கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
திமுகவை எப்படி வீழ்த்த நினைக்கிறது பாஜக?
இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் யுத்தமாகப் பார்க்கப்படும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான களத்தை உருவாக்கும் அரசியல் படைகளில் ஒன்றுபோல ஆகிவிட்டிருக்கிறது மத்திய அமலாக்க இயக்குநரகம். காஷ்மீர், வங்கம், கர்நாடகம், கேரளம், சத்தீஸ்கர், டெல்லி, மஹாராஷ்டிரம் என்று நீளும் வரிசையில் இப்போது தமிழ்நாடு குறிவைக்கப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அமலாக்கத் துறை மூலமாக பாஜக இங்கே நிகழ்த்த விரும்பும் நாடகம் என்ன? கட்சிகளின் அரசியலுக்கு அப்பாற்பட்டு இது ஒரு தேசிய விவகாரம். நாம் மூன்று நிகழ்வுகளை முதலில் நினைவுபடுத்திக்கொள்வோம்!
மூன்று நிகழ்வுகள்
• குஜராத்துக்கு வெளியே இந்தி பிராந்தியத்துக்கு அப்பாற்பட்டு, மோடிக்குப் பெரும் வெற்றியைத் தந்தது மகாராஷ்டிரம். உத்தர பிரதேசத்துக்கு அடுத்து, மக்களவைக்கு அதிகமான உறுப்பினர்களை அனுப்பும் பெரிய மாநிலம். மிக நீண்ட காலம் காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்த மகாராஷ்டிரம் 2014, 2019 இரு தேர்தல்களிலும் பாஜகவுக்கு அதிகாரத்தை அள்ளித் தந்தது.
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி ஆட்சியமைத்த சிவசேனை இரண்டாக உடைக்கப்பட்டு, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அரசானது, சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க முற்பட்ட நாளில் மஹாராஷ்டிர சட்டமன்றம் எதிர்க்கட்சிகளின் இந்த முழக்கத்தால் அதிர்ந்தது: “ஈடி, ஈடி, ஈடி!”
ஆங்கிலத்தில் ‘என்ஃபோர்ஸ்மென்ட் டைரக்டரேட்’ (ஈடி) என்று அழைக்கப்படும் அமலாக்கத் துறையானது மகாராஷ்டிர அரசியலை எப்படி மாற்றியமைக்கும் கருவியாகச் செயல்பட்டது என்பதை நாட்டுக்குச் சொல்லும் விதமாகவே அப்படி முழக்கம் எழுப்பினர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
2022, பிப்ரவரி மாதம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடுவுக்கு சிவசேனை கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் ஒரு கடிதம் எழுதினார். “மகாராஷ்ரத்தில் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து பிரிந்ததில் இருந்து அமலாக்கத் துறை சட்ட முகமைகள் மூலமாக சிவசேனையின் முக்கிய தலைவர்கள் திட்டமிட்டு குறிவைக்கப்படுகிறார்கள். ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அமலாக்கத் துறை போன்ற மத்திய அரசின் முகமைகள் மூலம் அரசியல்ரீதியாக தாக்கப்படுகின்றனர்.” இந்தக் கடிதத்தை எழுதிய சில வாரங்களிலேயே ராவத் அமலாக்கத் துறையால் கைது நடவடிக்கைக்கு உள்ளானார். சிவசேனையை அடுத்து அங்கே இப்போது பிளவைச் சந்திருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களும் அமலாக்கத் துறையின் விசாரணைப் பார்வையில் சிக்கியிருந்தவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
• 2023, மார்ச் 24 அன்று நாட்டினுடைய 14 அரசியல் கட்சிகள் காங்கிரஸ் தலைமையில் உச்ச நீதிமன்றத்தின் முன் ஒரு மனுவை சமர்பித்தன. பாஜகவுக்கு எதிராக இருக்கும் கட்சிகளை ஒடுக்குவதையும், அவர்களைச் செயல்படவிடாமல் தடுப்பதையும் இலக்காக வைத்து, புலனாய்வுத் துறையையும் அமலாக்கத் துறையையும் மோடி அரசு ஏவிவருகிறது. இப்படியான நடவடிக்கைக்கு உள்ளாகும் தலைவர்கள் பாஜகவுடன் சமரசம் ஆகிவிட்டால் அந்த வழக்குகள் அப்படியே கைவிடப்பட்டுவிடுகின்றன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரின.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க எடுத்துக்கொள்ள மறுத்தாலும், மிக முக்கியமாக ஒரு விஷயத்தை நாட்டு மக்கள் முன் இந்த மனு கொண்டுவந்து நிறுத்தியது. 2021-22 நிலவரப்படி, புலனாய்வுத் துறை மற்றும் அமலாக்கத் துறையால் விசாரிக்கப்படும் அரசியல் தலைவர்களில் 95% பேர் எதிர்க்கட்சியினர்.
