கட்டுரை, ஏன் எதற்கு எப்படி?, பொருளாதாரம் 8 நிமிட வாசிப்பு
சித்ரா ராமகிருஷ்ணா விவகாரம் என்னவாகும்?
தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை நிர்வாகியும் நிர்வாக மேலாளருமான சித்ரா ராமகிருஷ்ணாவை முன்வைத்துக் குற்றஞ்சாட்டப்படும் முறைகேடு விவகாரம் அதிரவைக்கிறது. இந்த விவகாரத்தில் அன்றாடம் வெளியாகும் தகவல்கள் புதுப்புது கதைகளை உண்டாக்குகின்றன. முழு விசாரணைக்குப் பின்னரே இந்த விவகாரத்தின் முழு வடிவத்தையும் நாம் காண முடியும் என்றாலும், இதுவரையில் வெளியாகியுள்ள தகவல்களே நம்முடைய அமைப்பில், ஒருவர் நினைத்தால் எவ்வளவு எளிதாகத் தனக்கேற்றபடி எல்லாவற்றையும் வளைக்க முடியும் என்பது நிரூபணம் ஆகிறது. இந்திய நிதித் துறையில் உள்ள ஓட்டைகளை நாம் காணவும் இந்த விவகாரம் நமக்கு உதவியாக இருக்கிறது. எந்த வகையில் இந்த விவகாரம் முக்கியமான ஒன்றாகிறது? பார்ப்போம்!
தேசியப் பங்குச் சந்தை
இந்திய தேசியப் பங்குச் சந்தை (என்எஸ்இ) 1992இல் ஏற்படுத்தப்பட்டது. மிகவும் நவீனமானது, உலக அளவில் அதிகப் பங்குகளைப் பரிவர்த்தனை செய்வதில் நான்காம் இடத்தில் இருக்கிறது. மும்பையில் அமைந்துள்ள இதன் தலைவராக கிரீஷ் சந்திர சதுர்வேதி, நிர்வாக இயக்குநர் – தலைமை நிர்வாக அதிகாரியாக விக்ரம் லிமயே பணிபுரிகின்றனர். மும்பை பங்குச் சந்தைக்கு இணையாக வளர்ந்திருக்கிறது.
பங்குச் சந்தை எவரும் அணுகும் வகையில் இருக்க வேண்டும், அதன் செயல்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் அமைய வேண்டும் என்றே அமைப்பு விதிகளை ஏற்படுத்தினர். பங்குச் சந்தையை நிர்வகிப்பதில் அரசு, தொழில் நிறுவனங்கள், முகவர்கள், பங்குச் சந்தை நிர்வாகிகள் என்று அவருக்குமே சம அளவில் பொறுப்பு உண்டு. இது பதிவுபெற்ற பொது நிறுவனம். இதற்கு தணிக்கை, கண்காணிப்புகளும் உண்டு. ஆனால், உயர் இடத்தில் இருப்பவர்கள் மீது ஏற்பட்ட நம்பிக்கையால் யாரும் அதிகம் ஈடுபாட்டுடன் இதன் நடவடிக்கைகளை ஆராயவில்லை. சந்தேகப்பட்ட சிலர் மட்டுமே தொடர்ந்து கேள்விகளை எழுப்பினர்.
யார் இந்த சித்ரா?
சித்ராவைப் பற்றிய பல தகவல்கள் முழுமையாகத் தெரியவில்லை அல்லது வெளியாகவில்லை. 58 வயதாகும் இவர் 1963-ல் மும்பையில் பிறந்தார். இவரது குடும்பம் சென்னையைச் சேர்ந்தது. அவரே ஒரு பேட்டியில் தெரிவித்தபடி அப்பா, தாத்தா இருவருமே சி.ஏ. படித்தவர்கள்.
