அரசியல் 6 நிமிட வாசிப்பு

மாயாவதி மீதான வெறுப்புக்கான காரணம் என்ன?

சூரஜ் யெங்டே
17 Jan 2022, 5:00 am
4

குஜன் சமாஜ் தலைவரும் உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான மாயாவதியைப் போற்றும் மேல் சாதி பெண்ணியர் ஒருவரைக்கூட நான் இதுவரை சந்திக்கவே இல்லை. எவ்வளவுதான் முற்போக்கானவர்களாக இருந்தாலும்கூட, பாலினப் பாகுபாடு கருதாதவர்கள் என்று தன்னைக் கூறிக்கொண்டாலும்கூட, அவர்களிடத்திலும் சாதி உணர்வுதான் இறுதியில் வெல்கிறது என்பதற்கு இரண்டே இரண்டு நிகழ்வுகளை மட்டும் நினைவுகூர விரும்புகிறேன்.

முதல் சம்பவம் யேல் பல்கலைக்கழகம்

சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். நாடாளுமன்றத் தேர்தல்கள், அரசியல் கட்சிகள் தொடர்பான குழு விவாதத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு அது.  

காலனியாதிக்கக் காலத்திலிருந்த இந்து – முஸ்லிம் இருமை நோக்கில்தான் அந்த நிகழ்ச்சியே வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கென அழைக்கப்பட்டிருந்த குழுவில் இந்திய மேல் சாதியினரும், பழங்குடி இனத்தவர் ஒருவரும் இடம்பெற்றிருந்தனர்.

உரையாடல்கள் முடிந்த பிறகு குழுவில் இடம்பெற்றிருந்த பெண்கள், ‘இந்தியத் தேர்தல் தொடர்பில் பெண்ணியர்களின் கருத்துகளைக் கேட்டாக வேண்டும்’ என்று வற்புறுத்தினர். ‘பெண்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் அளிக்க மோடி அரசு தவறிவிட்டது’ என்று அனைவரும் குற்றஞ்சாட்டினர்.

அங்கே இருந்தவர்களில் சிலர் - காலையில் பரந்த சிந்தனையாளர்களாகவும் பிற்பகலில் முற்போக்காளர்களாகவும் இரவில் புரட்சிக்காரர்களாகவுமே மாறிவிடக்கூடியவர்களாக இருந்த அவர்கள் - உண்மையில் ‘முழுநேர சாதி வெறியர்’களாகவே இருந்தார்கள்.

பேச்சு, தலித்துகள் தொடர்பில் நகர்ந்தது. தலித்துகள் அரசியலை அவர்கள் அனைவரும் ஒரே குரலில் கண்டித்தனர்.

தலித்துகளைப் பற்றிப் படர்ந்துள்ள அரசியல் கலாச்சாரம் தொடர்பிலும், அவர்களில் அசைக்க முடியாத மலையான மாயாவதி தொடர்பிலும் என்னுடைய கருத்துகளைத் தெரிவித்தேன். ‘மா’ என்ற சொல்லை நான் உச்சரிக்கத் தொடங்கியவுடனேயே அவர்கள், பட்டினியால் காது பஞ்சடைந்தவர்களின் குரலைப் போல சுருதி மாற்றிக்கொண்டு பேசினர்.

வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண், “அரசியலைத் தவறாக வழிநடத்துகிறார் மாயாவதி; அவர் ஊழல் பேர்வழி, திறமையற்றவர்” என்று சாடினார். இந்தக் கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட ‘முற்போக்குப் பெண்ணியர்’களில் ஆண் – பெண் பேதம் ஏதும் இல்லை.

“உங்களுடைய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் உண்டா?” என்று அவரை நோக்கிக் கேட்டேன். அதற்கு யாருமே பதில் சொல்லவில்லை. “பெரிய மாநிலங்களின் அரசியல் குறித்து எனக்கு நேரடியாக அதிகம் தெரியாது, ஆனால் மாயாவதி தொடர்பாக எனக்கு வலுவான கருத்துகள் உண்டு” என்று அந்தப் பெண் கூறினார்.

“மாயாவதியும் உங்களைப் போல ஒரு பெண்தான் என்றாவது கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். “பிராமண- ஆணாதிக்க சமூகத்தில் தனியொரு ஆளாக எதிர் நீச்சல் போட்டு அரசியல்செய்யும் அவருக்குப் பெண்ணியர்கள் என்ற வகையிலாவது ஆதரவு தருவீர்களா?” என்று கேட்டேன். “மாயாவதியைப் போல இதற்கு முன் எந்த ஒரு பெண்ணாவது அனைத்து நியதிகளையும் மீறி, அரசியலில் புதிய எல்லைகளைத் தொட்டவரை, சமூகப் புரட்சியாளரைப் பார்த்தது அல்லது கேள்விப்பட்டதாவது உண்டா?” என்று கேட்டேன். “மாயாவதியுடன் போட்டி போடத்தக்க இன்னொரு பெண் அரசியலர் இந்திய அரசியலில், அவருக்கு சமதையாக உண்டா?” என்று கேட்டேன்.

