கட்டுரை, சமஸ் கட்டுரை, பொருளாதாரம், பயண அனுபவங்கள், உரைகள் 10 நிமிட வாசிப்பு

முட்டத்தில் ஒரு கூட்டம்

சமஸ் | Samas
05 May 2022, 5:00 am
2

ன்னியாகுமரி போயிருந்தேன். முட்டத்தில் ஒரு கூட்டம். மகளிர் இயக்கப் பிரதிநிதிகளுக்கான பயிலரங்கு. “நீங்கள் வந்து பேசினால் நன்றாக இருக்கும்” என்று அழைத்திருந்தார்கள்.

தமிழ்நாட்டின் அழகான கடல் கிராமங்களில் ஒன்று முட்டம். தமிழ் மக்களுக்கு இன்ன ஊர் என்று மனதில் பதியாவிட்டாலும் முட்டம் பரிச்சயமான ஒன்றுதான். பாரதிராஜாவின் ‘கடலோரக் கவிதைகள்’ முதல் மணிரத்னத்தின் ‘கடல்’ வரை பல தமிழ்த் திரைப்படங்கள் முட்டத்தைக் காட்சிப்படுத்தியிருக்கின்றன. ஏற்கெனவே முட்டம் சென்ற அனுபவம் உண்டு. ‘கடல்’  நூலுக்காகத் தமிழ்நாட்டின் கடற்கரைக் கிராமங்களைச் சுற்றிவந்தபோது முட்டத்துக்கும் சென்றிருக்கிறேன்.

நன்றி: படங்கள்: யாரோ 

சுற்றுலாத் தொழிலை மேம்படுத்த தமிழ்நாட்டில் பெரிய வாய்ப்புள்ள ஊர்களில் ஒன்று முட்டம். மலைப் பாங்கான பகுதி என்பதால், மேட்டிலிருந்தபடி இங்கு கடலைப் பார்க்கலாம். நாளெல்லாம் பார்த்திருக்கும் அளவுக்கு அழகு. நீலமும் பச்சையும் பழுப்பும் கலந்த கொள்ளை அழகு.

இதை உணர்ந்து சில முயற்சிகளும் கடந்த காலத்தில் எடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் அரைகுறை முயற்சிகள். விடுதிகளைக் கட்டியது அரசு. கன்னியாகுமரியிலிருந்து விரைவாக வந்தடைவதற்கான நேரடி சாலைகளோ, அடிக்கடியான நேரடிப் பேருந்து வசதிகளோகூட கிடையாது. கட்டப்பட்ட தங்கும் விடுதிகளுக்கு அருகே உணவகமோ, கடைகளோ கிடையாது. நல்ல இணைப்புப் போக்குவரத்து, ‘தமிழ்நாடு ஹோட்டல்’ போன்ற அரசுசார் நிறுவனங்கள் வாயிலாகக் கொஞ்ச காலம் மலிவான கட்டணத்தில் அரசே முன்னின்று நடத்திக்காட்டும் எல்லா வசதிகளோடும் அமைந்த விடுதிகள், நல்ல உணவு... இப்படியெல்லாம் திட்டமிட்டிருந்தால் நல்ல சுற்றுலா மையங்களில் ஒன்றாக முட்டம் வளர்ந்திருக்கும்.

வெறுமனே அமைக்கப்பட்ட விடுதிகள் கூடிய சீக்கிரமே நாசமாயின.  நம்முடைய அக்கறையின்மைக்குச் சின்னங்கள்போல இப்போது அவை நிற்கின்றன. 

படங்கள்: ஜவஹர்ஜி

புராதனமான ஊர். சோழர் காலச் சுவடுகள் இங்கே உண்டு. போர்ச்சுகீசியர்களும் பிரித்தானியர்களும் கடந்து சென்ற தடங்கள் உண்டு. சனி ஞாயிறில் நல்ல கூட்டம் வருகிறது. ஆனால், கடலில் மக்கள் கால் நனைக்க நாலைந்து இல்லை என்றார்கள்.

