கட்டுரை, ஏன் எதற்கு எப்படி? 5 நிமிட வாசிப்பு

ஜாட் சமூகத்தின் செல்வாக்கு என்ன?

டி.வி.பரத்வாஜ்
11 Feb 2022, 5:00 am
1

மூன்று வேளாண் சட்டங்களை மோடி அரசு திரும்பப் பெற்றதற்கு ஜாட் சமூகத்தினரும் முக்கியமான காரணம். இந்தி பேசும் மாநிலங்களில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிராக ஜாட்டுகள் திரும்பினால், தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராகத் திரும்பும் என்பதை உணர்ந்தே இந்த முடிவை பாஜக எடுத்தது. அமித் ஷா தனியே ஜாட் சமூகப் பிரதிநிதிகளை சமீபத்தில் சந்தித்தார். சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் இந்த முறை அமைத்திருக்கும் கூட்டணியும் ஜாட் சமூகத்தினருக்கு முக்கியத்துவம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. யார் இந்த ஜாட்டுகள்? அவர்களுடைய பின்னணியும், செல்வாக்கும் என்ன? வெவ்வேறு மாநிலங்களில் செல்வாக்கு செலுத்தும் சமூகங்களை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தக் கட்டுரையில் ஜாட்டுகளைப் பற்றிக் காண்போம்.  

ஜாட்டுகளின் பின்னணி

விவசாயச் சமூகங்களில் ஒன்று ஜாட் சமூகம். வட இந்தியாவின் குறிப்பிடத்தக்க சமூகங்களில் ஒன்று. தங்களுக்குள் நெருக்கமான உறவைப் பேணுபவர்கள். இவர்களில் ‘காப்புகள்’ என்று அழைக்கப்படும் கிராமத் தலைவர்களுக்குக் கட்டுப்படுகிறவர்கள். அரசியல், சமூக, கலாச்சாரப் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் காப்புகள் கூடி ஒரு முடிவு எடுத்துவிட்டால், மற்றவர்கள் அதை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். பொதுவாக, இச்சமூகத்தினர் சாய்ந்தால் ஒரே பக்கமாகச் சாய்ந்துவிடுவார்கள் என்பதால்தான், எல்லா அரசியல் கட்சிகளும் ஜாட்டுகளின்  ஆதரவைப் பெறுவதில் போட்டி போடுகின்றன. 

உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், ஹரியாணா, பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில்தான் இவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். எப்படி மதங்களைக் கடந்து சாதி நம் சமூகத்தில் ஊடுருவி இருக்கிறதோ அப்படி ஜாட்டுகளும் இந்து, கிறிஸ்துவம், முஸ்லிம், சீக்கியம் என்று எல்லா மதங்களிலும் இருக்கிறார்கள்; மதங்களுக்கு அப்பாற்பட்டும் சாதி உணர்வு கொண்டவர்கள். உதாரணமாக, சீக்கியர்களில் ஒரே மொழி, ஒரே மதம் எனும் எல்லை கடந்து சாதி ஆதிக்கம் செலுத்துவதைச் சொல்லலாம். நிலவுடைமை ஆதிக்கத்தைப் போலவே, நவீனச் சமூகத்திலும் நல்ல பணியிடங்களில் அமர்ந்திருப்பவர்கள் ஜாட்டுகள். 

இந்திய ராணுவத்தில் சீக்கியர்களுக்கென்று தனி படைப்பிரிவு இருப்பதைப் போல ஜாட்டுகளுக்கும் தனிப் பிரிவு உண்டு. பஞ்சாபில் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் ஜாட் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் முதல்வர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போதுதான் முதல் முறையாக பட்டியல் இனத்தவரான சரண்ஜீத் சிங் சன்னி அப்பதவிக்கு வந்திருக்கிறார்.

