ரிஷி சுனக் 42 வயதில் பிரிட்டனின் பிரதம மந்திரியாகப் பதவி வகிக்கிறார். அவருடைய வாழ்க்கைக் குறிப்பைப் பார்த்தால் பல அம்சங்கள் வியப்பாக இருக்கின்றன. அரசியலில் நுழைந்து பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராகி ஏழு ஆண்டுகளுக்குள் பிரதமராகிவிட்டார். பிரிட்டனிலேயே எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் இந்தப் பதவியை அடைய எப்படியெல்லாம் கனவு கண்டிருப்பார்கள் என்று ஒரு கணம் சிந்தித்தால் காலம், சில வேளைகளில் சிலர் மீது பொறுப்புகளைத் திணிக்கிறது என்பதில் உண்மை இருப்பதும் தெரிகிறது.
பிரிட்டனில் வாழும் ஆசிய இனத்தவரில், மிகப் பெரிய உயர் பதவிக்கு இளம் வயதிலேயே வந்திருக்கிறார். அங்கு சிறுபான்மையினரான இந்து மதத்தைச் சேர்ந்தவர். தன்னுடைய நம்பிக்கைகளையும் அரசியல் பொதுக் கலாச்சாரத்தையும் பிரித்துக் காண்பவர். பஞ்சாபியர்களைப் போல மணிக்கட்டில் ரட்சைக் கயிறு கட்டியிருக்கிறார். முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றபோது பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்தார். அமைச்சராக இருந்தபோது அரசு இல்லத்து வாயிலில் அகல் விளக்குகளை ஏற்றினார். இந்து வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்கிறார். தான் இந்தியாவைச் சேர்ந்த இந்து என்பதில் வெளிப்படையாக இருக்கிறார். தன்னுடைய மதப் பற்றையும் நம்பிக்கையையும் அவர் சுமையாகக் கருதவில்லை. அதேசமயம், தன் நம்பிக்கைகளைப் போலவே ஏனையோர் நம்பிக்கைகளையும் நாட்டின் பன்மைக் கலாச்சாரத்தையும் மதிக்கும் வகையில் அரசியலில் செயல்படுகிறார்.
ஆசியர்களை அதிலும் குறிப்பாக இந்தியர்களைக் குறைத்து மதிப்பிட்ட ஐரோப்பியர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள், இப்படி நெருக்கடியான நேரத்தில் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவழியைச் சேர்ந்த இளம் தலைவர் வருவார் என்று. கடந்த 210 ஆண்டுகளில் மிக இளம் வயதில் (42) பிரதமராகியிருக்கிறார் சுனக். பிரிட்டனில் மட்டுமல்ல; இந்தியாவிலும் இந்த வயதில் முதலமைச்சராக முடியும் - பிரதமர் பதவியையெல்லாம் நெருங்குவது அவ்வளவு எளிதல்ல.
ரிச்மாண்ட் தொகுதியிலிருந்து 2015இல் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்துக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஷி சுனக். அவருடைய முன்னோர்கள் பிரிட்டிஷ் காலனியாக இந்தியா இருந்தபோது, பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்திலிருந்து கிழக்கு ஆப்பிரிக்காவுக்கு வேலைக்காகச் சென்றவர்கள். பூர்விகமான குஜ்ரன்வாலா இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது. எனவேதான் அவர்களுடைய முன்னோர் வாழ்ந்த ஊர், வீடு ஆகியவற்றை ஊடகர்கள் அடையாளம் காண மிகவும் தவித்தனர். குஜ்ரன்வாலாவிலும் அந்தக் குடும்பத்தை நினைவில் வைத்திருப்பவர்கள் யாருமில்லை. இருந்தாலும் இங்கிருந்து போனவர் பிரிட்டனுக்கே பிரதமராகிவிட்டார் என்று பாகிஸ்தானியர்களிலும் பலர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிறந்தது சவுத்தாம்டன்
பிரிட்டனின் சவுத்தாம்டன் பகுதியில் 1980 மே 12 பிறந்தார் ரிஷி. அவருடைய தந்தை யஷ்வீர் மருத்துவர் அம்மா உஷா, மருந்துக்கடை அதிபர். சுனக்கின் மூதாதையர் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிட்டனில் 1960இல் தங்களுடைய குடும்பங்களுடன் குடியேறினர். அதன் மூலம் பிரிட்டிஷ் குடிகளாகினர். பிரிட்டனுமே குடியேறிகளால் வளம் காணும் நாடு என்று கூறிவிடலாம். தான் காலனியாக பிடித்திருந்து நாடுகளின் இயற்கை வளங்களுடன் மனித வளங்களையும் தேர்ந்தெடுத்து சேகரித்துக் கொண்டது பிரிட்டன்.
