கட்டுரை, அரசியல், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களைக் கொஞ்சியது போதும்

வ.ரங்காசாரி
25 May 2022, 5:00 am
30

அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் தொடர்பாக வெளியான பாலசுப்ரமணியன் முத்துசாமியின் கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த விஷயத்தைத் தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்று வாசகர்களிடமிருந்து வரும் கடிதங்களைத் தொடர்ந்து, இரு தரப்புகளிலிருந்தும் பேசும் சில கட்டுரைகளை வெளியிட எண்ணுகிறோம். விவாதத்தையும், உரையாடலையும் வளர்த்தெடுக்கும் வகையில் வெளியிடப்படும் இந்தக் கட்டுரைகளுக்கு எதிர்வினைக் கட்டுரைகளையும், எதிர்வினைகளுக்கு மறுவினைக் கட்டுரைகளையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம். தொடர்ந்து உரையாடுவோம்!

 

ந்தியாவிலேயே அரசு ஊழியர்கள் சிலாக்கியமாக உள்ள மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இந்தியாவில் அதிகமான அரசு ஊழியர்கள் கொண்ட மாநிலங்களில் ஒன்று என்பதோடு, தன்னுடைய வருவாயில் அதிகம் அரசு ஊழியர்களுக்குச் செலவிடும் மாநிலங்களில் ஒன்றாகவும் தமிழ்நாடு இருக்கிறது. 2022-23ஆம் ஆண்டு தமிழக அரசின் வருவாய் ரூ.2,31,000 கோடி என்றால், இதில் அரசு ஊழியர்களுக்கான ஊதியச் செலவுகள் மட்டும் 46.5% ஆகும். கிட்டத்தட்ட வருவாயில் பாதி அரசு ஊழியர்களின் ஊதியத்துக்காகச் செலவாகிறது. ஆனாலும், அரசு ஊழியர்கள் ஏராளமான மனக்குறையோடு இருக்கிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.

புதிதாக வந்த திமுக அரசு தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்பதைப் பலர் வெளிப்படையாகவே சொல்கிறார்கள். குறிப்பாக, பழைய ஓய்வூதிய முறையைக் கொண்டுவரவில்லை என்பது அவர்களை மிகுந்த சங்கடத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அரசு ஊழியர்களின் கோபம் சரிதான்! ஏனென்றால், அரசு ஊழியர்களை அளவுக்கு அதிகமாகக் கொஞ்சி, அவர்களுக்கு ஊதிய விகிதத்தில் பெரும் கவனிப்பு நல்கும் கலாச்சாரத்தைத் திமுகதான் தொடக்கிவைத்தது. தமிழக அரசு ஊழியர்களில் கணிசமானவர்கள் திமுக, அதிமுக, விசிக, பாமக, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளில் இருந்தாலும், திமுகவுக்கே அவர்களில் பெரும்பான்மையினர் ஆதரவாளர்கள் என்ற எண்ணம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இருந்தது. கருணாநிதி அளவுக்கு இல்லை என்றாலும், அவரை அடியொற்றி எம்ஜிஆர், ஜெயலலிதா, பன்னீர் செல்வம் – பழனிசாமி இரட்டையரும்கூட அதே வழியில் பயணித்தனர். இப்போது ஸ்டாலினின் முறை.

தேர்தலுக்கு முன்னதாக, ‘பழைய ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்படும்’ என்று வாக்குறுதி தந்துவிட்டார். அது எவ்வளவு செலவு பிடிக்கும் என்று கணக்கு போட்டபோதுதான் அரசின் நிதிநிலை உதைக்க, நிதியமைச்சரை விட்டு இது சாத்தியமில்லை என்று வெளியே சொல்ல வைத்திருக்கிறார். அரசு ஊழியர்கள் குமுறுகிறார்கள்.

அரசு தன்னுடைய ஊழியர்களை உரிய முறைப்படி நடத்த வேண்டும் என்பதிலோ, நிறுவனங்கள் ஊழியர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக இந்த நடத்தை இருக்க வேண்டும் என்பதிலோ எனக்கு மாற்று அபிப்ராயம் இல்லை. ஆனால், வேலை பார்க்கும் நிறுவனத்தின் வரவு செலவுச் சூழலுடன் எந்த ஒரு நிறுவனத்தின் ஊழியரும் தன்னை ஒப்பிட்டுக்கொள்ள வேண்டும். அதேபோல, சமூகத்தில் தன்னுடைய வேலைக்கான சந்தை மதிப்பு என்ன; ஏனையோரின் சூழலுடன் ஒப்பிட தன்னுடைய சூழல் எப்படி இருக்கிறது என்றும் கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்.

அநேகமாக பெரும்பான்மை அரசு ஊழியர்களின் வீடுகளில் வீடு பெருக்க, பத்துப்பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க, சமைக்க ஆட்கள் உண்டு. அவர்களுக்கெல்லாம் இந்த அரசு ஊழியர்கள் தரும் சம்பளம் எவ்வளவு? அரசு ஊழியர்கள் வாங்கும் மாதச் சம்பளத்தோடு ஒப்பிட இப்படி அவர்களிடம் வேலை பார்ப்பவர்களுக்கு அவர்கள் வழங்கும் சம்பளமானது அது எத்தனை சதவீதம் வரும்? அரசின் ஆண்டு வருமானத்தில் தங்களுடைய ஊதியத்துக்கு மட்டும் 46.5% செலவிட்டும் போதவில்லை என்று கேட்கும் எந்த அரசு ஊழியரேனும் தன் வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தன் சம்பளத்தில் 46.5% கொடுக்கிறாரே? அப்படிக் கொடுத்தால், எவரேனும் குடும்பம் நடத்த முடியுமா?

உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தைக் கவனியுங்கள்

என்னுடைய தந்தையார் இப்போது 90 வயதை நெருங்குகிறார். அவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்தான். சுமார் 40 ஆண்டு காலம் பணியில் இருந்தார் என்றால், சுமார் 30 ஆண்டுகளாக ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருக்கிறார். அவருடைய சில நண்பர்களை எனக்குத் தெரியும். சுமார் 25 ஆண்டு காலம் வேலை செய்துவிட்டு, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியம் வாங்கிக்கொண்டிருப்பவர்களும் அவர்களில் அடக்கம். என்னுடைய தந்தையாரின் ஓய்வூதியம் மாதம் ரூ.41,000. ஒண்டிக்கட்டை. எத்தனை இளைஞர்களுக்கு, குடும்பஸ்தர்களுக்கு இந்த ஊதியம் இன்றைக்கு சாத்தியம் என்று நினைக்கிறீர்கள்?

என் தந்தைக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது அவசியம். அரசு ஊழியராக மட்டும் அல்லாமல், எந்த ஒரு மூத்த குடிநபருக்கும் இப்படி ஓய்வூதியம் வழங்குவது அரசின் கடமை என்றே எண்ணுகிறேன். ஆனால், அந்தத் தொகை எவ்வளவு என்பதும், அதைத் தரும் அரசின் நிலைமை என்ன என்பதும், சுற்றியுள்ளோருடைய நிலைமை என்ன என்பதும் முக்கியம் இல்லையா?