இப்போது அந்தப் பெண் சொன்னார், “இந்திய அரசியலுக்கு ஏற்றவர் அல்ல மாயாவதி; சர்வாதிகாரிபோல அதிகாரம் செலுத்தும் சுபாவம்தான் இருக்கிறது!”

அங்கிருந்த பாகிஸ்தானிய அரசியல் அறிவியலாளர் அப்போது குறுக்கிட்டார்; அவர்களை நோக்கி அவர் கேட்டார், “பெண்ணியம் என்ற கருத்துக்கு ஏற்ற உருவத்தைச் சிறிது கற்பனைசெய்துவிட்டுப் பேசுங்கள்; இதே கண்ணோட்டத்தை ஏன் நீங்கள் சிலாகிக்கும் ஏனைய அரசியலர்களுக்குப் பொருத்திப் பார்க்கத் தவறுகிறீர்கள்?”

இரண்டாவது சம்பவம் வாஷிங்டன் மாநாடு

வாஷிங்டன் நகரில் ஒரு மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன். அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் தமிழ்ப் பிராமண பேராசிரியை. வெள்ளையர்களின் நிற ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் மாநிறப் பெண்ணியராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறவர்.

மாயாவதி தொடர்பாக அவர் கொண்டுள்ள கருத்தை அப்படியே எழுத்தில் எழுத இங்குள்ள பத்திரிகைகளின் கொள்கைகள் அனுமதிக்கவே அனுமதிக்காது. இவ்வளவுக்கும் மாயாவதி குறித்து, நேரடியாகத் தொடர்புபடுத்திக் கூறும் அளவுக்கு நெருக்கமான பரிச்சயம் அவருக்கு இருந்ததே இல்லை!

மாயாவதி மட்டும் இல்லை; பிற்படுத்தப்பட்டவரான லாலு பிரசாத், பழங்குடியினத்தவரான ஹேமந்த் சோரன் தொடர்பாகப் பேசும்போதும் இந்த ‘பரந்த சிந்தனையாளர்’கள் இப்படிப்பட்ட அசௌகரியங்களுக்குத்தான் ஆளாகிறார்கள்.

இப்படிப்பட்ட பரந்த சிந்தனையாளர்கள்தான் - சாதி வழி உரிமையைக் கொண்டு படித்து முடித்தவர்கள் - மேற்கத்திய நாடுகளில் கல்வியாளர்களாகவும், தீவிரச் செயல்பாட்டாளர்களாகவும் பெயரெடுத்து, தங்களுடைய ரத்தத்திலேயே ஊறிவிட்ட மூதாதையர் வழி சாதி வெறியை வெளிப்படுத்துகின்றனர்.

மாயாவதியைப் போலத்தான் மம்தா பானர்ஜியும் தேசிய அரசியல் தலைவர். ஆனால், பிராமணர் என்பதால் அவருக்கு உரிமைகள் அதிகம், அவரால் எவரிடத்திலும் எளிதில் பாராட்டைப் பெற்றுவிட முடிகிறது.

மாநிலங்களவையிலும் மக்களவையிலும் பிராமணர்களைத்தான் மாயாவதி தன்னுடைய கட்சிக் குழுக்களின் தலைவர்களாக நியமித்தார் என்றாலும்கூட மேல் சாதிக்காரர்கள் அவரை எதிர்ப்பதில் ஒன்றுபட்டே நிற்கிறார்கள்.

இப்போது புதிதாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுக் கலாச்சாரம் அப்படியே விளிம்புநிலைச் சமுதாய மக்களை நாடாளுமன்ற, சட்டமன்றங்களிலும் பிரதிநிதித்துவப்படுத்தும் என்றால், மாயாவதியைவிட சிறந்த மாற்று (தலைவர்) அவர்களுக்குக் கிடையாது. அவர் பெண், சொந்த வாழ்க்கையிலும் தன்னந்தனியளாய் நின்றுவிட்ட பெண், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர், மிகவும் பின்தங்கிய பகுதியிலிருந்து வந்தவர், சமுதாயத்தின் மேல்தட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட – விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மக்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவர்.

