கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு
காலனியத்தை எப்படி எதிர்கொள்வது?
நாம் இன்னமும் காலனியப்பட்டவர்களாகவே தொடர்கிறோமா? அரசியல் சுதந்திரம் கிடைத்த 75ஆவது ஆண்டு நிறைவை நோக்கி நடைபோடும் இந்த வேளையில் இந்தக் கேள்வியை நாம் அவசியம் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கருத்துகளில் நாம் ‘சுயராஜ்யம்’ அடைந்துவிட்டோமா?’
கொலம்பியா பல்கலைக்கழகப் பேராசிரியர் சுதீப்த கவிராஜ் ‘சுயத்தின் மானுடவியல்’ என்ற தலைப்பில், 'பார்த்த முகர்ஜி நினைவுச் சொற்பொழி'வில் ஆற்றிய உரையில் இந்தக் கேள்வியை நேரடியாகவே எதிர்கொண்டார்.
பேராசிரியர் கவிராஜ் போன்ற எந்த முன்னணி மார்க்ஸிய அறிஞரும் இம்மாதிரியான கேள்விகளை ஆய்வுக்கே உட்படுத்த மாட்டார். மேற்கத்திய கலாச்சார காலனித்துவம் குறித்துப் பேசத் தொடங்கினாலே மார்க்ஸியர்கள் அதைப் புறந்தள்ளிவிடுவதே வழக்கம். ஆனால், கவிராஜின் முன்னாள் மாணவன் என்ற வகையில் அவர் பேசியது எனக்கு வியப்பை அளிக்கவில்லை.
கார்ல் மார்க்ஸின் சிந்தனைகள் குறித்தும் அவற்றை இந்தியச் சூழலில் பயன்படுத்துவது குறித்தும் சிந்தித்த ஆய்வாளர் கவிராஜ். மரபிய மார்க்ஸிய சிந்தனையிலிருந்து அவர் விலகியே இருந்தார். மார்க்ஸியத்தின் ஐரோப்பிய மைய அனுமானங்களை மட்டுமல்லாமல், கார்ல் மார்க்ஸையும் விசாரணைக்குள்ளாக்கியவர் அவர். சமீப காலமாக தன் கவனத்தை மகாபாரதம், வங்க வைணவ மரபு உள்ளிட்ட கலாச்சார மற்றும் அறிவார்ந்த வரலாறுகளின் மீது திருப்பியுள்ளார்.
அரசியல்ரீதியிலான காலனித்துவத்தைக் கடந்துவிட்டோம்; பொருளியல்ரீதியிலான காலனித்துவத்தைக் கடக்கப் போராடுகிறோம்; ஆனால், கலாச்சாரரீதியான, அறிவார்த்தரீதியான காலனியாதிக்கத்திலிருந்து இன்னும் விடுபட முடியாமல் சிக்கித் தவிக்கிறோம் என்று பல மார்க்ஸியர்களைப் போல அல்லாமல் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கிறவர் கவிராஜ். ‘நம்முடைய சுயத்தை, அதாவது காலனியாதிக்க சுயத்தை வாசிக்கும்போதும்கூட அந்நியர்கள் வாசிப்பதுபோல் வாசிக்கிறோம்’ என்பார்.
அதாவது, வேறு விதமான சமூகங்களுக்கு உருவாக்கப்பட்ட கருதுகோள்களைக் கொண்டு நாம் நம்முடைய சமூகம் குறித்து சிந்திக்கிறோம். மேலும், நாம் சாதாரண மனிதர்கள் குறித்து கோட்பாட்டாக்கம் செய்கிறோம் என்றாலும், அவர்கள் பயன்படுத்தும் மொழியில் கோட்பாட்டாக்கம் செய்யாமல் நாம் ஆங்கிலத்தில் சிந்திக்கிறோம். இதனோடு மேற்கத்திய கல்விபுல நிறுவனங்களின் மேலாதிக்கமும் சேர்ந்துகொள்கிறது; இது அறிவில் உள்ள அதிகாரப் படிநிலையை உறுதிப்படுத்துகிறது. ஆக, இரட்டை மனமுறிவாக மாறிவிடுகிறது.
