வாழ்வியல், வேலையும் வாழ்வும் 10 நிமிட வாசிப்பு

உங்கள் பயோடேட்டா உங்களை பிரதிபலிக்கிறதா?

ஸ்ரீதர் சுப்ரமணியம்
01 Jan 2022, 5:00 am
2

முதன் முதலாக வேலை தேடுவதற்கும் இருக்கும் வேலையில் இருந்து புதிய வேலைக்கு மாறுவதற்கும் மிக அவசியமானது பயோடேட்டா. வேலை கேட்கும் புதிய நிறுவனத்தில் நாம் போய் நிற்பதற்கு முன்பே, நமது பயோடேட்டா போய் நிற்கும். அது நம்மைப் பற்றிய பிம்பத்தை நிறுவனத்திடம் கொண்டுபோய்விடும். அப்படிப்பட்ட முக்கியமான ஆவணத்தை அதற்குரிய மரியாதையுடன் நாம் உருவாக்குகிறோமா? 

பலர் பயோடேட்டா தயாரிக்கும்போது வெறுமனே அவர்கள் படித்த படிப்பு, வேலைசெய்த நிறுவனங்கள், அவற்றில் அவர்கள் வகித்த பதவிகள் இத்துடன் நிறுத்திவிடுகிறார்கள். சிலர் அவ்வளவுகூட கஷ்டப்படாமல் தனது நண்பர்களிடம் இருந்து கிடைத்த ஏதாவது டெம்ப்ளேட்டை 'பட்டி டிங்கரிங்' பார்த்து தங்கள் தகவல்களை நுழைத்து தயார்செய்துவிடுகிறார்கள். அப்படி அனுப்பிய தங்கள் பயோடேட்டா சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மனிதவளத் துறைக்கு போகும். அங்கே அது எப்பேர்ப்பட்ட பிம்பத்தை உருவாக்கும் என்பது பற்றிய பிரக்ஞையே அவர்களுக்கு இருப்பதில்லை.

ஒன்றைப் புரிந்துகொள்வோம்: பயோடேட்டா என்பது நமது பிரதிநிதி. ஆவண வடிவில் நாம் நம்மையே அங்கே அனுப்புகிறோம். நாமே நேரடியாக அங்கே போகும்போது எப்படி எல்லாம் நம்மை தயார்ப்படுத்திக்கொள்வோம் என்று யோசித்துப் பாருங்கள். ஆண்கள் என்றால் ஒழுங்காக ஷேவ்செய்து அல்லது தாடியை திருத்திக்கொண்டு, வாசனைத் திரவியம் எதையேனும் போட்டுக்கொண்டு, நன்றாக இஸ்திரிசெய்யப்பட்ட சட்டை பேன்ட் அணிந்து, தேவைப்பட்டால் டைகூட கட்டிக்கொண்டு போவோம். பெண்கள் என்றால் மேக்கப் போட்டுக்கொண்டு தலைமுடியை திருத்த வாரி, புதிய புடவை அல்லது சுடிதார் அணிந்துகொண்டு போவோம். நம்மை அங்கே கொண்டுபோகும்போது கொடுக்கும் முக்கியத்துவத்தில் பாதியையாவது நாம் நமது பயோடேட்டாவுக்கும் கொடுக்க வேண்டாமா?

அப்படி முக்கியத்துவத்துடன் நமது பயோடேட்டாவை தயார்செய்யும் வழிகள்தான் என்ன?

