கட்டுரை, அரசியல் 10 நிமிட வாசிப்பு

யோகியை வீழ்த்துவாரா அகிலேஷ்?

வ.ரங்காசாரி
11 Jan 2022, 5:00 am
0

மொத்த இந்தியாவின் கவனமும் உத்தர பிரதேசம் நோக்கி இப்போது திரும்புகிறது. எல்லா அரசியல் கட்சிகளுமே கரோனாவைக் காரணம் காட்டி தேர்தலை ஒத்திப்போட வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டன; தேர்தல் ஆணையம் அடுத்த மாதத்தில் தேர்தல் என்று அறிவித்துவிட்டது.

2024 மக்களவைத் தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வருவது முக்கியம் என்பதால், உறுதியோடு முன்னகர்கிறது பாஜக. உத்தர பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்து, 2024 மக்களவைத் தேர்தலிலும் அது வென்றால், மாநிலத்தில் கட்சியே நடத்த முடியாது என்ற எண்ணத்தோடு முழு மூச்சில் பாஜகவை எதிர்கொள்ளும் முனைப்பில் இறங்கியிருக்கின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், அவை ஒன்றுபட்டு நிற்கவில்லை; தனித்தனியே நிற்கின்றன. அப்படியென்றால், என்னவாகும்? இதுவரையிலான தேர்தல்கள், வாக்குவீதம் அடிப்படையில் பார்த்தால், எதிர்க்கட்சிகள் தேறுவது கடினம் என்று எவரும் சொல்லிவிடுவார்கள். ஆனால், சமாஜ்வாதி கட்சியின் இளம் தலைவர் அகிலேஷ் யாதவுக்குக் கூடும் கூட்டம் புதிய நம்பிக்கைகளைக் கொடுக்கிறது. 

பெரிய பிரதேசம்

இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை 22.79 கோடி, அதிக வாக்காளர்கள் 14.52 கோடி, அதிக மக்களவைத் தொகுதிகள் 80, அதிக மாநிலங்களவைத் தொகுதிகள் 32, அதிக சட்டப் பேரவைத் தொகுதிகள் 403 என்று எல்லா வகைகளிலும் பெரிய மாநிலம் உத்தர பிரதேசம். ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, சரண் சிங், சந்திரசேகர், ராஜீவ் காந்தி, விபி சிங் ஆகிய பிரதமர்களைத் தந்த மாநிலம். மத்திய பிரதேசத்தவரான வாஜ்பாயும், குஜராத்தியரான மோடியும்கூட உத்தர பிரதேசத்திலிருந்தே போட்டியிட்டதற்குக் காரணம் தங்களை அந்த மாநிலத்தோடு அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலம் தேர்தலில் கூடுதல் தாக்கத்தை உண்டாக்க முடியும் என்பதுதான்.

உத்தர பிரதேசத்தில் அரசியல் செய்வதும், பரந்து விரிந்த அதன் பரப்புக்கு ஏற்ப எளிதான காரியம் இல்லை. சமூகரீதியாகவும் பல வண்ணங்களையும் சிக்கல்களையும் கொண்ட மாநிலம். இந்தியாவிலேயே அதிகமான பிராமணர்களைக் கொண்ட மாநிலமும் இதுதான் (10% - சுமார் 2 கோடிக்கும் அதிகம்); அதிகமான தலித்துகளைக் கொண்ட மாநிலமும் (21% - சுமார் 4.2 கோடிக்கும் அதிகம்) இதுதான். இந்தியாவிலேயே அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட மாநிலமும் (20% - சுமார் 4 கோடி) இதுதான்; இந்தியாவிலேயே இன்று பெரிய அளவில் இந்துத்துவம் தலை தூக்கி, சட்டமன்றத்தில் 312/403 எனும் அளவுக்கான இடங்களையும் 39.67% வாக்குகளையும் பாஜகவுக்கு அளித்திருக்கும் மாநிலமும் அதுதான். மனிதவளக் குறியீடுகளான கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் என்று அனைத்திலும் பின்தங்கிய மாநிலம். வேலையில்லாத் திண்டாட்டம், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்ட நிலை, சாதி-மதப் பூசல்கள் நிரந்தர விவாதப் பொருள்களாக  நீடிக்கும் மாநிலம்.

