கட்டுரை, புதையல், கல்வி, சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

ஷாங்காய் ரகசியம் என்ன?

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்
21 Sep 2021, 5:00 am
0

சீனாவுக்குச் செல்லும்போதெல்லாம் அது எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று மற்றவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டு வியப்பில் ஆழ்ந்துவிடுவேன். சீனத்தில் முதலீடு செய்த உலக முதலீட்டாளர்கள் பலர் சொல்வதும் அந்த வகையில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. “சீனா இன்றைக்கு மிகப் பெரிய பொருளாதார வல்லரசுபோலத் தோன்றலாம், எதிர்காலத்தில் அது ஓய்ந்துவிடும்” என்றே அவர்கள் கூறுகின்றனர். சீனத்தில் தொழில் வளர்கிறதோ இல்லையோ அதன் நகரங்கள் பலவற்றில் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே அதன் தொழில்துறை வளர்ச்சி எதிர்காலத்தில் அதற்குப் பல சமூகப் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம்.

சீனத்தைப் பற்றி நல்லவிதமாகவே நினைப்பவர்களும் இருக்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டுவதெல்லாம் இதுதான். “இன்றைக்கு நாம் பார்க்கும் சீன வளர்ச்சி ஒரே நாளில் ஏற்பட்டதல்ல. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக அவர்கள் திட்டமிட்டு மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் சேர்ந்துதான் இந்த வெற்றியை அவர்களுக்கு அளித்துள்ளன. கல்வித்துறையிலும் சாலை, இருப்புப்பாதைகள், தகவல் தொடர்பு, மின்சார உற்பத்தி, துறைமுகங்கள் போன்ற அடித்தளக் கட்டமைப்புத் துறையிலும் அவர்கள் மேற்கொண்ட முதலீடும் உழைப்பும்தான் இன்றைக்கு சீனத்தின் வேகமான வளர்ச்சிக்குக் கை கொடுக்கின்றன”.

இந்த இரண்டு கருத்துகளில் எது சரி என்று சிலர் பந்தயம் கட்ட முற்படலாம். ஆனால் நான் பந்தயத்துக்குத் தயாரில்லை. சீனாவின் இன்றைய வளர்ச்சிக்கு அது ஏற்கெனவே கல்வித் துறையிலும் அடித்தளக் கட்டமைப்பிலும் மேற்கொண்ட முதலீடுதான் காரணம் என்பதை உணர வேண்டும் என்றால் ஷாங்காய் நகர தொடக்கப் பள்ளிக்கூடங்களைப் பாருங்கள்.

“டீச் பார் அமெரிக்கா” என்ற இயக்கத்தின் நிறுவனர் வெண்டி காப்புடனும் “டீச் பார் ஆல்” இயக்கத் தலைவர்களுடனும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அந்த இயக்கம் 32 நாடுகளில் செயல்படுகிறது. சீனத்தின் மிக நல்ல பள்ளிக்கூடங்களையும் மிக மோசமான பள்ளிக்கூடங்களையும் நேரில் பார்த்து ஆய்வு செய்வதுதான் இயக்கத் தலைவர்களின் நோக்கம். சர்வதேச அளவில் ஷாங்காய் நகர பள்ளிக்கூடங்கள் மட்டும் எப்படிச் சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதை ஆராய முற்பட்டோம். 15 வயதான மாணவர்களின் கணிதம், அறிவியல் பாடத்திறன், பாடம் படிக்கும் திறன் ஆகியவற்றை 65 நாடுகளிலிருந்து தேர்வு செய்து சோதித்ததுடன் ஒப்பிட்டும் பார்த்ததில் ஷாங்காய் சிறப்பிடம் பெற்றது.

ஷாங்காய் பள்ளிகளின் ரகசியம்தான் என்ன என்று கண்டுபிடிக்க அந்நகரில் உள்ள குவாங்வெய் தொடக்கப் பள்ளியைத் தேர்வுசெய்தோம். அந்தப் பள்ளிக்கூடத்தில் மொத்தம் 754 மாணவர்கள் படிக்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை இருக்கிறது. 59 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு, மாணவர்களின் ஆர்வம், பெற்றோர்களின் ஒத்துழைப்பு ஆகியவை தவிர வேறெதுவும் புதிதாக இல்லை என்று கண்டுகொண்டோம். அதாவது ரகசியம் ஏதுமே இல்லை.

ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் எதெல்லாம் தேவையோ அதில் இடைவிடாமல் அக்கறை செலுத்தப்படுவதுதான் இந்தப் பள்ளிக்கூடங்களின் வெற்றிக்குக் காரணம். இந்த பள்ளிக்கூடத்தின் முதல்வர் ஷென் ஜுன் என்ற ஆசிரியை. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரில் சுமார் 40% பேர் அடிக்கடி இடம் மாறி வேலைசெய்யும் சாதாரணத் தொழிலாளர்கள். அதிகம் கல்வியறிவு இல்லாதவர்கள். இந்த பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்கள் தங்களுடைய வேலைநேரத்தில் 70% நேரத்தைப் பாடங்கள் நடத்துவதிலும் 30% நேரத்தை கற்பிக்கும் திறனை மேம்படுத்துவதிலும் அடுத்து நடத்த வேண்டிய பாடங்களுக்காகத் திட்டமிடுவதிலும் செலவிடுகின்றனர். அமெரிக்காவில் இருப்பதைவிட சீன ஆசிரியர்களிடத்தில் அர்ப்பணிப்பு உணர்வு அதிகமாக இருப்பதைக் காண்கிறேன்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தெங் ஜியோ (26) இந்தப் பள்ளிக்கூடத்தில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். பள்ளிக்கூடம் காலை 8.35 மணிக்கே தொடங்கிவிடுகிறது. மாலை 4.30 மணி வரை நடக்கிறது. ஒரு நாளைக்கு தலா 35 நிமிஷங்கள் என்று 3 பாடங்களை நடத்துகிறார் தெங் ஜியோ. மூன்றாவது வகுப்பில் அவர் பாடம் நடத்தும்போது நானும் மாணவர்களுடன் அமர்ந்து பின்னாலிருந்து கவனித்தேன். பாடத்தை நடத்துவது மிக அற்புதமாக திட்டமிடப்பட்டிருக்கிறது. வகுப்பில் நேரம் வீணடிக்கப்படுவதில்லை.

பாடம் நடத்தும் நேரம் தவிர எஞ்சிய நேரத்தில் அவர் அடுத்து நடத்த வேண்டிய பாடம் குறித்து குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார். எதை முதலில் சொல்ல வேண்டும், எதையெல்லாம் உதாரணங்களாகக் கூற வேண்டும் என்று தீர்மானிக்கிறார். தன்னைப் போன்ற சக ஆசிரியர்களிடம் ஆலோசனை கலக்கிறார், விவாதிக்கிறார். சில வேளைகளில் “ஆன்-லைனில்”கூட ஆலோசனைகளைப் பெறுகிறார். அவர் பாடம் நடத்தும்போது  தங்களுக்கு வகுப்புகள் இல்லாத ஆசிரியர்கள் அவர் நடத்துவதைப் பார்த்து, அதில் உள்ள தவறுகளை எடுத்துக்கூறி திருத்திக்கொள்ளுமாறு கூறுகின்றனர். அவரைவிட வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த ஆசிரியர்கள் நடத்தும் வகுப்புகளுக்குச் சென்று அவர் பாடம் நடத்தும் முறையைக் கூர்ந்து கவனித்தும் குறிப்புகள் எடுத்துக்கொள்கிறார். மாணவர்களுக்குப் பாடம் நடத்த பல்வேறு உத்திகளையும் கையாள்கிறார்.

ஒரு பள்ளிக்கூடம் சிறந்து விளங்க பள்ளிக்கூட கட்டடமோ, மாணவர்கள் எண்ணிக்கையோ, பள்ளிக்கூடத்தின் நவீன கட்டமைப்பு வசதிகளோ, பள்ளிக்கூடம் நடைபெறும் நேரமோ மட்டும் போதுமானதல்ல. சக ஆசிரியர்களின் ஆலோசனைகள், மாணவர்களிடமிருந்து கிடைக்கும் பதில்கள், மிகச் சிறந்த ஆசிரியர்களின் கற்பிக்கும் முறையைத் தெரிந்துகொள்ளல் ஆகியவைதான் முக்கியம். ஆசிரியர்களின் முதல் தகுதி “தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பது”.

தெங் பாடம் நடத்துவதுடன் ஓய்வதில்லை. ஒவ்வொரு பருவத்திலும் மாணவர்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு வரவழைக்கப்பட்டு கணினியைக் கையாளப் பயிற்சி தரப்படுகிறது. மாணவர்களுக்குத் தரப்படும் வீட்டுப்பாடத்தை அவர்கள் சரியாகச் செய்யவும் பாடங்களைப் படிக்கவும் பெற்றோருக்குத் தரும் பயிற்சி உதவுகிறது.