நான் சென்றிருந்த நாளில் கடும் வெயிலில் ஊர் வெளிறிப்போய் இருந்தது. முட்டத்துக்குச் செல்லும் நாள் மழைக் காலத்தில் அமைந்தால் அது ஓர் ஆசீர்வாதம். பழுப்புப் பாறைகளின் மேல் நிற்கும் பச்சை மரங்களுக்கு இடையிலான சாலையில், நீலக் கடலைப் பார்த்தபடி சாரல் காற்றில் நடப்பது பேரிளைப்பாறல். முந்தைய பயணத்தில் அப்படி வாய்த்தது. இப்போது வெயிலின் வெக்கையானது, கடலையே உறிஞ்சிவிடும்போல் இருந்தது.

பெண் இயக்கங்களின் வெளிப்பாடு

நிகழ்ச்சி நடந்த அரங்கம் நூறு வருஷ ஓட்டுக் கட்டிடம். கட்டிடத்தை ஒட்டியுள்ள பூவரச மரத்துக்கும் வயது நூறு இருக்கலாம். விசாலமான நிழல். அங்கேயே உட்கார்ந்து கடலைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல இருந்தது.

முட்டம் கடலில் பாறைகள் அதிகம். அலையடி வீரியமாக இருக்கும். பாறையில் மோதிய தண்ணீர் கரையை ஒட்டி இருந்த தென்னை மர உயரத்துக்கு எழும்பி விழுந்தது. ஏதோ நினைவில் வந்தவனாக இது ‘கடலோரக் கவிதைகள்’ படத்தில் வரும் கட்டிடமா என்று கேட்டேன். விசாரித்துவிட்டு, ‘ஆமாம்’ என்றார்கள். 

நிகழ்ச்சிக்கு அழைத்திருந்த மகளிர் கூட்டமைப்பின் பெயர் மலர் மகளிர் மேம்பாட்டு இயக்கம்’. கால் நூற்றாண்டுக்கும் மேலாகச் செயல்பட்டுவரும் இந்தக் கூட்டமைப்பானது குமரி பிராந்தியத்தின் கிராமப்புற விளிம்புநிலை மக்கள் வாழ்வில் ஏற்றத்தை உண்டாக்கிய இயக்கங்களில் ஒன்று. சாதி, மத வேறுபாடுகள் உக்கிரமாக வெளிப்படும் குமரி பிராந்தியத்தில் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பெண்கள் கை கோத்து முன்னகர்வதில் இத்தகைய குழுக்களும் ஒரு பங்காற்றுகின்றன. கிராமங்கள்தோறும் இக்கூட்டமைப்பின் கிளைகள் ஊடுருவியிருக்கின்றன. கிட்டத்தட்ட 40,000 பெண்கள் இக்கூட்டமைப்பில் இருக்கிறார்கள்.

நிதி இங்கு இணைப்பு மையம். ஐந்து ரூபாய் உறுப்பினர் கட்டணம் செலுத்தி இருபது பேர் சேர்ந்து ஒரு கிராமத்தில் உருவாக்கும் குழுவானது, கூட்டமைப்பின் ஓர் அங்கம் ஆகிறது. தங்களுக்குள் சேமிக்கிறார்கள். கடன் கொடுத்துக்கொள்கிறார்கள்; பெற்றுக்கொள்கிறார்கள். சிறுதொழில்களில் ஈடுபடுகிறார்கள். கடன்களை முறையாகச்  செலுத்துகிறார்கள்; பெறுகிறார்கள். உள்ளூர் அடையாளத்துடன் கூடிய உற்பத்தியில் ஈடுபட்டிருக்கிறார்கள் (நான் வாங்கி வந்த தேனும், பலகாரங்களும் செம்மையாக இருந்தன). தொழிலோடு குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படும்போது, கூட்டமைப்பின் பொருளாதாரமும் மேம்படுகிறது. அடுத்த நிலையில் கூட்டமைப்பு சமூக விஷயங்களை விவாதிக்கும் பண்பாட்டு அமைப்பாகவும் மெருகேறுகிறது. கூட்டமைப்பு உண்டாக்கும் மாற்றங்கள் குடும்பங்களிலும் பிரதிபலிக்கின்றன. 