தேர்தல் களத்தின் சிக்கல்கள்

கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் பஞ்சமே இல்லாத மாநிலம் உத்தர பிரதேசம். ஒரு வேடிக்கை என்னவென்றால், காங்கிரஸும் பாஜகவும் இங்கே தேசியக் கட்சிகள்; சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜும் இங்கே மாநிலக் கட்சிகள் என்று சொல்லிவிட முடியாது. அவையும் தங்களைத் தேசியக் கட்சிகளாகவே கருதுபவை. ராஷ்டிரீய லோக் தளம் போன்ற சாதிசார் சிறிய கட்சிகளும்கூட தங்களை நாடு தழுவிய கட்சிகளாகவே கருதுபவை. அதாவது, காஷ்மீர் விவகாரத்தில் பாஜகவுக்கும், பகுஜன் சமாஜுக்கும் இடையே இங்கே பெரிதாக எந்த வேறுபாடும் இருக்காது. இந்தியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதில், யோகிக்கும், முலாயமுக்கும் ஒரே நிலைப்பாடுதான். அப்படியென்றால், எங்கே வேறுபாடு இருக்கும்? இந்த இடத்தில்தான் சாதியும், மதமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 

எல்லாக் கட்சிகளும் எல்லோருக்குமான பிரதிநிதிகளாகவே வெளியில் பேசிக்கொண்டாலும், ஒவ்வொரு கட்சியின் வாக்குவங்கியும் அது யார் சார்ந்து பெரிதும் இயங்குகிறது என்பதைச் சொல்லிவிடும். பிராமணர்கள், தாக்கூர்கள் வாக்கு வங்கியைத் தன் உறுதியான பலமாகக் கொண்டது பாஜக. பிற்படுத்தப்பட்டோர் - குறிப்பாக யாதவ்கள் மற்றும் முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் - வாக்கு வங்கியைத் தன் உறுதியான பலமாகக் கொண்டது சமாஜ்வாதி கட்சி. தலித்துகள் - குறிப்பாக ஜாதவ்கள் - வாக்கு வங்கியைத் தன் உறுதியான பலமாகக் கொண்டது பகுஜன் சமாஜ் கட்சி. முஸ்லிம்களில் ஒரு பகுதியினர், ஏனைய சமூகங்களில் உதிரிகள், கொசுறுகள் - வாக்கு வங்கியைத் தன் பலமாகக் கொண்டது காங்கிரஸ்.

வரலாறு சொல்லும் பாடம்

சென்ற 20 ஆண்டுகள் வரலாற்றை எடுத்துக்கொண்டால், இந்த நான்கு கட்சிகளின் போட்டியில் எது 30% வாக்குகளைத் தொடுகிறதோ, அது ஆட்சியைக் கைப்பற்றிவிடுவதே நிதர்சனமாக இருக்கிறது. பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி மூன்றும் குறைந்தது 20% வாக்கு வங்கியைத் தமக்கென்று வைத்திருக்கின்றன. காங்கிரஸ் 11% வாக்கு வங்கியிலிருந்து 6% அளவுக்குக் குறைந்திருக்கிறது.

முந்தைய மூன்று தேர்தல்களை எடுத்துக்கொண்டால், 2007-ல் 30.4% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி 206 தொகுதிகளுடன் ஆட்சி அமைத்தது. 2012-ல் 29.1% வாக்குகளைப் பெற்ற சமாஜ்வாதி கட்சி 224 தொகுதிகளுடன் ஆட்சி அமைத்தது. 2017-ல் 39.67% வாக்குகளைப் பெற்ற பாஜக 312 தொகுதிகளுடன் ஆட்சி அமைத்திருக்கிறது.

2014-ல் அரசியலின் மையத்துக்கு மோடி வந்ததும் உத்தர பிரதேசத்தில் உருவான சூழல், பாஜகவுக்கு வரலாறு காணாத பலத்தை உருவாக்கியிருக்கிறது. 2014-2022 இடைப்பட்ட காலகட்டத்தில், சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் - காங்கிரஸ் மூன்றும் இணைந்து போட்டியிட்ட இடைத்தேர்தல் ஒரு தருணம் மட்டுமே பாஜகவைத் தோற்கடிக்கும் பலத்தை எதிர்க்கட்சிகளுக்குக் கொடுத்தது. அவ்வளவு பலத்தில் அக்கட்சி இருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி இங்கே 51% ஓட்டுகளைப் பெற்றது.

