கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 10 நிமிட வாசிப்பு

காங்கிரஸ் அழிய வேண்டும் என்று ஏன் எழுதினேன்?

யோகேந்திர யாதவ்
04 Oct 2022, 5:00 am
2

ரலாற்றின் முக்கியமான கட்டங்களில் பழைய மனமாச்சரியங்களை யாரும் தொடர்வதில்லை; பொருளாதார அறிஞர் பால் சாமுவேல்சன் கூறியதைப் போல, “சூழ்நிலைகள் மாறும்போது, நானும் என்னுடைய மதிப்பீடுகளை மாற்றிக்கொள்கிறேன் – நீங்கள் எப்படி?”

“காங்கிரஸ் அழிய வேண்டும் என்று 2019இல் நீங்கள் ஒரு கட்டுரையில் சொல்லவில்லையா? அப்படிச் சொல்லிவிட்டு, இப்போது எப்படி காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து பாரத இணைப்பு யாத்திரையில் நடக்கலாம்? காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள யாத்திரையில் எப்படி நீங்கள் கலந்துகொள்ளலாம்?”  

திரும்பத் திரும்ப இதே கேள்விகளையே சமீபமாகப் பலரும் என்னிடம் கேட்கின்றனர். அரசியல் விமர்சகர்களுக்கு என்னைக் கேலி செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கடினமான இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்காமல் நான் மழுப்பிவிடுவேன் என்று ஊடக நண்பர்கள் கருதுகின்றனர். நியாயமான கேள்விதான் இது. அதேசமயம், அவர்கள் நினைப்பதைப் போல என்னை மேற்கொண்டு பேசவோ – செயல்படவோ முடியாமல் முடக்கிவிடும்படியான கேள்வியல்ல!

நான் அரசியல் ஆதாயத்துக்காக நான் திடீர் பல்டி அடிக்கவில்லை, திடீரென எனக்கு மனமாற்றமும் ஏற்பட்டுவிடவில்லை, இதுவரை பயணித்த பாதையிலிருந்து விலகி – எதிர்த்திசையிலும் நான் பயணித்துவிடவில்லை.

இந்த விமர்சனத்துக்கான காரணம் மிகவும் எளிமையானது; என்னை விமர்சிப்போரில் பெரும்பாலானவர்கள் நான் அப்போது என்ன சொன்னேன் அல்லது எழுதினேன் என்பதை முழுதாகப் படித்துப்பார்க்கும் அக்கறையில்லாதவர்கள், அதேபோல இப்போது நான் என்ன சொல்கிறேன் – எழுதுகிறேன் என்பதையும் படிக்கும் மனமில்லாதவர்கள். அவர்களுக்கு நினைவில் இருப்பதெல்லாம், ‘காங்கிரஸ் மடிய வேண்டும்’ என்று கட்டுரையில் நான் எழுதிய அந்த ஒரு வரி மட்டுமே; அவர்கள் கண்ணுக்குள் தெரிவதெல்லாம் ராகுல் காந்தியுடன் சேர்ந்து நானும் பாரத் ஜோடோ யாத்திரையில் நடப்பதுதான்; கணிதப் பாடத்தில் கடைசி வரியில் ‘க்யூ.இ.டி’ (Q.E.D.) – ‘இதைத்தான் நிரூபிக்க வேண்டியிருந்தது’ என்று முடிப்பதைப் போல, அப்போது நான் எழுதியதையும் - இப்போது நான் நடப்பதையும் இணைத்துப் பார்த்து முடிவுக்கு வந்தால் போதும் என்று கருதுகிறார்கள்.

காங்கிரஸ் மடிய வேண்டும் என்று எழுதியது ஏன்?

காங்கிரஸ் மடிய வேண்டும் என்று எழுதியதை விளக்குவதற்கு முன், 2019 மே 19இல் சுட்டுரையில் நான் எழுதிய வார்த்தைகளை மூலத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். “காங்கிரஸ் மடிய வேண்டும். இந்தத் தேர்தலில், இந்தியா என்ற கருத்தாக்கத்தைக் காப்பாற்ற முடியாமல்போனால் இந்திய வரலாற்றில் இந்தக் கட்சிக்கு இனி ஆக்கப்பூர்வமான பங்கு ஏதும் இல்லை. ஒரு மாற்று ஏற்பட முடியாமல் மிகப் பெரிய முட்டுக்கட்டையாக இன்றைக்கு காங்கிரஸ் இருக்கிறது.”