2021 கணக்கின்படி இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 13.8 கோடி. இவர்களில் எத்தனை பேருக்கு ஓய்வூதியம் செல்கிறது? அரசு இரக்கப்பட்டு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் கொடுக்கிறதே, அது முதலில் எத்தனை பேருக்குச் செல்கிறது? ஐந்தில் ஒருவருக்கேனும் செல்லுமா? அப்படியே எல்லோருக்கும் செல்வதாகக் கொண்டாலும், ரூ.1,000 மாதம் பூராவும் செலவுக்குப் போதுமா?  அவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள் இல்லை என்பதால் அரசு ஊழியர்களுக்குள்ளதைப் போல உணவு, உடை, இருப்பிடம், மருந்து-மாத்திரைச் செலவுகள் அவர்களுக்கு இருக்காதா?

நான் நேரில் பார்த்திருக்கிறேன், இந்த ஆயிரம் ரூபாய்க்கு அனுமதி வழங்கக்கூட லஞ்சம் கேட்கும் / நடையாய் நடக்கவிடும் அரசு ஊழியர்களை! சமூகத்தில் கீழே இருப்பவர்களைச் சுட்டிக்காட்டி தங்களுடைய உரிமைக்காகப் பேசுவோரை நான் கொச்சைப்படுத்த விழையவில்லை. நான் சொல்ல வருவது என்னவென்றால், 13.8 கோடி பேருக்கும் மாதம் குறைந்தபட்சம் ரூ.5,000 ஓய்வூதியமாக வழங்கப்படுவது என்பது ஒரு நியாயமான செயல்பாடு, இதை ஓர் அரசு செய்ய வேண்டும் என்று முனைகிறது என்று வைத்துக்கொள்வோம். அது எங்கிருந்து அதைச் செய்ய முடியும்? தன்னிடம் பணம் இருந்தால்தானே சாத்தியம்! வெறும் 16 லட்சம் அரசு ஊழியர்களின் சம்பளமே மாநில அரசின் பாதி பணத்தை எடுத்துக்கொண்டால், மிச்சமுள்ளவர்களுக்கான நலத்திட்டங்கள் எதைக் கொண்டு சாத்தியம் ஆகும்? சமூகத்தில் ஒரு சின்ன தரப்புக்கு மலை அளவும் பெரும் தரப்புக்கு கடுகு அளவும் வழங்குவது எப்படி சமூக நீதியாக இருக்க முடியும்? இதை எப்படி ஓர் அரசு செய்ய முடியும்? இது ஒரு தனிநபருக்குப் புரியாமல்போகலாம். ஊழியர் சங்கங்களுக்குப் புரிய வேண்டும், இல்லையா?

ஊழியர் சங்கங்களின் இழிநிலை

ஊழியர் சங்கங்கள்தான் இத்தகைய விஷயத்தைத் தன்னுடைய ஊழியர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். ஆனால், அநீதிக்கு வெட்கமின்றி குரல் கொடுக்கின்றன அரசு ஊழியர் சங்கங்கள்.

அரசுக்குத் தொடர் செலவுகள், தொடரா செலவுகள் என்று இரு ரகச் செலவுகள் உண்டு. (முன்னர் திட்டச் செலவுகள், திட்டமில்லாச் செலவுகள் என்று அதிலும் இரண்டு இருந்தன. மோடி அரசு பதவிக்கு வந்து அதை ஒழித்துவிட்டதால் எல்லா தொகையுமே ஒரே இனமாகிவிட்டது). “நமக்கு ஊதியம், ஓய்வூதியம், படிகள் கொடுத்தது போக எஞ்சியதுதான் எட்டு கோடி மக்களுக்கு சாலை அமைக்க, குடிநீர் வழங்க, மின்சாரம் தர, அடித்தளக் கட்டமைப்புகளை ஏற்படுத்த, கல்வி - சுகாதார - போக்குவரத்து வசதிகளை அளிக்க, தொழில் பேட்டைகளை அமைக்க, விவசாயத்துக்குச் செலவிட, தானியச் சேமிப்புக் கிடங்குகளைக் கட்ட இப்படி எல்லாவற்றுக்கும். எட்டு கோடி மக்களுடைய இந்தத் தேவைகள் முக்கியமா, 16 லட்சம் (ஒரு குடும்பத்துக்கு 6 பேர் என்றுகூட வைத்துக்கொள்வோம்) 96 லட்சம் அதாவது கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேருடைய தேவைகள் முக்கியமா?” என்று சங்க நிர்வாகியாவது இதுவரை கேள்வி கேட்டது உண்டா? 

அரசு ஊழியர்களின் சங்கங்கள் கேரள தலைச்சுமை கூலித் தொழிலாளர்களின் சங்கங்கள்போல இருக்கின்றனவே தவிர, நியாய சுபாவம் உள்ளவையாக இருப்பதில்லை. இன்னும் நோக்குக்கூலி கேட்காததுதான் குறைச்சல்!

தனியார் நிறுவன ஊழியர்களின் நிலையையும் அவர்களுடைய சம்பளங்களையும் ஒப்பிட்டு இன்று பல நிர்வாகிகள் பேசுவதைப் பார்க்க முடிகிறது. ஒரு பேச்சுக்குத் தனியார் நிறுவன ஊழியர்கள் அதிகம் சம்பாதிக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அவர்களுடைய பணி நேரத்தை மட்டும் அரசு ஊழியர்களின் பணி நேரத்தோடு ஒப்பிடலாமா?

வாரம் ஒரு நாள் விடுமுறை என்று 52 வாரங்கள். அதுபோக, அலுவலகமே மூடப்படும் அரசு விடுமுறை நாள்கள் என்று ஆண்டுக்கு 8 அல்லது 9 நாள்கள். மொத்தம் 60 நாள்கள், அதாவது இரண்டு மாதங்களுக்குரிய ஊதியம் விடுமுறை நாள்களில் கிடைக்கிறது. இது 16.66%. இதுபோக, பத்து நாள்கள் வேலை செய்தால் ஒரு நாள் ஈட்டிய விடுப்பு. அதுபோக, வேலைக்குச் சேர்ந்து இரண்டாண்டுகளுக்குப் பிறகு மருத்துவ விடுப்பு. அதுபோக, தற்செயல் விடுப்பு ஆண்டுக்கு 15 நாள்கள். அதுவும் போக, வேலைக்கு வர முடியாமல் வேறு வேலை வீட்டிலிருந்தால் மாதத்தில் 2 அல்லது 3 நாள்கள் ‘பர்மிஷன்’ என்று சொல்லி தாமதமாக வரலாம். தலை வலி வந்தாலோ வருவதுபோல இருந்தாலோ ‘அரை நாள் லீவு’ சலுகையும் அரசு ஊழியத்தில் உண்டு. ‘இந்த விடுமுறைகளையெல்லாம் ஏன் கணக்கில் சேர்க்கிறாய், தனியார் துறையிலும்கூட நல்ல வேலைகளில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் உண்டுதானே?’ என்று அரசு ஊழியர்கள் ரோஷம் பொங்கக் கேட்கலாம். ஆம், அரிதாக – சிறு எண்ணிக்கையிலானவர்களுக்கு – உண்டு. ஆனாலும், தனியார் துறையுடன் ஒப்பிடும்போது அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்கள், அரசு கல்லூரிப் பேராசிரியர்கள் ஊதியம் பல மடங்கு அதிகம். பொறுப்புகளும் பணிச் சுமைகளும் குறைவு என்பது வெளிப்படை அல்லவா?

அரசுக்கு சில யோசனைகள்

அரசு துணிந்து சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றே நான் சொல்வேன். நிச்சயமாக இவையெல்லாம் வெகுமக்களிடம் நல்ல வரவேற்பையும் பெறும்.