பழைய கேள்வி, புதிய காலங்கள்
கவிராஜ் கேட்ட கேள்வி இரண்டு நூற்றாண்டுகள் பழமையானது. காலனிய உலகப் பார்வையின் ஆதிக்கத்தை எதிர்ப்பது என்பது 19ஆவது நூற்றாண்டுச் சிந்தனையாளர்களான பூதேவ் முகோபாத்யாய், சுவாமி விவேகானந்தர், பங்கிம் சந்திர சட்டோபாத்யாயா போன்றவர்களின் சிந்தனையின் மையமாக இருந்தது. தேசிய தலைவர்களான காந்தி, அரவிந்தர், மவுலானா ஆசாத் போன்ற தலைவர்களின் சிந்தனையிலும் இது பெருமளவு வியாபித்திருந்தது.
காந்தியின் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ நூலை இந்தக் கேள்விகான பதிலாக பார்க்க முடியும். கே.சி. பட்டாசார்யாவின் ஆக முக்கியமான ‘சுயராஜ்யம்’ என்ற கட்டுரையானது அன்றைய தேசியர்களின் அக்கறைகளை அப்படியே படம்பிடித்துக்காட்டுகிறது.
சுதந்திரத்துக்குப் பிறகு கலாச்சார சுயாதிகாரம் மீதான அக்கறையில் ஏற்பட்ட தொய்வால், இந்தியாவில் மேற்கத்திய மையப்பட்ட, 'போலச்செய்யும்' அறிவாளர்களின் எண்ணிக்கை பெருகியது. இருப்பினும், ராம் மனோகர் லோகியா, கிஷன் பட்நாயக், நிர்மல் வர்மா, ரமேஷ் சந்திர ஷா, ஆசார்ய தரம்பால் போன்றோர் இந்த அக்கறையைத் தொடர்ந்து வளர்த்தெடுத்தனர்.
ஆசிஷ் நந்தியின் ‘இன்டிமேட் எனிமி’ (1983) புத்தகம் இப்பிரச்சினை குறித்த கல்விப்புலத்தின் மவுனத்தை உடைத்தது. இது, மேற்கு ‘ஓரியன்ட்’ என்ற சட்டகத்தை உருவாக்கியதை விமர்சனத்துக்குள்ளாக்கிய எட்வர்ட் சையீதின் ‘ஒரியன்டலிஸம்’ நூலானது, மேற்கத்திய கல்விப்புலத்தில் ஏற்படுத்திய நகர்வுக்கு ஒத்த நடந்தது. ஆனால், மீண்டும் மேற்கத்தியக் கல்விபுலம் சார்ந்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட பின் காலனியத்தின் எழுச்சியானது, காலனிய கலாச்சார மேலாதிக்கத்தை மீண்டும் முன்னரங்குக்குக் கொண்டுவந்துவிட்டது. இப்போதைய கேள்வி இதுதான், 'நம்முடைய காலத்தில் அறிவார்ந்த காலனிய நீக்கம் என்ற சவாலை நாம் எப்படியாக எதிர்கொள்ளப்போகிறோம்?
இரு புத்தகங்கள் - ஒரு விவாதம்
சமீபத்தில் வெளிவந்த இரண்டு புத்தகங்கள், சிந்தாந்தரீதியாக எதிர்ரெதிர் முனைகளில் இருந்து இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இரண்டு புத்தகங்களும் இந்தியாவை நாம் ஒன்று அர்த்தப்படுத்தும் முறை பெரும்பாலும் ஐரோப்பிய மையப் பார்வையிலானது என்றும், அதை நாம் தீவிரமாக சரிசெய்ய வேண்டியுள்ளது என்றும் போராசிரியர் கவிராஜின் வாசிப்பை ஏற்றுக்கொண்டு குறுக்கீடு செய்கின்றன. இரண்டு புத்தகங்களுமே பின்-காலனிய குறுக்கீடு போதாது என்றும், நம்முடைய அறிவுச் சட்டகங்களை நாம் ‘காலனிய நீக்கம் செய்ய வேண்டும்’ என்றும் முன்வைக்கின்றன. ஆனால், காலனிய நீக்கம் என்பதை புரிந்துக்கொள்வதில் இவ்விரண்டு புத்தகங்களும் தீவிரமாக வேறுப்படுகின்றன.