1. பயோடேட்டா உங்களின் ஆவண வடிவம் 

மேலே சொன்னபடி பயோடேட்டா என்பது நமது பிரதிநிதி. எனவே அது தனித்துவமாகத் தொனிக்க வேண்டும். உங்களைப் போல வேறு யாரும் இந்த உலகில் இல்லை; உங்கள் பயோடேட்டாவும் வேறு எதனைப் போலவும் இருத்தல் கூடாது. எனவே நண்பர், உறவினர் கொடுத்த 'டெம்ப்ளேட்' எதையும் காப்பி அடிக்க முனைய வேண்டாம். பல்வேறு பயோடேட்டா வடிவங்களை 'கூகுள்' செய்து பாருங்கள். அவற்றைப் பார்த்து ஒரு பொதுவான புரிதலுக்கு வாருங்கள். அப்புறம் அவற்றை எல்லாம் மூடிவிட்டு நீங்கள் சுயமாக உங்களுக்கென ஒரு வடிவத்தைக் கொண்டுவர முனையுங்கள். முடித்துவிட்டு அதை ஒரு பார்வை பார்க்கும்போது உங்களுக்கு 'இதுதான் நான்!' என்ற நம்பிக்கை வர வேண்டும். 

2.  விண்ணப்பப் படிவம் அல்ல பயோடேட்டா

நம்மில் பலருக்கு அப்படித்தான் நினைப்பு இருக்கிறது. ஏதோ ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் கொடுப்பதுபோல பயோடேட்டா கொடுத்து வேலை கேட்கிறோம் என்று நினைக்கிறோம். அது தவறான சிந்தனை. உங்கள் திறமையையும் நிறுவனத்தின் தேவையையும் பொருத்திப் பார்க்கும் ஒரு முயற்சிதான் இன்டர்வியூ. உங்களுக்குப் பொருத்தமான திறன் இருந்தால், அதற்கான மனநிலை இருந்தால் அது போதும். எனவே பயோடேட்டா தன்னம்பிக்கையுடன், தெளிவுடன் இருக்க வேண்டும். வேண்டுதலாக தொனிக்கக் கூடாது. 

3. வேலைக்குத்தான் ஆள் தேவை 

பல நேரம் 'உங்களுக்கு ஒரு நல்ல வேலை தேவை' என்பதைவிட அவசரமாக, தீவிரமாக ஒரு நிறுவனத்துக்குத் திறன் வாய்ந்த ஊழியர் தேவை என்பதே உண்மை. அது நம்மில் பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பலமுறை நான் பார்த்திருக்கிறேன். இன்டர்வியூ எடுக்கும் மேனேஜர் இன்டர்வியூவுக்கு வருபவரைவிட டென்ஷனாக இருப்பார். காரணம் அவர்கள் நிறுவனத்துக்கு ஒரு பெரிய ப்ராஜக்ட் வந்து துவங்குவதற்காக காத்திருக்கிறது. ஆனால், ஒழுங்கான டீம் அமையவில்லை. அதன் விளைவாக நிறுவனத்தின் மனிதவளத் துறை மேல் அதீத அழுத்தம் விழுந்துகொண்டிருக்கிறது. 'இன்னைக்கு இன்டர்வியூல நல்ல ஆளா மாட்டிறனும் பிள்ளையாரப்பா. உனக்கு தேங்காய் உடைக்கறேன்!' என்று இன்டர்வியூ எடுப்பவர் வேண்டிக்கொண்டிருப்பார். 

அதாவது அவர்களிடம் தேவை இருக்கிறது. உங்களிடம் அதற்கேற்ற திறன் இருந்தால் வேலை நிச்சயம். எனவே உங்கள் பயோடேட்டாவை அவர்கள் அந்தப் பொருத்தம் இருக்கிறதா என்றுதான் பார்க்கப் பயன்படுத்துவார்கள். அதனைத் தெரிவிக்கும் முயற்சிதான் பயோடேட்டா. 

