வாழ்வியல், வேலையும் வாழ்வும் 5 நிமிட வாசிப்பு
உருப்படுமா ஒரே சமயத்தில் பத்து வேலைகள்?
இன்று நிர்வாகம் உலகம் அதிகம் பயன்படுத்தும் சொற்களில் ஒன்று, ‘பல்செயல் திறன்’ (Multitasking). ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்வது என்பதுபோல இதைப் புரிந்துகொள்ளலாமா? ஆம், செல்பேசி பேசிக்கொண்டே சமைப்பது; படித்துக்கொண்டே சாப்பிடுவது; இவை பெரிய உபத்திரவமில்லாத பல்செயல் திறன்கள். ஆபீஸில் மீட்டிங்கில் கலந்து கொண்டு, அதன் ஊடாகவே சைடில் மாதாந்திர அறிக்கையை தயாரித்துக்கொண்டிருப்பது பல்செயல் முயற்சியின் துருவ எல்லை என்று சொல்லாம். தற்போதைய நவீன உலகில் பலர் பல்வேறு விதங்களில் பல்செயல் திறனுடன் இருப்பதாக கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
நவீன கணினிகள், செல்பேசிகள் எல்லாம் பல்செயல் திறனுடனேயே கட்டமைக்கப்படுகின்றன. அவற்றைப் பார்த்து மயங்கி நாமும் அப்படி முயற்சி செய்கிறோம். மனிதர்களுக்கு அப்படிப்பட்ட திறன் இயல்பாகவே உள்ளதா என்பது குறித்து ஆய்வுகள் நடந்திருக்கின்றன. இவற்றில் கிடைத்த விடையில் யாருக்கும் ஆச்சரியமே இருக்கவில்லை. பல்செயல் திறன் மனிதர்களிடம் இல்லை. அப்படி இருக்கிறது என்று நம்புவதே ஒரு மாயைதான்!
Ω
இன்றைய கணினிகள் அதிவேக செயல்திறன் கொண்ட பிராசசர் கொண்டிருப்பதாலும் உயர்-அடுக்குகள் கொண்ட நினைவுத் திறன் கொண்டிருப்பதாலும் அவற்றால் பல்வேறு செயல்களை பகிர்ந்துகொண்டு ஒரே நேரத்தில் செய்ய முடிகிறது. மனிதர்களுக்கு அப்படி பிராசசர் இல்லை. நம் புரியும் செயல்களைக் கட்டுப்படுத்துவது மூளைக்குள் இருக்கும் செரிபல் கோர்டக்ஸ் (Cerebral Cortex) எனும் பகுதி. இதைப் பகுத்துப் பயன்படுத்த முடியாது.
ஒரு வேலையை நாம் எடுத்துக்கொள்ளும்போது அதை செய்ய வேண்டிய விதிமுறைகள், நேரக்கட்டுப்பாடுகள், அந்த வேலை கடினமா, சுலபமா போன்ற விஷயங்களை இந்த மூளைப் பகுதி அனுமானித்துக்கொள்கிறது. பின்னர் அதனை செய்யத் தேவைப்படும் ஆணைகளை உடலுக்குப் பிறப்பிக்கிறது. அது முடிந்த பின் அடுத்த வேலையின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றைப் புரிந்துகொண்டு அதனை ஆரம்பிக்க முயல்கிறது.
இதைப் புரிந்துகொள்ள இரண்டு விஷயங்களை எடுத்துக்கொள்வோம். உலகில் புரிந்துகொள்ளக் கடினமான அறிவியல் தாத்பாரியங்களை விளக்கும் ‘யூடியூப் லெக்சர்’ ஒன்றைக் கேட்கிறீர்கள். அதனுடன் ஊடாக உங்கள் வீட்டையும் சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறீர்கள். முதலாவது கொஞ்சம் கடினமான, அதிக கவனம் தேவைப்படும் வேலை. இரண்டாவது எளியது. பெரிய கவனம் தேவைப்படாதது. இப்போது இரண்டையும் சேர்த்து செய்ய ஆரம்பிக்கும்போது உங்கள் மூளையின் செரிபல் கோர்டக்ஸ் கொஞ்சமே கொஞ்சம் குழம்பிப்போகும். அதற்கு விதிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும். ‘இந்த வேலை கஷ்டமா, ஈஸியா - சீக்கிரம் சொல்லு!’ என்று தொந்தரவுசெய்யும்.
