கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

திரிணமூலை ஆதரிக்க காங்கிரஸ் முடிவு!

ஸ்னிக்தேந்து பட்டாசார்யா
06 Oct 2024, 5:00 am
0

மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குப் புத்துயிர் ஊட்ட சுபாங்கர் சர்க்காரை (64) மாநிலத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ளது அனைத்திந்திய காங்கிரஸ் தலைமை. பழுத்த அரசியலரான சுபாங்கர் மாநில அரசியலில் எந்தக் கோஷ்டியையும் சாராதவர், எந்தக் கோஷ்டியையும் தனக்கென்று வைத்துக்கொள்ளாதவர். நிதானமானவர், தீர்க்கமான முடிவுகளை எடுக்க வல்லவர். கட்சியிலும் மக்களிடையேயும் அதிக செல்வாக்குமில்லாதவர்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தேய்வடைந்து கிட்டத்தட்ட அடையாளம் இல்லாமலேயே போய்விட்டது. 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2024 மக்களவை பொதுத் தேர்தலில் ஓரிடம்தான் கிடைத்தது. அதற்கு முந்தைய பொதுத் தேர்தலிலாவது 2 இடங்களில் வென்றிருந்தது.

மேற்கு வங்க முதல்ரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியை இடைவிடாமல் விமர்சித்துவந்த ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மாநிலத் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். காங்கிரஸில் ஓரளவுக்கு மக்களிடையே செல்வாக்குப் பெற்ற தலைவராக சௌத்ரி திகழ்ந்தார். மூர்ஷிதாபாத் மாவட்டத்தில் அவருக்கிருந்த செல்வாக்கு, திரிணமூல் காங்கிரஸ் வளர்ச்சிக்குப் பிறகு படிப்படியாக குறைந்துவிட்டது. 1999 முதல் அவர் வெற்றிபெற்றுவந்த பஹராம்பூர் தொகுதியில் தோற்க நேரிட்டது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கனிகான் குடும்ப வாரிசு

மேற்கு வங்கத்தில் இப்போதும் ஓரளவுக்கு மக்களிடையே ஆதரவு உள்ள காங்கிரஸ் தலைவர் என்றால் தெற்கு மால்டா தொகுதியில் வெற்றிபெற்ற இஷா கான்தான். இவர் காங்கிரஸ் சார்பில் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த மூத்த தலைவர் ஏ.பி.ஏ.கனிகான் சௌத்ரியின் உறவினர். இவரைப் போலவே புரூலியா மாவட்டத்தைச் சேர்ந்த நேபாள் மாத்தோ ஓரளவுக்கு மக்களிடையே நல்ல செல்வாக்குடன் இருக்கிறார்.

மக்களிடம் நன்கு அறிமுகமான தலைவரான அப்துல் மன்னான் இப்போது உடல்நலக் குறைவு காரணமாக தனது அரசியல் செயல்பாட்டைச் சுருக்கிக்கொண்டுவிட்டார். ஒரு காலத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த பிரதீப் பட்டாசார்யாவுக்கு இப்போது வயது 80. இவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவரும் முடங்கிவிட்டார்.

சுபாங்கர் சர்க்காருக்கு கட்சியிலோ சொந்த மாவட்டத்திலோ மிகப் பெரிய ஆதரவு இல்லையென்றாலும் ஆதிர் ரஞ்சன், மாதோ, மன்னான், பிரதீப் பட்டாசார்யாபோல அடிக்கடி தனது முகாம்களை மாற்றிக்கொண்டவரல்ல. காங்கிரஸ் தலைமைக்குத் தொடர்ந்து விசுவாசமாக இருப்பவர் என்பதுடன் மாநிலம் முழுவதும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்கு அறிமுகமானவரும்கூட.

ஆதரவின்மையே சாதகம்!