அமலாக்கத் துறை மீதான நாடு தழுவிய விமர்சனங்களில் இரு தலைவர்களின் கருத்துகள் மிக முக்கியமானவை.
முதலாமவர், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல். “அஸ்ஸாம், குஜராத், உத்தர பிரதேசத்துக்கோ அல்லது உத்தரகாண்ட், ஹரியானா, மத்திய பிரதேசத்துக்கோ ஏன் அமலாக்கத் துறை செல்வதில்லை? இந்த மாநிலங்களில் ஊழல் வழக்குகள் இல்லையா அல்லது இந்த மாநிலங்களில் எல்லாம் பாஜக ஆட்சிக்கு வந்ததுமே ஊழல் ஒழிந்துவிட்டதா? உண்மையில் இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக அல்லாத மாநில அரசுகளுக்கு எதிரான தாக்குதல்!”
இரண்டாமவர், கேரளத்தின் முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக். “எங்கெல்லாம் பாஜகவால் மாற்றுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முடியவில்லையோ அங்கெல்லாம் புலனாய்வுத் துறை அல்லது அமலாக்கத் துறையை ஏவி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளையும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளையும் சீர்குலைக்கிறது பாஜக!”
• 2023, மே மாதம் உச்ச நீதிமன்றம் முக்கியமான ஒரு கருத்தைத் தெரிவித்தது. “அமலாக்கத் துறை தன் மீது சாமானிய மக்கள் நம்பிக்கை கொள்ளும்படி நடந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நியாயமாக நடத்தப்படும் சோதனைகளைக்கூட மக்கள் சந்தேகப்படக் கூடும். எப்போதும் அச்சத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்காதீர்கள். எல்லோருமே குற்றவாளிகள் அல்ல. ஒரு நடவடிக்கைக்கு முன்னர் அங்கே ஏற்கெனவே குற்றம் நடந்ததை உறுதிசெய்துகொண்டு களம் இறங்குங்கள்!”
அமலாக்கத் துறையின் அத்துமீறல்களுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அரசு தொடர்ந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம் இப்படிக் குறிப்பிட்டது. சத்தீஸ்கர் மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சத்தீஸ்கரைச் சேர்ந்த அதிகாரிகள் 52 பேர் தாங்கள் அமலாக்கத் துறையால் அரசுக்கும் முதல்வருக்கும் எதிராக சாட்சியம் அளிக்கும்படி வற்புறுத்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்” என்று உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
தேர்தல் வியூகம்
தமிழகத்தை ஆளும் திமுகவின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி அமலாக்கத் துறையின் விசாரணை வட்டத்தில் கொண்டுவரப்பட்டபோது திமுக மீதான பாஜக குறியின் நோக்கம் துலக்கமாகவே வெளிப்பட்டது. அப்போதுதான் ஆளும் பாஜகவுக்கு எதிரான கூட்டணிக் கட்சிகளின் பிரமாண்ட கூட்டம் பெங்களூருவில் நடந்தது. தம்முடைய கூட்டணிக்கு, ‘இந்தியா’ எனும் பெயரை அவை சூட்டின. அப்போதுதான் பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை பிரதமர் மோடியும் டெல்லியில் கூட்டியிருந்தார். தேசிய ஊடகங்களில், இந்த மூன்று செய்திகளும் மாறி மாறிச் சென்றன. மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணி தொடர்பில் தெரிவித்த கருத்தானது, ஒட்டுமொத்த காட்சிகளையும் மக்கள் ஒருங்கிணைத்துப் பார்க்க உதவியாக இருந்தது. “எதிர்க்கட்சிகள் அனைவரையும் ஒன்றாகப் பார்க்கும்போது பல்லாயிரம் கோடி ஊழல்தான் மக்கள் கண்முன் வரும்” என்றார் மோடி. வரவிருக்கும் தேர்தலில், எதிர்க்கட்சிக் கூட்டணியை முடக்க அதன் மீது இரு முத்திரைகளை மோடி குத்துகிறார். “இவையெல்லாம் குடும்ப அரசியலில் திளைப்பவை; ஊழலில் திளைப்பவை. நான் ஊழலுக்கு எதிரானவன்!”
