கட்டுரை, புத்தகங்கள் 15 நிமிட வாசிப்பு

இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?

ப.திருமாவேலன்
26 Dec 2021, 5:00 am
2

ரு நூற்றாண்டு திராவிட இயக்க வரலாற்றில் அது எதிர்கொள்ளாத அவதூறுகள் - வசைகள் இல்லை என்று சொல்லலாம். புராணங்களையும், புனைவரலாறுகளையும் எதிர்த்து வளர்ந்ததாலேயோ என்னவோ அதன் எதிரிகள் உண்மையைக் காட்டிலும் பொய்களின் வழியாகவே அந்த இயக்கத்தை வீழ்த்த அதிகம் மெனக்கெட்டார்கள்.

திராவிட இயக்கத்தின் அரும்பெரும் தலைவர் பெரியார் இந்த மண்ணில் நிகழ்த்திய மாற்றங்கள் அசாதாரணமானவை. அவர் எண்ணியதற்கும் சாத்தியப்படுத்தியதற்கும் இடையிலான இடைவெளி ஏராளமாக இருக்கலாம். ஆனால், இதுவரை சாத்தியப்பட்டிருக்கும் அளவிலேயேகூட அவர் முன்னெடுத்த மாற்றங்கள் வீச்சு அளப்பரியது. இந்த மாற்றங்களைக் கொண்டுவர இரு வழி உத்திகளை அவர் கையில் எடுத்தார். ஒன்று, எதிர்த் தரப்பாரோடு தன் தரப்பின் உரிமைகளுக்காகப் போராடுவது, மற்றொன்று தன் சொந்தத் தரப்புக்குள்ளேயே அதன் மடைமைகளை எதிர்த்துப் போராடுவது. இன்றைக்கு திராவிட இயக்கம் எதிர்கொள்ளும் அவதூறுகளின் மையம், தன்னுடைய சொந்தத் தரப்பை விமர்சித்துப் பேசிய பெரியாரின் வார்த்தைகளின் வழியே அவரை ‘தமிழர் விரோதி’ ஆகக் கட்டமைப்பதும், ‘தமிழரல்லாதவர்’ என்று வெளித்தள்ளப்பார்ப்பதும்! 

அவதூறுகளை எதிர்கொள்வதற்கு என்றே தனி மரபைக் கொண்டிருக்கும் திராவிட இயக்கம் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொருவரை இதற்கான பதில் அளிப்பதற்கு என்றே உருவாக்கியும்வந்திருக்கிறது. அவர்களில் இந்தத் தலைமுறையின் பிரதிநிதியாக உருவெடுத்திருக்கிறார் பத்திரிகையாளர் ப.திருமாவேலன்.

சென்னை புத்தகக்காட்சியை ஒட்டி அவர் கொண்டுவந்திருக்கும் ‘இவர் தமிழர் இல்லை என்றால் எவர் தமிழர்?’ புத்தகமானது, தமிழ் அடையாளம் சார்ந்து பெரியார் மற்றும் திராவிட இயக்கம் மீது முன்வைக்கப்படும் சகல குற்றச்சாட்டுகளுக்கும் பதில் சொல்ல முற்படுகிறது. பெரியாரின் பேச்சுகள் - எழுத்துகள் வழி மிக விரிவான ஆய்வை மேற்கொண்டிருக்கும் திருமாவேலன், இந்த நூலில் ஆகப் பெரும்பான்மையான பகுதிகளைப் பெரியாருடைய வெளிப்பாடுகள் வழியாகவே அவருடைய விமர்சகர்களுக்குப் பதில் அளிக்க வைக்கும் உத்தியில் இதை எழுதியிருக்கிறார். வரலாற்றில் முன்னும் பின்னுமாகச் சென்று பெரியாரின் மேற்கோள்களின் வழியாகவே எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிக்க முற்படுகிறது இந்நூல்.

இரண்டு தொகுதிகளாக 1580 பக்கங்களில் வெளியாகியிருக்கும் இந்நூலானது பெரியாரிய ஆய்வாளர்களுக்கு மட்டும் அல்லாது, தமிழ்நாட்டில் அரசியல் பேசும் எவருக்கும் பயன்படக் கூடியது என்று சொல்லலாம். ‘அருஞ்சொல்’ தன்னுடைய வாசகர்களுக்காக நூலிலிருந்து இரு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை இங்கே வெளியிடுகிறது.   

1941ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பெஜவாடா போனார் பெரியார். அவரைக் கடுமையாக ஆந்திரர்கள் எதிர்த்தார்கள். ‘ஆந்திர வைரி’, ‘ஆந்திர துரோகி’  என்று கண்டித்து முழக்கம் எழுப்பினார்கள். ‘ஆந்திர தேச துரோகி ராமசாமி நாயக்கர் வருகிறார், மறுபடியும் தமிழ் மாயையில் விழ வேண்டாம்’ என்று துண்டு வெளியீடுகளை அச்சடித்து வழங்கினார்கள்.

