கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு

கோர்பசெவ்: மாபெரும் அவல நாயகர்

சமஸ் | Samas
12 Sep 2022, 5:00 am
0

மிகைல் கோர்பசெவ் காலமானார் என்ற செய்தியைத் தொலைக்காட்சியில் பார்த்த கணத்தில் உலகம் ஸ்தம்பித்து இயங்குவதான பிரமை உண்டாயிற்று. பெரும் சாவு. கோர்பசெவ் உயிரிழந்த நாளில் இந்த பூமியில் அவர் அளவுக்குப் பெரிய அனுபவங்களைப் பார்த்தவர்கள் வேறு எவரும் இருந்திருப்பார்களா என்று தோன்றியது. உலகிலேயே பெரிய நாட்டின் பேரதிகாரங்களைக் கொண்ட அதிபராக அவர் இருந்தார்.  அந்த நாடு அவர் கைகளில் உடைந்தது. அப்புறம் அவர் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறாரா என்று கேட்கும் அளவுக்கு சொந்த நாட்டில் யாராலும் சீந்தப்படாத வாழ்க்கையும் அவருக்கு வாய்த்தது. அவ்வளவு சீக்கிரம் கோர்பசெவ் மறைவுச் செய்தியிலிருந்து விடுபட முடியவில்லை.

நண்பர் சீனிவாச இராமாநுஜத்துக்கு செல்பேசினேன். “கோர்பசெவ் இறந்துவிட்டார். இந்தக் கணத்தில் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” இடதுசாரி இயக்கத்தில் இருந்தவர் சீனிவாச இராமாநுஜம். “எனக்கு ஒரு விஷயம் உடனே நினைவுக்கு வருகிறது. நானும் என் நண்பனும் வழக்கமாக டீ குடிக்கும் கடைக்கு அன்றைக்குச் சென்றிருந்தோம். டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்திருந்தவர் நாளிதழை இரண்டாக மடித்து வாசித்துக்கொண்டிருந்தார். தலைகீழாக இருந்தாலும் கொட்டை எழுத்தில் அந்தத் தலைப்புச் செய்தி தெரிந்தது. கோர்பசெவ் கைது. நான் அவரிடம் செய்தித்தாளை வாங்கி அவசர அவசரமாகப் படித்தேன். என் இதயம் நொறுங்கியது. அப்படியே பக்கத்தில் உள்ள நடைமேடை மரத்தடியில் தலை மேலே கைகளை வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். என் நண்பன் பதற்றத்தோடு என்ன ஆயிற்று என்று கேட்டான். ‘சோவியத் ரஷ்யாவுக்கு என்னமோ ஆச்சு!’ என்றேன். அவனும் என் பக்கத்திலேயே உடைந்துபோய் உட்கார்ந்தான்.”

இதற்குப் பின் அவர் பேசவில்லை.

உலகெங்கும் உள்ள இடதுசாரிகள் எவருக்குமே கோர்பசெவ் எனும் பெயர் கொடுந்துயரோடு  பிணைந்தது. மூன்று தசாப்தங்களுக்கு முன் கோர்பசெவ் மீது ஏற்பட்ட ஆத்திரமும், அன்றைக்கு சோவியத் ஒன்றியம் மீது இருந்த மதிப்பீடும் இன்று பலருக்கும் மாறியிருக்கிறது என்றாலும், நடந்து முடிந்த வரலாறு உண்டாக்கிய வலியிலிருந்து எவராலும் முழுமையாக மீள முடிந்தது இல்லை.

இன்றைக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருப்பவர்கள் கோர்பசெவ் பெயரைக் கேட்டால் ஆற்ற முடியாத கொந்தளிப்புக்கு ஆளாவது இயல்பு. கோர்பசெவ் இறந்த அன்று இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மத்தியில் அசாத்தியமான மௌனம் நிலவியது. சிலர் அதே நாளில் மறைந்த சே குவேராவின் மகன் காமிலா குவேராவுக்கு இரங்கல் குறிப்பு எழுதியிருந்தனர்.  தமிழ்நாட்டின் மூத்த கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்களில் ஒருவரான எஸ்.ஏ.பெருமாள் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் காட்டமாக இப்படி எழுதியிருந்தார். “கோர்பசெவ் 1987லேயே செத்துப்போனான். இப்போதுதான் புதைக்கப்போகிறார்கள்!”