ஐந்து கண்ணிகள்
எதிர்க்கட்சிக் கூட்டணியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தமிழக முதல்வர் ஸ்டாலின், “எடப்படி பழனிசாமியைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு ஊழலைப் பற்றி மோடி பேசலாமா?” என்று கேட்டதோடு, “திமுக துணிச்சலாக அமலாக்கத் துறையைச் சட்டரீதியாக எதிர்கொள்ளும்” என்று வழக்கம்போல பாஜகவுக்கு எதிர்வினை ஆற்றினார். என்றாலும், திமுகவைச் சுற்றி விரிக்கப்படும் இந்த வலை சாதாரணமானது அல்ல. அமலாக்கத் துறை வழியிலான நடவடிக்கை ஐந்து கண்ணிகளை அமைக்கிறது பாஜக.
- தலைவர்களில் யாரையெல்லாம் தட்டினால் ஏனையோர் அச்சம் கொள்வார்களோ அவர்களைக் குறிவைத்து அடித்து, அச்சத்தை உருவாக்குதல். உதாரணமாக, திமுக பலவீனமாக இருந்த கொங்கு மண்டலத்தில், கட்சிக் கட்டமைப்பை விஸ்தரிப்பதில் தீவிரமாகச் செயலாற்றியவர் என்பதோடு, கட்சியின் வருமானத்தோடும் பிணைந்திருந்தவர் செந்தில் பாலாஜி. பாஜக அரசுக்கும் ஆளுநருக்கும் எதிராக வெளிப்படையாக மோதியவர் பொன்முடி. ஏனையோருக்கு இது ஓர் எச்சரிக்கை.
- மக்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாகப் பார்த்துக் குறிவைத்து அடிப்பதன் மூலம் மக்களிடம் ஏற்பை உருவாக்குதல். செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரின் துறைகளுமே அதீதமாக லஞ்ச - ஊழல் பேச்சுகளில் சிக்கியுள்ளன. குறிப்பாக, பணி நியமனங்கள், பணி மாறுதல்களுக்கு முந்தைய ஆட்சியைக் காட்டிலும் அதிகமாகப் பணம் கேட்கப்படுவதான குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட துறை ஊழியர்களிடமே இருந்தது. இப்படியானவர்களை நடவடிக்கை வலைக்குள் கொண்டுவருவதன் மூலம் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு மக்களிடம் ஏற்பை உருவாக்க முற்படுகிறது பாஜக.
- பிராந்தியரீதியாக ஆட்களைக் குறிவைத்தல். இதன் மூலம் கட்சியைப் பிராந்தியரீதியாகப் பலவீனப்படுத்துதல்.
- தொடர்ச்சியாகப் பேச்சுகளை உருவாக்கி ஆளும் அரசு மீது ஊழல் கதையாடலை உருவாக்குதல். இத்தகைய நடவடிக்கைகளின்போது வெளிப்படும் விஷயங்களை இதற்குப் பயன்படுத்துதல். உதாரணமாக, செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு வருவதில் ஏற்படுத்தும் தாமதம் அல்லது பொன்முடியின் வீட்டில் கைபற்றப்பட்ட கணக்குக்கு அப்பாற்பட்ட பணம் இவையெல்லாம் தொடர்பில் மக்களிடம் தொடர்ந்து கிசுகிசுக்களையும் ஆளுங்கட்சி மீதான குற்றச்சாட்டுகளையும் பரப்ப முடியும். சமூக வலைதங்கள் இது போன்ற தீனிக்காகவே காத்திருக்கின்றன. ஆளும் அரசு ஊழலானது என்று மெல்ல கதையாடலை உருவாக்குகிறது பாஜக.