  • அமைப்புரீதியாக திரட்டப்படாத மக்களுக்கு மாதத்துக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் போதும் என்று முடிவு செய்யும் நீங்கள், அரசு ஊழியர்களுக்கு அதை குறைந்தபட்சம் ரூ.15,000 - அதிகபட்சம் ரூ.25,000 என்று டி, சி, பி, ஏ பிரிவினருக்கு நிர்ணயிக்கக் கூடாது? ‘ஒரே ரேங்க் – ஒரே பென்ஷன்’ என்ற அறிவீனத் திட்டத்தால் மத்திய அரசு அவதிப்படுவதைப் போல நீங்களும் பிற்காலத்தில் அப்படியொரு கோரிக்கையை ஏற்கத்தான் இப்போதைய பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கை இட்டுச் செல்லும். ‘முடியாது!’ என்று உறுதியாக நில்லுங்கள்!
  • தனியார் நிறுவனங்களைப் போல, அரசு ஊழியர்களின் பணி – பதவி – ஊதிய உயர்வில் வேலைத்திறனுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். திறமைக்குறைவு, ஊழல், வேலையில் ஆர்வமின்மை போன்றவை இருந்தால் வேலையைவிட்டு நீக்குங்கள். இது மக்கள் பணம்.
  • அரசு அலுவலகங்களில் அரசு ஊழியர்களுக்கு அவரவர் சட்டையில் அவர்களுடைய பெயர், பதவிப் பெயர் அட்டைகளைக் கட்டாயம் பொருத்தச் சொல்லுங்கள். ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் ரயில் நிலையத்தில் வைத்திருப்பதைப்போல புகார் - ஆலோசனைப் பதிவேடு வையுங்கள். அதில் உள்ள குறிப்புகளை அதிகாரி அன்றாடம் படித்து மேல் நடவடிக்கை எடுக்கச் செய்யுங்கள். அரசு ஊழியர்களையும் இடைத் தரகர்களையும் பொதுமக்கள் அடையாளம் காண இது உதவும்.
  • ரயில்வே, மின்சாரத் துறை, பத்திரிகை அலுவலகங்களைப் போல் மாநில அரசு அலுவலகங்களை வாரத்தில் ஏழு நாள்களும் திறந்து வையுங்கள். ஊழியர்களுக்கான விடுமுறையைச் சுழற்சிமுறையில் அறிவியுங்கள். பொதுமக்கள் தங்கள் வார விடுமுறையில், தங்களுடைய கோரிக்கைகளுக்காக அரசு அலுவலகங்களை நாட இது உதவியாக இருக்கும்.
  • அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு அரசு பொறியியல், மருத்துவ, சட்டக் கல்லூரிகளில் படிப்பதற்குக் கட்டணம் இல்லாமல் அனுமதியுங்கள். அரசு மருத்துவமனைகளில் பண வரம்பில்லாமல் எல்லா சிகிச்சைகளுக்கும் அனுமதியுங்கள். அரசு ஊழியர்களுக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் அவர்களுக்கு மாதத் தேவைக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைச் சாமான்களை நல்ல தரத்தில் குறைந்த விலையில் வழங்குங்கள். அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் வராதபடிக்கு அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுங்கள். ஆனால், வேலையைத் திறம்பட வாங்குவதை உத்தரவாதப்படுத்துங்கள். அரசு ஊழியர்கள் தனித்த பிரிவினர் அல்ல; சமூகத்துக்கு அவர்கள் முன்னுதாரண ஊழியர்களாக இருக்கட்டும்!

 

தொடர்புடைய கட்டுரை: கட்டுக்குள் வரட்டும் அரசு ஊழியர்களுக்கான செலவு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com


7

2





5

பின்னூட்டம் (30)

Login / Create an account to add a comment / reply.

