கட்டுரை, அரசியல், சமஸ் கட்டுரை, சமஸ் 5 நிமிட வாசிப்பு
ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரை
முதுபெரும் பத்திரிகையாளரான டி.ஜே.எஸ்.ஜார்ஜ் வார்த்தைகளை மிகுந்த கவனத்துடன் பயன்படுத்துவதற்குப் பெயர் பெற்றவர். கச்சிதர். அதனாலேயே அவரிடமிருந்து அந்தக் கருத்து வெளிப்பட்டபோது எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. “பாஜகவின் மிகப் பெரிய சொத்து நரேந்திர மோடியோ அமித் ஷாவோ இல்லை; அது ராகுல் காந்தி.” இதைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஜார்ஜ் சொன்னார். அவருடைய தொலைநோக்கை எண்ணிப்பார்க்கும்போது அன்றைய அதிர்ச்சி இன்றைய ஆச்சரியம் ஆகிறது.
குடியரசுத் தலைவர் - துணைத் தலைவர் தேர்தல்களில் பாஜகவின் வெற்றிகரமான காய் நகர்த்தல்கள் 2014, 2019 மக்களவைத் தேர்தல்களைவிடவும் 2024 தேர்தலில் மேலும் நெருக்கடி மிக்க சவால்களை காங்கிரஸ் எதிர்கொள்ள நேரிடும் என்பதை உறுதிபடுத்துகிறது.
மோடியின் வருகைக்குப் பின் அதிபர் தேர்தல்போல இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஆகிவிட்டது வெளிப்படை. முந்தைய இரு தேர்தல்களிலும் பாஜகவின் மோடிக்கு எதிரே எதிர்க்கட்சிகளின் பிரதிநிதியாக ராகுல் காந்தியை காங்கிரஸ் முன்னிறுத்தவில்லை. அவரும் அதை விரும்பவில்லை. 2024 தேர்தலில் ராகுல் விரும்பி, காங்கிரஸ் அவரை முன்னிறுத்த முற்பட்டாலும், காங்கிரஸுக்கும் ராகுலுக்கும் ஏனைய எதிர்க்கட்சிகள் அந்த இடத்தைத் தருவது சிரமம் என்றே தோன்றுகிறது.
முன்னுதாரணர் கே.ஆர்.நாராயணன்
குடியரசுத் தலைவர் – துணைத் தலைவர் பதவிகளை அலங்காரப் பதவிகளாகச் சுருக்கிட முடியாது. ஒரு சரியான மனிதர் இந்தப் பதவிகளில் அமர்ந்தால், அவரால் எப்படிச் செயல்பட முடியும் என்பதற்கு கே.ஆர்.நாராயணன் ஏற்கெனவே முன்னுதாரணமாகச் செயல்பட்டிருக்கிறார்.
அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தும் முயற்சியில் வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜக அரசு முனைப்போடு இருந்த நாட்களில், “நாம் அரசமைப்புச் சட்டத்தைக் கைவிட்டுவிட்டோமா அல்லது நம்மை அரசமைப்புச் சட்டம் கைவிட்டுவிட்டதா என்று நம்மை நாம் ஆய்வுக்குட்படுத்திக்கொள்வோம்!” என்று பேசி அப்படி ஒரு முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் நாராயணன்.
சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்கும் பாஜக அரசின் பரிந்துரையைத் திரும்பப் பெறச் செய்தவர் நாராயணன். குஜராத் கலவரம் நடந்தபோது, வாஜ்பாயை அழைத்து, குஜராத்துக்கு ராணுவத்தை அனுப்பச் சொன்னவர். குஜராத் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பிரதமரைச் சந்தித்து முறையிட வந்தபோது அங்கே அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை; குடியரசுத் தலைவர் மாளிகையில் தன் மனைவியுடன் அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார் நாராயணன். பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றார்.
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளும் முக்கியமான பணிகளில் ஒன்று, மாநிலங்களவையின் தலைவர் பதவியில் அமர்ந்து அந்த அவையை வழிநடத்துவது. முன்னதாக குடியரசுத் துணைத் தலைவராக நாராயணன் இருந்த காலகட்டத்தில்தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது பாபர் மசூதி இடிப்பை காந்தி கொலைக்கு நிகரான சோகம் என்று நாடாளுமன்றத்தில் துயரம் பொங்கக் குறிப்பிட்டார்.
தேசத்தின் மனசாட்சியாகவும், அரசமைப்பின் பாதுகாவலர்களில் ஒருவராகவும் குடியரசுத் தலைவரும், துணைத் தலைவரும்கூட செயல்பட முடியும்.
