கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 4 நிமிட வாசிப்பு

மாநிலத் தலைகள்: ரேவந்த் ரெட்டி

வ.ரங்காசாரி
16 Nov 2023, 5:00 am
0

முக்கியத்துவம் வாய்ந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகப் பார்க்கப்படும், தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிஸோரம் ஐந்து மாநிலத் தேர்தல்களின் முக்கிய நாயகர்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது ‘அருஞ்சொல்’. தினம் ஒரு தலைவரைப் பற்றி அடுத்த ஒரு வாரத்துக்கு எழுதுகிறார் மூத்த பத்திரிகையாளர் வ.ரங்காசாரி.

ந்திர மாநிலம் பிரிக்கப்பட்டு, ‘ஆந்திரா - தெலங்கானா’ என்று இரு மாநிலங்கள் உருவாக்கப்பட்டதற்கு அதிக விலை கொடுத்த கட்சி எதுவென்றால், அது காங்கிரஸ்தான்.

ஒருகாலத்தில் கட்சியின் கோட்டைகளில் ஒன்றாகத் திகழ்ந்த பிராந்தியம் இது. நீலம் சஞ்சீவ ரெட்டி, காசு பிரம்மானந்த ரெட்டி, தாமோதரம் சஞ்சீவய்யா இவர்கள் எல்லாம் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்கள்; அகில இந்தியக் கட்சித் தலைமையோடு, பிரதமர் பதவியையும் வகித்தவர் நரசிம்ம ராவ்.

சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி காங்கிரஸ் ஆட்சி நிலவிய மாநிலம் ஆந்திரம். தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கி 1983இல் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு என்.டி.ராமாராவ் வளர்ந்தாலும், இரண்டில் ஒரு பிரதான கட்சியாக 2014 வரை காங்கிரஸ் இருந்தது.

காங்கிரஸின் செல்வாக்கு மிக்க தலைவராகத் திகழ்ந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தலைமையில், 2009இல் அது கடைசியாக ஆட்சியமைத்தபோது மாநிலத்தின் 294 சட்டமன்றத் தொகுதிகளில் 156 இடங்களை வென்றிருந்தது. அதேபோல, 2009 மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் அன்றிருந்த 42 மக்களவைத் தொகுதிகளில் 33 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. வாக்கு வங்கி 39.68%.

ஒரு மரணமும் ஒரு பிளவும் 

ராஜசேகர ரெட்டியின் மறைவுக்குப் பின் படிப்படியாக காங்கிரஸ் செல்வாக்கு இழந்தது. 2013இல் மாநிலப் பிரிவினையானது கட்சிக்கு மேலும் அடியைத் தந்தது.

தேசியத் தலைமையோடு முரண்பட்ட ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தனிக் கட்சியை ஆரம்பித்தபோது, ஆந்திரத்தில் பெரும்பான்மை காங்கிரஸ் கட்சியினர் புதிய கட்சியோடு கலந்தனர். விளைவாக மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுடன் 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 11% ஓட்டுகளுடன் 2 இடங்களுக்குள் முடங்கியது. 2019 மக்களவைத் தேர்தலில் மேலும் சரிந்து 1.31% ஓட்டுகளுடன் பூஜ்ஜிய எல்லைக்குள் முடங்கியது.

புதிய மாநிலமான தெலங்கானாவில், இந்தப் பிரிவினைக்காகப் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் (இப்போது பாரத் ராஷ்டிர சமிதி) சந்திரசேகர ராவ் காங்கிரஸை நிலைகுலைவுக்கு உள்ளாக்கினார். விளைவாக மாநிலச் சட்டமன்றத்தில் உள்ள 119 இடங்களில், 2014இல் 21 இடங்களைப் பெற்ற காங்கிரஸ் மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலுள்ள 17 இடங்களில் 2 இடங்களை மட்டுமே வென்றது. அதேபோல, 2018 சட்டமன்றத் தேர்தலில் 19 இடங்களையும், 2019 மக்களவைத் தேர்தலில் 3 இடங்களையும் மட்டுமே வென்றது. வாக்கு வங்கி 19.9%.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மீண்டும் மீட்சி

இப்போது சூழல் மாறுகிறது. ஆந்திராவில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், தெலங்கானாவில் இந்த முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என்று பல கருத்துக் கணிப்புகள் கூறும் அளவுக்குக் கட்சியின் நிலை மேம்பட்டிருக்கிறது. மக்களிடம் பெரும் செல்வாக்கு மிக்க மூத்த தலைவரான முதல்வர் சந்திரசேகர ராவுடைய சிம்ம சொப்பனம் ஆகியிருக்கிறார் ரேவந்த் ரெட்டி. மாநில காங்கிரஸ் தலைவர்.

