கட்டுரை, தொடர், சமஸ் கட்டுரை, சமஸ், ரீவைண்ட் 3 நிமிட வாசிப்பு
சாப்பாட்டுப் புராணம்: மிலிட்டரி புரோட்டா
கூப்பிட்டேன்னு வந்துடாத! கூப்பிடலையேன்னு கோவிச்சுக்காத! டிமிக்கி கொடுத்துவிட்டு புரோட்டா சாப்பிடச் செல்பர்களின் நடத்தையைப் பற்றி கிண்டலாகச் சொல்லப்பட்ட ஒரு சொலவடை இது.
தமிழர்களின் வாழ்வில் டீ, காபி, இட்லி, தோசைக்கு என்ன முக்கியத்துவம் உண்டோ, அதே முக்கியத்துவம் புரோட்டாவுக்கும் உண்டு. மேற்படி வகையறாக்களையாவது வீட்டிலேயே செய்து சாப்பிட முடியும். ஆனால், திருப்பித்திருப்பி அடித்தாலும் கடை புரோட்டா பக்குவம் வீட்டில் வராது என்பதால், மற்றவற்றைக் காட்டிலும் விசேஷமானதும்கூட. நம்மூரில் புரோட்டா புகுந்து வளர்ந்த கதை ருசிகரமானது.
புரோட்டாவின் பெற்றோர் பஞ்சாபிகள் என்பார்கள். நயமான கோதுமை மாவில் விருப்பமான காய்கறி, நெய் சேர்த்துப் பிசைந்து பஞ்சாபிகள் சுட்ட ரொட்டிக்குப் பெயர் பரான்த்தா. இதற்குப் பின்னர், தால் பரான்த்தா, பனீர் பரான்த்தா, கோபி பரான்த்தா, சில்லி பரான்த்தா, லச்சா பரான்த்தா, அஜ்வன் பரான்த்தா, மூலி பரான்த்தா, புதினா பரான்த்தா, மீட்டா பரான்த்தா, தந்தூரி பரான்த்தா, பாலக் பரான்த்தா, சாட்டு பரான்த்தா, மட்டன் பரான்த்தா, சிக்கன் பரான்த்தா, மொஹல் பரான்த்தா, சிலோன் பரான்த்தா, ஜெய்ப்பூரி பரான்த்தா, கேரளா பரான்த்தா என்று ஏகப்பட்ட அவதாரங்களை எடுத்தாலும் பஞ்சாபி பரான்த்தாவின் மிக எளிமையான, சிறப்பான வடிவம் நம்மூர் ‘மிலிட்டரி புரோட்டா!’
பட்டாளத்துக்கு அந்தக் காலத்தில் போன நம் ஆட்கள் எதைக் கற்றுக்கொண்டு வந்தார்களோ இல்லையோ, நன்றாகச் சாப்பிடக் கற்றுக்கொண்டு வந்தார்கள் (அதுவும் ஒரு கலையல்லவா!). வந்தவர்கள் அங்கு சாப்பிட்டதுடன் நிற்கவில்லை; இங்கும் ரொட்டி புகழைப் பரப்பினார்கள். அவர்களில் சிலர் கடைகளையும் ஆரம்பித்தார்கள். அசைவ வகையறாக்களுக்குப் பெயர்போன இக்கடைகளில் புரோட்டா புதிய வடிவமெடுத்தது. மைதா மாவில், முட்டையும் கொஞ்சம்போல் ஜீனியும் கலந்து, பிசையோ பிசையென்று பிசைந்து, சிலபல மணி நேரம் அதங்க வைத்து, குட்டிகுட்டி உருண்டைகளாக உருட்டி, துண்டுபோல் வீசி, நாலாய் மடித்து, அரை முறுகல் பதத்தில் பொறித்தெடுக்கப்படும் புரோட்டா, ‘மிலிட்டரி புரோட்டா’ என்று பெயர் பெற்றது.
