கட்டுரை, அரசியல், வரலாறு, சமஸ் கட்டுரை 6 நிமிட வாசிப்பு

காமராஜர் அரசியலின் மையம்

சமஸ் | Samas
15 Jul 2022, 5:00 am
3

கொஞ்சம் அரதப்பழசான கதைதான்; விவாதம் இன்றைக்குமானது!

காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சியில் அமர்த்துகிறார் அண்ணா. தேர்தல் முடிவுகள் வானொலி அறிவிப்புகளாக வந்துகொண்டிருக்கின்றன. சென்னையில் உள்ள அண்ணாவின் வீடு குதூகலத்தில் இருக்கிறது. விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் சீனிவாசனால் தோற்கடிக்கப்பட்ட செய்தி வெளியானதும் வேட்டுச் சத்தம் அதிர்கிறது. கட்சிக்காரர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். கடும் கோபத்தோடு வீட்டிலிருந்து வெளியே வரும் அண்ணா, கட்சிக்காரர்களைக் கடிந்துகொள்கிறார். “உங்கள் ஆர்ப்பாட்டத்தை நிறுத்துங்கள். தோற்கக்கூடாத நேரத்தில் தோற்றிருக்கிறார் காமராஜர். இன்னொரு தமிழன் காமராஜர் இடத்துக்கு வர இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆகும். காமராஜரின் தோல்வி கொண்டாட்டத்துக்கு உரியதல்ல. அது நம்முடைய தோல்வி!”

தேர்தலில் வெற்றி பெற்று அண்ணாவிடம் வாழ்த்துப் பெற வரும் சீனிவாசனிடமும் இதையே சொல்கிறார் அண்ணா. “என்னை மன்னித்துவிடு சீனிவாசா... உன்னுடைய வெற்றி தர வேண்டிய மகிழ்ச்சியை காமராஜரின் தோல்வி தந்த வருத்தம் பறித்துவிட்டது!”

காமராஜரைப் போன்ற ஒரு தலைவர் தமிழகத்தில் மீண்டும் உருவெடுப்பது அரிது என்று எண்ணி இதை அண்ணா சொன்னாரா அல்லது தமிழ்நாட்டிலிருந்து தேசிய அளவில் காமராஜர் வகித்த இடத்துக்கு இன்னொருவர் வருவது அவ்வளவு அரிது என்று எண்ணி இதை அண்ணா சொன்னாரா?

காமராஜர் அப்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தார். காமராஜருக்கு முன்பும் சரி, பின்பும் சரி; தேசியக் கட்சிகளிலும், ஆட்சியிலும் முக்கியமான பதவிகளில் தமிழர்கள் அமர்ந்திருக்கிறார்கள். முன்னதற்கு ராஜாஜியும், சி.சுப்பிரமணியனும் உதாரணங்கள் என்றால், பின்னதற்கு ப.சிதம்பரமும், நிர்மலா சீதாராமனும் உதாரணங்கள். ஆயினும் இவர்கள் எவரையும் காமராஜரின் உயரத்தோடு தமிழக மக்கள் ஒப்பிடுவதில்லை. இத்தனைக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் கொள்கைகளை வகுப்பதில் பிரதான இடம் நோக்கி நகர்வதற்கான சாத்தியம் இவர்களுக்கு இருக்கவே செய்தது. குறிப்பாக, ராஜாஜியும் சிதம்பரமும் கட்சியின் சித்தாந்தங்களை வடிவமைப்பதிலேயே பெரும் செல்வாக்கோடு திகழ்ந்திருக்கிறார்கள். ஆயினும், காமராஜரின் இடம் தனித்துவமானது. ஏன்?

அதிகம் பேசாதவரான காமராஜர், தன்னுடைய சொந்த மக்களின் அபிலாஷைகளுக்கு அரசியலில் முன்னுரிமை அளித்தவர். ஏனையோர் தங்கள் அரசியலுக்கான சக்தியைக் கட்சித் தலைமையுடனான நெருக்கத்தின் வழிப் பெற்றார்கள்; காமராஜர் கீழே பெரும் மக்கள் பரப்பிடமிருந்து அந்தச் சக்தியைப் பெற்றதால், ஏனையோரைப் போல டெல்லி சார்ந்து தன் சிந்தனையைக் கட்டமைத்துக்கொள்ளாமல், தமிழகத்திலிருந்து கட்டமைத்துக்கொண்ட தன்னுடைய சிந்தனையை டெல்லிக்கு அளித்தார்.

