கட்டுரை, அரசியல், வரலாறு, சமஸ் கட்டுரை, ஆளுமைகள் 5 நிமிட வாசிப்பு
வி.பி.சிங்: காலம் போடும் கோல்
எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. காலையில் வீட்டில் பத்திரிகைகளைப் பார்த்தபோதே உணர்ந்த ஒன்றுதான் என்றாலும், மாலையில் அலுவலகத்தில், அன்று வெளியான எல்லாப் பத்திரிகைகளையும் ஒன்றுசேரப் பார்த்தபோது ஆழமாக அது உறைத்தது.
பத்திரிகை அலுவலகங்களில் அன்றாடம் நடக்கும் செய்தியறைக் கூட்டம் முக்கியமான ஒரு செயல்பாடு. மறுநாள் பத்திரிகையில் எந்தெந்த விஷயங்கள் எல்லாம் இடம்பெறப்போகின்றன என்பது ஆசிரியர் குழுவினரால் இந்தக் கூட்டங்களில்தான் பேசப்படும். அந்தந்த நாளின் எல்லாப் பத்திரிகைகளையும் வைத்து, ‘யார் யார் எந்தெந்தச் செய்திகளை எப்படி பிரசுரித்திருக்கிறார்கள்? எதைத் தலைப்புச் செய்தியாக்கியிருக்கிறார்கள்? எப்படித் தலைப்பு கொடுத்திருக்கிறார்கள்? நாம் எதையெல்லாம் தவறவிட்டிருக்கிறோம்?’ என்றெல்லாம் இந்தக் கூட்டத்தில் விவாதிப்பதும் ஒரு மரபு.
இந்தியாவின் தேசிய நாளிதழ்களுக்கு விஸ்வநாத் பிரதாப் சிங்குடைய மறைவு ஒரு பெரிய செய்தியாகவே தோன்றவில்லை. அவருடைய சின்ன படத்துடன் ஒரு பத்திச் செய்தியை முதல் பக்கத்தில் வைத்து, உள்ளே கால் பக்க அளவுக்கு செய்தியை வெளியிட்டிருந்தன. வழக்கமாக முதல் பக்கத்தில் பாதி அளவும் உள்ளே நான்கைந்து பக்கங்களும் ஒதுக்குவார்கள்.
தொடர்ந்து ஒரு மாதத்துக்கு இந்த விஷயத்தைக் கவனித்தேன். நாட்டிலேயே அதிகமாக விற்பனையாகும் ஆங்கில வார இதழ் அவருக்கு முக்கால் பக்கம் ஒதுக்கியிருந்தது; முன்னாள் பிரதமர்கள் பலருக்கு அட்டைப் படத்துடன் சிறப்பிதழ் வெளியிட்டு அஞ்சலி செலுத்தும் இதழ் அது. பெரும்பான்மை வார, மாத இதழ்கள் இப்படியே இருந்தன. ஒப்பீட்டளவில் அமெரிக்காவின் ‘நியுயார்க் டைம்ஸ்’ மேம்பட்ட மரியாதையை அவருக்குச் செய்திருந்ததாகத் தோன்றியது.
வி.பி.சிங் மறைந்த நாளுக்கு முந்தைய நாள் (2008, நவம்பர் 26) நாட்டையே அதிர்ச்சியில் தள்ளி மும்பை தாக்குதல் எல்லோர் கவனத்தையும் ஆக்கிரமித்திருந்தது மட்டுமே இதற்கான காரணம் இல்லை. இந்தியாவின் தேசிய ஊடகங்களுக்கு அவர் தேவதூதராகத் திகழ்ந்த காலகட்டமும் உண்டு; பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக 27% இடஒதுக்கீட்டைத் தரும் ‘மண்டல் கமிஷன் பரிந்துரை’யை அமலாக்கும் முடிவை அறிவித்த கணத்தில் அவர் பாதாளத்தின் அடியாழத்துக்கு அழுத்தப்பட்டு, புதைக்கப்பட வேண்டிய பிசாசாக அவர்களுக்கு மாறியிருந்தார். குறைந்தபட்சம் சமூக நீதித் தளத்தில் அவருக்கான அங்கீகாரத்தையும்கூட டெல்லியின் கருத்தாக்கர்கள் மறுத்தனர். காலம் இப்போது நிதிஷ்குமார் வழியே திருப்பி அடிக்கிறது.
