கட்டுரை, அறிவியல் 7 நிமிட வாசிப்பு

முதலுறு விரைவு ஈனுலை: கேள்விகளும் பதில்களும்

த.வி.வெங்கடேஸ்வரன்
07 Mar 2024, 5:00 am
0

சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள கல்பாக்கத்தில் கட்டமைக்கப்படுள்ள இந்தியாவின் முதல் ‘முதலுறு விரைவு ஈனுலை’ விவாதப் பொருள் ஆகியுள்ளது. இதுபற்றி உருவாகியுள்ள கேள்விகளுக்குப் பதில் அறிந்துகொள்வது அவசியம்.

இங்கே (Prototype Fast Breeder Reactor - PFBR) ‘கோர் லோடிங்’ எனப்படும் எரிபொருள் நிரப்பும் பணி தொடக்கத்தைப் பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கிவைத்தார்.

கல்பாக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இயங்கிவரும் 40 மெகாவாட் திறன் கொண்ட விரைவு சோதனை ஈனுலையின் (Fast Breeder Test Reactor) அனுபவத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த 500 மெகாவாட் ஈனுலை செயல்படத் தொடங்கும்போது இந்தியாவின் மூன்று கட்ட சுயசார்பு அணு ஆற்றல் கொள்கையின் இரண்டாம் கட்டத்தை அடைந்துவிடுவோம். 

சமீபத்தில் தொடங்கியுள்ள ‘கோர் லோடிங்’ பணி முடிந்த பின்னர் அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். முதலில் சில ஆண்டுகள் சோதனை முயற்சி அடிப்படையில் மட்டுமே மின் உற்பத்தி நடக்கும். பல்வேறு உதிரிப் பாகங்கள், அவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு போன்றவை சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் முழு வீச்சில் ஆற்றல் உற்பத்தியும் அணு உலை எரிபொருள் ஈனும் பணியும் தொடங்கும். 

தற்போது உலகளவில் ரஷ்யாவில் மட்டுமே வணிகரீதியில் இயங்கும் விரைவு ஈனுலை செயல்பட்டுவருகிறது. அதற்கு அடுத்தபடியான இரண்டாவது வணிகரீதியில் இயங்கும் விரைவு ஈனுலையாக இந்த உலை செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கோர் லோடிங் என்றால் என்ன?

செங்கல் சூளையில் விறகை முறையாக அடுக்கினால்தான் குறைந்த விறகைப் பயன்படுத்தி அதிக ஆற்றலைப் பெற முடியும். அதுபோல, அணு உலையில் எரிபொருளைக் குறிப்பிட்ட ஒழுங்கமைப்பில் உள்ளீடுசெய்ய வேண்டும். கணிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட ஒழுங்கமைப்பில் எரிபொருளை அடுக்குவதுதான் ‘கோர் லோடிங்’. 

ஈனுலை என்றால் என்ன?

பொதுவாக ஆற்றல் தயாரிக்கும் ஆலைகளில் எரிபொருளை உள்ளீடுசெய்து ஆற்றல் உற்பத்திசெய்வார்கள். ஆனால், இந்த அணு உலையில் ஆற்றலுடன் புதிய அணு ஆற்றல் எரிபொருள் உருவாகும் - பிறக்கும். அதாவது, இந்த அணு உலை கூடுதல் எரிபொருளை உற்பத்திசெய்யும் - ஈனும் - எனவே இந்த வகை அணு உலைகளை ஈனுலைகள் என்கிறார்கள்.  

அணு உலையில் மின் ஆற்றல் எப்படி உருவாகிறது?

நீர் மின்சாரத்தில் அணையில் தேக்கிவைக்கப்பட்ட நீர் டர்பனைச் சுழலச் செய்யும். காந்தப் புலத்தில் டர்பைன் சுழலும்போது மின்காந்த விசை மின் ஆற்றலாக வெளிவரும். அதேபோல, அணு உலைகளில் ஸ்ட்ராங் விசை (Strong Force) எனப்படும் அணுக்கரு பிணைவு விசைதான் அணுக்கரு பிளவின்போது முதலில் வெப்ப ஆற்றலாகவும் பின்னர் அந்த வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாகவும் வெளிப்படுகிறது.  

