சமஸ் கட்டுரை 3 நிமிட வாசிப்பு

வேலையைத் தொடங்கினோம்

சமஸ் | Samas
22 Sep 2021, 12:00 am
0

நான் ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து வெளியேறி தனித்து இயங்கும் முடிவை எடுத்த கதை சுவாரஸ்யமானது. இரண்டு ஆண்டுகள் இருக்கும். நானும் நண்பர் திரு.பாலசுப்பிரமணியனும் வழக்கம்போல ஒரு உணவு விடுதிக்குச் சென்றிருந்தோம். 

திடீரென்று பாலு கேட்டார். “நீங்கள் ஏன் தனியாக ஒரு பத்திரிகையைத் தொடங்கக் கூடாது?” நான் கேட்டேன், “அது என்ன சாதாரண காரியமா?” பாலு சொன்னார், “அது சாதாரண காரியம் அல்ல என்று எனக்கும் தெரியும். ஆனால், உங்களால் அது முடியும். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சாமானிய மக்களை மையப்படுத்தி எழுதும் உங்களை ஆத்மார்த்தமாக நேசிக்கும் ஒரு தனி வாசகர் கூட்டம் இங்கே இருக்கிறது! அப்புறம் மருத்துவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள் என்று எவ்வளவோ தரப்பினருக்கு நீங்கள் ஒரு ஊடக முகமைபோலச் செயல்பட்டுவருகிறீர்கள்; சமூகத்தில் ஒவ்வொரு தரப்பின் பிரச்சினைகளும் பேசப்பட உங்களைக் கருவிபோல ஆக்கிக்கொண்டிருக்கிறீர்கள்; நீங்கள் தனித்து இயங்கும்போது இன்னும் சுதந்திரமாகவும், வீரியமாகவும் செயல்பட முடியும். நீங்கள் வெளியே வந்த பின் தனிமனிதனாக இருக்க மாட்டீர்கள். சமூகத்தின் பிரதிநிதியாக இருப்பீர்கள்.” 

பாலு இன்னும் விரிவாகப் பேசலானார். இட்லி வடை சாப்பிடப்போன இடத்தில் சம்பந்தமே இல்லாமல், ஒரு மனிதர் இப்படித் தீர்க்கமாகப் பேசலானது சாதாரணமான பேச்சாகத் தெரியவில்லை. அது ஓர் அழைப்பு என்று என் உள்ளுணர்வு சொன்னது. உள்ளுணர்வை ஆழமாக நம்புபவன் நான். 

இந்த இடத்தில் பாலுவைப் பற்றியும் சொல்ல வேண்டும். சாதாரண குடிமகன், ஓய்வூதியர் என்று தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொள்வார். அபாரமான வாசகர்; பெரும் சமூக அக்கறை கொண்டவர். எந்த பிரதிபலனும் இல்லாமல், சமூகத்தின் நற்காரியங்களில் தன்னை இணைத்துக்கொள்பவர். ஒரு மார்க்ஸிஸ்ட். 

இந்திய கம்யூனிஸ்ட்டுகளைத் தீவிரமாக விமர்சித்து நான் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் என் எழுத்து பாலுவுக்கு அறிமுகம் ஆகிறது. தொடர்ந்து வாசிக்கிறார். இதற்குப் பின் என்னுடைய நண்பர் ஆகிறார். அதாவது, தான் நம்பும் தத்துவத்தையும், இயக்கத்தையும் விமர்சித்து எழுதுபவனை நேசிக்கலாகிறார். 

அடிக்கடி ‘தீக்கதிர்’ பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று வருபவர் பாலு. ஆகையால், சிறியதோ, பெரியதோ ஒரு பத்திரிகை நடத்துவதன் சகல வலிகளும் அவருக்குத் தெரியும். அவர்தான் சொல்கிறார், ‘நீங்கள் வெளியே வாருங்கள், வாசகர்கள் துணை நிற்பார்கள்!’ இதோடு அவர் முடித்துக்கொள்ளவில்லை. இதற்குப் பின் அவர் பேசிய விஷயங்கள் விரிவாக எழுதப்பட வேண்டியவை. இன்னொரு நாளில் அதை எழுதுகிறேன். 

ஈரோடு சென்றிருந்தபோது மருத்துவர் ஜீவாவிடம் இதைச் சொன்னேன். ‘யாருங்க அந்த பாலசுப்பிரமணியம்? எங்களை எல்லாம் முந்திக்கிட்டார்… எதுவும் யோசிக்காதீங்க, துணிஞ்சு வந்துருங்க!’ என்றார். அதுபற்றி நிறையப் பேசினார்.