காமராஜரின் பார்வையை வெறுமனே நடைமுறை அரசியல் சார்ந்து சுருக்கிட முடியாது. ‘காங்கிரஸை ஒழிப்பேன்’ என்று சொல்லி அதிலிருந்து வெளியே வந்த பெரியார், காமராஜரைத் தலையில் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்ததையும், நேருவின் நம்பகமான தளகர்த்தர்களில் ஒருவரான காமராஜர், பெரியாரின் பல செயல்திட்டங்களை அமலாக்குபவராக இருந்ததையும் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்வது?

சுதந்திர இந்தியாவின் ஏனைய பல மாநிலங்கள் தொழில்கள் - பொருளாதாரக் கட்டமைப்பில் பிரதான கவனம் அளித்துவந்த நாட்களில், கூடவே கல்வி, சுகாதாரம் என்று சமூக நலக் கட்டமைப்பிலும் தனிக் கவனம் செலுத்தியது தமிழ்நாடு. இன்றைக்கு நாட்டிலேயே பின்தங்கிய மாநிலங்களில் முக்கியமானதாக அறியப்படும் உத்தர பிரதேசம், அன்றைக்கு நல்ல நிர்வாக நிலையிலிருந்த மாநிலம். சுதந்திரத்துக்குப் பிந்தைய எழுபதாண்டுகளில் சமூக நீதிக் கொள்கைகள் எப்படி மாநிலங்களின் தர வரிசையை மாற்றி அமைத்திருக்கிறது என்கிற ஆய்வை விரிவாக நடத்தினால், காமராஜரின் பார்வை தமிழ்நாட்டின் கலவையான அரசியல் விழுமியங்களைக் கைக்கொண்டிருந்ததைக் கண்டறிய முடியும். திராவிட இயக்கம் பேசிய சமூக நீதி - சமூக நல அரசியல், கம்யூனிஸ இயக்கம் பேசிய பொதுவுடமை அரசியல், இதோடு தன்னுடைய காங்கிரஸின் பன்மைத்துவ அரசியல் இவையெல்லாமும் கலந்து காமராஜரின் அரசியலாக அவருடைய செயல்பாடுகளின் வழியே வெளிப்பட்டன என்று சொல்ல முடியும்.

அதிகம் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர், பொது விவாத அமர்வுகளில் பேசுவதைக் காட்டிலும் தனக்கு மனதில் பட்டதை கட்சித் தலைமையிடம் உறுதிபடப் பேசுபவர், கொள்கைகளை நடைமுறைச் செயல்பாட்டின் வழி வெளிப்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டவர் என்பதாலேயே கொள்கை வகுப்பில் காமராஜரின் தனித்துவம் வெளியே வராமலேயே போய்விட்டது. ‘சோஷலிஸமும் ஜனநாயகமும் கட்சியின் இரு கண்கள்’ என்று காங்கிரஸ் பிரகடனப்படுத்திய சென்னை ஆவடி மாநாட்டுத் தீர்மானத்தில் அவருடைய பங்களிப்புகள் என்னவென்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். சில ஆண்டுகளுக்குப் பின் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் காமராஜர் பேசிய பேச்சு தீர்க்கமாகச் சில செய்திகளைச் சொல்கிறது. 

இந்திய சோஷலிஸம் தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை புவனேஸ்வர் காங்கிரஸ் மாநாட்டில் வெளிப்படுத்துகிறார் காமராஜர். ‘மையத்தில் அதிகாரத்தை அளவுக்கு அதிகமாகக் குவிப்பதும், பலவந்தத்தைப் பயன்படுத்துவதுமானதாக இந்திய சோஷலிஸம் இருக்கக் கூடாது’ என்பவர், ‘பொதுத் துறை நிறுவனங்களும் தனியார் துறையும் கூட்டாளிகளாக இருந்து உற்பத்தியைப் பெருக்க வேண்டும்; சோஷலிஸம் என்பது சமூகத்தின் அடிப்படை நலனையும், கூடவே தனிநபரின் அடிப்படை நலனையும் ஜனநாயக முறையிலும் அதிகாரம் பரவலாக்கப்படுவதன் வழியிலும் ஒத்திசைவுபடுத்த வேண்டும்’ என்கிறார். வேலையின்மை, பசி, வறுமை, நோய் தொடர்பிலான அச்சம் குடிமக்களுக்கு ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்வதே ஒரு மக்கள் நல அரசின் கடமை என்று வரையறுக்கிறார் காமராஜர். எல்லோரையும் ஒருங்கிணைத்தபடி, சாமானிய மக்களை முன்னேற்றத்தை நோக்கி முன்னகர்த்திய அவருடைய அரசியல் வழியாகவே பார்க்கும்போது காமராஜரின் சொற்கள் கூடுதல் அர்த்தம் பெறுகின்றன.