படம்: சரே சிவராம்

இப்படிக் குழுவோடு குடும்பமும், குடும்பத்தோடு குழுவுமாக நகர்கிறார்கள். “ஏனைய மகளிர் குழுக்களோடு ஒப்பிட எங்கள் கூட்டமைப்புக்கு இரண்டு விஷேங்கள் உண்டு. ஒன்று, சுயாதீனமாக நிற்க வல்லது எங்கள் கூட்டமைப்பு. இதை ஆரம்பிக்கும்போதே, ‘வெளிநாட்டு உதவிகளைப் பெறுவதில்லை என்பதை முதன்மை விதிகளில் ஒன்றாக்கினோம். அதனால் வங்கிகளே இன்று கடன் கொடுக்காவிட்டாலும் எங்கள் சேமிப்பினால் எங்களால் நிற்க முடியும். இரண்டு, நிதிப் பகிர்வோடு நாங்கள் நிறுத்திக்கொள்வதில்லை. சமூகரீதியாக தொடர்ந்து உரையாடுகிறோம். கற்றுக்கொள்கிறோம். கற்பிக்கிறோம்” என்று சொன்னார் இந்தக் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவரான ஷெலின் மேரி. 

ஆசிரியராக இருந்தவர் ஷெலின் மேரி. 80 வயதாகிறது. அறிவொளி இயக்க முன்னோடிகளில் ஒருவர். இப்போதும் தினமும் குறைந்தது நூறு பக்கங்களேனும் வாசித்துவிடுகிறேன் என்றார். சென்ற உடனேயே கையைப் பற்றிக்கொண்டு நான் உங்கள் வாசகி. உங்கள் கட்டுரைகளைத் தேடி வாசிப்பேன். நிறையக் கருத்து மாறுபாடுகள் வரும். ஆனாலும், உங்கள் எழுத்தின் உண்மை பிடிக்கும்” என்று அவர் சொன்னது தனிப்பட்ட வகையில் கூடுதல் சந்தோஷமாக இருந்தது. 

 

சுயாதீனம் என்பது சுயக் கட்டுப்பாடும் சேர்ந்தது. அமைப்பை நடத்துவதில் நாங்கள் காந்தியர்கள் என்றார் கூட்டமைப்பின்  இன்றைய தலைவர் ஜான்ஸிலி பாய். “பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு நாங்களே ஆளாளுக்கு சாப்பாட்டு மூட்டையைக் கட்டிக்கொண்டு வந்துவிடுவோம். ஒரு டீக்கு ஏற்பாடுசெய்தால் போதும்; வேறு செலவில்லாமல் கூட்டத்தை  முடித்துவிடுவோம். கையாள்வது பொதுப் பணம் என்பதால் எல்லாவற்றிலும் சிக்கனம் கடைப்பிடிப்பதை ஒரு நடைமுறையாகவே கொண்டிருக்கிறோம். அதனால்தான் பல பெரிய மகளிர் கூட்டமைப்புகள் இன்று காணாமல்போய்விட்ட நிலையிலும் எங்கள் கூட்டமைப்பால் உறுதிபட நிற்க முடிகிறது” என்றார்.

இந்தக் கூட்டத்துக்கு கூட்டமைப்பின் முக்கியமான பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பங்கேற்பாளர்களுக்கு  கிராமத்திலேயே சாப்பாடு தயாரித்திருந்தார்கள். உள்ளூரில் பிடிக்கப்பட்ட மீன்களைக் கொண்டே சமையல் நடந்தது. மீன் குழம்பு. பாறை மீன் வறுவல், முட்டைகோஸ் பொறியல், முருங்கை, பீன்ஸ், மாங்காய் கலந்த அவியல்,  அப்பளம், கடாரங்காய் ஊறுகாய் என்று நாக்கு சிறக்க இருந்தது சாப்பாடு. ஜான்ஸிலி ஒவ்வோர் இலையாகப் பார்த்து,  கேட்டுகேட்டு பரிமாறிவிட்டு, கடைசி ஆளாக உட்கார்ந்து சாப்பிட்டார். 

