இடங்களுக்குப் பெயர் மாற்றுவது ஆட்சியாளர்களுக்கு ஒரு விளையாட்டு. முழுக்கவும் அர்த்தமற்ற விளையாட்டு என்று அதைக் கூறிவிட முடியாது. இந்தியா சுதந்திரம் அடைந்த கையோடு ஏராளமான விஷயங்கள் பெயர் மாற்றம் கண்டன. இந்தியாவின் குடியரசுத் தலைவர் பதவியும், அவருடைய மாளிகையும்கூட பெயர் மாற்றம் கண்டவைதான். முன்னதாக வைஸ்ராயாக அங்கிருந்தவர் இருந்தார். வைஸ்ராய் ஹவுஸ் ஆக அது இருந்தது. மாளிகையாக இருந்தது அது.
பெயர் மாற்றத்தோடு பெரும் பண்பு மாற்றமும் நடக்கிறது. இந்தியாவைக் காட்டிலும் பிரிட்டன் பல மடங்கு ஜனநாயகம் நிறைந்த நாடு. ஆயினும், அரசமைப்பின்படி இன்னமும் முடியாட்சி நாடு. பிரிட்டனோடு, இந்தியாவைப் போலவே பிரிட்டனின் காலனி நாடுகளாக இருந்து சுதந்திரம் பெற்ற நாடுகளான கனடா, ஆஸ்திரேலியா தொடங்கி ஜமைக்கா, துவளு வரை 15 நாடுகளுக்கு அரசத் தலைவராக பிரிட்டிஷ் அரசர் இன்னமும் நீடிக்கிறார். இந்தியா குடியரசுத் தலைவர் பதவியை உருவாக்கியபோது, பழைய பதவிகளின் பெயர்களோடு பிரிட்டனுக்கும் இந்தியாவுக்குமான காலனிய சங்கிலியை முழுமையாகவே அறுத்துவிட்டது.
நாட்டின் முதல் பிரதமரான நேரு புதிய தேசம் செல்ல வேண்டிய பாதையைப் பல விஷயங்களிலும் குறியீட்டுரீதியாக உணர்த்த முற்பட்டார். பிற்காலத்தில் ‘தீன் மூர்த்தி பவன்’ என்று அழைக்கப்படலான முதல் பிரதமரின் இல்லம் முன்னதாக ‘ஃப்ளாக் ஸ்டாப் ஹவுஸ்’ என்று அழைக்கப்பட்டது. அதுதான் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியின் (கமாண்டர் இன் சீஃப்) இல்லமாக இருந்துவந்தது. பிரதமர் நேரு தன்னுடைய இல்லமாக அதைத் தேர்ந்தெடுத்தபோது தெளிவான சமிஞ்கை அதில் இருந்தது. நாட்டின் முடிவுகளைத் தீர்மானிப்பதில் ராணுவத் தலைவரின் செல்வாக்கு மட்டுப்படுத்தப்பட்டு, அரசியல் தலைவரின் செல்வாக்கு மேலோங்குவதைச் சுட்டுவதானது அது.
இத்தகைய சுட்டல்கள் டெல்லி சாலைகளின் பெயரையும் விட்டுவைக்கவில்லை. பிரிட்டிஷார் 1911இல் நாட்டின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றினர். சாம்ராஜ்ஜியத்தை ஆள டெல்லிக்குள் தங்கள் பாணியில் ஒரு நிர்வாகத் தலைநகரை உருவாக்கினர். கட்டுமானர் லூட்டியன்ஸ் நிர்மாணித்த அதன் முகமாக வைஸ்ராய் மாளிகை அமைந்தது. அதை நோக்கிய சாலைக்கு ‘கிங்க்’ஸ் வே’ என்றும் அதைக் குறுக்காக வெட்டிச் செல்லும் சாலைக்கு ‘குயின்’ஸ் வே’ என்றும் பெயரிட்டனர். முன்னதாக, தலைநகர மாற்றத்தின்போது பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜ், அரசி மேரி இருவரும் டெல்லி வந்து சென்றிருந்தனர். தலைநகர மாற்ற முடிவையும் அறிவித்ததோடு, புதிய நகர நிர்மாணத்துக்கு அவர்களே அடிக்கல் நாட்டினர். இதை நினைவுகூரும் வகையிலேயே இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டன.
நாட்டின் தலைமைச் சாலைகள்போல அமைந்துவிட்ட இந்த இரு வீதிகளுக்கும் நேரு புதிய பெயர்களையும், அர்த்தங்களையும் உண்டாக்கினார். ‘ராஜ்பத்’ என்றும் ‘ஜன்பத்’ என்றும் இந்த பெயரிட்டது. குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கிச் செல்லும் ‘ராஜ்பத்’ சாலை அரசின் பாதை என்றும் அதனூடாகக் குறுக்கிடும் ‘ஜன்பத்’ சாலை ஜனங்களின் பாதை என்றும் பொருள்பட்டது. அரசின் பாதையில் மக்களின் இடையீட்டையும் பங்கேற்பையும் சுட்டுவதாக இந்தப் பெயர் மாற்றம் அமைந்தது. குடியரசு தின விழாக்கள் அணிவகுப்புகள் நடக்கும் சாலையாகவும் ‘ராஜ்பத்’ ஆனது.
