுடன் சில மாதங்களுக்கு முன் கடற்கரைக்குச் சென்றிருந்தேன். இயல்பாக ஏறி ஒரு படகில் உட்கார்ந்த குரூஸ் கடலைப் பற்றிக் கதைக்க ஆரம்பித்தார். சென்னை கடல் பகுதியில் என்னென்ன மீன் வகைகள் கிடைக்கும், எங்கே ஆழம் அதிகம், எங்கே பாடு அதிகம், ஆழ்கடல் மீன் தொழில் எப்படி, கடல் தங்கல் எப்படி என்று அவர் பாட்டுக்குப் பேசிக்கொண்டிருந்தார். பேச்சினூடே சொன்னார், “எனக்கு எங்கூர் கடக்கரைக்கும் ராயபுரம் கடக்கரைக்கும் பெரிய வித்தியாசம் தெரியலீங்க.” கடலையே பார்த்துக்கொண்டிருந்தவர் கொஞ்சம் இடைவெளி விட்டு மீண்டும் சொன்னார்: “கடலு சோறு போடுற தாயின்னா, மண்ணும் அப்படித்தானே!”

ஆகஸ்ட், 2015, ‘தி இந்து’

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


2

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

K SERALATHAN    2 years ago

அருமை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Anantharaja R   2 years ago

🙏💐

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ஒன்றிய அரசின் அதிகாரங்கள்நாசிஸம்குபெங்க்கியான் விருதின் முக்கியத்துவம் என்ன?மகுடேஸ்வரன் கட்டுரைசெயற்பாட்டாளர்கள்ஆண் பெண் உறவு அராத்துகண்களைத் திறந்த கண்காட்சிகள்குழப்பம்மால்கம் ஆதிசேஷையாகுஜராத் 2002ஷாம்பு எனும் வில்லன்மரிக்கோரயில்வே துறைபத்திரிகையாளர்கள் நல வாரியம்அடுத்த தொகுப்புமெய்யியல்முற்காலச் சேரர்கள்தேர்தல் முடிவுகள்அரசுக் கல்லூரிகள்ஜாதியும்கருநாடகம்குழந்தை வளர்ப்புஅறிவுசார் செயல்பாடுராமசந்திர குஹா கட்டுரை கலைஞர்லாவண்டர்கல்சுரல் காபிடல்உலகம் சுற்றும் வாலிபன்விஜய் ரூபானிநீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!