பேட்டி, அரசியல், கூட்டாட்சி 10 நிமிட வாசிப்பு

எதிர்க்கட்சிகள் கூட்டணி என்பதெல்லாம் அர்த்தமற்றது: அமித் ஷா பேட்டி

டி.வி.பரத்வாஜ்
10 May 2023, 5:00 am
0

ர்நாடகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, நாட்டின் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா பல்வேறு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டிகளிலிருந்து தொகுக்கப்பட்ட பகுதியை இங்கே ‘அருஞ்சொல்’ வாசகர்களுக்காகத் தருகிறோம்.   

தென்னிந்தியாவில் இன்று கர்நாடகம் மட்டும்தான் பாஜக ஆளும் கட்சி; 1985 முதல் இங்கு எந்த ஆளும் கட்சியும் அடுத்த தேர்தலில் வென்றதே கிடையாது. உங்களுடைய கணிப்பு என்ன?

இத்தகைய விஷயங்கள் எல்லாம் கல்லில் பொறிக்கப்பட்ட நிரந்தர விதிகள் அல்ல; பிரதமராக நரேந்திர மோடி தலைமையேற்ற 2014 முதல் இத்தகைய உதாரணங்கள் எல்லாமே மறைந்துவிட்டன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றத்துக்குப் பழகியிருந்த உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் பாஜக அடுத்தடுத்து வென்று ஆட்சி செய்கிறது. அசாமிலும் திரிபுராவிலும்கூட மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளோம். கர்நாடகத்திலும் அதுவே நடக்கும். அதேபோல, இதற்கும் முன்பாகவும் காங்கிரஸ், ஜனதா கட்சிகள் இங்கே அடுத்தடுத்த பொதுத் தேர்தலில் வென்று ஆட்சி செய்துள்ளன.

ஆனால், நீங்கள் குறிப்பிடுவது எல்லாம் 1985க்குப் பிறகு அல்ல...

ஏன் அதையே சொல்கிறீர்கள்; 2014க்குப் பிறகு நிலைமை மாறியிருக்கிறது. ஆட்சியமைக்கத் தேவைப்படும் அறுதிப் பெரும்பான்மை எண்ணிக்கை 113, அதைவிட மேலும் 15 இடங்களில் வெல்வோம். இதையே பொதுக் கூட்டங்களிலும் கூறிவருகிறேன். கர்நாடகத்தைப் பற்றி நன்கறிவேன்.

பாஜக ஆட்சி மீது கடுமையான ஊழல் புகார்கள் கூறப்படுகின்றனவே?

ஆதாரங்களுடன் ஒரு புகாரும் இல்லை. ஊழல் செய்திருந்தால் அதைக் குறிப்பிட்டு நீதிமன்றம் சென்றிருக்கலாமே; இந்தப் புகார்களைக் கூறும் காங்கிரஸ் பொதுநலனில் அக்கறை கொண்டு ஒரு மனுவையும் தாக்கல் செய்யவில்லை என்பதிலிருந்தே இவை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என்பது விளங்கும். கூட்டங்களில் பேசுவதாலேயே அவை உண்மையாகிவிடாது; அதேசமயம் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிரான புகார்கள் விசாரிக்கப்பட்டு குற்றப்பத்திரிகைகளும் தாக்கலாகி, கைதுசெய்யப்பட்டு, பிணையிலும் வெளிவந்திருக்கிறார்கள். கர்நாடக மக்களுக்கு இவையெல்லாமே தெரியும்.

எடியூரப்பா, பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசுகள் துடிப்பாகச் செயல்படவில்லையே?

(இடைமறித்து) எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள்? அரசின் செயல்பாட்டு அடிப்படையிலான சாதனைகளைப் பாருங்கள்.

முதலாவதாக, எடியூரப்பா, பசவராஜ் பொம்மை காலத்தில்தான் பாசனத் திட்டங்கள் அமலாக்கம் பெருவேகம் பெற்றது. மிகப் பெரிய 14 நீர்ப்பாசனத் திட்டங்கள் - நீண்ட காலமாக இழுத்துக்கொண்டிருந்தவை - நிறைவேற்றப்பட்டன. மாதேய், மேல் கிருஷ்ணா, கலசா-பண்டூரு, மேல் பத்திரை போன்ற பெரிய திட்டங்களுடன் ஏராளமான பாசனத் திட்டங்கள் - வெவ்வேறு கட்டங்களில் இருந்தவை - அனைத்தும் முடித்துத் தரப்பட்டன.

இரண்டாவதாக, கடந்த ஐந்தாண்டுகளில்தான் கர்நாடகத்துக்கு அதிக நேரடி அன்னிய முதலீடும் புத்தாக்கத் தொழில்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டது இந்த ஆட்சியில்தான். 2014இல் மோடி பிரதமரானது முதல் பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மட்டும் ரூ.13,000 கோடி செலவிடப்பட்டது. 2014இல் வெறும் 6 கிலோ மீட்டர் நீளத்துக்கு இருந்த மெட்ரோ ரயில் சேவை இப்போது 56 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் வரும் ஆட்சியில் 100 கிலோ மீட்டர் வரை மெட்ரோ சேவையை விரிவுபடுத்துவோம்.