சித்ராவுக்கு திருமணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் தெரியவில்லை, குழந்தைகள் உள்ளனரா என்பதும் தெரியவில்லை. மும்பையில் உள்ள போதார் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்திருக்கிறார். சட்டத்திலும் பட்டம் பெற்றவர். தில்லியில் உள்ள சி.ஏ. நிறுவனத்தில் சேர்ந்து சி.ஏ. படித்தார். பிறகு பிரிட்டன் சென்று அங்கும் தணிக்கை தொடர்பாக மேல் படிப்பு படித்திருக்கிறார். 44 கோடி ரூபாய் மதிப்புக்கு அவருக்கு சொத்துகள் இருக்கின்றன. வேறு வகையில் அவருக்கு வருவாய் வந்திருக்கிறதா, வீட்டில் ஏதேனும் பதுக்கிவைத்திருக்கிறாரா, அவருடைய நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் ரகசிய ஆவணங்கள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து புலனாய்வுசெய்துவருகின்றனர்.
சித்ராவின் வளர்ச்சி
சித்ரா, 1985இல் இன்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பேங்க் ஆஃப் இந்தியா (ஐடிபிஐ) நிறுவனத்தில் நிதித் துறையில் இளம் அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தார். சிறிது காலம் செபி (இந்திய பங்குகள் பரிவர்த்தனை வாரியம்) அமைப்பில் பணியாற்றினார். பிறகு மீண்டும் ஐடிபிஐ நிறுவனத்துக்கே திரும்பினார். தேசியப் பங்குச் சந்தையை மீண்டும் புதிதாகக் கட்டமைக்க ஐடிபிஐ சேர்மனாக இருந்த எஸ்.எஸ்.நட்கர்னி தேர்வுசெய்த ஐந்து பேரில் சித்ராவும் ஒருவர். தேசியப் பங்குச் சந்தையின் அனைத்து நடவடிக்கைகளையும் கணினி வழியாக மேற்கொள்ளவும் பங்குகளின் முக மதிப்பை மிகப் பெரிய மின்னணு திரையில் அனைவரும் காணும் வகையில் தெளிவாக நிறுவும் பணியிலும் முக்கியப் பங்கு வகித்தார் சித்ரா.
செபி அமைப்பின் வெவ்வேறு முக்கிய குழுக்களில் அவர் தொடர்ச்சியாக இடம்பெற்றார். இந்தியத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (சிஐஐ), இந்தியத் தொழில்-வர்த்தக அமைப்பின் தேசிய கூட்டமைப்பு (எஃப்ஐசிசிஐ) ஆகியவற்றின் நிதி சார்ந்த குழுக்களிலும் சித்ராவை நியமித்தனர். பங்குச்சந்தைக் கட்டமைப்புக்கான விதிகளை வகுத்த குழுக்களிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
ஆசிய நாடுகளில் இலங்கையின் கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம், சீனத்தின் ஷென்ஷென் பங்கு பரிவர்த்தனை நிலையம் ஆகியவற்றில் தலைவர்களாகப் பெண்கள் நியமிக்கப்பட்டதற்குப் பிறகு இந்திய தேசியப் பங்குச் சந்தைத் தலைவராக நியமனம் பெற்றவர் சித்ரா. தொழில் துறையில் தலைமைப் பண்புள்ள பெண்ணாக 2013இல் ‘ஃபோர்பஸ்’ பத்திரிகை அவரைத் தேர்வுசெய்தது. உலக அளவில் நிதி நிர்வாகத்தில் செல்வாக்குள்ள பெண்கள் பட்டியலில் 17வது இடத்தில் சித்ரா இருப்பதாக ‘ஃபார்ச்சூன்’ பத்திரிகை தேர்ந்தெடுத்தது.
