பேட்டி, வரலாறு, சமஸ் கட்டுரை, ரீவைண்ட், தொழில் 3 நிமிட வாசிப்பு
பிரதிபலன் பாராது கொடுப்பதைத்தான் டாடாக்களிடம் இந்தியத் தொழில் சமூகம் கற்றுக்கொள்ள வேண்டும்: சுந்தர் சருக்கை பேட்டி
சுந்தர் சருக்கை, சமகாலத்தின் குறிப்பிடத்தக்க தத்துவவியலாளர்களில் ஒருவர். டாடா நிறுவனத்தின் வரலாற்றை சமூக - தத்துவப் புலத்தில் ஆராய்ந்தவர். டாடா நிறுவனம் 150வது ஆண்டைக் கொண்டாடும் இந்தத் தருணத்தில் நவீன இந்தியாவுக்கு, டாடா என்ன பங்களிப்பு செய்திருக்கிறது என்று பேசினோம்.
ஒரு சமூகவியலாளர், தத்துவவியலாளர் என்ற அடிப்படையில் உங்களிடம் இதைக் கேட்கிறேன். டாடா போன்ற பெருநிறுவனம் ஒன்றை சமூகவியல் - தத்துவவியல் தளங்களில் எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?
ஒரு தொழிலதிபரின் பொறுப்புகள் தொடர்பான முற்போக்கான பார்வையைக் கொண்டிருந்தவர் ஜாம்ஷெட்ஜி டாடா. குறிப்பாகச் சொன்னால், மூன்று திட்டங்களில் அவர் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டிருந்தார். அவரது மறைவுக்குப் பின்னரே அவை முழுமை பெற்றன. முதலாவது, ஒரு உருக்காலையை நிறுவுவது. இரண்டாவது, மின்உற்பத்தி நிலையம். மூன்றாவது, பெரிய அளவில் ஒரு பல்கலைக்கழகத்தைத் தொடங்குவது. தேசக் கட்டுமானத்துக்கு இவை அவசியம் என்று ஜாம்ஷெட்ஜி கருதியதுதான் காரணம்.
பார்சி சமூகத்தில் சமூக சேவை என்பது பாரம்பரியமாகக் கடைப்பிடிக்கப்படும் விஷயம் என்றாலும், உதவி தேவைப்படுபவர்களுக்குக் கைகொடுப்பது, துயர் துடைப்பது ஆகியவற்றைத் தாண்டி, சிறந்த சமூகத்தையும் சிறந்த தேசத்தையும் கட்டமைப்பதில் பங்களிக்கும் விஷயத்தில் விரிவான பார்வையை டாடா நிறுவனம் கொண்டிருந்தது. குறிப்பாக, சிறப்பு மருத்துவமனைகள் உள்ளிட்ட மிக முக்கியமான திட்டங்களை முன்னெடுத்த டாடா நிறுவனத்தினர், அவற்றைத் தேசத்துக்கு அர்ப்பணித்தனர்.
ஐஐஎஸ்சி, டிஐஎஸ்எஸ் அல்லது என்ஐஏஎஸ் போன்ற நிறுவனங்களைத் தொடங்கியபோதும்கூட, அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதிலோ எதிர்மறையான தலையீடு செய்வதிலோ அவர்கள் ஈடுபடவில்லை. இதற்குத் தேர்ந்த முதிர்ச்சியும், மற்றவர்கள் மீதான நம்பிக்கையும் அவசியம்.
உலகமயமாக்கலுக்குப் பிந்தைய - தனித்துவம் என்று ஒன்றை உறுதியாகப் பராமரிக்க முடியாமல் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துவிடும் இன்றைய சூழலில், ஒரு தொழில் நிறுவனம் எந்த அளவுக்கு அதன் தனித்த பண்புகளை நீட்டிக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? இந்த விஷயத்தில் டாடாவின் 150 ஆண்டு காலப் பயணம் இன்று எந்த இடத்தில் இருப்பதாக நினைக்கிறீர்கள்?
ஒரு நிறுவனம் தனது தனித்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள, முதலில் தாங்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். தொடக்கத்திலிருந்தே, டாடா நிறுவனம் கொண்டிருந்த பண்புகள் இவை: 1. வணிகத்தில் நேர்மையான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது. 2. தங்கள் செல்வத்தில் கணிசமான பங்கைப் பொதுநன்மைகளுக்காகத் தானமாக வழங்குவது, 3. சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் பொருள்வடிவிலும், தார்மிக அடிப்படையிலும் தங்களால் பங்களிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பது.
இவ்விஷயத்தில், குறிப்பாக தாராளமயத்துக்குப் பிறகான காலகட்டத்தில், டாடா நிறுவனத்துக்குப் பல்வேறு சவால்கள் இருந்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஆனால், அவர்கள் தங்கள் சிறப்பம்சங்களைத் தக்கவைத்துக்கொள்வதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். அவர்களது அணுகுமுறையானது அறத்தின் அடிப்படையிலானது என்பதால், தவறுகள் நேர்ந்தாலும் அவற்றைத் திருத்திக்கொள்வதற்கு எப்போதுமே வாய்ப்புகள் உண்டு.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
முதலாளிகளுக்கு காந்தி பரிந்துரைத்த தர்மகர்த்தா வழிமுறையை டாடாவின் அறங்காவலர் முறையோடு பொருத்தி நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். எந்த அளவுக்கு டாடாக்கள் காந்தியை உள்வாங்கிக்கொண்டிருப்பதாக நினைக்கிறீர்கள்? மேலும், காந்தியின் அறங்காவலர் முறைக்கு இன்றைய நாட்களில் உள்ள பொருத்தப்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?