காமராஜரைப் போற்றுவது இன்றைக்குத் தமிழகத்தில் கட்சி வேறுபாடுக்கு அப்பாற்பட்ட செயல்பாடு. தேசிய அளவில் காந்திக்குக் கிடைத்த பொதுப் பிம்பம் தமிழ்நாட்டில் காமராஜருக்கு மட்டுமே உரித்தாகி இருக்கிறது. காமராஜரை எதிர்த்து அரசியலில் வளர்ந்த திராவிடக் கட்சியினர் அவர் உயிருடன் இருக்கும்போதே அவர் மீது காட்டிய மதிப்புக்கு இதில் முக்கியமான இடம் உண்டு. இன்று காங்கிரஸ் கட்சியையே இல்லாமல் ஆக்கிவிட எண்ணும் பாஜகவும்கூட தமிழ்நாட்டில் காமராஜரின் பெயரைத் தவிர்க்க முடியாமல் உச்சரிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், வெறுமனே காமராஜர் புகழ் பாடுவதைக் காட்டிலும் சமகால அரசியலில் காமராஜரை எப்படி உள்வாங்குவது; தேசிய அரசியலில் காமராஜர் விட்ட இடத்திலிருந்து எப்படித் தொடர்வது என்று காமராஜரைப் பேசுபவர்கள் யோசிப்பது நல்லது.

காமராஜர் தொடர்பான தமிழர்களின் பெருமிதங்களில் தலையாயது அவர் ஒரு ‘கிங் மேக்கர்’ என்பது ஆகும். இதைப் பல ஆண்டுகளாக நாம் பேசிவருகிறோம். இரண்டு பிரதமர்களை உருவாக்க முடிந்த காமராஜரால் ஏன் ‘கிங்’ ஆக முடியவில்லை என்ற கேள்வியை இதன் தொடக்கப் புள்ளியாக நாம் கொள்ளலாம். நேருவின் மறைவுக்குப் பின், லால் பகதூர் சாஸ்திரியை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தியபோது காமராஜரிடம், “ஏன் நீங்கள் பிரதமராக ஆகக் கூடாது” என்று கேட்ட செய்தியாளர்களிடம் காமராஜர் கேட்ட பதில் கேள்வி இது: “இந்தி கிடையாது. ஆங்கிலமும் கிடையாது. நான் எப்படி பிரதமர் ஆவது?”

தன் உயரத்தை தாழ்த்திக்கொண்டாலும், இன்றைய பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிட ஆங்கிலம் பேசக்கூடியவர் காமராஜர். நாடாளுமன்றத்தில் அவருடைய ஆங்கில உரையைப் பாராட்டி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம் எழுதியிருக்கிறது.  ஆயினும், பிரிட்டிஷ் கல்விப் பின்னணி கொண்ட நேரு உள்ளிட்டோருடன் தன்னை ஒப்பிட்டு அவர் இதைச் சொல்லி இருக்கலாம். எப்படியும், ஆங்கிலத்தை அலுவல் மொழி என்ற இடத்திலிருந்தே அகற்ற தலைப்பட்ட அன்றைய தலைமுறை பெரும்பான்மை இந்தி தலைவர்கள் மத்தியில் இந்தியாவின் பிரதமராவதற்கு ஆங்கிலம் பெரிய தடை இல்லை. காமராஜர் மலையாளம் கற்றார். தெலுங்கு அவருக்குத் தெரியும். ஆனால், இந்தி தெரியாத ஒரு இந்தியர் பிரதமர் ஆக முடியுமா? இன்றும் ஒரு தமிழரோ, காஷ்மீரியோ, மணிப்பூரியோ பிரதமர் ஆவதற்கான சாத்தியத்தை இந்தியா கொண்டிருக்கிறதா?

தேசிய அரசியலில் காமராஜர் விட்டுச் சென்ற இடத்தைத் தொடர்வது என்பது இதுவே ஆகும்.

பல வகைகளில் காமராஜரின் தனித்துவம் எனக்குப் பிடிக்கும். தான் நம்பும் சித்தாந்தத்தின் அடிப்படையில் அதற்கென்று ஓர் அமைப்பை உருவாக்கி அதன் வழி செயல்படுவது ஒருவகை தலைமைத்துவம் என்றால், பல சித்தாந்தப் போக்குகள் கொண்ட ஒரு அமைப்புக்குள் நின்றபடி தான் நம்பும் கொள்கைகளை உறுதியாக முன்னெடுப்பது ஒருவகை தலைமைத்துவம்.

