கட்டுரை, அரசியல், வரலாறு, ஆளுமைகள் 2 நிமிட வாசிப்பு
தம்பி வா... தலைமையேற்க வா!
தொலைநோக்குள்ள ஒரு தலைவர் எப்படி அடுத்தடுத்த தலைவர்களைத் தன்னுடைய இயக்கத்தில் வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் மிகச் சிறந்த உதாரணர் அண்ணா.
திமுகவை ஆரம்பித்தபோதே கட்சியின் தலைவர் பதவி பெரியாருக்கானது என்று சொல்லி பொதுச்செயலர் பதவியில்தான் அண்ணா அமர்ந்தார். அந்தப் பதவியிலிருந்தும் அடுத்த ஐந்தாண்டுகளில் விலகினார். தன்னுடைய தம்பிகளைத் தலைமை தாங்க அழைத்தார்.
அண்ணாவின் இந்த முடிவை ஏற்க மறுத்தவர்களிடம் அவர் அளித்த விளக்கம் முக்கியமானது: “நான் வலிவோடும், செல்வாக்கோடும் இருக்கும்போதே என்னுடைய மேற்பார்வையின் கீழ், கழகத்தின் முன்னணியினர் பயிற்சியும், பக்குவமும் பெற வேண்டும். அப்போதுதான் குறைகளை நீக்கவும், குற்றங்களைக் களையவும் முடியும். நான் வலிவிழந்த பிறகு மற்றவர்கள் பொறுப்பேற்றால் அப்போது கழகத்தைச் சீர்படுத்தவோ, செம்மைப்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ என்னால் முடியாமல் போகும். வேறு யாராலும் முடியாமல் போய்விடும்!”
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக நாவலர் நெடுஞ்செழியனை ஆக்கலாம் என்று முடிவெடுத்த அண்ணா, கட்சியினரையும் இதற்குத் தயார்படுத்தும் வகையில், கடிதமும் எழுதினார். தொண்டர்களுடன் உரையாடும் வகையில், அவர் எழுதிவந்த ‘தம்பிக்கு கடிதம்’ பத்தியில் இதுகுறித்து எழுதினார். நெடுஞ்செழியன் எந்தெந்த வகைகளில் எல்லாம் தலைமைப் பதவிக்குத் தகுதியானவர் என்று அந்தக் கடிதத்தில் விவரித்தார்.
சென்னையில், 1955 ஏப்ரல் 24இல் புதிய பொதுச்செயலாளரைத் தேர்நெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் அண்ணா. தியாகராயர் கல்லூரி மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், பொதுச்செயலாளர் பொறுப்புக்கு நெடுஞ்செழியன் பெயரை முன்மொழிந்தார் ஈ.வெ.கி.சம்பத். மு.கருணாநிதி, என்.வி.நடராசன், அன்பில் தர்மலிங்கம், மதுரை முத்து, நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டோர் வழிமொழிந்தனர்.
தொடர்ந்து, திருச்சியில் 18.5.1956இல் நடந்த திமுகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் தலைமைப் பொறுப்புக்கு நெடுஞ்செழியனை வரவேற்று அழைத்தார் அண்ணா: “தம்பி வா… தலைமை தாங்க வா! உன் ஆணைக்கு எல்லோரும் அடங்கி நடப்போம். தலைமையேற்று நடத்த வா!”
இந்தக் கூட்டத்தில் கட்சியினருக்கு ஓர் எச்சரிக்கையும் விடுத்தார் அவர். “நான் பொதுச்செயலாளராக இருந்த காலத்தில், எனக்குப் பலரும் தொல்லை தந்தார்கள். அவற்றையெல்லாம் நான் தாங்கிக்கொண்டேன் இரண்டு முறைகளில். ஒன்று, நான் சொல்லப்படும் எல்லா விஷயங்களையும் கேட்டுக்கொண்டதைப் போன்று பாவனை செய்தேன். ஆனால் அவற்றைக் கேட்டுக்கொண்டதே இல்லை. வேறு சில விஷயங்களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பேன். செயலாற்ற வேண்டியதை மட்டும் செயலாற்றுவேன். மறக்க வேண்டியதை மறந்துவிடுவேன். ஆனால், நாவலர் அப்படியல்ல. தோழர்கள் ஒழுங்குமுறை தவறி அவருக்கு நிறைய தொல்லைகள் தந்தால், அவர் அவற்றைத் தாங்கிக்கொள்ள மாட்டார். வளைந்துபோகவும் மாட்டார். இவ்வளவு தொல்லைகள் இருக்கிறதா என்று மிகவும் சங்கடப்படுவார். அப்படியொரு நிலை ஏற்பட்டால், அவரிடமிருந்து நாம் பெறக்கூடிய அறிவாற்றல் பணிகளை முழுமையாகப் பெற முடியாமல் போய்விடும்!”
திருச்சியில் நடந்த இந்த மாநாடுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்தி, ‘தேர்தலில் கட்சி போட்டியிடும்’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவைத் திமுக இந்த மாநாட்டில்தான் எடுத்தது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரையில் தேர்தல் நடத்துவது திமுக மரபு. அதன்படி, 25.9.1960இல் தலைமைக் கழகத் தேர்தல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆரின் மாளிகை மண்டபத்தில் நடந்தது. இந்தப் பொதுச்செயலாளர் பதவிக்கு கே.ஏ.மதியழகனை முன்நிறுத்தினார் சம்பத். தென்னரசுவைத் தயார்படுத்தினார் கருணாநிதி. பொதுக்குழு உறுப்பினர்களும் இரு பிரிவாகப் பிரிந்து வாக்கு திரட்டும் பணியில் இறங்கினார். இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே தீர்வு அண்ணாவே மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்பதே என்று ஆனது. சம்பத் முன்மொழிய, கருணாநிதி வழிமொழிய அண்ணாவே மறுபடியும் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
நெடுஞ்செழியன், நடராசன், க.அன்பழகன், மதியழகன், சிற்றரசு ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர் ஆனார்கள். சம்பத் அவைத் தலைவராகவும், கருணாநிதி பொருளாளராகவும் உயர்ந்தார்கள்!
1955 ஏப்ரல் 24இல் புதிய பொதுச்செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டினார் அண்ணா. ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டார் நெடுஞ்செழியன். 18.5.1956இல் திமுகவின் இரண்டாவது மாநில மாநாடு திருச்சியில் நடந்தது. தலைமைப் பொறுப்புக்கு நெடுஞ்செழியனை அழைத்தார் அண்ணா: “தம்பி வா! தலைமை தாங்க வா!! உன் ஆணைக்கு எல்லோரும் அடங்கி நடப்போம். தலைமையேற்று நடத்த வா!”
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரையில் தேர்தல் நடத்துவது திமுக மரபு. அதன்படி, 25.9.1960இல் தலைமைக் கழகத் தேர்தல் நடந்தபோது, பொதுச்செயலாளர் பதவிக்கு கே.ஏ.மதியழகனை முன்நிறுத்தினார் சம்பத். தென்னரசுவைத் தயார்படுத்தினார் கருணாநிதி. இந்தச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர ஒரே தீர்வு அண்ணாவே மீண்டும் பொதுச்செயலாளர் பொறுப்பை அண்ணாவே மறுபடியும் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.