இந்திய அரசியலில் அரிய நிகழ்வு
இந்திய அரசியலில் ஓர் அரிய நிகழ்வு வி.பி.சிங். செல்வாக்கான வெகுமக்கள் தலைவர் என்று அவரைக் கூறிட முடியாது. சொல்லப்போனால், தனக்கென்று ஒரு கோஷ்டியைக்கூட உருவாக்காத அவரது இயல்பே அரசியலில் அவருடைய எழுச்சியையும் வீழ்ச்சியையும் தீர்மானித்தது.
உத்தர பிரதேசத்தில் 1931இல் பிறந்த வி.பி.சிங் இளவயது முதலாக ‘ராஜா’ என்றழைக்கப்பட அவருடைய குடும்பப் பின்னணி காரணமாக இருந்தது. பல கிராமங்களைத் தங்களுடைய பண்ணைகளாக நிலச்சுவான்தார்கள் வைத்திருந்த, இப்படி வைத்திருந்த ஜமீன்தார்கள் குறுநில மன்னர்களாக மதிக்கப்பட்ட காலம் அது. அலகாபாத் பிராந்தியத்திலேயே பெரியதும் இருநூறுக்கும் மேற்பட்ட கிராமங்களையும் கொண்டதுமான மண்டா பண்ணையின் வாரிசு அவர். நாடு சுதந்திரம் அடைந்த வேகத்தில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டுவிட்டாலும், சமூகத்தில் ‘ராஜ குடும்ப அந்தஸ்து’ வி.பி.சிங்குக்கு இருந்தது.
தன்னுடைய உயரமான பின்னணியிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கை மீது வி.பி.சிங் ஆசை கொண்டிருந்தார். இயற்பியல், ஓவியம், கவிதை என்று அறிவுத் துறைகள் மீது லட்சியம் கொண்டிருந்தவரை காந்தியம் இழுத்தது. சபர்மதி ஆசிரமம் சென்று கொஞ்ச காலம் இருந்தார். நேருவின் ஈர்ப்பு காங்கிரஸோடு அவரை இணைத்தது. பூமி தான இயக்கத்தை வினோபா பாவே முன்னெடுத்தபோது தன்னுடைய பெரும்பான்மை நிலங்களை ஏழைகளுக்காக வி.பி.சிங் எழுதிக் கொடுத்தார்.
நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.
நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.
விசுவாசமும் லட்சியவியமும்
இந்திரா, சஞ்சய், ராஜீவ் மீது வி.பி.சிங் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தார். தனக்கு அளிக்கப்பட்ட எந்தப் பதவியிலும் கூடுமானவரை நேர்மையையாகவும் செயல்திறனோடும் பணியாற்ற முயன்றார்; அதை அவருடைய லட்சியவிய வெளிப்பாடு என்று சொல்லலாம். முந்தைய பண்பு அடுத்தடுத்த பதவிகளை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது என்றால், பிந்தைய பண்பு எந்தப் பதவியிலும் அவர் நீடிக்கவிடாமல் குலைத்தது.
தன்னுடைய 38வது வயதில், 1969இல் சட்டமன்ற உறுப்பினரான வி.பி.சிங் அடுத்த இரு தசாப்தங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர், இணை அமைச்சர், முதல்வர், வர்த்தக அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர், பிரதமர் என்று 1990க்குள் மாநிலத்திலும் மத்தியிலுமாக ஒரு சுற்று சுற்றி அடுத்த ஆறாண்டுகளில் அரசியல் ஓய்வை அறிவித்துவிட்டார். 1996இல் திரும்ப பிரதமர் பதவி அவரைத் தேடிச் சென்றபோது திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
இந்திராவால் 1980இல் உத்தர பிரதேச முதல்வர் பதவியில் வி.பி.சிங் அமர்த்தப்பட்டபோது, சட்டமன்றத்தில் பெரும் பலத்தோடு காங்கிரஸ் அமர்ந்திருந்தது. மாநிலத்தின் முற்பட்ட / நிலவுடைமைச் சமூகங்களில் ஒன்றான தாக்கூர் சாதியைச் சார்ந்தவரும், இயல்பாகவே பிற்படுத்தப்பட்டோர் – தலித்துகள் – முஸ்லிம்கள் நலனில் அக்கறை கொண்டிருந்தவருமான வி.பி.சிங் நினைத்திருந்தால் தன்னுடைய அரசியல் கப்பலை வலுவாகக் கட்டமைக்கும் களமாக உத்தர பிரதேசத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். அவருடைய பார்வை டெல்லியில், நாட்டின் கொள்கை வகுப்பிலேயே இருந்தது.