எதிர்க்கட்சிகள் இடையே முரண்கள்

உத்தர பிரதேசத்தில் எதிர்க்கட்சிகள் இடையிலான முரணுக்கு முதல் காரணம் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி. அவரை அணுகுவதும், அனுசரிப்பதும் எவருக்கும் சிரமம் என்பது முழு உத்தர பிரதேசமும் அறிந்த அரசியல் பாடம்; ஜெயலலிதாவுக்கு எந்த விதத்திலும் சளைக்காதவர்.

அடுத்த சிக்கல் காங்கிரஸ். காலாகாலமாகக் குடும்பத் தொகுதியான அமேதி தொகுதியில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியே தோற்கும் அளவுக்குத்தான் கட்சியின் செல்வாக்கு இன்று இங்கே இருக்கிறது. ஆனாலும், தோள்களை உயர்த்தி, முஷ்டி முறுக்குவதில் காங்கிரஸாருக்கு மிடுக்கு குறைவதே இல்லை.

இப்படியான சூழலே எதிர்க்கட்சிகள் தனித்து நிற்கக் காரணம் ஆகியிருக்கிறது. ஆனால், தொந்தரவான பெரும் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதற்குப் பதிலாக நம்பகமும், கைக்கு அடக்கமுமான கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து களம் இறங்கலாம் என்று முடிவெடுத்து கால் பதித்திருக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

மூன்று சவால்கள்

சமாஜ்வாதி கட்சி சமத்துவக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் கட்சி என்று சொல்லிக்கொண்டாலும், தமிழ்நாட்டில் பார்வார்ட் பிளாக் கட்சிக்கு நேர்ந்ததைப் போல, பெருமளவில் யாதவ்கள் ஆதிக்கக் கட்சியாகவே அது பயணித்தது. “அனைத்துத் தரப்பு பிற்படுத்தப்பட்ட மக்களுக்குமான கட்சியும்கூட இல்லை அது; முழு யாதவ் கட்சி” என்று சொல்லியே பாஜக முந்தைய தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சியை வீழ்த்தியது. அகிலேஷ் யாதவ் எதிர்கொண்ட முதல் சவால் இதுதான். கட்சியை யாதவ் வட்டத்துக்கு வெளியே கொண்டுவருவது. அடுத்தது, ‘குண்டர்களின் கட்சி’ என்ற முத்திரையும் அதற்கு இருந்தது. மூன்றாவதாக ‘குடும்பக் கட்சி’ என்ற முத்திரை இருந்தது. மூன்றையுமே மாற்றுவதற்கு முனைந்திருக்கிறார் அகிலேஷ்.

உத்தர பிரதேசத்தின் முதல்வராக 38 வயதிலேயே பதவியேற்று 2012 முதல் 2017 வரையில் ஆண்டவர் அகிலேஷ் என்றாலும், முந்தைய காலகட்டத்தில் அவருடைய தந்தை முலாயம் சிங் யாதவுடைய ஆதிக்கமும், அதன் வழி குடும்ப வாரிசுகளின் ஆதிக்கமும் அதிகம். முலாயம் தம்பி, மனைவி, மகன்கள், மருமகள்கள் என்று ஏராளமான அதிகார மையங்கள். இதேபோல கட்சிக்குள்ளும் சாதியாட்களின் ஆதிக்கம் அதிகம்.

முலாயம் சிங் யாதவை இப்போது முதுமை முடக்கிவிட்ட நிலையில், கட்சி முழுமையாக அகிலேஷ் கைக்கு வந்துவிட்டது. 1989-1991, 1993-95, 2003-07 என்று மும்முறை முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் மகன் சொல்லைத்தான் இப்போது கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

மைசூரில் பொறியியல் பட்டம் பெற்றவரான அகிலேஷ், தென்னிந்திய வளர்ச்சியை நேரில் பார்த்ததால், உத்தர பிரதேசத்திலும் வளர்ச்சியைக் கொண்டுவர இங்குள்ள மாதிரியை எவ்வளவோ சிக்கல்களுக்கு இடையிலும் முந்தைய ஆட்சியில் முனைந்து பார்த்தவர். ஆண்டுக்கு 15 லட்சம் மடிக் கணினிகளை மாணவர்களுக்கு வழங்கினார்; பெண் குழந்தைகளுக்கு சைக்கிள்கள், கல்வி உதவித்தொகைகள் கிடைக்கச் செய்தார்; ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க, ஒருமுறைச் சலுகையாக ரூ.30,000 கல்வி உதவித்தொகை வழங்கினார். படித்துவிட்டு வேலை கிடைக்காத 25 வயது முதல் 40 வயது வரையிலான இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கினார்; ஆங்கில வழிக் கல்விக்கு அரசுப் பள்ளிகளில் ஊக்கம் அளித்தார். 