“அவர் ஒருகாலத்தில் ஆந்திர உணர்ச்சி உடையவராக இருந்திருந்தும் இப்போது தமிழ் சம்பரதாயத்தில் பட்டு தமிழ் மாதாவை பூஜிப்பவராக இருக்கிறார். தெலுங்கு ஜில்லாக்களை திராவிட ஸ்தானமென்றபேரில் தமிழ் ஜாதியார்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த சங்கல்பம் செய்துகொண்டிருக்கிறார். பிராமணர்கள் பரம துன்மார்க்கர்களென்றும் கூறி நமக்குள்ளேயே பேதம் கற்பித்துவருகிறார். உத்தியோகங்கள் அனைத்திலும் தெலுங்கு பிராமணரல்லாதர்களுக்கு ஒன்றும் கிடைக்காமல் செய்து ஜஸ்டிஸ் கட்சியின் பேரால் எல்லாவற்றையும் தமிழ் பிராமணரல்லாதாராகிய முதலியார்கள், பிள்ளைகளாகியவர்களுக்கு ஆக்கிவைத்துவருகிறார்.

ஜஸ்டிஸ் என்ற பெயரில் ஆந்திர தேசத்துக்கு அநியாயம் செய்துவரும் வேஷதாரிகள் சங்கமாகிய தென்னிந்திய நல உரிமைச் சங்கமென்னும் இயக்கத்தின் தலைவராக இந்த மகா துஷ்ட நாயக்கர் இருந்துவருகிறார்…”

மிக நீளமான துண்டறிக்கை அது. ‘ஆந்திர மாதாவிற்கு ஜயம் உண்டாகுக. ஆந்திர மாதா துரோகிகளுக்கு அபஜயம் கூடுக!’ என்று அது முடியும். பாண்டுரங்க கேசவராவ் என்ற ஆந்திரா பார்லிமெண்டரி தலைவர் அச்சடித்த துண்டறிக்கை அது. (விடுதலை, 12.2.1941)

இதையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரியார், ஆந்திர சுற்றுப்பயணம் முடித்துவிட்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் பாண்டுரங்க கேசவராவ் ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பிவைத்தார். ‘மகிஷா சூர மர்த்தனி பலி கேட்பாள்’ என்று சொல்கிறது அந்தக் கடிதம். ஆறு மாதங்களில் உயர் குடும்பத்தில் மகிஷா சூர மர்த்தினி பலி கேட்பாள் என்றும், ஆந்திர ரத்தம் உன்னிடம் இல்லையா என்றும், திராவிட நாடு பிரிவினை ஆந்திரர்க்கு எதிரானது என்றும் அதில் கூறப்பட்டது. இந்தக் கடிதம் முன்னாள் முதல்வர் ரெட்டி நாயுடு குடும்பத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இவர் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர். (விடுதலை 13.2.1941)

அதாவது பெரியார், யார் என்பதை 1940களிலேயே ஆந்திரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், தமிழர்கள் சிலருக்குத்தான் இந்த 2020களிலும் தெரியவில்லை. அவர்கள் சிந்தனைத் திறன் 80 ஆண்டுகள் பிந்தையதாக இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு இது!

அது 1927. சுயமரியாதை இயக்கக் காலம்! பெரியாரும் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதமும் சேர்ந்தே பயணித்து தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் சுயமரியாதை விதையைத் தூவிய காலம். அவர்கள் இருவரும் பயணித்த புகைவண்டி மணியாச்சி நிலையத்தில் நிற்கிறது. அவர்களது இருக்கைக்கு எதிரே அமர்ந்திருந்த பார்ப்பனர்கள் இருவர், தண்ணீர் குடிப்பதற்காக இறங்குகிறார்கள். பெரியாரைப் பார்த்து கி.ஆ.பெ.சொல்கிறார். “உங்களைக் காட்டி, ‘நம் இனத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவர்’ என்று அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்!”  அப்போது பெரியார் சொன்னாராம்: “யாராவது இரண்டு தமிழர்கள் நம்மைக் காட்டி, ‘நம் இனத்துக்காகப் பாடுபடுபவர்கள்’ என்று சொல்வார்களா?”

இதை, பெரியார் பேருரையாளர் புலவர் ந.இராமநாதனிடம் 1992ஆம் ஆண்டில் சொல்லி இருக்கிறார். “எவ்வளவு ஆழமான சிந்தனை! இதனால்தான் அவர் பெரியார்!” என்றாராம் முத்தமிழ் காவலர்.

