பேட்டி, விவசாயம் 9 நிமிட வாசிப்பு
விவசாயிகளுக்கான சூரிய மின்சாரம்: துஷார் ஷா பேட்டி
பேராசிரியர் துஷார் ஷா பெயரை ‘அருஞ்சொல்’ வாசகர்கள் அறிந்திருப்பார்கள். விரைவில் தமிழ்நாடு அரசு கொண்டுவரவிருக்கிற, ‘உழவர் சூரிய மின் உற்பத்தித் திட்ட’த்தின் சிற்பி, துஷார் ஷா. ‘அருஞ்சொல்’ ஆரம்பிக்கப்பட்ட அன்று வெளியிடப்பட்ட ‘உழவர் எழுக!’ கட்டுரையானது, அவரைப் பற்றியும், குஜராத்தில் அவர் செயல்படுத்திய திட்டம் பற்றியும் கூடுதலாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. அந்த ஆவலைப் பூர்த்திசெய்யும் விதமாகவே இந்தப் பேட்டி அமைகிறது.
வேளாண் துறையில், துண்டி உழவர் சூரிய மின் உற்பத்தித் திட்டமானது மிக முக்கியமான பரிசோதனை முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இந்த யோசனை எப்படிவந்தது? இதை ‘சூரியப் பயிர்’ என்று ஏன் அழைக்கிறீர்கள்?
உலக நீர் மேலாண்மைக் கழகத்தில் பேராசிரியராக நான் பணிபுரிகிறேன். எங்களது முக்கியமான நோக்கம், நிலத்தடிநீரை ஒரேயடியாகத் தீர்த்துவிடாமல், நீடித்து நிலைக்கும் வகையில் பயன்படுத்துவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும் என்பது ஆகும். சென்ற 30-40 வருடங்களாக இந்தியாவின் மேற்கு மாநிலங்களில், நிலத்தடிநீரானது வேளாண்மைக்காக மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துகொண்டே இருக்கிறது. இது நீடித்து நிலைக்கும் வளர்ச்சி அல்ல. இந்தச் சூழலில் சூரிய மின்சாரம் வழியாக இயங்கும் பம்புசெட்கள் அறிமுகப்படுத்தப்பட்டால், பிரச்சினை மேலும் பெரிதாகும் என்று நாங்கள் அஞ்சினோம். சூரிய மின் திட்டம், உழவர்களுக்கு வருடம் 2000-2800 மணி நேரம் தடையில்லாத, தரமான, செலவில்லாத மின்சாரத்தை அளிக்க வல்லது. இம்மின்சாரம் முழுவதுமாக, நிலத்தடிநீரை இறைக்கப் பயன்படுத்தப்பட்டால், தண்ணீர் விரைவில் உபயோகப்படுத்தப்பட்டு, நிலத்தடி நீர்வளம் முற்றிலும் வறண்டுபோகும். எனவே, இந்தத் திட்டத்தில் உற்பத்திசெய்யப்படும் மின்சாரத்தை வேறு லாபகரமான வழிகளில் மாற்றிவிட வேண்டியது மிக முக்கியமான தேவை என்பதை உணர்ந்தோம்.
இந்தப் பிரச்சினைக்கான தீர்வு மிகவும் புதியதாக இருக்க வேண்டும். மின்சாரம் கிடைப்பதில் உழவர்களுக்கு உள்ள சிக்கல்கள், அரசு எதிர்கொள்ளும் மின்சார மானிய பளு, அதிகரிக்கும் கரிம வாயுத் தாக்கம், இதன் காரணமாக பொருளாதாரம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் போன்ற அனைத்துக்கும் தீர்வாக நாம் உருவாக்கும் திட்டம் அமைய வேண்டும் என எண்ணினோம்.
அப்படி நீடித்து நிலைக்கும் நீர் மேலாண்மை, உழவர்களின் வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் அக்கறை என நம் நாடும் மக்களும் வேண்டும் விஷயங்களுக்கான ஒரு தீர்வாகத்தான், ‘துண்டி வேளாண் மின் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுத் திட்டம்’ உருவாகி வந்திருக்கிறது என நம்புகிறோம்.
