கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் தேவையில்லை

யோகேந்திர யாதவ்
12 May 2023, 5:00 am
0

ர்நாடக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் முடிவு என்ன என்பதை வாக்குக் கணிப்புகள் உறுதிசெய்துவிட்டன: இந்த முறை ஆளப்போவது காங்கிரஸ். சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு 110 - 115 தொகுதிகள் கிடைக்கும் என்பதால் கடந்த முறையைப் போல குதிரை பேரத்துக்கு வாய்ப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது. பெரும்பான்மைக்கும் அதிகமாகவே காங்கிரஸ் வெற்றிபெறும் என்று உறுதியாக நம்புகிறேன். ‘இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா’ வாக்குக் கணிப்பில் காங்கிரஸுக்கு 122 - 140, பாஜகவுக்கு 62 - 80, ஜேடி(எஸ்) கட்சிக்கு 20 - 25 என்று ‘ஈ-தினா’ தேர்தலுக்கு முந்தைய கணிப்பில் கூறியதை அப்படியே வழிமொழிகிறது. காங்கிரஸ் கட்சி 140க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் வெல்லக்கூடும் என்றே கருதுகிறேன்.

இந்தக் கணிப்புகளுக்குப் பிறகு ஒரு பெரிய கேள்வி எழுகிறது: காங்கிரஸுக்குக் கர்நாடகத்தில் கிடைக்கும் வெற்றியைக் கொண்டு செல்ல, பிற மாநிலங்களுக்கும் - 2024 மக்களவை பொதுத் தேர்தலுக்கும் இதே வழிமுறையைக் கையாள முடியுமா? அரசியல் சந்தை உத்திகள்படி, இதற்கு மூன்று கேள்விகளுக்குப் பதில் அளித்தாக வேண்டும். 1. வாக்காளர்களுக்கு நீங்கள் தரப்போகும் செய்தி என்ன? 2. உங்களுடைய இலக்காக யாருடைய வாக்கு வங்கி இருக்கப்போகிறது? 3. உங்களை ஆதரிக்கக்கூடியவர்களை எப்படி அணுகப் போகிறீர்கள் – உங்களை ஆதரிப்பது நல்லது என்று எப்படி புரியவைக்கப் போகிறீர்கள்? இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகளைத் தரும் முன்மாதிரியை காங்கிரஸுக்கு கர்நாடகத் தேர்தல் முடிவு தருமா?

தேர்தல் முடிவு வெளியாகும் மே 13 தொலைக்காட்சி விவாதங்களில் இந்தக் கேள்வி முக்கிய இடத்தைப் பெறாது. இந்தத் தேர்தல் தோல்விக்கு யார் பாராட்டப்பட வேண்டும், யாரை பலிகடா ஆக்க வேண்டும் என்றே பேசுவார்கள். பாஜக வெற்றிபெற்றால், இதற்கான பாராட்டை நெறியாளர்கள்கூட பிரதமர் மோடிக்கே வழங்குவார்கள், தோற்றால் பிரதமரைக் காப்பாற்றும் வகையில் பேசி - கர்நாடக மாநில பாஜக தலைமையைக் குற்றஞ்சாட்டுவார்கள். காங்கிரஸ்காரர்கள் வெற்றிபெற்றால், கார்கேவையும் ராகுல் காந்தியையும் பாராட்டுவார்கள், கட்சிக்கு இந்த முறை எல்லோமே திட்டமிட்டபடி அமைந்துவிட்டது என்பார்கள்.

இவ்விரு வகை கருத்துகளுமே உண்மையும்கூட. உள்ளூர் பாஜக தலைமை தோல்விக்குப் பொறுப்பேற்க வேண்டும். வெற்றிக்கு காங்கிரஸ் தேசியத் தலைமை பாராட்டப்பட வேண்டும். ஆனால், இவையெல்லாம் முழுக் கதையையும் சொல்லிவிடாது. 2024 மக்களவை பொதுத் தேர்தல்தான் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு இந்தப் பாராட்டுதல்களும் வசை பாடல்களும் அர்த்தமற்றவை.