பெங்களூருவைச் சுற்றியுள்ள ஊர்களுக்கான புறநகர் ரயில் சேவைக்கு முன்னுரிமை தந்து ரூ.15,000 கோடியில் திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். மங்களூரு துறைமுக ஆணையத்துக்கு ரூ.3,400 கோடி, பெங்களூரு – மைசூரு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு ரூ.8,000 கோடி, பெங்களூரு – சென்னை நெடுஞ்சாலை திட்டத்துக்கு ரூ.17,000 கோடி, பெங்களூரு – ஹைதராபாத் சாலைக்கு ரூ.31,000 கோடி, பீதர் – காலாபுராகி - பெல்லாரி சாலைத் திட்டத்துக்கு ரூ.7,000 கோடி ஒதுக்கியிருக்கிறோம். கர்நாடகத்தின் எந்தப் பகுதியையும் வளர்ச்சித் திட்டங்களில் சேர்க்காமல் விட்டுவைக்கவில்லை.

பெங்களூரு விமான நிலையத்தை விரிவாக்கிய அதேசமயம், மாநிலத்தில் புதிதாக 4 விமான நிலையங்களைத் திறந்திருக்கிறோம். மாதேய் நதிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறோம். இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (ஐஐடி) இரண்டையும், ஏழு பல்கலைக்கழகங்களையும் புதிதாகத் திறந்திருக்கிறோம். நான்காண்டுகளில் எந்த அரசும் இவ்வளவு திட்டங்களைக் கர்நாடகத்தில் நிறைவேற்றியதே இல்லை. இவற்றையெல்லாம் நாங்கள்தான் விளம்பரப்படுத்தத் தவறினோம். ஆனால் மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கைக்கு இதுதான் காரணம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கர்நாடகத் தேர்தலில் பேசப்படாதவை எவை?

ப.சிதம்பரம் 08 May 2023

ஜகதீஷ் ஷெட்டார், லட்சுமண் சாவடி இருவரையும் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர்கள் விலகிவிட்டார்களே; உங்களுடைய முயற்சி தோற்று அவ்விருவரும் காங்கிரஸில் சேர்ந்துவிட்டார்களே?

அவர்களை சமாதானப்படுத்த கடைசி வரை முயன்றோம், அவர்கள் விலகுவதால் கட்சிக்கு ஏற்படக்கூடிய இழப்பைத் தவிர்க்கப் பார்த்தோம் என்று சொல்கிறீர்களே, இது உண்மையாக இருந்தால் அவர்கள் வற்புறுத்தியபடி அவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியிருக்க மாட்டோமா? இரண்டு தொகுதிகளை எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே விட்டுக்கொடுப்பது எங்களுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்திருக்குமா? கட்சியின் நலனுக்காக நாங்கள் சில கொள்கை முடிவுகளை எடுத்திருக்கிறோம், எந்த தனிநபருக்காகவும் அதில் நாங்கள் சமரசம் செய்வதில்லை. அவர்கள் போகட்டும் என்று விட்டுவிட்டோம் என்று நீங்கள் நினைத்தால், அது எங்களுடைய தன்னம்பிக்கையைக் காட்டவில்லையா? ஒன்று நிச்சயம் அவ்விருவரும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கப்போகிறார்கள். 

லிங்காயத்து வாக்குகளையே பெரிதும் நம்பியிருப்பதால் அவ்விருவரையும் தக்கவைக்க கடைசி வரையில் நீங்கள் முயற்சி செய்தீர்கள் என்றே எல்லோரும் கருதுகிறார்கள்; காரணம் ஒக்கலிகர்கள் உங்கள் பக்கம் சேர மறுத்துவிட்டார்கள், சித்தராமய்யா காரணமாக குருபர்கள் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் பக்கம் நிற்கிறார்கள் என்பது சரியா?

கடந்த காலங்களிலும் ஒக்கலிகர், குருபா சமூகங்களைச் சேர்ந்த சிலர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக எங்கள் கட்சி சார்பிலும் பதவி வகித்திருக்கிறார்கள். இப்போதும் அச்சமூகத்தவர்கள் எங்களை ஆதரிக்கின்றனர். இந்த முறை ஒக்கலிகர்கள் செல்வாக்கு நிரம்பிய மாண்டியா – மைசூரு பிரதேசத்தில் பாஜகவுக்கு ஆதரவாக அதிகம் பேர் திரண்டுவந்தார்கள். இதுவரை நான் கலந்துகொண்ட பொதுக் கூட்டங்களிலேயே மிகப் பெரியது மாண்டியாவில்தான் நடந்தது. தேர்தலுக்கு முன்னதாகவே பிரதமர் மோடி, மாண்டியாவில்தான் முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவர்களிடம் ஆதரவு வலுத்து இருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்களின் பலனை அடையாத வரையில்தான் சாதி அடிப்படையிலான அரசியல் எடுபடும். 2014க்குப் பிறகு மோடி அரசின் பலன்களை அடைந்தவர்கள் என்ற புதிய பிரிவினர் எல்லா மாநிலங்களிலும் உருவாகியிருக்கின்றனர். கர்நாடகத்தில் இரட்டை என்ஜின் அரசு (ஒன்றிய – மாநில அரசுகள்) ஏழைகளுக்கு 4 லட்சம் வீடுகளைக் கட்டிக்கொடுத்திருக்கிறது, ஜல்ஜீவன் திட்டத்தில் புளோரைடு கலக்காத தூய குடிநீரை 45 லட்சம் வீடுகளுக்கு குழாய் இணைப்பு மூலம் நேரடியாக வழங்கியுள்ளது, கழிப்பறை இல்லாத வீடுகளில் 48 லட்சம் வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது, இலவச அரிசி – கோதுமை கர்நாடகத்தில் 4 கோடி மக்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது, கிசான் சம்மான் நிதித் திட்டம் மூலம் 54 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 15,000 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 8.37 கோடி மக்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் மக்களில் 37 லட்சம் பேருக்கு உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு அடுப்பு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. ஊடகங்கள் இத்தேர்தலில் சாதி அடிப்படையில் மட்டும் அரசியலைப் பார்ப்பதிலிருந்து விலகி, அரசின் நலத் திட்டங்களின் விளைவுகளையும் பார்க்க வேண்டும். நீங்கள் அவர்களைப் பார்க்க மறுக்கிறீர்கள், நாங்கள் அவர்களைப் பார்க்கிறோம். தங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர உயர அவர்கள் எங்களை ஆதரிப்பதும் அதிகரிக்கிறது. இனி வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும்.