அணுக்கரு பிணைவு விசை என்றால் என்ன?

அணுவின் அமைப்பு என்ன? மையத்தில் அணுக்கரு. கருவைச் சுற்றி எதிர் மின்னேற்றம் கொண்ட எலக்ட்ரான் சுற்றிவரும். கருவின் உள்ளே நேர் மின்னேற்றம் கொண்ட புரோட்டான்கள் மற்றும் மின்னேற்றம் அற்ற நியூட்ரான்கள் பொதியாக இருக்கும். 

காந்தத்தில் வடக்கு தெற்கை ஈர்க்கும் - ஆனால் வடக்கு வடக்கும், தெற்கு -தெற்கும் - இடையே விலக்கு விசை உருவாகும். அதேபோல நேர் மின்னேற்றம் கொண்ட துகள் மற்றொரு நேர் மின்னேற்றம் கொண்ட துகளை விலக்க வேண்டும்.  

ஆனால், தனிமங்களின் அணுக்கருவில் ஒன்றுக்கும் மேற்பட்ட நேர் மின்னேற்றம் கொண்ட புரோட்டான்கள் நியூட்ரான்களுடன் சேர்ந்து அணுக்கருவின் சிறு இடத்தில் சேர்ந்து இருக்கும். அணுக்கருவில் புரோட்டான் நியூட்ரான்களை விலக்கு விசையை மீறி ஸ்ட்ராங் விசை எனும் அணுக்கரு பிணைவு விசை சேர்த்துப் பிணைத்துவைத்திருக்கும். 

அழுத்தமாகக் கட்டி வாய்த்த கீரைக் கட்டின் வாழை நாரை அறுக்கும்போது ‘டப்’ என்று விசையோடு கீரைக் கட்டு விடுபடும். அதுபோல, பல்வேறு துகள்களைக் கொண்ட அணுக்கருவைப் பிளந்தால். கீரைக் கட்டைச் சுற்றி நன்கு அழுத்தமாக வாழை நார் கொண்டு கட்டி வைத்திருப்பார்கள், அந்தக் கயிற்றை அறுக்கும்போது அணுக்கரு பிணைவு விசை வெளிப்படும். இதுவே, அணு உலைகளின் ரகசியம்.  அணுப் பிளவு ஆற்றல் எனவும் இதனைக் கூறுவார்கள்.

அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யூ235 (U235) எனும் யூரேனிய ஓரகத்தனிமத்தின் (ஐசோடோப்) அணுக்கருவில் இரண்டு மூன்று அல்ல 92 புரோட்டான்கள் உள்ளன. அவற்றின் மொத்த விலக்கு விசை எவ்வளவு கூடுதலாக இருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அணு உலையில் யூ235 (U235) போன்ற அணு உலை எரிபொருள் பிளவுபடும்போது வெளிப்படும் ஆற்றலே அணுவாற்றல். 

இந்த ஆற்றல் வெப்ப ஆற்றலாக வெளிப்படும். இந்த வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி நீரை நீராவியாக மாற்றுவார்கள். நீராவியைக் கொண்டு டர்பனைச் சுழலச் செய்யும்போது மின்னாற்றல் உருவாகும். 

அணுக்கருவை எப்படிப் பிளப்பது?

கீரையைக் கட்டி வைத்துள்ள நாரை அறுப்பது எளிது. கண்ணுக்குத் தெரியாத மிகமிக நுணுக்கமான அணுக்கருவை எப்படிப் பிளப்பது? உடைப்பது? 

முதலில் எல்லாத் தனிமங்களின் அணுக்கருவையும் பிளப்பது எளிதன்று. சில தனிம அணுக்களின் ஓரகத்தனிமங்களின் (ஐசோடோப்) அணுக்கரு நிலையற்றத்தன்மை கொண்டவை. அவற்றின் அணுக்கருவைச் சிறு சலனம் செய்தால் போதும்; அந்தக் கரு பிளந்து இரண்டாகிவிடும். 