பொறியாளராக இருந்து பிறகு சட்டம் படித்து வழக்குரைஞரான ஜே.சாய் தீபக் எழுதியுள்ள ‘இந்தியா தட் இஸ் பாரத்: காலனியாலிட்டி, சிவிலைசேஷன், கான்ஸ்டிடீயுஷன்’ (புளூம்ஸ்பரி இந்தியா, 2021) முதல் புத்தகம்.
சாய் தீபக் ‘இந்து தேசிய’ என்ற கருத்தை நிராகரிக்கிறார் என்றாலும்கூட, பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் பற்றி தனது நூலில் வேண்டும் என்றே குறிப்பிடாமல் விடுகிறார். அதேசமயத்தில், அவர் சார்ந்திருக்கும் இந்த அரசியல் முகாமுக்கு ஆழமான அறிவார்ந்த அடித்தளத்தை உருவாக்குவதற்கே முயலுகிறார்.
இந்திய சமூகம் குறித்தும் அதன் வரலாறு – நிகழ்காலம் குறித்தும், சாதி – பழங்குடிகள் பற்றியுமான கருத்துகளை உருவாக்கியவை காலனியாதிக்கமே என்பதை அவர் வலியுறுத்த விரும்புகிறார். இந்திய சமூகம் குறித்தும் அதன் வரலாறு – நிகழ்காலம் குறித்தும் சாதி – பழங்குடிகள் பற்றியும் நம்முடைய புரிதல்களை உருவாக்கியதில் காலனியாதிக்கத்துக்குப் பெரிய பங்கு இருக்கிறது என்பதே அவருடைய வாதம்.
இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் நிறுவனக் கட்டமைப்புகளானவை - தேசிய அரசு என்ற கருத்து உட்பட - வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
காலனியம் குறித்த பிற விமர்சகர்களிடமிருந்து சாய் தீபக் எங்கே வேறுபடுகிறார் என்றால், பிரிட்டிஷ் காலனியத்திற்கு முக்கிய உந்துசக்தியாக இருந்தது அரசியலார்ந்த கிறிஸ்தவ இறையியல் கொள்கைதான் என்கிறார். இதற்கு முந்தையதுதான் ‘மத்திய கிழக்கு காலனியாக்கம்’ என்கிறார். இவரைப் பொறுத்தமட்டில், இவ்விரண்டு காலனியாதிக்க விளைவுகளிலிருந்து மீள்வதுதான் காலனிய நீக்கம் என்றாகிறது. அதாவது குழும அடையாளம் அடிப்படையில் இயல்விடஞ்சார்ந்த ‘பாரதிய பிரக்ஞை’யை மீட்டெடுப்பது என்ற அர்த்தத்தை இது கொண்டிருக்கிறது.
இப்படியாக பார்ப்பது இந்தியாவை தேசிய அரசு என்பதாக இல்லாமல் நாகரிக அடிப்படையிலான அரசு என்று அங்கீகரிக்கக் கோருவதாக இருக்கிறது. அதாவது, சட்டரீதியான - அரசமைப்புக் கட்டமைப்பை நம்முடைய நாகரீகரீதியான பிரக்ஞையோடு ஒத்திசைவாக்குவது என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது.
இதை எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இப்படியாகச் சொல்லலாம்: 'பிரிட்டிஷாரால், இஸ்லாமியர்களால் அடிமைப்படுத்தப்பட்ட இரட்டைச் சுமையிலிருந்து விடுபட வேண்டும் என்றால், உண்மையான இந்து உலகக் கண்ணோட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்; இதற்கு ஏற்றார்போல் அரசமைப்பை மாற்றி எழுத வேண்டும்.'
