கட்டுரை, சினிமா, அரசியல், சமஸ் கட்டுரை 5 நிமிட வாசிப்பு
எம்ஜிஆரும் ரஜினி, கமல், விஜயும் ஒன்றா?
டெல்லியில் இருந்து வெளிவரும் வார இதழான ‘இந்தியா டுடே’ சமீபத்தில் நடிகர் விஜயின் அரசியல் அபிலாஷை தொடர்பாக ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக என்னையும் பேட்டி கண்டிருந்தனர். “எம்.ஜி.ராமச்சந்திரன் போன்று தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவாரா?” என்று கேட்டார் பேட்டி கண்டவர். நான் கூறினேன், “விஜய் சின்ன தாக்கத்தை ஏற்படுத்தலாம். எம்ஜிஆருக்கு இணையாக ஒரு நடிகரைத் தமிழக அரசியலில் ஒப்பிடுவது பொருத்தமற்றது.” அந்த நண்பர் கேட்டார், “சினிமாக்காரர்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் பெரிய இடம் கொடுப்பவர்கள் இல்லையா?” நான் சொன்னேன், “தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்வில் சினிமா முக்கியமான ஓர் அங்கம். எனினும், அரசியலுக்கும் சினிமாவுக்குமான கோட்டைத் தமிழக மக்கள் துல்லியமாகவே வகுத்திருக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் நம்புவது உண்மை என்றால், எம்ஜிஆருக்குப் பின் சிவாஜி, பாக்யராஜ், டி.ராஜேந்தர், ராமராஜன், சரத்குமார், விஜயகாந்த், ரஜினி, கமல் என்று ஒரு வெற்றி வரிசையே உருவாகியிருக்க வேண்டும். இவர்கள் அனைவருமே தோற்றார்கள் என்பதே உண்மை!”
மூன்று மாயைகள்
தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களிடம் மட்டுமல்லாமல், தமிழகத்துக்குள்ளேயே எம்ஜிஆர் தொடர்பில் சில மாயைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
சினிமா நடிகர்கள் என்றால், தமிழக மக்கள் உடனே ஓட்டு போட்டு முதல்வராக்கிவிடுவார்கள் தமிழக மக்கள் என்பது முதல் மாயை. எம்ஜிஆர் ஏதோ படங்களில் நடித்துக்கொண்டிருந்த வேகத்தில் திடீரென்று அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்தார் என்பது இரண்டாவது மாயை. எம்ஜிஆருக்கு என்று எந்த அரசியல் பார்வையும் கிடையாது என்பது மூன்றாவது மாயை.
ஆழ்ந்த அரசியல் ஈடுபாடு
எம்ஜிஆரை அரசியலுக்கு வந்த சினிமா நட்சத்திரம் என்று கூறுவதைவிடவும், சினிமா வழியே தன்னை வளர்த்தெடுத்துக்கொண்ட அரசியலர் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும். எம்ஜிருக்கு அடுத்து, பெரும் செல்வாக்கு மிக்க நட்சத்திரங்களான ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியைத் துணிந்து அறிவிக்க முற்பட்டபோது அவருக்கு வயது 70+; கமலுக்கு வயது 60+; விஜயகாந்த்துக்கு வயது 50+; அடுத்த ஆண்டு விஜய் 50 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.
சினிமாவில் தனக்கென்று நட்சத்திர அந்தஸ்து, பெரும் சொத்துகள், பிரம்மாண்டமான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்ட பின்னர் தன்னுடைய திரைச் செல்வாக்கின் மீதான நம்பிக்கையின் நீட்சியாக அரசியல் கனவில் ஆழ்ந்தவர்கள் இவர்கள். இன்று பலருக்கும் தெரியாத உண்மை, 1917இல் பிறந்தவரான எம்ஜிஆர் தன்னுடைய பதின்பருவத்தில், ‘பாய்ஸ் நாடக கம்பெனி’யில் உதிரி பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்த காலகட்டத்திலேயே அரசியலோடு தன்னைப் பிணைத்துக்கொண்டவர்.
