கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 7 நிமிட வாசிப்பு
வீதி வேடிக்கையா ராகுலின் பாத யாத்திரை?
கால்பந்து விளையாட்டில் வெற்றிக்கான உத்தியே, அரசியலுக்கும் பொருந்தும்; அதாவது உதை பந்து, நம்முடைய கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும்!
ராஜஸ்தானில் காங்கிரஸுக்குள் ஏற்பட்ட திடீர் குழப்பத்தால்கூட, ராகுல் காந்தி மேற்கொண்டுவரும் பாரத இணைப்பு யாத்திரைக்கான ஆக்கப்பூர்வ வரவேற்பு குலைந்துவிடவில்லை. ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்கிற இந்த இணைப்பு நடைப்பயணம் எப்பேர்ப்பட்ட மனமாற்றங்களை மக்கள் இடையே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஒரு புகைப்படமே எடுத்துக்காட்டுகிறது. கொட்டும் மழையில் ராகுல் ஒலிவாங்கியைப் பிடித்தபடி பேசுகிறார், அதைக் கேட்க வந்த கூட்டம் கலையாமல் பிளாஸ்டிக் நாற்காலிகளைத் தலைக்கு மேல் பிடித்தபடி கவனமாகக் கேட்கிறது.
ஆயிரம் செய்தி நறுக்குகளால்கூட சொல்ல முடியாத உண்மையை இந்த ஒரு புகைப்படம் சொல்லிவிடுகிறது. யாத்திரை தொடர்பான செய்திகள் இன்னும் காட்டுத்தீபோலப் பரவிவிடவில்லை. ஆனால், இந்தப் புகைப்படம் சமூகவலைதளங்களில் தொடர்ந்து வலம்வந்து அலைகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
ஆக்கப்பூர்வமான மாற்றம்
மக்கள் இடையே வரவேற்பு அதிகரித்துவரும் இந்த நடைப்பயணமானது, பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லாமல் வெகு சாதாரணமாகத்தான் தொடங்கியது. கன்னியாகுமரியில் பயணம் தொடங்கியபோது இந்த யாத்திரை ஏன் என்று புரியாமையும், இது எதையாவது சாதிக்குமா என்ற எள்ளலும், இது எப்படியாகுமோ என்ற அச்சங்களும்தான் நிறையப் பேரிடம் எதிரொலித்தன.
என்னிடம் என் குடும்ப நண்பர்கள் சிலர் கூறினர், “யோகேந்திர ஜி, நீங்கள் உங்களுக்குரிய புகழைப் பணயம் வைக்கிறீர்கள், நீங்கள் காங்கிரஸில் சேரப்போவதில்லை - அப்படியிருக்க காங்கிரஸுடனான இந்தத் தொடர்பு நிச்சயம் அரசியல்ரீதியில் உங்களுக்கு முடிவுதானே?”
இந்த இணைப்பு யாத்திரையின் முதல் மாதத்திலேயே ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன; தேசிய அளவில் அரசியல் மனமாற்றம் ஏற்பட்டுவிட்டது என்று இப்போதே சொல்லிவிட முடியாது; ஆனால், இந்த யாத்திரை ஆக்கப்பூர்வமான மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது நிச்சயம். இது வெறும் அரசியல் வீதி வேடிக்கையல்ல என்பதற்கு ஆறு காரணங்களைச் சொல்கிறேன்:
ஆறு காரணங்கள்
முதலாவதாக, இது எதிர்மறைப் பிரசாரம் அல்ல, ஆக்கப்பூர்வமானது; புதிய முயற்சிகளுக்கான விருப்பச் செயலாகக் கனிந்திருக்கிறது. நாட்டின் முதன்மை அரசியல் கட்சியானது நீண்ட காலத்துக்குப் பிறகு புதிதாக ஒரு செயலைச் செய்யத் தொடங்கியிருக்கிறது; அரசியல் செயல்திட்டத்தை வகுக்கும் வேலையை அது மேற்கொண்டிருக்கிறது. இந்த வினைக்கு எதிர்வினையாற்ற வேண்டிய நிலைக்கு பாஜக தள்ளப்பட்டிருக்கிறது. இந்த யாத்திரை தொடங்கிய முதல் மாதத்திலேயே ஆர்எஸ்எஸ் தலைமை, தன்னுடைய இயல்பைவிட்டு முஸ்லிம் அறிஞர்களை அவர்களுடைய இடத்துக்கே சென்று சந்தித்ததும், அதிகரித்துவரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொருளாதார சமத்துவமின்மை குறித்து கசிந்துருகிப் பேசியதும் தற்செயலான செயல் அல்ல. இதையெல்லாம்தான் இந்த நடைப்பயணத்தில் பேசிவருகிறார் ராகுல் காந்தி. கால்பந்தில் வெற்றி பெறுவதற்கான உத்தி – அரசியலுக்கும் பொருந்தும். பந்து யாரிடம் அதிக நேரம் இருக்கிறது என்பது முக்கியம்.