காலனிய நீக்கத்தை இப்படியாக அர்த்தப்படுத்துவதன் அரசியல் விளைவுகளைத் தீவிரமாக எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், இது வழமையான மூடுண்ட காலனியப்பட்ட மனதால் உருவாக்கப்பட்ட அர்த்தமாக இருக்கிறது என்பதையே நான் பிரச்சினையாக பார்க்கிறேன். ‘மத்திய கிழக்கு’ என்ற சொல்லாடலைவிட வேறொன்றை காலனியப்பட்ட மனநிலைக்கான வெளிப்பாடாகச் சொல்ல முடியாது.
மத்திய கிழக்கு என்றால், யாருடைய கிழக்கு? எதனுடைய மத்தியம்? மேலும், உண்மையான இயல்விடஞ்சார்ந்த பிரக்ஞையையும் அசுத்தமான அந்நிய ஆக்கிரமிப்புகளையும் வேறுப்படுத்தி காட்டும் காலக்கட்டம் குறித்த அவரது அனுமானம் (சாய் தீபக்கை பொறுத்தமட்டில் இது எட்டாம் நூற்றாண்டாக இருக்கிறது) காலனிய, காலனியப்பட்ட வரலாற்று எழுதலுக்கான மற்றொரு எடுத்துக்காட்டாகிறது. நம் காலத்தில் நாகரீகரீதியான பிரக்ஞையை மறுவரையறை செய்ததில் சுதந்திரப் போராட்டத்தின் பங்களிப்பை முழுமையாக நிராகரிப்பது என்பது வக்கிரமமான காலனிய மனநிலையைதான் வெளிப்படுத்துகிறது.
வெளிப்படையாகச் சொல்வதென்றால், இந்நூல் பெருத்த ஏமாற்றத்தையே தந்தது. நூலாசிரியர் புத்திசாலிதான், இருந்தாலும் காலனிய நீக்கத்திற்கு மாற்று வழிமுறைகளோடு அவரால் தீவிரமாக உரையாட முடியவில்லை.
காலனிய நீக்கம் குறித்த அவரது திட்டத்தில், இந்தியாவில் நடந்த மிக அற்புதமாக விவாதங்கள் குறித்து சாய் நீபக் மேலும் கற்க வேண்டும் என்ற கருத்தை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.
காலனிய நீக்கம் குறித்த புத்தகத்தில், காந்தியின் ‘ஹிந்த் ஸ்வராஜ்’, லோகியாவின் ‘மார்க்ஸ்-காந்தி-சோஷலிஸம்’ அல்லது ஆசிஷ் நந்தியின் ‘இன்டிமேட் எனிமி’ ஆகிய நூல்கள் குறித்து ஒரு குறிப்பும் இல்லாதது மிக வினோதமாக இருக்கிறது. ஆக், காலனிய நீக்கத் திட்டத்தை எப்படியாகச் செயல்படுத்தக்கூடாது என்ற மாதிரியையே சாய் தீபக் நமக்கு அளித்திருக்கிறார்.
மரபுகளுக்கு இடையேயான உரையாடல்
சாய் தீபக்கின் வலதுசாரி சிந்தனைக்கு நேர் எதிராக, இடதுசாரி சிந்தனைத் தளத்தில் ஆதித்ய நிகாம் எழுதியிருக்கும் புத்தகம், ‘டி காலனைசிங் தியரி: திங்கிங் அக்ராஸ் டிரெடிஷன்ஸ்’ (புளூம்ஸ்பெரி இந்தியா,2020) இருக்கிறது. மிகவும் அடக்கமாக, குறிப்பாக உணர்த்தும் வகையில் நூல் எழுதப்பட்டிருக்கிறது.
பேராசிரியர் கவிராஜைப் போலவே ஆதித்ய நிகாமும் மரபிய மார்க்ஸிய சிந்தனைக்கு வெளியே இருந்து இந்த நூலை எழுதியிருக்கிறார். ஐரோப்பிய மையவாதத்தை விமர்சிப்பதில் நிகாம் அவருடைய சக்திகளை விரயம் செய்யாமல் இவர் செய்ய வேண்டியதை செய்து முடிக்கிறார். நம்முடைய கோட்டாட்டுரீதியான கருவிகளை நாம் எவ்வாறு காலனிய நீக்கம் செய்ய வேண்டும் என்பதன் மேல் கவனம் குவிக்கிறார்.