அணுக்கருவின் உள்ளே எவ்வளவு எண்ணிக்கையில் தம்மிடையே விலக்கு விசை கொண்ட நேர் மின்னேற்ற புரோட்டான்கள் உள்ளன, எவ்வளவு நியூட்ரான்கள் உள்ளன என்பதைப் பொருத்து சில ஐசோடோப்புகள் நிலைத்தன்மை கொண்டதாகவும், நிலையற்றத்தன்மை கொண்டதாகவும் நடுநிலைத்தன்மை கொண்டதாகவும் அமையும். 

பாட்டிலை மேசையின் மீது எப்படி வைக்கிறோம் என்பதைப் பொருத்து அதன் நிலையான நிலையற்ற நடுநிலைத்தன்மை அமையும். அதுபோல, சில தனிம ஐசோடோப்புக்கள் நிலையற்றத்தன்மை கொண்டவை அவற்றை சற்றே அசைத்தால் போதும், அவை பிளவுபட்டுவிடும்.

நிலைத்தன்மை கொண்ட தனிமங்களை உடைப்பது எளிதன்று. நிலையற்றத்தன்மை கொண்ட ஓரகத்தனிமங்கள் (ஐசோடோப்) தாமே இயற்கை கதிரியக்கத்தைக் கொண்டிருக்கும். நடுநிலைத்தன்மை கொண்ட ஓரகத்தனிமத்தின் (ஐசொடோப்ப) அணுக்கருவின் மீது சரியான வேகத்தில் புதிய நியூட்ரான் ஒன்றைச் செலுத்தினால் அந்த அணுக் கருவை அசைத்துவிடலாம்.  அணுக்கரு பிளந்து ஆற்றல் வெளிப்படும். 

அணு உலை எரிபொருள்

பல ஓரகத்தனிமங்களைப் பிளக்க முடியும் என்றாலும் சில ஓரகத்தனிமங்கள்தான் அணு உலை எரிபொருளாக உதவும். அணு உலை எரிபொருளாக பயன்படும் ஓரகத்தனிமங்கள் உடையும்போது அவை ஒன்றுக்கும் மேற்பட்ட நியூட்ரான்களை உமிழும். இந்த இரண்டு மூன்று நியூட்ரான்கள் இரண்டு மூன்று கருவை உடைக்கும்.

இப்போது மொத்தம் ஆறு அல்லது ஒன்பது நியூட்ரான்கள் வெளிப்படும். இவ்வாறு அடுத்தடுத்து தொடர் சங்கிலியைப் போல சடசடவென பல அணுக்கரு உடைபடும். இப்படிச் சங்கிலி தொடர்வினை ஏற்படுத்தவல்ல ஓரகத்தனிமங்கள்தான் அணு உலையில் எரிபொருளாக பயன்படுத்தப்படும். 

மூன்றே மூன்று ஐசோடோப்புகள்தான் இப்படித் தொடர்ச்சியான சங்கிலி தொடர்வினை ஆற்ற முடியும். யுரேனியம்-235, புளூட்டோனியம்-239, மற்றும் யுரேனியம்-233 ஆகிய இந்த மூன்று ஐசோடோப்புகள் மட்டுமே அணு உலைகளில் எரிபொருளாக பயன்படும். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நிலவில் ‘தங்க’ வேட்டை

த.வி.வெங்கடேஸ்வரன் 30 Aug 2023

ஈனுலை எப்படிக் கூடுதல் எரிபொருளை ஈனுகிறது?

இயற்கையில் கிடைக்கும் யுரேனியம் ஒரு யுரேனியம்-234, யுரேனியம்-235, யுரேனியம்-238 முதலிய ஓரகத்தனிமங்களளின் கலவையாக இருக்கும். இதில் யுரேனியம்-235 மட்டுமே எரிபொருளாக பயன்படும். ஆனால், இயற்கையில் கிடைக்கும் யுரேனியம்-235 அளவு மிக மிகச் சொற்பமே. 140 யுரேனியம்-238 அணுக்களுக்கு வெறும் ஒரு யுரேனியம்-235 அணு எனும் விகிதத்தில்தான் இயற்கையில் யுரேனியம் உள்ளது. 

