கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
திமுகவிடம் மண்டல் கட்சிகள் கவனிக்க வேண்டியது என்ன?
பொருளாதாரரீதியாக பின்தங்கிய முற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை சமீபத்தில் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தது. இதைத் திமுக உள்ளிட்ட ஒரு சில அரசியல் கட்சிகள் மட்டுமே எதிர்த்தன. இன்னும் சொல்லப்போனால் கல்வி, வேலைவாய்ப்பில் பொருளாதாரரீதியில் நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டைத் திமுக தவிர மைய நீரோட்டத்தில் இயங்கும் எந்தவொரு கட்சியும் எதிர்க்கவில்லை.
அது என்ன பொருளாதார இடஒதுக்கீடு?
இடஒதுக்கீடு என்பது சமூக அடுக்கில், கல்வியில் பின்தங்கி இருப்பவர்கள் முன்னேறுவதற்கான ஓர் ஏற்பாடு. ஒருவர் என்ன சமூகத்தைச் சேர்ந்தவர், அவருடைய அடையாளம் என்ன என்பதைப் பொறுத்து இடஒதுக்கீடு வழக்கப்பட்டது; அதேநேரம் ஒருவருடைய பொருளாதார நிலைமை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதில்லை. கிரீமி லேயர் எனப்படும் வசதி படைத்தவர்கள், இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்துள்ளன.
ஆனாலும் சட்டமியற்றும் இடத்தில் உள்ள அரசியலர்கள் நீதிமன்றத்தின் அழுத்தத்துக்கு பெரிதாக அசைந்து கொடுத்ததில்லை. ஆனால், இப்போது நடைமுறைக்கு வந்துள்ள பொருளாதாரரீதியில் நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீட்டில் மக்களுடைய பொருளாதார நிலைமை மட்டுமே அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
யாருக்கானது நீதித் துறை?
இந்த புதிய நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம், பொருளாதார இடஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்தின் நெறிகளுக்கு எதிரானது இல்லை என்ற சான்றிதழையும் வழங்கியுள்ளது. அது என்ன சட்டத்தின் நெறி? இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சில அம்சங்களை நாடாளுமன்றத்தினாலும்கூட மாற்ற முடியாது என்பது விதி.
இது ஒன்றும் எதிர்பாராத தீர்ப்பு அல்ல. நீண்ட காலமாக இந்திய நீதிமன்றங்கள் இப்படித்தான் இயங்கிவருகின்றன. அப்படி என்றால் இந்திய நீதித் துறை பெரும்பான்மையினரின் தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதா? அது கோரப்படும் இடஒதுக்கீடு யாருக்கு ஆதரவானது, யாருக்கு எதிரானது என்பதைப் பொறுத்தது. நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற பல இடஒதுக்கீடு சட்டத் திருத்தங்கள் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன; நாடாளுமன்றத்தின் ஒப்புதலை நிராகரித்தல் என்பது உலகளவில் இந்திய நீதித் துறைக்கு மட்டுமே உரித்தான தனியுரிமை என்று சொல்லலாம். மற்றபடி இந்திய நீதித் துறை ஒரு சில சமயங்கள் நீங்கலாக பெரும்பாலும் பெரும்பான்மை தரப்பின் பக்கமே நின்றுள்ளது.
மண்டல், அம்பேத்கரிய கட்சிகள் ஆதரவு
பொருளாதார இடஒதுக்கீடுக்கு நாடு தழுவிய அளவில் கிடைக்கும் அரசியல் ஆதரவு மட்டும்தான் எதிர்பாராத ஆச்சரியம். மக்களவையில் சட்டத் திருத்தம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 323 வாக்குகளும் எதிராக 3 வாக்குகளும் பதிவாகின: இந்தியன் யூனியன் முஸ்லீன் லீக் 2 வாக்குகள், ஏஐஎம்ஐஎம் கட்சி 1 வாக்கு. மாநிலங்கள் அவையிலும் சட்டத் திருத்தத்துக்கு ஏகோபித்த ஆதரவை அரசியல் கட்சிகள் அள்ளித் தந்தனர். ஆதரவாக 165 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் பதிவாகின; திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லீன் லீக் கட்சிகள் மட்டுமே எதிராக வாக்களித்தன.