ஐம்பத்து நான்கு வயதாகும் இந்த இளம் தலைவர் மகபூப் நகர் மாவட்டத்தில் பிறந்தவர். உஸ்மானியா பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள ஏ.வி.கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். கல்லூரிப் பருவத்தில் ஆர்எஸ்எஸ் சார்ந்த மாணவர் அமைப்பான ஏபிவிபியில் இருந்தவர்.

தெலுங்கு தேசம் கட்சி மூலம்தான் அரசியல் பிரவேசமானார் ரேவந்த் ரெட்டி. ஆந்திர முன்னாள் முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு அவருடைய பேச்சாற்றலால் மிகவும் கவரப்பட்டார். 2009 முதல் 2014 வரையில் ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராகவும் 2014 முதல் 2017 வரையில் தெலங்கானா பேரவை உறுப்பினராகவும் கொடங்கல் தொகுதியில் தொடர்ந்தார். தெலுங்கு தேச கட்சிக் கொறடாகவும் இருந்திருக்கிறார். 2017இல் காங்கிரஸில் இணைந்தார்.

2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு கொடங்கல் தொகுதியில் தோற்றாலும், அடுத்த ஆண்டே மல்காஜ் கிரி மக்களவைத் தொகுதியில் நின்று வென்றார். மக்களவை விவாதங்களிலும் கவனம் ஈர்த்தார். 2018 செப்டம்பரில் மூன்று செயல் தலைவர்களைக் காங்கிரஸ் மேலிடம் தெலங்கானாவுக்கு நியமித்தது. அவர்களில் ரேவந்தும் ஒருவர். அவரது துடிப்பான செயல்பாடு 2021 ஜூனில் கட்சி மாநிலத் தலைவராக அவரை நியமிக்க வழிவகுத்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தெலங்கானாவில் முன்னகரும் காங்கிரஸ்

ஆசிம் அலி 03 Nov 2023

ரேவந்த் ரெட்டியின் அணுகுமுறை

துணிச்சலாக ஆளுங்கட்சியை விளாசுவது ரேவந்த் ரெட்டியின் முக்கியமான அடையாளம். முதல்வர் குடும்பத்தைக் கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கினார். இது தனியடையாளம் என்றால், காங்கிரஸ் கட்சியமைப்பைக் கீழிருந்து பலப்படுத்தியது ஒரு தலைவராக அவரது சிறப்பம்சம்.

காங்கிரஸிலிருந்து விலகிய அல்லது தீவிரமாகச் செயல்படாமல் முடங்கிய முன்னாள் காங்கிரஸ்காரர்களை நேரில் சந்தித்து மீண்டும் காங்கிரஸ் செயல்பாடு நோக்கி இழுத்துவந்தார் ரேவந்த் ரெட்டி. அடுத்து, ஏனைய கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்கள், செயலூக்கம் மிக்கவர்களையும் காங்கிரஸ் நோக்கி ஈர்த்தார். தொடர் கூட்டங்கள், போராட்டங்கள் என்று மக்களிடம் கட்சியை உயிரோட்டமாகக் கொண்டுபோனார்.

சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது விவாதத்துக்குத் தரவுகள், புள்ளிவிவரங்கள், சமீபத்திய பத்திரிகைச் செய்திகளுடன் வந்து பேசுவார் ரேவந்த் ரெட்டி. பொதுக்கூட்ட மேடைகளில் திரும்பத் திரும்ப சந்திரசேகர ராவ் நிறைவேற்ற தவறிய வாக்குறுதிகளைப் பட்டியலிடுவார். சந்திரசேகர ராவ் குடும்பத்தை அந்தக் கால நவாப்புகளின் குடும்பங்களோடு ஒப்பிட்டு அவர்களுடைய பிரமாண்ட வாழ்க்கையையும் ஆட்சியின் ஊழல்களையும் இணைப்பார். இவையெல்லாம் அவர் மீது மக்களின் கவனம் குவிய காரணங்கள் ஆயின.

அனைவருக்குமான இயக்கம் காங்கிரஸ்; ஆயினும், தலித்துகள், பழங்குடிகள், முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சி இது என்று சொல்லும் ரேவந்த் ரெட்டி, ராகுல் வழியில் கட்சியின் அமைப்புகளிலும், தேர்தல்களிலும் இந்தச் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்க வழிவகுத்திருக்கிறார்.

முதல்வர் சந்திரசேகர ராவ் சார்ந்த வெலமா சமூகம் எண்ணிக்கையில் மிகச் சிறுபான்மையானது என்றாலும், நிலவுடைமைச் சமூகமான அது முன்னேறிய வகுப்புகளில் ஒன்றாக இருக்கிறது. தெலங்கானா மக்கள்தொகையில் 52% பிற்படுத்தப்பட்டவர்கள், 17% தலித்துகள், 11% பழங்குடியினர், 12.6% முஸ்லிம்கள். ஆகையால், சமூகப் பிரதிநிதித்துவம் இப்போது பெரும் தாக்கத்தை உண்டாக்கும் விவகாரம் ஆகியிருக்கிறது.