மூன்று நாள் பயிரங்கில் ஏராளமானவர்கள் பேசவிருந்தனர். முதல் நாள் அமர்வில் என்னோடு பங்கேற்க சென்னையிலிருந்து ஆர்.வி.ரேகா, ராஜஸ்தானிலிருந்து ராதிகா கணேஷ் ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். ‘பெண்கள் குடும்ப வாழ்வுக்கும் சமூக வாழ்வுக்கும் இடையில் ஒரு சமநிலையை உருவாக்கிக்கொள்வது எப்படி?’ என்று ரேகாவும், ‘பெண்களின் பங்கேற்பு அரசியலில் என் தேவையாகிறது?’ என்று ராதிகா கணேஷும் பேசினார்கள். பயிலரங்குக்கு வந்த பெண்கள் அங்கேயே தங்கி, அங்கேயே உணவுண்டு, ஒரு நாளைக்கு 12 மணி நேரம் எங்கிற அளவில் தொடர்ந்து உரைகளைக் கவனிப்பதும், தங்கள் கருத்துகளைப் பகிர்வதும், கேள்வி கேட்பதும், விவாதிப்பதும் எனத் துளி அயர்வின்றி பங்கெடுத்தது ஆச்சரியமாக இருந்தது. 

பண்பாட்டு அதிகாரத்தின் முக்கியத்துவம் 

நான் ‘பொருளாதார அதிகாரங்களைத் தாண்டி, சமூக - பண்பாட்டு அதிகாரங்களையும் ஏன் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்?’ என்று பேசினேன்.

“இந்தியாவில் பொருளாதார அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான போட்டி அதிகம். ஆனால், சமூக - பண்பாட்டு அதிகாரமானது பெரும்பான்மை மக்களுடைய பார்வைக்கும், கவனத்துக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தொகையினர் மட்டுமே அதைக் கையில் வைத்திருக்கின்றனர். அவர்கள் தீர்மானிப்பதே இங்கே சட்டமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என்றால், வெகுமக்களின் கவனத்திலும் இலக்கிலும் பண்பாட்டு அதிகாரம் இடம்பெற  வேண்டும். ஊடகங்கள் தொடங்கி நாடாளுமன்றம் வரை சமூக அதிகாரத்திலும் வெகுமக்களின் கவனம் தீவிரமாக வேண்டும்.

பின்லாந்து தன்னுடைய பிரதமராக சன்னா மரீனையும், தன்னுடைய அமைச்சரவையின் பெரும் பகுதியைப் பெண்களாகவும் தேர்ந்தெடுக்கும்போது நாம் ஏதோ அது ஓர் ஐரோப்பிய நாட்டில் மட்டுமே சாத்தியமாவது என்று எண்ணுகிறோம். ஆப்பிரிக்க நாடான ருவாண்டா இன்று உலகிலேயே பெண்களுக்கு அதிகமான பிரதிநிதித்துவத்தை - அங்கு 63% பேர் பெண்கள் - தன் நாடாளுமன்றத்தில் கொடுத்திருக்கிறது. க்யூபாவும், பொலிவியாவும் சரிபாதி இடங்களைப் பெண்களுக்குக் கொடுத்திருக்கின்றன என்பதை எண்ணிப்பார்க்க மறுக்கிறோம். தன்னுடைய மக்கள்தொகையில் சரிபாதிக்கும் மேல் பெண்களைக் கொண்டிருக்கிற இந்தியா தன் நாடாளுமன்றத்தில் வெறும் 14% மட்டுமே பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை அளித்திருப்பது ஒரு வெட்கக்கேடு. இது ஓர் உதாரணம் மட்டுமே.