கர்நாடகத்தில் பாஜகவுக்குக் கிடைக்கும் தோல்வி, மக்களவை பொதுத் தேர்தலில் அக்கட்சிக்குக் கிடைக்கப்போகும் தோல்விக்கு முன்னோடி என்றுகூட சிலர் எக்காளமிடக்கூடும். “பாஜகவின் முடிவு காலம் ஆரம்பமாகிவிட்டது” என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் பேசக்கூடும். நெறியாளர்களும் பாஜக பிரதிநிதிகளும் (சில சமயங்களில் யார் நெறியாளர், யார் பாஜக பிரதிநிதி என்ற குழப்பம்கூட ஏற்பட்டுவிடுகிறது) பதில் அளிக்கும்போது, “மாநிலத் தேர்தலுக்குப் பொருந்துவது - தேசியத் தேர்தலுக்குப் பொருந்தாது” என்று வாதிடுவார்கள். அது உண்மைதான், கர்நாடகத் தேர்தல் முடிவு தெலங்கானாவில்கூட எதிரொலிக்காது, பிற மாநிலங்களைப் பற்றிக் கேட்பானேன். சட்டப்பேரவையில் வாக்குகள் கிடைத்தவிதம் மக்களவையிலும் தொடரும் என்று கர்நாடக மாநிலத்தைப் பொருத்துக்கூட சொல்லிவிட முடியாது.

வெற்றியின் முக்கியத்துவம்

இந்தத் தேர்தல் வெற்றியின் முக்கியத்துவம் எதுவென்றால், 2024 மக்களவை பொதுத் தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற நிலையை ஏற்படுத்தி இருப்பதுதான். கர்நாடகத்தில் பாஜக வெற்றிபெற்றுவிட்டால், உளவியல்ரீதியாக தோல்வியை முன்னரே ஒப்புக்கொண்டுவிட்டு, மக்களவைத் தேர்தல் களத்தில் எதிர்ப்பு என்பது தீவிரமாக இல்லாமல் போயிருக்கும். தோற்கடிக்கப்பட முடியாத கட்சி அல்ல பாஜக என்ற தன்னம்பிக்கையை இந்தத் தேர்தல் முடிவு அளிக்கிறது. ‘பாரத் ஜோடோ’ யாத்திரையின்போது ஏற்பட்ட எழுச்சியை இது அப்படியே தக்கவைக்கும். இனி ‘மோடி எதிர் ராகுல் காந்தி’ என்று வந்தால் மோடிக்கே அது சாதகமாகிவிடாது என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு நம்பிக்கை ஊட்டும். அதற்கும் மேலாகவோ, குறைவாகவோ இந்தத் தேர்தல் முடிவு சொல்லப்போவது ஏதுமில்லை.

இதில் 2024 மக்களவை பொதுத் தேர்தல் முடிவு எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்ற நிலையை ஏற்படுத்தியிருப்பதுடன், எதிர்க்கட்சிகளுக்குத் தேவைப்படும் வெற்றி உத்தியை வகுக்கவும் கர்நாடகத் தேர்தல் முடிவு வாய்ப்பு தந்திருக்கிறது. வாக்குக் கணிப்பு அடிப்படையில் சில யோசனைகள் தோன்றுகின்றன.

நல்லாட்சி முக்கியம்

முதலாவதாக, நல்லாட்சி தருவது முக்கியம். நல்லாட்சியைத் தரத் தவறினால் தேர்தலில் தண்டிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். பிற மாநிலங்களைவிட கர்நாடக வாக்காளர்கள் ஆட்சியில் இருக்கும் கட்சியைத் தண்டிப்பதில் துடிப்பாகவே இருக்கிறார்கள். பசவராஜ் பொம்மை அரசின் திறனற்ற நிர்வாகம் காரணமாகத்தான் எளிதாக அதைத் தோற்கடித்துவிட்டார்கள் என்று கூறலாம். ஒன்றிய அரசை ஆளும் மோடியின் நிர்வாகம் இதைவிடப் பிரமாதம் இல்லை.

உயர் மதிப்புள்ள பணமதிப்பு நீக்கம், கோவிட்-19 காய்ச்சல் காலத்தில் தவறான முடிவுகள், தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பரிதவிப்புகள் – இழப்புகள், சீன எல்லையில் ஆக்கிரமிப்பைத் தடுக்கத் தவறியது, அன்றாடம் வெளிவரும் புதுப்புது ஊழல்கள் என்று ஒன்றிய அரசும் நிர்வாகத்தில் சீரழிந்தே இருக்கிறது. கர்நாடகத்தில் பாஜகவின் ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அதிகமாகக் காரணமான விலைவாசி உயர்வுக்கு மோடி தலைமையிலான ஒன்றிய அரசுதான் முக்கியக் காரணம். ஊழலைப் பொருத்தவரை கௌதம் அதானி நிறுவனம் தொடர்புள்ள ஊழலைத்தான் மக்கள் அன்றாடம் பேசுகின்றனர். ஊழலற்ற தலைவர் என்ற ஒளிவட்டம் மோடியின் தலைக்குப் பின்னாலிருந்து மறைந்து வெகு நாள்களாகிறது.

செயல்பாட்டில் மோடி அரசும் பொம்மை அரசும் ஒரே மாதிரியாக இருந்தாலும், பொம்மை அரசு குறித்து மக்கள் அறியும் வகையில் நிறையப் பேசினார்கள், மோடி அரசு பற்றி அதிகம் பேசவில்லை. மோடி அரசின் பிம்பத்தை நொறுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தால் மோடி அரசையும் தோற்கடித்துவிடலாம்.