ஆச்சரியங்களின் தேசம்

சோவியத் ஒன்றிய அதிபர் பதவியிலிருந்து கோர்பசெவ் இறங்கியபோது எனக்கு 11 வயது. சிறுவயதில் பள்ளிக்கூடங்களில் சோவியத்தைப் பற்றி ஆசிரியர்கள் சொல்லும் எந்தத் தகவலும் வியப்பை அளிக்கும்.

உலகின் மிகப் பெரிய நாடாக இருந்தது அது. சோவியத்தின் பரப்பளவு 2.24 கோடி ச.கி.மீ. (இந்தியா - 32.87 லட்சம் ச.கி.மீ). கிட்டத்தட்ட வட அமெரிக்கக் கண்டத்தின் அளவுக்கு அது பரந்திருந்தது; ஒரே நாடு 11 கால மண்டலங்களைப் பராமரிக்க வேண்டியிருந்தது.

சாமானியர்களை மையப்படுத்திய நல்வாழ்வுக்கான ஆட்சி நிர்வாகச் சிந்தனையை சோவியத் அறிமுகப்படுத்தியது. சமூகத்தின் கூட்டுச் சக்தியின் வலிமையில் அது நம்பிக்கை வைத்தது. வியத்தகு சாதனைகள் பலவற்றை அது சாதித்தது. கல்வியும் மருத்துவமும் எல்லோருக்குமானதாக உறுதிபடுத்தப்பட்டன. உலகின் பலமான  ராணுவத்தை அது வைத்திருந்தது. பாசிஸத்தை அது வீழ்த்தியது. பெரிய பொருளாதாரமாக இருந்ததோடு, அறிவியல் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப முன்னேற்றம் என்று பல துறைகளில் முன்னணியில் இருந்தது. விண்வெளித் துறையில் அது பாய்ச்சலை நிகழ்த்தியது. முக்கியமாக அரசியல் தளத்தில் தாராள விழுமியங்களை உள்ளடக்கிய புதிய கலாச்சாரத்துக்கு அது வித்திட்டது. சாமானியர்களால் சமூகங்களைப் புரட்டிப்போட முடியும் எனும் நம்பிக்கையை உலகம் எங்கும் அது பரப்பியது. முதலாளித்துவச் சமூகத்துக்கான உருவகம் ஐக்கிய அமெரிக்கா என்றால், பொதுவுடைமைச் சமூகத்துக்கான உருவகம் சோவியத் ரஷ்யா என்று உலகம் நம்பியது.

கம்யூனிஸ்ட்டுகளைப் பொறுத்த அளவில், அந்த உலகளாவிய பெருங்கனவைப் பொறுப்பற்ற வகையில் சிதறடித்தவர் கோர்பசெவ்; பிற்பாடு 15 நாடுகளாக சோவியத் சிதற அவரே காரணம். ‘ரஷ்ய அதிபராக இருந்த அமெரிக்கக் கையாள்’ என்ற அளவுக்குக்கூட கோர்பசெவைச் சாடியவர்கள் உண்டு. இன்று, ‘மாபெரும் அவல நாயகர்’ என்றே அவரை அழைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், வெளிவுலகத்துக்கு ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு சோவியத் போன்றே அதனுள்ளே இருள் படர்ந்த ஒரு சோவியத் அழுந்துப்பட்டிருந்தது. அதற்கு முகம் கொடுக்க முற்பட்ட அதிபர் கோர்பசெவ்.