அடுத்த முதல்வரும் லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்ற புரிதல் உங்களுக்கும் லிங்காயத்து மடங்களைச் சேர்ந்த மடாதிபதிகளுக்கும் இடையில் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்களே?

அப்படியொரு ரகசிய உடன்பாட்டுக்கெல்லாம் அவசியமே இல்லை; இப்போதுள்ளவரே லிங்காயத்துதானே!

அப்படியானால் அவரை ஏன் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை?

என்னய்யா கேள்வி இது! ஏற்கெனவே அவருடைய தலைமையில்தான் தேர்தலைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம், வென்றால் அவர்தான் முதல்வர் என்றால், வேடிக்கையாக இருக்காதா? பிற மாநிலங்களில் யார் தலைமையில் தேர்தலைச் சந்தித்தோமோ அவர்தானே முதல்வராகத் தொடர்கிறார்!

குடும்ப அரசியலுக்கு எதிராக பாஜக பிரச்சாரம் செய்கிறது. ஆனால், பாஜகவில் பல அரசியல் தலைவர்களின் மகன் அல்லது மகள் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டிருக்கிறதே?

குடும்ப அரசியல் என்றால் என்ன என்று யோசித்துப் பாருங்கள். அரசியல் தலைவர்களின் மகன் அல்லது மகளுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுப்பதே குடும்ப அரசியலாகிவிடாது. கட்சி முழுவதையும் ஒரே குடும்பம் தன்வயப்படுத்தி, இப்போதைய தலைவருக்குப் பிறகு அவருடைய மகன், மகள், மருமகன், மருமகள், மனைவி என்று தலைமுறை தலைமுறையாகக் குடும்பத்தாரே ஆதிக்கம் செலுத்துவதுதான் குடும்ப அரசியல். காங்கிரஸ் கட்சியில் ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று கட்சித் தலைமை ஒரே குடும்பத்தின் கையில் இருக்கிறது.

முலாயம் சிங் யாதவுக்குப் பிறகு அகிலேஷ் யாதவ், லாலு பிரசாதுக்குப் பிறகு தேஜஸ்வி யாதவ் – தேஜ் பிரதாப் யாதவ், எச்.டி.தேவ கௌடாவுக்குப் பிறகு எச்.டி.ரேவண்ணா பிறகு குமாரசாமி, மருமகள், பிறகு இரண்டாவது மருமகள், பிறகு இரண்டு பேரன்கள் – இதுதான் குடும்ப அரசியல். வாரிசு அரசியலும் வேண்டியவர்களுக்கே பதவியைத் தருவதும்தான் தவறு. பாஜகவில் அத்வானி அவருக்குப் பிறகு வெங்கையா, ராஜ்நாத் சிங் - இப்போது நட்டா என்று கட்சித் தலைமை வெவ்வேறு தலைவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. குடும்ப கட்சிக்கும் எங்களுக்கும் கட்டமைப்பிலேயே வேறுபாடு இருக்கிறது.

கர்நாடகத்தில் உங்கள் ஆட்சிக் காலத்தின் இறுதியில் இடஒதுக்கீட்டில் செய்துள்ள மாற்றத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வந்துள்ளதே?

பட்டியல் இனத்தவர், பழங்குடிகளுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்ததற்கு எதிராக வழக்கு தொடரப்படவில்லை, முஸ்லிம்களுக்கு மத அடிப்படையில் வழங்கிய ஒதுக்கீட்டை ரத்துசெய்துவிட்டு அதை லிங்காயத்துகள், ஒக்கலிகர்களுக்கு வழங்கியதை எதிர்த்துத்தான் வழக்கு.

மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவுக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டம் அனுமதிக்காத ஒன்று சரி என்று எந்த நீதிமன்றமும் கூறிவிடாது. அதேசமயம் முஸ்லிம்களுக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்ட இதர பொதுப் பிரிவினருக்கான இடங்களில் வாய்ப்பு தரப்படுவதைத் தடுக்கவில்லை. இதில் எங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. அரசு எடுத்த முடிவுக்கு ஆதரவாகவே நீதிமன்றம் தீர்ப்பு கூறும் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம்.

உங்களை ஆதரிக்கும் பஞ்சாரா பழங்குடிகள்கூட பட்டியல் இனத்தவர், பழங்குடிகள் இடஒதுக்கீட்டில் நீங்கள் செய்த மாற்றம் குறித்து அதிருப்தி தெரிவித்திருக்கிறார்களே?

காங்கிரஸ்தான் அவர்களுடைய மனங்களில் குழப்பங்களை ஏற்படுத்தியது. நாங்கள் ஆறு முறை அவர்களைச் சந்தித்து இந்த மாற்றத்தால் உங்களுக்கு வாய்ப்புகள்தான் அதிகரிக்கும் என்று விளக்கியதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கான தனி ஒதுக்கீட்டை நீங்கள் ரத்துசெய்தது மத அடிப்படையில் வாக்குகளை அணி திரளச் செய்வதற்காக என்று கூறுகிறார்களே?

என்ன வேண்டுமானாலும் கூறட்டும், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதை எதிர்ப்பதிலிருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்.

மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்றார், இப்படி என்னை இவர்கள் அவதூறாகப் பேசுவது இது 91வது முறை என்றார் மோடி; இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?

மக்களிடையே மோடி பிரபலமாகி இருக்கிறார். கடந்த ஒன்பது ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரத்தை நிலைப்படுத்தி வலுப்படுத்திவருகிறார், உலக அரங்கில் நாட்டுக்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார். மக்களிடையே மதிப்பு பெற்ற தலைவரை இப்படி சிறுமைப்படுத்திப் பேசுவது மக்களிடையே நிச்சயம் எதிர்விளைவை ஏற்படுத்தும். வாக்குச் சீட்டில் அது வெளிப்படும்.

பாரத் ஜோடோ யாத்திரையைக் கர்நாடகத்தில் ராகுல் காந்தி விரிவாக நடத்தியிருக்கிறார், இத்தேர்தல் முடிவு அதனை ஒட்டி அமையுமா?

அவருடைய யாத்திரைக்குப் பிறகு திரிபுரா, நாகாலாந்து, மேகாலய மாநிலங்களில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடந்தது. அவையெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு கோட்டைகளாக இருந்தவை. ஜோடோ யாத்திரைக்குப் பிறகு அங்கு இரட்டை இலக்கத்தில்கூட தொகுதிகளைக் காங்கிரஸால் வெல்ல முடியவில்லை, பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

காங்கிரஸுக்கு மக்கள் வாக்களிப்பதை ‘உத்தரவாதப்படுத்தும்’ வகையில் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்களே?

உத்தராகண்ட் உத்தர பிரதேசங்களில்கூட இதேபோன்றுதான் ‘உத்தரவாத வாக்குறுதிகளை’ அளித்தார்கள், வெல்லவில்லையே! நம்பிக்கைக்குரியவர்கள் கூறினால்தான் மக்கள் நம்புவார்கள். வென்ற இடங்களிலும் அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லையே? காங்கிரஸின் வாக்குறுதிகள் திவாலான வங்கிகளுக்கு அளிக்கும் காசோலைகளைப் போன்றவை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

விட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்

ப.சிதம்பரம் 01 May 2023

மதச்சார்பற்ற ஜனதா தளமும் களத்தில் இருக்கிறது, அதன் வெற்றி வாய்ப்புகள் எப்படி?

மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு வாக்களிப்பது காங்கிரஸுக்கு வாக்களிப்பதைப் போலத்தான் என்று 2018 தேர்தலுக்குப் பிறகு மக்கள் பார்த்துவிட்டார்கள். தேர்தலில் அதிகத் தொகுதிகளில் வென்று பாஜக முதலிடத்திலும் அடுத்த இரண்டு இடங்களில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளமும் வந்தன. முடிவுகள் வெளியான உடனேயே தேவ கௌடாவும் குமாரசாமியும் ஒரே காரில் காங்கிரஸ் அலுவலகம் போனார்கள். எனவே, காங்கிரஸுக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் இம்முறை நேரடியாக பாஜகவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.

காங்கிரஸை விட்டுவிட்டு பாஜகவுக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள்?

ஒரு சின்ன உதாரணம் கூறுகிறேன். கிசான் சம்மான் நிதியைப் பெற தகுதியுள்ள விவசாயிகள் பட்டியலை காங்கிரஸ் முதல்வர் சித்தராமய்யாவைக் கேட்டோம். அவர் 17 லட்சம் விவசாயிகளின் பெயர்களைக் கொண்ட பட்டியலைத்தான் கொடுத்தார். அனைத்து விவசாயிகளின் பெயர்களையும் கொடுத்து அவர்கள் நிதியைப் பெற்றுவிட்டால் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகரித்துவிடும் என்று அஞ்சினார். அடுத்து பாஜக தலைமையில் ஆட்சி ஏற்பட்ட பிறகு 54 லட்சம் விவசாயிகள் அந்த நிதியைப் பெற்றார்கள். அந்த விவசாயிகள் பாஜக ஆட்சி நீடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்களா?

ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டம் பாஜக அரசில்தான் வேகம் பெற்றது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேரும் மக்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது. பெங்களூரு மாநகரில் குடிநீர் வழங்க, கழிவுநீரை வெளியேற்ற, போக்குவரத்து நெரிசலைக் குறைக்க – சாலைகள் மேம்பாலங்கள் அமைக்க ரூ.70,000 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒன்றியத்தை முன்னர் ஆண்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைவிட இரண்டு மடங்கு நிதியை கர்நாடக வளர்ச்சிக்காக பாஜக அரசு ஒதுக்கியிருக்கிறது. உழைப்பாளிகளுக்கு ‘சலுகை’யாக இவற்றை பாஜக செய்யவில்லை, இது அவர்களுக்கான ‘உரிமைப் பங்கு’. ஆனால், அது காங்கிரஸால் மறுக்கப்பட்டது.

அடுத்ததாக, ‘பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா’ (பிஎஃப்ஐ) என்ற அமைப்பு நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உருவானது. காங்கிரஸ் அரசு அலட்சியமாகவே இருந்தது. அவர்களுக்கு எதிரான வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன. அவர்களில் சிலரை காங்கிரஸ் அடை காத்தது. ஆனால், மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, நாடு முழுவதுமே இது நடந்தது. கர்நாடக மக்கள் இப்போது பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்.

அடுத்ததாக, கர்நாடக மக்களில் அனைத்துப் பிரிவினரிடையேயும் பாஜகவுக்கு ஆதரவு இருக்கிறது. காங்கிரஸ் சில சமுதாயங்களுக்கு இடையிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சமூகத்தவரிடையேயும் மட்டும்தான் செல்வாக்குடன் இருக்கிறது. தரமான வாழ்க்கைக்கு அவசியமான குடிநீர், கழிப்பறை, மின்சார இணைப்பு, வீடுகள் ஆகியவற்றைத் தருவதன் மூலம் மக்களிடையே பாஜகவுக்கு ஆதரவு அதிகமாகியிருக்கிறது.

கர்நாடகத்தில் பாஜக தோற்றுவிடும் என்று எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் இருக்கின்றன. இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளையும் ‘ஒன்றுகூட்டப் போவதாக’ பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் கூறியிருக்கிறாரே?

எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பதெல்லாம் அர்த்தமற்றது. ஒன்று கூட்டுவது என்றால் என்ன, நிதிஷ் குமார் கட்சி வேட்பாளர்கள் எத்தனை பேர் குஜராத்தில் நிறுத்தப்படுவார்கள்? மம்தாவின் கட்சிக்காரர்கள் உத்தர பிரதேசத்தில் எத்தனை இடத்தில் போட்டியிடுவார்கள்? அகிலேஷ் யாதவ் கட்சிக்காரர்கள் எத்தனை பேர் மேற்கு வங்கத்தில் போட்டியிடுவார்கள்? யார் இங்கே ஒன்றிணைந்து நிற்கிறார்கள்? அத்தனை எதிர்க்கட்சிகளும் அவரவர் மாநிலங்களில் எங்களுக்கு எதிராகத்தான் போட்டியிடுகின்றனர்.

அகிலேஷும் காங்கிரஸும் கூடிப் பேசுவதில் அர்த்தமே இல்லை, உத்தர பிரதேசத்தில் காங்கிரஸே இல்லை. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நாடு முழுவதும் புதிய கட்சிக்கு ஆதரவைத் திரட்டச் செல்லலாம், ஆனால் சொந்த மாநிலத்திலேயே ஆதரவை இழந்துகொண்டிருக்கிறார். பத்திரிகைகள் தங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் தலைப்பிடலாம் – செய்தி போடலாம்; எதிர்க்கட்சிகள் ஒற்றுமை முயற்சியால் ஏற்படக்கூடியது என்ன என்று அவை முதலில் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

2019 தேர்தலில் 37% வாக்குகளை மட்டுமே பெற்று பாஜக 302 இடங்களில் வென்றது. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாதபடிக்கு அவை ஒருங்கிணைந்து போட்டி போட்டால் அதிக தொகுதிகளில் வெல்ல முடியும் என்பது சரியான உத்திதானே?

ரொம்ப நல்லது, இது எப்படி சாத்தியப்படும் என்று கொஞ்சம் விளக்குங்களேன்; உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் போட்டி போடாதா? ஒடிஷாவில் பிஜு ஜனதா தளம் ஒதுங்கி நிற்குமா? பஞ்சாபில் அகாலிதளம் என்ன செய்யும்? தில்லியில் காங்கிரஸும் ஆஆகவும் கைகோக்குமா? கம்யூனிட்ஸ்டுகளும் மம்தாவும் ஒரே அணியில் இருப்பார்களா? பாஜகவுக்கு எதிராக நேரடிப் போட்டி எங்கெல்லாம் இருக்கும்? கேரளத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணியும் - ஐக்கிய ஜனநாயக முன்னணியும் ஒரே அணியாகிப் போட்டியிடுமா? நீங்கள் சொல்வதில் ஒன்றை ஏற்கிறேன், நாங்கள் எங்களுடைய ஆதரவு வாக்கு சதவீதத்தை மேலும் 10% கூட்டியாக வேண்டும்.

