கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, ரீவைண்ட், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

சாதி மதமும் மொழியும் ஒன்றா?

சமஸ் | Samas
19 Jan 2017, 5:00 am
1

ரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தீர்ப்பை மேலோட்டமான ஒரு தேசபக்தக் கொண்டாட்ட மனோநிலையில் இந்தியா வேகமாகக் கடந்துவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘‘தேர்தல்களில் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளைக் கோருவது சட்ட விரோதம்’’ என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பானது, நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஓர் லட்சியவாதமாகவே தோன்றுகிறது.

மகாராஷ்டிரத்தின் சாந்தாகுருஸ் தொகுதியில் 1990இல் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றவர் அபிராம் சிங். மதத்தின் பெயரால் பிரச்சாரத்தில் ஈடுபட்ட இவரது வெற்றி செல்லாது என்று உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அபிராம் சிங்கின் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தது மும்பை உயர் நீதிமன்றம். இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையிட்டார் அபிராம் சிங். இந்த வழக்கோடு, இதே போன்ற முறையீட்டுடன் தொடரப்பட்ட ஏனைய வழக்குகளையும் ஒன்றுசேர்த்து விசாரித்தது உச்ச நீதிமன்றம். ஜனவரி 3 அன்று இந்த விவகாரத்தில் அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பானது, தேசிய அளவில் புதிய கோணங்களிலான தீவிரமான விவாதங்களைக் கோருகிறது.

ஏழு நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்த இந்த விவகாரத்தில் டி.எஸ்.தாக்குர், எம்.பி.லோக்குர், எஸ்.ஏ.பாப்தே, எல்.என்.ராவ் ஆகிய நான்கு நீதிபதிகள் ஒரு கண்ணோட்டத்திலும் நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய மூன்று நீதிபதிகள் வேறொரு கண்ணோட்டத்திலும் இரு பிளவுபட்ட தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றனர்.

தேர்தல் தூய்மையாக நடக்க வேண்டும் என்றால் சாதி, மதம், மொழி, இனம் ஆகியவை தேர்தல் பிரச்சாரத்தில் பேசப்படக் கூடாது என்பது நான்கு நீதிபதிகளின் நிலைப்பாடு. ‘‘சாதி, மதம், மொழி, இன உணர்வுகள் மக்களைப் பிரித்துவிடும். ‘சாதி, மதம், மொழி, இன அடிப்படையில் வாக்குகள் கோருவதைத் தவறான நடத்தை’ எனக் குறிப்பிடும் 123(3) பிரிவானது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் சேர்க்கப்படக் காரணமே பிரிவினைப் போக்கு மக்களிடையே வளரக் கூடாது என்ற நோக்கம்தான்’’ என்கிறது நான்கு நீதிபதிகளின் தீர்ப்பு.

மக்கள் இடையே பாகுபாடு இருக்கும்போது, எந்தப் பாகுபாட்டால் அவர்கள் பாதிக்கப்பட்டார்களோ அந்தப் பாகுபாட்டை முன்னிறுத்திப் பேசி, பாதிப்பிலிருந்து வெளியே வர முனைவதை எப்படித் தவறெனக் கருத முடியும் என்பது மூன்று நீதிபதிகளின் நிலைப்பாடு. “நம்முடைய சமூக வாழ்வில் சாதி, மதம், மொழி, இனம் ஆகியவற்றின் பங்கு முக்கியமானதாக இருப்பதை அரசமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது; ஆழப்பதிக்கப்பட்ட சில அடையாளங்கள் காரணமாக, ஏராளமானவர்கள் தனி நபர்களாகவும் சமூகங்களாகவும் புறக்கணிக்கப்பட்டும், பாரபட்சமாக நடத்தப்பட்டும் வந்ததே இங்கு வரலாறாக இருக்கிறது. அதிலிருந்து மீள முயற்சிப்போரை அவர்களுடைய மத, மொழி, இன, சமூக அடையாளங்களைக் குறிப்பிடுவதற்காகத் தேர்தலில் தடுப்பது, ஜனநாயகத்தின் மீது அவர்களை நம்பிக்கை இழக்கச் செய்துவிடும்” என்கிறது மூன்று நீதிபதிகளின் தீர்ப்பு.