கலவையான இந்த யுரேனியத்தை அணு உலையில் பயன்படுத்தும்போது கரும்புச் சக்கை கழிவுபோல சங்கிலி தொடர்வினையில் பங்கேற்காத யுரேனியம்-238 முதலியவை கழிவாக அணு உலையில் வெளிப்படும். 

சிலைக்குச் சந்தன காப்பு செய்வதுபோல ஈனுலை போன்ற சில அணு உலைகளில் அணுவினை கலன் மீது அணு எரிபொருளாக பயன்படாத யுரேனியம்-238ஐப் போர்வையாக பூச்சுசெய்துவைக்கலாம். ஈனுலையில் வெளிப்படும் நியூட்ரான்கள் இந்த யுரேனியம்-238த்தோடு வினைபுரிந்து அதனை புளுட்டோனியம்-239 ஆக மாற்றிவிடும். அதாவது, எரிபொருள் எரிந்து ஆற்றல் உருவாகும் அதே வினையில் புதிய எரிபொருள் தயார். இதுதான் ஈனுலை நுட்பம். மேலை நாடுகளில் இந்த வகை ஈனுலைகளைத்தான் நிறுவி ஆய்வுசெய்கிறார்கள். 

கல்பாக்கத்தில் உருவாகும் ஈனுலையில் தோரியம்-232 பூச்சுசெய்வார்கள். இது யுரேனியம்-233 என்கிற அணு எரிபொருளாக மாறும். தோரியம்-232, யுரேனியம்-238 முதலியவற்றை ஈரப்பசை கொண்ட பச்சை விறகு எனக் கருதலாம். அடுப்பில் பச்சை விறகை எரிக்க முடியாது. எரியும் அடுப்பின் அருகே பச்சை விறகை காயவைத்து அடுப்புக்கு எரிபொருள் தயார்செய்வதுபோல்தான் ஈனுலை வேலை செய்கிறது. 

ஏன் இந்த ஈனுலை முக்கியத்துவம் வாய்ந்தது?

இந்தியாவில் யுரேனியம் இருப்பு மிக மிகக் குறைவு. மேலும் அதன் தரமும் குறைவு. அதாவது, இந்தியாவில் கிடைக்கும் கனிமத்தில் எரிபொருளாக பயன்தரும் யுரேனியம்-235 விகிதமும் குறைவு. எனவே, வெளிநாட்டிலிருந்துதான் யுரேனிய எரிபொருளை இறக்குமதிசெய்கிறோம். 

ஆனால், இந்தியாவில்தான் உலகிலேயே மிக அதிகமான அளவில் தோரியம் இருப்பு உள்ளது. கேரளா, கன்னியாகுமரி கடற்கரை மணலில் தோரியம் அபரிமிதமாக உள்ளது. எனவே, ஈரப்பசை கொண்ட பச்சை விறகு போன்ற தோரியத்தை ஈனுலையில் இட்டு யுரேனியம்-233 என்கிற அணு எரிபொருளாக மாற்றினால் வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டியதில்லை என ஹோமி பாபா கருதி மூன்று அடுக்கு அணு உலை திட்டத்தைத் தீட்டினார். 

இதில் முதல் கட்டத்தில் இந்தியாவில் கிடைக்கும் யுரேனியத்தைக் கொண்டு ஈனுலைக்குத் தேவையான புளுடோனியம் செறிவான எரிபொருளை தயார்செய்ய வேண்டும். இதனூடே அணுமின் உற்பத்தியும் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே பதினெட்டு முதல் கட்ட ‘அழுத்த கனநீர் அணு உலை’ (pressurised heavy water reactor - PHWR) வகை அணு உலைகள் தற்போது இந்தியாவில் பல்வேறு இடங்களில் இயங்கிவருகின்றன. 

