கட்டுரை, அரசியல், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

சீனா எப்படிக் கண்காணிப்புக்குப் பழகியிருக்கிறது?

யி ஷெங் லியான்
30 Dec 2022, 5:00 am
1

சீன கம்யூனிஸ்ட் கட்சியானது நூற்றாண்டைக் கொண்டாடிய நிகழ்வானது, அது அழிந்துவிடும் என்று மேற்கத்திய நாடுகள் கணக்கிட்ட கணிப்பு எவ்வளவு அபத்தமானது என்பதற்கான ஒரு சான்று. தன்னுடைய ஆட்சிக் காலத்தில் குறிப்பிடத்தக்க சில தவறுகளைச் செய்திருந்தாலும் அமெரிக்காவுக்கும் அதன் மேற்கத்திய தோழமை நாடுகளுக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வருங்காலங்களில் சவாலாகவே தொடரும்.

உலகின் பிற நாடுகளில் தோன்றிய சர்வாதிகார அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டமைத்துள்ள அரசாங்கம் வலுவானதாகவே தொடர்கிறது. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு வரலாற்று இணையாக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்தவர்கள், அது எத்தனை காலம் பதவியில் இருக்கும் என்பதைக் கணிக்கத் தவறிவிட்டார்கள். 

லெனினுடைய கம்யூனிஸ்ட் கட்சியும் அது உருவாக்கிய சோவியத் ஒன்றியமும் வெகு விரைவிலேயே மரணப்பிடியில் சிக்கிவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். மாறாக, சீனக் கட்சியின் வேர் முழுவதும் முழுக்க முழுக்க சீனத்தன்மையுடனேயே இருக்கிறது. சீன வரலாற்றை ஆக்கிரமிக்கும் பல்வேறு ராஜ வம்சங்களின் நீட்சியாகவே கம்யூனிஸ்ட் ஆட்சியும் தொடர்கிறது. அது வேறு எங்கும் வழிதவறிச் சென்றுவிடவில்லை.

கண்காணிப்பின் வரலாறு

சீன கம்யூனிஸ்ட் கட்சி பிரம்மாண்டமானது. அதிகாரப் படிநிலை வரிசையில் வலுவானது. மிகவும் ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்டது. 1921இல் வெறும் 12 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட கட்சி, இன்றைக்கு 9 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன், கடந்த 100 ஆண்டுகளில் ஆண்டுக்கு 20% என்ற வீதத்தில் வளர்ந்திருக்கிறது. 140 கோடி மக்களைக் கொண்ட நாட்டின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும் வலுவான நிர்வாகத்தை அளிக்கவும் நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திய அதே உத்திகளை, நவீன அறிவியல் தொழில்நுட்பச் சாதனங்களின் உதவியுடன் மேற்கொண்டுவருகிறது. இங்கே பலரும் கவனிக்கத் தவறும் முக்கியமான ஓர் அம்சம், கண்காணிப்பு. 

மக்களை மக்களை விட்டே கண்காணிக்கும் ‘பவோஜியா’ திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சி கடைப்பிடிக்கிறது. குவிங் அரச வம்ச காலத்தில் தொடங்கிய இந்த முறை, சோங் அரச வம்சத்தில் புத்துயிர் பெற்றது; குவிங் அரசாட்சியில் செம்மைப்படுத்தப்பட்டு பெருமளவில் கையாளப்பட்டது. சீன கம்யூனிஸ்ட் கட்சி இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதில் சேர்த்திருக்கிறது, அவ்வளவே. இப்படி மேலிடத்தால் தாங்கள் கண்காணிக்கப்படுவதற்கு சீன சமூகத்தில் எதிர்ப்புகளே கிடையாது - குறைந்தபட்சம் ஹான் இனத்தவர் இடையே இல்லை. இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை. சீன நாட்டில் ‘பெரிய அண்ணனின் கண்காணிப்பு’ சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே தொடர்கிறது. 