சாய் தீபக்கின் புத்தகம் வெளிவருவதற்கு முன்பே இவரது புத்தகம் வெளிவந்திருந்தாலும், சாய் தீபக்கின் புத்தம் எப்படியான வாதங்களை முன்வைக்கும் என்பதை எதிர்ப்பார்த்து பதில் சொல்வதுபோல் இருக்கிறது. தூய்மையான, உண்மையான இயல்விடம் சார்ந்த கண்ணோட்டத்தைத் தேடுவது என்பது மாயமானைத் தேடுவதைப் போலத்தான் என்று நாம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் வாதிடுகிறார். இயல்விடம் சார்ந்து வளர்ந்த சமூக, அரசியல் கோட்பாட்டு மரபை நாம் கொண்டிருக்கவில்லை. இத்தோடு, நம் தற்காலத்தை அமைப்பாக்கம் செய்யும் நவீனத்துவத்தை நம்மால் ஒதுக்கித் தள்ளவும் முடியாது.
ஆதித்ய நிகாமின் யோசனைகள் மிகவும் யதார்த்தமானவை. நாம் இங்கிருந்து, இப்போதிலிருந்து தொடங்க வேண்டும் என்கிறார். நாம் பெற்றுக்கொண்ட மேற்கத்திய சமூக கோட்பாடுகளை நாம் கட்டவிழ்க்க வேண்டும், மாற்றிப் பார்க்க வேண்டும் என்கிறார். நம்முடைய அனுபவத்திற்கு ஒத்த பிற பின் -காலனிய சமூகங்களின் அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். இதனோடு சேர்ந்து, நம் சொந்த கோட்பாடுகளை உருவாக்க வேண்டும் என்கிறார்.
புத்தகத்தின் இறுதிப் பகுதியில் அவர் முன்வைத்திருக்கும் யோசனை எனக்கு மிகவும் பிடித்திருந்தது: “நம்முடைய கேள்விகளை எப்படியாக வடிவமைக்கப்போகிறோம் என்பதும், அதற்கு எப்படியாக பதில் சொல்ல போகிறோம் என்பதும் முக்கியமான கேள்விகளாக இருக்கின்றன!”
இந்த யோசனை உள்ளார்ந்து கொண்டிருக்கும் தீவிரத்தை அவர் மேலும் வளர்தெடுத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கோட்பாட்டுரீதியான சிக்கல்கள் எப்படியானதாக இருந்தாலும், நடைமுறைப் பிரச்சினைகளை தீர்ப்பது என்பது அந்தப் பிரச்சினைகளைக் கடந்து செல்வதற்கான வழியை உருவாக்கிக் கொடுக்கிறது.
இப்படியாக வாசிப்போம் என்றால், காலனிய நீக்கம் என்பது சாமானியர்கள் அவர்களுடைய சொந்த மொழியில் எழுப்பும் வாழ்க்கை சார்ந்த கேள்விகளை எதிர்கொள்வதாக இருக்கிறதே ஒழிய, காலனியப்பட்ட கோட்பாடுகள், பெற்றுக்கொண்ட கோட்பாடுகளால் உருவாக்கப்பட்ட எதிர்ப்பார்ப்புகளாக இருப்பது இல்லை.
ஆக, ஒரு நல்ல கோட்பாடு அல்லது கருத்தாக்கம் என்பது நடைமுறையாளர்களுக்கு அர்த்தத்தை உருவாக்கிக்கொடுக்கும் ஒன்றாகவும், அவர்களுடைய மொழியில் அவர்கள் மேலும் முன்னேறிச் செல்வதற்கான வழிமுறையை உருவாக்கிக்கொடுக்கும் ஒன்றாகவும், அவர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் உலகத்திற்குள் செயல்படும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். இறுதியாக, காலனிய நீக்கம் என்பது, கலாச்சாரரீதியான, நாகரிகத்தளத்திலான நம்பிக்கை தொடர்பானதாகதான் இருக்கிறது; நம்முடைய கேள்விகளை நாம் கேட்டுக்கொள்வதாகவும், நமக்கு ஏற்ற விடைகளை நாம் தேடுவதாகவும்தான் இருக்க முடியும்.
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.