ஃபேஸ்புக் என்று அறியப்பட்ட 'மெட்டாவேர்ஸ்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் படு வேகமாக அடைந்த வீழ்ச்சி, உலகையே கவனிக்க வைத்துள்ளது. 'மெட்டா' பங்கு மதிப்பில் 26% சரிவு ஏற்பட்டதானது, அதன் சந்தை மதிப்பில் 23,000 கோடி அமெரிக்க டாலர்களைக் காலிசெய்திருக்கிறது. இதன் பின்னணி என்ன? கொஞ்சம் உற்றுநோக்க இந்தச் செய்தியின் பின்னணியைத் தன் வாசகர்களுக்கு ‘அருஞ்சொல்’ தருகிறது.
உச்சபட்சப் பயனீட்டாளர்
சமூகவலைதள நிறுவனமாக இருந்த 'ஃபேஸ்புக்'கை அடுத்தகட்டமாக, 'மெட்டாவெர்ஸ்' எனும் மெய்நிகர் உலகமாக வளர்த்தெடுக்க அந்நிறுவனத்தின் தலைவர் முன்னெடுத்துவரும் நிகழ்ச்சிகளை அறிவோம்.
ஃபேஸ்புக் நிறுவனம் வளர்ந்துகொண்டேவந்து, இனி வளர்வதற்கு வாய்ப்பில்லை என்ற கட்டத்தை அடைந்துவிட்டது; அதாவது, புதிதாக ஃபேஸ்புக் நோக்கி வருவோர் எண்ணிக்கை தலை தட்டிவிட்டது. இன்ஸ்டாகிராம் வளர்ச்சிக்குப் பிறகு சுருங்கவும் செய்கிறது. ஓராண்டை எடுத்துக்கொண்டால், ஃபேஸ்புக் - மூன்றாவது காலாண்டிலிருந்ததைவிட நாலாவது காலாண்டில் 5 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்திருக்கிறது. அந்த நிறுவனம் தொடங்கப்பட்ட 18 ஆண்டுக்கால வரலாற்றில் இப்படி வீழ்ச்சி அடைவது இப்போதுதான்.
ஆப்பிள் செய்த மாற்றம்
ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக, செயலிகளைக் கண்காணிக்கும் வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்தியது. இதன் ஒரு பகுதியாகத் தங்களுடைய ஆன்லைன் செயல்பாடுகளை 'ஃபேஸ்புக்' தொடர்ந்து கண்காணிப்பதை விரும்பவோ, தடுக்கவோ ஐபோன் உரிமையாளர்களுக்கு ஒரு வாய்ப்பையும் அளித்தது 'ஆப்பிள்'. இப்படித் தனியுரிமையைப் பாதுகாக்கும் வாய்ப்பை 'ஆப்பிள்' நிறுவனம் அளித்ததானது, 'மெட்டா' நிறுவனத்தின் வியாபாரத்துக்குப் பலத்த அடியாகிவிட்டது.
ஏனென்றால், இனி ஃபேஸ்புக்கும் இதரச் செயலிகளும், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து பின்தொடர அனுமதிக்குமாறு அவர்களிடமே கேட்டாக வேண்டும். இதனாலேயே பல வாடிக்கையாளர்கள் மெட்டாவெர்ஸிலிருந்து வெளியேறிவிட்டனர். ஃபேஸ்புக்குக்கு இனி பயனீட்டாளர் பற்றிய தரவுகள் குறைந்துவிடும். அதனால் இலக்கு வைத்து வாடிக்கையாளர்களைப் பின்பற்றிவந்த அதன் வியாபாரம் சரிந்துவிடும். இதனால் நிறுவனத்தின் வருமானம், லாபம் இரண்டும் கடும் பாதிப்பை எதிர்கொள்ளும்.
இன்னொரு இழப்பும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்கிறவர்களுக்கு ஐபோன் வைத்திருப்போர் மேலும் பசையுள்ள சந்தையாகத் திகழ்வார்கள். இணையதளத்தை அணுகும் ஐபோன் வாடிக்கையாளர்கள் வசதி படைத்தவர்கள், நல்ல செலவாளிகள். ஆப்பிள் நிறுவனம் செய்த இந்த ஒரு மாற்றத்தால் மட்டும் மெட்டா நிறுவனத்துக்கு 1,000 கோடி டாலர்களுக்கும் மேல் அடுத்த ஆண்டு வருவாய் குறையும். ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்தைக் காப்பதாக அளித்துள்ள வாக்குறுதியைக் கைவிடாது. மெட்டா நிறுவனப் பங்குகளை வாங்கி வைத்திருப்பவர்களுக்கும் இது தெரியும்.