இரண்டாம் கட்டத்தில் ஈனுலை வழியே தோரியத்தை யுரேனியம்-233 எரிபொருளாக மாற்ற வேண்டும். இதிலும் மின் உற்பத்தி கிடைக்கும். கல்பாக்கத்தில் சோதனை ஈனுலை சுமார் ஐம்பது ஆண்டுகள் இயங்கியுள்ளது. சோதனை ஈனுலை அனுபவத்தின் அடிப்படையிலும் சுனாமிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட மேம்பட்ட பாதுகாப்பு வழிமுறை அடிப்படையிலும் அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம் (Atomic Energy Regulatory Board - AERB) சில ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட முதற்கட்ட ஈனுலையை ஆய்வுசெய்து தற்போதுதான் அனுமதி வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக முதற்கட்ட ஈனுலை தற்போது இயங்க தயார் நிலையில் உள்ளது. 

மூன்றாம் கட்டத்தில் யுரேனியம்-233 எரிபொருளாகக் கொண்ட அணு உலைகளை ஏற்படுத்த வேண்டும். இந்த மூன்றாம் கட்ட உலைகளும் ஈனுலைகள்தாம், ஆனால் இதில் தோரியத்திலிருந்து பெறப்படும் யுரேனியம்-233தான் எரிபொருள் இதன் மீது தோரியம் பூச்சுப் போர்வைசெய்து கூடுதல் யுரேனியம்-233 உற்பத்திசெய்வார்கள். இதிலும் மின்சார உற்பத்தி கிடைக்கும். இந்த மூன்றாம் கட்ட சோதனை உலை - காமினி- சில ஆண்டுகாலமாக கல்பாக்கத்தில் செயல்பட்டுவருகிறது. 

கூடங்குளம் அணு உலைக்கும் தற்சார்புத் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்? 

கூடங்குளம் அணு உலைகள் இந்தியாவின் மூன்று அடுக்குத் திட்டத்தின் பகுதி அல்ல. அந்த உலைகளின் எந்தவொரு பங்கும் ஈனுலை அல்லது மூன்றாம் கட்ட உலைகளுக்குப் பயன் தராது. 

சோதனை விரைவு ஈனுலையின் அனுபவம் என்ன?

இரண்டாம் கட்ட ஈனுலைத் திட்டம் 1985களில் தொடங்கியது. தோரியத்தை அணு எரிபொருளாக ஈனும் வகை ஈனுலைகள் உலகில் யாரும் கட்டியது இல்லை. எனவே, ஆய்வுக்காக பரிசோதனை விரைவு ஈனுலையக் (Fast Breeder Test Reactor) கல்பாக்கத்தில் உருவாகினார்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்தப் பரிசோதனை ஆய்வுலையில் சோதனை செய்து பார்த்துள்ளார்கள். கடந்த ஐம்பது ஆண்டில் பல்வேறு அனுபவங்களை இந்தச் சோதனை ஈனுலை தந்திருக்கிறது. எப்படிப்பட்ட பாதுகாப்பு வடிவமைப்பு ஏற்படத்தியிருக்க வேண்டும்!

இந்தத் தொழில்நுட்பத்தைக் கையாள்வதில் உள்ள சிக்கல்கள் என்ன? எத்தகைய எரிபொருள் பயன்படுத்தினால் கூடுதல் சிறப்பாக இயங்கும் போன்ற பல்வேறு அனுபவங்களையும் படிப்பினைகளையும் அளித்துள்ளது. இதிலிருந்து தற்போது செயல்பட இருக்கும் விரைவு ஈனுலைக்குத் தேவையான எரிபொருளில் ஒரு பகுதியை உருவாகியுள்ளனர். இந்தச் சோதனை ஈனுலை தரும் அனுபவத்தில்தான் தற்போது ‘முதலுறு அதிவேக ஈனுலை’ (Prototype Fast Breeder Reactor - PFBR) உருவாகப்பட்டுள்ளது. 

ஈனுலை காலாவதியான தொழில்நுட்பமா?

ஆம், பல மேலை நாடுகளில் தற்போது ஈனுலைகள் மீது இருந்த மோகம் குறைந்துவருகிறது. ஆனால், யானைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று கூற முடியாது. 