ரிஷி சுனக் வின்செஸ்டர் கல்லூரியிலும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் லிங்கன் கல்லூரியிலும் மெய்யியல், அரசியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களைப் படித்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் புல்பிரைட் கல்வி உதவித் தொகை பெற்று தொழில்-வர்த்தக மேலாண்மைப் படிப்பைப் படித்தார். ஸ்டான்ஃபோர்டில் உடன் படித்த அக்ஷதாவைக் காதலித்து 2009இல் மணந்தார். அக்ஷதா கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஏற்படுத்திய நாராயண மூர்த்தி – சுதா தம்பதியரின் மகள்தான் அக்ஷதா. தந்தை வழி சொத்து – வருமானம் காரணமாக பிரிட்டனின் பெரும் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார் அக்ஷதா. ரிஷி – அக்ஷதா தம்பதியருக்கு இரண்டு மகள்கள்.
சுனக்கின் முந்தைய வேலை
உலகின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான ‘கோல்ட்மேன் சாக்’ நிறுவனத்தின் உயர் பதவியில் 2001 முதல் 2004 வரையில் இருந்தார் சுனக். பல்வேறு நிறுவனங்களின் நிதி நிரவாகம் குறித்து ஆராய்ந்து தக்க வகையில் மதிப்பிடுவதும் ஆலோசனை தெரிவிப்பதும் அந்த நிறுவனத்தின் வேலை. பிறகு ‘குழந்தைகளுக்கான நிதி முதலீட்டு நிர்வாக நிறுவனம்’ ஒன்றில் 2006 முதல் 2010 வரையில பணிபுரிந்தார். அதையடுத்து ‘தெலிமி பார்ட்னர்ஸ்’ என்ற நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருந்தார். பிறகு மாமனாருடைய ‘கட்டமரான் வென்சர்ஸ்’ நிறுவனத்தில் இயக்குநரானார்.
2015, 2017, 2019 ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்கிறார். போரிஸ் ஜான்சன் அமைச்சரவையில் நிதி அமைச்சராகத் திறம்படப் பணியாற்றினார். போரிஸ் ஜான்சனின் போக்கைக் கண்டித்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
மனைவியால் இடர்
ரிஷி மீதும் அரசியல் விமர்சகர்கள் கடும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். அவருடைய மனைவி சமீப காலம் வரையில் இந்தியக் குடியுரிமையை விடவும் இல்லை, பிரிட்டன் குடியுரிமையைப் பெறவுமில்லை. பிரிட்டனில் வருமான வரி அதிகம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து இந்தியராக இருக்கிறார் என்று அரசியல் போட்டியாளர்கள் குற்றஞ்சாட்டினர். அதற்குப் பிறகு பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெற்ற அக்ஷிதா, பிரிட்டிஷ் அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி பெருந்தொகையாக இருந்தபோதிலும் செலுத்தியிருக்கிறார்.
சுனக் தன்னுடைய அமைச்சரவையில் சேர்த்துள்ள சுவெர்லா பிரேவர்மன் குறித்து மாற்றுக்கட்சியினர் கடுமையான அதிருப்தி தெரிவித்துள்ளனர். அவர் இதற்கு முன்னால் அமைச்சராக இருந்தபோது பேசியதும் செயல்பட்டதும் சரியில்லாததால் பிரிட்டனுக்கு தருமசங்கடம் ஏற்பட்டது என்பது எதிர்ப்போரின் வாதம். பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு நிகழ்த்திய முதல் நாடாளுமன்ற உரையில் இதைச் சுட்டிக்காட்டிய சுனக், அவர் தனது தவறுகளைத் திருத்திக்கொள்வதாகச் சொன்னார்.