சூரிய மின்சாரம் செலவில்லாமல், பகலில் கிடைக்கும் தரமான, நம்பகமான சக்தி. அதாவது விவசாயிகளின் வயலில் விளைகிற சக்தி. இதை உற்பத்திசெய்ய வீரிய விதைகள், வேதி உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசனம், கடுமையான உடல் உழைப்பு - இவை எதுவுமே தேவை இல்லை. வறட்சி, அதிக மழை, பூச்சித் தாக்குதல், விலை வீழ்ச்சி போன்ற வழக்கமாக உழவர்கள் எதிர்கொள்ளும் வேளாண் துறைப் பிரச்சினைகளுக்கான காப்பீடு போன்றது இந்தச் சூரிய மின் உற்பத்தித் திட்டம். எனவேதான், இதை ‘சூரியப் பயிர்’ என்றும் அழைக்கிறோம்.
துண்டி உழவர் மின் உற்பத்திக் கூட்டுறவுத் திட்டமானது, ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, பெரும் அரசுத் திட்டமாக உருவானது என்று சொல்லலாமா?
நிச்சயமாகச் சொல்லலாம். உலக நீர்வள மேலாண் கழகமும், டாட்டா நீர் மேலாண்மைத் திட்டக் குழுவும் இணைந்து உருவாக்கிய திட்டம்தான் ‘துண்டி உழவர் மின் உற்பத்திக் கூட்டுறவுத் திட்டம்’. இந்தத் திட்டத்தின்படி, உழவர்கள் உற்பத்திசெய்யும் சூரிய ஒளி மின்சாரத்தின் ஒரு பகுதி அவர்கள் நிலத்தில் இருக்கும் மோட்டார் பம்புசெட்டுகளை இயக்கப் பயன்படுத்தப்படும். இன்னொரு பகுதி மின்சாரத்தை உழவர்கள், மின்சாரப் பகிர்மானக் கட்டமைப்புக்கு அளித்து, கூடுதல் வருமானம் பெறுவார்கள்.
நீங்கள் உருவாக்கிய இத்திட்டத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் வரவேற்பு எப்படி இருந்தது?
துண்டி உழவர் மின் உற்பத்தித் திட்டத்தின் வெற்றியைக் கண்ட குஜராத் மாநில அரசு, மாநில அளவில் ‘சூரிய சக்தி கிசான் யோஜனா’ என்னும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 33 மாவட்டங்களில், 12400 ஆழ்துளைக் கிணறுகளில் இது செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின்படி, சூரிய ஒளி மின் உற்பத்திக் கலன்களை அமைக்கத் தேவைப்படும் முதலீட்டில், 35% தொகையை மத்திய அரசு தருகிறது. 5% தொகையை உழவர் தன் பங்காக முதலீடு செய்ய வேண்டும். மீதியுள்ள 60% தொகையை மாநில அரசும், நபார்டு வங்கியும் குறைந்த வட்டிக் கடனாக அளிக்கிறார்கள்.
உழவர்கள் உற்பத்திசெய்து மின் பகிர்வுக் கட்டமைப்புக்கு அளிக்கும் மின்சாரத்துக்கு, யூனிட் ஒன்றுக்கு ரூ.3.50 தரப்படும். முதல் 7 ஆண்டுகளுக்கு, மாநில அரசு ரூ.3.50 கூடுதல் ஊக்கத் தொகையாக அளிக்கிறது. அதாவது, முதல் 7 ஆண்டுகளுக்கு, உழவர் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு ரூ.7 தருகிறது அரசு. இந்த 7 ஆண்டுகளில், சூரிய மின் கட்டமைப்புக்காக நபார்டு வங்கியில் வாங்கிய கடன் அடைபட்டுவிடும். பிறகு வருவதெல்லாம் விவசாயிகளுக்கு லாபம்தான்!
உங்கள் திட்டத்துக்கு, துண்டி கிராமத்தைத் தேர்ந்தெடுத்தற்கு என்ன காரணம்? இதை ஏன் ஒரு கூட்டுறவு நிறுவனமாக வடிவமைத்தீர்கள்?