- கட்சியின் கண்ணியத்தை ஒட்டுமொத்தமாகக் களங்கப்படுத்துதல். முந்தைய அதிமுக அரசின் ஊழலைப் பேசுபொருளாக்கித்தான் இந்த முறை ஆட்சிக்கு வந்தது திமுக. ஒரு நல்ல நிர்வாகத்தைத் தர ஸ்டாலின் விரும்புகிறார் என்ற தோற்றம் இன்றும் முதல்வர் மீது இருக்கிறது. அமைச்சர்களைக் களங்கப்படுத்துவதன் மூலம் செதில் செதிலாகக் கட்சியின் கண்ணியத்தைப் பெயர்க்க முற்படுகிறது பாஜக.
எப்படி எதிர்கொள்ள வேண்டும் திமுக?
மத்திய அரசின் அமைப்புகள் என்ன குற்றச்சாட்டுகளையும் முன்வைக்கலாம்; ஜனநாயகத்தில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதே ஆட்சியாளர்களுக்கான உண்மையான உரைகல். ஊழலே இல்லாத அரசாங்கம் என்ற அதீத கற்பனையில் இன்று இந்திய மக்கள் யாரும் இல்லை. ஆனால், ஒரு மேம்பாலக் கட்டுமானப் பணி ஒதுக்கீட்டுக்காக அந்த ஒப்பந்ததாரரிடம் பேசப்படும் பேரத்துக்கும்; பல ஆண்டுகள் படித்து, கஷ்டப்பட்டு தேர்வெழுதி, அரசுப் பணி நோக்கி நகர்ந்துவரும் ஓர் ஏழை இளைஞரிடம் பணி நியமனத்துக்காகப் பேசப்படும் பேரத்துக்கும் இடையில் பெரும் வேறுபாடு இருக்கிறது. தன்னுடைய தேவையின் நிமித்தம் எப்போதாவது அரசை நோக்கிச் செல்லும்போது அங்கே தன்னிடம் பணம் பறிக்கும் எவரையும் மோசமான மக்கள் விரோதியாகவே மக்கள் பார்க்கிறார்கள்.
இன்றைக்கு புலனாய்வுத் துறை அல்லது அமலாக்கத் துறை எப்படி ஒன்றியத்தை ஆளும் கட்சியின் அரசியல் தாதாக்கள் ஆகிவிட்டன என்பது ஒரு தேசிய பிரச்சினை. அரசியலில் குறிப்பாக மாநில அரசுகளை இந்த அமைப்புகள் எவ்வளவு துச்சமாக நடத்துகின்றன என்பதை நாடு தழுவிய விவாதமாக உருவாக்குவதும், இதற்கு எதிராக நாடு தழுவிய எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டங்களை நடத்துவதும் ஒரு முக்கியமான நடவடிக்கை. இதைத் தாண்டி தன்னுடைய கட்சி நிர்வாகிகளையும் கட்டுப்பாட்டு எல்லைக்குள் கொண்டுவர வேண்டியது தார்மீகரீதியாக எதிர்க்கட்சிகள் எடுக்க வேண்டிய இன்னொரு முக்கியமான நடவடிக்கை.
பாஜகவின் அடாவடிகளுக்கான நியாயப்பாட்டை ஒருபோதும் தம்முடைய தவறுகளால் எதிர்க்கட்சிகள் உருவாக்கிவிடக் கூடாது!
-‘குமுதம்’, ஜூலை, 2023
தொடர்புடைய கட்டுரைகள்
செந்தில் பாலாஜி: திமுகவை இழுக்கும் சுழல்
மொத்த கனத்தையும் ஒரு ஸ்டாலின் சுமக்க முடியாது
தேசிய ஊழலை மறைக்கவே சிசோடியா கைது
1,76,000,00,00,000: ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!
இந்துத்துவம் ஒரே இந்துத்துவம்தான்
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.