கோதுமை, நெல் என்று பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை அரசு கொடுப்பது அவசியமா, இல்லையா என்பது விவாதமாகி இருக்கிறது. வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுவிட்ட நிலையில், விவசாயிகளின் கோரிக்கை தொடர்பில் பல தரப்பாரும் பல மாதிரி பேசிவருகிறார்கள். தேசிய அளவில் என்ன நடக்கிறது என்பதைத் தமிழ் வாசகர்கள் அறிந்துகொள்ளும் வகையில் முக்கியமான சிலருடைய கருத்துகளைத் இங்கே ‘அருஞ்சொல்’ தொகுத்துத் தருகிறது.
ஆர். ஜெகந்நாதன், ஸ்வராஜ்யா’ பத்திரிகையாளர்:
மானிய மின்சாரம் அல்லது விலையில்லா மின்சாரம், மானிய விலையில் டீசல், விதைகள், உரம், பயிர்க் காப்பீடு, கடனுதவி ஆகியவை தந்தும் சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கு விவசாயம் கட்டுப்படியாகவில்லை என்கிறபோது, ‘குறைந்தபட்ச கொள்முதல் விலை’யைச் சட்டப்பூர்வமாக அனைத்து சாகுபடிகளுக்கும் அறிவித்தால் மட்டும் எப்படி நிலைமை மாறும்? இவற்றால் பணக்கார விவசாயிகள்தான் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள்!
அதிக கொள்முதல் விலையும், மானியமும் தவறான முதலீடுகளுக்கே வழிவகுக்கும். நிலத்தடிநீர் வேகமாக வற்றிவரும் பஞ்சாபில் விவசாயிகள் தொடர்ந்து நெல் சாகுபடியையே மேற்கொள்வார்கள், ரசாயன உரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தி எல்லா நிலங்களையும் சாரமிழக்கச் செய்வார்கள். உணவு தானிய விலைகள் உயர்ந்துவருகின்றன. கொள்முதல் விலையுயர்வு அதைக் குறைக்காது. அரசு மேலும் செலவழித்து, கூடுதல் ஆள்களை விவசாயத் துறையிலேயே வைத்திருக்கவே இது வழிவகுக்கும். அன்ன தாதாக்களுக்கு எதிராக அரசு செயல்படக்கூடாது என்று போராட்டத்தின்போது பணக்கார விவசாயிகள் கூறினார்கள். அன்னதாதாக்களுக்கே அன்னதாதாக்களாக இருக்கும் வரி செலுத்தும் மக்களையும், நுகர்வோரையும் விவசாயிகளும் மறந்துவிடக்கூடாது.
மிகவும் குறைவான எண்ணிக்கையுள்ள மக்கள் மீது மட்டுமே வரிகளைச் சுமத்தி விவசாயம் சார்ந்திருக்கும் பெரும்பான்மை மக்களை வரியிலிருந்து விட்டுவைப்பது நீண்ட காலத்துக்கு நல்லதும் இல்லை, சாத்தியமும் இல்லை!
கைல்ஸ் வெர்னியர்ஸ், பேராசிரியர், அசோகா பல்கலைக்கழகம்:
மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டது பிரதமர் மோடிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் மிகப் பெரிய தோல்வி. உத்தர பிரதேசத் தேர்தலில் தோற்கக் கூடாது என்பதற்காக அல்ல - 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை இழந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த முடிவை மோடி எடுத்திருக்கிறார்.
மேற்கு உத்தர பிரதேசத்தில் மொத்தமே 44 பேரவைத் தொகுதிகள்தான்; அங்குதான் விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் அதிகம். இந்தத் தொகுதிகளை இழந்தாலும்கூட காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் பிரிந்து நிற்பதால் யோகியால் மீண்டும் முதல்வராகிவிட முடியும். ஆகையால், மோடியின் அச்சம் அதுவல்ல.
இந்தி பேசும் மாநிலங்களில் 2014-ல் 212 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 191 தொகுதிகளையும், 2019-ல் 199 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 178 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக. இதற்கு உத்தர பிரதேசத்தில் பாஜக உண்டாக்கிய தாக்கமே காரணம். அதை இழந்துவிடக் கூடாது என்று இப்போது நினைக்கிறார்கள்.
விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தைக் கைவிட மாட்டார்கள், மேலும் தீவிரப்படுத்துவார்கள். போராட்டத்தில் ஏழை – பணக்காரர், பெண்கள் – ஆண்கள் என்று அனைவரையும் சேர்த்து ஜனநாயகப்படுத்தினர். குறைந்தபட்ச ஆதார விலை விவகாரமும் இந்தப் பாதையிலேயே செல்லும்.
சேட்டன் பகத், எழுத்தாளர்:
விவசாயிகள் வருமானத்தை உயர்த்துவதற்காகத்தான் பிரதமர் மோடி வேளாண் சட்டங்கள் மூலம் முயற்சிகளை மேற்கொண்டார். வேளாண் துறைக்குத் தனியார் முதலீட்டை அதிகம் பெற முயற்சித்தார்.
மேற்கத்திய நாடுகளில் உலகம் முழுவதும் பேசப்படும் பிராண்டுகளில் வெண்ணெயும், பழங்களும் விற்கப்படுகின்றன. இந்தியப் பண்டங்களுக்கும் அப்படியொரு சந்தையை ஏன் தரக் கூடாது? இப்போது அதற்கான சந்தைக் கட்டமைப்பு இல்லை. சட்டம் இயற்றுவதாலேயே அது நிகழ்ந்துவிடாது. அது தொடக்கம்தான்.
இந்திய விவசாயிகள் திறமைசாலிகள், இதைவிட அதிக வருவாய் பெறக் கூடியவர்கள் என்கிறார்கள். பிறகு ஏன் சீர்திருத்தங்களையும், மாற்றங்களையும் எதிர்க்கின்றனர்?
நாட்டை முன்னேற்றுவதுடன் தனது கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்று விரும்பும் ஓர் அரசியல் தலைவர், விவசாயிகளின் நலனுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டுவருவாரா? அரசை எதிர்க்கும் புத்திஜீவிகள் இந்த தர்க்கத்துக்கே இடம் தரவில்லை. அவர்களுக்கு மோடி தலைமையிலான அரசு ஆட்சியில் இருப்பதே பிடிக்கவில்லை. மிகச் சிலர்தான் சட்டங்களைப் படித்தனர், மிகச் சிலர்தான் பொருளாதாரம் புரிந்தவர்கள், மிகச் சிலருக்குத்தான் உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை. மோடி தோற்றார், தலைகுனிந்தார் என்பதில்தான் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சி.
மோடி ஆட்சியின் முதல் பகுதியில் கொண்டுவரப்பட்ட அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டமும், வேளாண் மசோதாக்களும் எதிர்ப்புகளால் தோல்வியுற்றன. விவசாயிகள் ஏன் திருத்தங்களுக்கு சம்மதிக்கவில்லை?
துஷ்யந்த் கௌதம், பாஜக தேசிய பொதுச்செயலர்:
விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அதிக விலை கிடைக்க வேண்டும், மாற்று சந்தை வாய்ப்புகள் பெருக வேண்டும் என்பதற்காகத்தான் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பல ஆண்டுகளாக பேசப்பட்டு, குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டு, நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்ட சீர்திருத்தங்கள்தான் வடிகட்டப்பட்டு சட்டங்களாக இயற்றப்பட்டன. இதையெல்லாம் விவசாயிகளிடம் விளக்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. 1984-ல் ஒட்டுமொத்த சீக்கியர்களையும் பகைத்துக்கொண்ட காங்கிரஸின் தவறை நாங்களும் செய்ய விரும்பவில்லை. பெருந்தொற்றுக் காலத்திலும் நாங்கள் நடத்திய தடுப்பூசி முகாமுக்கும் ரத்த தான முகாம்களுக்கும் அனைவரும் ஆதரவு அளித்தனர். ஊசிகளைப் பற்றியும் நோயைப் பற்றியும்கூட பல பொய்களைப் பரப்பியிருந்தும் மக்கள் உண்மைகளைப் புரிந்துகொண்டனர். பாஜகவுக்கு தேசிய நலன்தான் முக்கியம். அதனால்தான் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றோம்.