மாநிலத்தின் மக்கள்தொகையில் 51% பேர் பிற்படுத்தப்பட்டவர்கள்; ஆனால், மாநிலத்தின் 119 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். இப்படி ஒவ்வொரு புள்ளிவிவரமாகப் புரட்டுகிறார்கள். “பாஜக வென்றால் தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரே முதல்வர் ஆக்கப்படுவார்” என்று அமித் ஷா அறிவிக்கும் அளவுக்குச் சூடு பிடித்திருக்கிறது.

முதல்வர் சந்திரசேகர ராவுடைய சொந்தத் தொகுதியான கஜ்வாலில் செப்டம்பர் 18இல் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர்களை வரவழைத்து மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்தினார் ரேவந்த் ரெட்டி. கூட்டத்துக்குப் பெயர், ‘தலித் – கிரிஜன ஆத்ம கௌரவ தண்டோரா’. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். கணிசமானோர் தலித்துகள், பழங்குடிகள். இப்படித்தான் ரேவந்த் ரெட்டியை உலகம் திரும்பிப் பார்க்கலானது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்

ப.சிதம்பரம் 16 Oct 2023

சந்திரசேகர ராவும் சளைத்தவர் இல்லை. இந்தச் சமூகங்களைக் கவரும் ஏராளமான திட்டங்களை அவர் அறிவித்தார். தலித் பந்து திட்டமும் தலைநகர் ஹைதராபாத்தில் அம்பேத்கருக்கு அமைக்கப்பட்ட 125 அடி உயரச் சிலையும் இரு உதாரணங்கள். ஆனால், ரேவந்த் ரெட்டி குறிவைத்து அடிக்கிறார். “தலித்துகளுக்கு மூன்று ஏக்கர் நிலம் அறிவித்தீர்களே என்னவாயிற்று? தலித் முதல்வராவார் என்று அறிவித்தீர்களே என்னவாயிற்று?”

எகிறி அடி

சோனியா அல்லது ராகுல் போன்று தயக்கம் எல்லாம் காட்டுவதில்லை. ரேவந்த் ரெட்டியின் இந்த ‘எகிறி அடி அணுகுமுறை’ காங்கிரஸ் தேசிய தலைமையாலும் ரசிக்கப்படுகிறது என்றே சொல்லலாம். முஸ்லிம்கள் ஓட்டு வங்கியை காங்கிரஸிடமிருந்து பிரிக்கும் ஒவைஸியையும், சந்திரசேகர ராவையும்  பிரதமர் மோடி பின்னின்று இயக்குவது போன்ற கட்அவுட்டை சமீபத்தில் ஹைதராபத்தில் காங்கிரஸ் தொங்கவிட்டது பெரும் தேசிய செய்தியானது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி கிடைக்கிறதா, இல்லையா என்பது வேறு அடுத்த விஷயம்; தென்னகத்தில் கர்நாடகம், கேரளம் வரிசையில் காங்கிரஸுக்குத் தொகுதிகளை அள்ளித் தரும் மாநிலங்களில் ஒன்றாக தெலங்கானாவும் இருக்கும் என்ற நம்பிக்கை நாடு முழுவதும் உள்ள காங்கிரஸாரிடம் உருவாகியிருக்கிறது. மாநிலத்துக்கு இன்னொரு தலைவர் கிடைத்திருக்கிறார் என்கிறார்கள் தெலங்கானா மக்கள்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

தெலங்கானாவில் முன்னகரும் காங்கிரஸ்
ஐந்து மாநிலத் தேர்தல் எனும் சவால்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


3






விற்க முடியாத நிலை!பிரபஞ்சம்ப்ளூ சிட்டிபொருளாதார மந்தநிலைஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்முரண்களின் வழக்குதமிழ்நாடு கேடர்முற்போக்கான வரிவிதிப்பு முறைகென்யா: கிழக்கு ஆப்பிரிக்காவின் பெரும் பொருளாதாரம்விளிம்புநிலைதிரைப்படம்பார்ன்ஹப்மாநிலங்கள்கட்டுமானத் துறைகலைத் துறைஇதய நோய்தாழ்வுணர்வு கொண்டதா தமிழ்ச் சமூகம்?வேலாயுதம்வீடுகள்கல்விச்சூழல்ரத்த அணுக்கள்என்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?தீண்டப்படாதவர்கள்சுய மெச்சுதல்நுழைவுத் தேர்வுஇந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம்அரசியல் மாற்றங்கள்தமிழ்ப் பௌத்தம்: ஒரு நவீன சமுதாய இயக்கம்தமிழ்த் திரைப்படம்மாபெரும் பொறுப்பு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!