ஏற்கனவே கட்டணமில்லா மின் இணைப்பை வைத்திருக்கும் உழவர்கள், சூரிய மின் திட்டத்தில் சேர மாட்டார்கள். துண்டி கிராமத்தில் விவசாயத்துக்கு மின்சார இணைப்பு கிடையாது, டீசல் எஞ்சின்கள்தான். டீசலோடு ஒப்பிடுகையில் சூரிய மின் திட்டத்தில், அவர்கள் நீரிறைக்க ஆகும் செலவு வெகுவாகக் குறையும் என்பதால் ஆர்வமாக இணைந்துகொண்டார்கள்.
முதலில் உழவர் நிலங்களில், சூரிய ஒளி மின் உற்பத்திக் கலன்களை நிறுவினோம். அவற்றிலிருந்து உபரி மின்சாரத்தை வெளியேற்ற, துண்டி உழவர் நிலங்களில் அமைக்கப்பட்ட கலன்களை இணைத்து ஒரு நுண் பகிர்வுக் கட்டமைப்பை ஏற்படுத்தினோம். பல்வேறு உழவர்களின் உபரி மின் உற்பத்தி, இந்த நுண் பகிர்வுக் கட்டமைப்பு வழியாக சேகரிக்கப்பட்டு, மத்திய குஜராத் மின் பகிர்வு நிறுவனத்தின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.
இந்த முறையில், ஒவ்வொரு உழவரின் நிலத்துக்கும் மின் கம்பங்கள் போன்ற பெரும் கட்டமைப்பு அமைக்கப்படுவது தவிர்க்கப்பட்டு, பெரும் முதலீடு மிச்சமாகிறது. இதற்கு, கூட்டுறவு முறைதான் சரிவரும். எனவேதான் மொத்த பணியையும் கூட்டுறவு நிறுவனம் மூலம் செய்தோம்.
இந்த நுண் பகிர்வுக் கட்டமைப்புக்கான பராமரிப்புச் செலவுகளை உற்பத்தியாளர்கள் பகிர்ந்துகொள்கிறார்கள். உழவர்கள் உற்பத்திசெய்யும் மின்சாரம் சேகரிக்கப்பட்டு, மின் கட்டமைப்புக்கு அளிக்கப்படும் மின்சார அளவுக்கு ஏற்ப, மத்திய குஜராத் மின் நிறுவனம் பணம் அளிக்கிறது. அதை, ‘துண்டி மின் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம்’ ஒவ்வொரு உழவரும் உற்பத்திசெய்யும் அளவை உப மின் மீட்டர்கள் வழியே கணக்கிட்டு, பகிர்ந்துகொள்கிறது.
எந்த ஒரு புதிய முயற்சியும், தொடக்கத்தில் பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திக்கும். அப்படி நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் என்ன? அதற்கு எப்படியான தீர்வுகளைக் கண்டடைந்தீர்கள்?
துண்டி கிராமத்தில் இருந்த உழவர்கள் எவருக்குமே சூரிய மின்சார உற்பத்தி தொடர்பிலான அறிதல்கள் இருக்கவில்லை. எனவே, தொடக்கத்தில் அவர்களது மனங்களில் பெரும் சந்தேகங்களும், அச்சங்களும் இருந்தன. மின்சார பம்புசெட்டுகள் அல்லது டீசல் பம்புசெட்டுகள்போலவே இவை பலன் தருமா? ஒரு நாளில், சூரிய ஒளிக்கேற்ப, நீரிறைக்கும் அளவு மாறுமா? வெயில் காலம், குளிர்காலம் எனக் காலத்திற்கேற்ப இதன் பலன்கள் மாறுமா? ஒரு ஏக்கர் நிலத்துக்கு எத்தனை சூரிய ஒளி பம்புசெட்டுகள் தேவைப்படும்? பம்பு பராமரிப்பு எளிதாக இருக்குமா?