கட்டுப்பாடுகளுக்கு அடங்க மறுப்பவர்களுக்குத் தண்டனைகள் காத்திருக்கின்றன (ஹாங்காங்கில் ஜனநாயக உரிமைகள் கோரி கிளர்ச்சி செய்வோர் நிலையையும் ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்குர் முஸ்லிம்களின் நிலையையும் மனதில் ஓட்டிப் பார்க்கவும்). சீனாவைக் கடைசியாக ஆண்ட மிங், குவிங் என்ற இரண்டு அரச வம்சங்களுமே கடுமையான ஒடுக்குமுறைகளைத்தான் கையாண்டன. இவ்விரண்டு அரச வம்சங்களும் இப்படி மக்களை அடக்கி வைத்தே சுமார் 540 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டன. 

வெவ்வேறு சீனச் சக்ரவர்த்திகளின் தலைமையில் தொடர்ச்சியாக வந்த ஆட்சிகளில், தங்களைவிட அந்தஸ்தில் குறைந்தவர்கள் ஆட்சி செய்தால் அடங்க மறுக்கவும், தங்களைவிட வலுவானவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் அடங்கி நடக்கவும் சீன மக்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். தண்டனைகள் மட்டுமல்லாமல் விசுவாசிகளுக்கு ஊக்கப் பரிசுகளும் வழங்குவது மரபு. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்கும் பலவிதமான சலுகைகள், பரிசுகள் தாராளம். 

வெற்றியின் சூத்திரம்

சீனாவை ஆண்ட மன்னர் பரம்பரைகளைப் போலவே சீன கம்யூனிஸ்ட் கட்சியும் வரலாறு கற்பிக்கும் பாடங்களை மிகக் கவனத்துடன் படித்துவருகிறது. இதனால்தான், நெருக்கடிகள் ஏற்படும்போது அதிலிருந்து மீளவும் மேலும் வலுப்பெறவும் அதனால் முடிகிறது. 

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தியானென்மென் சதுக்கத்தில் ஜனநாயக உரிமைகளுக்காக 1989இல் போராடிய மாணவர்களை ராணுவம் டாங்குகளை ஏற்றிக் கொன்ற படுகொலைச் சம்பவத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். சீன அரசுக்கு எதிராக அறிஞர்களும் படித்தவர்களும் நடத்தும் புரட்சிகள் என்றைக்குமே வென்றதில்லை என்பது வரலாறு. 

ஜனநாயக உரிமைகளுக்காகப போராடும் மாணவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினால் அது நாடு முழுக்கப் பரவி பெருங்கிளர்ச்சியாக உருவெடுக்காது என்று அன்றைய ஆட்சியாளர் டெங் சியோபிங் திட்டவட்டமாக முடிவெடுத்தார். அப்படியே மேற்கத்திய நாடுகள் சீனாவுக்கு எதிராகப் புறக்கணிப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் அவை நீண்ட நாள்களுக்குத் தொடராது, மேற்கத்திய நாடுகள் தங்களுடைய வணிக லாபத்துக்காக எதை வேண்டுமானாலும் விட்டுத்தரும் என்று நிச்சயமாகக் கணித்தார். அவர் கணித்தபடியே நடந்தது.

சீனாவில் முதலீட்டுக்கு வாசல்கள் திறந்துவிடப்பட்டபோது மேற்கத்திய முதலீட்டாளர்கள்தான் பெரும் எண்ணிக்கையில் குவிந்தனர். அதன் பிறகு, உலகத்தின் தொழிற்சாலையாக சீனா மாறியது; உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராகக்கூட சேர்த்துக்கொள்ளப்பட்டது. 

சீன அரசால் பல்வேறு ஆண்டுகளாக கையாளப்படும் - உண்மையல்லாதவற்றை உண்மையைப் போல் தெரிவிக்கும் - உத்திகளையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிகரமாகக் கையாள்கிறது. “ஒரு மானை - அது குதிரைதான் என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டு வேலையைத் தொடங்கு” என்பது சீனப் பழமொழி. திசைதிருப்பவோ ஏமாற்றவோ அல்ல - உத்திரீதியாக இப்படி ஒன்றைத் திட்டவட்டமாக அறிவிப்பது என்பது சீனர்களின் ரத்தத்தில் ஊறிய செயல்முறையாகும். 