காந்தியினுடைய எளிமை, அகிம்சை, உறுதிப்பாடு இவையே காமராஜரின் அரசியலுக்கான உந்துசக்தி. ஆயினும், தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்வதில் சிக்கல் இருந்தபோது தன்னுடைய தலைவரிடமிருந்தே முரண்பட்டவர் காமராஜர். காமராஜர் வாழ்வில் நாம் பேச வேண்டிய மிக முக்கியமான சங்கதி இதுதான். காந்தியிடம் மட்டும் அல்ல; அரசியலில் அவர் மோதிய ராஜாஜி தொடங்கி இந்திரா வரை எல்லோர் மீதுமே காமராஜர் நன்மதிப்பு கொண்டிருந்தார். அதேசமயம், மக்களையும் அமைப்பையும் அணுகுவதில் அவர்கள் மாறுபட்டபோது எவர் ஒருவருடனும் முரண்படவும் அவர்களை எதிர்த்து நிற்கவும் அவர் தயங்கியதே இல்லை.

தான் சார்ந்திருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவே எந்த ஒரு மனிதரும் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். தேர்ந்தெடுக்கும் கட்சி, சித்தாந்தம், தலைமை, கிடைக்கும் பதவி, அதிகாரம் இவையெல்லாமும் அந்த நோக்கத்தைச் சென்றடையும் வழிகள். எதன் பொருட்டும் சொந்த மக்களின் நலனைப் பிந்தையவற்றுக்காகப் பறி கொடுக்க முடியாது என்பதே காமராஜர் அரசியலின் தனித்துவம். காமராஜருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் எடுபடாமல் போனதற்கு மிக முக்கியமான காரணம், சொந்த மக்கள் நலனைப் பலி கொடுத்து, டெல்லியின் குரலை தங்கள் நலனுக்காக எதிரொலிப்பவர்களாக அவர்கள் உருவெடுத்ததுதான். இன்றைக்கு டெல்லியில் தமிழ்நாட்டின் குரலை எதிரொலிக்க நிறையத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். தேசியக் கட்சிகளுக்கு அந்தக் கனவு இருந்தால், காமராஜர் விட்ட இடத்திலிருந்துதான் தொடங்க வேண்டும்!

- ஜூலை, 2020, ‘தி இந்து’ தமிழ் 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


6

4

1




பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Tharanipathi   2 years ago

சமஸ் அவர்களின் கருத்தை மதிக்கிறேன். அண்ணா கூறியவை என்று தாங்கள் கூறுவது உண்மைக்கு புறம்பான தகவல். மன்னிக்கவும்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Anantharaja R   2 years ago

தான் சார்ந்திருக்கும் மக்களின் மேம்பாட்டுக்காகவே எந்த ஒரு மனிதரும் அரசியலில் அடியெடுத்து வைக்கிறார். தேர்ந்தெடுக்கும் கட்சி, சித்தாந்தம், தலைமை, கிடைக்கும் பதவி, அதிகாரம் இவையெல்லாமும் அந்த நோக்கத்தைச் சென்றடையும் வழிகள். எதன் பொருட்டும் சொந்த மக்களின் நலனைப் பிந்தையவற்றுக்காகப் பறி கொடுக்க முடியாது என்பதே காமராஜர் அரசியலின் தனித்துவம். நன்றி ஆசிரியர் சமஸ்🙏

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

BABUJI S   2 years ago

காமராஜரின் ஆளுமையையும் தமிழக அரசியலில் அவரது இடத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார் அருஞ்சொல் இணையதளத்தின் ஆசிரியர் சமஸ். இந்திய அரசியலில் அவர் எவ்வளவு உயரத்தில் இருந்தார் என்பதை கட்டுரையில் உள்ள் மூன்று புகைப்படங்களே சொல்லி விடுகின்றன. அருஞ்சொல் வாசகராக பெருமிதம் கொள்கிறேன்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

மங்கை வரிசைச் சிற்பங்கள்வாய் உலரும் பிரச்சினைரோமப் பேரரசுசர்வதேச மகளிர் தினம்அக்னி பாதைமனோஜ் ஜோஷிபுத்தகத் திருவிழாகலப்பு மொழிதுஷ் பிரசாரத்துக்கு பலியான ராஜீவ் காந்திஎல்டிஎல்நீர் ஆணையம்நடுவர் மன்றம்நெட்வொர்க்கிங்மக்களவை பொதுத் தேர்தல்இந்திய சுதந்திரம்அதிகார வாசம்பிரேர்ணா சிங்தங்கம் சுப்ரமணியம்ஒரே அரசுபண்டிட்டுகள் படுகொலைஐந்தாவது கட்டம்கும்பல்அப்பாசில முன்னெடுப்புகள்நியமனப் பதவிநிமோனியாஅருஞ்சொல் தலையங்கம்தொழிற்சாலைகள்பிராமணர்கள்ரெட்ரோகிரேட் எஜாகுலேஸன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!