இரண்டு நாள்களுக்குப் பிறகு 1,123 வார்த்தைகளில், நான் குறிப்பிட்ட ‘மடிய வேண்டும்’ என்ற உருவக வார்த்தைக்கான விளக்கக் கட்டுரையை ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் எழுதினேன். “காங்கிரஸ் என்ற கட்சியே இருந்திருக்கவில்லை என்பதைப் போல நினைத்துச் செயல்படாவிட்டால், மாற்று அரசியல் முயற்சியே இங்கு முளைக்க முடியாது” என்று அதில் எழுதினேன். காங்கிரஸ் மரணிக்க வேண்டும் என்று நான் எழுதிய உருவகத்தை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை எதிர்த்தே ஆக வேண்டும் என்ற சிந்தனைக் குறைபாட்டுடன் அதை எழுதவில்லை என்றும் விளக்கியிருந்தேன். 

அந்தக் கட்டுரையானது காங்கிரஸ் தலைவர்கள் மீதான தனிப்பட்ட விமர்சனமாகவும் எழுதப்படவில்லை. “நான் சந்தித்த அரசியல் தலைவர்களைவிட ராகுல் காந்தி மிகுந்த அக்கறையுள்ளவராகவே திகழ்கிறார், மற்றவர்கள் நினைப்பதைப் போல அல்லாமல் மிகுந்த அறிவாளியாகவே இருக்கிறார்” என்றும் குறிப்பிட்டிருந்தேன். என்னை விமர்சித்தவர்களில் பலர் அந்த வரிகளையெல்லாம் அக்கறையுடன் படிக்கவில்லை.

என்னுடைய விமர்சனத்தின் அடிநாதம் நேர்மையானது. “நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் எழுச்சி நம்முடைய நாட்டின் ஜனநாயகம் – பன்முகத்தன்மை ஆகியவற்றைக் காக்கும் அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தாக இருக்கிறது; நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சி என்ற வகையில், இத்தகைய கொடூரத் தாக்குதலிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய முதல் கடமை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. இந்த வரலாற்றுக் கடமையை காங்கிரஸ் கட்சி கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் முறையாக நிறைவேற்றியிருக்கிறதா? இனிவரும் காலத்திலாவது இந்தக் கடமையை அது நிறைவேற்றும் என்று நம்பலாமா? என்னுடைய பதில் – ‘நிச்சயமாக இல்லை’. அந்தக் கடமையை நிறைவேற்றும் ஆற்றல் காங்கிரஸுக்கு இல்லை; அப்படிச் செயல்பட நினைப்பவர்களுக்கு தடைக்கல்லாகத்தான் காங்கிரஸ் இருக்கிறது!” இதைத்தான் நான் எழுதியிருந்தேன்.

ஆக, என்னுடைய குற்றச்சாட்டு என்பது, இந்தியா என்ற கருத்தாக்கத்தையே சிதைக்க முற்படும் பாஜக என்ற மிகப் பெரிய சக்தியை, காங்கிரஸ் கட்சி தீவிரமாக எதிர்க்க வேண்டும், அதை காங்கிரஸ் செய்யவில்லை என்பதுதான். அதே எதிர்பார்ப்பில்தான், இப்போது பாரத இணைப்பு யாத்திரையை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் செயலை ஆதரிக்கிறேன். இந்த ஆதரவு நிபந்தனையற்றது அல்ல. பாரத் ஜோடோ யாத்திரையை ஆதரிப்பது என்று தீர்மானித்து நானும் 200 செயல்பாட்டாளர்களும் அறிவுஜீவிகளும் கையெழுத்திட்ட கூட்டறிக்கையிலேயே இது இடம்பெற்றிருக்கிறது. ‘இந்தியாவின் அரசமைப்புச் சட்ட விழுமியங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்திவரும் பாஜக ஆட்சிக்கு எதிராக அமைதியாக – ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்க ஆதரவு தருகிறோம்’ என்று அறிக்கையில் தெளிவுபடுத்தியிருக்கிறோம். அதேசமயம், “பாரத் ஜோடோ யாத்திரைக்கு ஒருமுறை ஆதரவாக அளிக்கும் ஒத்துழைப்பு மூலம் நாங்கள் எங்களை எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் தலைவருடனும் பிணைத்துக்கொண்டுவிடவில்லை, அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள நம்முடைய குடியரசைக் காக்க அர்த்தமுள்ள எந்த இயக்கத்துடனும் வலுவான செயல்பாடுகள் அடிப்படையில், கட்சி கண்ணோட்டம் ஏதுமில்லாமல் சேர்ந்து செயல்பட முன்வந்திருக்கிறோம்” என்றும் விளக்கியிருந்தோம்.

என்ன மாறிவிட்டது?

என்னுடைய நிலையில் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை. பாஜக – ஆர்எஸ்எஸ்ஸின் தாக்குதலிலிருந்து நம்முடைய அரசமைப்புச் சட்ட விழுமியங்களைக் காப்பதுதான் என்னுடைய நோக்கமாக அன்றும் இன்றும் தொடர்கிறது. தேசிய அளவில் அமைப்பும், தொண்டர் பலமும் உள்ள மிகப் பெரிய கட்சி என்பதால் இதற்கு காங்கிரஸையே அன்றும் நாடினேன், இன்றும் நாடியிருக்கிறேன்.