இதன் விளைவு இரண்டில் ஒன்றாக முடியும்: 1) நீங்கள் யூடியூப் லெக்சரை அசிரத்தையாக கேட்பீர்கள். அல்லது 2) வீட்டை சுத்தம் செய்வதை கூர்ந்து செய்ய ஆரம்பித்து, அதற்குத் தேவைப்படும் கால அவகாசத்தைவிட அதிகமாக எடுத்துக்கொள்வீர்கள். இரண்டிலும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பு நேரும்: 1) லெக்சரில் கவனம் சிதறும். அல்லது 2) வீட்டை சுத்தம் செய்து முடிக்கத் தாமதமாகும்.
Ω
நிறைய நேரம் நமக்கு இதுதான் நடக்கிறது. பல விஷயங்களை ஒரே நேரத்தில் செய்வதாக நம்மை நாமே நம்பவைத்துக்கொண்டு, ஆனால் அதன் மூலம் அதிகளவு நேரத்தை வீணடித்துக்கொண்டு இருக்கிறோம். இப்படி செய்வதன் மூலம் பல நேரம் கையில் உள்ள வேலையின் கடினத்தை தவறாகவும் எடை போடுகிறோம். உதாரணத்துக்கு, ஒரு மாத அறிக்கை தயாரிப்பதற்கு நமக்கு எட்டு மணி நேரம் ஆகும் என்று நம்புகிறோம். ஆனால், அவ்வளவு நேரம் ஆவதற்கு உண்மையில் பல்வேறு விஷயங்களை ஊடாகவே செய்வதுதான் காரணம் என்பது புரிவதில்லை. எந்த கவனச் சிதறலும் இன்றி ஒரே நோக்கில் அதனை செய்தால் ஒன்றரை மணி நேரத்தில் அது முடியக் கூடும்.
இப்படி பணிகளை அதிகமாக மதிப்பிடுவதில் இன்னொரு பிரச்சினை, அவை ரொம்ப சிக்கல் நிறைந்தது; அதிக நேரம் பிடிக்கும் என்று நம்புவதால் அதை உடனடியாக செய்யாமல் தள்ளிப்போடவும் செய்கிறோம். அதுவும் நமக்கு பிரச்சினையைக் கொண்டுவருகிறது. பல்வேறு வேலைகள் கையில் எடுத்துக்கொள்ளப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.
நான் புத்தகங்கள், கட்டுரைகள் எழுதும்போழுது பாடல் கேட்டுக்கொண்டும், இடையில் முகநூல் பார்த்துக்கொண்டும், அலுவலக மின்னஞ்சல் படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டிருந்தேன். என்னுடைய ஒரு புத்தகத்தின் ஆங்கில வடிவை எழுதுவது அதிகதிகம் தள்ளிப்போடப்பட்டுக் கொண்டேவந்தது. ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் ஒன்று அல்லது இரண்டு அத்தியாயங்கள் எழுதினால் பெரிய சாதனை என்று இருந்தது; அதனால் பெரும் வருத்தமுற்று, ஒரு முடிவை எடுத்தேன். இந்த வார இறுதியில் சனி, ஞாயிறு வேறு எந்த வேலையும் செய்யாமல் எழுத மட்டுமே செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.
அந்த இரண்டு நாளும் வீட்டின் மோடம் அணைத்து வைக்கப்பட்டது. எனவே ஈமெயில், சமூக ஊடங்கள் இல்லை; இசை இல்லை; நண்பர்கள் ஃபோன் செய்தால் எடுத்து, ‘பிஸியாக உள்ளேன், அப்புறம் திருப்பிக் கூப்பிடுகிறேன்’ என்று சொல்லி வைத்து விட்டேன். கருமமே கண்ணாயினார் என்பதுபோல, எழுதிக் கொண்டே இருந்தேன். விளைவு, சனிக்கிழமை மட்டுமே 12 அத்தியாயங்கள் எழுதி மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டேன்.