முகத்தின் முன் உண்மை

ரஷ்யாவின் தென்பிராந்திய கிராமத்திலிருந்து உருவாகிவந்தவர் கோர்பசெவ். வெளியே பெரிதாகப் பேசப்பட்ட ரஷ்ய உற்பத்தி முறையானது உள்ளே எவ்வளவு புழுக்கத்தைக் கொண்டிருந்தது என்பதை அவர் இயல்பாக அறிந்திருந்தார்.

உலகின் இரு பெரும் சக்திகளில் ஒன்றாகத் திகழ்ந்தாலும், உணவு தானியங்களுக்கே வெளிநாட்டிலிருந்து இறக்குமதியை எதிர்நோக்கும் சூழல் பல சந்தர்ப்பங்களில் சோவியத்தின் உற்பத்தியால் நிகழ்ந்தது. உணவு எப்படியோ எல்லோருக்கும் கிடைத்தது, அரசமைப்பின்படி வாய்ப்புகளில் சமத்துவம் இருந்தது, ஏதோ ஒரு வேலை ஒவ்வொருவருக்கும் இருந்தது என்றாலும், அரச அடக்குமுறைச் சமூகமாகவே அது பெருமளவில் இருந்தது.

ஒரு கட்சி ஆட்சிமுறையானது அடுத்து வந்த அரை நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தனியதிகாரம் பெற்ற ஓர் அதிகார வர்க்கத்தை உருவாக்கியிருந்தது. எல்லா இடங்களிலும் அவர்களுடைய அதிகாரம் நிரம்பி வழிந்தது. அவ்வளவு பெரிய நாட்டின் பெரும்பான்மை முடிவுகளைத் தலைநகரம் மாஸ்கோ தீர்மானித்தது. சிந்தனைச் சுதந்திரம் இல்லை. ஊடகங்கள், பதிப்பகங்கள் அரசின் நேரடி, மறைமுகக் கட்டுப்பாட்டில் இருந்தன. எதிர்க்கருத்தாளர்களைச் சிறை அச்சுறுத்தியது. சொந்தக் கட்சியினருக்குமேகூட தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மைகளே சென்றடைந்தன.

ஒட்டுமொத்த நாட்டின் மக்கள்தொகையில் சரிபாதியாக இருந்த ரஷ்யர்களின் மேலாதிக்கம் அரசியல் உள்பட பல துறைகளிலும் நிலவியது. அதிபர்கள் ரஷ்ய நோக்கிலேயே முழு நாட்டையும் பார்த்தனர். ரஷ்ய மொழிக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவமானது, ஏனைய மொழிச் சமூகங்களை அழுத்தத்தில் தள்ளியிருந்தது.

சோவியத்தின் நீண்ட கால அதிபரான ஸ்டாலினுடைய ஆட்சிக் காலமேகூட மக்களுக்கு நிம்மதியான காலம் என்று குறிப்பிட்டுவிட முடியாது. உள்நாட்டுப் புரட்சியிலிருந்து எழுந்து, அடுத்தடுத்து சமூகத்துக்குள்ளே நடந்த ‘ஆள் களையெடுப்பு’ நடவடிக்கைகள், கூட்டுப்பண்ணை உற்பத்திமுறை நோக்கிய நிர்ப்பந்த மாற்றங்கள், தவறான முடிவுகள் உருவாக்கிய பஞ்சங்கள், திணிக்கப்பட்ட உலகப் போர், அதையடுத்து தானும் சேர்ந்து உருவாக்கிக்கொண்ட பனிப்போர் கேட்டு வாங்கிய பலிகள் என்று ஸ்டாலின் மறைவுக்குள்ளேயே பெரும் சூறாவளிக்குள் பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்தினூடாகத்தான் பயணப்பட்டிருந்தார்கள் சோவியத் மக்கள். எனில், ‘எல்லோருக்கும் எல்லாமும்’ எனும் உயர் விழுமியமும், அதை நோக்கிய லட்சியப் பயணமும், மனித குல வரலாற்றில் சமத்துவத்துக்காக மேற்கொள்ளப்பட்ட முன்னுதாரணமற்ற பெரும் பரிசோதனை முயற்சியின் உபவிளைவுகள் என்ற ஆறுதலும், பொருளாதாரத்தில் சோவியத்துக்குப் பேரனுகூலமாக வாய்த்திருந்த எரிசக்தி வளமுமே அந்தச் சமூகம் முன்னகர வழிவகுத்தன. ஸ்டாலினுக்குப் பிந்தைய ஆட்சிகளில் பொருளாதாரம் ஏற்ற இறக்கங்களில் சரிவுகளைக் கண்டது. பெரும் அழுத்தத்தைச் சமூகம் வந்தடைந்த நாட்களில்தான் கோர்பசெவ் கைகளுக்கு அதிகாரம் வந்தது.