பணக்காரர்களுக்குப் பெரும் வரிச் சலுகை அளித்த முந்தைய நிதியமைச்சரின் செயலால் லிஸ் டிரஸ் பிரதமர் பதவியிலிருந்து 45 நாள்களுக்கெல்லாம் விலக நேர்ந்து அவருக்குப் பதிலாக சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். நிதி நிர்வாகம் நன்கு தெரியும் என்றாலும் பொய்யான வாக்குறுதிகளையோ நம்பிக்கைகளையோ சுனக் அளிக்கவில்லை. உலக அளவில் நிலவும் சிக்கலான பொருளாதாரச் சரிவால் பிரிட்டனும் பாதிக்கப்பட்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவிலிருந்து மீட்க கசப்பான நடவடிக்கைகளை எடுத்துத்தான் தீர வேண்டும் என்று கூறிவிட்டார். இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக உறவுக்கு முன்னுரிமை தருவேன் என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசும்போது கூறியிருக்கிறார்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைத் தீவிரமாக ஆதரித்தவரான சுனக், ஐரோப்பிய நாடுகளின் நட்பையும் ஆதரவையும் பெறுவதில் வெற்றி பெற்றால் சரித்திரப் புகழ் பெறுவார். பிரிட்டனிலேயே எல்லா சமூகத்தினரிடையேயும் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் நிகழ்ந்த சில சம்பவங்களை அடுத்து பிரிட்டனில் இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்தன. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது.
முன்னாள் பிரதமர்களின் கழுகுப் பார்வை
சுனக்குக்குப் புதிய அரசியல் சவாலும் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆகிய சொந்தக்கட்சியைச் சேர்ந்த மூன்று முன்னாள் பிரதமர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார். மூவருமே பிரதமர் பதவிக்கு மீண்டும் தீவிரமாக முயன்றால் பிரதான எதிர்க்கட்சியான லேபர் (தொழிலாளர்) கட்சியைவிட, சொந்தக் கட்சியினரின் கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்குமே அவர் அதிகம் முகம் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.
பிரிட்டனின் பெரும் பணக்காரர்களில் 222வது இடத்தில் ரிஷி சுனக் இருக்கிறார். 730 மில்லியன் பவுன்கள் அவருடைய சொத்து மதிப்பு. இந்திய ரூபாயில் சுமார் 6848,82,35,730 கோடி! 2020 பிப்ரவரி முதல் 2022 ஜூலை வரையில் நிதியமைச்சராக இருந்தார். அப்போது கோவிட்-19 பெருந்தொற்றால் பிரிட்டனின் பொருளாதார நிலைமை வெகுவாக பாதிக்காமல், சிறப்பாக நிர்வகித்தார். ஊழியர்களை பணி நீக்கம் செய்யாத நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை தரப்படும் என்று அறிவித்து வேலையிழப்பைத் தடுத்தார். விருந்தோம்பல் துறை மீதான மதிப்புக் கூட்டல் வரி விகிதத்தைக் குறைத்தார். உணவு, மென்பானங்கள் ஆகியவற்றின் விலையில் 50% மானியமாக அளித்தார். ஒரு நபருக்கு அது 10 பவுனுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வரம்பு நிர்ணயித்தார். இதனால் விருந்தோம்பல் துறை வீழ்ச்சி அடையாமல் மீண்டது என்றாலும் கோவிட்-19 பரவியது என்று விமர்சகர்கள் குற்றஞ்சாட்டினர்.
பெருந்தொற்றைத் தடுக்க மீண்டும் பொது முடக்கம் அவசியம் என்று பலர் சொன்னபோது அப்படியொரு முடிவெடுத்தால் நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகிவிடுவேன் என்று எச்சரித்தார். 2020-21 நிதியாண்டில் 35,500 கோடி பவுனாகப் பற்றாக்குறை அதிகரித்தது. நிலைமையைச் சமாளிக்க நிறுவனங்கள் மீதான (கார்ப்பரேட்) வரியை 19%-லிருந்து 25% ஆக உயர்த்தினார். இவையெல்லாம் ரிஷி உறுதியான நிதி நிர்வாகச் செயல்பாடுகளுக்கு உதாரணங்கள். கன்சர்வேடிவ் கட்சியில் வேண்டுமானால் அவரை மீண்டும் பிரதமராக்கியிருக்கலாம், நாட்டின் அனைத்து வாக்காளர்களுமே அவரை மீண்டும் பிரதமராக்குவார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

1

1





பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
A Hindu,. His wife is also a Hindu and too, not a citizen of that country. Yet, the Christian majority country chooses him to be the most powerful authority in the government-The Prime Minister. The epitome of of a democratic tradition!
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.