“பாலினம் சார்ந்து, மதம் சார்ந்து, சாதி சார்ந்து என்று எல்லாவற்றிலும் பாகுபாடான நிலையே இங்கு நிலவுகிறது. இந்தியர்களின் சராசரி ஆயுள் காலம்கூட சாதிக்கேற்றபடி மாறுகிறது. 2016 கணக்குப்படி ஓர் ஆதிக்க சாதி ஆணின் சராசரி வயது 69.4 என்றால், தலித் சமூக ஆணின் சராசரி ஆயுள் காலம் 63.3 ஆக இருக்கிறது; பழங்குடி இன ஆணின் சராசரி ஆயுள் காலம் 62.4 ஆக இருக்கிறது. பிறப்பு, படிப்பு, பணி என்று ஒவ்வோர் அம்சத்திலும் இந்தப் பாகுபாடுகளை இங்கே பார்க்க முடியும். இதற்கு எப்போது, எப்படி முடிவு கட்டுவது? சமூக - பண்பாட்டு அதிகாரமானது உடைத்துப் பகிரப்படாவிட்டால் சாமானிய மக்கள் என்ன உழைத்தும், சம்பாதித்தும் இங்கே பிரோயோஜனம் இல்லை!”

இப்படியாகப் பேசினேன்.

படம்: ஷிஜூ

கலந்துரையாடலில் சாதி

மாலையில் கலந்துரையாடல் நடந்தது. அரங்கத்தின் உள்ளே உரையாற்றியதைவிடவும் வெளியே பூவரச மரத்தடியில் நடந்த இந்த அனுபவப் பகிர்வு எல்லோருக்குமே மிகவும் பிடித்திருந்தது. சாதி மத அடையாளங்களைத் தாண்டி எப்படி இணக்கம் பேணுவது என்பதே கலந்துரையாடலின் மையப் பொருள். தங்களுடைய வாழ்வில், தத்தமது வீடுகளில் சாதியும் மதமும் என்னவாக இருக்கிறது என்று எலோரும் பேசத் தலைப்பட்டோம். ‘சாதி மத அடையாளங்களை ஏன் விட முடியவில்லை?’ அவை தரும் குழுப் பாதுகாப்புணர்வை வேறு எந்த வகையில் மாற்றீடுவது?’ என்ற கேள்விகளை எழுப்பிக்கொண்டு பலரும் மனம் திறந்து பேசியது நல்ல அனுபவமாக இருந்தது.

இந்த உரையாடலில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், பெரும்பாலான பெண்களிடம் சுதந்திர உணர்வை, வெளிப்படையான பேச்சைக் கேட்க முடிந்து சந்தோஷமாக இருந்தது. தமிழ்நாடு முழுக்கச் சுற்றியபடி இருப்பவன் என்ற வகையில் குமரிப் பெண்களின் விசேஷம் என்று இதைச் சொல்ல முடியும் என எண்ணுகிறேன். “பொருளாதாரரீதியாக நாம் முன்னகர்கிறோம். ஆனால், சமூகரீதியாக நாம் முன்னகர்கிறோமா என்ற கேள்வியை ஆழமாகக்  கேட்டுக்கொள்ள வேண்டிய சூழல் இன்றைக்கு இருக்கிறது. நம்முடைய பொருளாதார வளர்ச்சியானது தனிப்பட்ட உழைப்பின் விளைவாக மட்டும் வந்திடவில்லை. நாம் வாழும் சமூகச் சூழல் அதில் முக்கியமான பங்கை வகிக்கிறது. உதாரணமாக, இந்தப் பெண்கள் கூட்டமைப்பின் வளர்ச்சிக்கும் கடந்த கால் நூற்றாண்டு தமிழகத்தின் அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இங்கு நிலவிய சமூக நல்லிணக்கச் சூழலுக்குப் பங்கிருக்கிறது. அன்றாடம் சாதி - மத துவேஷத்தில் திளைக்கிற, அவ்வப்போது கலவரங்களை உண்டாக்கிக்கொள்கிற ஒரு சமூகமாக நாம் இருந்திருந்தால், இத்தகைய விஷயங்களைச் சிந்தித்திருக்கவோ, சாதித்திருக்கவோ முடியாது. ஆனால், இன்று நாம் எதிர்த்திசையில் பயணிக்கிறோமா?” என்று இந்தக் கலந்துரையாடலில் கேட்டேன். 