சித்ரா முன்னரே செய்த தவறுகள்
சித்ரா ஏற்கெனவே சில தவறுகளைச் செய்திருக்கிறார். அதற்காக 2013-14இல் அவர் பெற்ற ஊதியத்தில் 25%-ஐ தங்களுக்கு செலுத்த வேண்டும் என்று செபி அமைப்பு உத்தரவிட்டது. தேசியப் பங்குச் சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஒருவரின் குற்றத்தில், சித்ராவுக்குப் பங்கு இருப்பதாக செபி அப்போது முடிவுசெய்தது. எனவே, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்யும் நிறுவனம், சந்தையில் இடைநிலை முகவராகச் செயல்படும் நிறுவனம் ஆகியவற்றுடன் அவர் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று செபி அப்போது தடை விதித்தது. சித்ரா ஊழலில் சம்பந்தப்பட்டாரா அல்லது தனது பதவிக்குரிய கடமையை ஆற்றாமல் கவனக்குறைவாக இருந்தாரா என்பது தெரியவில்லை.
சித்ரா குறிப்பிடும் யோகி யார்?
சித்ரா மின்னஞ்சல் மூலம் பங்குச் சந்தையின் அடுத்த கூட்டம் எப்போது, அதில் விவாதிக்கப்போகும் விஷயங்கள் என்ன என்பது உள்பட பல விவரங்களை முறைகேடாக ஒருவரிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அந்த ஒருவரை இமயத்தில் உள்ள ‘குரு’ என்று அவர் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக சிபிஐ மற்றும் வருமான வரித்துறை மூத்த அதிகாரிகள் அவரிடமும் ஆனந்த் சுப்பிரமணியனிடமும் நீண்ட நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். தன்னுடைய சிநேகிதியின் கணவரான ஆனந்த் சுப்பிரமணியத்தையே அவர் தனக்கு நிதி சார்ந்த ஆலோசகராக நியமித்துக்கொண்டிருக்கிறார். அவர் தேசியப் பங்குச் சந்தையில் ஊழியராக இருந்தார். சித்ரா ஏதேனும் மன உளைச்சலில் இருந்தாரா அல்லது மனநலக் கோளாறு இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அவரை உளவியல் நிபுணர்கள் விசாரித்ததாக இதுவரை தெரியவில்லை.
சித்ரா, ‘யோகி - குரு’ என்று சொல்வதெல்லாம் மற்றவர்களைத் திசை திருப்பவே, நிதி அமைச்சகத்தில் மூத்த அதிகாரியாக இருந்த ஒருவர்தான் சித்ராவுக்கு இவ்வளவு உயர்வு கிடைக்கக் காரணம், அவர்தான் மின்னஞ்சல் மூலம் சித்ராவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார் என்று புலனாய்வு நிபுணர்களில் சிலர் ஊகிக்கின்றனர். ரிக்யஜுர்சாம (rigyajursama@outlook.com) என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்த யோகியிடம் அவர் தொடர்ந்து தேசியப் பங்குச் சந்தை தொடர்பான முக்கியத் தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார். இது அந்தப் பதவிக்குரிய விதிகளையும் நடைமுறையையும் குப்பையில் வீசுவது ஆகும்.
எப்படி மாட்டினார்?
யாருடைய கட்டளைப்படியோ சித்ரா செயல்பட்டதை யாரேனும் யூகித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஏதோ தவறாக நடக்கிறது என்று மட்டும் சிலர் யூகித்தார்கள். எனவே, பங்குச் சந்தை உயர் நிர்வாகிகள் கூட்டத்தில் சித்ராவுக்கு நிறைய எதிர்ப்புகள் தொடர்ந்து எழுந்தன. தொடர் எதிர்ப்பின் காரணமாக ஆனந்த் சுப்ரமணியம் விலகிய பிறகு, சித்ராவும் ராஜிநாமா செய்திருக்கிறார். தேசியப் பங்குச் சந்தை பற்றிய அனுபவமோ, அதற்கான தகுதிகளோ இல்லாத ஆனந்த் சுப்ரமணியத்தை தனக்கு ஆலோசகராகவே ஏன் நியமித்துக் கொண்டார், சிநேகிதியின் கணவர் என்ற ஒரே காரணமா என்றும் தெரியவில்லை. அவருக்கு மித மிஞ்சிய அளவுக்கு ஊதியமும் படிகளும் வழங்க சித்ரா உத்தரவிட்டிருக்கிறார். எனவே அவரையும் சித்ராவையும் உயர் விசாரணை அமைப்புகள் தீவிரமாக விசாரிக்கின்றன.