முன்னதாக அவர் முதல்வராக இருந்தபோது, மாயாவதியைப் போல அல்லாமல் முதல்வரைப் பொதுமக்களும் அதிகாரிகளும் தொழிலதிபர்களும் எளிதாகச் சந்திக்க முடிந்தது. இத்தகைய விஷயங்கள் எல்லாம் கூடித்தான் பாஜகவை எதிர்க்கும் அனைத்துத் தரப்பினரின் முதல் நம்பிக்கையாக இன்று அகிலேஷ் பார்க்கப்படுகிறார்.

பிரியங்கா அல்லது மாயாவதியை நம்பிச் சென்று ஊர் போய் சேர முடியாது என்ற எண்ணம் உள்ளவர்கள் யோகியை வீழ்த்த அகிலேஷால்தான் முடியும் என்று உறுதிபட நம்புகின்றனர். மாநிலத்தில் காங்கிரஸின்  முகங்களில் ஒருவராகப் பார்க்கப்படும் இம்ரான் மசூத், இந்த சமயத்தில் காங்கிரஸிலிருந்து விலகி சமாஜ்வாதியில் சேர்ந்திருக்கும் நிலையில், அவர் உதிர்த்திருக்கும் முத்துகள் அங்குள்ள சூழலை முழுமையாக உணர்த்துவது. "காங்கிரஸ் மீதும், அதன் முதல் குடும்பத்தின் மீதும் கொண்டிக்கும் மதிப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், பாஜவை வெல்லும் வலு சமாஜ்வாதிக்கு மட்டுமே இருக்கிறது. நடப்பது யுத்தம்!"

தேர்தல் வியூகம்

இந்த முறை சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் வெகு கவனம் செலுத்தியிருக்கிறார் அகிலேஷ். பிராமணர்கள், ஜாட்டுகள், நிஷாத்துகள், தலித்துகள், முஸ்லிம்கள், பழங்குடிகள் என்று அனைத்துத் தரப்பினருக்கும் கவனிக்கத்தக்க பிரதிநிதித்துவம் அளித்திருக்கிறார். மகளிருக்கு முன்னைக் காட்டிலும் அதிக தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்.

பாஜகவுக்கு முந்தைய தேர்தலில் பக்க பலமாக இருந்த ஜாட் சமூகத்தினர் வேளாண் சட்டங்கள் அறிமுகத்துக்குப் பின் கடுமையாக அதிருப்திக்கு உள்ளாயினர். அவர்களுக்கு பாஜக மீது பெருமளவு ஆத்திரமும் அதிருப்தியும் இருக்கிறது. இதைத் தனக்கு சாதகமாகத் திருப்ப சரியான முடிவை எடுத்திருக்கிறார் அகிலேஷ். ஜாட் சமூகத்தினரின் கட்சி என்று கருதப்படும் ராஷ்ட்ரீய லோக் தளத்துடன் அவர் அமைத்திருக்கும் கூட்டணி அகிலேஷுக்கு மிகப் பெரிய பக்க பலம். முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண் சிங்கின் பேரன் ஜெயந்த் சௌத்ரி இப்போது அகிலேஷின் நெருக்கமான நண்பராகியிருக்கிறார். 

யோகியின் ஆட்சியில் தாக்கூர்கள் ஆதிக்கம் மிகுந்திருப்பது பிராமணர்களை அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது. அவர்களை ஈர்க்க பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளைப் போல அகிலேஷும் வியூகங்களை வகுத்திருக்கிறார். கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் பூர்வாஞ்சல் பகுதியைச் சேர்ந்த பிராமண சட்டமன்ற, நாடாளுமன்ற - இந்நாள், முன்னாள் - உறுப்பினர்கள் பலர் அகிலேஷ் முன்னணியில் கட்சியில் சேர்ந்திருக்கின்றனர்.