எம்ஜிஆரின் 13வது வயதில், 1930இல் காரைக்குடிக்கு வந்திருந்த காந்தியைப் பார்க்கிறார் எம்ஜிஆர். “அமைதியும் எளிமையுமே உருவான காந்தியைப் பார்த்தபோது, ஏதோ தெய்வத்தன்மை பொருந்திய ஒருவரை பார்ப்பது போன்ற பக்தி உணர்வு ஏற்பட்டது” என்று அதை எம்ஜிஆர் நினைவுகூர்ந்தார்.
இளமையில் எம்ஜிஆர் நடித்த நாடகம் ‘கதர் பக்தி’. சுதந்திரப் போராட்டப் பின்னணியில், காந்தியக் கொள்கைகளைப் பேசும் இந்த நாடகத்தில் தன்னுடைய அண்ணன் சக்ரபாணியுடன் சின்ன பாத்திரம் ஒன்றில்தான் எம்ஜிஆர் நடித்தார் என்றாலும், பார்வையாளர்களிடம் ஏற்படுத்திய வலுவான தாக்கத்தை நாடகம் எம்ஜிஆரிடமும் உருவாக்கியது.
விரைவில் முழுமையாக கதர் உடைகளுக்கு மாறினார் எம்ஜிஆர். “நான் கதர் ஆடையை உடுத்திக்கொள்ளும்போதே எனது உள்ளத்தில் பெரியதொரு பெருமை தோன்றும். நான் ஒரு லட்சிய மனிதன். உள்ளத்தில் தவறான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காத உறுதி பூண்டவன். கதரின் தூய வெண்மையைப் போல, உள்ளம் துல்லியமாக, தூய்மையாக இருக்கிறது!”
எம்ஜிஆருக்கு சீக்கிரமாக மணம் முடிக்க வேண்டும் என்று அவருடைய தாய் சத்யபாமா அவசரப்பட்டதில் எங்கே அவர் காந்தி ஆசிரமத்தில் சேர்ந்துவிடுவாரோ என்ற பதற்றமும் ஒரு காரணமாக இருந்தது. திருமணத்துக்கு ஒப்புக்கொள்ள எம்ஜிஆர் போட்ட நிபந்தனைகளில் ஒன்று, ‘நான் எப்போதும் கதர்தான் உடுத்துவேன்.’ திருமண நாளன்று மணமகள் பார்கவிக்கும் மணவுடையாக கதர்வுடையைத்தான் எடுத்துக்கொடுத்திருந்தார்.
கடினமான திரை வாழ்க்கை
திரைத் துறையில் மெல்லத்தான் எம்ஜிஆர் முன்னகர முடிந்தது. 1939இல் அவருடைய 22வது வயதில், முதல் திரைப்படமான ‘சதி லீலாவதி’ வெளியானது. ஆயினும், அவர் கதாநாயகனாக நடிக்க மேலும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1947இல், 30வது வயதில் ‘ராஜகுமாரி’ படத்தில் நாயகனாகத் தோன்றினார் எம்ஜிஆர். 1950களின் தொடக்கத்தில் வெளியான ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரகுமாரி’, ‘மலைக்கள்ளன்’ ஆகிய படங்களே எம்ஜிஆருக்கு என்று ஓரிடத்தை உருவாக்கின. இந்தப் படங்கள் மூன்றும் பின்னாளில் தமிழக அரசியலில் எம்ஜிஆரின் இன்னொரு துருவமான மு.கருணாநிதியுடன் இணைந்து அவர் பணியாற்றியவை; இந்தக் காலகட்டத்தில்தான் இருவர் இடையிலுமான நட்பும் உருவானது.
எம்ஜிஆருடனான முதல் சந்திப்பைத் தன்னுடைய சுயசரிதையான ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர் மு.கருணாநிதி குறிப்பிடுகிறார், “கதருடையும் கழுத்தில் துளசி மணிமாலையும் துலங்கிடக் காட்சியளிக்கும் காந்தி பக்தரான எம்ஜிஆர் அவர்களுடன் எனக்குத் தொடர்பு தோன்றிய காலம் அதுதான். அண்ணாவின் நூல்களை நான் அவருக்குக் கொடுப்பேன். காந்தியின் நூல்களை அவர் எனக்குக் கொடுப்பார். எங்களுக்கு இடையே அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவற்றின் முடிவு பிறகு, அவர் கழக அணியில் இணைந்ததுதான்!”
