புதிய அலுவலகத்தில் இன்று குடிபுகுந்தோம்.
தேடியபடி ஓர் இடம் கிடைப்பதில் சிரமம் இருந்தது. இந்த இடம் பார்த்தவுடன் பிடித்தது. பிடித்த கையோடு உள்ளே வந்தாயிற்று. இடம் பார்த்துக்கொடுத்த நண்பர், "அஷ்டமி நவமி ஆயிற்றே! செப்.15 அன்றைக்கா பால் காய்ச்சப்போகிறீர்கள்?" என்றார். "கல்யாணத்தையே 'கரி நாள்' அன்று செய்தவன் நான்" என்று சிரித்தேன்.
கடவுளால் அளிக்கப்படும் ஒவ்வொரு நாளுமே நல்ல நாள்; நம்முடைய வசதியும், தனிப்பட்ட நம்பிக்கைகளும்தான் முக்கியமே தவிர, வெளியிலிருந்து வரும் பஞ்சாங்க வழிமுறைகள் அல்ல என்பது என் நம்பிக்கை. காந்திக்கு அடுத்து நான் அதிகம் நேசிக்கும் ஆளுமையான அண்ணா பிறந்த நாளும் இது என்பது கூடுதல் விசேஷம்.
நண்பர்கள் "செப். 11 அன்று புதிய ஊடகம் பொதுவெளிக்கு வரும் என்று சொன்னீர்களே!" என்று கேட்பது காதில் விழுகிறது. அன்றாடம் அலுவல் நடக்கிறது. பெயர் அனுமதி இன்னமும் வந்தடையவில்லை; ஓரிரு வாரங்களுக்குள் வந்துவிடும்; அந்த நாளையொட்டிய காந்தி நாள் ஒன்றில் ஊடகம் உங்கள் பார்வைக்கும் வந்துவிடும்.
அருள் ஒளியே வழி காட்டு!
Ω
செப்.15 என்பதில் எந்தத் திட்டமிடலும் இல்லை; முந்தைய திட்டமிடல்கள் எதிலும் இது இல்லை; தற்செயல்தான்!
காலையில் புதிய அலுவலகத்தில் குடிபுகுந்தோம்; மாலையில் புதிய ஊடகத்துக்கான பெயர் வந்தடைந்திருக்கிறது. ஏன் இதை நான் நேசிக்கும் அண்ணாவின் ஆசி அல்லது இனிவரும் காலத்தின் தமிழ்ப் பணிக்கான அவருடைய கட்டளை என்று கருதிடக் கூடாது?
நான் வணங்கும் காந்தி மட்டும் அல்ல; நேசிக்கும் அண்ணாவும் தீவிரமான பத்திரிகையாளர். அறிவை ஆயுதமாக மக்களுக்குக் கையளித்த ஜனநாயகர். தான் நேசித்த தமிழ் மக்களோடு இறுதி நாட்கள் வரை எழுத்தின் வழி உரையாடியவர். தமிழ் இதழியலின் முக்கியமான முன்னோடிகளில் ஒருவரான அண்ணா பிறந்த நாளில் இந்தப் பெயர் வந்தடைந்தது சூட்சமமாக சில செய்திகளை உள்ளடக்கியிருப்பதாக உணர்கிறேன். 'தமிழ் மக்களின் உறுதியான குரலாகச் செயல்படும்' என்ற உத்தரவாதத்தோடு புதிய ஊடகத்தின் பெயரை நண்பர்களுக்குப் பகிர்கிறேன்: அருஞ்சொல்!
2021, செப்டம்பர் 15, காலை, மாலை முகநூல் பதிவுகள்
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.