வாரத்துக்கு ஓர் அத்தியாயம் எழுதினால் பெரிய சாதனை என்று இருந்தவன் ஒரே நாளில் 12 அத்தியாயங்கள் எழுதிய அதிசயத்தை எண்ணி எண்ணி வியந்துகொண்டிருந்தேன். அதன் பின்னர், பெரும்பாலும் ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டுமே செய்ய முனைகிறேன். அது நிறைய நேரம் நல்ல பலன்களைக் கொடுக்கிறது.
Ω
ஒருமுகமான ஒரு செயலை முயன்று பாருங்கள். நீங்கள் நீண்ட நாட்களாக தொடர்ந்து ஒத்திப்போட்டுக் கொண்டிருக்கும் வேலை ஒன்றை இந்த சனி அல்லது ஞாயிறு செய்வதாக எடுத்துக்கொள்ளுங்கள். அன்று வேறு கவனச் சிதறல் எதுவும் இல்லாமல் இருக்கும்படி திட்டமிடுங்கள். இந்த நாள் அல்லது அடுத்த இரண்டு மூன்று மணி நேரங்கள் இந்த வேலைக்கு மட்டும்தான் என்று உறுதிகொள்ளுங்கள். முடிந்தால் ஃபோன் ஒலிக்கும்படி இன்றி அமைதி நிலையில் வைத்துவிடுங்கள்.
இப்போது நன்றாக மூச்சை ஓரிரு முறை விட்டுக்கொண்டு நீங்கள் திட்டமிட்ட அந்த வேலையை ஆரம்பியுங்கள். ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று செய்யுங்கள். நீங்களே ஆச்சரியப்படும் வகையில் மிக விரைவாக அந்த வேலையை முடிப்பீர்கள்.
அப்படி ஒருமுகப்படுத்திய கவனத்துடன் பணிகளை செய்வதன் பலன் என்ன? கடினமான வேலை எது, எளிய வேலை எது என்று தெளிவாகப் புரிய வரும். அதற்கேற்ப நமது நேரத்தை திட்டமிட இயலும். எந்த வேலையாகினும் அது கடகடவென முடியும். கையில் மிஞ்சும் மீதி நேரத்தில் பல்வேறு கூடுதல் பணிகளை எடுத்துக் கொண்டு நிறைவேற்ற இயலும். அப்படி செய்த வேலை எடுத்துக்கொண்ட நேரம் குறைவாக இருப்பது மட்டுமின்றி வேலையின் தரமும் பெரும்பாலும் உயர்வாக இருக்கும்!
இந்த ஒருமுகப்படல் என்பது வேலைக்கு மட்டுமல்ல; வாழ்வின் மகிழ்வான தருணங்களுக்கும்தான். பலர் திரையரங்கில் உட்கார்ந்து அலுவலக ஃபோன் பேசுவதைப் பார்த்திருப்போம். கோவாவுக்கு விடுமுறைக்குப் போகையில் அலுவலக லேப்டாப் எடுத்துக்கொண்டு போவதைப் பார்த்திருப்போம். அவையெல்லாம் பெரும்பாலும் சரியான திட்டமிடலின்மையையே காட்டுகின்றன அல்லது கடுமையான வேலைப் பளுவை. அப்படிப்பட்டவர்கள் வேலையும் ஒழுங்காக செய்ய இயலாமல், வாழ்வின் அந்த மகிழ்ச்சியான தருணங்களையும் சரியாக அனுபவிக்காமல் இடையில் மாட்டிக் கொண்டு தவிக்கின்றனர்.
தின வாழ்வில் நேரங்களை கூட்டிக் கொள்வது கடவுளின் கையில் இல்லை, நமது திட்டமிடலில்தான் இருக்கிறது!