திமுகவில் 1952இல் இணைந்தார் எம்ஜிஆர். அதாவது, அதற்கு முன் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் காங்கிரஸோடு அவருக்கு உறவு இருந்தது. 1972இல் அதிமுகவை எம்ஜிஆர் நிறுவினார். அதாவது, அதற்கு முன் கிட்டத்தட்ட 20 ஆண்டு காலம் திமுகவோடு அவர் இணைந்திருந்தார். 1977இல் தமிழக முதல்வரானபோது குறைந்தது நான்கு தசாப்த அரசியல் அனுபவம் எம்ஜிஆருக்கு இருந்தது. தன்னுடைய அரசியலுக்கு ஏற்றபடி எம்ஜிஆர் தன்னுடைய படங்களை நிர்மாணித்தார் என்று சொல்ல முடியும்.
இதையும் வாசியுங்கள்... 25 நிமிட கவனம்
கலைஞர் தோற்கக் கூடாதுன்னு நெனைச்சார் எம்ஜிஆர்: ஹண்டே பேட்டி
02 Nov 2021
எம்ஜிஆர் ஃபார்முலா
காந்தியை உலகெங்கும் சாமானிய மக்கள் எப்படி உள்வாங்கினார்களோ அப்படியே எம்ஜிஆரும் உள்வாங்கினார்; காருண்யத்தின் பேருருவாக காந்தியை அவர் கண்டார். “காந்தியைப் போன்ற ஒரு புனிதரை நாம் எங்கும் பார்த்ததில்லை. கிறிஸ்துவும் புத்தரும்கூட போதனைகளையே செய்தார்கள். காந்தி மட்டுமே தான் பேசியதை அரசியலில் சாதித்தார்.”
எம்ஜிஆர் தன்னுடைய அறையில் இரு படங்களை வைத்திருந்தார். ஒன்று, அவருடைய தாய் சத்யபாமாவினுடையது; மற்றொன்று காந்தியினுடையது.
திமுகவை நோக்கி எம்ஜிஆர் நகரவும் அண்ணாவிடம் அவர் கண்ட காந்தியத்தன்மையே காரணமாக இருந்தது. ‘தென்னகத்து காந்தி’ என்று அண்ணாவை வெற்றுப் புகழ்ச்சிக்காக எம்ஜிஆர் அழைக்கவில்லை. இதைப் பல இடங்களிலும் கூறியதோடு, தன்னுடைய படங்களிலும் வெளிப்படுத்தினார்.
பிற்காலத்தில் ‘எம்ஜிஆர் ஃபார்முலா’ என்று அழைக்கப்பட்டதான அவருடைய திரைப்படச் சட்டகத்தையும், கதாநாயகத் தோற்றத்தையும் வெறுமனே ‘பிம்ப அரசியல்’ என்று கூறிவிட முடியாது. தாயை மதிக்கும், சகோதரர்களுக்கு உதவும், சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடும், எல்லா சாதி – சமயத்தினரையும் அரவணைக்கும் வகையில் திரையில் எம்ஜிஆர் முன்னிறுத்திய ‘தவறிழைக்காத நாயகன்’ பாத்திரம் வணிக சினிமாவின் சூத்திரங்களால் மட்டும் உருவாக்கப்படவில்லை. எளிய மக்களுக்கு எம்ஜிஆர் கடத்த விரும்பிய அரசியலும் அதில் இருந்தது.
