வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு
கொஞ்சம் வேகத்தைக் குறையுங்களேன்!
ஐரோப்பிய நாடுகளில் விடுமுறை என்பது ரொம்ப முக்கியம். அதனால், ஆண்டுக்கு ஒரு முறை வாரக் கணக்கில் அவர்கள் சுற்றுலா கிளம்பிவிடுவது வழக்கம். ஒருவேளை நீங்கள் ஆண்டு விடுமுறை எடுத்துக்கொள்ளாவிடில் அது காலாவதி ஆகிவிடும்.
இந்தியாவில் பல நிறுவனங்களில் அந்த ஆண்டு விடுமுறை எடுத்துக்கொள்ளாவிடில் அது அடுத்த ஆண்டு விடுமுறையுடன் சேர்த்துக்கொள்ளப்படுவதை நிறுவனங்கள் தவிர்க்கலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், ஓரளவு விடுமுறை சேர்ந்த பின் அதை அலுவலக நிர்வாகத்திடமே சரண்செய்து இங்கு காசாக்கிக்கொள்ளலாம். விளைவு, பற்பல ஆண்டுகளாக விடுமுறை என்ற ஒன்றே இல்லாமல் நம்மூரில் வேலை செய்து வருபவர்கள் அதிகம்.
இவர்களுக்கு விடுமுறையைப் பணமாக்கும் இந்த அமைப்புமுறை வசதியாகப் பழகிப்விடுகிறது. விடுமுறை எடுத்துக்கொள்வது என்பது ஏதோ பணவிரயம் என்பதுபோல ஆகிவிட்டது.
சில இளம் விஞ்ஞானிகளின் கதை மையமாகக் கொண்டது, ‘தி பிக் பேங்க் தியரி’ என்ற நகைச்சுவை மெகா தொடர். அதில் ஷெல்டன் எனும் பாத்திரம் ஓய்வு உழைப்பு இன்றி அறிவியல் ஆய்வில் ஈடுபடுவதை விரும்புபவன். ஆனால், அவன் ஆய்வு நிறுவனம் கட்டாயமான விடுமுறையில் அவனை அனுப்பிவிடும். அவனை ஆய்வு நிறுவனத்தின் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று செக்யூரிட்டிக்கு உத்தரவே போட்டுவிடுவார்கள். அந்த எபிசோட் முழுவதும் அவன் அந்தக் கட்டாய விடுமுறையில் எப்படி சித்ரவதைப் பாடுகிறான் என்பதை நகைச்சுவையாக காட்டி இருப்பார்கள்.
அதாவது என்ன நடக்கிறது? ஆண்டு விடுமுறை இல்லை; தினம் 10-12 மணி நேரம் வேலை. உட்கார்ந்த இடத்தில் இருந்து அசையாமல் பல மணி நேரங்கள் வேலை. இடையில் போராடித்தால் சமோசா, பஜ்ஜி, முறுக்கு, அதீத சர்க்கரை சேர்த்த காபி, டீ. இப்படியே வாழ்வு கழிகிறது.
வேலை நேரம் அளவுகோல் போல விடுமுறை என்பதும் வேலைத்திறனை கூட்டுவதற்கான ஒரு கருவிதான். சில வருடங்கள் முன்பு பிரதமர் மோடி விடுப்பே இன்றி வேலை செய்துகொண்டிருக்கிறார் என்ற தகவலை பாஜக அபிமானிகள் சிலாகித்துப் பகிர்ந்துகொண்டார்கள். அந்தச் சமயத்தில், ‘அது தவறு; பிரதமர் வருடாந்திர விடுமுறைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். விடுப்பே இன்றி வேலை செய்வது அவரது வேலைத் திறனை கடுமையாகப் பாதிக்கும்’ என்று எழுதினேன். உண்மையான அக்கறையில்தான்.
நமக்கு நல்ல புத்தகம் படிக்க நேரமில்லை; குழந்தைகளுடன் விளையாட நேரமில்லை; நின்று நமது பால்கனியில் பூத்திருக்கும் ரோஜாக்களை முகர்வதற்குக்கூட நேரமில்லை. சுருக்கமாக சொன்னால் வாழ்வதற்கு நேரமில்லை. சரி, அப்படியென்றால் வேலை பார்க்க வேண்டாமா? வேலை பார்க்கத்தான் வேண்டும். எப்படிப் பார்ப்பது?