முதல்வர் பதவியில் கடுமையாக உழைத்தார் வி.பி.சிங். ஆனால், சொந்தக் கட்சியினராக இருந்தாலும் சுய அனுகூலம் தேடி வருபவர்களோடு உடன்பட மறுத்து, அவர்களுடைய அதிருப்திக்கு ஆளானார். உத்தர பிரதேசத்தில் தனி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருந்த கொள்ளையர்களைக் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் ஒடுக்க, காவல் துறையை நம்பி அவர் எடுத்த முயற்சிகள் மோசமான என்கவுன்டர்களுக்கு வழிவகுத்தன; இடையில் தன்னுடைய சொந்த அண்ணனையே கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டுக்கு அவர் பறிகொடுக்க நேர்ந்தது; கொள்ளையர்களின் அட்டகாசம் தொடர்ந்தபோது தார்மிகப் பொறுப்பேற்று, பிரதமர் இந்திராவிடம்கூட ஆலோசிக்காமல், இரண்டாண்டுகளில் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். டெல்லி அரசியலுக்கு நகர்ந்தார்.
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
கான்ஷிராம்: அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்
09 Oct 2022
தனித்துவச் செயல்பாடு
கட்சிக்கும் ஆட்சிக்கும் புது வடிவம் கொடுக்க விரும்பியவரான ராஜீவ் தன்னுடைய அரசின் நிதியமைச்சராக வி.பி.சிங்கை நியமித்தபோது, அவர் தாராளமயமாக்கலை நோக்கி நாட்டைத் திருப்பிய தளகர்த்தர்களில் முதலாமவராகச் செயல்பட்டார். மூன்றாண்டு காலம் இந்தப் பதவியில் அவர் இருந்தார். இந்திய அரசின் லைசென்ஸ் ராஜ்ஜியத்தின் உடைவு இங்கிருந்தே தீவிரமானது. மெல்ல தனியார்மயத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை வெளியிட்ட அதேசமயம், பெருநிறுவனங்களை அரசின் கண்காணிப்பு வட்டத்துக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் வி.பி.சிங் எண்ணினார்.
நாடு கடும் நிதி நெருக்கடிக்குள் சென்றுகொண்டிருந்த காலகட்டம் அது. நிதித் துறைக்குள் புழங்கலானபோதுதான் வரி ஏய்ப்பின் பிரம்மாண்ட அளவு வி.பி.சிங்குக்கு முழுமையாகத் தெரிந்தது. அமலாக்கத் துறைக்கு முழு அதிகாரம் கொடுத்தார். அம்பானிகள் உள்பட சோதனை வலைக்குள் வந்தனர். பெருநிறுவன முதலாளிகளிடம் பெரும் வெறுப்பை இந்தச் சோதனைகள் உருவாக்கின. ராஜீவுக்குப் பெரும் அழுத்தத்தை அவர்கள் தந்தனர்.
பாதுகாப்புத் துறைக்கு வி.பி.சிங் மாற்றப்பட்டார். அங்கும் வி.பி.சிங்கின் கண்கள் முக்கியமான ஒப்பந்தங்களில் துழாவின. ஹெச்.டி.டபிள்யு. நீர்மூழ்கிக் கப்பல்கள் கொள்முதல் பேரத்தில் நடந்த முறைகேடுகள் வெளியே வந்தன. தன்னுடைய கவனத்துக்குக் கொண்டுவராமலேயே இதுதொடர்பான விசாரணைக்கு வி.பி.சிங் உத்தரவிட்டதும், பத்திரிகைகளில் செய்திகள் கசிந்ததும் இருவர் இடையிலான மோதலுக்கு வழிவகுத்தது. மூன்றே மாதங்களுக்குள் வி.பி.சிங் பதவி நீக்கப்பட்டார். அடுத்த சில நாட்களில் கட்சியிலிருந்து சிங் வெளியேறிவிட்டார்.