இதை அரசியல் பின்னணியில் பார்ப்போம். ஆட்சியாளர் ஒரு பொய்யை மெய் என்று அறிவித்தால், அதை நீங்கள் பகிரங்கமாக உண்மை என்றே ஏற்கும்போது, உங்களைக் கட்டுப்படுத்துவது எளிது என்ற முடிவுக்கு அவர் வந்துவிடுவார். சீன கம்யூனிஸ்ட் கட்சி இதை அடிக்கடி செய்யும். சமீப காலத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கே இதைச் செய்தார். ‘நம்பிக்கைக்குரியது’, ‘மரியாதைக்குரியது’, ‘அன்புக்குரியது’ என்ற சர்வதேச அங்கீகாரத்தை சீனா பெற வேண்டும் என்றார்.

சீனாவின் போக்கு பிடிக்காமல் அதற்கு எதிராகப் பல தடை நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அச்சுறுத்தினாலும், பல மேற்கத்திய நாடுகளுக்கும் பெருந்தொழில் நிறுவனங்களுக்கும் சீனாவுடனான தொழிலுறவைத் தொடரவும் வளர்க்கவும்தான் விருப்பம். காரணம், அதிக லாபம் சம்பாதிக்க சீனா உதவுகிறது. இதை ஜி ஜின்பெங்கும் நன்கு அறிவார். 

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆசைகளுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தாலும் எந்த அரசும் - அமெரிக்கா உள்பட - சீனா வருந்தும்படியாக அதன் மீது கடுமையான பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையோ வேறு எதையுமோ எடுக்கவே இல்லை. இப்படியாகத்தான் அது பழங்காலச் சீனாவின் அரசியல் உத்திகளைப் பயன்படுத்தி, நவீன மேற்கத்திய நாடுகளின் பொருளாதார ஆசைகளையே தூண்டிலாகப் பயன்படுத்தி, தனது ஒடுக்குமுறை நிர்வாகத்தை எந்தக் குறுக்கீடும் இல்லாமல் தொடர்ந்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தியிருக்கிறது. 

நூறு ஆண்டுகளில் - சீன வரலாற்றுடன் ஒப்பிட்டால் குறுகிய காலம் - சீனச் சமூகத்தின் அனைத்துத் தரப்புகளிலும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அடியாழம் வரை ஊடுருவியிருக்கிறது. கட்சியின் நிலையை ஆதரித்தால் பரிசு - சுகமான வாழ்க்கை, எதிர்த்தால் தண்டனை - துயரமான உழைப்பு முகாம் வாசம் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கிறது. உள்நாட்டுக் கலாச்சார நியதிகளையும் மேற்கத்திய நாடுகளின் நுகர்வியத்தையும் கலக்கவிட்டுள்ளது கட்சி. இப்படி சமூகத்தில் வேரோடிவிட்ட கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஆல மரத்தை சாய்ப்பதெல்லாம் சாத்தியமே இல்லை.

மேற்கத்தியர்களின் மனப்பால் 

சீன மக்கள் சுதந்திரத்துக்காகவும் ஜனநாயகத்துக்காகவும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட லெனினின் கம்யூனிஸ சித்தாந்தத்தை மக்கள் ஏற்கவில்லை, வெகு விரைவிலேயே மக்கள் கிளர்ந்து எழுவார்கள், சீன கம்யூனிஸ்ட் கட்சி இதைத் தாங்க முடியாமல் உடைந்து நொறுங்கிவிடும் என்றெல்லாம் மேற்கத்திய நாடுகளில் அரசியல் பார்வையாளர்கள் மனப்பால் குடித்துக்கொண்டிருக்கின்றனர். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனை, ஆற்றல் தெரியாமல் இப்படிக் கற்பனையில் காலம் தள்ளுகின்றனர். அப்படியே மக்கள் இடையே அதிருப்தி ஏற்படுவதைப் போல் தெரிந்தால் அதையே மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகத் திருப்பி, கட்சியின் பிடியை மேலும் இறுக்கி, மேற்கத்திய நாடுகளுக்கும் குடைச்சல் கொடுப்பது எப்படி என்ற கலையிலும் தேர்ந்தது சீன கம்யூனிஸ்ட் கட்சி. 

