கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

எப்படி இருக்க வேண்டும் காங்கிரஸின் சமூக நீதிப் பாதை?

யோகேந்திர யாதவ்
05 Jul 2023, 5:00 am
0

ராகுல் காந்தி கர்நாடக மாநிலத் தேர்தல் சமயத்தில் பேசிய பேச்சு சம்பிரதாய நிமித்தமானது இல்லை; அது ஒரு திருப்பம் என்றுதான் நான் நினைக்கிறேன். அப்படியென்றால், மண்டல் அரசியலின் அடுத்தகட்ட ஆட்டம் காங்கிரஸின் கையில் இனி வரலாம்.

கர்நாடகக் கூட்டத்தில்தான் மோடியை நோக்கி இப்படிக் கேட்டார் ராகுல், ‘பிற்படுத்தப்பட்டோர் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் எடுத்த நடவடிக்கைகள்தான் என்ன? ஒன்றிய அரசில் செயலாளர்கள் பதவியில், பட்டியல் இனத்தவர் / பழங்குடிகள் / ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஏழு பேர் மட்டும்தான் இப்போது பதவி வகிக்கிறார்கள், இதுதான் உங்களுடைய அக்கறையா?  சாதிவாரியாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் ஏன் ஓடி ஒளிகிறீர்கள்?’

இதை வெறும் பொதுக்கூட்டப் பேச்சாகப் பார்க்க முடியாது. ராகுல் அந்தப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது அவருடைய முகத்தில் இருந்த தீவிரத்தையும், உடல்மொழியையும் நான் கவனித்தேன்; தான் கேட்டவற்றை எல்லாம் இனிவரும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்த வேண்டும் என்ற வேகம் அவரிடம் தெரிகிறது. கட்சி மாநாடுகளிலும் இது எதிரொலிக்கிறது.  

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

2024: யாருக்கு வெற்றி?

யோகேந்திர யாதவ் 09 Jun 2023

இழந்த செல்வாக்கை மீட்கிறது

ஏழைகள், தலித்துகள், பழங்குடிகள், மதச் சிறுபான்மையோருக்கு மிகவும் பிடித்தமான கட்சியாக நாடு முழுவதும் காங்கிரஸ்தான் முன்னர் இருந்தது. அவர்களில் கணிசமானவர்கள் இன்னமும் பிற கட்சிகளைவிட, காங்கிரஸுக்குத்தான் அதிகம் வாக்களிக்கின்றனர். ஆனால், கட்சியின் தலைமையும், கொள்கைகளும் திட்டங்களும் இதை அப்படியே எதிரொலிக்கும் விதத்தில் இடைப்பட்ட காலங்களில் இல்லை. இதைத்தான் சரிசெய்ய ராகுல் காந்தி விரும்புகிறார்.

இதைச் செய்வது அவ்வளவு எளிதுமல்ல; ‘ஒரே நதியில் நீங்கள் இரண்டு முறை புனித நீராட முடியாது’ என்று கிரேக்க மெய்யியலாளர் ஹெராகிளிடஸ் சொன்னதை இங்கே நினைவுகூரலாம். சமூக நீதி அரசியல் என்பது அது தொடங்கிய 1990 காலத்தில் இருந்த நிலையில் இப்போது இல்லை. 30 ஆண்டுகளுக்கு முன்னால் செய்திருக்கக்கூடியதை காங்கிரஸால் இப்போது செய்ய முடியாது. சமூக நீதி தொடர்பான கொள்கை – அரசியல் தொடர்பாக புதிதாக ஏற்பட்டுள்ள நிலைமைக்கேற்ப, உரிய உத்திகளையும் முன்னுரிமைகளையும் வகுத்துக்கொண்டுதான் காங்கிரஸ் செயல்பட வேண்டும்.

சமூக நீதி இப்போது மேற்கொண்டு நகர்த்த முடியாத இடத்தில் இருப்பதை அனைவருமே பார்க்க முடிகிறது. முதலாவதாக, இந்தி பேசும் மாநிலங்களில் பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி), சமாஜ்வாதி (எஸ்பி), ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) ஆகிய கட்சிகள் அரசியல்ரீதியாகவும் தேர்தல்களில் வெற்றிகளிலும் மேற்கொண்டு சாதிக்க முடியாமல் தேக்க நிலையை அடைந்துவிட்டன.