உழவர்கள் உற்பத்திசெய்யும் மின்சாரத்துக்கு, மத்திய குஜராத் நிறுவனம் ஒழுங்காகப் பணம் தருமா எனப் பல சந்தேகங்களை எழுப்பினார்கள். ஒரு சூரிய மின் உற்பத்திக் கூட்டுறவை அமைக்கத் தேவையான வழிமுறைகளும், நிறுவன விதிமுறைகளும் எங்களிடம் இல்லை. மாவட்டக் கூட்டுறவு அலுவலகத்தின் உதவியோடு அவற்றை உருவாக்கினோம்.
இத்திட்டத்துக்காக, உழவர்கள் அரசிடமிருந்து கட்டணமில்லாமல் மின்சாரம் பெரும் உரிமையை 25 ஆண்டுகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். உழவர்கள் மானியங்களை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது எப்படி சாத்தியமானது?
துண்டி கிராமத்திலுள்ள 50 கிணறுகளில், 49 டீசல் பம்புசெட்டுகள்தான் உள்ளன. இங்குள்ள பல சிக்கல்கள் காரணமாக, அவர்களுக்கு அரசின் கட்டணமில்லா மின்சார இணைப்பு கிடைப்பது பெரும் பிரச்சினையாக இருந்தது. எனவே, வேறு வழியின்றி அவர்கள் டீசல் பம்புசெட்டுகள் வழியே நீரிறைத்துவந்தார்கள். டீசல் பம்புசெட்டுகள் வழியே நீரிறைக்க, ஒரு யூனிட்டுக்கு ஆகும் செலவு ரூபாய் 16-20 ஆகும்.
எனவே, எங்களது திட்டத்தைத் துண்டி உழவர்கள் கடவுள் தந்த பரிசுபோலப் பார்த்தார்கள். அதைப் பெரிதும் நம்பினார்கள். எனவே, குஜராத் அரசு உருவாக்கிய சூரிய சக்தி கிசான் யோஜனாவில், 5000-க்கும் மேற்பட்ட உழவர்கள் இணைந்து, தங்களது மின்சார மானிய உரிமையை விட்டுக்கொடுத்தார்கள். உழவர்களின் பூரண ஒத்துழைப்பை வைத்துப் பார்க்கும்போது, துண்டி மின் உற்பத்தித் திட்டம் மாநில அளவிலும், தேசிய அளவிலும் வளர்த்தெடுக்கச் சாத்தியமான திட்டம் என்றே தோன்றுகிறது.
துண்டி உழவர் மின் உற்பத்திக் கூட்டுறவின் மொத்த உற்பத்திக் கொள்திறன் 56.4 கிலோ வாட். இதை நிறுவத் தேவைப்பட்ட நில அளவு என்ன? ஒரு சராசரி உழவர் தன் தேவைக்குப் போக மின் கட்டமைப்புக்கு உற்பத்திசெய்து, ஓரளவு வருமானம் பெற எவ்வளவு நிலம் தேவைப்படும்?
துண்டி கிராமத்தில் மூன்று வெவ்வேறு கொள்திறன் கொண்ட மின் உற்பத்திக் கலன்கள் உள்ளன. 5 குதிரை சக்தி கொண்ட பம்புசெட்டுக்கு 8 கிலோ வாட், 7.5 குதிரை சக்திக்கு 10.8 கிலோ வாட், 5 குதிரை சக்திப் பம்ப்செட்டுக்கு 5 கிலோ வாட் என்று. 5 கிலோ வாட் மின் கலன்கள் அமைக்க 450 சதுர அடி நிலமும், 8 கிலோ வாட் மின் கலன்களுக்கு 830 சதுர அடி நிலமும், 10.8 கிலோ வாட் மின் கலன்களுக்கு 930 சதுர அடி நிலமும் தேவைப்படும். அதாவது ஒரு வீட்டடி மனை அளவைவிட குறைந்த இடமே தேவை. இந்த இடத்திலும் சூரியத் தகடுகளுக்கு கீழே உள்ள இடத்தில், நிழலில் வளரும் பயிர்களைப் பயிரிடுகிறார்கள் உழவர்கள். எனவே, இதற்கெனப் பிரத்யேகமாக இடம் ஒதுக்கத் தேவை இல்லை.