காந்தி முன்வைத்த அறங்காவலர் தன்மை என்பது, அடிப்படையில், அது பல்வேறு பாரம்பரியங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு கருத்தாக்கம்தான் என்றபோதிலும், ஒரு புரட்சிகரமான கருத்தாக்கம்! நம்மைச் சுற்றியிருக்கும் உலகில், நாம் அனைவருமே அறங்காவலர்களாக மட்டும் நடந்துகொள்வது என்பதுதான் அறங்காவலர் தன்மையின் மிக முக்கியமான கொள்கை. அறங்காவலர்கள் எனும் முறையில், நம்மிடம் இருப்பனவற்றைப் பாதுகாப்பதுடன், அவற்றை வருங்காலத் தலைமுறையினருக்காக மேம்படுத்துவது அவசியம். மக்களுக்கு உதவிசெய்வது போலவே, இயற்கையைப் பாதுகாப்பதிலும் முனைப்புக் காட்டுவதும் அவசியம்.
காந்தி வலியுறுத்திய மற்ற விஷயங்களைப் போலவே, அறங்காவலர் தன்மையும் பெரும்பாலான சாமானியர்களால் தாங்கிக்கொள்ள முடியாததாகவே இருந்தது. அறங்காவலர் தன்மையின் சில அம்சங்களில் – குறிப்பாக, மக்களின் வாழ்வை மேம்படுத்துவதில் பொறுப்பெடுத்துக்கொள்ளும் விஷயத்தில் - ஜேஆர்டி டாடாவுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தது கவனிக்கத்தக்க விஷயம். தங்கள் ஊழியர்களுக்கு, தொழிலாளர் சட்டங்களை அறிமுகப்படுத்தியது டாடா குழுமம்தான். அந்த வடிவம், பின்னாட்களில் அரசால் பின்பற்றப்பட்டது.
காந்தி முன்வைத்த அறங்காவலர் கொள்கையின் எல்லா அம்சங்களையும் டாடா குழுமத்தினர் பின்பற்றுவதாக நான் நினைக்கவில்லை. ஆனால், அவர்கள் நடத்தும் பல அறக்கட்டளைகளின் மூலமாகத்தான் பல்வேறு விஷயங்களில் அவர்கள் தலையிட முடிந்தது. நாம், நமது வருங்காலத் தலைமுறையினருக்கான உலகத்தையும் சமூகத்தையும் பராமரிக்கும் அறங்காவலர்கள் மட்டும்தான் எனும் அடிப்படையில், அறங்காவலர் தன்மையின் சாரத்தை நாம் பார்த்தோமேயானால், நடைமுறையில் இந்தக் கொள்கையை டாடா குழுமத்தினர் பின்பற்றுகிறார்கள் என்றே நாம் கருதலாம்.
நவீன இந்தியாவுக்கு டாடாவின் மகத்தான பங்களிப்பு என்று எதைச் சொல்வீர்கள்?
இன்றைக்கு நாம் இருக்கும் அரசியல் சூழலின் அடிப்படையில் பார்க்கும்போது, தாங்கள் மேற்கொள்ளும் பல்வேறு திட்டங்களில் நமது அரசியல் சட்ட கொள்கைகளைப் பாதுகாப்பதிலும் வளர்த்தெடுப்பதிலும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதுதான் டாடா குழுமத்தினரின் ஆகச் சிறந்த பங்களிப்பு என்று கருதுகிறேன். வணிகம் செய்வதில் நேர்மையின் ஆழமான கொள்கைகளைப் பின்பற்றுவதில் அவர்கள் காட்டும் உறுதிப்பாடு அங்கீகரிக்கப்படுவதும் அவசியம் என்று கருதுகிறேன். இந்த உறுதிப்பாடு, இந்தியாவின் பிற தொழில் நிறுவனங்கள் மீதும் தாக்கம் செலுத்தியிருக்கும்.
டாடா குழுமத்திடமிருந்து ஒவ்வொரு தொழில்முனைவோரும், வணிக நிறுவனங்களும் கற்றுக்கொள்ள வேண்டிய, உள்வாங்க வேண்டிய முக்கியமான மூன்று அம்சங்களைச் சொல்லுங்கள்…
1. பணம் சம்பாதிப்பதற்கான எந்த ஒரு தொழிலும் நேர்மையான நோக்கங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும். 2. சமூகத்துக்குத் திரும்பத் தருவது என்பது தார்மிக அடிப்படையிலான தேவை. நிறுவனங்களின் சமூகப் பொறுப்புகள் (சிஎஸ்ஆர்) போன்ற அழுத்தங்களைச் சார்ந்ததாக அது இருக்கக் கூடாது. 3. நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக வறுமை ஒழிப்பு போன்றவை மிகப் பெரியவை என்றபோதிலும், நம் ஒவ்வொருவரின் சிறிய அளவிலான ஆதரவும் முக்கியமானதாகும்.
பிரதிபலன் எதிர்பார்க்காமல் கொடுப்பது அல்லது ஒருவர் வழங்கும் பணத்தைப் பொறுப்பாகக் கையாள்வது என்பது நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பாடம்!
- ‘இந்து தமிழ்’, அக்டோபர், 2018
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.