யுரேனிய இருப்பு தீர்ந்துவிடும் என்ற அச்சமும் அணுகுண்டுகளுக்குத் தேவையான புளுடோனியம் உருவாக்கவும்தான் 1960களில் மேலை நாடுகளில் ஈனுலை மீது ஆர்வம் உருவானது. கரும்புச் சக்கையைப் பல முறை பிழிந்துச் சொட்டுவிடாமல் எடுப்பதுபோல எரிபொருளாக பயன்படுத்த முடியாத யுரேனியம்-238த்தை ஈனுலையில் எரிபொருளாக மாற்றுவதன் மூலம் எரிபொருள் தட்டுபாட்டைச் சமாளிக்கலாம் எனக் கருதினார்கள். அந்தக் காலத்தில் மேலை நாடுகள் அணு ஆயுத போட்டியில் ஈடுபட்டுவந்த நிலையில் புளூடோனிய தேவை அவர்களுக்கு இருந்தது. எனவே, ஈனுலை பெரிதும் ஆர்வம் காட்டினர். அணுக்கழிவைக் கையாளவும் ஈனுலைகள் உதவும் என்ற கருத்தும் இந்தப் போக்கிற்கு வலுசேர்த்தது. 

ஆனால், தற்போது அணு ஆயுத கட்டுப்பாடுகள் காரணமாக புதிய அணு ஆயுதங்கள் தயாரிப்பது இல்லை. மேலும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் புதிய யுரேனிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த வகை ஈனுலைகள் லாபகரமானது இல்லை என மேலை நாடுகளில் கைவிட்டுவிட்டனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஈனுலைகள் தோரியத்தை எரிபொருளாக மாற்றி ஆற்றல் தற்சார்புக்கு வழிவகுக்கும் திட்டம். புளுடோனியம் உருவாக்குவது அல்ல.  இரண்டு வகை ஈனுலைகளும் ஒன்றல்ல.  

இன்றைய சூழலில் அணு ஆற்றலை நாம் ஏன் நாட வேண்டும்?

அணுமின் நிலையங்களைக் கட்டுமானம் செய்வதற்குக் கூடுதல் காலம் எடுக்கும்.  தற்போது உள்ள சூழலில் யுரேனியம் சார்ந்த எரிபொருள் அவ்வளவு எளிதாக நமக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. மேலும், அணு உலைகளின் அணுவினை கலன் முதலியவற்றிலும் தட்டுப்பாடு உள்ளது. எனவே, அடுத்த சில பத்தாண்டுகளில் மொத்த ஆற்றல் உற்பத்தியில் அதிகபட்சம் பத்து சதவீதம் மட்டுமே அணு ஆற்றல் தரவல்லது. 

ஆயினும் இந்தியாவின் மூன்று கட்ட திட்டத்தை முன்னெடுத்துச் சென்று தோரிய எரிபொருளைப் பயன்படுத்தும் அணு உலைகளைத் தயார்செய்யும்போதுதான் எதிர்காலத்தில் நமக்கு முழு பயன் கிடைக்கும். மேலும், கார்பன் டைஆக்சைடு வெளி உமிழாத, அதாவது காலநிலை மாற்றத்துக்குத் தகுந்த பசுமை ஆற்றல் மூலங்களில் அணு ஆற்றலும் ஒன்று. எனவே, இந்தத் தொழில்நுட்பத்தை முற்றிலும் ஒதுக்கித் தள்ளுவது அறிவுடமையாக இருக்காது. 

ராட்சஸ அளவில் அணு உலைகளை இந்தியா தயாரிக்கவில்லை. சுமார் 400 - 700 மெகாவாட் அளவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர அணு உலைகளை மட்டுமே நாம் மூன்று அடுக்குத் திட்டத்தில் உருவாக்கிவருகிறோம். இவை ஒப்பீட்டளவில் பாதுகாப்பானது. 