1927ஆம் ஆண்டு மட்டுமல்ல; 2020ஆம் ஆண்டும், பெரியார் நமக்கான தலைவர் என்பதை உணராத தமிழர்கள் சிலர் இருக்கத்தானே செய்கிறார்கள்! அந்தச் சிலர்தான் பெங்களூரு குணாவும், பெ.மணியரசனும். இவர்கள் பாமரர்கள் என்றால் பரவாயில்லை. படித்தவர்கள். தமிழ்ச் சமுதாயத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவுத்தளத்திலும், செயல் தளத்திலும் இயங்கிவரும் இவர்கள் இருவரும் பெரியார் மீது வைத்தவை விமர்சனங்கள் அல்ல, அவதூறுகள். ஏற்கனவே பலராலும் பதில் சொல்லி சலித்துப்போனவை. ஆனாலும், அவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ளத் தயாராக இல்லை. மறுபடி மறுபடி நெறியற்ற வன்மங்களை வார்த்தைகளாகக் கோத்துப் பேசிவருகிறார்கள்.

பெரியார் குறித்தும், திராவிட இயக்கம் குறித்தும் இவர்கள் சொல்லும் தெலுங்கர் - தெலுங்கர் கட்சி என்ற திசை திருப்பல் எல்லாம் வ.வே.சு. அய்யரின் மூளையில் உதித்தது. நேரில் மோதத் தயாராக இல்லாத இராஜாஜி, அதற்காகவே ம.பொ.சி.யைப் பயன்படுத்தி தமிழகத்தில் உலவவிட்டார். உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் அளவுக்குத்  ‘தமிழரசுக் கழகம்’ - திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக் கழகமாக மாறி - பின்னர் அது தோன்றிய காங்கிரஸிலேயே போய் அடையாளமற்றுப்போனது. 1980களில் உருப்பெற்ற மதவாத - சாதியவாத இயக்கங்கள் இதே குற்றச்சாட்டுடன் திராவிட இயக்கங்களின் தமிழிய - தமிழின அரசியலை எதிர்கொள்ள முயன்றன. திராவிடத்தை வீழ்த்தக் கிளம்பியதாகச் சொல்லிக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி 1990-களின் தொடக்கத்தில் இதனைச் சொல்ல ஆரம்பித்தது. அவர்கள் நடத்திய மாநாட்டுக்காகக் குணாவால் எழுதப்பட்ட கட்டுரைதான், ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்!’ என்பதாகும். அந்தக் காலக்கட்டத்தில் பாமகவுடன் இணைந்து தேர்தல் களத்தில் நின்றவர்தான் பெ.மணியரசன். அடுத்து வந்த அனைத்துத் தேர்தல்களிலும் திராவிடத்துடன் இணைந்து பதவிகளைப் பெறும் கட்சியாக பாமக மாறியது. ஆனாலும், இவர்கள் இருவரும் ‘தெலுங்கர்’ வாலை பிடித்துவிட்டு விடமுடியாமல் தவிக்கிறார்கள்.

இன்றும் இவர்களது கருத்துகளைத் தூக்கிச் சுமக்கும் சக்திகள் அதே சாதியவாத, மதவாத சக்திகளே. அதாவது திராவிடத்தை எதிர்க்கும் அனைத்துமே சாதியவாத, மதவாத சக்திகளால் கொம்பு சீவி வளர்க்கப்படும். கொம்பு கூர்மையாக இருக்கும் மாடுகள் அனைத்துமே வலிமையானதாக இருப்பது இல்லை. வலிமையான மாட்டுக்கு கொம்பைக் கூர்மையாக்கினால்தான் பலம். இது தெரியாத காரணத்தால்தான் தமிழ்த் தேசியம் என்ற பூம்பூம் மாடுகள் எல்லாம் வெறுமனே சிலுப்பியும், முட்டுவதுபோல வந்தும் தமிழகத்தில் நடித்துவருகின்றன. இவர்களிடம் இருப்பது பொய்மை மூச்சுக்காற்று மட்டுமே! அதை அம்பலப்படுத்தவே இவ்வளவு பெரிய புத்தகம் எழுத வேண்டியதாயிற்று!

திராவிடர் - தமிழர் - சூத்திரர் - பார்ப்பனரல்லாதார் ஆகிய நான்கும் பெரியாருக்கு ஒரே பொருள் தரும் சொற்கள்தான். இதில் தமிழர் என்பதில் மட்டும் ‘நானும் தமிழன்தான்!’ என்று பார்ப்பனர்களும் உள்ளே நுழைய முடியும் என்று நினைத்தார். இன்று சிலர் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக்கொள்ள முன்வருகிறார்களே என்று மணியரசன் சொல்வாரேயானால் பெரியார் தன்னுடைய இயக்கத்தின் பெயரை இன்று இருந்திருந்தால், ‘சூத்திரர் கழகம்’ என்று பெயர் மாற்றிக்கொள்வார். சூத்திரர்களுக்குள் பார்ப்பனர்கள் வர ஒப்புக்கொள்ள மாட்டார்களே! 