இரு பெரும் முழக்கங்கள்

நாடு ஒரு புதிய மாற்றத்துக்குள்ளாக வேண்டும் என்பதை உணர்ந்த கோர்பசெவ் சீர்திருத்தங்களுக்குத் தயாரானார். அசாதாரணமான துணிச்சலுடன் இரு பெரும்  முழக்கங்களை முன்வைத்தார். ‘கிளாஸ்னோஸ்ட்’ (வெளிப்படைத்தன்மை), ‘பெரெஸ்த்ரொய்கா’ (மறுசீரமைப்பு). முந்தையது எல்லா நிலைகளிலும் அரசின் வெளிப்படைத்தன்மையையும், ஊடகங்கள், எழுத்தாளர்களுக்கான சுதந்திர வெளிப்பாட்டையும் பிரகடனப்படுத்தியது. பிந்தையது அரசை மையப்படுத்திய பொருளாதார உற்பத்திமுறையையும், மாஸ்கோவை மையப்படுத்திய அரசியல் அதிகாரமுறையையும் கலைத்துப் பரவலாக்கும் மாற்றத்துக்கு அறைகூவல் விடுத்தது.

முழக்கங்களைக் காரியங்கள் ஆக்கலானார் கோர்பசெவ். சிறையிலிருந்த மாற்றுக் கருத்தாளர்கள் விடுவிக்கப்பட்டனர். வெளிநாட்டுப் புத்தகங்களுக்கான தடை நீக்கப்பட்டது. பொருளாதாரத்தைச் சீரழிக்கும் போர் நடவடிக்கைகளிலிருந்து ராணுவத்தைப் பின்னுக்கு இழுத்தார். நீதித் துறையின் சுயாதீன செயல்பாட்டுக்கு வழிவகுத்தார். அணு ஆயுதப் போட்டிக்கு முடிவு கட்ட முற்பட்டார். பொருளாதாரத்தில் அரசின் கட்டுப்பாட்டைத் தளர்த்தினார். கட்சிக்குள்ளேயே பழைய தாதாக்களுக்கு விடை கொடுத்துவிட்டு, ஜனநாயகரீதியாகப் புதியவர்கள் உள்ளே வர வழியை உண்டாக்கினார்.

பிரச்சினை என்னவென்றால், கம்யூனிஸ்ட் கட்சிதான் சோவியத்தைப் பிணைக்கும் சக்தியாக இருந்தது. நாட்டின் நல்லவை, கெட்டவை இரண்டுக்குமே கட்சி பிரதான பொறுப்பாளியாக இருந்தது. கட்சியைத் தயார்படுத்தாமல் கோர்பசேவ் மேற்கொண்ட நடவடிக்கைகள் உண்டாக்கிய அதிர்வுகள் கட்சியைப் பிளந்தன. சோவியத் அமைப்பின் அடிப்படைப் பண்புகளிலேயே அடக்குமுறையும், அச்சமும் உறைந்திருந்ததால் அவை  திடீரென விலகியபோது அமைப்பே நிலைகுலைந்தது.