SURENDAR   3 years ago

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் செலவல்ல அரசின் திட்ட செலவினத்தின் ஒரு பகுதியே, 30 ஆண்டுகள் அரசு பணியாற்றிய பணியாளருக்கு ஓய்வூதியம் வழங்குவது அரசின் கடமை அது சுமை அல்ல ! அரசின் மொத்த வருவாய் செலவினத்தில்(ரூ.2,84,188 கோடி) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் முறையே 25.2%(ரூ.71,615 கோடி) மற்றும் 12.7%(ரூ.36091 கோடி), ஆக கூடுதல் ரூ.107706 கோடி (38%) ஆகும்.(தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டிற்கான வரவு செலவின திட்ட மதிப்பீடுகளின் படி) மேலும், மேற்படி வழங்கப்படும் ஊதியமானது செலவல்ல அரசின் திட்டத்தின் ஒரு பகுதியே. அச்செலவினம் எவ்வாறு மக்களை சென்றடைகிறது என்பதற்கான சிறு விளக்கத்தினை கீழ்கண்டவாறு தெரிவிக்க விழைகிறேன். 1.காவல்துறைக்கு வழங்கப்படும் ஊதியம்- இரவு பகல் பாராமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற மக்கள் நிம்மதியாக வாழ வகைசெய்யும் அரசின் திட்டத்திற்கான செலவீனம் 2.மருத்துவ துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்- இரவு பகல் பாராமல் மக்கள் உடல் நலத்தை பேணி காக்க அரசு வகுத்த திட்டத்தின் செலவீனம் 3.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் - இரவு பகல் பாராமல் மழை, புயல், வெள்ளம் வறட்சி காலங்களில் அரசின் நிவாரணங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் திட்டத்தின் செலவீனம் 4.போக்குவரத்து பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்: இரவு பகல் பாராமல் மக்களை அவர்கள் நினைக்கும் இடங்களுக்கு துரிதமாக கொண்டு சேர்க்க அரசு வகுத்த திட்டத்தின் செலவீனம் 5.மின்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்: மக்கள் நிம்மதியான வாழ்கையை வாழ்ந்திட இரவு பகல் பாராமல், மழை புயல் வெள்ளம் என எதையும் பாராமல் மின்சாரம் மக்களை சென்றடைய அரசு வகுத்த திட்டத்தின் செலவீனம் 6.ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்: மக்களின் அழிக்க முடியாத ஒரே சொத்தாகிய கல்வி அறிவினை சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களும் பெற்று வளமுடன் வாழ்ந்திட வகுக்கப்பட்ட அரசின் திட்டத்தின் செலவீனம் ஆகும் இவ்வாறாக அரசின் ஓவ்வொரு திட்டங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியினை பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்களே மேற்கொண்டு வருகின்றனர். 1960-70களில் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்றவாறு பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன அதன் பின்னர் மக்களின் வசதிக்காக புதிதாக மாவட்டங்கள் மற்றும் வட்டங்கள் உருவாக்கப்பட்டன. எனினும், அலுவலர்கள் நிலையை தவிர கீழ்நிலையில் உள்ள பணியாளர்களுக்கான பணியிடங்கள் பெரிய அளவில் உருவாக்கப்படவில்லை மாறாக பணி நிரவல் மூலம் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்பட்டன. 1960-70-களில் இருந்த மக்கள் தொகையும் 2022 இருக்கும் மக்கள் தொகையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். சுமார் 8 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில், மக்களுக்கு சேவை செய்ய 9 இலட்சம் அரசு பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது மொத்தமுள்ள 15 இலட்சம் பணியிடங்களில் 9 இலட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது 6 இலட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. காலியாக இருக்கும் 6 இலட்சம் பணியிடங்களுக்கும் சேர்த்தே மேற்படி 9 இலட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசு பணியாளர்கள் பெறும் ஊதியம் தொடர்பாக பல்வேறு பொய் பிரச்சாரங்கள் பரப்பப்படுகின்றன. அது தொடர்பாக கீழே காண்போம். எதிர் வரும் ஜூலை 2022ல் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் சுமார் 7500 காலிப்பணியிடங்களுக்கு நடத்தப்படவிருக்கும் குரூப் IV தேர்வுக்கு சுமார் 22 இலட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது செய்திகள் மூலம் அனைவரும் அறிந்ததே. மேற்படி, 22 இலட்சம் தேர்வர்களில் வெறும் 7500 தேர்வர்களுக்கு மட்டுமே குரூப் IV நிலையில் பணி வழங்கப்படும். இம்மாபெரும் தேர்வில்(போரில்) தேர்ச்சி பெற்ற பணியிடம் பெற்ற பணியாளர் பெறப்போகும் மாத ஊதியம் எவ்வளவு தெரியுமா அனைத்து படிகளும் உட்பட ரூ.27000/- மட்டுமே.(தேர்வெழுதப்போகும் 22 இலட்சம் பேரில் 7500 பேருக்கு) ஏறதாள 30 வருடங்கள் பணியிலிருக்கும் குரூப் IV நிலை பணியாளரின் ஊதியமே தற்போது ரூ.50,000ஐ நெருங்கி இருக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.(30 வருடங்களாக ஒரு மளிகை கடையில் வேலை பார்க்கும் பணியாளரின் தற்போதைய மாத ஊதியத்தை விட இது குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன்). அரசு பணியாளர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்(CPS) தொடர்பாகவும் அதை ஏன் எதிர்க்கின்றனர் என்றும் கீழே காண்போம் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டமானது(CPS) 01.04.2003 முதல் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி, அரசு பணியாளரின் ஊதியத்தில்(அடிப்படை ஊதியம் +அகவிலைப்படி) இருந்து 10%மும், அதற்கு இணையாக அரசு 10% சதவீதமும் செலுத்தும். மேற்படி சேரும் தொகைக்கு ஆண்டுக்கொருமுறை வட்டி கணக்கீடு செய்து அரசு செலுத்தும்(தற்போதுள்ள வட்டி 7.1%). உதாரணமாக, மேற்படி திட்டத்தில் கடந்த 2010ம் ஆண்டு பணியில் சேர்ந்த குரூப் IV நிலை பணியாளரது கணக்கில் தற்போது(2022), அவர் பணி ஒய்வு பெறும்போது ஏறத்தாழ ரூ.9 இலட்சம் இருக்கிறது. அவர் பணி ஒய்வுபெறும்போது மேற்படி தொகையினை ஒரே தவணையாக அரசு அளிக்கும். மாதந்திர ஓய்வூதியம் வழங்குதல் தொடர்பாக விதிகள் ஏதும் வகுக்கப்படவில்லை. மேலும், ஒரு தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் கூட, அந்த நிறுவனத்தை விட்டு விலகும் போது இந்திய அரசின் விதிகளின்படி பணிக்கொடை வழங்கப்படும், ஆனால் தற்போது 10-15 ஆண்டுகள் மாநில அரசு பணியில் இருந்து ஒய்வுபெறும் பணியாளர்களுக்கு பணிக்கொடை வழங்குவது தொடர்பாக மேற்படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் வழி வகை செய்யப்படவில்லை. மேற்படி, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில்(CPS) பணியில் சேர்ந்து பணி ஒய்வு பெற்ற ஏறத்தாள 25000 பணியாளர்களுக்கு ஒய்வூதியமோ பணிக்கொடையோ வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை. அரசு மட்டுமே எல்லா கால சூழல்களிலும்(மழை, புயல், வறட்சி, பேரிடர் முதலிய காலங்களில்) இரவு பகல் பாராது உழைக்கும் ஒரு எந்திரமாகும், அந்த எந்திரத்தின் அங்கமே அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் செலவீனம் அல்ல அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் திட்ட செலவினமே ஆகும். அதே போல் அவர்கள் 30 வருடங்களுக்கு மேல் அரசின் எந்திரமாக மக்கள் பணியாற்றி வயது முதிர்வின் காரணமாக ஓய்வுபெறும்போது யாரிடமும் கையேந்தாமல் சுய மரியாதையுடன் வாழ வழங்கப்படும் உரிமை தொகையே ஓய்வூதியம், அரசிற்கு அது சுமை அல்ல, மாறாக அரசின் கடமையாக இருக்க வேண்டும்.

Reply 17 0

Login / Create an account to add a comment / reply.

Venkataraman Sivasubramaniam   3 years ago

சாதாரண பணிகளுக்கே சிலர் கையூட்டு கேட்கும் நிலையில்இருப்பதால்தான் அரசு ஊழியர்கள் மேல்மக்களுக்கு மதிப்பு இருப்பதில்லை. ஓய்வூதியத்திற்கு வருமான வரி கட்டியபடி, வாங்கிய “ சொத்துக்களை” மறைத்து, மேலும் நண்பர்கள், மூலம் முன்னுரிமை பெற்று,வீட்டுவரி குறைப்பு, சுலபமாக பட்டா பெறுதல் போன்ற காரியங்களில் ஈடுபடுதல் கெட்ட பெயரைத்தருகின்றன .

Reply 14 0

Login / Create an account to add a comment / reply.

செல்வகுமார்    3 years ago

எல்லாம் சரிங்கய்யா அரசு ஊழியர் சம்பளத்தி பிடித்தம் செய்த cps pension தொகை எங்கே போனது. ஒரு தனியார் நிறுவன ஊழியர் தான் நினைத்தால் PF கணக்கிலிருந்து கடன் பெற்று கொள்ள முடியும் ஆனால் 2003 ல் பணியில் சேர்ந்த ஒரு அரசு ஊழியர் தனது cps கணக்கிலிருந்து கடன் பெற முடியுமா? Cps pension திட்டத்திற்கான விதிகள் எதுவும் இதுவரை உருவாக்க படவில்லை, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்க படும் cps பங்களிப்பு ஓய்வூதிய தொகை 32000 கோடி ரூபாய் பொது கணக்கில் சேர்க்க பட்டு திட்ட செலவினங்களுக்காக செலவிட பட்டுள்ளது இதனால் தான் அரசு ஊழியர்களுக்கு தனது சொந்த cps கணக்கில் கடன் பெற முடியவில்லை மேலும் cps திட்டத்தில் ஓய்வு பேரும் போது பென்ஷன் கிடையாது, death cum retirement gratuity யும் கிடையாது. பெற்று தரமுடியுமா?

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 years ago

2003 வரை old பென்ஷன் திட்டம், பிறகு வேலைக்கு சேர்ந்தவருக்கு pension இல்லை.. இது என்ன நியாயம்... பென்ஷன் இல்லாத நிலையில் வயது முதிர்ந்த நிலையில் யாரை சார்ந்து இருக்க வேண்டும்.... எல்லாருக்குமே ops/cps கொண்டு வாருங்கள்.

Reply 2 2

Login / Create an account to add a comment / reply.

Lena Sankar   3 years ago

ஒரு சில அரசு பனியை தவிர பெரும்பாலான அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்று ஈன பிழைப்பு பிழைக்கிறார்கள். லஞ்சம் இல்லாமல் ஒரு காரியமும் நடப்பதில்லை. இதுல ஊதியம் போதவில்லை என்று ஒப்பாரி வேறு? சம்பளம் போதவில்லைஎன்றால் ராஜினாமா செய்துவிட்டு போகவேண்டியதுதானே? பேருக்கு அரசு வேலை ஆனால் உருப்படியாக ஒரு வேலையையும் செய்வதில்லை லஞ்சம் வாங்குவதை தவிர.