மொழிவாரி மாகாணப் பிரிவினை ஆணையத்திற்கு அளித்த பேட்டியில், “திராவிடர்கள் அல்லாதவர்கள் யார்?” என்று கேட்கப்பட்டபோது, “ஆரியர் முதலிய வேறு இனத்தவர்” என்று பெரியார் சொன்னார். “உங்கள் இயக்கத்தில் எல்லோரும் சேர உரிமை உண்டா?” என்று கேட்டபோது, “ஆரியர் தவிர மற்றெல்லோரும் சேர உரிமை உண்டு” (விடுதலை 26.9.1948) என்று சொன்னார் பெரியார். இதைத் தொடர்ந்துதான், “திராவிடம் என்பது ஜாதியற்ற தமிழர் பண்பாடு!” என்றார் பெரியார்.

“பெரியாரைப் பொறுத்தமட்டில், திராவிடர் என்பது பிராமணரல்லாத தமிழர்களை மட்டும் குறிக்கக் கூடியதாகவுள்ளது” என்கிறார் டாக்டர் ஜெரி (பக்கம் 49, மனிதம்). தீண்டத்தகாதவர்களை பிரித்து, ‘ஆதிதிராவிடர்’ என முதலில் பேசினாலும் பிற்காலத்தில் அவர்களையும் இணைத்து, ‘திராவிடர்’ என்றே பெரியார் பேசியதாக ஜெரி சொல்கிறார். ‘திராவிட மக்களே! அல்லாவிட்டால் பார்ப்பனரல்லாத மக்களே!’ (குடிஅரசு 3.2.1945) என்று அழைத்தார்.

பார்ப்பனரல்லாதார் இயக்கம் தொடங்கியபோது, ‘இந்த இயக்கத்தின் ஆரம்பமே பொய்!’ என்றவர் மகாகவி பாரதி. “பிராமணரல்லாதார் என்ற ஒரு சாதியே கிடையாது” என்றார். அதனால்தான் “வருணாசிரமம் மறுக்கும் எவரும் திராவிடரே!” என்று பெரியார் சொன்னதாக எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எழுதுகிறார். “தாம் கருதியுள்ள தேசத்தில் இந்தியாவிலுள்ள சூத்திரர் அனைவருக்கும் இடமுண்டு!” என்று பெரியார் நினைத்ததாக பாண்டியன் எழுதுகிறார்.

திராவிடம் என்பதை இனம், மொழிச் சொல்லாக பெரியார் பயன்படுத்தவில்லை. அதனை அரசியல், பண்பாட்டுச் சொல்லாகப் பயன்படுத்தினார். அதனால்தான், “திராவிடம் என்பது அரசியல் என்பதைத் தாண்டிய பண்பாட்டு அர்த்தம் இன்றும் உயிர்ப்புடன் தொடர்கிறது!”  என்கிறார் தொ.ப. அவரே, “திராவிடம் என்ற சொல் அர்த்தமுடையதாக இருக்கிறது” என்றும் சொல்லிவருகிறார்.

தமிழ்நாடு என்பதையும் வெறும் நில அளவுச் சொல்லாக மட்டும் பெரியார் பயன்படுத்தவில்லை. பண்பாட்டு நில மதிப்புச் சொல்லாகவே பயன்படுத்தினார். “கையகலம் இருந்தாலும் போதும், அது நம் கனவு நாடாக இருக்க வேண்டும்” என்றார்.

திராவிடர் எனப் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட மனிதர்கள் சேர்ந்து அமைக்கும் கனவுநாடாக தமிழ்நாட்டை அவர் உருவகப்படுத்தினார். அந்த நாட்டில் ஆரியருத்துக்கும் இடமில்லை. வடவருக்கும் இடமில்லை. தமிழர் நீங்கலாக வேறு எவருக்கும் இடமில்லை. அப்படியானால் அவரின் திராவிடம் தமிழே! அவரின் திராவிடர் தமிழரே! அவரின் திராவிட நாடு தமிழ்நாடே!

அவர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார். அவர் முன்வைத்த சமூகநீதித் தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்று உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த் தேசமே!

மொழியால் நாடு!