ஆளுங்கட்சியின் முக்கியமான அமைச்சரே ஊழலை அம்பலப்படுத்துவராக உருவெடுத்ததும், அதற்காக அவர் பந்தாடப்பட்டதும் கட்சியிலிருந்து வெளியேறியதுமான நிகழ்வை இந்தியா முதல் முறையாகப் பார்த்தது. ஹெச்.டி.டபிள்யு. நீர்மூழ்கிக் கப்பல்கள் பேரத்தோடு, ஃபோபர்ஸ் பீரங்கி பேரத்திலும் நடந்த முறைகேடுகள் பத்திரிகைகளில் தொடர் செய்திகள் ஆயின. இந்தியாவின் ஊழல் எதிர்ப்பு முகமானார் வி.பி.சிங்.
கூட்டாட்சிக்கான திருப்பம்
எதிர்க்குரலை ஒருங்கிணைக்க ஜன மோர்ச்சா அமைப்பை வி.பி.சிங் ஆரம்பித்தார். நாடு முழுவதும் அவருக்குத் திரண்ட மக்கள் குரல் முன்பு ஜனதா கட்சியில் இருந்து, அப்போது பிரிந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு ஒருங்கிணையும் உத்வேகத்தைக் கொடுத்தது. ஜனதா கட்சி, லோக் தளம் உள்ளிட்ட அந்த அமைப்புகளுடன் ஜன மோர்ச்சாவை இணைத்து ‘ஜனதா தளம்’ கட்சியை வி.பி.சிங் உருவாக்கினார்.
1989 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஜனதா தளம் தலைமையில் ‘தேசிய முன்னணி’ கூட்டணியை உருவாக்கினார். தேசிய முன்னணியின் தலைவராக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என்.டி.ராமாராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வி.பி.சிங் அதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். திமுக தலைவர் மு.கருணாநிதி, அசாம் கண பரிஷத் தலைவர் பிரஃப்புல குமார் மகந்தா உள்ளிட்டார் கூட்டணியின் முக்கியமான தூண்களாகச் செயல்பட்டனர். மாநிலங்களின் குரல்களுக்கு மதிப்பளிக்கும் சக்தியாக அது உருவெடுத்தது.
இந்திய அரசியலைக் கூட்டணி யுகம் நோக்கித் திருப்பியது தேசிய முன்னணி என்று சொல்லலாம். இதற்குப் பின் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் துணிச்சலோ, தனிப் பெரும்பான்மை பெற்றாலும்கூட தனித்து ஆட்சி அமைக்கும் துணிச்சலோ எந்தக் கட்சிக்கும் இன்றுவரை உருவாகவில்லை. அரசமைப்புச் சட்டம் சார்ந்து பெரிதும் ஒற்றையாட்சியாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் அன்றாட அரசியலில், கூட்டணியரசியல் பண்பாடு பெரும் நெகிழ்வுத்தன்மையைக் கொண்டுவந்தது.
பிரதமராகும் வாய்ப்புள்ள அளவுக்குச் செல்வாக்கான ஒரு தலைவர் கிராமம் கிராமமாக மோட்டார் சைக்கிளில் கட்சியினர் பின்னால் உட்கார்ந்துகொண்டு பிரச்சாரத்துக்கு வருவதை முதன்முதலாக இந்திய வாக்காளர்கள் பார்த்தனர். பல இடங்களிலும் பொது நல அமைப்புகள் தாமாகச் செலவழித்து அவருக்கான கூட்டங்களை நடத்தின. வரலாற்றின் மாபெரும் வெற்றியாக 49% வாக்குகள்; 404 இடங்களோடு நாடாளுமன்றத்தில் நுழைந்த ராஜீவின் காங்கிரஸை அடுத்து வந்த 1989 தேர்தலில் 197 இடங்களுக்குள் முடக்கியது தேசிய முன்னணி. கூட்டணிக்குள் அவருடைய ஜனதா தளம் வெறும் 143 இடங்களையே கொண்டிருந்ததும், அந்த ஜனதா தளம் மாநிலத்துக்கு மாநிலம் பல தலைவர்களின் கீழ் பல பிரிவுகளாகச் செயல்பட்டதுமான சூழல் வி.பி.சிங் அரசு எதிர்கொண்ட முதல் தீயூழ்; நேரெதிர் சித்தாந்தங்களைக் கொண்ட பாஜக (85), மார்க்ஸிஸ்ட் (33) இரு கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சியை நகர்த்துவதான சூழல் இரண்டாவது தீயூழ்; நெருக்கடிகள் வி.பி.சிங் அரசை அடுத்தடுத்துச் சூழ்ந்தது மூன்றாவது தீயூழ்.