இந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தில் நான்கு முறை முதல்வராகப் பொறுப்பேற்றவர். அனைத்து சமுதாய மக்களும் வளர்ச்சியும் முன்னேற்றமும் பெற பாடுபட்டவர், அதையே அவருடைய நிர்வாகத்தின் மூல கருவாக வளர்த்தவர். ஊடகங்களும் அரசியல் விற்பன்னர்களும் இன்றுவரை அவருடைய செயல்பாடுகளைப் புறக்கணிக்கவே விரும்புகின்றனர்.

சாதிய அணுகுமுறையிலேயே அவர்கள் நேர்மையாகத் தங்களை சுயபரிசோதனைக்கு உள்படுத்திக்கொண்டால், பகுஜன் சமாஜ் கட்சி எந்த அளவுக்கு மதிப்பானது என்பதை உணர்வார்கள்.

அமெரிக்காவின் வெள்ளைக்காரர்களால் ஒரு கறுப்பினத்தவரை அதிபராக ஏற்க முடியும் என்றால் இந்தியாவின் உரிமை பெற்ற மேல் சாதியினர்  மாயாவதி பின்னால் திரள்வதை எண்ணிப் பார்ப்பது நேரத்தை விரயமாக்கும் கற்பனையாக மட்டுமேதான் இருக்குமா, என்ன?

பெண்ணியர்கள், முற்போக்காளர்கள், அநீதிக்கு எச்சரிக்கை விடுவோருக்கு மாயாவதி ஒரு தலைவராகும் வாய்ப்பு இல்லை என்றால் என்ன சொல்வது? தலித்துகளின் சுயமரியாதை இயக்கத்தையே சீர்குலைக்க வந்தவர்கள் என்றே அவர்களைக் கருதியாக வேண்டும். அதற்குப் பிறகு அவர்களுடைய கருத்துகளாக வெளிப்படுத்தும் ஏசல்களுக்கு முக்கியத்துவமே கொடுக்கக் கூடாது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சூரஜ் யெங்டே

சூரஜ் யேங்கடே, ஆய்வறிஞர், எழுத்தாளர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ‘கேஸ்ட் மேட்டர்ஸ்’ (Caste Matters) நூலின் ஆசிரியர்.


4

1





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Che Ajith    3 years ago

சிறப்பான கட்டுரையை வழங்கிய எழுத்தாளர் சூரஜ்யேங்டே அவர்களுக்கும் ஆசிரியர் சமஸ் அவர்களுக்கும் நன்றி. ஜெய்பீம்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

சூரஜ் யேங்கடேவின் எழுத்தை முதன்முதலாக தமிழில் வசிக்கிறேன்; அருஞ்சொல்லின் பாதை வியக்கவைக்கிறது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Thillai Govindan R   3 years ago

பொது வாழ்வில் இப்படிப் பட்ட பிற்படுத்தப்பட்ட சமூக தலைவர்களின் பிம்பத்தை சீர்குலைக்க சில செய்திகளை , அவை உண்மைக்கு புறம்பாக இருந்தும், கட்டமைத்து பரப்புவார்கள்.அது நாளடைவில் பொதுப்புத்தியில் உண்மை செய்திகள் போலாகிவிடும். மறந்தும் அவர்கள் செய்த நற்காரியங்கள் பற்றி பேசமாட்டார்கள். இதற்கு மாயாவதியும் விதிவிலக்கல்ல.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

KMathavan   3 years ago

பொது அரங்குகளில் துணிச்சலாக குற்றம் சாட்ட முன் வருபவர்கள் ,கேட்கிற கேள்விக்கு தரவுகள் கொடுக்க வேண்டும்.மறுக்கும்பட்சத்திலோஅல்லதுதெரியாமல் மழுப்பும் சமயத்தில் சமூக கேடுதான் பயனாக கிடைக்கும்,நாட்டிற்கு.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

ஊரக பொருளாதாரம்அரசியல் ஸ்திரமின்மைபொருளாதார சீர்திருத்தம்புகைமாமாஜிகரிகாலச் சோழன் பொங்கல்ஐபிசியானைஅருஞ்சொல் இயக்கம்புலன் விசாரணைமக்கள் மொழியாக நின்றது தமிழ்: பெருமாள் முருகன் பேடவிண்மீன்புதிய முழக்கங்கள்தொழில்முனைவோர்75 ஆண்டுகள்பாபர் மசூதிசமையல் எண்ணெய்பாடத்திட்டம்தெலுங்கு தேசம்சோஷலிஸ்ட் தலைவர்இந்திய உழவர்கள்வெறுப்புக்கு இடையே அன்புவக்ஃப்ஹெர்னியாநாஞ்சில் சம்பத்நாக்பூர்சன்னிஇந்திய அரசியல் கட்சிகள்வைசியர்கள்உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!