தில்லியில் ஆஆக முதல்வர் கேஜ்ரிவாலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள், பஞ்சாபில் அதே கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு ஒத்துழைப்பு தருகிறீர்கள் இது ஏன்?

பஞ்சாப் எல்லையோர மாநிலம், அங்கே பிரிவினைவாதிகள் பலம் பெறுவது நல்லதல்ல. தேச நலனில் அக்கறை கொண்டுதான், அம்ரித்பால் சிங்கை பஞ்சாப் அரசு கைதுசெய்ய எல்லா உதவிகளையும் செய்தோம். நாங்கள் மட்டுமல்ல; யாருமே நாட்டின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

கர்நாடகத்தில் காங்கிரஸ் காற்று

யோகேந்திர யாதவ் 07 May 2023

சத்தீஸ்கரில் நக்ஸல்கள் போலீஸ்காரர்களின் வாகனத்தைக் கண்ணி வெடி வைத்து தகர்த்தும் துப்பாக்கிச் சண்டையிட்டும் கொன்றிருக்கிறார்கள், நக்ஸல்களை ஒடுக்க முடியவில்லையே?

2014 உடன் ஒப்பிடுகையில் நக்ஸல்களுடைய வன்செயல்கள் 20% குறைந்துள்ளன, அவர்களுடைய தரப்பில் ஆள் இழப்பு 20% அதிகரித்திருக்கிறது. இப்போது பிஹார், ஜார்க்கண்ட், ஒடிஷா, தெலங்கானா, ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் நக்ஸல்கள் தாக்குதல் இல்லை. சத்தீஸ்கர் மாநிலத்தில் நான்கு மாவட்டங்களில்தான் அவர்கள் செயல்படுகின்றனர். அவர்களை ஒடுக்கவும் அவர்கள் இருக்கும் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கும்போது இப்படிப்பட்ட திடீர் எதிர்த் தாக்குதல்கள் நடைபெறுகின்றன. வெகு விரைவிலேயே நாடு முழுவதிலும் நக்ஸல்களுடைய செல்வாக்கு முடிவுக்கு வந்துவிடும் என்று நம்புகிறேன்.

சமீபத்தில் பூஞ்ச் மாவட்டத்தில்கூட பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தைத் தாக்கியிருக்கிறார்கள்; அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட பிறகு ஜம்மு – காஷ்மீரில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிட்டது?

கோழைத்தனமான அந்தத் தாக்குதல் துயரகரமானது. ஒரு நாளில் நடக்கும் சம்பவம் முழுச் சித்திரத்தைக் காட்டிவிடாது. ஆனால் எந்த ஒரு சம்பவத்தையும் அரசு பதிலடி இல்லாமல் விட்டுவிடாது. 370 ரத்தான பிறகுதான் ஒவ்வொரு தாக்குதலுக்கும் உடனுக்குடன் பதிலடி தரப்படுகிறது. வன்செயல்கள் குறைந்துவிட்டன. இப்போதெல்லாம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டால் மயானத்துக்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு செல்வதில்லை. மத்திய அமைச்சர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்குக்குச் செல்லும்போது யாரும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுப்பதில்லை. அப்படியே அழைப்பு விடுத்தாலும் அதற்கு ஆதரவு இருப்பதில்லை, நான் ஐந்து முறை சென்றுவந்தேன். பாரமுல்லாவில் என்னுடைய நிகழ்ச்சிக்கு ஏராளமான உள்ளூர் மக்கள் வந்திருந்தனர்.

மோடி சென்றபோது அவருடைய பெயரைச் சொல்லியே மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். நிறைய நல்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவேற்றப்படுகின்றன. அடித்தளக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படுகின்றன. ஆயிரம் கோடிகளில் முதலீடுகள் வரத் தொடங்கியுள்ளன. ஒன்றிய அரசின் முயற்சியால் தேசிய அளவிலான பல அமைப்புகள் தொடங்கப்படுகின்றன. உள்ளாட்சிமன்றத் தேர்தலில் 98% மக்கள் வாக்களித்து இப்போது 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரையில் இல்லாத வகையில் 1.8 கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்குச் சென்றுள்ளனர். 370 ரத்துசெய்யப்பட்டதால் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் சிலர் பேசினார்கள், நடப்பதோ வேறு. வன்செயல்கள் எண்ணிக்கை 68% குறைந்துள்ளது, இறப்பும் 72% குறைந்திருக்கிறது. சிவிலியன்கள் இறப்பதும் 82% குறைந்திருக்கிறது. கல்லெறிவது ஓய்ந்துவிட்டது. ஊடுருவுவதும் மதத் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்களைச் சேர்ப்பதும் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இவையெல்லாம் அரசுக்குக் கிடைத்த வெற்றிகள் என்றே கருதுகிறேன். 370 ரத்துக்குப் பிறகு சட்டம் – ஒழுங்கு மேம்பட்டிருப்பதும் பயங்கரவாதம் குறைந்திருப்பதும் மோடி அரசின் சாதனைகள் என்றே பார்க்கிறேன்.