இரண்டாவதாக, இது சாதாரண யாத்திரை அல்ல – பாத யாத்திரை. நடந்தே செல்வது என்ற அரசியல் செயல்பாடு மக்களிடையே கலாச்சாரரீதியாக ஒத்திசைவை உருவாக்குகிறது. பாதயாத்திரை என்பது தன்னைத்தானே வருத்திக்கொள்வது, தன்னுடைய லட்சியத்தில் மேலும் பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ள யாத்திரைகள் உதவுகின்றன. அந்த வகையில்தான் வட இந்தியாவில் கன்வர் யாத்திரை என்கிற காவடியாளர்களின் சிவத்தல யாத்திரையும், அமர்நாத்தில் பனி லிங்க தரிசன யாத்திரையும், நர்மதை நதியின் தோற்றுவாய் நோக்கிய யாத்திரையும் மக்களைப் பிணைக்கின்றன. இந்தியா இதுவரை நூற்றுக்கணக்கான சமூக – அரசியல் யாத்திரைகளைக் கண்டிருக்கிறது. நடப்பவருக்கும் அதைப் பார்ப்பவருக்கும் உள்ள இடைவெளியைக் குறைக்கிறது யாத்திரை. யாத்திரையைப் பார்க்கும் மக்கள் சிறிது தொலைவு கூடவே நடந்து, தாங்களும் முழு யாத்திரையையும் மேற்கொண்ட மகிழ்ச்சியையும் திருப்தியையும் அடைகின்றனர். பாதயாத்திரை என்பது நிலத்துக்கு அடியில் ஏற்படும் மாற்றங்களைப் போன்ற நிகழ்வு. அது வாயைத் திறந்து எதையும் சொல்வதில்லை, அனுபவத்தில் உணர வைக்கிறது.
மூன்றாவதாக, இது மெய்நிகர் எதிர்ப்புப் போராட்டம் அல்ல. தரையில் கால் பதித்து நடக்கும் உடல் – உள்ள வலிமையை ஒருங்கே பறைசாற்றும் செயல். பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டதால் தாங்கள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்களுடைய ஆதரவு இருப்பதாக உரிமை பாராட்டும் பாஜக – ஆர்எஸ்எஸ் நிறுவனத்தின் செயல்களை எதிர்ப்பதென்றால், அதற்கு மண் மீது மக்கள் திரளைத் திரட்டி, அதன் மூலம்தான் வலிமையைக் காட்ட வேண்டும். விமர்சகர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றால் ஒற்றுமையான மக்கள் கூட்டம் எதிரில் நிறுத்தப்பட வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் தோளோடு தோள் உரசி நடப்பது வலுவான எதிர்-வாதமாகவே அமைந்துவிடும். நாடாளுமன்றத்தில் பேச முடியாமல் அரசு மென்னியைப் பிடிக்கும்போது – வீதிகளில்தான் குரல்களை உரத்து ஒலிக்கச் செய்ய வேண்டும்.
நான்காவதாக, இது ஏற்பாடுகள் செய்யப்பட்டு திரட்டப்படும் கூட்டம் அல்ல. யாத்திரைக்கு வருகிறவர்களில் கணிசமானவர்களைக் காங்கிரஸ் நிர்வாகிகள் அழைத்து வருகிறார்கள் என்றாலும், கணிசமான மக்கள் தாங்களாகவே இதைக் கேள்விப்பட்டு ஆர்வம் மேலிட வந்து பார்க்கிறார்கள், உடன் நடக்கிறார்கள். சமூகத்தின் அனைத்துத் தரப்பைச் சேர்ந்தவர்களும் சிரித்த முகத்துடன் வந்து கலந்துகொண்ட ‘வானவில்’ வர்ண ஜாலத்தையே பார்க்கிறேன்.