திரளும் கூட்டம்

பொதுமக்களைச் சந்திக்க யாத்திரைகளையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தும் அகிலேஷைக் காண சாலையின் இருபுறங்களிலும் பல்லாயிரக்கணக்கில் தானாகச் சேருகிறது கூட்டம். அகிலேஷுக்குச் சேரும் கூட்டங்கள் ஆளும் பாஜகவைக் கலவரப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

இந்துத்துவ சக்திகளை எதிர்த்தாலும், தீவிர இந்துத்துவ எதிர்ப்பாளராகக் காட்டிக்கொள்ள அகிலேஷ் தயங்குகிறார். யோகி ஆதித்யநாத் அயோத்தி, காசி என்று பேசும்போது - நாங்களும் பக்திமான்கள்தான் - என்று ராகுல் காந்தியைப் போல பேசுகிறார் அகிலேஷ். ஆனால், முஸ்லிம்கள் இதை முரணாக எடுத்துக்கொள்ளவில்லை. முந்தைய தேர்தலைப் போல அல்லாமல், இந்த முறை முஸ்லிம்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் சமாஜ்வாதி கட்சிக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

பெருந்தொற்றுக் காலத்தில் மோடி அரசு எடுத்த திடீர் நடவடிக்கைகளால் வேலையையும் வருமானத்தையும் இழந்த உத்தர பிரதேச தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குக்கூடத் திரும்ப முடியாமல் பரிதவித்தது முதல் அயோத்தியில் ராமர் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ள நிலங்களை எல்லாம் பாஜகவினர் முன்கூட்டியே சல்லீசாக வாங்கிப் போட்டது வரை விலாவரியாகப் பேசுகிறார் அகிலேஷ். கூடவே ஆட்சிக்கு வந்தால், விவசாயத்துக்குக் கட்டணமில்லா மின்சாரம், குடும்பங்களுக்கு மாதத்துக்கு 300 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், 38 லட்சம் பேரின் மின்கட்டண நிலுவைத் தள்ளுபடி, விவசாயக் கடன் தள்ளுபடி போன்ற வாக்குறுதிகளையும் அளிக்கிறார்.

எல்லையில் சீன ஊடுருவல், பாகிஸ்தான் தாக்குதல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் சட்டம் அளித்த பாதுகாப்பை விலக்கிவிட்டு மாநிலத்தைக் கொந்தளிப்பில் தப்பியது, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்று மக்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் பயன்படாத - அதே சமயம் அவர்களைத் தொடர்ந்து அச்சத்திலும் பீதியிலும் தள்ளும் விஷயங்களை - பாஜக பேசுவதைக் காட்டிலும் இம்முறை இந்த விஷயங்கள் எடுபடுவதுபோலவே தெரிகிறது.

ஆனால், தேர்தலில் வெல்லுவது என்பது சமாஜ்வாதி கட்சிக்கு அவ்வளவு எளிதல்ல என்பதையும் எண்ணிக்கைகள் சொல்கின்றன. ஏனென்றால், பாஜக 2019 மக்களவைத் தேர்தலில் வாங்கிய 51.67% ஓட்டுகள், 2017-ல் வாங்கிய 39.7% ஓட்டுகளுடன் ஒப்பிட்டால் 10% ஓட்டுகள் இம்முறை குறைந்தாலும்கூட அக்கட்சி ஆட்சிக்கு எளிதாக வந்துவிட முடியும். அதாவது அகிலேஷ் வாங்கும் ஓட்டுகள் அதிகமாக இருந்தால் மட்டும் போதாது; அவை பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஓட்டுகளைத் தாண்டி பாஜக ஓட்டுகளையும் பிரிக்க வேண்டும். அது நடக்குமா? நடக்கலாம் என்கிறார்கள்! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


4

2

1

1



நீதிபதி!இந்தியக் குழந்தைகளின் இன்றைய நிலைஉத்தரப் பிரதேச வளர்ச்சிநவீனத் தமிழ்க் கவிதைடு டூ லிஸ்ட்ரஷ்யாவின் தாக்குதல்கிகாகுஇதுதான் சட்ட சீர்திருத்தமா?வங்கித் துறைகே.சந்துரு கட்டுரைகள்மருத்துவர் ஆலோசனைஉமிழ்நீர் எச்சரிக்கையான பதில்கள்பண்டிட்டுகள் மீதான வெறியாட்டம்ஆருஷாஉணவு நெருக்கடிஜாதிய சமூகம்கர்நாடகம் எல்லைப் பிரச்சினைசெலவுக் குறைப்புஒலி மாசுகோணங்கள்தில்லி செங்கோட்டைஆமதாபாத்ஆண் பெண் உறவு அராத்து75வது ஆண்டுஅமில வீச்சுதடுப்பாற்றல்ஏர்முனைதர்ம சாஸ்திர நூல்நாட்டுப்பற்று

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!