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Sathish R 3 years ago
Cal Newport னுடைய "Deep work", "A world without email" போன்ற புத்தக்கங்கள் நினைவுக்கு வருகின்றன. இது போல் முழு கவனத்தை செலுத்தி குறைந்த நேரத்தில் நிறைய செய்து முடிக்க விரும்புபவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள். ஒரு நாளில் செய்ய வேண்டிய வேலைகளை இது போல பிரித்துக்கொள்ள அவர் கூறும் time block planning உத்தி மிக உதவியானது. (https://www.timeblockplanner.com/ and blog post https://www.calnewport.com/blog/2013/12/21/deep-habits-the-importance-of-planning-every-minute-of-your-work-day/).
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Sundarapandian Dhandabani 3 years ago
கட்டுரை அருமை சார். Multitasking ஏற்படுத்தும் பாதிப்பை சரியாக காட்டுகிறது. பல்செயல்திறன் நம்மை அதிகம் procrastinate செய்ய தூண்டுகிறது. இதற்கு மாற்றாய் Deep Work எனும் முறை பிரபலாமாகி வருகிறது. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் சார், நம் மரபு ஒரு நேரத்தில் பல செயல்களை அவதானிக்கும் கவனகக்கலையை பயின்று வந்துள்ளது. கவனகமும் பல்செயல்திறனும் ஒன்றா?
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
sivakumaran ramalingam 3 years ago
பணிபுரிவோருக்கு வேண்டுமானால் சரியாக வரலாம் . சுய தொழில் முனைவோர், அதுவும் ஆரம்ப கட்டத்தில் இருப்போருக்கு, மொபைலை சைலண்ட் மோடில் வைத்துக்கொண்டு ஒரு வேலையில் மட்டுமே கவனம் செலுத்துவது என்பது வரும் வாய்ப்புகள் நழுவ விடுவதாகும். நான், இது போல செய்து பல வாய்ப்புகளை நழுவவிட்டவன். முன் காலம் போல், வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் காத்திருப்பதில்லை. ஒருவர் குறிப்பிட்ட நேரம் அழைப்பை எடுக்கவில்லையென்றாலோ, தவற விட்ட அழைப்புகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்ப அழைக்கவில்லையென்றாலோ, அடுத்த சேவையாளரை தேடி போய் விடுகிறார்கள். மும்பையில் சில வருடங்கள், மென்பொருள் சேவைத்துறையில் பணிபுரிந்தேன். அப்போது, உள்ளூர் அணியை விட, தமிழகத்திலிருந்து சென்ற அணியின் விற்பனை விகிதம் 50% கூடுதலாக இருக்கும், எப்போதும். காரணம், மும்பைவாசிகளின் அப்போதைய(2007-2010) பழக்கம், மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை மொபைல் அட்டெண்ட் செய்ய மாட்டார்கள்.(இப்போது எப்படியென்று தெரியாது) ஆனால் வணிகர்களுக்கு சேவை தேவைப்படும் நேரம் எதுவென்று அவர்களுக்கு தெரியாது. அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் சேவையளித்ததால் நான் பங்கு கொண்ட அணியின் விற்பனை நன்றாக இருந்தது. அதே நேரத்தில், எங்களுடைய பொழுது போக்கு நேரத்தில் வரும் அழைப்புகளை சில விநாடிகளில் சூழ்நிலையை விளக்கி விட்டு மறு வேலைநாளில் அழைக்கிறோம் என சொல்லி பொழுதுபோக்கினை தொடர்வோம் . இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கருத்துகள் எல்லாமே, நன்கு வளர்ந்துவிட்ட அல்லது (தனியாரில்)உயர்பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். இரண்டாம் நிலை & அதற்கு கீழுள்ள நகரங்களில் பணிபுரிவோருக்கு எள்ளளவும் பொருந்தாது. ஐரோப்பிய பாணி நம்மூருக்கு எவ்வகையிலும் எந்நிலையிலும் பொருந்துமா என்பது சந்தேகமே.
Reply 17 2
Login / Create an account to add a comment / reply.