Reply 4 4

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

மன்னிக்கவும் அவ்வவ்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது ஒட்டு மொத்தமாகச் சேறுவாரி இறைத்ததை எல்லாம் திரட்டி கட்டுரையாக வந்துள்ளது. ஓர் உதாரணம் சமீபத்தில் ஒன்றிய அரசு இரயில்வே பயணத்தில் மூதத குடிமக்களுக்கு அளித்த சலுகையை ஒரேயடியாக நிறுத்தி கோடிக் கணக்கில் மிச்சம் பிடித்ததாக ஊரை ஏமாற்றுவதைச் சொல்லலாம். மூத்த குடிமக்களில் அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, சாதாரணக் குடிமக்களும் இருக்கிறார்கள். அருஞ்சொல்லாக இக்கட்டுரையை அபத்தம் என்று துணிந்து சொல்லலாம்.

Reply 8 1

Login / Create an account to add a comment / reply.

Maharajan P   3 years ago

அரசு வேலைகளுக்கு நல்ல ஊதிய நிர்ணயம் இருந்தாலே நல்ல திறமையான இளைஞர்கள்/ இளம்பெண்கள் அரசு வேலை நோக்கி ஈர்க்கப்படும். சமஸ் சார் ஊர் ஊராகச் சென்று அரசு போட்டித்தேர்வுகளில் நம் தமிழக இளைஞர்களை அதிக அளவில் பங்கெடுக்க ஊக்குவிப்பவர். ஆனால் தன் இதழில் இவ்வாறு அரசு ஊழியர்கள் ஊதியத்தை பற்றிய தவறான கதையாடலை உருவாக்குவது வருத்தமளிக்கிறது.

Reply 3 1

Login / Create an account to add a comment / reply.

Thuraivan NG   3 years ago

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர சலுகைகள், ஓய்வூதிய பிரச்சினைகள் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். மூத்த குடிமக்களுக்கான பல சலுகைகள் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக மருத்து அலவன்ஸ்சுகள் நிறுத்தி வைத்துள்ளது மனிதாபமற்ற செயலாகும். வா. ரங்காச்சாரி வாழ்த்துகள்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Neethi   3 years ago

சம்பாதிக்க முடியாத தன் இயலாமையை கட்டுரையாளர் காட்டுவதாக தெரிகிறது அரசு செலவினத்தை 1 ரூபாயில் குறிப்பிடப்படும்போது அரசு ஊழியர் ஊதியத்திற்கு 20% ஆகிறது என குறிப்பிடுகிறார் நிதியமைச்சர் . ஓய்வூதியத்திற்கு அமைப்பு சாரா தொழிலாளர்கள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவற்றுக்கு 10% செலவு செய்கிறது என குறிப்பிடுகிறார் நிதியமைச்சர். இதில் அரசு ஊழியர் ஊதியம் 46.5 % எங்கிருந்து வந்தது இவர் மன நோய் உடையவரோ ?!

Reply 9 2

Login / Create an account to add a comment / reply.

Ravichandran   3 years ago

தனக்கு தெரிந்த ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் வசதி வாய்ப்போடு இருக்கிறார் என்பதற்காக ஒடுக்கப்பட்ட சமூகமே வசதி வாய்ப்பாக இருப்பதாக கூறுவதைப் போ் உள்ளது இக்கட்டுரை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவத்துறை பணியாளர்களின் பணி அளப்பறியது. அரசு ஊழியர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டு ஊதியம் பெறவில்லை. துறை வாரியாக கணக்கெடுத்தால் எத்தனை காலிப்பணியிடங்கள் என்று தெரியும். அத்தனை காலிப்பணியிடத்தின் பணியினையும் தற்போது பணியில் இருப்பவர்களே பார்க்க வேண்டும். இன்னும் ஓர் அமைச்சுப்பணியாளரை மட்டும் கொண்டு இயங்கும் அரசு மருத்துவமனைகள் உள்ளன. அதில் அந்த அமைச்சுப் பணியாளரே 'அனைத்து' பணிகளையும் செய்ய வேண்டும். ஆசிரியர்களுக்கு தரும் ஊதியம் விரையமல்ல. சமூகத்திற்கான முதலீடு. அரசு பணியாளர்களிடம் குறைகள் இருக்கின்றன. அதை களைவதற்கு அலோசனை கூறலாம். அதை விடுத்து ஒட்டு மொத்த அரசு ஊழியர்களையும் மக்கள் விரோதிகளாக சித்தரிக்க வேண்டாம்.

Reply 22 2

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

அரசு ஊழியர்களின் வருமானத்தை பற்றிப்பேச நமக்கு உரிமையில்லை என்பது சரிதான். ஆனால் உண்மையான பிரச்சினை அரசு ஊழியர்களின் முதலாளியான அரசாங்கத்தின் பொருளாதார நிலைமைதான்.

Reply 4 0

V NEELAKANDAN   3 years ago

பொருளாதார நிலைமை அல்ல, பொருளாதாரத்தைக் கையாளும் அரசின் திறமைதான் பிரச்சனை

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Ramya   3 years ago

அரசு ஊழியர்கள் எப்போதெல்லாம் ஏதாவது பணப்பலன் அடைகிறார்களோ அப்போதெல்லாம் அந்தச்சுமை சாமான்ய மக்கள் மீது தான் திணிக்கப்படுகிறது என்பது கடந்த காலங்களில் நம்முடைய அனுபவம் இது நாங்க போராடிப் பெற்ற உரிமை என்கிறார்கள்.. அதைப்போல எங்கள் மீது விடிய காத்திருக்கும் அந்த சுமைக்கு எதிரான போராட்டமாக நாங்கள் தற்காத்து கொள்கிறோம்.அது எங்கள் உரிமை இது எப்படி அரசு ஊழியர்கள் மீதான எரிச்சலாகும் ஓரளவு பாதுகாப்பான ஊதியம் பெறும் சில லட்சம் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு கோடிக்கணக்கான வேலை பாதுகாப்பில்லாத அடித்தட்டு மக்கள் தலையில் விலைவாசி உயர்வாக இடிபோல் இறங்குகிறதே அல்லது இறக்குகிறதே இந்த அரசு அதைப்பற்றி எந்த சமூக அக்கறையும் இல்லாது, கேள்வி கேட்பவர்களை பாய்ந்து பிராண்டுவதையே வாடிக்கையாக வைத்திருப்பது எந்த வகை நியாயத்தில் சேர்த்தியோ... நாங்கள் கேட்பது கூட உங்களை நோக்கி அல்ல. அரசு ஊழியர்களை மட்டுமே சமூகமாக காட்டும் அரசியல் கட்சிகளையும் இந்த அரசையும் தான்..

Reply 9 0

Login / Create an account to add a comment / reply.