சுபாங்கருக்கு சொந்தமாக செல்வாக்கு இல்லை என்பதே அவருக்குச் சாதகம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எப்படியென்றால், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, கனிகான் சௌத்ரி, மாதோ எல்லோருமே திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான நிலையையே எப்போதும் எடுத்தனர். இதனால் அந்தக் கட்சியுடன் அரசியல் தோழமை கொண்டாலும் நெருங்க முடியாமல் அடிக்கடி உரசல்கள் ஏற்பட்டன. உள்ளூரில் ஆட்சிசெய்யும் கட்சியைத் தொடர்ந்து தாக்கிப் பேசினால்தான் தங்களுக்கு மரியாதை இருக்கும் என்று அந்தத் தலைவர்கள் நினைத்துவிட்டனர்.

காங்கிரஸின் தேசியத் தலைமை மக்களவை பொதுத் தேர்தலின்போது கேட்ட தொகுதிகளையும், கேட்ட அளவு இடங்களையும் திரிணமூல் தரத் தயாராக இல்லாததால் மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டுவைத்துப் போட்டியிட்டது. ஆனால், அரசியல்ரீதியாக அது லாபத்தைத் தரவில்லை. எனவே, திரிணமூலை நெருங்க காங்கிரஸ் தலைமை விரும்புகிறது. நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணியைக் கடுமையாக எதிர்க்கவும், அடுத்துவரும் பொதுத் தேர்தலில் அதிக இடங்களைப் பெறவும் மார்க்சிஸ்ட் கட்சியைவிட திரிணமூல் கூட்டே சரியானது என்று டெல்லி தலைமை உணர்ந்திருக்கிறது.

சுபாங்கர் சர்க்கார் மாநில அரசியல் குறித்து அதிகம் வெளிப்படையாகப் பேசாமல் மௌனம் சாதிப்பாரா அல்லது ஆதிர் ரஞ்சனைப் போலவே வெடிப்பாரா என்று தெரியவில்லை. ஆனால், இதுவரை அவரைக் கவனித்தவர்கள் அவர் அமைதியானவர், சொந்த செல்வாக்குக்காகவோ, பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காகவோ துடுக்காகப் பேசமாட்டார் என்கிறார்கள். அதேசமயம், கட்சியின் மதிப்பைக் காக்கவும் மக்களுடைய நலனைக் கருதியும் பேச வேண்டியதைப் பேச - தயங்கவும் மாட்டார் என்கிறார்கள்.

தோழமை யாருடன்?

சுபாங்கர் சர்க்காரை தலைவராக கட்சி மேலிடம் அறிவித்ததும் நிருபர்கள் அவரைச் சந்தித்தனர். “மாநிலத்தில் தோழமைக் கட்சியை மாற்றிக்கொள்வீர்களா?” என்று கேட்டனர். “மாநிலத்தில் இப்போது புதிய எழுச்சியை (மருத்துவ மாணவி வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வு) காண்கிறோம், மக்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்துள்ளனர். இதுவே புதிய அரசியல் சமன்பாட்டுக்கு வழிவகுக்காது என்று எப்படிக் கூற முடியும்?” என்று பொடி வைத்தே பேசினார் சுபாங்கர். “கட்சியை வலுப்படுத்தி மக்களுடைய ஆதரவைப் பெறுவதுதான் என்னுடைய முன்னுரிமைப் பணி, அடுத்து வரப்போகும் தேர்தலுக்குத் தோழமைக் கட்சியைத் தேர்ந்தெடுப்பது அல்ல” என்றும் பதில் அளித்தார்.

“இப்போது நவராத்திரி, துர்க்கை பூஜை தொடங்கிவிட்டது. இது முடிந்த பிறகு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் மாநில நிர்வாகிகள், தொண்டர்கள், மக்கள் ஆகியோருடைய கருத்துகளைக் கேட்பேன்” என்றார் சுபாங்கர் சர்க்கார்.

ஆதிரின் இழப்பு யாருக்கு லாபம்?