ஐந்தாவதாக, இது மதச்சார்பின்மை பற்றியது மட்டுமல்ல. இந்த யாத்திரை பல்வேறு விதமான ஒற்றுமைகளுக்கு வித்திட்டிருக்கிறது. பொருளாதாரரீதியாக மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை இது முன்னிலைப்படுத்துகிறது. சாதி, மொழி, மதம் ஆகிய வேறுபாடுகளைக் கடந்து நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி அன்றாடப் பேச்சில் வலியுறுத்துகிறார். பெருமுதலாளிகளுக்கு இந்த அரசு சேவகம் செய்வதை அவரைப் போல பெரிய அரசியல் கட்சியின் தலைவர்கள் எவரும் இவ்வளவு வெளிப்படையாகப் பேசுவதில்லை. மோடி அரசுக்கு எதிரான பேச்சில், முஸ்லிம்களுக்கு எதிராக பரப்பப்படும் வெறுப்புணர்வு பற்றிப் பேசுவதோடு மட்டும் அவர் நிறுத்துவதில்லை; வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணமதிப்பு நீக்கம், பொது சரக்கு சேவை வரி, இதர நிர்வாகக் கோளாறுகள் என்று அனைத்தையும் குறித்து தொடர்ச்சியாகவும் ஆவேசமாகவும் பேசுகிறார்.
இறுதியாக, இதில் நடப்பது காங்கிரஸ் மட்டுமில்லை. ஏராளமான மக்கள் அமைப்புகளும் இயக்கங்களும் அறிவுஜீவிகளும், முக்கியப் பிரமுகர்களும்கூட இந்த யாத்திரையில் நடக்கின்றனர். கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து செயல்படாதவர்கள்கூட இப்போது வருகின்றனர். அவர்களையெல்லாம் ஒருங்கிணைக்கும் வேலையைக் கட்டுரையாளனாகிய அடியேன் செய்துவருகிறேன். அரசியல்ரீதியாக இதுவரை ஒரு நிலையை எடுக்காதவர்களும், காங்கிரஸை இதுவரை ஆதரிக்காதவர்களும்கூட வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கின்றனர். இது காங்கிரஸ் கட்சியில் சேருவதற்காகவோ அந்தத் தலைமைக்கு விசுவாசம் தெரிவிப்பதற்காகவோ அல்ல. பாரத மக்களை – சமுதாயங்களை – மாநிலங்களை இணைக்கும் உணர்வுடன் கூடிய யாத்திரை என்பதால், அனைவரும் வருகின்றனர் என்றே சரியாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். தார்மிகரீதியிலான உணர்வுகள் உந்தப்பட்டே யாத்திரைக்கு வருகின்றனர்.
ஆற்றின் அடியோட்டம்
யாத்திரை தொடங்கியபோது, ‘என்னுடைய புகழைப் பணயம் வைக்கிறேன்’ என்று கவலையுடன் அச்சம் தெரிவித்த அதே குடும்ப நண்பர்கள் மீண்டும் வந்து என்னைச் சந்தித்தனர். இப்போது அவர்களுடைய கவலைகள் மாறி, மகிழ்ச்சியும் பரவசமும் அதிகரித்துள்ளன. ‘ஏதோ நடக்கிறது’ என்று மகிழ்ச்சி பொங்க புன்னகைத்துக்கொண்டே கூறினார்கள். அவர்களுடைய அந்த புன்சிரிப்பு, வார்த்தைகளைவிட பலமாக காதுகளில் ஒலித்தன. ‘ஆமாம், ஆனால் இது ஆற்றுப்பரப்புக்கு அடியிலான நீரோட்டமாக இருக்கிறது, இதையே பெரிய அலை என்று நாம் பெரிதாகக் கருதிவிடக் கூடாது’ என்றும் எச்சரிக்கையுடன் கூறினேன். இது எப்படி உருவெடுக்கும் என்பது யாத்திரையின் எஞ்சிய பகுதியில்தான் மிஞ்சியிருக்கிறது!
தமிழில்: வ.ரங்காசாரி
5
2
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
All through the ages, Padayatra - leaders walking with the people had significant impact on the socio-political discourse of those times. Gandhiji's Dandi Yatra not only galvanized the emotions of Indian people, but also made a big dent into the Britishers' audacious confidence in continuing their rule of this country. In the recent past, Una atrocity in Gujarat, in which a few Dalit youths were tied to a moving vehicle and were beaten ruthlessly, for having skinned a dead cow. This resulted in a massive rally under the leadership of Jignesh Mewani which raised the spirits of Dalit people of the State. They refused to do the job of burying dead animals and a good number no of Dalits converted Buddhism. Now the Bharat Jodo Yatra under the leadership of Rahul Gandhi is timely, for, at this time the unity of India is under a big threat.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.