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

பொங்கல் நாள் மாறிய மர்மம்

த.வி.வெங்கடேஸ்வரன் 21 Jan 2023

மகிழ்ச்சியும் கவலையும் 

பொதுவாக ரகசியம் என்று கூறி வெறும் தோளைத் தட்டி தமக்குத்தாமே வாழ்த்து தெரிவிக்கும் போக்கை கைவிட்டு திறந்த மனப்பான்மையோடு ஆய்வாளர்கள் சோதனை ஈனுலை குறித்த அனுபவங்கள் படிப்பினைகளை பொதுவெளியில் அறிவியல் கட்டுரைகள் வாயிலாக பல முறை வெளியிட்டுள்ளனர்.

பத்தண்டுகள் கடந்த பின்னர், இருபது ஆண்டுகள் கடந்த பின்னர், ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னர் எனப் படிப்படியாக கல்பாக்கத்தில் செயல்பட்டுவந்த சோதனை ஈனுலை குறித்த தகவல்களை இந்த ஆய்வுக் கட்டுரைகள் வழியே உலக அணு அறிவியல் அறிஞர்கள் பார்வைக்குக் கிடைக்கிறது. 

இந்தியா, தொடக்கம் முதலே பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (International Atomic Energy Agency) உறுப்பினராக உள்ளது. எனினும், அமெரிக்கா போன்ற அணு ஆயுத நாடுகள் முழுமையாக பன்னாட்டு அணுசக்தி முகமை மேற்பார்வையை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியா, ஈரான் போன்ற நாடுகள் மட்டும் முழுமை மேற்பார்வையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பாரபட்சமான நிபந்தனையை விதித்தன. கொள்கை அடிப்படையில் இந்தப் பாரபட்சமான சர்வதேச அணு மேற்பார்வை அமைப்பை இந்தியா சமீபகாலம் வரை ஏற்றுக்கொள்ளவில்லை. என்றாலும், சில கூறுகளில் வெளிப்படையாக தானாகவே முன்வந்து தரவுகளைப் பொதுவெளியில் அறிவியல் கட்டுரை வடிவில் வெளியிட்டு மறைமுகமாக சர்வதேச மேற்பார்வைக்கு வழிவகுத்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் முதலிலிருந்தே சோதனை உலையின் அனுபவங்களை ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரைகளாக பொதுவெளியில் வெளியிட்டுவருகிறார்கள்.  

இதன் அடிப்படையில் சோதனை ஈனுலையின் அனுபவம் வெறும் தற்பெருமை அல்ல; வெளிப்படைத்தன்மையோடு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வாளர்கள் கவனத்துடன் அனுபவங்களை, சவால்களை, தொழிநுட்பச் சிக்கல்களைச் சீர்தூக்கிப் பார்த்து ஈனுலையின் பாதுகாப்பான செயல்பாட்டை உறுதிபடுத்தியுள்ளர்கள் என்ற ஓரளவு உறுதிப்பாட்டை நமக்கு அளிக்கிறது. வெளிப்படைத்தன்மையை இது உறுதிசெய்கிறது. இது மகிழ்ச்சி அளிக்கிறது. 

எனினும், ஒரு விஷயம் மனதை நெருடி, கவலை அளிக்கிறது என்பதைப் பதிவுசெய்தாக வேண்டும். வியன்னாவில் உள்ள பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (International Atomic Energy Agency) கீழ் 1994ஆம் ஆண்டு இந்தியா உள்பட அணு ஆற்றல் உற்பத்திசெய்யும் எல்லா நாடுகளும் தங்கள் நாட்டில் அரசமைப்புச் சட்டத்தால் பாதுகாக்கப்பட்ட, சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயல்படக்கூடிய அணு ஆற்றல் ஒழுங்காற்று வாரியங்களை உருவாக்க வேண்டும் எனப் பரஸ்பர பன்னாட்டு ஒப்பந்தம் உருவானது. இதன் அடிப்டையில் கனடா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் சுயாதீனமான ஒழுங்காற்று அமைப்புக்களை உருவாகிவிட்டன. இப்படிப்பட்ட சுதந்திரமான சுயாதீனத்தன்மை கொண்ட அமைப்புதான் வெளிபடைத்தன்மையை உறுதிசெய்ய முடியும். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட அமைப்பை இந்திய அரசும் இந்திய அணு ஆற்றல் வாரியமும் உருவாக்கவில்லை என்பதுதான் கவலை அளிக்கிறது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்