பங்கேற்ற பெண்களில் பெரும் பகுதியினர் இந்துக்கள்; கணிசமாக கிறிஸ்தவர்கள். தங்களுடைய அடையாளங்களுடனேயே பெண்கள் வெளிப்படையாகப் பேசினர். தங்கள் குடும்பத்தில் நடந்த சாதி மீறிய, மதம் கடந்த திருமணங்களைப் பகிர்ந்தனர். சிலர் அவர்களே சாதி - மத மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்டிருந்தனர்.  திருமணத்துக்குப் பிந்தைய வாழ்க்கை எப்படியாக இருக்கிறது என்று பேசும்போது, “வீட்டுக்குள் குழப்பங்கள் ஏதும் இல்லை; எல்லாக் கோயிலுக்கும் போய் வருகிறோம். பள்ளிக்கூடம், கல்லூரி, அரசு வேலைவாய்ப்பு என்று வரும்போது சான்றிதழில் ஏதோ ஒரு சாதி அல்லது மதத்தைக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட பின்னர்தான் முந்தைய கலப்பு உடைந்து ஏதோ ஒரு வட்டத்துக்குள் சென்று நின்றுகொள்ள வேண்டியிருக்கிறது”  என்று பலர் உதாரணங்களுடன் சொன்னது முக்கியமானதாகத் தோன்றியது. குறிப்பாக, இந்துப் பெண்களைப் போலவே கிறிஸ்தவப் பெண்களும் எல்லாக் கோயில்களுக்கும் சந்தர்ப்பம் நேரும்போது செல்வதாகக் கூறினர். முன்னை ஒப்பிட குமரி பிராந்தியத்தில் தீண்டாமை சம்பிரதாயங்கள் இன்று நிறைய உடைந்திருப்பதாகக் கூறினர். 

நிகழ்ச்சியின் உருக்கமான பேச்சு தோழர் தாமஸ் ஃபிராங்கோவிடமிருந்து வெளிப்பட்டது. பல தளங்களில் இயங்கும் செயல்பாட்டாளர் அவர். ஸ்டேட் வங்கியில் பணியில் இருந்ததோடு, வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தேசிய அளவிலான பொறுப்பில் இருந்தவர்; ஸ்டேட் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நடத்தும் பள்ளிகளை நிர்வகிக்கும் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்; அறிவொளி இயக்கம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சுற்றுச்சூழல் செயல்பாட்டுக் குழுக்கள்  என்று தொழிற்சங்கம், கல்வி, சுற்றுச்சூழல் எனப் பல தளங்களிலும் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக பொதுப் பணியில் தன்னைக் கரைத்துக்கொண்டவர்.

சென்ற ஐந்து ஆண்டுகளில் ஃபிராங்கோ பங்கேற்ற சில நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்றிருக்கிறேன். அவரோடு சில மணி நேரங்கள் உரையாடியிருக்கிறேன். அவருடையப் பேச்சையும், எழுத்தையும் கவனித்திருக்கிறேன். பணி ஓய்வுக்குப் பிறகும் வயதையோ உடல்நிலையையோ பொருட்படுத்தாமல் பொதுப் பணிகளுக்கு ஒடுபவராக அவர் சார்ந்து நான் கொண்டிருக்கும் மதிப்பு அதிகம். இந்தக் கலந்துரையாடலில் அவரும் பேசினார்.

“என்னுடைய சிறுவயது முதலாக நான் எதிர்கொள்ளாத துவேஷத்தை இப்போது எதிர்கொள்கிறேன். என்னுடைய இந்து நண்பர்களில் ஒருவர் அவர். பல ஆண்டுகளாக ஒன்றாகப் பணியாற்றியவர்கள் நாங்கள். ‘பொது வேலை என்றால், சாப்பிடவே மறந்துவிடுவாயே!’ என்று பல சமயங்களில் தன்னுடைய சோறை எனக்கு உருட்டித் தந்தவர். இன்று அவர் பார்வையில் நான் ஒரு கிறிஸ்தவனாக மட்டும் சுருங்கிவிட்டேன். நான் ஒரு கம்யூனிஸ்ட். எல்லாக் காலங்களிலும் மக்கள் தரப்பில் ஒருவனாக ஆட்சியாளர்களை எதிர்த்திருக்கிறேன். காங்கிரஸ் காலத்தில் ஆட்சியாளர்களை நான் விமர்சிக்கும்போது, மக்கள் செயல்பாட்டாளனாகப் பார்க்கப்பட்டேன். பாஜக காலத்தில் ஆட்சியாளர்களை நான் விமர்சிக்கும்போதோ, நான் கிறிஸ்தவனாகப் பார்க்கப்படுகிறேன்.