HAMEEDIMRANS S   3 years ago

மிகவும் தவறான கருத்து அரசு ஊழியர்களுக்கான சம்பளம் என்பது வருவாய் அடிப்படையில் லாப நஷ்ட கணக்கில் ஆனதல்ல மாறாக அரசு ஊழியர் சம்பளம் முதலீடு சார்ந்த ஒன்று என்பதுதான் உண்மை இதை நிதி அமைச்சராகவும் இருந்து தலைசிறந்த வரவு-செலவு அறிக்கை தயாரிக்க முன்னாள் முதலமைச்சர் திரு மு கருணாநிதி அவர்களும் ஒப்புக் கொண்ட வார்த்தை தனது வாழ்நாளில் 58-வது வயதில் நிறைவடைந்தது முதல் அரசு ஊழியரின் பதவிக் காலம் நிறைவடைகிறது தற்போது அது 60 ஆக உயர்த்தப்பட்டு விட்டது சுமார் 20 முதல் 30 ஆண்டுகள் வரை தன்னுடைய உழைப்பை வழங்கி உடலும் மனதும் தளர்ந்துபோன காலத்தில் ஓய்வு ஊதியம் ஏதுமின்றி நடுத்தெருவில் விடப்படுவது எந்த வகையில் நியாயமானது இத்தனைக்கும் அரசு ஊழியரின் சம்பளத்தில் ஜனவரி-பிப்ரவரி தவிர அனைத்து வரிகளையும் முறையாகவும் சரியாகவும் அரசுக்கு செலுத்தப்படுகிறது அரசு ஊழியர்களுக்கு எதிராக பேசக்கூடிய அல்லது இது போன்ற நியாயமற்ற கட்டுரைகளை எழுதக்கூடிய எத்தனை பேர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை சரியாக செலுத்துகின்றனர் அடுத்ததாக அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குகின்றனர் என்பதாக குற்றம்சாட்டப்படுகிறது முற்றிலும் தவறான வார்த்தை அல்ல ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது அதேசமயம் லஞ்சம் கொடுக்காமல் நேரடியாக நேர்மையாக தங்களுக்குரிய தேவைகளை அரசு அலுவலகத்தில் நிறைவேற்றக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கை சதவீதம் இரட்டை இலக்கத்தை கூட நெருங்காது. அரசு அலுவலகங்களில் உரிய நடைமுறைகளின் படி சான்றுகளை வழங்க காலதாமதம் ஏற்படுவது தவிர்க்கமுடியாது காரணம் பல்வேறு பதிவேடுகளை சரிபார்த்த பின்னரே சான்றிதழ் வழங்க முடியும் ஆனால் விண்ணப்பித்த அன்றே உடனடியாக சான்றிதழ் தேவை என்பதற்காக லஞ்சம் கொடுத்தாவது காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்றைக்கு பெரும்பாலானோருக்கு இருக்கிறது உதாரணத்திற்கு பள்ளிக்கல்வித்துறையில் மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்கு படித்து முடித்ததும் இருந்து ஓராண்டு காலம் அவகாசம் வழங்கப்படுகிறது அதன் பின்னர் சான்றிதழ் பெற வேண்டுமானால் அரசுக்கு உரிய தேடுதல் கட்டணத்தை செலுத்திய பிறகு சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பல ஆண்டுகள் கழித்து மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காக வரக்கூடிய முன்னாள் மாணவர்கள் பலரும் சிறிதும் பொறுமை இன்றி உடனடியாக சான்றிதழ் தேவை அதற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று என்று கூறி தலைமையாசிரியரை கடுப்பேற்ற கூடிய முன்னாள் மாணவர்கள் எத்தனை லட்சம் பேர் என்பது கட்டுரையாளருக்கு தெரியுமா வருமானச்சான்று சாதிச்சான்று பெறுவதற்காக விண்ணப்பித்து விட்டு உரிய விசாரணை முடியும் வரை காத்திருக்காமல் கிராம நிர்வாக அலுவலர் வருவாய் ஆய்வாளர் போன்றோரிடம் மல்லுக்கட்டும் பொதுமக்கள் பற்றி கட்டுரையாளர் அறிந்து உள்ளாரா எந்த ஒரு நிறுவனத்திலும் தன்னுடைய உழைப்பை செலுத்திய ஊழியருக்கு அவரது ஓய்வு காலத்தில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டியது அந்த நிறுவனத்தின் கடமை ஓய்வூதியம் என்பது பிச்சை அல்ல உரிமை பனிக்காலத்தில் தன்னுடைய உழைப்பை வழங்கிவிட்டு பெறக்கூடிய ஊதியத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வழிகளையும் செலுத்திய அரசு ஊழியரை நீங்கள் ஒன்றும் கொஞ்ச வேண்டாம் இத்தகைய கட்டுரைகள் மூலம் இழிவு படுத்தாமல் இருந்தால் போதும்

Reply 33 11

Lena Sankar   3 years ago

வருமான சான்று சாதி சான்றுக்கு விண்ணப்பித்து விட்டு காத்திருந்தால் விசாரணையும் செய்யாமல் காரமே சொல்லாமல் விண்ணப்பம் நிராகரிக்கபடுகிறது. அவர்களை நேரில் சென்று தொங்கவேடியுள்ளது மீண்டும் விண்ணப்பித்துவிட்டு வந்து பாருங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களின் நோக்கம் லஞ்சம் மட்டுமே எதாவது பேசினால் என்கிட்டையே சட்டம் பேசுறியா என்று அலைய விடுகிறார்கள். சாமானிய தொழிலாளி எவ்வளவு நாள் அவர்களின் பின்னால் அலைவது ? அனால் நீங்கள் சொல்வீர்கள் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தால் லஞ்சம் கேட்க்கமாட்டார்கள் என்று அனால் உண்மை அப்படியில்லை லஞ்சம் இல்லாமல் ஒரு அணுவும் அசைவதில்லை...

Reply 7 0

Login / Create an account to add a comment / reply.

Periasamy   3 years ago

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகம் என்று சொன்னால் அவர்கள் அரசியல்வாதிகளை கை காட்டுகிறார்கள்...உண்மையில் இந்த இரண்டு தரப்பும் தான் பொதுமக்களை மொட்டை அடித்து கொண்டு இருக்கின்றன...

Reply 7 1

Login / Create an account to add a comment / reply.

MANIKANDAN KARMEGAM   3 years ago

மிகவும் கேவலமான சிந்தனை. கொரனா போன்ற பேரிடர் காலங்களில் யார் நின்று வேலை பார்த்தது. தனியார் மருத்துவமனைகள் பல மூடிவிட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள் தான் செயல்பட்டது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளும் வேலை பார்க்கும் பல துறைகள் உள்ளன. ஐந்து வருடம் எம். எல். ஏ, எம். பி. ஆனாவர்கள் ஓய்வூதியம் பெறுகிறார்கள். அதைக் கேள்வி கேட்க துப்பு இல்லையா?

Reply 31 4

Login / Create an account to add a comment / reply.