தோழமை யாருடன் என்பதை உடனடியாக முடிவுசெய்யத் தேவையில்லைதான் என்றாலும் இதற்கு விடை காண்பது தவிர்க்க முடியாதது. இடதுசாரி கட்சிகளோடு காங்கிரஸ் நெருக்கமான உறவு வைக்க வேண்டும் என்று பாடுபட்டார் ஆதிர் ரஞ்சன். மேற்கு வங்க மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் முகம்மது சலீமுடன் அவருக்கு நெருக்கமான நட்பு இருந்தது. அரசியல்ரீதியாக அது இரு கட்சிகளுக்குமே பெரிய பலனைத் தந்துவிடவில்லை. 2016, 2021 சட்டமன்ற பொதுத் தேர்தல்களிலும் 2024 மக்களவை பொதுத் தேர்தலிலும் இடதுசாரி முன்னணியுடன் கூட்டுவைத்துதான் காங்கிரஸ் போட்டியிட்டது.

2024 மக்களவை பொதுத் தேர்தலின்போது திரிணமூல் காங்கிரஸுடன்தான் கூட்டணி வைக்க காங்கிரஸ் விரும்பியது. அதன் மூலம் ‘இந்தியா’ கூட்டணி வலுவானது என்ற எண்ணத்தை மக்களிடையே நாடு முழுவதும் விதைக்கவும் எண்ணியது. ஆனால், ஆதிர் ரஞ்சன் சௌத்ரி இடைவிடாமல் திரிணமூலையும் மம்தாவையும் தாக்கிப் பேசினார்.

அது மட்டுமல்லாமல் காங்கிரஸுக்குத் திரிணமூல் தர முன்வந்த தொகுதிகளின் எண்ணிக்கையும், தொகுதிகளும் காங்கிரஸை செல்வாக்குப் பெற முடியாமல் தடுத்துவிடும் என்றே மாநில காங்கிரஸ் கருதியது. இதனால் இடதுசாரிகளுடன் கூட்டணி தொடர்ந்தது. கூட்டணி ஏற்படாமல் போனதற்கு ஆதிர் ரஞ்சன் சௌத்ரிதான் காரணம் என்று திரிணமூல் காங்கிரஸ் வெளிப்படையாகவே சாடியது. திரிணமூலைப் பிடிக்கவில்லை என்பதை ஆதிரும் வெளிப்படையாகவே பேசினார்.

கிரிக்கெட் வீரர் யூசுஃப் பட்டானை, ஆதிர் ரஞ்சனுக்கு எதிராக நிறுத்தியது திரிணமூல். பட்டான் வெற்றிபெற்றார். திரிணமூலைத் தொடர்ந்து வெறுப்பேற்றிக்கொண்டே இருப்பதால் காங்கிரஸுக்கு மாநிலத்திலோ, தேசிய அளவிலோ ஒரு லாபமுமில்லை என்பதை தேசியத் தலைமை உணர்ந்துவிட்டது. திரிணமூல் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சிசெய்வதுடன், மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களையும் மக்களவையில் 29 உறுப்பினர்களையும் கொண்டிருக்கிறது. அந்தக் கட்சியுடன் சமாதானம் செய்துகொண்டு இணைந்து செயல்பட்டால் நாடாளுமன்றத்தில் பாஜக கூட்டணிக்கு அதிக எதிர்ப்பைக் காட்ட முடியும் என்று காங்கிரஸின் டெல்லி தலைமை கருதுகிறது.

மாணவர் பேரவைத் தலைவர்

சுபாங்கர் சர்க்காருக்குக் காங்கிரஸ் கட்சியுடன் முப்பதாண்டுகளுக்கும் மேல் உறவு இருக்கிறது. கட்சியின் இந்திய தேசிய மாணவர் பேரவையில் (என்எஸ்யுஐ) 1993 முதல் 1996 வரையில் நிர்வாகியாக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்த அமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார், பத்திரிகைத் தொடர்பாளராகப் பணியாற்றினார், அந்த அமைப்பின் மேற்கு வங்கத் தலைவரானார். அந்த அமைப்புக்கு மேற்கு வங்கத்தில் சத்ர பரிஷத் என்று பெயர்.