அன்று விடைகொடுத்துவிட்டு காரில் ஏறியவர் திரும்ப இறங்கி வந்து என் கையைப் பிடித்துக்கொண்டு சொன்னார், ‘ஈரோட்டுலேர்ந்து இந்தச் செய்தியை எடுத்துட்டுப்போங்க. நான் எவ்வளவோ காரியங்கள் செஞ்சுருக்கேன்னா எனக்கு அதுக்கான தகுதிகள்லாம் இருக்குறதா நெனைச்சு நான் செய்யலை. இந்தச் சமூகத்துல ஒரு தேவை இருக்கு. அது நமக்குத் தெரியுது. செய்யுறோம். பெரியார் சொன்னது இது. அவரே இன்னைக்கு சொல்றதா நெனைச்சுக்குங்க. இனி ஆயிரம் பேருகிட்டகூட ஆலோசனை கேளுங்க, எப்படி இதைச் செய்யலாம்னு; ஆனா செய்யலாமா, வேணாமாங்கிற யோசனையை விட்டுடுங்க. ஒரு பழங்குடி சமூகப் பையன் மாடு மேய்ச்சுக்கிட்டிருக்கான்; நல்ல மார்க் வாங்கியிருக்கான்; இடஒதுக்கீடு கிடைச்சா அவன் காலேஜ் போவான், இல்லைன்னா திரும்ப மாடு மேய்க்கப்போவான்னு அரைப்பக்கத்துக்கு தலையங்கப் பக்கத்துல போட்டீங்களே; இது என்னைக்கு எந்தப் பத்திரிகையில நடந்துருக்கு; ஏழைச் சொல் என்னைக்கு இவ்வளவு பெரிய அம்பலத்துல ஏறியிருக்கு? நீங்க எங்களுக்கு வேணும். சுதந்திரமா செயல்படுங்க. தயங்கவே தயங்காதீங்க!’

அதுதான் ஜீவாவுடனான கடைசி சந்திப்பு. தன்னுடைய மரணத்துக்கு இரண்டு நாட்கள் முன் செல்பேசியில் அழைத்தார். ‘எப்போ வெளியே வரப்போறீங்க?’ ‘ஜூன்ல வந்துடுறேன் டாக்டர்!’ ‘தமிழ் உங்கக்கிட்டேருந்து நிறைய எதிர்ப்பார்க்குது. சமூகம் நமக்குன்னு சில காரியங்களை விதிக்குதுன்னா அதுலேர்ந்து நாமே தப்பிக்கவே முடியாது. வந்துடுங்க!’

உணவுக்கடை தொடங்குவதுபோல ஒரே நாளில் உற்பத்தியையும், விநியோகத்தையும் பத்திரிகையில் தொடங்கிட முடியாது. வாசகர்களுக்கு நல்ல விஷயங்களைத் தொடக்க நாள் முதல் கொடுக்க வேண்டும் என்றால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். முந்தைய பணி அனுபவங்களிலிருந்து விடுபட்டு புதிய பாணி ஒன்றுக்குப் பத்திரிகையாளர்கள் தயாராக வேண்டும். முக்கியமாக இணையதளம் செயல்படத் தொடங்கும் வேகத்தில் உருவாகும் சிக்கல்களைக் களைந்து படிப்படியாக மேம்படுத்தி, செம்மையாக்கப்பட்ட ஒரு வாசிப்பனுபவத்தை நம்மைத் தேடிவரும் வாசகர்களுக்குத் தர வேண்டும். 

முன்னரே நான் கூறியபடி, ஆகஸ்ட் 22 என் மனதுக்கு மிக நெருக்கமான நாள். தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்துவைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டால் இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையின் கொண்டாட்ட நாளும்கூட இது. 

இன்றைய நாளில் புதிய பத்திரிகையின் பணியைத் தொடங்கியிருக்கிறோம். இன்று முதல் அன்றாடம் பத்திரிகை வெளியாகும் என்றாலும், ஒரு சிறு நண்பர் குழுவின் பார்வைக்கு மட்டுமே அது காணக் கிடைக்கும். தன்னுடைய முதல் சத்தியாகிரகத்தை காந்தி தொடங்கிய நாளும், பாரதியின் நூற்றாண்டு நினைவு நாளுமான செப்டம்பர் 11 அன்று எல்லா வாசகர்களின் பார்வைக்கும் பத்திரிகை கிடைக்கும்.

இன்று காலை நண்பர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்கள் இணையதளத்தை முறைப்படி வெளியிட்டார். ‘சாதாரண மனிதர்களால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு, ‘முடிந்தவரை செய்து பார்ப்போம்’ என்ற எளிமையான பதிலையே வரலாறு வைத்திருக்கிறது. "நாம் எல்லோருமே முடிந்தவரை செய்து பார்க்க வேண்டியவர்கள்தான். விளைவு சிறியதோ, பெரியதோ, உண்மையான உழைப்புதான் இப்படி செய்துபார்க்க அவசியமானது" என்று சொல்வார் என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன். நம்மாலானதைச் செய்து பார்ப்போம்!

- 2021, ஆகஸ்ட் 22, முகநூல் பதிவு

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

காந்தியமும் இந்துத்துவமும்சுபஜீத் நஸ்கர் கட்டுரைமதுபான விற்பனைகூகுள் பிளே ஸ்டோர்கொய்மலர்ப் பண்ணைசாவர்க்கர் அந்தமான் சிறைசத்ரபதி சிவாஜிமோடியின் தேர்தல் காலத்தில் நேருவின் நினைவுகள்விற்கன்ஸ்ரைன் - நூல் விமர்சனம்காலத்தின் கப்பல்மாய குடமுருட்டிவாசிப்பு அனுபவம்வாசகர்சமத்துவபுரங்கள்மு.க.ஸ்டாலின் கட்டுரைபொரு:ளாதாரம்கூட்டுறவு கூட்டாச்சிசுயமரியாதை இயக்கம்கலைஞர் மு கருணாநிதிமாலி அல்மெய்டாமலக்குழி மரணங்கள்ஜன தர்ஷன்கேஸ்ட்ரொனொம்பி.ஏ.கிருஷ்ணன் கட்டுரைமுடியாதா?பாராசூட் தேங்காய் எண்ணெய்இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம்எந்தச் சட்டம்வாழைஇந்தியா - பாகிஸ்தான் பிரிவினை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!