இருப்பினும் ஏதோ மாறியிருக்க வேண்டும்; காங்கிரஸ் கட்சியை முன்னர் நான் நிராகரித்ததற்குக் காரணம் அக்கட்சியின் செயல்பாடு குறித்து செய்த மதிப்பீடுகளும் - பிறகு செய்த கணிப்புகளும்தான்; காங்கிரஸை ஒரு தோற்றுவிட்ட கட்சியாகவும், வரலாற்றுக் கடமையைச் செய்ய முடியாத தடைக்கல்லாகவும் கணித்தேன். அதற்குப் பிறகு என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது, மாறியது எது காங்கிரஸா அல்லது நானா?

காங்கிரஸ் கட்சி 2019 மக்களவை பொதுத் தேர்தலில் செயல்பட்ட விதம் குறித்த என்னுடைய விமர்சனத்தை மாற்றிக்கொண்டுவிட்டேனா? இல்லை. சமீபத்திய வரலாற்றைப் பின்தொடர்வதிலும் நான் பெரிய மாற்றங்களைச் செய்துவிடவில்லை. என்னுடைய கருத்துகளை, ஏமாற்றத்தை - 2019 தேர்தல் வாய்ப்பு எப்படி வீணடிக்கப்பட்டது என்ற என்னுடைய கோபத்தை மாற்றிக்கொள்ளும்படியான மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை.

கடந்த மூன்றாண்டுகளில் காங்கிரஸ் கட்சி மாறிவிட்டதா? நம்முடைய குடியரசின் மீதான தாக்குதலைத் தடுக்கும் தடுப்பரணாகச் செயல்படும் வலிமை காங்கிரஸுக்கு ஏற்பட்டுவிட்டதாக இப்போது நான் நம்புகிறேனா? இதற்கான பதில் நேர்மையானதாக இருக்க வேண்டும்: பதில் – “எனக்குத் தெரியாது.”

ஏனையோரைப் போல நானும் இந்தக் கேள்விக்கு பதிலைக் கண்டுபிடிக்க முயல்கிறேன். யாத்திரையில் பங்கேற்கும் காங்கிரஸ் தலைவர்களிடம் மட்டுமல்ல பிறரிடமிருந்தும், மக்களிடமிருந்தும்கூட இதற்கான விடையைப் பெற முயல்கிறேன். மதச்சார்பின்மை, சமூக நீதி, பொருளாதார சமத்துவம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் – குறிப்பாக ராகுல் காந்தி – ஐயத்துக்கு இடமில்லாமல் உறுதியுடன் பேசுவதைக் கவனித்துவருகிறேன்.

ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் நிச்சயமாக வேறு ஒன்று மாறியிருக்கிறது. அது எதுவென்றால் –  இந்தியா. மக்கள் நலக் குறியீடுகளில் 2019லேயே நாம் மோசமான நிலையில் இருந்தோம். இப்போதோ அனைத்துத் துறைகளிலும் வெகு ஆழத்துக்கே சென்றுவிட்டோம். இப்போது செங்குத்தான மலையுச்சியில் ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டிருக்கிறோம். நம்முடைய அரசமைப்புச் சட்டம், சுதந்திரப் போராட்ட பாரம்பரியம், நம்முடைய நாகரிகம் பின்பற்றிவந்த பாரம்பரியம் ஆகிய அனைத்தும் பேராபத்தை எதிர்கொண்டிருக்கின்றன. ஏதோ அரசாங்கம், ஜனநாயகம் பற்றியது மட்டுமல்ல, அனைத்துமே காப்பாற்றப்பட்டாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வரலாற்றின் முக்கியமான இந்தத் தருணத்தில், பழைய பூசல்களையும் மனமாச்சரியங்களையும் தூர எறிந்துவிட்டு, இந்த ஊழித் தீயை அணைக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும். ஜான் மேனார்டு கீன்ஸை அல்ல - பால் சாமுவேல்சனை நாம் பின்பற்ற வேண்டும். “சூழ்நிலை மாறும்போது, நான் என்னுடைய கணிப்பையும் மாற்றிக்கொள்கிறேன் – நீங்கள் எப்படி” என்பதே பால் சாமுவேல்சன் பாணி.

இறப்பா மறு பிறப்பா?