காந்தி மறைவுக்குப் பின் ஏரியூட்டப்பட்ட இடத்தில் அவருக்கு நினைவகம் கட்டப்பட்டபோது அதற்கு ‘ராஜ் காட்’ என்று பெயர் சூட்டப்பட்டது. ‘ராஜ் காட்’ என்பதை இப்படி அர்த்தப்படுத்தலாம், ‘அரச தடம்’. அதாவது, ‘இந்த அரசும் மக்களும் நாடும் சென்றடைய வேண்டிய கரை - ஒழுக வேண்டிய பாதை’ என்பதாக அது அமைந்தது.
காந்தி நினைவிடத்தின் பெயரிலிருந்து பார்த்தால் குடியரசுத் தலைவர் மாளிகையின் பெயரும், இரு சாலைகளின் பெயர்களும் எல்லாமே ஒன்றோடு ஒன்று இணைந்தாக, பிரிக்க முடியாத ஒரு பந்தத்தைக் கொண்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
நேரு மாதிரியே அவர் காலத்திலும், அவருக்குப் பிந்தைய காலத்திலும் ஏராளமான ஆட்சியாளர்கள் ஏராளமான பெயர் மாற்றங்களைச் செய்தனர். எல்லாமே அரசியல் அர்த்தப்பாட்டோடு பிணைந்தவை. பல நகரங்களின், கிராமங்களின், தெருக்களின் பெயர்கள்கூட மாறிக்கொண்டே இருக்கின்றன. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இப்படியான பெயர் மாற்றங்கள் கூடுதல் வேகம் பெற்றன. அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தின் பண்புக்கேற்ப இந்தப் பெயர் மாற்றங்களில் மதம் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. பிரிட்டிஷார், முகலாயர்களோடு பிணைந்திருந்த பெயர்கள் இந்த மாற்றப் பட்டியலில் முக்கிய இடம்பெற்றன. முதலில் உண்டான அதிர்வுகள் பிற்பாடு அற்றுப்போயின. இது ஒரு வழக்கமாகவே ஆனது.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
26 Aug 2022
விதிவிலக்காக நாடாளுமன்றம்சூழ் சுற்றுப்புற வளாகத்தை விஸ்தரிக்கும் ‘சென்ட்ரல் விஸ்டா’ பணியின் ஒரு பகுதியாக மேம்படுத்தப்பட்ட ‘ராஜ்பத்’ சாலை சில நாட்களுக்கு முன் ‘கர்த்தவ்யபத்’ (கடமையின் பாதை) என்று பெயர் மாற்றம் கண்டபோது வழக்கத்துக்கு மாறான அதிர்ச்சியைத் தேசமே உணர்ந்தது. “காலனிய அடிமைச் சின்னமாகவே ராஜ்பத் எனும் பெயர் நீடித்தது; கர்த்தவ்யபத் ஒரு புதிய கலாச்சாரத்தின் ஆரம்பம்” என்று இதற்கு விளக்கம் கொடுக்க முயன்றார் பிரதமர் மோடி. வரலாற்றில் தன் பெயரைப் பதிக்கும் விதமாகவே புதிய நாடாளுமன்றத்துக்கு அடிக்கல் நாட்டினார் மோடி; அதோடு சேர்ந்து நாடாளுமன்ற விஸ்தரிப்புக்கும் திட்டமிடுகிறார்; அரசமைப்புச் சட்டத்தில் கை வைக்கும் வேட்கையும் இந்த அரசுக்கு உண்டு; இவையெல்லாம் நடந்தேறினால் இந்தியக் குடிமக்களிடம் இந்த அரசு எதிர்பார்க்கும் பண்பை வரையறுப்பதாகவே இந்தப் பெயர் மாற்றம் அமைந்திருக்கிறது என்று பேசலானது டெல்லி. ராஜ்பத்தும் ஜன்பத்தும் ஊடாடும் இடம் இன்னொரு செய்தியையும் உணர்த்திவந்தது. ஜனங்களின் பாதையிலிருந்தே அரசின் பாதை உருவாகிறது; அது ஒவ்வொரு குடிநபருடைய உரிமையையும், அதிகாரத்தையும்கூட குறிப்பதாக இருந்தது. அது நேருவிய சிந்தனை. கடமை மட்டும் செய் என்கிறது மோடியிய சிந்தனை என்கிறார்கள்.
காந்தியின் ராஜ்காட்டிலிருந்து பார்க்கும்போது ராஜ்பத் மட்டும் காணாமல்போகவில்லை!
-‘குமுதம்’, செப்டம்பர், 2022
தொடர்புடைய கட்டுரைகள்
தேசிய அடையாளங்களை ஏன் மாற்றுகிறார் மோடி?
புதிய நாடாளுமன்றத்தில் ஒளி எங்கே
இந்திய நாடாளுமன்றம் எப்படி விஸ்தரிக்கப்பட வேண்டும்?
3
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 1 year ago
'கவர்னர்' என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக ஆளுநர் என்று சொல்வதை மாற்றி 'விருந்தினர்நாயகம்' அல்லது 'தலையாய பார்வையாளர்' அல்லது 'ஒன்றியத் தூதர்' அல்லது 'மதிப்புறு குடிநபர்' என்று அழைக்கவேண்டும்
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.