2024 எழுப்பும் சவால்கள்
பாஜக 2024 தேர்தலை வெல்லுமானால், இந்திய நாடாளுமன்றத்தின் அமைப்பையே அது மாற்றியமைக்கும்; இந்திய நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் சுருங்கிவிடும் என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. இன்றைக்கே 10 நிமிடங்கள்கூட விவாதிக்காமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதையும், எதிர்க்கட்சிகள் வெளியே கூக்குரலிடும் நிலைக்கு நாடாளுமன்றம் தேய்ந்திருக்கும் சூழலில், வரவிருக்கும் காலகட்டத்தின் குடியரசுத் தலைவர் – துணைத் தலைவர் தேர்தல்கள் மிகுந்த முக்கியத்துவத்தோடு கவனிக்கப்பட்டன. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கான ஒத்திகை வாய்ப்பாகவும் இந்தத் தேர்தல்கள் பார்க்கப்பட்டன.
பாஜகவின் எதிர்க்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் மூன்று முக்கிய கட்சிகளில் ஒன்றாக காங்கிரஸ் இருக்கிறது. மத்தியில் பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் டெல்லியிலும், ஆந்திராவிலும், ஒடிஷாவிலும், வங்கத்திலும் என்று பல இடங்களில் ஆளும் மாநிலக் கட்சிகளோடு காங்கிரஸ் கை கோக்கவும் வேண்டும்; உள்ளூரில் அந்தக் கட்சிகளை எதிர்த்துக் களமாடவும் வேண்டும். இப்படியான அணிகூடலுக்குப் பொதுக் கதையாடல் ஒன்று அவசியம். அதிலிருந்தே பொதுச் செயல்திட்டத்தை உருவாக்க முடியும். குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களைப் பொறுத்த அளவில், வேட்பாளர் தேர்வுதான் அந்தக் கதையாடலை உருவாக்கும் புள்ளி. ஏற்கெனவே ஓட்டுகள் அடிப்படையில் பாஜக வலுவாக இருக்கிறது.
இவ்வளவு நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும்போது வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ்தான் முந்திக்கொண்டிருக்க வேண்டும். மாநிலங்களின் முக்கியமான தலைவர்களை நேரில் சென்று ராகுல் சந்திருக்க வேண்டும். எல்லா முக்கியத் தலைவர்களையும் டெல்லிக்கு வரவழைத்து, ஒன்றுகூடி கலந்து பேசி, தன்னளவிலேயே ஈர்ப்பான பின்னணி கொண்ட ஒரு பொது வேட்பாளரைக் கண்டறிந்து ராகுல் அவரை அறிவித்திருக்க வேண்டும்.
கணக்குகளும் கற்பனையும்
என்ன நடந்தது? இரண்டு தேர்தல்களிலும் பாஜக முந்திக்கொண்டது. பழங்குடி சமூகத்திலிருந்து வந்த முன்னாள் ஆளுநரான திரௌபதி முர்முவை பாஜக தேர்ந்தெடுத்தது சரியான சீட்டு. ஒடிஷாவைச் சேர்ந்தவர் முர்மு என்பதால், பாஜகவின் எதிர் வரிசையில் இருந்திருக்க வேண்டிய நவீன் பட்நாயக்கும்கூட “ஒடிஷாவின் புதல்வியை பிஜு ஜனதா ஜளம் ஆதரிக்கும்” என்று அறிவிக்க வேண்டியதானது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் வடகிழக்கின் எட்டு மாநிலங்களைச் சேர்ந்த பல காங்கிரஸ் பிரதிநிதிகளும்கூட தங்களில் ஒருவரான பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் முதல் முறையாக முதல் குடிநபர் தேர்தலில் நிற்கும்போது அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை எண்ணி, கசத்த மனத்துடனேயே வாக்களித்தார்கள். வேறு அரசியல் நிர்ப்பந்தங்களுக்காக பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டியிருந்த கட்சிகளுக்கும்கூட திரௌபதி முர்மு தேர்வு நல்ல சாக்கானது.