இறுதியில், பெரும்பான்மையினரான நால்வரின் தீர்ப்பே உறுதியாகியிருக்கிறது. ஊடகங்கள் பொதுவில் சாதி, மதம் எனும் சொற்களின் எதிர்மறை அர்த்தப் பின்னணியின் அடிப்படையில் இந்தச் செய்தியை மக்களிடம் கொண்டுசேர்த்ததன் விளைவாக, பெருமளவிலான தேசம் இந்தத் தீர்ப்பை ஆக்கபூர்வமானதாகக் கருதிக் கடக்கிறது. இரு தரப்பு நீதிபதிகளின் அடிப்படை நோக்கங்களிலும் பிழை இல்லை என்றாலும், இத்தீர்ப்பை ஒரே கண்ணோட்டத்தில் கடப்பது சாத்தியமாக இல்லை.

பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்ப்பானது ஜனநாயகத்தை லட்சியவாத நோக்கில் அணுகுகிறதே அன்றி, உண்மையான சமூக களச் சூழலைக் கணக்கில் கொண்டதாகத் தெரியவில்லை. சாதி, மத வெறுப்பு அரசியலை எதிர்கொள்ள போதுமான அளவு சட்டங்கள் ஏற்கெனவே உள்ளன. இப்போதைய தீர்ப்பு பாதிப்புக்குள்ளாக்குவோர், பாதிக்கப்படுவோர் இரு தரப்பையும் ஒன்றெனப் பொதுமைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

சாதி அல்லது மதத்தின் பெயரால் குடியிருக்க வாடகைக்கு வீடு மறுக்கப்படும் ஒருவர், அவர் பாதிக்கப்படக் காரணமான அவரது சாதி அல்லது மதத்தை முன்னிறுத்தி அரசியல் பேசுவதும், அவருக்கு வீட்டை மறுப்பவர் தன்னுடைய சாதி அல்லது மதப் பெருமிதத்தை முன்னிறுத்தி அரசியல் பேசுவதும் ஒன்று அல்ல. இந்தத் தீர்ப்பு இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பதாகத் தோன்றுகிறது. அதேபோல, சாதி, மத அடையாளங்கள் வரிசையில் எதிர்மறையாக மொழி, இன அடையாளங்களை வரிசைப்படுத்துவது தேசிய இன அடையாளத்தைக் கொச்சைப்படுத்துவதாகும். சாதி ஒழிக என்று குரல் கொடுக்கலாம். மொழி ஒழிக என்று ஒருவர் கூற முடியுமா? சாதி - மதம் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என்று ஒருவர் முழங்கலாம்; மொழி இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என்று ஒருவர் முழங்க முடியுமா?

இந்தப் பார்வையானது சுதந்திர இந்தியாவின் ஆரம்ப காலப் பதற்றப் பார்வையின் மறுதொடர்ச்சி. ஒரு ரத்தக்களறிப் பிரிவினையோடு சுதந்திரத்தை அடைந்த தேசத்துக்கு அன்றைக்கு நிறையவே பிரிவினை அபாயமும் அச்சமும் இருந்தன. அவற்றின் பொருட்டு, பிராந்திய உணர்வுகள் துச்சமென அணுகப்பட்டன. தேசிய நோக்கங்களையும் அதிகாரங்களையும் மையப்படுத்தும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தை வரித்துக்கொண்டோம்.

சுதந்திரத்துக்கு ஏழு தசாப்தங்களுக்குப் பின் இன்று நம்முடைய குடியரசு எதிர்கொள்ளும் அபாயம் பிரிவினைவாதம் அல்ல; தேசிய இனங்களின் அடையாளங்கள் பறிபோவதும், விளைவாக நாட்டின் மைய ஆதாரமான பன்மைத்துவம் சிதைக்கப்படுவதுமே இன்றைய அபாயம்.