பெரியார் தமிழர்க்காக நாடு கேட்ட அடிப்படைகளில் ஒன்று மொழியும்தான். “நம் நாடு 4 கோடி மக்களைக் கொண்ட நாடு. ஆறு, மலை, சமுத்திரம், வயல், காடு ஆகியன போதுமான அளவு உள்ள நாடாகும். எந்தக் காரியத்திற்கும் தமிழ்நாட்டார் ஆகிய நாம் இந்தியாவில் உள்ள வேறு எந்த நாட்டினின் தயவையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்லாத நிலையில் வாழ்கின்றவர்கள். இப்படிப்பட்ட நாம் எதற்கு ஆக நமது மொழி, கலாச்சாரம், நம் நடை, உடை, உணவு முதலாகியவற்றில் சம்பந்தமில்லாத காட்டுமிராண்டிகளுடன் அவர்களது ஆதிக்கத்தில் குடிமகனாய் வாழ வேண்டும்?” என்று கேட்டார் (விடுதலை 23.1.1968). “எவன் ஒருவன் தன் இனம், தன்நாடு, தன் மொழி என்று பற்றுடையவனாக இருக்கிறானோ அவன் அரசாங்கத்தின் எதிரி என்றும் நாட்டுக்குத் துரோகி என்று தூற்றப்படுகிறான்” என்றார் (வி: 28.10.1955).

“இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர்கள் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும் நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்துவரும் செல்வாக்கு தமிழுக்கு உண்டா?” என்று கேட்டு தமிழின் உரிமையை நிலைநாட்டினார் (-வி: 15.2.1960).

“முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரோஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும் தமிழ்ப் பண்டிதர் ( தமிழ் புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு 75 ரூபாய்தான் சம்பளம்.  சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் - ‘புரோஃபசர்’. தமிழ் ஆசிரியருக்குப் பெயர் -  ஆசிரியர். காலஞ்சென்ற பேராசிரியர் திரு. கா. நவச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபகம்) வாங்கின சம்பளம் சுமார் ரூ.300-க்கு மேல்!

ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு. பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடம் நேரில் சொல்லி, ‘நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்’ என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர். புலமை வாய்ந்தவர், என்றபோதிலும்கூட அந்த மாதிரி - அந்தஸ்திலும் சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன் மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்களே அதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்” என்று தமிழ்ப் புலவர்களுக்காக வருந்தினார் (வி: 15.2.1960).

“தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில், சமயத்தில் சமுதாயத்தில் அரசியலில் விஞ்ஞானத்தில் மற்றும் ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?” என்று கேட்டார் (வி: 15.2.1960). “தமிழன் தான் நுகரும் இசையை, ‘தமிழில் இசை, தமிழில் பாடு, தமிழர்களைப் பற்றி தமிழர்களுக்கு ஏற்றதைத் தமிழர்களுக்குப் பயன்படுமாறு பாடு’ என்கின்றான். இதை யார்தான் ஆகட்டும் ஏன் ஆட்சேபிக்க வேண்டும்? ஏன் இதைக் கூற வேண்டும் என்று கேட்கிறேன். அதிலும் தமிழன் இப்படிக் கேட்பதை - தமிழனால் தமிழனல்லாதவன் என்று கருதப்பட்டவன் ஏன் மறுக்க வேண்டும்?” என்று கேட்டார் (குடிஅரசு 19.2.1944). “தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழன் தன்மானமும் விடுதலை பெற்று வளர்ச்சியடைய வேண்டுமானால் தமிழன் காரியத்தில் தமிழனல்லாதவன் - அவன் எப்படிப்பட்டவனானலும் தலையிடுவது முதலில் ஒழிந்தாக வேண்டும், இதை வேறு எதை ஒழித்தாவது ஒழிக்க வேண்டும்” என்றார் (கு.அ. 19.2.1944).

“தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்றுவிட்டார்கள் என்கின்ற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை? இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம் நாடு எது, நமது மொழி எது, நமது இனம் எது என்பதையே மறைத்துவிடுவதென்றால் பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே, இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டுவிடும்படி முயற்சிக்கும்ம்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றே பேசிவந்தார் (வி: 11.10.1955).

தமிழ்ப் புலவனின் குரலே!