இரண்டாவதாக, சமூக நீதி என்பதைச் சொல்லும் விதமானது தலித்துகள், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முஸ்லிம்கள் ஆகியோரை ஒருவருக்கு எதிராக இன்னொருவரை நிறுத்தாவிட்டாலும் - தனித்தனியான கூறுகளாகப் பிரித்துவிட்டது.

மூன்றாவதாக, சமூக நீதியை வலியுறுத்துவோரில் பலர் சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்த சித்தாந்தரீதியாக தயங்குகின்றனர், இது தேவையற்றது.

நாலாவதாக, இப்படி முற்றுகையிடப்பட்ட நிலையில் வாழும் அவர்கள், உள்ளுக்குள்ளிருந்து தங்களுக்கு வரும் சோதனைகளை – அப்படியெல்லாம் ஏதுமில்லை என்று மறுக்கும் நிலையில் இருக்கின்றனர்; இடஒதுக்கீட்டுக்குள் கோரப்படும் உள் ஒதுக்கீட்டை நான் குறிப்பிடுகிறேன்.

இவையெல்லாம் சேர்ந்து, சமூக நீதி என்ற ஏற்பாட்டையே குலைக்கும் வகையில், ‘பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு’ (இடபிள்யுஎஸ்) இடஒதுக்கீடு வழங்கும் ஏற்பாட்டில் போய் முடிந்திருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

புதிய ராகுல்

யோகேந்திர யாதவ் 17 Mar 2023

மாற்றுவதற்கு உந்துதல் தேவை

அரசியலர்கள், முட்டுச்சந்தில் நீண்ட காலம் நிற்கமாட்டார்கள். அப்படி நின்றால் போக விரும்பாத இடம் நோக்கி மற்றவர்கள் தள்ளிவிட்டுவிடுவார்கள் அல்லது உங்களிடம் உள்ள விலை உயர்ந்தவற்றை அவர்கள் தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். சமூக நீதி அரசியலில் பாரதிய ஜனதா இதைத்தான் செய்துள்ளது; பட்டியல் இனத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடிகள் ஆகியோரில் வலுவான குழுத் தலைவர்கள், சமுதாய முன்னோடிகள், ஆண்ட பரம்பரையினர் ஆகியோரின் பெருமைகளைப் பாராட்டும் விதத்தில் பேசி, அந்தந்தப் பகுதி மக்களைத் தன்பக்கம் சேர்த்துக்கொண்டுவிட்டது. அதேபோல ஒவ்வொரு சமூகத்திலும் தனக்கு உடன்பட்டு வராத சமூகத்துக்கு அடுத்த நிலையில் அந்தப் பிரிவில் இருக்கும் சமூகத்தை வளைத்து, தன்பால் ஈர்த்து தன்னை வலுப்படுத்திக்கொண்டுவிட்டது.

இதற்காக அந்தந்தச் சமூகங்களின் தலைவர்களையும் அடையாளங்களையும் பெருமைகளையும் அது பயன்படுத்துகிறது. இதைச் சின்னஞ்சிறு சமூகங்கள், பட்டியல் இன மக்கள் பிரிவுகளில் செய்துகொண்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சிக்கு முன்னால் இருக்கும் பெரிய சவால் இதுதான். இந்த நிலையை மாற்ற அரசியல் கொள்கைகளையும் சமூக நீதி அரசியல் கருத்துருக்களையும் அது வெகு கவனமாக மறுசிந்தனைக்கு உள்படுத்த வேண்டும். இந்த வகையில் சிந்திக்க நான்கு வலுவான யோசனைகளைத் தெரிவிக்கிறேன்:

முதலாவதாக, சமூக நீதியைப் பொருத்தவரை இழந்த அரசியல் செல்வாக்கை மீட்க வேண்டும், புதிய ஆதரவைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். இன்றைக்கு வேலைவாய்ப்பைப் பொருத்தவரை அரசுத் துறைகளையும் அரசுத் துறை நிறுவனங்களையும்தான் பெரிதாக நினைக்கின்றனர். இப்போது அவ்விரண்டிலும் வேலைவாய்ப்புகள் - அதிலும் நிரந்தர வேலைவாய்ப்புகள் – அருகிவருகின்றன. அரசுத் துறையில் இருக்கும் இடங்களில் இந்தச் சமூகங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்பதை காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். நீதித் துறையில் – உயர் பதவிகளில் – பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்று ராய்ப்பூர் மாநாட்டுத் தீர்மான அடிப்படையில் வலியுறுத்த வேண்டும்.