இதற்காக சீன கம்யூனிஸ்ட் சாம்ராஜ்யத்திலும் பலவீனங்கள் இல்லாமல் இல்லை. பெய்ஜிங்கில் 2008இல் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தபோது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரம் உச்சத்தைத் தொட்டுவிட்டது. உலக நாடுகள் வியப்புடன் சீன வளர்ச்சியைப் பார்த்தன. சீனாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம், அதன் பணிபுரியும் வயதில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கேற்ப உச்சாணிக்கொம்பில் இருந்தது. நிகர வெளிநாட்டு முதலீடு வெள்ளமாகப் பெருகியது. ஹாங்காங்கில் வசித்தவர்கள்கூட, சீனா நல்ல நாடு என்ற நல்லெண்ணத்தையே வெளிப்படுத்தினர். தங்களை சீனாவுடன் அடையாளப்படுத்திக்கொள்ளவும் விரும்பினர். அந்த நிலைமை இப்போது வெகுவாக சரிந்திருக்கிறது. ஆயினும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கு அப்படியே சரிந்துவிடும் என்றெல்லாம் சொல்வதற்கு இல்லை. 

சீனாவை ஆண்ட வம்சங்களிலேயே மிகவும் கொடூரமானது என்று பதிவாகியுள்ள மிங் அரச வம்சம், ஆட்சியதிகாரத்தின் உச்சத்தைத் தொட்டும் 72 ஆண்டுகளுக்குப் பிறகே முடிவுக்குவந்தது. அது ஹான் சீனர்களால் ஆளப்பட்டது. அடுத்து மஞ்சூரியா பகுதியைச் சேர்ந்தவர்களால் உருவான குவிங் வம்சத்தின் கொடூரம் மிங் வம்சக் கொடூரத்துக்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல என்றாலும் அதுவும் முற்றாக மறைந்து போக 100 ஆண்டுகள் ஆனது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி தானாகவே கரைந்து காணாமல்போய்விடும் என்று யாராவது கனவுகண்டால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். சீன நாட்டின் வரலாற்றைப் பார்த்தால், எவ்வளவு மோசமான அரசாட்சியாக இருந்தாலும் அங்கே நீண்ட நாட்கள் ஆண்டிருக்கின்றன. ஆகையால், சீனாவை எதிர்க்கும் நாடுகள் தங்களைக் காத்துக்கொள்ள நீண்ட காலத்துக்குத் திட்டமிட்டு தொடர்நடவடிக்கைகளை எடுப்பதே நல்லது!

© நியுயார்க் டைம்ஸ்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

4

1



1


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

K Chitra   2 years ago

உலகின் ஆகப் பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டின் ஆளும் கட்சிக்கு வெறும் 9 கோடி உறுப்பினர்கள் தானா? ஆச்சரியமாக இருக்கிறது

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

பிரிட்டன் ராணிவாக்குப்பதிவு இயந்திரத்தை நம்பவைக்க சில யோசனைகள்சமஸ் - ஜெயமோகன்தமிழ் இயக்கம்காதல் - செக்ஸ்ஜனநாயக நெருக்கடிஅதானி: காற்றடைத்த பலூன்அன்னா சவ்வா கட்டுரைமுடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வுசமூகக் கண்காணிப்பு இதழியல்நீரிழப்புட்விட்டர் சிஇஓ பரக் அகர்வால்நோன்பு காலம்வேலை இழப்புநெதன்யாஹுவாக்குப் பெட்டிபடிப்புக்குப் பின் அரசியல்மதுரைவ.உ.சி. வாழ்க்கை வரலாறுஇலங்கைமூளைக்கான உணவுதமிழகம்இவர் இல்லை என்றால் எவர் தமிழர்குடும்பத் தலைவிகள்எல்.ஐ.சி.பத்ம விருதுகள் அருஞ்சொல்அன்னிய வெறுப்பால் அடைபடும் சாளரங்கள்கோவலன்உலக சினிமா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!