“உண்மைத் திராவிடன் தீட்டிய திருக்குறள் குப்பையிலே கிடக்க - திராவிடத் துரோகி தீட்டிய இராமாயணமும் ஆரியர் தீட்டிய கீதையும் அதிகாரத்தில் இருந்துவருகின்றன” என்று பொங்கினார் (வி: 5.11.1948). “கபிலர், பாய்ச்சலூரார், அவ்வையார், திருவள்ளுவர் முதலிய பெரியோர்கள் தாம் செய்திருக்கும் நூல்களினாலும், தங்களுடைய உபதேசங்களினாலும் இன்றைக்கு அய்யாயிரம் வருடங்களுக்கு முன்பே பார்ப்பனர்களின் கொடுமையை வெளிப்படுத்தி, அவைகளை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள்” என்று தனக்கு விருப்பமான தமிழ்ப் புலவர் வரிசையை அடையாளம் காட்டினார் (கு.அ. 15.8.1926). “திராவிடர் கழகம், திருவள்ளுவர் - குறளைப் பின்பற்றி நடந்துவரும் கழகம். இந்நாட்டில் மனுதர்மம் ஒழிந்து, மனிதத்தன்மை ஏற்படப் பாடுபட்டுவரும் கழகம். அதற்குக் குறள்தான் வழிகாட்டி; எந்த முன்னேற்றத்திற்கும் விரோதமில்லாமல் பணியாற்றிவரும் கழகம்” என்று அறிவித்தார் (வி: 5.11.1948). “நம் பண்டைத் திராவிட மக்களிடையே இரண்டு பெரியார்களைக் குறிப்பிட வேண்டுமானால் ஆண்களில் திருவள்ளுவரையும், பெண்களில் அவ்வையாரையும் நாம் சிறந்த அறிவாளிகளாகக் குறிப்பிட முடியும்” என்று போற்றினார் (வி: 25.3.1948).

“மொழி உணர்ச்சி இல்லாதவர்களுக்கு நாட்டு உணர்ச்சியோ, நாட்டு நினைவோ எப்படி வரும்? நம் பிற்காலச் சந்ததிக்காவாவது சிறிது நாட்டு உணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டுமானாலும், மொழி உணர்ச்சி சிறிதாவது இருந்தால்தான் முடியும். அன்றியும் சமுதாய இன உணர்ச்சி சிறிதாவது இருக்க வேண்டுமானாலும் மொழி உணர்ச்சி இருந்தால்தான் முடியும். உதாரணமாக, இன்று பார்ப்பனர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பார்களானாலும் சமுதாயத் துறையில் எவ்வளவு பேதம் கொண்டவர்களானாலும் சமஸ்கிருதம் என்கின்ற ஒரு மொழி உணர்ச்சியாலேயே அவர்கள் பிரிக்க முடியாத, கட்டுப்பாடான இன உணர்ச்சி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆரியம் சமயத் துறையில் ஆதிக்கம் பெற்றதாலும், ஆங்கிலம் அரசியல் முதலிய பல்துறைகளில் ஆதிக்கம் பெற்றதாலுமே தமிழர்களுக்குள் இன உணர்ச்சி பலப்படவில்லை. இப்போது அனைத்துத் துறைகளிலும் இந்தி ஆதிக்கம் பெற்று இந்திமயமாகிவிட்டால், இந்தியும் ஆட்சிப் பீடம் ஏறிப் பெருமை பெற்றுவிட்டால், தமிழன் நிலை என்ன ஆகும் என்பதைச் சிந்தியுங்கள்” என்று இறுதிவரைக் கேட்டவர் பெரியார் (வி: 25.07.1972).

“இன்றைக்கு எத்தனையோ ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னதாகவே இப்பார்ப்பனரின் கொடுமையை உணர்த்த நம் தமிழ் மக்கள், அதிலிருந்து தப்ப வேண்டும் என்று எவ்வளவோ பிரயத்தனம்செய்திருக்கிறார்கள். நமது சித்தர்களெல்லாம் எவ்வளவோ தெளிவாய்ப் பார்ப்பனர்களின் அக்கிரமங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அதனால்தான், நமது பார்ப்பனர்கள் சித்த நூல்களை ஒழித்து, சித்தர் உபதேசங்களையெல்லாம் மறைத்து, இராமாயணம், பராதம், அரிச்சந்திர புராணம் முதலான நூல்களைப் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக எழுதி, அவைகளுக்குச் செல்வாக்கு உண்டாக்கி, அவற்றைப் படித்தால் மோட்சம் என்று சொல்லி நம்மை ஏமாற்றிவிட்டார்கள். கபிலர், பாய்ச்சலூரார், அவ்வையார், திருவள்ளுவர் முதலிய பெரியோர்கள் தாம் செய்திருக்கும் நூல்களினாலும், தங்களுடைய உபதேசங்களினாலும் இன்றைக்கு அய்யாயிரம் வருடங்களுக்கு முன்பே பார்ப்பனர்களின் கொடுமையை வெளிப்படுத்தி அவைகளை ஒழிக்கப் பிரயத்தனப்பட்டிருக்கிறார்கள்” என்றே கேட்டார் அவர் (கு.அ. 15.8.1926).

“சரித்திரத்தைப் பாருங்கள்! ஆராய்ச்சியாளர் கூறுவதின் உண்மையைப் பாருங்கள். உலகத்திலேயே முதன்முதல் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனித வர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா?” என்றே கேட்டவர் அவர் (கு.அ.17.9.1939).