4. வேலைக்கேற்ற பயோடேட்டா 

பெரும்பாலும் நம்மில் பலர் பொதுவாக ஒரே ஒரு பயோடேட்டா வடிவத்தை வைத்திருப்போம். எந்த வேலை என்றாலும் அந்த பயோடேட்டாவை அனுப்பி பதிலுக்கு காத்திருப்போம். அப்படி செய்யவே செய்யாதீர்கள். முதலில் ஒரு வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் அந்த வேலை விவரணை என்னென்ன என்று பாருங்கள். ஆங்கிலத்தில் ஜாப் டிஸ்க்ரிப்ஷன்  என்று சொல்வார்கள். வேலை விளம்பரத்தில் அதைக் குறிப்பிட்டு இருப்பார்கள். குறிப்பிட்டு இல்லையேல் கொடுக்கச்சொல்லி தைரியமாகக் கேளுங்கள். அப்படி எந்த ஆவணமும் எங்களிடம் இல்லை என்று சொன்னால் அந்த வேலைக்கு 'பயோடேட்டா' அனுப்புவதே நேர விரயம். காரணம், வேலைக்கு ஆள் எடுப்பதிலேயே தெளிவின்றி இயங்கும் நிறுவனம் வேலையை வாங்குவதிலும் தெளிவின்றியே இயங்கும் சாத்தியம் அதிகம். அங்கே உங்கள் திறமை வீணடிக்கப்படலாம். எனவே, தெளிவான வேலை விவரணை குறிப்பிடப்படாத வேலை வேண்டாம். 

அந்த வேலை விவரணை கிடைத்ததும் அதை முழுவதும் படித்துப் பாருங்கள். அது உங்கள் திறமைக்கும் ஆர்வத்துக்கும் பொருந்தி வருகிறதா? ஆம் எனில், அந்த விவரணைகளை வைத்து உங்கள் பயோடேட்டாவை முழுவதும் மாற்றி எழுதுங்கள். அந்த பயோடேட்டா முழுக்க முழுக்க நீங்கள் விண்ணப்பிக்கும் வேலைக்கு ஏற்றதாகவே இருக்க வேண்டும். அந்த வேலைக்குப் பொருந்தும் உங்கள் திறமைகள், அனுபவங்கள் என்னென்ன, என்று விளக்குங்கள். அப்படி பிரத்யேகமாக எழுதப்பட்ட அந்த பயோடேட்டாவை படிக்கும்போது சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேனேஜரால் தெளிவாக உங்களை அந்த வேலையில் வைத்துப் பார்க்க முடியும். அதுவே பாதி வேலையை உறுதிசெய்துவிடும். 

இதுபோல நீங்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு வேலைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் வேலை விவரணையைப் படித்து அதன்படி பயோடேட்டாவைத் திருத்தி, மாற்றி எழுதி அனுப்ப வேண்டும். இப்படிச் செய்தால் ஒவ்வொரு வேலைக்கும் விண்ணப்பிக்க நேரம் பிடிக்குமே என்று கவலைப்படலாம். அது உண்மைதான். அதிக வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியாது. ஆனால், அதுவும் நல்லதுதான் என்று நினைத்துக்கொள்ளுங்கள். 

5. அளவிடும் திறன்கள்

பயோடேட்டாவில் நிறையப் பேர், "நான் அந்த வேலை செய்தேன்", "நான் இந்தப் பணிகளை இழுத்துப்போட்டு செய்தேன்" என்றெல்லாம் எழுதுவார்கள். பல நேரங்களில் நிறுவனங்களுக்கு அது உங்களை தனித்துக் காட்டாது. காரணம் வேலைக்கு விண்ணப்பிக்கும் எல்லாருமே ஏறக்குறைய அதைத்தான் செய்திருப்பார்கள். "நான் சவுத் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவில் வேலைசெய்தேன்" என்று பயோடேட்டாவில் இருந்தால் அதை வைத்து உங்களை எப்படி எடை போட முடியும்? இப்படி எழுதுவதற்கு பதில், "சவுத் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனையில் விற்பனையாளனாக என் பங்களிப்பு 40%க்கும் அதிகமாக இருந்தது. அந்த நிறுவனத்தின் விற்பனை அணுகுமுறையில் சில புதிய உத்திகளை நான் அறிமுகப்படுத்தினேன். அவை விற்பனையை 15% கூட்டின. அந்த உத்திகளை நிறுவனம் இன்றுவரை பின்பற்றி வருகிறார்கள்" என்று எழுதினால் அது கவனத்தை ஈர்க்கும். (அந்த உத்திகள் என்ன என்று இன்டர்வியூவில் கேட்டால் பதில் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும்!)