Ω
ஒரு மனிதன் அதிகபட்சம் எவ்வளவு நேரம் வேலை செய்ய முடியும்? இதற்கு அறுதியிட்டு ஒரு பதில் கொடுக்க முடியுமா? தெரியவில்லை! நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியதுதான். ஒருவர் தொடர்ந்தேத்தியாக எவ்வளவு நேரம்தான் வேலை செய்ய முடியும்?
உடல் உழைப்புக்கென்றுகூட தெளிவான வரைமுறை இருக்கிறது. ஒரு கட்டத்துக்குப் பின் உடல் சோர்ந்து போகும். ஆனால் மூளை உழைப்பு? நவீன உலகில் நம்மில் நிறையப் பேர் அறிவு உழைப்புதான் செய்கிறோம். பலருக்கு உழைப்பு என்பதே விரல் நுனியில் தட்டிக்கொண்டிருப்பதுதான். ஆனால், அதெல்லாம் வேலையே இல்லை என்ற அளவு ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் உடல் உழைப்பை நம்புவோர் பற்றிய ஒரு ரொமான்டிக் சிந்தனாமுறை நிலவுகிறது. சினிமாவே சாட்சி. எம்ஜிஆர் படங்களில் எல்லாம் உடல் உழைப்பாளர்கள்தான் பாடல் பெறுவார்கள். ‘உழைப்பாளர் சிலை’ என்பதே உடல் உழைப்பைக் குறிக்கும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கும். அதெல்லாம் பழசு என்று சொல்லிவிடலாம். ஆனால், ரொம்ப பிற்பாடு வந்த ஒரு விஜயகாந்த் படத்தில்கூட அவர் எம்ஏ படித்திருந்தாலும் ‘உழைப்பின் பெருமை’யை உலகுக்கு உணர்த்துவதற்காக ரிக்ஷா ஓட்டுநராகப் பணியாற்றிக்கொண்டிருப்பார்.
சரி, உடம்பு எந்த உழைப்பும் செய்வதில்லை; மூளை மட்டும்தான் வேலை செய்கிறது என்பதற்காக கால வரம்பே இல்லாமல் உழைக்க முடியுமா? ஐடியில் பணிபுரியும் ஒருவர், ஏசி அறையில், முதுகுக்கு முட்டுக் கொடுக்கும் வசதியான நாற்காலியில் (ergonomic chair) அமர்ந்த ஒருவர் நாளுக்கு இருபது மணி நேரம் பணிபுரிய முடியுமா?
முடியாது; கூடாது என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஒரு மனிதர் சராசரி ஆறு மணி நேரம் சுமாரான அளவு பங்களிப்புடன் பணிபுரிய முடியும். வேலையின் நேரம் அதிகரிக்க அதிகரிக்க, அதற்கு நிகராக அவர் உற்பத்தித் திறன் குறையும்.
பொதுவாக, இந்த வேலைத்திறன் (productivity) காலை வேளைகளில் அதிகமாக உள்ளது என்றும், நேரம் ஆகஆக இந்தத் திறன் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைகிறது என்றும் தெரியவந்திருக்கிறது. அதாவது நீங்கள் அதிக நேரம் வேலை செய்தால், அது குறைவான வேலையில்தான் முடியும். சும்மாவேனும், ‘எவ்ளோ நேரம் ஆபீஸ்ல பிஸியா இருந்தேன் தெரியுமா?’ என்று வீட்டில் சீன் வேண்டுமானால், போடலாம். உண்மையாகவே வேலை நடந்த நேரம் சொற்பமாகவே இருக்கும்.
இந்த ஆறு மணி வேலை நேர தியரியை ஸ்வீடன் போன்ற நாடுகளில் இதனை பரீட்சார்த்தமாக செய்து பார்த்திருக்கிறார்கள். காலையிலேயே வேலைக்கு வந்து விடும் ஊழியர்கள் மதியமே கிளம்பிப்போய் விடுகிறார்கள். விளைவு அந்த நாட்டின் உற்பத்தித் திறன் அதிகரித்தது மட்டுமின்றி மக்களின் வாழ்வுத் தரமும் உயர்கிறது.