கனவு அரசு
முடிவுகள் எப்படியோ, தேசிய அரசியலில் அதுவரை நிகழாத பல முன்முயற்சிகளை மேற்கொள்ளும் அரசாக வி.பி.சிங்குடையது இருந்தது. குறிப்பாக, மாநிலங்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் முடிவுகளுக்கு முன்னுரிமை தந்தார் வி.பி.சிங். குறைகள் எவ்வளவு இருந்தாலும், அது ஒரு கனவு அரசாகத் திகழ்ந்தது.
இந்தியாவில் ஒரு முஸ்லிம் – ஒரு காஷ்மீரி - முஃப்தி முஹம்மது சயீது - பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியில் அமர்த்தப்பட்டது முதல் முறையாக வி.பி.சிங் அரசில் நடந்தது. காஷ்மீரிகளுக்கான நல்லெண்ணச் செய்தியாக இதை எண்ணினார்.
தேர்தலே நடத்த முடியாத அளவுக்கான கொந்தளிப்பில் இருந்த பஞ்சாபின் பொற்கோயிலுக்கு, பிரதமராகப் பொறுப்பேற்ற அடுத்த 48 மணி நேரத்துக்குள் சென்றார் வி.பி.சிங். பாதுகாப்பு அச்சங்களைப் புறந்தள்ளி அமிர்தரஸில் திறந்த ஜீப்பில் பயணம் மேற்கொண்டார். முந்தைய ஆட்சிக் காலத்தில் நேரிட்ட சேதங்களுக்கு இது மருந்திடும் தருணமாக அமையும் என்று நம்பினார்.
இலங்கையில் தமிழர் பகுதியில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவத்தினரைத் திரும்பப் பெறும் பணியை விரைவுபடுத்தினார். தமிழர்களுக்கு இது ஓர் ஆறுதல் செய்தி. 1989 மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக ஒரு இடத்தில்கூட தேர்தலில் வெல்லவில்லை என்றாலும், திமுகவை நல்ல கூட்டணித் தோழனாகக் கண்ட சிங், முரசொலி மாறனுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தார். தமிழ்நாட்டின் கோரிக்கைக்குக் காது கொடுத்து, காவிரி நதி நீர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர அவரது ஆட்சியில்தான் ஆணையம் அமைக்கப்பட்டது.
நரசிம்ம ராவ் காலத்துக்கு முன்பே பொருளாதாரச் சீர்திருத்தத்தை வி.பி.சிங் சிந்தித்தார்; மாண்டேக் சிங் அலுவாலியாவிடம் இதற்கான செயல்திட்டத்தை வகுக்கச் சொன்னார். கட்சிக்கு உள்ளும் வெளியிலும் திரண்ட எதிர்ப்புகள் பெரும் முடிவுகள் நோக்கி அவர் நகர்வதைத் தடுத்தன. சந்தைப் பொருளாதாரத்தில் அவருக்கு ஈர்ப்பு இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரத்தின் மைய அச்சு விவசாயிகள் என்பதில் உறுதியாக இருந்தார். ரூ.10,000 கோடிக்கு நாட்டின் முதல் விவசாயக் கடன் தள்ளுபடியை அறிவித்த பிரதமர் அவர். “நம்முடைய விவசாயிகள் வீழ்ச்சியைச் சந்திக்க அரசின் மோசமான கொள்கைகள் காரணம் என்றால், அவர்களுக்கு உதவும் தார்மிகக் கடமையும் அரசுக்கு உண்டுதானே!” என்றார்.