கோர்பசெவ் கண் முன்னே எல்லாம் ஒவ்வொன்றாக நொறுங்கின. சோவியத் ஒன்றியத்துக்கு வெளியே அதன் கண்ணசைவில் இயங்கிய கம்யூனிஸ அரசுகள் உடைந்தன. சோவியத்தின் அங்கமாக இருந்த பிராந்தியங்கள் சுதந்திரம் நோக்கி நகர்ந்தன. சோவியத்தைத் தாங்கியிருந்த கம்யூனிஸ்ட் கட்சி பிளந்து கரைந்தது. நாடும் மக்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கினர். புதிய அரசியல் அலைகள் மேலெழுந்து வந்தன. அவருடைய சோவியத்தின் புதிய  நண்பர்களாகியிருந்த மேற்குல நாடுகளின் தலைவர்கள் அவருடைய நம்பிக்கைக்கு மாறாக அவரைக் கைவிட்டனர்.  இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்தார் கோர்பசெவ்.

சோவியத்தின் உள்ளீடற்ற கூட்டாட்சிக்கு மாற்றாக வலுவான, சம இறையாண்மை கொண்ட குடியரசுகளின் கூட்டமைப்பாக உலகின் முன்மாதிரிக் கூட்டாட்சி அமைப்பு ஒன்றுக்கு கோர்பசெவ்  முயன்றார்; சோவியத்  கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜனநாயக ரத்தம் சுரக்கும் என்று நம்பினார்.  முறையான திட்டங்களோ, நம்பகமான சகாக்கள் அணியோ, நிதானமான அணுகுமுறையோ இல்லாமல் அவர் தோற்றார். அந்தத் தோல்விக்குத் தன்னை ஒப்பளித்தார்.

நாடகீய பாத்திரம்

எந்த வரலாற்றாசிரியருக்கும் மதிப்பிட சவாலான, ஒருபோதும் சட்டகத்தில் அடைக்க முடியாத ஆளுமையாகவே கோர்பசெவ் எஞ்சுவார் என்று எண்ணுகிறேன். எனக்கு ஷேக்ஸ்பியரின் உயிர் பெற்ற பாத்திரமாகவே அவர் தோன்றுவார். தன்னுடைய நாட்டை மாற்றுவதன் வாயிலாக ஒட்டுமொத்த மனித குலத்தின் போக்கிலேயே மாற்றத்தைக் காணும் கனவில் இருந்தவர் அவர். சொந்தக்  கட்சியினராலேயே  சிறை பிடிக்கப்பட்டு, ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்கொண்டு, எல்லா அதிகாரங்களையும் பறிகொடுத்து புறப்பட்டபோது தன்னுடைய பயன்பாட்டுக்கான கார்களுக்காக அடுத்த அதிபர் எல்ட்ஸினுடன்  மன்றாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். அரசியல் வீழ்ச்சியை ஏற்க மனமில்லாமல், புதிதாக உருவான தனித்த ரஷ்யாவின் அதிபர் தேர்தலில் அவர் நின்றார். அரை சத வாக்குகளோடு கடைசி வரிசையை நோக்கி அவருக்கான இடத்தை ரஷ்ய மக்கள் காட்டினர். முற்பகுதியில் மக்களால் அவ்வளவு நேசிக்கப்பட்டவர், பிற்பகுதியில் இவ்வளவு வெறுக்கப்பட்டபோதும் இறுதி வரை ரஷ்யாவிலேயே வாழ்ந்தார். சர்வதேச பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார், பேட்டிகள் வழியே பேசினார். உள்ளூரில் யாரும் பொருட்படுத்தவில்லை. இன்றைய புதின் சகாப்தத்தைப் பார்க்கையில், கோர்பசெவ் தவறுகளைக் கடந்து, அவர் முன்னெடுத்த சீர்திருத்தங்களுக்கு ரஷ்ய சமூகம் இன்னும்கூட  தயாராகவில்லை என்றே தோன்றுகிறது.