இந்தச் சூரிய மின் உற்பத்தித் திட்டத்தில், மின் பகிர்வு நிறுவனங்களுக்குப் பெரும் செலவு மிச்சமாகிறது. பாசனக் கிணறு வரையில் கம்பங்கள் நட்டு, கம்பியிழுத்து அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்பு, அதன் பராமரிப்புச் செலவுகள், உழவர்களுக்கு அளிக்க வேண்டிய மின்சாரத்துக்கான செலவு, உழவர் நுகரும் மின்சாரத்தை, உற்பத்தித் தலத்தில் இருந்தது நிலம் வரை கொண்டுவருகையில் நிகழும் மின்னிழப்பு எல்லாமும் இங்கே மிச்சமாகிறது. கூடவே, சூரிய ஒளி மின் உற்பத்தி, சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருப்பதால், அதனால் கிடைக்கும் பசுமை மானியமும் மின் பகிர்வுக் கட்டமைப்புக்குக் கிடைக்கிறது. இவ்வாறு மின் பகிர்வு நிறுவனங்களுக்கு மிச்சமாகும் இந்தச் செலவுகளையும், பசுமை மானியத்தையும் சேர்த்து, உழவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கு அதிக விலை கொடுக்கலாம் என்னும் வாதத்தை உங்கள் ஆய்வுகளிலிருந்து முன்வைக்கிறீர்கள். அரசிடமும், தனியார் மின் பகிர்வு நிறுவனங்களிடமும் இந்த வாதம் எடுபடுகிறதா?
நிச்சயமாக. சுற்றுச்சூழலைப் பாதிக்காத மின் உற்பத்தி, உற்பத்தியாளர் நலன், அவர்களுக்குக் கட்டுபடியான உற்பத்தி விலை, மின் பகிர்வுக் கட்டுமானத்துக்கு மிச்சமாகும் செலவுகள், நுகர்வோர் நலன் என ஒரு ஒட்டுமொத்தமான பார்வை கொண்ட வாதத்தைத்தான், இந்தத் திட்டத்தின் வழியாக நாங்கள் முன்வைக்கிறோம். குஜராத் அரசு இதை ஏற்றுக்கொண்டது. தங்கள் சுயநலன் கருதி, தொடக்கத்தில் எங்களது வாதங்களை ஏற்றுக்கொள்ளத் தனியார் மின்பகிர்வு நிறுவனங்கள் தயங்கின. ஆனால், இத்திட்டம் வழியே, உழவர் மின் மானியம், மின் கடத்துதலில் ஏற்படும் இழப்பு என அவர்களது நஷ்டங்களும் குறைந்து அவர்களுக்கும் இது லாபகரமாக இருக்கும் என உணர்ந்த பிறகு ஒப்புக்கொள்கிறார்கள்.
உங்களது ஆய்வுக் கட்டுரையில், பல்வேறு சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவன அமைப்புகளை ஒப்பிட்டு, உழவர் சூரிய ஒளி மின் உற்பத்திக் கூட்டுறவு நிறுவன அமைப்புதான் மிகச் சிறந்தது என வாதிட்டிருக்கிறீர்கள். இதற்கான காரணங்கள் என்ன?
சூரிய ஒளி மின் உற்பத்தி மூலம், நிலையான வருமானம் கிடைக்கும் என்பதை உழவர்கள் உணர்ந்துகொண்டால், இந்த உற்பத்தி முறை சரியாக இயங்க எல்லா முயற்சிகளும் செய்வார்கள். மின் உற்பத்திக்கு ஒரு நல்ல விலை கிடைக்கையில், தேவையில்லாமல் அதை நீர்ப் பாசனத்துக்காகச் செலவிட மாட்டார்கள். எனவே, உற்பத்தியாளர் கூட்டுறவு முறையில், உழவர்கள் இணைந்து செயல்படுவதே, குறைந்த செலவில், சீராக இயங்கும் நுண் மின் உற்பத்திக் கட்டமைப்பை வெற்றிகரமாக்க உதவும்.
துண்டி உழவர் சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டம், உழவர் வருமானத்தை இரட்டிப்பாக்கும் எனக் கடந்த 5 ஆண்டுகளின் செயல்பாடுகளின் வழியே நிறுவியிருக்கிறீர்கள். இது எல்லா இடங்களிலும் சாத்தியமா?