என்னுடைய சொந்த ஊரான மன்னார்குடியில் எனக்கு எம்.ஆர்.ஜெயபால் என்று ஓர் உறவினர் உண்டு. சிறுவயது முதலாக எம்ஜிஆர் ரசிகர். யார் என்ன உதவி என்று கேட்டாலும், தன்னாலானதை முடியாது என்று சொல்லாமல் செய்வார். பசி என்று யார் கை நீட்டினாலும் உணவு வாங்கித் தருவார். சைக்கிளில்தான் எங்கும் போவார், வருவார். வயதானவர்கள் எவரையேனும் வழியில் பார்த்தால், வண்டியில் ஏற்றி உட்காரவைத்து அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்குக் கொண்டுபோய்விடுவார். இந்தப் பண்புகள் எல்லாம் அவருடைய இயல்போடு இணைந்தவை என்றாலும், அவர் இவையெல்லாம் எம்ஜிஆரிடமிருந்து கற்றவை என்றே நம்புகிறார். “நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டும். அதுதான் தலைவர் படத்திலிருந்து கற்றுக்கொண்டது.”
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது!: கமல் ஹாசன் பேட்டி
05 Apr 2021
என்னுடைய கால் நூற்றாண்டு பத்திரிகை அனுபவத்தில் இப்படிப் பல எம்ஜிஆர் ரசிகர்களைச் சந்தித்திருக்கிறேன். சென்னையில் மிகச் சமீபத்தில் எனக்கு அறிமுகமானவர் பன்னீர்செல்வம். யாராவது உதவி என்று கேட்டால், தன்னால் முடிந்ததை ஓடிச் சென்று செய்திடுபவர். தன்னுடைய ஓய்வூதியத்தில் கணிசமான பகுதியை ஒவ்வொரு மாதமும் ஆதரவற்ற முதியோருக்கு உணவு வழங்கப் பயன்படுத்துபவர் இவர். "தலைவர் மாதிரி கொடுக்க வேண்டும்!"
காந்தியைப் பற்றி மட்டும் தன்னுடைய சுயசரிதையான ‘நான் ஏன் பிறந்தேன்?’ நூலில், நான்கு அத்தியாயங்களில் எழுதும் எம்ஜிஆர் சொல்கிறார், “நான் ஒரு நல்லவன். தவறுகளைச் செய்ய அஞ்சுபவன் அல்லது தவறுகளைச் செய்யாதவன். இப்படி ஒரு நம்பிக்கை மகாத்மாவின் தொண்டர்களுக்குத் தம் மீதும், பொதுமக்களுக்கு அவர்கள் மீதும் இருந்தது.” எம்ஜிஆர் திரையில் உருவாக்கிய ஃபார்முலாவின் அடிநாதத்தை இதோடு இணைத்துப் பார்க்கலாம். எம்ஜிஆர் திரைப்பட அரசியல் பாடல்கள் காந்தி - அண்ணா இருவரின் கலவைக் கருத்துகளை எளிமையாகவும் வலிமையாகவும் முன்வைத்தன; பகுத்தறிவைப் பேசின.
எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக, தீவிரமான சித்தாந்த அடிப்படையிலான கட்சியாக இல்லாமல் இருக்கலாம்; அரசியலில் நிறைய முரண்பாடான முடிவுகளை எம்ஜிஆர் எடுத்திருக்கலாம்; எளியோர் மீது அவருக்கு ஆழ்ந்த பரிவு இருந்தது; வெறுப்புக்கு எதிரான, எல்லோரையும் அரவணைக்கும் பன்மைத்துவத்தையே அவரது அரசியல் கொண்டிருந்தது; கடும் உழைப்பினூடாகவே அவர் அரசியலிலும் பயணப்பட்டார். நிச்சயமாக எம்ஜிஆரின் அரசியல் திடீர் சினிமா குமிழி இல்லை!
- ‘தினமலர்’, ஜூலை 2023
தொடர்புடைய கட்டுரைகள்
விஜயின் அரசியல் வருகை: சமஸ் கருத்து
விஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?
கலைஞர் தோற்கக் கூடாதுன்னு நெனைச்சார் எம்ஜிஆர்: ஹண்டே பேட்டி
காலமும் மக்களும் கொண்டுவந்துவிட்ட இடம் இது!: கமல் ஹாசன் பேட்டி
ரஜினி அரசியலும் ராவ் திட்டமும்: பீட்டர் அல்ஃபோன்ஸ் பேட்டி
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 1 year ago
ஐயா, அந்த காலத்தில் ஒரு "நிதி", இந்த காலத்தில் ஒரு "நிதி" !
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.