போராட்ட குணம்

உக்கிரமான போராட்டங்களுக்குப் பேர் போனவர்கள் ஜாட்டுகள். ரயில் மறியல் போராட்டம் என்று ஜாட்டுகள் அறிவித்தால், பஞ்சாப், ஹரியாணா, தில்லி, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் ரயில் சேவை ஸ்தம்பிக்கும். பல சமயங்களில் ரயில்வே துறை தானாகவே ரயில்களை நிறுத்திக்கொண்ட வரலாறு உண்டு. பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்ற அவர்களுடைய போராட்டம் இன்றைக்கு ராஜஸ்தானின் தோல்பூர், பரத்பூர் பிரதேச ஜாட்டுகளைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவினரையும் ஓபிசி பட்டியலுக்குள் கொண்டுவந்துவிட்டது. 

சமூக செல்வாக்கு காரணமாக வட இந்தியாவில் 40-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளிலும், உத்தர பிரதேசம், ஹரியாணா, ராஜஸ்தான், பஞ்சாப், தில்லி ஆகிய மாநிலங்களில் 160-க்கும் மேற்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கிறவர்களாக இருக்கின்றனர் ஜாட்டுகள். சரண் சிங், தேவிலால் இருவரும் நாடு அறிந்த ஜாட் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். ஹரியாணாவில் தேவிலால், ரண்வீர் சிங் ஹூடா, பூபீந்தர் சிங் ஹூடா, ராஜஸ்தானில் நாதுராம் மிர்தா, உத்தர பிரதேசத்தில் சரண்சிங்கின் மகன் அஜீத் சிங், இப்போது அவருடைய மகன் ஜெயந்த் ஆகியோர் செல்வாக்கான ஜாட் தலைவர்கள். ஹரியாணா மக்கள்தொகையில் ஜாட் சமூகத்தவர் 25%. எனவே பஞ்சாபைப் போல ஹரியாணாவிலும் ஜாட்டுகள்தான் பெரும்பாலும் முதல்வர்கள் ஆகிறார்கள்.

உத்தர பிரதேசத்தில் என்னவாகும்? 

மேற்கு உத்தர பிரதேசத்தில் பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் முடிவுகளைத் தீர்மானிக்கும் வல்லமை ஜாட் சமூகத்தினருக்கு உள்ளது. 15 மாவட்டங்களில் 10% முதல் 15% வரை மக்கள்தொகையில் இருக்கின்றனர். பாக்பத், முசாஃபர் நகர், ஷாம்லி, மீரட், பிஜ்நூர், காஜியாபாத், ஹபூர், புலந்த்ஷஹர், மதுரா, அலிகட், ஹத்ராஸ், ஆக்ரா, மொரதாபாத் ஆகியவற்றில் ஜாட்டுகள் அதிகம். ராம்பூர், அம்ரோஹா, சஹரான்பூர், கௌதம் புத்த நகர் ஆகிய மாவட்டங்களில் சற்றே குறைவு. உத்தர பிரதேசத்தைப் பொருத்த அளவில் சரண் சிங் உருவாக்கிவைத்த ஜாட் வாக்கு வங்கியை முலாயம் சிங் வெகு திறமையாகக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தார். பிறகு, பாஜக அவர்களை வளைத்துவிட்டது.

இச்சமூகமும் பெரிய வாக்கு வங்கிதான் என்றாலும், உத்தர பிரதேசத்தில் யாதவர்கள், ஜாதவர்கள் அளவுக்கு ஜாட்டுகளின் தலைமையில் பலமான சாதிக் கூட்டணியை உருவாக்க அஜீத் சிங்குக்கோ, அவருடைய மகன் ஜெயந்த் சௌத்ரிக்கோ தெரியவில்லை.