இதுவரை கிடைத்திருக்கும் தரவுகள், ஒரு மின் உற்பத்தி இணைப்புக்கு, வருடம் 60-70 ஆயிரம் வரை அதிக வருமானம், இந்த சூரிய மின் உற்பத்தித் திட்டம் மூலம் கிடைக்கும் என உறுதிசெய்கின்றன. சிறு, குறு உழவர்களின் வருட வருமானத்தைக் கணக்கிட்டால், இது நிச்சயம் அவர்களின் வருட வருமானத்தைவிட அதிகம்தான். இத்திட்டத்தை வளர்த்தெடுக்கையில், கிணறுகள் இல்லாத குறு உழவர்களுக்கும், நிலமில்லாத ஏழைகளுக்கும் இப்பயன்கள் கிடைக்கச்செய்வது எப்படி என்பதே நம் முன் உள்ள அடுத்த இலக்கு.
உங்கள் ஆய்வுகளின் மூலம், உழவர்செய்யும் மின் உற்பத்திக்குக் குறைந்தது ஒரு யூனிட்டுக்கு 5 ரூபாய் கிடைக்கலாம் எனச் சொல்கிறீர்கள். ஆனால், தனியார் துறை முதலீடு செய்யும் பெரும் சூரிய மின் திட்டங்களில், சூரிய மின்சாரம், சமீபத்தில் ஒரு யூனிட்டுக்கு 2.50 ரூபாய் எனக் குறைந்திருக்கிறதே? இது எப்படி என விளக்குவீர்களா?
இந்த இரண்டு உற்பத்தி அலகுகளும் ஒப்பிட முடியாதவை. பெரும் சூரிய ஒளி மின் திட்டங்களுக்கு அரசு பெரும் கட்டமைப்பு உதவிகளையும், மறைமுக நிதிச் சலுகைகளையும் தருகிறது. ஒரு மின் பகிர்வு நிறுவனத்தின் முக்கியப் பிரச்சினை என்பது, வேளாண் மின் இணைப்புக்குமான மின்சார மானியம். ஒவ்வொரு இணைப்புக்கும் அரசு வருடம் கிட்டத்தட்ட 60 ஆயிரம் செலவிடுகிறது. எனவே, உழவர் உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்குக் கொஞ்சம் அதிக விலை கொடுக்கும்போது, அது வருடம் மிச்சப்படுத்தும் மானியத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
உற்பத்தி செய்யும் மின்சாரத்துக்கான பணம் சீராகக் கிடைக்கும் எனில், உழவர்கள் சரியான விலைக்கு மின் உற்பத்திசெய்து தரத் தயராக இருப்பார்கள் என்பதையே ‘சூர்ய சக்தி கிசான் யோஜனா’விற்கு உழவர்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பு சொல்கிறது.
உழவர்கள் நிலங்களிலிருந்து உற்பத்திசெய்யப்படும் மையப்படுத்தப்படாத மின் உற்பத்தி முறைக்கேற்ப, மின் பகிர்வுக் கட்டுமானம் மாற்றியமைக்கப்பட வேண்டும், அதற்கு மின் பகிர்வு நிறுவனங்கள் பெரும் முதலீடு செய்ய வேண்டியிருக்கும் என ஒரு வாதம் இந்தத் திட்டத்தின் விமர்சகர்களால் முன்வைக்கப்படுகிறதே?
அது ஓரளவு உண்மைதான். ஆனால், உழவர் உற்பத்திசெய்து மின் பகிர்வுக் கட்டுமானத்துக்கு அளிக்கும் மின்சாரம் 28-30% வரை இருக்கையில், அது மின் பகிர்வுக் கட்டுமான மேலாண்மைக்கு உதவியாகத்தான் உள்ளது என ஆய்வுகள் சொல்கின்றன.
நீங்கள், குஜராத் மாநிலம், ஆனந்தில் உள்ள ஊரக மேலாண் கழகத்தில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தை உருவாக்கிய டாக்டர் வர்கீஸ் குரியனுடன் பணியாற்றியிருக்கிறீர்கள். அவரது பங்களிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்?