கிறிஸ்டினா பாவோ (29) என்ற ஆசிரியையும் ஆங்கிலப் பாடம் நடத்துகிறார். அவர் மாணவர்களின் பெற்றோர்களுடன் தொலைபேசியிலோ இணையதள வழியிலோ வாரத்துக்கு 3 அல்லது 4 முறை தொடர்பு கொள்கிறார். அவர்களுடைய மகன் அல்லது மகள் எப்படி படிக்கிறார் என்பதைத் தெரிவிக்கிறார். எங்கே பின்தங்குகிறார், என்ன செய்தால் நன்றாகப் படிப்பார் என்பதைத் தெரிவிக்கிறார். படிப்பதில் எப்படியிருந்தாலும் குழந்தைகளை அடிக்க வேண்டாம் என்று பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தத் தவறுவதேயில்லை.

“2003-ல் ஷாங்காய் பள்ளிக்கூடங்கள் சராசரி தரத்தில்தான் இருந்தன. உலகமே வியக்கும் அளவுக்கு தரமுள்ள பள்ளிகளாக இப்போது மாறிவிட்டன. அதுமட்டுமல்ல, ஒன்றிரண்டு பள்ளிக்கூடங்கள் மட்டும் தரமானவை என்றில்லாமல் ஒரே சமயத்தில் பெரும்பாலான பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டுவிட்டன. அமெரிக்காவிலும் ஆசிரியர்கள் நீண்ட நேரம் உயிரைக்கொடுத்து பாடம் நடத்துகின்றனர். ஆனால் அவர்கள் தங்களுக்குள் ஆலோசனை கலப்பதோ, ஒருவர் நடத்துவதை மற்றவர் கவனிப்பதோ, மூத்தவர்களிடமிருந்து கற்றுக்கொள்வதோ இல்லை” என்று சுட்டிக்காட்டுகிறார் சர்வதேச மாணவர் மதிப்பீட்டுக்கான திட்டத்தைச் சேர்ந்த (பிசா)  ஆண்ட்ரியாஸ் ஸ்லேச்சர். இங்கு தரமான மாணவர்கள் மட்டுமல்ல தரமான ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் உருவாகிறார்கள் என்கிறார்.

சீனத்திலேயே இப்போதும்கூட சுமாரான தரத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் பல இருக்கின்றன. பள்ளிக்கூடத்தின் தரத்தை உயர்த்துவது எப்படி என்று அமெரிக்கர்களுக்கும் சீனர்களுக்கும் தெரியும். ஆனால் ஷாங்காய் நகரத்தில் அதை இடைவிடாமல், திட்டமிட்டு தொடர்ந்து செய்துவந்ததால் பத்தாண்டுகளில் சர்வதேச அளவில் பேசப்படும் பள்ளிக்கூடங்களாக மாற்றிவிட்டனர்.

குவாங்வெய் பள்ளிக்கூட முதல்வர் ஷென் ஜுன் சொல்கிறார், “இது ஆரம்பம்தான்”!

- நியூயார்க் டைம்ஸ்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தாமஸ் எல்.ஃப்ரீட்மேன்

தாமஸ் எல்.ஃப்ரீட்மேன், அமெரிக்காவின் முக்கியமான பொது அறிவுஜீவிகளில் ஒருவர். 'தி நியுயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் வெளியுறவுத் துறைக் கட்டுரையாளர்.








வார்த்தை ஜாலம்என்எஸ்எஸ்ஓவிரும்பாதவர்களுக்கும் போட்டிமணவிலக்குசமஸ் கட்டுரைக்கு எதிர்வினைகுறைந்த பட்ச ஆதரவு விலைமோகன் யாதவ்திப்பு சுல்தான்நவீன இந்திய இலக்கியம்மருந்துதங்கச் சுரங்கம்படைப்புச் சுதந்திரம்காதல் - செக்ஸ்குழந்தைகள்நிச்சயமற்ற அதிகாரம்நரம்புக்குறை சிறுநீர்ப்பைசண்முகம் செட்டியார்பென் ஸ்டோக்ஸ்மத்திய இந்தியாகல்வி நிறுவனங்கள்வெடிப்புகள்ஒருங்கிணைப்பாளர்கள்வரி வசூல்தாங்கினிக்காசென்னைப் புத்தகக்காட்சிதுணை தேசியம்என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?ராஜ தர்மம்பணமதிப்பு நீக்கம்கோவிட் - 19

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!