பிறகு இளைஞர் காங்கிரஸின் தேசிய பொதுச் செயலாளரானார். அதற்குப் பிறகு அனைத்திந்திய காங்கிரஸ் பேரவையில் (ஏஐசிசி) உறுப்பினராகவும் பிறகு செயலராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் வடகிழக்கு மாநில விவகாரங்களுக்கும் பொறுப்பாளராக இருந்தார்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பெண்கள் பாதுகாப்பு: கனத்த கேள்விகள்

டி.எம்.கிருஷ்ணா 01 Sep 2024

திரிணமூல் சவால்தான்

காங்கிரஸ் கட்சியின் எல்லாப் பிரிவுகளும் சுபாங்கரை ஆதரிக்கும் என்றாலும், மாநிலத்தில் திரிணமூலை எதிர்க்காமல் கட்சியை வளர்க்க முடியாது என்று சுட்டிக்காட்டுகிறார் மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

காங்கிரஸின் தலைமை மாற்றம் அந்தக் கட்சியின் உள்விவகாரம் என்று கூறும் திரிணமூல் காங்கிரஸ்காரர்கள், வெளிப்படையாக கருத்து கூறவில்லை. ‘இதை ஆக்கப்பூர்வமான செயலாக கட்சித் தலைமை பார்ப்பதாக’ தன் பெயரைத் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் மாநில அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். பாஜக கூட்டணியை எதிர்ப்பதை விட்டுவிட்டு எப்போது பார்த்தாலும் திரிணமூலையே தாக்கிப் பேசியதன் மூலம் பாஜகவுக்கு எதிரான போராட்டத்தையே வலிமையிழக்கச் செய்தார் ஆதிர் ரஞ்சன் என்றார் அவர்.

மௌனியில்லை

மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளைப் பற்றிப் பேசாமல் வாய்மூடி மௌனியாக இருக்கமாட்டேன் என்பதை புதிய தலைவர் சுபாங்கர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கோடிட்டுக் காட்டிவிட்டார்.

தொழிலதிபர்களிடமும் முதலீட்டாளர்களிடமும் திரிணமூல் காங்கிரஸ் கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிப்பதையும் மாநில இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படாமல் தவிப்பது குறித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது குறித்தும் தெளிவாகப் பேசினார். அவருடைய குரல் உரத்து இல்லை, வார்த்தைகளும் கடுமையாக இல்லை ஆனால் கண்டிக்கும்போது வார்த்தைகளை அவர் மென்று விழுங்கவில்லை.

© த வயர்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
வங்கத்து முற்போக்கு அரசியல் சாதியற்றதா?
எதிர்க்கட்சிகளைச் சிதறடிப்பதா மம்தாவின் முயற்சி?
எப்படி இருக்கிறது வங்கத்து அரசியல்?
பெண்கள் பாதுகாப்பு: கனத்த கேள்விகள்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

2






சமூக உறவுசட்டப் பாதுகாப்புசொத்துப் பரிமாற்றம்அருஞ்சொல் இரண்டாவது பிறந்த நாள்மாரடைப்புச் சிகிச்சைக்குப் பிறகு என்ன செய்வது?ஆயுர்வேதம்உறுதிமொழிபணவீக்க விகிதம்மேலாதிக்கமா – ஜனநாயகமா?மீன் பண்ணைலெபனான்டாலா டாலாசோனியா காந்தி கட்டுரைஎம்எஸ்எஸ்: பெரிய தலைக்கட்டுதாமஸ் பிராங்கோகடவுச்சொல்உமர் அப்துல்லா ‘முதிர்ந்த’ அரசியலர்ரஷ்யன்வருமான வரம்புசங்கீத கலாநிதிகோவை ஞானி பேட்டிஅறிவுப் பசிக்கு விருந்தாகட்டும் அருஞ்சொல்’லின் புதகண் எனும் நுகர்வு உறுப்புவிற்க முடியாத நிலை!வறட்சிவேலையில்லாத் திண்டாட்டம்இந்தியத் தொலைக்காட்சிகள்சுந்தர் சருக்கைவியூக வகுப்பாளர்மொழிவாரிப் பெரும்பான்மை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!