பி.டி.டி. ஆச்சாரி, மக்களவை முன்னாள் தலைமைச் செயலர்:
அது எந்த விஷயமாக இருந்தாலும் சரி; சட்டமியற்றுவதற்கு முன், நாடாளுமன்றக் குழுவில் விவாதியுங்கள் என்பதுதான் விவசாயிகள் போராட்டம் அரசுக்குச் சொல்லும் பாடம். அரசின் உண்மையான நோக்கத்தை சிறு குழுவுக்கு விளக்க முடியாமல் போனதால் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நாட்டு மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கோரியது இதுவரை நடந்திராத ஒன்று. இந்தியாவில் ஜனநாயகம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. அரசியல் கலப்பில்லாத மக்கள் போராட்டங்கள் நீண்ட காலம் நீடிக்கும், வெற்றி பெறும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. சாத்வீகமான போராட்டம் நீண்ட காலம் தொடர்ந்து நடந்திருப்பதும் அரசு அதற்குப் பணிந்திருப்பதும் இந்திய ஜனநாயகத்துக்கு நல்ல காலம் பிறந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களை அரசு கொண்டுவந்த விதமே அதன் நோக்கத்தைத் தெரிவித்துவிட்டது. எதற்காக இவற்றை அவசரச் சட்டங்களாகக் கொண்டுவர வேண்டும்? பாரதூர விளைவை ஏற்படுத்தும் இவற்றை விவசாயிகளிடம் ஆலோசனை கலக்காமல் கொண்டுவந்தது தவறு. நெருக்கடியான நேரத்தில் அவசரம் கருதி சட்டம் இயற்றத்தான் அரசியல் சட்டத்தின் 123 வழி செய்கிறது. விவசாயிகளுடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டவற்றுக்கு எப்படி அவசர கதியில் சட்டமியற்ற முடியும்?
சரி, அப்படியே அவசரச் சட்டங்களாக இயற்றப்பட்டாலும், அவற்றை நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பத் தேவையில்லை என்று சட்டமும் இல்லை, கட்டுப்பாடுகளும் கிடையாது, அனுப்பியிருக்கலாமே! நிதி மசோதாவைத் தவிர எல்லா மசோதாக்களையும் நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்ப மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது. நாடாளுமன்றக் குழுவிடம் சென்றிருந்தால் அவர்கள் விவசாய சங்கங்களை அழைத்து ஆலோசனை நடத்தியிருப்பார்கள். எங்கள் நலனுக்கான என்று கூறும் சட்டங்களை எங்களிடம் ஆலோசனை கலக்காமலேயே கொண்டுவந்தது ஏன் என்றுதான் விவசாயிகள் கேட்டனர்.
நாடாளுமன்றம் என்பது இடிதாங்கியைப் போல. மக்களுடைய பிரச்சினைகளை நிதானமாக ஆற அமர யோசித்துத் தீர்வுகாணத்தான் நாடாளுமன்றமும் நிலைக்குழுக்களும். நாடாளுமன்றமும் நாடாளுமன்ற நடைமுறைகளும் அதைப் பயன்படுத்த நினைப்போருக்குத்தான், அதைக் கடந்துபோக நினைப்பவர்களுக்கு அல்ல. விவசாய சட்ட மசோதாக்கள் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவில்லை.
அரசின் உள்நோக்கம், விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதுதான் என்ற சந்தேகம் விவசாயிகளுக்கு நீங்கவில்லை. அனைத்து முக்கியமான மசோதாக்களும் நாடாளுமன்ற ஆலோசனை குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்பதே அந்த விதிகளின் நோக்கம். ஆனால் இந்த ஆட்சியில் பல மசோதாக்கள் அப்படிக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்படுவதே இல்லை என்பதே வழக்கமாகிவருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசானது, ஜனநாயக நடைமுறைகளைப் பின்பற்றித்தான் நடக்க வேண்டும், மாற்று வழிகளுக்கு அங்கு இடமே இல்லை. 14 மாதங்களாக வெயில், மழை, குளிரில் அமர்ந்து தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடிய விவசாயிகள், ஜனநாயக நடைமுறைகளின்படி நடந்து அரசுக்கு வழிகாட்டியுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைக்கான நியாயம் என்ன என்பதை அரசு விவசாயிகளுடன் கலந்து பேச வேண்டும்!
1
1