எதிரே காங்கிரஸுக்கு எந்தக் கற்பனையும் கணக்குகளும் இல்லை என்பதை எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவின் தேர்வு வெளிப்படுத்தியது. உயர் வர்க்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சின்ஹா முன்னாள் பாஜககாரர்; வாஜ்பாய் அரசில் அமைச்சராகவே இருந்தவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு வென்ற மறுநாள் அமித் ஷா ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில் ஒரு கட்டுரை எழுதினார். ‘முதல் குடிநபரும் 9 சதவீதமும்!’ என்பது கட்டுரையின் தலைப்பு. “நாட்டின் மக்கள்தொகையில் 9% பங்கு வகிக்கும் பழங்குடியினத்தவரிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு ஒரு பெண் வருவதற்கு 70 ஆண்டுகள் ஆகியிருக்கிறது. இதை பாஜகவும் மோடியும்தான் செய்ய முடிந்தது. முன்னதாக வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசுதான் 1999இல் பழங்குடிகள் நலனுக்கான தனி அமைச்சகத்தை அமைத்தது. தொடர்ந்து, 2003இல் சட்டத் திருத்தத்தின் மூலம் பழங்குடிகள் விவகாரத்துக்கு என்று தனி ஆணையம் அமைத்தது. இப்போது இந்த முன்னெடுப்பு!” என்று பழங்குடிகள் முன்னேற்றத்துக்கான உரிமையை பாஜகவுக்குக் கோரும் கட்டுரை அது.
குறைந்தது 10 மாநிலங்களின் தேர்தல் களங்களில் தாக்கத்தை ஏற்பட்டுத்த வல்ல முடிவு திரொபதி முர்முவின் தேர்வு. நீண்ட நோக்கில் இந்து மதத்திலிருந்தும், இந்தியா எனும் அமைப்பிலிருந்தும் தங்களை வெளியே வைத்துக்கொண்டிருக்கும் கணிசமான பழங்குடி மக்களை இந்துத்துவக் குடைக்குள் உள்ளணைப்பதற்குமான செயல்பாடும்கூட.
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் நேரடியாகவே ஓட்டரசியலில் காலடி வைத்தது பாஜக. ராஜஸ்தானில் பிறந்து, காங்கிரஸ் பின்னணியில் வளர்ந்து, பல கட்சிகள், பல பதவிகளுக்கு மாறி கடைசியில் பாஜகவில் அடைக்கலமான ஜெகதீப் தங்கருடைய தேர்வின் பின்னணியில் ஜாட் சமூகத்துடனான அதன் உரசலான உறவு இருந்தது.
டெல்லியில் தொடங்கி மேலே ஹரியானா, இந்தப் பக்கம் பஞ்சாப், அந்தப் பக்கம் உத்தர பிரதேசம் வரை பரவிக் கிடக்கும் ஜாட் சமூகத்தினர் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 2% அளவுக்குள் அடைத்துவிடக் கூடியவர்கள் என்றாலும், வட இந்தியாவில் கொத்துக் கொத்தாகப் பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடியவர்கள். மோடியின் வெற்றிக்கு 2014, 2019 தேர்தல்களில் முழுப் பக்கபலமாக நின்ற சமூகத்தினர் ஜாட்டுகள். வேளாண் சட்டங்களும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் ஆளும் பாஜக – விவசாய சமூகத்தினரான ஜாட்டுகள் இரு தரப்பையும் எதிரெதிரே நிறுத்தின. சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டாலும் ஜாட்டுகளின் கோபம் தணியவில்லை. ஜெகதீப் தங்கர் தேர்வானது, ஜாட் சமூகத்தினருக்கு பாஜக அனுப்பும் சமாதான ஓலை. விரைவில் ராஜஸ்தான் தேர்தல் வரும் சூழலில் அங்கும் இதன் தாக்கம் பிரதிபலிக்கும் என்று பாஜக நம்புகிறது.
எதிரே காங்கிரஸால் கடைசி நேரத்தில் அவசர கதியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மார்கரெட் ஆல்வா. அவர் மீது புகாராகச் சொல்ல ஏதுமில்லை. அதேபோல விஷேசமாகச் சொல்லவும் ஏதுமில்லை. கர்நாடகத்தைச் சேர்ந்த கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த இவர் மூன்று தசாப்தங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இடையே மத்திய அமைச்சராக இருந்தார். அப்புறம் ஐந்தாண்டு காலத்துக்குள் உத்தராகண்ட், ராஜஸ்தான், குஜராத், கோவா என்று நான்கு மாநிலங்களில் அடுத்தடுத்து ஆளுநராக இருந்தார். கிட்டத்தட்ட அரசியலில் ஓய்வுபெற்றவராக இருந்தவரை இப்போது கூட்டிகொண்டு வந்திருக்கிறார்கள். இவரைத் தேர்ந்தெடுத்ததில் காங்கிரஸைக் காட்டிலும் ஆர்வத்தோடு செயல்பட்டவர்கள் மார்க்சிஸ்ட்டுகள்.
மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் உடனே இதற்கு எதிரான முடிவை எடுத்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளரையே முன்மொழிந்த அக்கட்சி, துணைத் தலைவர் தேர்தலிலேயே நாங்கள் பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்தது. மார்கரெட் ஆல்வாவுக்கு எதிரே பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஜெகதீப் தங்கர் கடந்த மூன்றாண்டுகளில் ஆளுநர் பதவியில் அமர்ந்து மம்தா அரசுக்கு அன்றாடம் குடைச்சல்களைத் தந்தவர். அப்படியிருக்க ஏன் ஆல்வாவை நிராகரிக்கிறது திர்ணாமூல் காங்கிரஸ் என்ற கேள்விக்கு அக்கட்சியின் டெரிக் ஓ பிரையன் பதில் சொன்னார். “நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் சேர்த்து 36 உறுப்பினர்கள், சட்டமன்றத்தில் 235 உறுப்பினர்களை வைத்திருக்கும் எங்களைப் போன்ற ஒரு கட்சியை போகிறபோக்கில் நடத்தக் கூடாது என்று காங்கிரஸுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.” அவசரஅவசரமாக ஒரு கூட்டம் கூட்டி வேட்பாளரைத் தீர்மானித்துவிட்டு, அறிவிப்பதற்குக் கால் மணி நேரம் முன்னர் தொலைபேசியில் அழைத்து ஒப்புதலைக் கேட்டிருக்கிறார்கள். காங்கிரஸின் அதிகாரப்பூர்வமற்ற செயல் தலைவர் ராகுல் காந்தி இடைப்பட்ட நாட்களில் வெளிநாட்டுப் பயணத்தில் மும்முரமாக இருந்தார்.
காங்கிரஸுக்கு எதிர்க்கட்சிகள் அணியைத் தலைமை வகிக்கும் தகுதி இல்லை என்பதையே அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறது திரிணமுல் காங்கிரஸ்.
அரசியலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகர்வும் முக்கியம். இது ஒரு தீவிரமான வேலை. ராகுல் திரும்பத் திரும்ப அதற்குத் தான் லாயக்கில்லை என்பதையே நிரூபிக்கிறார். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையோடு, அவர்களின் கற்பனை வறட்சி, அலட்சியப்போக்கு, தலைமையின்மை எல்லாவற்றையுமே வெளிப்படுத்துபவை ஆகிவிட்டன குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்கள்.
ராகுலின் பொறுப்பற்றத்தன்மை காங்கிரஸையும், காங்கிரஸின் பொறுப்பற்றத்தன்மை ராகுலையும் பீடித்தது போக, மொத்த எதிர்க்கட்சிகளையும் இந்தப் பண்பு பீடிப்பதையும், அதிலிருந்து திரிணமுல் காங்கிரஸ் விலகியிருக்க விரும்புவதை வெளிப்படுத்துவதாகவும்கூட இதைப் புரிந்துகொள்ளலாம். ஜார்ஜ் சொன்னதுபோலத்தான். காங்கிரஸுக்கு மட்டுமல்லாது, எதிர்க்கட்சிகளுக்கும் ராகுல் சுமையாகிக்கொண்டிருக்கிறார்.
மோடியின் ரதத்தில் நான்கு குதிரைகளில் ஆர்எஸ்எஸ், அமித் ஷா, பாஜக எனும் மூன்று குதிரைகளுடன் கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரையாக ராகுலும் ஓடிக்கொண்டிருக்கிறார்!
-‘குமுதம்’, ஜூலை, 2022
தொடர்புடைய கட்டுரைகள்:
காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!
தமிழகத்திலிருந்து ராகுலுக்கு சில பாடங்கள்
காங்கிரஸுக்கு நேரு குடும்பம் விடை கொடுக்க வேண்டிய தருணம் இது
படுகுழியில் தள்ளிவிடக்கூடும் ராகுலின் தொடர் மௌனம்
3
4
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Vidhya sankari 2 years ago
யாராவது இதை ராகுல் காந்திக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் சொன்னால் பரவாயில்லை. காங்கிரஸ் மக்களைக் கைவிடலாமா? அதுவும் இந்தியா குரங்கு கையில் பூமாலை போல் சின்னாபின்னமாகும் போது? திரிணமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு நாட்டின் எதிர்காலத்தை விட ஈகோ முக்கியமாகும் போது?
Reply 4 1
Login / Create an account to add a comment / reply.