எப்படிப் போகிறது வழக்கு?
சித்ரா நேரடியாக முறைகேட்டில் அல்லது சதி எதிலும் ஈடுபட்டாரா அல்லது வேறு யாராவது அவரைக் கைப்பாவையாகப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தனரா என்பது தெரியவில்லை. பங்குச் சந்தை மீதான நம்பிக்கை குலைய ஹர்ஷத் சாந்திலால் மேத்தா, கேடன் பாரீக், சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்க ராஜு ஆகியோர் காரணமாக இருந்தனர். அதன் பிறகு அரசு விழித்துக்கொண்டு பல நடவடிக்கைகளை எடுத்தது. இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. விசாரணை விரைவாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதோடு, அடுத்தகட்ட சீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு வித்திடுவதாகவே இந்த விவகாரம் அமையும் என்று தோன்றுகிறது.
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
sivakumaran ramalingam 3 years ago
மொத்தம் 9 இடத்துல, 'தெரியவில்லை' என வருகிறது. தெரியலன்னா, ஏன் இதை எழுதணும். திண்ணைல உக்காந்து ரெண்டு பெருசுங்க, ஊர்க்கதைய பேசும்போது, ஒட்டுக்கேட்டு அப்பிடியே பேச்சுவழக்குல எழுதினது மாதிரி இருக்கு. இதைப் படிச்சிப் பார்த்துதான் வலை ஏத்துனாங்களா, இல்ல ட்ராஃப்ட்ல இருந்தத அப்பிடியே தள்ளி விட்டுட்டாங்க போல.
Reply 7 2
Login / Create an account to add a comment / reply.
Seyed Muhammed 3 years ago
கட்டுரை வாசிக்கும் தரத்தை இழந்து நிற்கிறது.மிக அபத்தமான ஒரு குற்றப்பின்னணி கொண்ட நிகழ்வை நிகழ்விற்கு முழுமுதல் காரணமான பெண்ணை அப்பாவி போல் சித்திரிக்க முயலுகிறது கட்டுரை.“**சித்ரா நேரடியாக முறைகேட்டில் அல்லது சதி எதிலும் ஈடுபட்டாரா அல்லது வேறு யாராவது அவரைக் கைப்பாவையாகப் பயன்படுத்தி பணம் சம்பாதித்தனரா என்பது தெரியவில்லை.**" இது கட்டுரையிலுள்ள வாசகம்.ஒன்றும் தெரியாத பாப்பா ஒரு மணிக்கு இட்டாளாம் தாழ்ப்பாள் என்ற வழக்கு சொல்லை மேலுள்ள கட்டுரை வாசகத்தால் இலகுவாக இடமாற்றம் செய்திடலாம்!அவ்வளவு அபத்தமாக இந்த கட்டுரை கதை சொல்கிறது. இந்தியாவின் ஊடகம் குறித்த எண்ணம் வீழ்ந்து வரும் சூழலில் இந்த கட்டுரை அதை மேலும் வேகபடுத்துகிறதும்.மேலும் இந்த வலைதள பக்கத்தை உருவாக்கிய தோழர் சம்ஸ் அவர்கள் குறித்த நல்லெண்ணமும் காட்டாற்று வெள்ளத்தில் காணாமல் போய் விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகிறது.மொத்தத்தில் இது கட்டுரையல்ல! பெரும் பாவத்தை சரிகட்ட வழி தேடும் மிக மலிவான பரிகாரம் போலுள்ளது.
Reply 19 0
Login / Create an account to add a comment / reply.