அதாவது நீங்கள் என்ன செய்தீர்கள் என்பது இங்கே தேவையில்லை. நீங்கள் என்னென்ன மாற்றங்களை, திறன் கொண்ட அணுகுமுறைகளை உங்கள் வேலையில் கொண்டுவந்தீர்கள் என்று எழுதுங்கள். அதனை முடிந்த அளவு அளவிடும் வகையில் வைத்துக்கொள்ள வேண்டும். அதாவது உங்கள் வேலையை எண்களுடன் கொடுக்க முயலுங்கள். 

'நான் உருவாக்கிய புதிய இணைய தளம் நிறுவனத்துக்கு அதிக அளவில் பார்வையாளர்களைக் கொண்டுவந்தது.'

vs. 

'நான் உருவாக்கிய புதிய இணைய தளம் முந்தைய தளத்தைவிட 64% அதிக பார்வையாளர்களைக் கொண்டுவந்தது.'

'நான் ப்ராஜக்ட்களை குறைவான செலவில் முடித்துக் கொடுத்தேன்.' 

vs. 

'நான் மேலாண்மை பார்த்த ப்ராஜக்ட்கள் நிறுவனத்தின் பிற ப்ராஜக்ட்களைவிட 24% குறைவான செலவில் முடிக்கப்பட்டன.' 

இப்படி அளவீடுகளுடன் உங்கள் வேலையை விவரிப்பது படிப்பவர்களுக்கு உங்கள் திறன் மீதுள்ள நம்பிக்கையைக் கூட்டும். நிற்க, இங்கே நீங்கள் கொடுக்கும் தரவுகள் உண்மையாக இருக்க வேண்டும். சும்மா அடித்துவிடக் கூடாது. இன்டர்வியூவில் இதுபற்றி கேள்விகள் கேட்டால் நீங்கள் விளக்கமாக பதில் சொல்லும் அளவுக்கு அந்தத் தரவுகள் மேல் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். 

6. பொய்மை தோற்கும் 

உங்கள் பயோடேட்டாவில் பொய் சொல்லவே சொல்லாதீர்கள். இன்டர்வியூவில் அவைபற்றி ஏதாவது கேள்வி கேட்டு நீங்கள் உளறி மாட்டிக்கொண்டுவிடக் கூடும். அப்படி மாட்டாமல் போனாலும் உங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை தெரிந்ததாக காட்டிக்கொண்டு வேலைக்கு சேர்ந்து அங்கே மாட்டிக்கொண்டால் அதைவிட மோசம். எனவே உங்கள் பயோடேட்டா நூறு சதவிகிதம் உண்மைத்தன்மையுடன் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

7. வேலை தாண்டிய திறன்கள் 

உங்கள் பயோடேட்டா உங்களின் பிம்பம்தான் என்று குறிப்பிட்டேன். வேலைத் திறன்கள் தாண்டியும் உங்களுக்குத் திறமைகள் ஆர்வங்கள் இருக்கும். அவற்றையும் பயோடேட்டாவில் குறிப்பிடுங்கள். நீங்கள் ஓவியம் வரைவீர்களா? வலைப்பூவில் தொடர்ந்து எழுதுகிறீர்களா? திரைக்கலை பற்றி கற்றுக்கொண்டு உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பிரித்து மேய்கிறீர்களா, அவற்றையும் குறிப்பிடுங்கள். இதிலும் மேலே குறிப்பிட்ட அணுகுமுறையை பின்பற்றுங்கள். எண்ணிக்கைகள், தரவுகள் அவசியம். 

'கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து எழுதிவருகிறேன். 350-க்கும் அதிகமான வலைப்பூ கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். சுமார் 1.5 லட்சம் வார்த்தைகள் எழுதி இருப்பேன்.'