ஜாட்டுகளின் அரசியல்

சரண் சிங்கின் மகன் அஜீத் சிங் ஐஐடியில் படித்தவர். அரசியலில் அவரால் பொது அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவர் கூட்டணியையும் மாற்றிக்கொண்டே இருந்தார். முதலில் வி.பி.சிங் தலைமையிலான அரசில் இடம்பெற்றார். பிறகு 1995-ல் காங்கிரஸ் அணிக்கு மாறி பி.வி.நரசிம்ம ராவ் அமைச்சரவையில் சேர்ந்தார். 1997-ல் பாரதிய கிசான் காம்கர் கட்சி (பிகேகேபி) கட்சியை அவர்  தொடங்கினார். அது ஜொலிக்காத சூழலில், 1999-ல் ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சியைத் தொடங்கினார். பாக்பத், கைரானா தொகுதிகளில் அக்கட்சி வென்றது. 2004 தேர்தலிலும் இவ்விரு தொகுதிகளும் ஆர்எல்டி கட்சிக்குக் கிடைத்தது. அடுத்து, வாஜ்பாய் தலைமையிலான அரசில் இடம்பெற்றார். பிறகு மன்மோகன் சிங் அரசிலும் இடம்பெற முயன்றார். அது பலிக்கவில்லை. 2009-ல் மீண்டும் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து 9 தொகுதிகளில் போட்டியிட்டு 5-ல் வென்றார். 2011-ல் மன்மோகன் சிங் அரசில் சேர்ந்துவிட்டார். அடுத்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில் அவரும் அவருடைய மகன் ஜெயந்த் சௌத்ரியும் தோற்றுவிட்டனர். கடந்த ஆண்டு கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பலியானார் அஜீத் சிங். இப்போது அகிலேஷ் யாதவுடன் ஜெயந்த் சௌத்ரி கூட்டணி சேர்ந்திருப்பது பாஜகவின் தூக்கத்தைக் கெடுக்கிறது. ஜாட்டுகளும் யாதவர்களும் முஸ்லிம்களும் சேர்ந்துவிட்டால் அது பாஜகவுக்கு அரசியலில் பேரிழப்பை ஏற்படுத்தும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின்போது தில்லி, ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளில் திரண்ட விவசாயிகளுக்கு உணவு, குடிநீர், சிற்றுண்டி, தின்பண்டங்கள் வழங்கும் ஏற்பாடுகளை ஜாட்டுகள், முஸ்லிம்கள் இணைந்துசெய்தனர். அப்போதே புதிய கூட்டு உருவாகிவிட்டது. இதை அப்படியே இப்போது அரசியல் களத்துக்கு இப்போது விரிவுபடுத்தியிருக்கிறார்கள். உத்தர பிரதேச தேர்தல் முடிவு ஏனைய வட மாநிலங்களிலும் தாக்கத்தை உண்டாக்கும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


5






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

சாதி ஒற்றுமை, மத ஒற்றுமை போன்றவை ஒரு ஜனநாயக நாட்டுக்கு நன்மைகளை விட தீமைகளையே அதிகம் செய்யும்.்

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

ஓய்வுபெற்ற அதிகாரிகள்கூட்டாட்சி முறைடொடோமாஏர்முனை மற்றமைநீதிபதி ரஞ்சன் பி.கோகோய்கல்லூரிதெற்காசியாவில் ஜனநாயக அழுகல்!தீபாவளிமறக்கப்பட்ட ஆளுமைபழங்குடிஇளைஞர்களிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு ஏன்?உலகமயமாக்கப்பட்ட வையகம்Tiruppurஸ்டென்ட் வலிஸ்ரேயஸ் சர்தேசாய் கட்டுரைகிளர்ச்சிசர்வதேச வங்கிகள்முகமது யூனுஸ்இளம் வயதினர்சம்ரிதி திவாரி கட்டுரைதமிழ்நாடு நௌசு.ராஜகோபாலன் பேட்டிகே.அண்ணாமலைதெ.சுந்தரமகாலிங்கம் சாசனம்வரலாறு ஒன்று – பாடங்கள் இரண்டு!பாலு மகேந்திராஐஎஸ்ஐதமிழினத்தின் ஏழு மண்டேலாக்கள்வரி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!