ஆனால் தேர்தல் எப்போது நடக்கும் என்பது நிச்சயமாகத் தெரியவில்லையே?

தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் வேலை. மாநில மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது, தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட மோசடிகளைச் செய்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் சரிபார்த்து திருத்த வேண்டி இருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி தொகுதிகளில் பட்டியல் இனத்தவர் - பழங்குடிப் பிரிவினருக்கு இடங்களை ஒதுக்குவதும் நடக்கிறது. தொகுதிகளை மறுவரையறை செய்வதும் தொடர்கிறது. இவையெல்லாம் முடிந்தவுடன் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும், அதைத் தீர்மானிக்க வேண்டியது தேர்தல் ஆணையம்தான்.

கர்நாடக அரசு தோற்றுவிட்டது, மக்களிடையே ஆதரவில்லை என்பதற்காகத்தான் மோடியும் அமித் ஷாவும் செல்கின்றனர் என்று எதிர்க்கட்சிகள் பேசுகின்றனவே?

நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நிச்சயமாகத் தெரிந்த மாநிலங்களிலும், எங்களுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று நன்கு தெரிந்த ஓடிஷா, ஆந்திரம், தெலங்கானா, மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் போன்ற மாநிலங்களிலும் பிரச்சாரத்துக்குச் செல்கிறோம். காங்கிரஸ் கட்சி தேர்தல்களை, ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பாக மட்டுமே பார்க்கிறது. நாங்கள் மக்களைச் சந்திக்கவும், எங்களுடைய சித்தாந்தங்களை எடுத்துக் கூறி கட்சியை வளர்க்கவும் இதையே வாய்ப்பாகக் கருதுகிறோம். எங்களுடைய திட்டங்களையும் சாதனைகளையும் விளக்குகிறோம், நாங்கள் ஏன் மாநிலத் தேர்தல்களுக்கு போகக் கூடாது?  

பஜ்ரங் தளத்துக்கு தடை விதிப்போம் என்ற காங்கிரஸின் வாக்குறுதி உங்களுக்கு வாக்குகளைப் பெற உதவியாக இருக்கிறதா?

இதைச் சொல்லித்தான் வாக்குகளைப் பெற வேண்டும் என்ற அவசியமே எங்களுக்கு இல்லை. மத அடிப்படையிலான கொள்கைகள் மூலம் எந்தக் கட்சியும் வாக்குகளைத் திரட்டக் கூடாது. எல்லோருக்கும் நன்மை செய்வதை ஆதரிக்கிறோம், மத அடிப்படையில் ஒரு சாராரை மட்டும் தாஜா செய்வதைக் கண்டிக்கிறோம்.

பாஜக எப்போதுமே இரட்டை என்ஜின் அரசு வேண்டும் என்கிறது. ஒரு கூட்டரசில் மாநிலத்தில் வேறு கட்சி ஆட்சி செய்யவே கூடாதா, அப்படியிருந்தால் ஒன்றிய அரசு ஒத்துழைக்காதா?

ஒன்றிய அரசின் திட்டங்கள் முழுமையாக நிறைவேறத்தான் மாநிலங்களிலும் நாங்களும் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டும் என்கிறோம். 

பாஜக அரசு இந்தியைத் திணிக்கிறது என்று கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் அடிக்கடி குற்றஞ்சாட்டுகின்றனவே?

இது பாஜகவுக்கு எதிரான, திட்டமிட்ட தவறான பிரச்சாரம். நான் ஒரு கேள்வி கேட்கிறேன், ஐஏஎஸ் - ஐபிஎஸ் பதவிகளுக்காக அகில இந்திய அளவில் நடக்கும் தேர்வுகளை அவரவர் மாநில மொழியில் எழுதி தேர்ச்சி பெற்றுவிடும் நிலை 2014க்கு முன்னால் இருந்ததா? மோடி பிரதமரான பிறகு, அரசமைப்புச் சட்ட அட்டவணையில் உள்ள எல்லா மொழிகளிலும் தேர்வு எழுத வாய்ப்பு தரப்படுகிறது. எழுபது ஆண்டுகளாக கர்நாடக மாணவர்கள் இந்தி அல்லது ஆங்கிலத்தில்தான் இத்தேர்வுகளை எழுதினர். நாங்கள் கன்னடத்திலும் எழுத வாய்ப்பு தந்திருக்கிறோம். இதில் இந்தித் திணிப்பு எங்கிருந்து வந்தது?

மருத்துவர்களுக்கான நுழைவுத் தேர்வையும் மாநில மொழிகளில் எழுதலாம். சமீபத்தில் மத்தியப் படைகளுக்கான காவலர் தேர்வுகளைக்கூட அவரவர் மாநில மொழியில் எழுத ஏற்பாடு செய்திருக்கிறோம். கன்னடத்தில் படித்தவர்கள் வேலைக்கான தேர்வுகளை இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுதி எப்படி வேலை பெற முடியும்? எழுபதாண்டு ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ்தான் அந்த ஏற்பாட்டைச் செய்து கன்னட மாணவர்களின் வளர்ச்சியைத் தடுத்துக்கொண்டிருந்தது. கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ் என்று அவரவர் மாநில மொழியில் இப்போது தேர்வுகளை எழுத முடியும்.