“இன்று பல பார்ப்பனர்கள் மேடையிலேறிப் பிரசங்கிப்பதைக் கேட்கிறோம்; மதத்தைப் பற்றியும் சீர்திருத்தத்தைப் பற்றியும், மொழியைப் பற்றியும், கல்வி வளர்ச்சியைப் பற்றியும் பல பார்ப்பனர்கள் பேசுவதைக் கேட்டிருக்கிறோம். ஆனால், இதுவரையில் எந்தப் பார்ப்பனராவது, ‘திருக்குறளை மனப்பாடம் பண்ணுங்கள்! சிலப்பதிகாரத்தைப் படியுங்கள்! பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க நூல்களைப் படியுங்கள்; அவைகளின் மூலம் தமிழர் நாகரீகத்தையெல்லாம், தமிழர் அரசுமுறையைக் காணலாம். தமிழர் வீரத்தைத் தெரிந்துகொள்ளலாம்’ என்று கூறியதைக் கேட்டிருக்கின்றீர்களா?” என்றுதான் கேட்டார். (வி: 11.03.1941)

“ஆரியத்தை எதிர்த்த கபிலரை உங்களுக்குத் தெரியுமா? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறி ஆரியத்தை எதிர்த்த திருவள்ளுவரை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? அவர்கள் இயற்றிய அகவலை - குறளைத்தான் உங்களில் எத்தனை பேர் படித்திருக்கிறீர்கள்? சாதியிரண்டொழிய வேறில்லை என்று நாலு ஜாதி முறையை எதிர்த்த ஔவையை உங்களுக்குத் தெரியுமா?”  என்றுதான் கேட்டார். (வி: 23.12.1947)

“உலகத்திலேயே சிறந்த நாகரீகம் உடைய மக்களாக அரசாட்சி உடைய மக்களாக சிறந்த இலக்கியங்கள் பண்பாடுகள் உடைய மக்களாக தமிழர்களாகிய நாம்தான் ஒருகாலத்தில் இருந்திருக்கிறோம்” என்று பெருமைப்பட்டுக்கொண்டார். (வி: 30.3.1959)

“நாம் மொழியால்தான் தமிழனே தவிர - 3000 ஆண்டுகளுக்கு முன்னைய தமிழைப் பேசுகிறோமே தவிர - பேச ஆசைப்படுகிறோமே ஒழிய - வாழ்க்கையில், ஆசாபாசங்களில், வளர்ச்சியில், போக போக்கியர்களில் நாம் தமிழன் அல்லரே! பேச்சில் ‘நான் பழந்தமிழன்’ என்பதுபோல் - நடப்பால், வாழ்வில், பழக்க வழங்களில் ‘நான் பழந்தமிழன்’ என்று யாராவது சொல்லிக்கொள்ள முடியுமா?” என்று ஆதித்தமிழனைத் தேடியவரும் அவர்!

மூவேந்தர்களை விமர்சித்தார். எதற்காக? “நமது சேர, சோழ, பாண்டிய அரசர்கள் பார்ப்பான் படிக்க சமஸ்கிருதப் பள்ளிகளைத்தான் உருவாக்கினார்களே தவிர, நம் மக்கள் படிக்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் வைக்கவில்லை” என்பதற்காகவே விமர்சித்தார். (வி: 30.9.1971)

பெரியாரின் தமிழ் உள்ளம்!

தமிழனுக்கு மதம் இல்லை என்றார் அவர். அதற்கு அவர் ஆதாரமாகச் சொன்னது, ‘மதம்’ தமிழ்ச் சொல் அல்ல!

தமிழனுக்கு சாதி இல்லை என்றார் அவர். அதற்கு அவர் ஆதாரமாகச் சொன்னது, ‘சாதி’ தமிழ்ச் சொல் அல்ல!

தமிழனுக்கு கடவுள் இல்லை என்றார் அவர். அதற்கு அவர் ஆதாரமாகச் சொன்னது, குறளில் ‘கடவுள்’ என்ற சொல் இல்லை!

தமிழனுக்குக் கடவுள் இல்லை என்றார் அவர். அதற்கு அவர் ஆதாரமாகச் சொன்னது, தொல்காப்பியத்தில், ‘கடவுள்’ என்ற சொல் இல்லை!

கம்பராமாயணத்தைப் பெரியார் எரிக்கச் சொன்னார். அந்த இடத்தில் திருக்குறளைத்தான் வைக்கச் சொன்னார்! அவர் பாரதியை எதிர்த்தார். அந்த இடத்தில் பாரதிதாசனைக் கொண்டுபோய் நிறுத்தினார்.