மத உணர்வால் வெல்ல முடியாது

இரண்டாவதாக, வாக்குக் கணிப்பு உணர்த்துவது என்னவென்றால் மத அடிப்படையில் வாக்காளர்களைத் திரட்டும் முயற்சிகள் எப்போதும் வெற்றியைத் தராது. மதவாத வெறுப்புணர்வுக்கு கர்நாடகம்தான் சோதனைச் சாலையாக பயன்படுத்தப்பட்டது. ஹிஜாப் சர்ச்சை, ஆசான் ஒலிபரப்புக்குக் கட்டுப்பாடுகள், பசுவைக் கடத்துகிறார்கள் என்று திட்டமிட்டு அடித்துக் கொல்வது, இந்துப் பெண்களை லவ் ஜிகாத் செய்கிறார்கள் என்று தாக்குவது, திப்பு சுல்தானை மத வெறியனாக சித்தரிப்பது, பாடப்புத்தகங்களில் இருந்து நீக்குவது என்று எல்லாவற்றையும் செய்து பார்த்தது பாஜக. பஜ்ரங் தளம் தடைசெய்யப்படும் என்பதை பஜ்ரங் பலிக்கே தடை என்று மிகவும் தரம் தாழ்ந்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி. ஆளும் கட்சிக்கு சாதகமான தேர்தல் ஆணையம் இதைக் கண்டுகொள்ளாமலேயே விட்டதால், மதரீதியாக மக்களைத் திரட்டும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது பாஜக.

இருந்தாலும் வாக்காளர்கள் இந்த முயற்சிகளுக்கெல்லாம் இரையாகிவிடவில்லை. இந்தத் தேர்தலில் மதரீதியிலான பிரச்சினைகள் எழவில்லை. வாக்குக் கணிப்புகூட இந்து – முஸ்லிம் பிரச்சினை பெரிதில்லை என்றே காட்டுகிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவையே முக்கிய இடம்பிடித்தன. இந்து – முஸ்லிம் பிளவு தேர்தலில் முக்கிய அம்சமாகவே இடம்பெறவில்லை.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

ஹிஜாப்: கேள்விகளே தவறு!

யோகேந்திர யாதவ் 15 Feb 2022

அடித்தட்டு மக்கள்

மூன்றாவதாக காங்கிரஸ் கற்க வேண்டிய பாடம், வர்க்க முக்கோணத்தில் பீடமாக அதிக எண்ணிக்கையில் இருக்கும் வறியவர்கள்தான் முக்கியம் என்பது. சமூக அடிப்படையில் வாக்காளர்களின் தேர்வை ‘இந்தியா டுடே’ பகிர்ந்துள்ளது. ஷெட்டார் – சாவடி விலகலால் லிங்காயத்துகளின் வாக்குகள் பெருமளவுக்கு காங்கிரஸுக்குக் கிடைத்துவிடவில்லை. ஒக்கலிகர் வாக்குகள் பெரும்பாலும் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்குக் கிடைத்தாலும் அவர்களில் கணிசமான பகுதி பாஜகவுக்கும் கிடைத்துள்ளது. பட்டியல் இன மக்களிடையே இடது – வலது பிளவு ஏற்படவில்லை. முஸ்லிம்களுடைய வாக்குகள் காங்கிரஸுக்கு முழுதாகக் கிடைத்துள்ளன.

வாக்குக் கணிப்பை ஆராய்ந்தால், பாலினமும் வர்க்கமும் முக்கியப் பங்கு வகிப்பது தெரிகிறது. காங்கிரஸுக்கு பாஜகவைவிட ஆண்களிடையே 5% வாக்குகளும் பெண்களிடையே 11% வாக்குகளும் அதிகம் கிடைத்துள்ளன. மாதம்தோறும் ரூ.20,000க்கும் மேல் சம்பாதிப்பவர்கள் (மொத்த வாக்காளர்களில் 16%) இடையே காங்கிரஸைவிட பாஜகவுக்கு அதிக ஆதரவு. இதர 84% வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸைத்தான் ஆதரித்துள்ளனர். ‘ஈ-தினா’ கணிப்புப்படி ஏழைகள் காங்கிரஸையே அதிகம் ஆதரித்துள்ளனர், பணக்காரர்கள் பாஜகவை ஆதரித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி செய்த புத்திசாலித்தனமான காரியம் இந்த ஏழைகள் தங்களை ஆதரிப்பதை உறுதிசெய்யும் வகையில், ஐந்து முக்கிய வாக்குறுதிகளை அளித்ததுதான். இவற்றில் இரண்டு மகளிருக்கானவை, மற்றவை ஏழைகளில் வெவ்வேறு பிரிவினருக்கானவை. 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்த உத்தியைத்தான் தேசிய அளவில் காங்கிரஸ் பயன்படுத்த வேண்டும். தன்னை ஆதரிக்கும் வாக்காளர்களின் வர்க்க நிலைக்கேற்ப காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தேர்விலும் கவனம் செலுத்தியிருந்தால் வெற்றி மேலும் அதிகமாகி இருக்கும்.