சாதிவாரியான இடஒதுக்கீடை தங்களுடைய அரசியல் தத்துவமாக கொண்டுள்ள கட்சிகள் சிலவும் பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். உண்மையில் யாரும் எதிர்பார்க்காத நிகழ்வு இது. 2019இல் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, பாஜக அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்தது. சோசலிஸத்தைத் தனது கொள்கையாக வரித்துக்கொண்ட சமாஜ்வாதி கட்சியும் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தது; அத்துடன் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீடும் அதிகரிப்பட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தது. பிஹாரின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதா தளமும் பொருளாதார இடஒதுக்கீடுக்கு ஆதரவு கொடுத்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் உள்ள திமுகவைத் தவிர எந்தவொரு கட்சியும் எதிர்க் கருத்தை முன்வைக்கவில்லை.
பொருளாதார இடஒதுக்கீடு முன்வைக்கும் சவால்
பொருளாதார இடஒதுக்கீடு முறை என்பது சமூக நீதியை உறுதிசெய்யும் விதமாக உள்ள அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே அசைத்துப் பார்ப்பது. வறுமையை ஒழிப்பது என்பது இடஒதுக்கீடின் அடிப்படை நோக்கம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்; அதற்கு மக்கள் நலத் திட்டங்கள் உள்ளன. காலங்காலமாகக் கல்வி, அரசு வேலைவாய்ப்பு, அரசியல் தளத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களைக் கைதூக்கிவிடும் விதமாக கொடுக்கப்படும் ஒரு வாய்ப்புதான் இடஒதுக்கீடு. ஆனால், முற்பட்ட சாதியினரின் நீண்ட கால கோரிக்கைக்கு அரசு செவி சாய்த்ததன் மூலம் இடஒதுக்கீடுக்கான அர்த்தம் தற்போது வேறு ஒன்றாக திரிந்துள்ளது.
பொருளாதாரரீதியாக நலிவடைந்தவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது மற்ற பிரிவில் இருப்பவர்களை பாதிக்காது; காரணம் இது பொதுப் பட்டியலில் இருந்து எடுத்துக் கொடுக்கப்படுவது. ஆனால், இதுவொரு தவறான முன்மாதிரியாக இருந்துவிடும் அபாயமும் உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். ஒருகட்டத்தில் சாதிரீதியிலான இடஒதுக்கீடு என்பதே ஒழிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது என்பது அவர்களது வாதம்.
பொருளாதார இடஒதுக்கீடை மண்டல் அரசியல் கட்சிகளும் அம்பேத்கரிய கட்சிகளும் விழுந்து விழுந்து ஆதரிப்பதன் பின்னணி என்ன?
புதிய பாதையில் மதச்சார்பற்ற கட்சிகள்!
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டுமென 1990களில் மண்டல் குழு அறிக்கை சமர்பித்தது. அதன் பிறகு அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. பிற்படுத்தப்பட்ட சாதிகளின் நலனை முன்னிருத்தி பல்வேறு வட இந்தியக் கட்சிகள் மக்கள் ஆதரவைத் தமதாக்கிக்கொண்டன.
பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய மண்டல் கட்சிகளும், ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பகுஜன் சமாஜ் போன்ற அம்பேத்கரிய கட்சிகளும் குரல் கொடுத்தனர். இது முன்னேரிய வகுப்புகளின் பிரதிநிதியாக செயல்பட்ட காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிரான அரசியல் நகர்வாகப் பார்க்கப்பட்டது.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் களம் வேறொன்றாக மாறியுள்ளது. பிராமணிய, பனியா நலன்களை முன்னிறுத்தும் கட்சி என்ற இடத்தில் இருந்து நகர்ந்துள்ளது; இன்றைக்கு பிற்படுத்துப்பட்டோர், தலித்துகள், பழங்குடிகள் உள்பட அனைத்துத் தரப்பு இந்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மண்டல், அம்பேத்கரிய கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை மாற்றியதற்கு பாஜகவின் உருமாற்றமும் ஒரு முக்கிய காரணம்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தை எடுத்துக்கொள்வோம். பொருளாதார இடஒதுக்கீட்டை அக்கட்சி கடுமையாக எதிர்த்தது; அப்படியென்றால் முற்பட்ட சாதியினரின் வாக்குகளைக் கோருவதற்கு ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை என பாஜக சீறியது. இதைத் தொடர்ந்து அக்கட்சி தனது நிலைப்பாட்டை உடனடியாக மாற்றிக்கொண்டது. 1990களில் அதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ், வெளிப்படையாக உயர் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக குரல் கொடுத்தார்.
ஆனால், இன்று அவருடைய அரசியல் வாரிசான தேஜஸ்வி கட்சியின் முகத்தை மாற்ற வேண்டுமென்பதில் தீவிரமாக உள்ளர். 2021இல் ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “சமூக நீதி அரசியலின் காலம் முடிந்துவிட்டது; பொருளாதார சமத்துவத்தை உருவாக்குவதுதான் லட்சியம்” என்றார்.
வடக்குக்கு வழிகாட்டும் திமுக
1990களின் அரசியல் என்பது மண்டல் எதிர் கமண்டல் அரசியல் என விளிக்கப்பட்டது. இதனை மண்டல், அம்பேத்கரிய அரசியலுக்கு எதிரான இந்துத்துவா அரசியல் எனப் புரிந்துகொள்ள வேண்டும். மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இந்த அரசியல் போரில் பாஜக வெற்றிபெற்றுள்ளது. மக்கள் நலத் திட்டங்கள், திட்டமிட்ட சமூக கூட்டணிகளின் மூலம் மண்டல், அம்பேத்கரிய கட்சிகளின் வாக்கு வங்கியை இன்று பாஜக தனதாக்கிக்கொண்டுள்ளது.
பாஜகவின் இந்துத்துவத்துக்கு சரியான மாற்று என்றால் திமுகவைத்தான் சொல்ல முடியும்; ஏனெனில், அது சாதி சமத்துவத்துடன் மொழிவழி தேசியத்தையும் முன்வைக்கிறது. வட இந்திய மண்டல, அம்பேத்கரிய கட்சிகள் பாஜகவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைத் தெற்கத்திய, திராவிட, பெரியாரிய கட்சியான திமுகவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
பொருளாதார இடஒதுக்கீடு சரி.. இது சாதி ஒதுக்கீடு
எது உண்மையான சமூக நீதி?
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் - அரிய வகை ஏழைகள்
இது ‘அவர்கள்’ குழந்தைகளுக்கான நியாயம்
தமிழில்: தினேஷ்
1
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Duraiswamy.P 2 years ago
தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு கிடைக்கும் சமூகங்கள் ஒப்பிட்டு அளவில் மொத்த மக்கள் தொகையில் பத்து சதவீதத்துக்கு குறைவானவர்கள். இவற்றிலும் பார்ப்பனர்கள் எந்த விதத்திலும் திமுகவுக்கு வாக்களிக்க போவதில்லை. எனவேதான் திமுகவினால் பொருளாதார ரீதியான இட ஒதுக்கீட்டை உறுதியாக எதிர்க்க முடிகிறது. உத்தரப்பிரதேசம் போல உயர்சாதியினர் மக்கள் தொகை 20 சதவீதத்திற்கும் மேல் இருப்பது போல தமிழ்நாட்டிலும் இருந்தால் திமுக இப்போது எடுத்துள்ள நிலை போல எடுத்திருக்க வாய்ப்பு குறைவு. இது திமுகவை குறை கூற அல்ல. வாக்கரசியல் சமரச போக்கை தான் கடைப்பிடிக்க தூண்டும்.
Reply -2 2
Login / Create an account to add a comment / reply.