Banu   3 years ago

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய ஆலோசனைகள் ஆசிரியரிடம் இல்லை. ஆசிரியரிடம் மட்டுமல்ல, அரசு ஊழியர்களின் ஊதியத்தைக் கொண்டு தமிழக பொருளாதார நிலையை திறனாய்வு செய்யும் ஒவ்வொரு தனிநபரிடமும் இல்லை. மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு போன்றோர் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த அன்னிய முதலீடுகளை ஈர்த்துக்கொண்டிருக்க, எழுதுகோல் உள்ளது என்பதற்காக உலகளாவிய பிரச்சனைக்கு "அரசு ஊழியர்கள் ஊதியம்" என்ற கருத்தை கண்களுக்குக் கிட்ட வைத்துக்கொண்டு தீர்வாக சொல்லாதீர்கள். சற்று எட்ட நோக்கி தமிழ்நாட்டின் வளம், படிப்பறிவு வீதம், மக்கள் தொகை, தனி நபர் வருமானம் என அனைத்தையும் கருத்தில் கொள்ளுங்கள். உங்களிடம் ஆலோசனை இல்லையெனில் அமைதி காக்கவும். அனைத்திற்கும் மேலாக "தனியார் துறையுடன் ஒப்பிடும்போது அரசு ஊழியர்கள், அரசுப் பள்ளிக்கூட ஆசிரியர்கள், அரசு கல்லூரிப் பேராசிரியர்கள் ஊதியம் பல மடங்கு அதிகம். பொறுப்புகளும் பணிச் சுமைகளும் குறைவு என்பது வெளிப்படை அல்லவா?" என்ற வாக்கியங்களை சீர்தூக்கி பாருங்கள். எங்கள் ஊரில் இயங்கும் PSG கல்லூரி,TNAU கல்லூரி போன்றவைகளில் admission க்கு ஏன் போட்டா போட்டி போடுகிறீர்கள்? இவை அரசு ஊதியம் பெறும் பேராசிரியர்கள் கொண்டு தான் இயங்குகின்றன. அரசு பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் உங்களைப்போன்ற உயர்ந்த குடியினருக்கு ஏசும் பொருளாக இருக்கலாம், ஆனால் இன்னும் சமூகத்தில் பின்தங்கியுள்ள அந்த 20% மக்களுக்கு அரசு பள்ளிகளே ஏணிப்படிகளாக உள்ளன. பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்டால் உங்கள் ஆதங்கத்தை தீர்வாக கூறாதீர்கள்.

Reply 33 6

Login / Create an account to add a comment / reply.

S.SELVARAJ   3 years ago

அரசு ஊழியர்களை யாரும் கெஞ்சவும் வேண்டாம். கொஞ்சவும் வேண்டாம். இந்தியன் படம் போல ஒரு அதீத கற்பனையோடு எழுதப்பட்ட கட்டுரை. படத்தை பார்க்கும் போது வரும் அதீத உணர்ச்சியே இந்த கட்டுரையை படிப்பவர்களுக்கும் வரும். அரசு ஊழியர்களுக்கு தருகிற ஊதியம் குறித்து கருத்திற்கும் கட்டுரையின் முடிவில் அவர் சொல்லியுள்ள ஆலோசனைகளுக்கும் நிறைய முரண் உள்ளது. முடிவில் சொன்ன அனைத்து விஷயங்களுக்காகவும்தான் அவர்களுடைய செலவுகள் அமைந்துள்ளன. அரசு ஊழியர்களின் ஊதியம் வெறும் 96 இலட்சம் பேரோடு நிற்கவில்லை. அவர்களது ஊதியம் மீண்டும் சந்தைக்கே வருகிறது. சிறு வணிகர்கள் துவங்கி பெரு வணிகர்கள் வரை அவர்களது ஊதியப்பணம் உருண்டோடுகிறது. உருண்டோடும் பணம் பலருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கிறது. பலருக்கான வணிகத்தை உறுதி செய்கிறது. வனிகத்தினால் வரியின் மூலமாக அரசுக்கு வருமானம் வருகிறது. வீட்டு வேலையாள் ஒரு மணி நேரம் பார்க்கும் வேலையும், நாள் முழுவதும் வேலை பார்க்கும் ஒரு ஊழியரின் வேலையும் ஒன்றல்ல. சமீப காலங்களில் அரசு ஊழியர்களின் பணிச்சுமையையும், அவர்கள் மீதான அழுத்தத்தையும் குறித்து கட்டுரையாளருக்கு ஒரு மீள் பார்வை தேவைப்படுகிறது. வார விடுமுறையையும், தற்செயல் விடுப்பையும் கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்குவது சரியான பார்வை அல்ல. உழைப்புச் சுரண்டலுக்கு அடிகோலும் கருத்து. அரசு உழியர்கள் எல்லாம் மோசமனவர்களும் இல்லை. தனியார் ஊழியர்கள் எல்லாம் திறமையானவர்களும் இல்லை. இரண்டு துறைகளிலும் எல்லாம் கலந்தே உள்ளது. அரசு ஊழியர்களின் பணிக்கலாச்சாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் ஊழியர்களுக்கும் பங்கு உண்டு. இலஞ்சம் வாங்கக் கூடாது என்பதில் நாம் பிடிவாதம் பிடிக்கிறோமோ அதே அளவுக்கு கொடுக்க மாட்டேன் என ஒவ்வொருவரும் பிடிவாதமாக இருக்க வேண்டும்

Reply 31 3

Login / Create an account to add a comment / reply.

Subramanian   3 years ago

ஐயா போக்குவரத்து துறை ஊழியர்கள் ஓய்வு பெற்று ஆறு ஆண்டுகள் கழிந்த பின்னரும் கூட இன்னும் நியாயமான பணிப் பலன்கள் கூட கிடைக்கப்பெறாமல் இருக்கிறார்கள். இதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரவும்.

Reply 8 0

Login / Create an account to add a comment / reply.

MURUGAN LOGANATHAN   3 years ago

மிக சிறப்பான கட்டுரை. நாட்டை பற்றியும் மக்களை பற்றியும் நுணுக்கமான தரவுகளை அறிந்து வைத்து இருக்கும் அரசு ஊழியர்கள் தான் இது போன்ற ஆக்கபூர்வமான விவாதங்களுக்கு முன் வரவேண்டும். அதேபோல் செய்யும் வேலைக்கும் வாங்கும் ஊதியத்துக்குமான இடைவெளியை திறந்த மனதோடு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.ஒருவேளை அரசு ஊழியர் ஒவ்வொருவரும் தாமாக முன் வந்து ரூபாய் 5000/- குறைத்துக்கொள்வதாக கொண்டால் அரசுக்கு மாதம் ரூபாய் 800 கோடி மிச்சம்,ஆண்டுக்கு 9600 கோடி மிச்சம்.இதன் மூலம் அரசின் நிதி பற்றாக்குறையும் குறையும் அல்லது அரசு நல திட்டங்களுக்கு பயன்படும் அல்லவா.....!

Reply 4 6

Login / Create an account to add a comment / reply.

Theetharappan   3 years ago

உண்மையும் கூட சாதாரண மனிதர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் அரசு ஊழியர்கள்.

Reply 6 2

Login / Create an account to add a comment / reply.

Raja   3 years ago

மிக சிறந்த பதிவு.  மக்கள் அனைவரும் இந்த கட்டுரையை அனுப்ப வேண்டும், படிக்க செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு பழைய ஓய்வு ஊதியம் எல்லாம் என்ன போராடினாலும் இனி வர போவதில்லை. மாதம் 41,000, 70000, ஒரு லட்சம் என பென்ஷனை அள்ளியள்ளி கொடுத்து கொண்டு இருந்தால் நாடு திவால் ஆகி விடும். அரசு ஊழியர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ள வேண்டும். தனியார் நிறுவனங்களில் வெகு சிலருக்கு ஊதியம் அதிகம் தான், அதற்கு ஏற்றாற் போல் பணிச்சுமையும் கடுமையாக இருக்கும்.  எந்த நேரமும் பணியில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருந்து கொண்டே இருக்கும். இது எதுவுமே அரசு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அல்ல. வசதியான லீவு நடைமுறைகள், அமெரிக்கா ஐரோப்பா நாடுகளை விட அதிகமான விடுமுறை நாட்கள், ஓய்வு பெறும் வரை கிட்டத்தட்ட உறுதியான பணி பாதுகாப்பு என்று எழுதி கொண்டே போகலாம். அது தவிர விலைவாசிக்கேற்ப படி உயர்வு, சமூக அந்தஸ்து, ஒன்றாம் தேதி அன்று கையில் உறுதியாக வரும் பணவளம், சகல வசதிகளுடன் வாழ்வதை உறுதி செய்யும் சம்பளமே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் இந்த அளவு வசதிகளை அளித்து இருப்பதே பெரும் பெரும் சாதனை என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் அரசு ஊழியர்களே! நன்றி.  