இரண்டாவதாக, நலிந்தோர் நலனுக்கான நடவடிக்கைகள் அந்தந்தப் பிரிவுகளிலும் ‘உரியவர்க’ளுக்கு நேரடியாகக் கிடைப்பதற்கான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் காங்கிரஸ் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, தலித்துகள், பழங்குடிகள்,  பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் இதுவரை அதிகம் வாய்ப்பைப் பெறாத சமூகங்கள் பயன் பெறத்தக்க வகையில் உள் ஒதுக்கீட்டை ஆதரிக்க வேண்டும்.  

மூன்றாவதாக, சமூக நீதிக் கொள்கையை வெறும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடாக மட்டும் நிறுத்திவிடாமல், நலிந்தோர் நலனில் அக்கறையுடன் அதை மேலும் வளப்படுத்த வேண்டும். நம்முடைய சமூகம் பல்வேறுவிதமான அசமத்துவதங்களால் பகுதி பகுதியாக பகுக்கப்பட்டது. எனவே, இதைச் சாதி, வர்க்கம், பால் என்ற ஒற்றைப் பரிமாணத்துடன் வரையறுத்துவிட முடியாது. எனவே நன்மை செய்யும் நடவடிக்கைகளை சாதி என்ற ஒற்றை அடையாள வலியுறுத்தலுடன் நிறுத்தாமல், இன்னும் பல்வேறு அம்சங்களையும் சேர்த்து விரிவுபடுத்த வேண்டும்.

நாலாவதாக, சமூக நீதி அரசியலை மேற்கொள்ள நிறுவனரீதியாகவே புதுப்பிக்க வேண்டும். ஆண்டுதோறும் சமூக நீதி அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அதன் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்

சமஸ் | Samas 12 Apr 2023

ராகுல் உணர வேண்டியது

சமூக நீதியை வலியுறுத்தும் பிற அரசியல் கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி நில உடைமையாளராக இருக்கும் ஓபிசிக்களை அதிகம் கொண்ட கட்சியல்ல; அவர்கள் சமூக நீதிக் கொள்கைகளை வலிமைப்படுத்தவும் சீர்திருத்தவும் தடையாக இருப்பார்கள். தலித்துகளிலும் பழங்குடிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் சமூகப் பிரிவுகளை ஒதுக்கிவிட்டு, அடுத்த நிலையை அரவணைத்து ஏற்கெனவே வழிகாட்டியிருக்கிறது பாஜக. இதையே ஓபிசிக்கும் செய்யலாம். சில அம்சங்களில் ‘பலவீனம்கூட - பலத்துக்கு வித்திடும்’, ‘சிறியதும்கூட - அழகாகத் திகழும்’ என்பதை ராகுல் காந்தி இனிப் போகப் போகத் தெரிந்துகொள்வார்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

2024: யாருக்கு வெற்றி?
சக்தி வாய்ந்த இடத்தில் ராகுல்
புதிய ராகுல்
ராகுலாக இருப்பதன் முக்கியத்துவம்
காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
யோகேந்திர யாதவ்

யோகேந்திர யாதவ், சமூக அறிவியலாளர், அரசியல் செயல்பாட்டாளர். ஸ்வராஜ் இந்தியாவின் தேசியத் தலைவர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






தங்கம் தென்னரசுசெல்வாக்குள்ள சந்தோஷ்வழிகாட்டிஉடல் எடையைக் குறைப்பது எப்படி அருஞ்சொல்கிளாம்பாக்கம் ஏன் கிந்தனார்களே?சமூக ஜனநாயகக் கட்சிகட்சித்தாவல் தடைச் சட்டம்ஏகாதிபத்தியம்நெருக்கடி நிலைஎடிட்டிங்சாரு நிவேதிதா கட்டுரைகபில் சிபல்அம்பேத்கர் ரவிக்குமார் கட்டுரைதடுப்புத் தட்டிநடுவில் இரண்டு வர்ணத்தைக் காணோம்தடுப்பூசிகள்காந்தியர்கள்இலவச மின்சார இணைப்புகள்இமாலயம்அருஞ்சொல் நாராயண குருchennai rainதமிழக அரசின் நடவடிக்கை கண்டனத்துக்குரியதுபெரிய கோயில்மின் உற்பத்திசம்பாரண்கருப்பை வாய்சுவாசத் தொல்லைகள்உபநிடதங்கள்குற்றவாளிபோர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!