போட்டி தொடரட்டும்

பாஜகவை வென்றுவிட முடியும் என்ற மன உறுதியும் கடுமையான உழைப்பும் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதையே கர்நாடக பேரவைத் தேர்தல் உணர்த்துகிறது. வெகு நீண்ட காலத்துக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் இந்த உறுதியை வெளிப்படுத்தி இருக்கிறது. மாநிலத் தலைவர்கள் வரம்பை மீற கட்சித் தலைமை அனுமதிக்கவில்லை. போட்டியிட வாய்ப்பு தரவில்லை என்ற பூசல் இம்முறை கட்டுக்குள்ளேயே இருந்தது. மக்களுடனான தொடர்புகளை கட்சியின் தேசியத் தலைமையே இறுதிசெய்தது. ராகுலும் பிரியங்காவும் பிரச்சாரத்துக்கு களத்தில் இருந்துகொண்டே முன்னிலை வகித்தனர். ராகுல் மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரைதான் கர்நாடகத்தில் காங்கிரஸ் பிரச்சாரத்துக்கே தளம் அமைத்துக் கொடுத்தது.

உறுதியான எதிர்ப்பு இருந்தால் பாஜக தோற்கத் தொடங்கிவிடுகிறது. தன்னிடமிருந்த அனைத்து ஆயுதங்களையும் அது பிரயோகித்தும் பயனில்லை. எதிராளியைவிட பாஜக பல மடங்கு செலவுசெய்தது. காங்கிரஸைவிட அதன் வாக்குச் சாவடிக் குழுக்கள் சுறுசுறுப்பாகத்தான் வேலை பார்த்தன. காங்கிரஸின் உறுதியான பிரச்சாரம் பாஜகவின் முயற்சிகளை முறியடித்துவிட்டது. மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையும், விவசாயிகள் போராட்டத்துக்கு எதிராக நிற்க முடியாமல் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நேர்ந்த தோல்வியையும் கர்நாடகத் தேர்தல் தோல்வி நினைவுபடுத்துகிறது. உறுதியான எதிர்ப்பு இருந்தால் பாஜகவால் வெற்றிபெற முடியாது.

கர்நாடக வாக்குக் கணிப்பு முடிவுகள் இறுதியாக உணர்த்துவது எதுவென்றால் 2024 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க மாய மந்திரம் ஏதும் தேவையில்லை. மக்களுடைய உண்மையான பிரச்சினைகளைத் தேர்தலில் பேசினாலே போதும், ஏழை மக்களுக்குப் புரியும் வகையில் அவர்களுடைய பிரச்சினைகளைப் பேசி அதற்குத் தீர்வைக் கூறினாலே ஆதரவு கிடைக்கும், இடைவிடாமல் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் என்று ஓராண்டு முழுக்க உழைத்தால் போதும், தோல்விக்கான மற்ற விஷயங்களை பாஜகவே செய்துவிடும்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ‘ஈ-தினா’ கணிப்பு
அரசியல் அகராதிக்குப் புதுவரவு ‘மோதானி’
ஹிஜாப்: கேள்விகளே தவறு!
எதிர்க்கட்சிகளின் இடத்தை வலுப்படுத்த ஒரு யோசனை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2

2





journalist samasஸெரெங்கெட்டிகிசுகிசுகுறை தைராய்டுஅடையாளச் சின்னங்கள்முடாசிற்றின்பம்கு.செந்தமிழ் செல்வன் கட்டுரைமுரண்பாடுதிருச்செங்கோடுவிடுதலைகோர்பசெவ்: மாபெரும் அவல நாயகர்கடலோரப் பகுதிநாகூர் இ.எம்.ஹனீஃபாவாக்காளர் குழு முறைவிசாரணைஉடற்பருமனைக் குறைக்கும் முக்கிய வழிகள்இனவொதுக்கல்விஜய் குமார்காவிரி மேலாண்மை ஆணையம்ரனில் விக்ரமசிங்கேமதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கிஷிர்க் ஒழிப்பு மாநாடுகனிமங்கள்ஆறு அம்சங்கள்ஐஆர்எஃப்இந்திய வேளாண் துறைபாண்டியர்கள்பாலின விகிதம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!