தமிழ்நாடும் கேரளமும் உங்களுடைய கட்சி காலூன்ற முடியாதபடிக்கு சவாலாக இருக்கின்றன அல்லவா?

நாடு முழுவதுமே எங்களுக்கு சவாலான களம்தான். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில்கூட நாங்கள் இருந்ததில்லை. இப்போது எட்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருக்கிறோம். உத்தர பிரதேசத்தில் தனியாக ஒருமுறைகூட ஆட்சிக்கு வந்ததில்லை. இப்போது அடுத்தடுத்து இரு முறை வென்று ஆட்சி செய்கிறோம். உத்தராகண்டிலும் அதேதான் நிலைமை. ஒடிஷாவில் வளர்கிறோம். மேற்கு வங்கத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் 18 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலில் 77 இடங்களிலும் வென்றோம். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் வளர்ந்துவருகிறோம், தென்னிந்தியாவில் மேலும் வலுப்பெறுவோம்.

கர்நாடகத்தில் பாஜக அரசு 40% கமிஷன் அரசு என்றும் எதிர்க்கட்சிகளை ஒடுக்க மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறதே?

இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணானவை; நம் நாட்டில் நீதிமன்றங்கள், காவல் துறை, விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றன. 40% கமிஷன் வாங்குவது உண்மையானால் காங்கிரஸ் ஏன் அதை எந்த அமைப்பிடமும் அல்லது நீதிமன்றத்திலும் புகாராக ஆதாரத்துடன் அளிக்கவில்லை? எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் நீதிமன்றங்கள் ஏன் விசாரணைக்கு ஏற்கின்றன? முதல் நோக்கில் எதிர்க்கட்சிகள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் தெரிகின்றன. அரசியலில் எதிர்க்கட்சிகள் மீது ஆளுங்கட்சி ஊழலுக்காக நடவடிக்கையே எடுக்கக் கூடாது என்றால், அதை தேர்தல் அறிக்கையிலேயே சேர்த்து மக்களிடமே ஆதரவு திரட்டலாமே?

எதிர்க்கட்சிகளை வேண்டுமென்றே குறிவைத்து வழக்குகள் போடப்படுகின்றன என்கிறதே காங்கிரஸ்?

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே அதன் செயல்களைப் பாருங்கள். என் மீது கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. நான் கருப்புச் சட்டை அணிந்து போராட்டத்தில் போய் உட்காரவில்லை. என் மீது போடப்பட்டுள்ளது பொய் வழக்கு, அதை ரத்துசெய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினேன். நீதிமன்றம் விசாரித்து, நான் நிரபராதி என்று விடுதலை செய்தது. மோடி மீதும் இப்படி வழக்கு தொடுத்தார்கள். அதை அவரும் சட்டப்படியே எதிர்கொண்டார். இதையே காங்கிரஸாரும் பிற எதிர்க்கட்சியினரும் ஏன் செய்யக் கூடாது? வழக்கே தவறு என்று மனு செய்து அதை ரத்துசெய்ய வழக்காடுங்களேன், சட்டத்தில் அதற்கு இடம் இருக்கிறதே? தங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருப்பதால்தான் மேற்கொண்டு நீதிமன்றத்தை அணுகவே அவர்கள் தயங்குகிறார்கள்.

தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் குறித்து பாஜக தேர்தல் அறிக்கை பேசுகிறதே அதற்கு அரசமைப்புச் சட்டம் இடம் தருகிறதா?

பொது சிவில் சட்டம் என்பது கூட்டு அதிகாரப் பட்டியலில் இருப்பதால் அது சாத்தியமே. தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது கணக்கெடுப்புதான், மாநில மக்களைப் பற்றி கணக்கெடுக்க அரசுக்கு உரிமை இருக்கிறது. எனவே, இரண்டுமே சாத்தியம்தான்!

 

தொடர்புடைய கட்டுரைகள்

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி: ‘ஈ-தினா’ கணிப்பு
விட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்
கர்நாடகம்: இந்துத்துவத்தின் தென்னக ஆய்வுக் கூடம்
கர்நாடகத்தில் காங்கிரஸ் காற்று
கர்நாடகத் தேர்தலில் பேசப்படாதவை எவை?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


1






முழுப் பழம்அக்பர்கலோரிஸ்மிருதி இராணிகருத்துரிமை தினம்! மாபெரும் பொறுப்புவாசகர் கேள்விஇந்திய விவசாயிகள்நிரந்தரமல்லஎலும்புகள்ஆஸ்துமாமாதிரிப் பள்ளிகள் திட்டம்எதிர்மறைச் சித்திரங்கள்75இல் சுதந்திர நாடு இந்தியாஒற்றுப் பிழைமணிப்பூர் கலவரம்சுய மெச்சுதல்படைப்புத் திறன்ஆசான்கீதைப்ளூ சிட்டிநாத்திகர் நேருப்ரோஜெஸ்டிரான்நெடுந்தாடி முனியாறுபஜாஜ் ஸ்கூட்டர்காந்தி சாவர்க்கர் பெரியார்புதிய சட்டங்கள்சென்னை போக்குவரத்து நெரிசல்க்ரியாஉவேசா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!