பொன்னிறத்தில், தொட்டால் பொலபொலவென உதிர்வதும், வாயில் முறுகல் கரைவதும் நல்ல மிலிட்டரி புரோட்டாவுக்கான பக்குவம். பொதுவாக, இதற்குத் தொட்டுக்கையே தேவைப்படுவதில்லை என்றாலும், அவரவர் விருப்பம்போல் எதை வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம் என்பது இதன் தனித்தன்மை ஆகும் (ஜீனி போட்ட பாலில் ஊறவைத்துச் சாப்பிட்ட புண்ணியவான்கள் நம் ஊரில் உண்டு). இதிலும் சதுர மிலிட்டரி புரோட்டா ரொம்ப பிரசித்தம்.
அக்காலத்தில் தென் மாவட்டங்களில் சில கடைகளில் இந்த புரோட்டா கிடைக்கும். புரோட்டா மாவை இலகுவாகப் பிசைந்து அடித்து வீசுவதற்கென்றே பெயர்போன புரோட்டா மாஸ்டர்கள் இந்தக் கடைகளில் இருந்தார்கள் (பட்டாளத்துக்குப் போகவில்லை என்றாலும், பட்டாளத்துக்காரர்களுக்கு இணையானமுரட்டு மீசை இவர்களுக்கும் உண்டு). எடுக்க எடுக்க அடுக்கடுக்காக பிரியும் சதுர மிலிட்டரி புரோட்டாவின் ருசியே எப்போதும் தனிதான்!
அடிக்கவும் பிசையவும் பயந்துகொண்டு இப்போது சதுர மிலிட்டரி புரோட்டாவில் யாரும் ஆர்வம் காட்டுவதில்லை; அப்படியே சில கடைகளில் போட்டாலும் அந்தக் காலத்துச் சுவை இதில் இருப்பதில்லை. மன்னார்குடி இதற்கு ஒரு விதிவிலக்கு.
மன்னார்குடி பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அந்தக் கால் நூற்றாண்டு வயதான புரோட்டா கடையில் மாலையிலிருந்து நள்ளிரவு வரை புரோட்டா போடுகிறார்கள்; சுடச்சுட! அதே சதுரம்; அதே பொன்னிறம்; அதே முறுகல்; அதே பதம்! போதாக்குறைக்குக் கறிக்குழம்பு, கோழிக்குழம்பு, தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, மல்லிச் சட்னி என்று கேட்கும் தொட்டுக்கையை வைக்கிறார்கள். அப்புறம் இங்கு வரும் கூட்டத்தைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? கடை உரிமையாளர் ஜி.அன்வர் பாட்ஷாவிடம் பேசினேன்: “10 கிலோ மைதா மாவுக்கு, 1/2 கிலோ ஜீனி; 10 முட்டை; 1/4 பட்டர் எண்ணெய். இதுதான் கலவை. ஒரு மணி நேரம் நன்கு பிசைந்து 3 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர், ஒரு துண்டு அளவுக்கு மாவு உருண்டையை விரிய அடித்து நாலாய் மடித்து அரைச் சூட்டில் போட்டு எடுத்தால், மிலிட்டரி புரோட்டா தயார்!”
இப்போது வழக்கம்போல் மேஜையின் முன் நாம். மேஜையின் மேல் தொட்டுக்கை உடனுறை மிலிட்டரி புரோட்டா.. யாருக்கு யார் சலாம் போட்டோம் என்பது மட்டும் ரகசியம்!
- 2007, 'தினமணி'
தமிழகத்தின் உணவு மரபைக் கொண்டாடும் 'சாப்பாட்டுப் புராணம்' நூலில் உள்ள ஒரு கட்டுரை. நூல் விலை ரூ.90. நூலை வீட்டிலிருந்தபடி வாங்க வாடஸப் வழி செய்தி அனுப்பி, கூரியர் வழி பெறுங்கள். தொடர்புக்கு: 63801 53325
2
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.