நாட்டின் மையச்சரடான பன்மைத்துவத்துக்குப் பாதிப்பு ஏற்படும்போது, ஒன்றுகூடியிருக்கும் தேசிய இனங்கள் இடையே உருவாகியிருக்கும் பாரபட்சங்களைத் தேர்தலில் பிரச்சினையாக்குவது எப்படிக் குற்றமாகும்? ‘‘தேசிய மொழிகளில் ஒன்றான நம்முடைய மொழிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை; இதுவரையிலான பிரதமர்கள், குடியரசுத் தலைவர்களில் ஒருவர்கூட நம்மவர் இல்லை; இந்தச் சூழல் மாற வரும் தேர்தலில் வாக்களியுங்கள்’’ என்று வடகிழக்கு மாநிலங்களில் ஒருவர் பிரச்சாரம் செய்தால், அது அவருடைய தவறா; இப்படி ஒரு நிலையில் அவரை வைத்திருக்கும் அரசின் தவறா? சட்டம் உண்மையில் யார் பக்கம் நிற்கிறது?

இன்றைய சூழலுக்கு ஏற்ப இந்திய அரசமைப்புச் சட்டம் மறுவாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். வெற்று தேசியப் பெருமித மனோநிலையிலிருந்து நாம் விடுபட வேண்டும். சமூகத்தில் சமத்துவம் இல்லாதபோது, வார்த்தைகளில் மட்டும் சமத்துவம் நிலவ வேண்டும் என்கிற கனவு அர்த்தமற்றது. வெறுமனே சாதி இல்லை என்று சொல்வதாலேயே சமூகத்தில் சாதி இல்லை என்றாகிவிடாது. நான் தமிழர்க்கான பாதிப்புகளைப் பேசுவதாலேயே, இந்திய தேச விரோதி ஆகிவிட மாட்டேன். நாம் கடக்க வேண்டிய தூரத்தைப் பேசாமல் அல்ல; பேசித்தான் கடக்க வேண்டும்!

-‘தி இந்து’, ஜனவரி, 2017

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சமஸ் | Samas

சமஸ், தமிழ் எழுத்தாளர் - பத்திரிகையாளர். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியின் செயலாக்க ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’, ‘ஆனந்த விகடன்’ ஆகியவற்றின் ஆசிரியர் குழுக்களில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் அதன் புகழ் பெற்ற நடுப்பக்க ஆசிரியராகப் பணியாற்றியவர். 'அருஞ்சொல்' இதழை நிறுவியதோடு அதன் முதல் ஆசிரியராகப் பணியாற்றிவர். ‘சாப்பாட்டுப் புராணம்’, ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’, ‘அரசியல் பழகு’, ‘லண்டன்’ உள்ளிட்ட நூல்களை சமஸ் எழுதியிருக்கிறார். திராவிட இயக்க வரலாற்றைப் பேசும் ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூல்களும், கல்வியாளர் வி.ஸ்ரீநிவாசன் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ நூலும், 2500 ஆண்டு காலத் தமிழர் வரலாற்றைப் பேசும் 'சோழர்கள் இன்று' நூலும் சமஸ் தொகுத்த முக்கியமான நூல்கள். தொடர்புக்கு: writersamas@gmail.com


3






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

There is a difference between an individual trying to redress a grievance because of his caste, religion, race or language and using the same parameters in elections to secure votes. No doubt, the later is an abject example for rousing the sentiments of the people in election time , when tempers are running high and rational thinking is at its low. This is too dangerous in a country like ours, where the people are already divided on the basis of region, religion, race, caste and language and what not. That is why, Indian Constitution is against any sort of discriminations based on the above, even in routine functioning of the government, not to speak of one of its important constitutional functions ie., public elections.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

வாழ்விடம்தாத்தாவர்கீஸ் குரியன்மொழிப் போராளிகள்நூலக ஆணைக் குழுச் சீர்திருத்தம்சொத்து பரிமாற்றம்அதிக மழைமேற்கத்திய உணவுகள்நேபாளம்முனைகள்அடையாள அரசியல்மொழியாக்கம்வயிற்றுப் புற்றுநோய்பால் உற்பத்தி மக்கள்பாஜகவின் உள்முரண்தாய்மொழியில் உயர்கல்விகட்டுப்பாடு இல்லையா?அனுபவக் குறைவுஇந்தியா – பாகிஸ்தான்: வெற்றிக்கும் தோல்விக்குமான இவ.ரங்காசாரிதெற்கிலிருந்து ஒரு சூரியன்அழுத்தம்சுந்தர் பிச்சை அருஞ்சொல்பூர்வாஞ்சல்பிரதிட்ஷைஇடதுசாரிகள்தொடர்ந்து மறுக்குது அரசாங்கம்தமிழில் அர்ச்சனையோகேந்திர யாதவ்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!