என்னுடைய முன் கணிப்பின் இப்போதைய நிலை என்ன? பாஜகவுக்கு ஒரு மாற்று ஏற்பட முடியாமல் தடைக்கல்லாக காங்கிரஸ் இருக்கிறது என்று முன்னர் எழுதினேன். பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் அல்லாத பிற கட்சிகளால் நல்ல மாற்றை ஏற்படுத்திவிட முடியும் என்ற கணிப்பு அதில் தொனித்தது. உண்மை என்னவென்றால், மாற்று அரசியல் ஏற்பாட்டைச் சிந்தித்த அனைவராலும் தார்மிக அடிப்படையிலும் நிரந்தரமாகச் செயல்படும் விதத்திலும் எதிர்க்கட்சிகளின் மாற்று ஏற்பாட்டைச் செய்யத் தவறிவிட்டோம். சில மாநிலக் கட்சிகள் தத்தமது மாநிலங்களில் பாஜகவை வலுவாக எதிர்த்து வெற்றிபெறும் வழியைக் கண்டுபிடித்தன. ஆனால், அவற்றால் தேசிய அளவில் பாஜகவுக்கு தகுந்த மாற்று சக்தியாக உருவெடுக்க முடியாது.

மக்கள் இயக்கங்களுக்கு தீரமும் ஆற்றலும் இருந்தாலும் பாஜகவின் பகாசுர தேர்தல் இயந்திரத்தை அவற்றால் எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியும், ஒரு சில வலிமையான எதிர்க்கட்சிகளும்தான் நம்முடைய குடியரசைக் காக்கும் கருவிகளாகச் செயல்பட முடியும்.  

கடைசியாக ஒரு வார்த்தை. காங்கிரஸ் மடிய வேண்டும் என்று நான் எழுதியதை மட்டும் நினைவில் வைத்துள்ளவர்கள், அந்தக் கட்டுரையை எப்படி முடித்திருந்தேன் என்பதை மறந்துவிட்டார்கள். ‘காங்கிரஸ் கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளவர்களின் ஆற்றல் இணையக்கூடியது சாத்தியமே.’ 

‘இறப்பு’ என்ற துயரகரமான உருவகம், ‘புதுப் பிறப்பு’ என்பதைச் சிந்திப்பதற்குமானது. ‘புதுப் பிறப்பு’ அல்லது ‘மறு பிறப்பு?’ பாரத் இணைப்பு யாத்திரையை மறு பிறப்புத் தருணமாக நினைத்துப் பார்ப்போமா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

3

2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   2 years ago

ஆம். சில மதிப்பீடுகள் nanoseconds கூட தாங்குவதில்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan P   2 years ago

யோகேந்திர யாதவ்-ன் “காங்கிரஸ் மடிய வேண்டும்” என்ற வார்த்தைகளை, வெறுப்பைக்கக்குதல் என்று எடுத்துக்கொள்ளாமல், அவற்றின் பின்னுள்ள ஆதங்கத்தை, எதிர்பார்ப்பை, உச்சபச்ச விருப்பத்தை வெளிப்படுத்துவதாக எடுத்துக்கொள்வதே நேர்மறை சிந்தனையாக இருக்கமுடியும். பிஜேபி அரசு மேற்கொள்ளும் தேசவிரோத நடவடிக்கைகளைப்பார்த்து வெறுத்துப்போய், ஒரு விடிவுகாலம் வராதா என்று ஏங்குகிறவர்கள் மத்தியில் அவர் தனித்து நிற்கிறார்; அவருக்குள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார் என்றே நினைக்கத்தோன்றுகிறது. ராகுல் காந்தியின் யாத்திரையில் அவர் கலந்துகொள்வதே இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

பிரதமர்பிரதான அரசியல் கட்சிகள்கூடுதல் சலுகைபீட்டர் அல்ஃபோன்ஸ் அருஞ்சொல் தமிழ்நாடு நவ்கூர்ந்து கவனிக்க வேண்டிய மஹாராஷ்டிர அரசியல் மாற்றமபார்க்கின்சன் நோய்Agricultureபொருளாதாரச் சுதந்திரம்ஐஐடிபண்டைய வரலாறுஎந்தச் சட்டம்வனப் பகுதிகேசிஆர் எழுச்சிதொழில்நுட்பம்இந்திய கம்யூனிஸ்ட் கட்சிஅஜயன் பாலா கட்டுரைபங்குச்சந்தைமுடி உதிர்வுமோசமான மேலாளர்மிகைல் கொர்பசெவ்தேசிய அரசியல்ரஜாக்கர்கள்மம்மூட்டிசீர்மைகறி விருந்தும் கவுளி வெற்றிலையும்கிங் மேக்கர் காமராஜரால் ஏன் கிங் ஆக முடியவில்லை?கூட்டுக் கலாச்சாரம்பஞ்சாப் முதல்வர்டாக்டர் ஆர்.மகாலிங்கம்ராஜ தர்மம்: குஜராத்தும் மணிப்பூரும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!