Reply 9 6

Login / Create an account to add a comment / reply.

M.karthikeyan   3 years ago

கட்டுரையின் தலைப்பே போதும், கட்டுரை ஆசிரியரின் வயிற்றெரிச்சலை உணர.... இந்த கட்டுரையும் புள்ளிவிவரங்களை சாராமல் உணர்ச்சி தூண்டலாக எழுதப்பட்ட மேம்போக்கான கட்டுரையே... ஆனால் இதில் கூறப்பட்டுள்ள யோசனைகள் வரவேற்கத்தக்கது....

Reply 10 10

Raja   3 years ago

அவர் நேர்மையாக எழுதி உள்ளார். இந்த கட்டுரையை எழுதியவரின் தந்தையே மாதம் பென்ஷன் 41,000 ரூபாய் வாங்குகிறார். அவர் வயிற்றெரிச்சல் பட வேண்டிய அவசியம் இல்லை. சொல்ல போனால் தன் குடும்பத்திற்கு மாதம் 41,000 ரூபாய் சுளையாக வருகிறதே என்று அவர் மகிழ்வுடன் இந்த கட்டுரையை எழுதாமல் இருந்து இருக்க வேண்டும். அவர் இந்த பதிவை எழுதியது தான் ஆச்சரியம். அதே போல் புள்ளி விவரங்களை அவர் தெளிவாகவே கொடுத்து இருக்கிறார். நீங்கள் உணர்ச்சி தூண்டலில் பார்க்காமல் விட்டு வீட்டிர்கள்! 

Reply 20 1

M.karthikeyan   3 years ago

தனி மனிதர் பற்றி எழுத வேண்டாமே என்றுதான் நினைத்தேன்.... கட்டுரை ஆசிரியர் தந்தையை பற்றி கூறி இருந்திருக்க வேண்டிய அவசியமே இங்கு இல்லை... 41000 ஓய்வூதியம் வாங்குபவர்கள் எத்தனை பேர், 20000 ஓய்வூதியம் வாங்குபவர் எத்தனை பேர் என்ற விவரம் கூறியிருக்கலாம்.... மாத துவக்கத்தில் ஏதெனும் அரசு வங்கியில் சென்று பாருங்கள்... ஓய்வூதியர்களின் சமூக நிலையை.... புள்ளி விவரங்கள் தெளிவா...? நிதி அமைச்சரே சட்டசபையில் 2021-22 க்கான அறிக்கையில் அரசு ஊழியர் செலவு ஒரு ரூபாயில் 27 பைசா அல்லது 35.42 % என கூறியுள்ளது கட்டுரை ஆசிரியர் மற(றைத்து)ந்து விட்டாரா? போலவே, மத்திய, மாநில அரசின் PM, CM, Ministers, M.L.A , M.P செலவு, ஊதிய விவரங்களை கட்டுரை ஆசிரியரின் எழுத்தில் காண ஆசை....

Reply 6 1

Login / Create an account to add a comment / reply.

Periasamy   3 years ago

அரசு ஊழியர்களை வாக்கு வங்கியாக பார்க்கும் நிலை மாறும்போது தான் கொஞ்சும் மனநிலை மாறும்

Reply 6 1

Login / Create an account to add a comment / reply.

rajasekaranthirumalaisamy   3 years ago

சார் அரசு ஊழியர்களுக்கு சம்பளமோ,பென்சனோ எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கட்டும் சார்..லஞ்சம் கையூட்டு,அன்பளிப்பு, பார்ட்டி என அவர்களிடம் தன் தேவைக்கு மனு கோரிக்கை வைப்பவர்களிடம் வற்பறுத்தி வாங்காமல் மனிதாபிமானமாக அவ்களது வேலையை முடித்து கொடுத்தால் உங்களுக்காக அவர்கள் போராடுவார்கள்...

Reply 8 1

Subramaniam   3 years ago

ஒரு குறிப்பிட்ட sub-registrar ஆபீஸ்க்கு transfer ( sub-registrar post)vendum endral நீங்கள் ₹1crore கொடுக்க வேண்டும். யாருக்கும் கொடுக்க வேண்டும் என்பதை புங்கள் யுகத்திர்க்கு விட்டு விடுகிறேன்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

விஷ்வ துளசி.சி.வி   3 years ago

Contribution pension scheme........அரசு ஊழி யர்களுக்கான அநீதி.தெளிவாக நிபுணர்குழு மூலம் ஆராய்ந்து தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வில்லையா?அறிவித்து விட்டு பின்வாங்குவது தான் மக்கள் நல அரசுக்கு அழகா?எல்லா சங்கங்களையும் சாடுவது சரியல்ல?...... தந்தையாரின் ஓய்வூதியம் மாதம் ரூ.41,000. ஒண்டிக்கட்டை. ....... நன்றி. என் தந்தைக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவது அவசியம். அருமை வாழ்த்துக்கள்.இதை தான் அரசு ஊழியர்கள்(அரசு எந்திரத்தின் அச்சாணி கள். இளமையில் பணியேற்ற நாள் முதல் முதுமையில் பணி நிறைவு பெரும் வரை பணியாற்றிய ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள் அரசு ஊழியராக மட்டும் அல்லாமல், எந்த ஒரு மூத்த குடிநபருக்கும் இப்படி ஓய்வூதியம் வழங்குவது அரசின் கடமை . அதனை தான் அரசு ஊழியர்கள் கேட்கிறார்கள். அந்தத் தொகை எவ்வளவு என்பதும், அதைத் தரும் அரசின் நிலைமை என்ன என்பதும், சுற்றியுள்ளோருடைய நிலைமை என்ன என்பதும் முக்கியம் இல்லையா?.அரசு உழியர்களால் தான் அரசின் மக்கள் நல திட்டங்களும் கடை கோடி மக்களிடம் சென்று சேர்கிறது என்பது முக்கிய அல்லவா?

Reply 12 9

Login / Create an account to add a comment / reply.

எக்ஸ் வீடியோஸ்பல்பீர் சிங் ராஜேவால்எண்ணுப்பெயர்கள்சிகரெட்தேச விடுதலைமத அடிப்படைதொழிலாளர் அதிகரிப்பு விரும்பாதவர்களுக்கும் போட்டிthulsi goudaசமமற்ற பிரதிநிதித்துவம்குஜராத்ஜனநாயகப் பண்புமூளைச்சாவுபச்சுங்கா பல்கலைக்கழகம்காஷ்மீர்: ஜனநாயகத்தின் கடைசி தூணும் சரிந்துவிட்டதுநிர்வாகம்மாஸ்கோதமிழ்ப் பௌத்தம்வாசிஇஸ்ரேல்: கிறிஸ்துவத்தின் நிழலில்Tiruppurஅருஞ்சொல் அண்ணாவரலாறு உங்களை வாழ்த்தும் சோனியா!செனட்மார்க்கண்டன்எல்.ஐ.சி. தனியார்மயம்மாபெரும் கனவுநீதிபதி கே.சந்துரு குழுவினோத் அதானிமாயாவதி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!