அசாத்தியமான சாதனை அது. அவர் ஒரு மேதை!
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Senthil 3 years ago
எங்கள் மருத்துவ மனையின் மேல் மாடியில் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் செலவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறேன். ஷேர் மார்க்கெட், சிறு தொழில்கள் என்றெல்லாம் நான் முதலீடு செய்து இருக்கிறேன். இவை எதிலும் கிடைக்காத மிகப்பெரிய லாபத்தை சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக செய்த முதலீடு தருகிறது. ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணத்தில் ஒரு லட்ச ரூபாயை மிச்சம் பிடிக்கிறேன். இதற்குக் காரணம் ரிவர்ஸ் மீட்டர் வைத்திருப்பது தான். நாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் மின் பகிர்மான கட்டமைப்புக்குச் சென்றுவிடுகிறது. எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறோமோ அதைக் கழித்து கொண்டு மீதம் மின்சாரத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம். "படிம எரிபொருள்களைப் பயன்படுத்தக்கூடாது. புவி வெப்பமடைதலைத் தடுக்க வேண்டும்" என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்திச் செய்வதை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக தடைகளை ஏற்படுத்துகிறது. இப்பொழுது ரிவர்ஸ் மீட்டர் சிஸ்டம் கிடையாது. பெரிய அளவில் மானியம் எதுவும் கிடையாது. அரசியல் கட்சிகளின் வருவாய்க்கு ஆதாரமாக இருப்பவை இரண்டு. முதலாவது, எல்லோரும் அறிந்தது - சாலைகள் போடுவது. சாலைகள் போடுவதில் நடக்கும் ஊழல்தான் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அரசியல் கட்சிகளுக்கு ஈட்டுகிறது. இரண்டாவது, கண்ணுக்குத் தெரியாதது. அது தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது. தமிழக அரசு ஒவ்வொரு யூனிட்டுக்கும் அண்டை மாநிலங்களை விட அதிகமான பணத்தைக் கொடுத்துதான் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குகிறது. இந்த அதிகப்படியான பணம் கமிஷனாக அரசியல் கட்சிகளுக்கு போய்ச்சேரும் என்பது பொது அறிவு. நாட்டைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கவலைப்படாத ஊழல் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் அரசியல் விழிப்புணர்வு இல்லாத குடிமக்கள் இருக்கும் நாடு நமது. மக்களுக்கான அரசுகள் உருவாகாத ஒரு நாட்டை "உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம்" என்று சொல்வது ஒரு நகை முரண் தான்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 3 years ago
தோழர், துஷார் ஷாவின் பேட்டியை படித்தேன். எங்கள் மருத்துவ மனையின் மேல் மாடியில் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் செலவில் சூரிய ஒளி உற்பத்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறேன். ஷேர் மார்க்கெட், சிறு தொழில்கள் என்றெல்லாம் நான் முதலீடு செய்து இருக்கிறேன். இவை எதிலும் கிடைக்காத மிகப்பெரிய லாபத்தை சூரிய ஒளி மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக செய்த முதலீடு எனக்குத் தருகிறது ஒவ்வொரு மாதமும் மின்சாரக் கட்டணத்தில் ஒரு லட்ச ரூபாயை மிச்சம் பிடிக்கிறேன். இதற்குக் காரணம் ரிவர்ஸ் மீட்டர் வைத்திருப்பது தான். நாங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் மின் பகிர்மான கட்டமைப்புக்குச் சென்றுவிடுகிறது. எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்கிறோமோ அதைக் கழித்து கொண்டு மீதம் மின்சாரத்துக்கு மட்டுமே நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம். "படிம எரிபொருளை பயன்படுத்தக்கூடாது. புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டும்" என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்துவதற்குப் பதிலாக தடைகளை ஏற்படுத்துகிறது. இப்பொழுது ரிவர்ஸ் மீட்டர் சிஸ்டம் கிடையாது. பெரிய அளவில் மானியம் எதுவும் கிடையாது. (மருத்துவர் செந்தில்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் - அவரது பின்னூட்டத்தின் ஒரு பகுதி, அவரது அனுமதியுடன் பகிரப்படுகிறது)
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.