விளம்பரத்தில் கூகுளுக்கு வருவாய்
மெட்டாவின் வணிக இழப்பு, போட்டி நிறுவனங்களுக்கு லாபகரமான திருப்பம். மெட்டா நிறுவனத்துக்கு விளம்பரம் தந்தவர்கள் இப்போது கூகுளுக்கும் விளம்பரங்களைத் திருப்புகின்றனர். மின் வணிக தேடுதல் விளம்பரங்கள் இனத்தில் கூகுளுக்கு வருவாய் மிகப் பெரிய அளவில் உயர்ந்திருக்கிறது. இந்தப் பிரிவில்தான் மெட்டாவுக்கு கடந்த மூன்று மாதங்களில் சரிவு ஏற்பட்டது. மெட்டாவைப் போல பயனீட்டாளர் தரவுகளுக்காக ஆப்பிளை நம்பியிருக்கவில்லை கூகுள். அதனிடம் மூன்றாம் தரப்பு தரவுகள் ஏராளம். ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி பிரவுசரைப் பயன்படுத்துவோரால் இனி கூகுளுக்கு வியாபாரம் அதிகமாகிவிடும். மேலும் மேலும் விளம்பரதாரர்கள் கூகுளின் தேடுபொறிகளுக்கு விளம்பரங்களைத் தரத் தொடங்கினால் மெட்டா நிறுவனத்துக்கு அது பெரிய பிரச்சினையாகவே தொடரும்.
டிக்டாக், ரீல்ஸ்கள் ஏற்படுத்தும் கொதிநிலை
ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சீனத்தின் 'டிக்டாக்' செயலி மிகப் பெரிய எதிரியாகவே திகழ்ந்தது. அதில் வெளியான குறுகிய கால விடியோக்களுக்கு 100 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஏற்பட்டுவிட்டனர். அது இப்போது மெட்டாவின் இன்ஸ்டாகிராமுடன் கடுமையான போட்டியிலிருக்கிறது.
'டிக்டாக்'கைப் போலவே இன்னொரு செயலியை 'மெட்டா' உருவாக்கியது. அது 'இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்' என்ற விடியோ காட்சிகளையும் கொண்டது. அதுவே இப்போது அதன் செயலிகளிலேயே அதிகம் பயன்படுத்தப்படுவதில் முதலிடத்தில் இருக்கிறது. ரீல்ஸ் பயனீட்டாளர்களை அதிகம் ஈர்த்தாலும் இன்ஸ்டாகிராமின் மற்ற பொருள்களைப் போல அதிக பணத்தை ஈட்டுவதில்லை. காரணம் விடியோ காட்சிகளுடன் விளம்பரங்கள் வந்தால், அதை ஒதுக்குவதே பெரும்பாலானவர்களின் இயல்பு. எனவே ரீல்ஸை அதிகம் பயன்படுத்துமாறு செய்தால் வருமானம்தான் குறையும்.
மெட்டாவெர்ஸுக்கு செலவு வீண்
சமூகவலைதளங்களின் அடுத்த தலைமுறை 'மெட்டா' என்று ஜூகர்பர்க் நிச்சயம் நம்புகிறார். அதற்காக மேலும் பல கோடிகளைச் செலவிடவும் தயாராக இருக்கிறார். கடந்த ஆண்டு மட்டும் 1,000 கோடி டாலர்களுக்கும் மேல் செலவிட்டார். இன்னும் அதிகமாகக் கூட செலவு செய்ய விரும்புகிறார். எவ்வளவு செலவு செய்தாலும் அவர் நினைக்கும் அளவுக்கு வருமானம் வருமா என்று தெரியவில்லை.
ஏகபோகத்துக்கு எதிர்
ஜூகர்பர்க்கின் நிறுவனத்துக்கு எதிராக அமெரிக்க அரசு, ஏகபோக வர்த்தக தடை நடைமுறைச் சட்டப்படி கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினால் பிரச்சினைகள் மேலும் அதிகரிக்கும். மெட்டா நிறுவனத்தின் செயல்பாடுகளை அரசு வெவ்வேறு துறைகள் மூலம் விசாரிக்கின்றது. பிற நிறுவனங்களால் போட்டியிட முடியாதபடிக்கு அது செயல்பட்டதா என்பது இந்த விசாரணைகளின் நோக்கம்.
போட்டிகளே இல்லாத ஏகபோக நிறுவனமாக மெட்டா இல்லை, சமூகவலைதளங்களில் அதற்குப் போட்டியாக டிக்டாக், ஆப்பிள், கூகுகள், ஃப்யூச்சர் ஆகியவை இருப்பதை ஜூகர்பர்க் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் அரசு எடுக்கக் கூடிய ஏகபோக நிறுவன நடைமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளால் 'மெட்டா' நிறுவனத்துக்கு இடையூறுகள் ஏற்படுவது நிச்சயம்.

1






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.