எப்படியும் வரலாற்றில் கோர்பசெவ் ஒரு விஷயத்துக்காக என்றும் நிலைத்திருப்பார் என்று எண்ணுகிறேன். பல்லாயிரக்கணக்கானோர் கொலைக்குள்ளாவதை அவர் தவிர்த்தார்.

இரும்புத்திரைக்குப் பின்னிருந்த உண்மைக்கு அவர் முகம் கொடுத்தார். அது ஆஃப்கனுடனா நிழல் போரோ, அமெரிக்காவுடனான பனிப் போரோ, எதுவாயினும் தன் சொந்த மக்கள் நலன் கருதி சண்டையை நிறுத்தினார். உலகின் பெரிய ராணுவத்தை அவர் கையில் வைத்திருந்தபோதும், தன்னுடைய வீழ்ச்சி உட்பட அவர் கண் முன் அடுத்தடுத்து நிகழ்ந்த மாபெரும் சரிவுகளின்போதுகூட ராணுவத்தைப் பயன்படுத்த அவர் விரும்பவில்லை. பெர்லின் சுவர் இடிக்கப்பட்டபோது அவர் குறுக்கிடவில்லை. இரு ஜெர்மனிகளும் ஒன்றிணைந்ததில் அவரும் பங்கு வகித்தார். லாட்வியா, லிதுவேனியா, எஸ்டோனியா என்று சோவியத்தின் ஒவ்வோர் அங்கமும் சுதந்திரப் பிரகடனத்துக்குத் தயாரானபோதும், பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்த்து, இறுதி வரை பேச்சுவார்த்தைகளை நம்பினார். நாடு உடையலானபோதும்கூட அமைதி காத்தார். பதவி பறிபோனபோதும் ஆர்ப்பாட்டமின்றி வெளியேறினார். சர்வ நிச்சயமாகப் பெரும் ரத்தக்களறி ஏற்படுவதையும் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலைக்குள்ளாவதையும் தடுத்தார். அணு ஆயுத சக்தியான தன்னுடைய நாட்டில் அபாயகரமான ஒரு பெரும் உள்நாட்டுப் போரையும் இனப் பேரழிவையும்  தவிர்த்தார்.

வரலாற்றில் தலைவர்கள் சாத்தியப்பட்டு, அவர்கள்  செய்த காரியங்களுக்காக மட்டும் அல்லாது, அவர்கள் செய்யாத காரியங்களுக்காகவும் சேர்த்தே நினைவுகூரப்பட வேண்டும். சோவியத்தின் உடைவு துயரம் மிகுந்தது. கோர்பசெவின் வாழ்க்கை அவலம் கவிந்தது!

- ‘குமுதம்’, செப்டம்பர், 2022

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3

2

1




அருஞ்சொல் பொங்கல் கட்டுரைமலம் அள்ளும் வேலைநடப்பு நிகழ்வுகள்கல்யாணச் சாப்பாடுகலைப் படைப்புதேர்தல் முடிவை ஒட்டி பங்குச் சந்தையில் ஊழல்?கூட்டுறவு முறையிலான சூரிய ஒளி மின் உற்பத்திஅமெரிக்கர்கள்மற்றும் பலர்சாதி அழிந்துவிடுமா?வாய்நாற்றம்தென்னாப்பிரிக்காவில் காந்திஉள்ளூர் மொழிவழிக் கல்வி வரவேற்புக்குரிய முன்னெடுப்இந்திய தேசிய காங்கிரஸ்கறுப்பினப் பாகுபாடுபைஜூஸ்திருமண வலைதள மோசடிகள்சாதி அமைப்பு-சேஷாத்ரி தனசேகரன் எதிர்வினைகல்வியாளர்களுக்கு முதுகெலும்பு தேவைஆதிக்கம்சவுக்கு சங்கர் சுவாமிநாதன்அதிகார வலிமைஉற்பத்தி செய்யப்படும் கருத்துகள்சாலைதிராவிடம்ஆட்சி மன்றங்கள் அச்சுறுத்துகின்றனவா?சாதிகள்ஹெச்பிவிவிவசாயிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!