உள்ளூரைக் காட்டிலும் இன்று வெளிமாநிலங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. நாடெங்கிலும் பல நிகழ்ச்சிகளுக்கு நான் அழைக்கப்படுவேன். தாமஸ் ஃபிராங்கோ ராஜேந்திர தேவ் என்பது என்னுடைய முழுப் பெயர் என்றாலும், தாமஸ் ஃபிராங்கோ எனும் சுருக்கப் பெயராலேயே இத்தனை காலமும் அறியப்பட்டிருக்கிறேன். இப்போதெல்லாம் பல இடங்களிலும் தாமஸ் ஃபிராங்கோ எனும் பெயர் அழைப்பிதழ்களில் தவிர்க்கப்படுகிறது. ‘ராஜேந்திர தேவ்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ‘கூட்டத்தில் ஒரு கிறிஸ்துவர் பேசுவதைப் பலரும் விரும்புவதில்லை;  சங்கடப்படுகிறார்கள்; மன்னியுங்கள்; சூழல் அப்படி’ என்கிறார்கள். இந்த வலி எத்தனை கொடுமையானது! என்னை விடுங்கள். எவர் ஒருவரையும் என் இடத்தில் பொருத்திப் பாருங்கள். நம்மில் ஒரு சகோதரனை இப்படிப் பாகுபடுத்துவதன் வாயிலாக ஒரு சமூகமாக நாம் அடையப்போகும் பலன் என்ன?”

இப்படிக் கேட்டபோது ஃபிராங்கோவின் கண்கள் கலங்கியிருந்தன. ஒட்டுமொத்த கூட்டமும் நிசப்தத்தில் உறைந்திருந்தது. 

கூட்டம் முடிந்த பின் அன்று இரவு வெளியிருட்டில், கடலைப் பார்த்தபடி வெகுநேரம் கடற்கரையில் அமர்ந்திருந்தேன். ஃபிராங்கோ கேட்ட கேள்வியின் கனத்திலிருந்து விடுதிக்குத் திரும்பிய பிறகும் விடுபட முடியவில்லை; ஊர் திரும்பிய பிறகும் விடுபட முடியவே இல்லை. மக்கள் மத்தியில் நிறையப் பயணிக்க வேண்டியிருக்கிறது என்று எண்ணுகிறேன்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


4

1

1




பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ   2 years ago

பரங்கிப்பேட்டை வாங்க சார், இதைவிட பல ஆச்சரியங்களை அனுபவிப்பீர்கள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Abdul azeez   2 years ago

Sir, being a Muslim in nowadays society is also very tough. Wearing the lungi and with beard face is almost eliminate us.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

மூன்று வகையான வாதங்கள்முஃப்தி முஹம்மது சயீதுஉயர்கல்விஅரசியலும் ஆங்கிலமும்அமைதியின் உறைவிடம்தன்பாலின ஈர்ப்புஇருளும் நாட்கள்பொதுப் பாஷையின் அவசியம்சந்தைப் பொருளாதாரம்பாப்பாஆர்.சுவாமிநாதன் கட்டுரைவசுந்தரா ராஜ சிந்தியாஜேஇஇஇந்து மதம்நேரடி வரிஅறிவியல் துறைவிழுமியங்களும் நடைமுறைகளும்நகைச்சுவை நடிகர் - முதல்வர்காங்கிரஸ்சமஸ் சிந்தனைகளின் அர்த்தம்சிரிப்புபாரத ரத்னாஅரசியல் சந்தைதிட்டமிடலுக்கான கருவிகருக்கலைப்பு உரிமைபுலன் விசாரணைமயிர்தான் பிரச்சினையா? – 2: அன்பைக் கூட்டுவோம்லாலு பிரசாத் யாதவ்சுர்ஜீத் பல்லா கட்டுரைவதந்திகளும் திவால்களும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!