ஜோசப் பிரபாகர் 01 Feb 2023

குறிப்பிட்ட நிதி வசூலிப்பைக் குறித்த எந்தவிதத் தணிக்கையையும் மேற்கொள்ள மாட்டோம்; தகவலும் தர மாட்டோம்; எங்கள் மீது கண்மூடித்தனமான பக்தி போன்ற நம்பிக்கையைக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுபோல அணு ஆற்றல், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தரவுக் கொள்கை, உயிரித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் நடந்துகொள்வது தவறு. அது அறிவியலுக்கும் ஜனநாயகத்துக்கும் நாட்டுக்கும் கேடு. அணு ஆற்றல் டிஜிட்டல் தரவு மேலாண்மை உயிரித் தொழில்நுட்பம் போன்றவற்றுக்கு வெளிப்படைத்தன்மையும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நடுநிலை மேற்பார்வை ஒழுங்காற்று வாரியங்களை ஏற்படுத்துவது அவசியம். 

இதில், 123 ஒப்பந்தத்துக்குப் பிறகு (தாராப்பூரில் உள்ள இரண்டு சோதனை உலைகளைத் தவிர) முதல் கட்ட அணு உலைகள் எல்லாம் சர்வதேச ஆணு ஆற்றல் முகமையின் மேலாண்மைக்கு இந்தியா உள்படுத்தியுள்ளது. சோதனை ஈனுலை, மூன்றாம் கட்ட சோதனை காமினி போன்றவற்றையும் சர்வதேச ஆணு ஆற்றல் முகமையின் மேலாண்மை கீழ் கொண்டுவர தயங்குவது புரிந்துகொள்ள முடியும். 

ஆனால், மின் உற்பத்தி இலக்கைக் கொண்டு தொடங்கப்படும் முதலுறு விரைவு ஈனுலையை ஆணு ஆற்றல் முகமையின் மேலாண்மை கீழே கொண்டுவர தயங்குவது ஏன் என்ற கேள்விக்கு முழுமையான பதில் இல்லை. 123 ஒப்பந்தத்துக்குப் பிறகு சர்வதேச மேற்பார்வையை ஏற்றுக்கொண்ட பிறகு மின் உற்பத்திக்கான இந்த உலைகளை அவர்களது ஆய்வுப் பரப்பிற்கு வெளியில் வைப்பது தேவைதானா?

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

குலசேகரபட்டின முக்கியத்துவம் என்ன?
நிலவில் ‘தங்க’ வேட்டை
அறிவியல் எனும் ஜன்னல் திறந்தே இருக்கட்டும்
பொங்கல் நாள் மாறிய மர்மம்
பச்சை வால் நட்சத்திரத்தை வரவேற்போம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
த.வி.வெங்கடேஸ்வரன்

த.வி.வெங்கடேஸ்வரன், அறிவியல் எழுத்தாளர். ‘விஞ்ஞான் பிரச்சார்’ நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி. தொடர்புக்கு: tvv123@gmail.com


3






தேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்?போட்டி தொடரட்டும்சமஸ் உரைகீழத் தஞ்சைதிராவிட இயக்கமும் ஆரிய மாயைகளும்ப்ராஸ்டேட் வீக்கம்அந்தரங்க மிரட்டல்இந்தியா - பங்களாதேஷ்இஞ்சிராபெரியார் - லோகியா சந்திப்பு: முக்கியமான ஓர் ஆவணம்ஜெயலலிதாசேதுராமன்அரசின் வருவாய்கோவிட் - 19மூச்சுத்திணறல்ஆழ்குழாய்கள்தங்கம் சுப்ரமணியம்சுதந்திரா கட்சிசகோதரத்துவம்சார்லி சாப்ளின்தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா?பனியாக்கள்நீதி நிபுணர்தேர்தல்கள்ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம்மனு நீதிமுனைவர் பால.சிவகடாட்சம்வடிவமைப்புகேள்விஅகில இந்தியப் படங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!