வெளியுறவுத் துறையிலும் ஆக்கபூர்வமான நகர்வுகளை அவர் முன்னெடுத்தார். சீனாவிடம், “இருவருக்குமே சண்டியிடும் நோக்கம் இல்லாத நிலையில், எல்லையில் இவ்வளவு படைகளை ஏன் குவித்திருக்கிறோம்?” எனும் தகவல் அனுப்பி இரு தரப்பிலும் படைகளைக் குறைத்தார். இந்தியாவுடன் இன்னொரு போருக்குத் தயாராகிக்கொண்டிருந்த பாகிஸ்தான் சமாதான வார்த்தைகளுக்கு அசையாதபோது, “இந்தியா தன் மீதான எந்தத் தாக்குதலுக்கும் பதிலளிக்கும் முழு வல்லமையோடு இருக்கிறது” என்று அமெரிக்கா மூலம் தகவல் அனுப்பி பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
தன்னுடைய அரசு பாஜக ஆதரவை நம்பியிருந்தபோதும், மதநல்லிணக்கம் - சமூகநீதியைக் காப்பதில் உறுதியை வெளிப்படுத்தினார் வி.பி.சிங். 1992இல் நிகழ்ந்த பாபர் மசூதி இடிப்பு முன்னதாக அவருடைய ஆட்சிக் காலகட்டத்திலேயே நடந்திடுவதற்கான வாய்ப்புகள் இருந்தன. அத்வானியின் ரத யாத்திரையை முடக்கும் வகையில், கைது நடவடிக்கைக்கு அவர் உத்தரவிட்டதுதான் அவருடைய ஆட்சிக்கான ஆதரவை பாஜக விலக்கிக்கொள்வதற்கான இறுதிக் காரணமாக அமைந்தது. ஆயினும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அமலாக்கம் நோக்கி வி.பி.சிங் நகர்ந்தபோதே அவருடைய ஆட்சியின் ஆயுள் முடிவு தீர்மானிக்கப்பட்டிருந்தது. பொது அமைப்புகள் என்று நம்பப்பட்டவை எல்லாம்கூட - இந்திய மருத்துவக் கூட்டமைப்பு ஓர் உதாரணம் - வி.பி.சிங்கைக் கடுமையாகச் சாடியதை நான் வாசித்தேன். அவர் முகத்தின் முன் கற்கள் வீசப்பட்டன. “என் கால்கள் உடைந்தாலும், கோலை நான் அடித்துவிட்டேன்” என்று பிற்பாடு இதுபற்றிக் குறிப்பிட்டார் வி.பி.சிங்.
மண்டலரசியல் அல்ல, விபியரசியல்
வெறும் 11 மாதக் காலம். சொந்தக் கட்சித் தலைவர்களே வி.பி.சிங்கைப் பல சமயங்களில் பொருட்படுத்தப்படுத்தவில்லை; அன்றாடம் சிக்கல்களை உருவாக்கி அரசை நிலைக்குலைத்தனர்; யார் மீது நடவடிக்கை எடுத்தாலும் ஆட்சி கவிழும் அபாயம்.
தன்னாலானதை வி.பி.சிங் முயன்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை அரசு எதிர்கொண்டபோது கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரதிநிதிகளும், சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமத்துவம் பேசுபவர்களும் அரசை ஆதரிப்பார்கள் என்ற ஒரு நம்பிக்கை வி.பி.சிங்குக்கு இருந்தது. அது எப்படி நடக்கும்?
சமூக நீதித் தளத்தில் மக்கள் திரள்களின் உருவாக்கம் இன்னும் இந்தியாவில் முழுமை அடையவில்லை. சொல்லப்போனால், அரசியல் தளத்தில் பிற்படுத்தப்பட்டோர் என்றைக்குத் தங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருதியிருக்கின்றனர்; சாதிகளாகத்தானே அவர்கள் அடையாளம் காண்கின்றனர்?
வி.பி.சிங் ஒருவகையில் ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனும் அரசியல் சமூகத் திரளின் முழுமைக்குப் பங்களித்திருக்கிறார். நாடு முழுவதும் இன்று பேசப்படும் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் ஒருவேளை பின்னாளில் தலித்துகளைப் போல, பிற்படுத்தப்பட்டவர்களையும் சமூகரீதியாக ஒருங்கிணைக்கலாம்; அரசியல்மயப்படுத்தலாம்.
வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டவர் இல்லை; சமூக அந்தஸ்தில் தன்னைப் போல மேலே பிறந்த ஒருவர் கீழேயுள்ளவர்கள் முன்னேற்றத்துக்குத் துணையாக இருப்பது தார்மிகம் என்றெண்ணியே செயல்பட்டார். சுயசாதியுணர்விலிருந்து விடுபடும் ஒருவருக்கே இது சாத்தியம். ‘பிற்படுத்தப்பட்டோர்’ எனும் சமூக அடையாளத்தை வரித்துக்கொள்வோர் இந்தத் தார்மிகத்தையும் வரித்துக்கொள்ள வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்கான அரசியலை ‘மண்டலரசியல்’ என்று மண்டல் ஆணையப் பரிந்துரைகளைத் தந்த மண்டலின் பெயரால் குறிப்பிடுவதைவிடவும் பரிந்துரைகளை அமலாக்கத் துணிந்த வி.பி.சிங் பெயரால், ‘விபியரசியல்’ என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். மாற்றத்துக்கான பரிந்துரைகள் சமூகத்திடமிருந்து வரும் குரல்களின் திரட்சி; மாற்றத்தை முன்னெடுப்பவரே சமூகத்தின் திசை மாற்றத்துக்கு வழிவகுக்கிறார்.
பிஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் முன்னெடுத்து அறிவித்திருக்கும் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பும், நாடு முழுவதும் அது ஏற்படுத்திவரும் அதிர்வுகளும் இந்தப் பயணத்தை அடுத்த முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்த்துகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு சமூகமும் தனக்கான உரிய பிரதிநிதித்துவத்தைத் தட்டிப் பெறுவதை இனியும் எவரும் தடுக்க முடியாது. “நாட்டின் பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். ஆனால், நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் கேந்திரமான துறைகளில் உள்ள 97 அரசு செயலர்களில் வெறும் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள்; இது நீதியா?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசுவதைக் கேட்க வி.பி.சிங் உயிரோடு இருந்திருக்க வேண்டும். கட்டித் தழுவியிருப்பார். முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டும் நேரு குடும்பத்தை நேசித்தவர் அவர்.
சமூக, வரலாற்றுப் பின்புலம் சார்ந்து பிஹாரை ஒரு பரிசோதனை மையமாகவும் பாய்ச்சலுக்கான களமாகவும் கருதியவர் வி.பி.சிங். அவருடைய மறைவின்போது அரசு விடுமுறை அறிவித்த ஒரே மாநிலம் பிஹார்; அறிவித்தவர் முதல்வர் நிதிஷ்குமார். தன்னுடைய முன்னோடிக்கு அதைவிடவும் மிகச் சிறந்த அஞ்சலியை இப்போதுதான் நிதிஷ்குமார் செய்திருக்கிறார்!
- ‘குமுதம்’, அக்டோபர், 2023 | நவம்பர் 27, 2023, வி.பி.சிங் 15வது நினைவு நாள்
தொடர்புடைய கட்டுரைகள்
கான்ஷிராம்: அரசியல் ஸ்திரத்தன்மை என்னும் ஆபத்தை உணர்த்தியவர்
டிசம்பர் 6 சொல்லும் செய்தி என்ன?
பிஹாரிலிருந்து ஆரம்பிக்கும் 2024 ஆட்டம்
பிஹார் சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவம்
5
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 12 months ago
வி பி சிங் குறித்த எளிய அறிமுகக் கட்டுரை. கட்டுரைதான் எளிய வடிவம், அன்னார் அசாதாரணர். அவர் காலத்திய பல முக்கிய அரசியல் நிகழ்வுகளைத் தொகுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். இதெல்லாம் தமிழில் கிடைப்பது எங்கள் அதிர்ஷ்டம், நன்றி சமஸ்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Abdul Rahim 12 months ago
நல்ல கட்டுரை. /வி.பி.சிங் மறைந்த நாளுக்கு முந்தைய நாள் (2009, நவம்பர் 26)/ Please verify the year.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.