'ஐந்தாம் வகுப்பில் ஓவியப் பயிற்சி துவங்கினேன். இன்று வரை 500-க்கும் அதிகமான ஒரிஜினல் ஓவியங்கள் தீட்டி இருக்கிறேன். அவற்றில் 25-க்கும் மேற்பட்டவற்றை விற்றதில் சுமார் 10 லட்சம் சம்பாதித்து இருக்கிறேன்.'

'திரைக்கலையை ரசிப்பது குறித்து யூடியூப் சானல் நடத்திவருகிறேன். இதுவரை 75 வீடியோக்கள் பதிவேற்றி இருக்கிறேன். சராசரியாக 5000-க்கும் அதிகமான பார்வைகளை ஒவ்வொரு வீடியோவும் குவிக்கின்றன.'

இங்கும் ஒரு குறிப்பு. இவைபோல உங்கள் தனித்திறன் இருந்தால் குறிப்பிடுங்கள். பொய் வேண்டாம். 

கடைசியாக, உங்கள் பயோடேட்டாவில் உங்களது தனித்த குரல் ஒலிக்க வேண்டும். அந்தக் குரல் உங்களுடையதாக அடையாளப்படுத்திக் கொள்ளும்படியாக இருக்க வேண்டும். தயாரித்து முடித்து பிரின்ட் எடுத்து பார்க்கும்போது, 'இது நான்தான்!' என்று நீங்கள் சொல்ல முடியும்படி இருக்க வேண்டும். அதுதான் உங்கள் பயோடேட்டா. அதனை நீங்கள் தைரியமாக வேலை விண்ணப்பிக்க அனுப்பலாம். இப்படிப்பட்ட தனித்துவ பயோடேட்டா உங்களுக்கு அந்த வேலை கிடைக்கும் சாத்தியக்கூறைப் பற்பல மடங்கு அதிகரிக்கும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஸ்ரீதர் சுப்ரமணியம்

ஸ்ரீதர் சுப்ரமணியம், மென்பொருள்துறையில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, தற்பொழுது தொழில்முனைவோராக இருக்கிறார். கணிதப் பட்டப் படிப்பு, மென்பொருள் மற்றும் இதழியல் துறைகளில் பட்டயப் படிப்பு; இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் இலக்கிய ஆய்வில் முதுகலைப் பட்டம் என்று பல துறைகளிலும் கால் பதித்தவர். சமூகவலைதளங்களில் தீவிரமாக எழுதிவருபவர். ‘ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்’, ‘பாதி நிரம்பிய கோப்பை’, ‘ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்’ ஆகிய நூல்களின் ஆசிரியர்.


5

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Umamaheswari   3 years ago

மிகவும் சரியாக வழிகாட்டியுள்ளீர்கள் ஸ்ரீதர் சார். அருமை👏👏👏

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Gokul A R   3 years ago

💯 பயனுள்ள கட்டுரை...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

நெல்கல்வித்துறைமு.கருணாநிதிஎம்.எஸ்.கோல்வால்கர்வாக்குப்பதிவு இயந்திரத்தை நம்பவைக்க சில யோசனைகள்ஏபிபி - சி வோட்டர்மாட்டிறைச்சிவரிவிதிப்புக் கொள்கைமருத்துவக் கல்விகல்லீரல்தேசியவாத அலைமாணவ–ஆசிரியர்சுயமரியாதை இயக்கம்கிங் மேக்கர் காமராஜரால் ஏன் கிங் ஆக முடியவில்லை?மு.ராமநாதன் கட்டுரைஜுயுகனோவியாபாரம்அரசியல் தலைவர்கள்டிரோன்கள்இயற்கை வேளாண்மையிலும் பிற்போக்குத்தனம் இருக்கிறது:Congressசரண் பூவண்ணா கட்டுரைசாதிப் பிரச்சினைதம்பிலெபனான்தமிழில் அர்ச்சனைவிரும்பப்படுகின்றன விலை உயர்வும் வேலையின்மையும்!சிற்பங்கள்பார்வைஒரு ஜனநாயகவாதியின் ஆசைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!