இதிகாசங்களை எரிக்கச் சொன்னார். கொன்றைவேந்தனும் இனியவை நாற்பதும் எங்கே என்று கேட்டார். ‘குடிஅரசு’ என்ற தமிழ்ச் சொல்லால் இதழ் நடத்தினார்! ‘புரட்சி’ என்ற தமிழ்ச் சொல்லால் இதழ் நடத்தினார்! ‘பகுத்தறிவு’ என்ற தமிழ்ச் சொல்லால் இதழ் நடத்தினார்! ‘விடுதலை’ என்ற தமிழ்ச் சொல்லால் இதழ் நடத்தினார்! ‘உண்மை’ என்ற தமிழ்ச் சொல்லால் இதழ் நடத்தினார்! ‘திராவிட நாடு’ கேட்டபோதும் தெலுங்கில், மலையாளத்தில், கன்னடத்தில் இதழ் நடத்தவில்லை! அங்கு போய் இயக்கம் நடத்தவில்லை! கேரள, கன்னட, மலையாளத் திராவிடர் கழகம் தொடங்கவில்லை! ஏனென்றால், “நாம் தமிழர்கள். இந்தத் தமிழ்நாட்டின் பூர்வீகக் குடிகள்” என்ற வரலாறு பேசினார். (வி: 23.6.1962)

“நமக்கு எவனும் முன்னோர்கள் அல்லர். நாம்தான் வருங்காலத்தவர்களுக்கு முன்னோர்கள் என்று கருதி காரியம் ஆற்ற வேண்டும். நமக்கு யார் முன்னோர்கள்? எதில் முன்னோர்கள்? எது முதல் முன்னோர்கள்? தோழர்களே! தமிழர்களுடைய சரித்திரத்துக்கு கால வரையரையே இல்லையே!” என்ற பழம்பெருமை அவருக்குள் இருந்தது (வி: 23.12.1962).  “நாம் தமிழர், நம் மொழி தமிழ் மொழி” என்றே வாழ்வின் இறுதிவரை முழங்கினார் (15.7.1971).

பெரியாரின் தமிழ், ஆரியம் கலக்காத தமிழ்! அவரது தமிழ், சமற்கிருதம் கலக்காத தமிழ்! அவரது தமிழ், ஆரியச் சிந்தனை அற்ற தமிழ்! அவரது தமிழ், தமிழ்ப் பண்பாடு மட்டுமே கொண்ட தமிழ்! அவரது தமிழ் சங்க காலத் தமிழ்! அவர் விரும்பியது குறள் நெறித் தமிழ்!

நூல் விவரம்

இவர் தமிழர் இல்லை என்றால், எவர் தமிழர்?

ப.திருமாவேலன்

க்கங்கள்: 1580, விலை ரூ.1800

நற்றிணை பதிப்பகம் வெளியீடு,

136, தரைத்தளம், சோழன் தெரு,

ஆழ்வார் திருநகர், சென்னை 600005.

செல்பேசி: 9486177208

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.திருமாவேலன்

ப.திருமாவேலன், மூத்தப் பத்திரிகையாளர். ‘ஜூனியர் விகடன்’ இதழின் முன்னாள் ஆசிரியர். ‘கலைஞர் தொலைக்காட்சி’யின் ஆசிரியர். ‘பெரியோர்களே, தாய்மார்களே!’, ‘ஆதிக்க சாதியினருக்கு மட்டும்தான் அவர் பெரியாரா?’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1

4


1



பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

திருமாவேலன் அவர்களின் பணி வணக்கத்தக்கது. அவர் நமக்கொரு மாபெரும் கேடயத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்.

Reply 1 1

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

மனித இனம் தோன்றிய பின்னரே மொழிகள் தோன்றின. ஒருவர் எந்த மொழியில் சிந்திக்கிறாரோ அதுவே அவருடைய தாய்மொழி.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

எம்.எஸ்.சுவாமிநாதன்பயம்நோர்டிக் நாடுகள்ரத்தப் பொருள்கள்இந்திய ஒன்றியம்உயர் நடுத்தர வகுப்புசிதம்பரம்சேஷாத்ரி குமார்நமக்கும் அப்பால் உள்ள உலகம்கரிசல் கதைகள்அம்பேத்கர் தோல்விபழைய வழக்குகள்M.S.Swaminathan Committeeகுடும்பப் பெயர்கழிவுவிதி மீறல்கழுதையை குதிரை என்போர் களத்தில் உள்ளனர்!வியாபாரிகள்ஊரக மேம்பாட்டு நிறுவனம்சீர்குலைவு முயற்சிகள்உலகப் பொருளாதாரம்இலங்கையின் நிலை இந்தியாவுக்கும் வருமா?ஆகஸ்ட் 15இந்திSuriyaமூக்குஅரசின் வருவாய்நிகர கடன் உச்சவரம்புசாதி – மத அடையாளம்தெற்கு ஆசியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!