Ω
பிரிட்டனில் நான் பணிபுரிந்தபோது பார்த்தது இது. எட்டரை, எட்டே முக்காலுக்கு எல்லாரும் வந்துவிடுவார்கள். காபி, டீ எல்லாம் எடுத்துக்கொண்டு இருக்கைக்குப் போனால் பன்னிரெண்டு, பன்னிரெண்டரை வரைக்கும் வேலையில் தீவிரமாக இருப்பார்கள். பின்னர் சொல்லி வைத்தாற்போல அரை மணியில் மதிய உணவு முடித்து விட்டுத் திரும்பினால், மாலை ஐந்து வரை கவனம் மாறாது. ஐந்து மணி ஐந்து நிமிடத்தில் திரும்பிப் பார்த்தால் ஆபீஸ் வெறிச்சோடியிருக்கும்.
இன்றைய இந்தியாவில், குறிப்பாக ஐடி, பிபிஓ போன்ற நவீன நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 15-16 மணி நேரம் வேலை செய்வதாக தங்களை வருத்திக்கொள்கிறார்கள். ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக ஆறு மணி நேரத்துக்கு மேல் அவர்களது உற்பத்தித் திறன் இருக்காது. இருக்கவும் வாய்ப்பில்லை. ஓரிரு அதீத தருணங்களில் உழைப்பின் அளவு கூடலாம்.
Ω
உலகப் புகழ் பெற்ற ‘ரசவாதி’ (The Alchemist) நாவலை எழுதிய பாலோ கோய்லோவின் (Paulo Coelho) இன்னொரு நாவல், ‘தி பில்கிரிமேஜ்’ (The Pilgrimage). இந்தப் புத்தகத்தில் வாழ்வது எப்படி என்பதைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் பேசி இருப்பார்.
நவீன வாழ்க்கையில் எல்லாமே அதீத வேகம். எல்லாமே அதீத சுறுசுறுப்பு. அதற்கு ஏற்பவே நமது சிந்தனையும் செயலும் முறுக்கிவிடப்பட்டு இருக்கிறது என்று சொல்வார். எனில் நமது உண்மையான வாழ்க்கை எப்படி சரியாக வேண்டும்? உங்கள் வேகத்தைக் குறையுங்கள் என்கிறார். சாப்பிடும், நடக்கும், வேலை செய்யும், ஃபோனில் பேசும், ஏன் கம்ப்யூட்டரில் டைப் அடிக்கும் வேகத்தைக் கூடக் குறையுங்கள்; வழக்கமான வேகத்தைவிடப் பாதி வேகத்தில் செய்ய முயற்சி செய்யுங்கள் என்கிறார்.
அது அவ்வளவு எளிதில்லை. ஆனால் அப்படி செய்யும்பொழுது திடீரென்று உலகம் ஸ்லோ மோஷன் படக்காட்சிபோல நம் முன் விரியத் துவங்கும். அப்போது நமது வீட்டில் நமக்கு வழக்கமாக புலப்படாத நிறைய விஷயங்கள் புலப்படும். நமது தெருவில் நடக்கும்பொழுது தெரு தொடர்பான புதிய பரிமாணம் கிடைக்கும். மெதுவாக சாப்பிடும்பொழுது புதுப்புது சுவைகள் நாவில் புரிபடும். மிக மெதுவாக பால்கனிக்குள் நுழையும்பொழுது சட்டென்று ஒரு ரோஜாவின் வாசம் நுகர்புலனை எட்டிப் பிடிக்கும்.
வாருங்கள்; வாழ்வோம்!
1
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Latha 2 years ago
அழகான வரிகள் // மெதுவாக சாப்பிடும் போது புதுப்புது சுவைகள் நாவில் புரிபடும்...... மிக மெதுவாக பால்கனிக்குள் நுழையும் போது சட்டென்று ஒரு ரோஜாவின் வாசம் எட்டிப் பார்க்கும்.//
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
கிழவன் 3 years ago
வேகத்தை குறைக்க வேண்டும் தான் அதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் இங்கு பலரின் செல்லும் திசையே மாறி இருக்கிறது... காலம் அதையும் மாற்றும் என்று நம்புவோம்... இப்படிக்கு Sheldon Cooper இன் விசிறிகளில் ஒருவன்...
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Pandian Venu 3 years ago
எல்லா நேரத்திலும் வேகமாக செயல்பட வேண்டியதில்லை. நீங்கள் கூறுவது போல் பல நேரங்களில் சராசரியான வேகத்தில் உழலும் போது புது புது பரிணாமங்கள் தென்படுகிறது. அனுபவித்து செய்யும் செயலாக அது மாறுகிறது.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.